Loading

“என்ன ஆச்சு அஸ்வின் உனக்கு? அந்த ஜீவாவை அழுக வைக்க சான்ஸ் கிடைச்சும், இப்படி கோட்டை விட்டுட்டு வந்ததும் இல்லாம, அந்த பொண்ணை காப்பாத்திட்டு வந்துருக்க. அவன் காப்பாத்துனானா உன் அம்மாவ? அம்போன்னு சாகட்டும் விட்டவனோட பொண்டாட்டியை நீ வேலை மெனக்கெட்டு காப்பாத்திட்டு வந்துருக்க! உனக்கு மூளை ஏதாவது குழம்பிடுச்சா?” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார் சீனிவாசன்.

அஸ்வின் எதுவும் பேசாமல், அமைதியாய் இருக்க, அவர், “உன்னை தான் கேட்குறேன் என்ன திடீர்னு உன் அண்ணன் மேல பாசம் பொங்குதா” என்று கடுப்பாக கேட்க,

“ப்ச் அவன் எனக்கு அண்ணனே இல்ல அப்பறம் எங்க இருந்து வரும் பாசம்… நான் ஏன் அப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல பா” என்றான் குழப்பமாக.

“இங்க பாரு அஸ்வின், அவன் நிம்மதியா இருக்க கூடாது. உன்னால பண்ணமுடியாதுன்னா சொல்லு நான் பார்த்துக்கறேன். அவனை அப்போவே ஒண்ணும் இல்லாம ஆக்கிருப்பேன். நீதான், நான் போலீஸ் ஆகி, அவனை என்னன்னமோ பண்ணிடுவேன்னு சொன்ன. ஆனால் இந்த போலீஸ் ட்ரெஸ் போட்டு கூட அவனை உன்னால ஒன்னும் பண்ண முடியல…” என்று கடுகடுத்தார்.

மேலும், “சொந்த தம்பிக்கு ஒண்ணுமே பண்ணல… ஆனால் எவனோ ஒருத்தனை படிக்க வச்சு அவனுக்கு எல்லாம் பண்ணி குடுத்துருக்கான். அவனை அடிச்சா இவன் அடங்குவான்னு சொல்லி அவனை ஏதாவது பண்ணலாம்னு சொன்னேன். அதையும் கேட்டியா…?” என்று புலம்ப,

அஸ்வின் “ப்ச் பா… அவன் சின்ன பையன். நடந்ததுலாம் அவனுக்கு தெரிய கூட செய்யாது. இதுல எதுக்கு அவனை இழுக்குறீங்க.” என்றதும், அவர், இவனை நம்பினால் வேலைக்கு ஆகாது என ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார்.

அறைக்கு சென்ற அஸ்வினுக்கு கடுப்பாக இருந்தது. “அண்ணி” என கயல் சொன்னது வேறு அவனை குடைந்திட, ‘நீ போலீஸ் தான உண்மை என்னன்னு கண்டுபிடி’ என்று சொன்னதே காதினுள் கேட்க, “டாமிட் அண்ணியாம் அண்ணி” என ஆத்திரம் கொண்டான்.

அவளை ஏன் சாகட்டும் என்று விட்டு விட்டு வரமுடியவில்லை. எனக்காக பேசியதாலா, இல்லை நான் உன் அண்ணி என்று என்னிடம் உரிமை எடுத்து அக்கறையுடன் பேசியதாலா… என்று மருகியவன், முயன்று அந்த எண்ணத்தை மறந்து விட்டு, மீண்டும் பழையதை எண்ணி, வம்படியாக பகையை மனதில் நிறுத்திக் கொண்டான்.

அன்று இரவு, கையில் ஆங்கில புத்தகத்தை வைத்தபடி, நொந்து போய் அமர்ந்திருந்த பூவரசியிடம் வந்த கார்த்தி, “ஓய் காட்டுவாசி… நான் சொன்ன எஸ்ஸேய் படிச்சியா.” என்று கேட்க,

அவள் “போய்யா… ஒண்ணுமே புரிய மாட்டுது. இதுல நெறைய இங்கிலீசு வார்த்தை வாயிலேயே வரமாட்டேங்குது” என்று முகத்தை சுருக்க,

கார்த்தி, “இப்போ தான காலேஜ்ல சேர்ந்துருக்க. டெய்லி ரீடிங் ப்ராக்டிஸ் பண்ணு வந்துடும்…” என்றவன், “இனிமே நீ என்கிட்ட எது பேசுறதுனாலும் இங்கிலிஷ்ல தான் பேசணும்… அப்போ தான் ப்ராக்டிஸ் ஆகும்” என்றான்.

அவள் மிரண்டு “என்னாது இங்கிலீசுலயா… என்னால முடியாது!” என்று ஜகா வாங்க,

“ப்ச்! என்ன முடியாது…? நாளைக்கு நீ டீச்சர் ஆகி, ஸ்கூல் கட்டி, வெறும் தமிழ் மட்டும் சொல்லி தருவியா… இங்கிலிஷ்லாம் யாரு சொல்லி தருவா” என்று கேட்க,

சற்றே யோசித்தவள், “அதுக்கு வேணும்ன்னா வேற டீச்சரை வேலைக்கு வச்சுக்கலாம்” என யோசனை கூறினாள்.

அதில் அவளை முறைத்தவன், “கொன்றுவேன்! ஒழுங்கா இங்கிலிஷ் பேசல, திரும்ப நானே உன்னை கூட்டிட்டு போய் உன் மாமனுக்கு கட்டி வச்சுருவேன்” என்று மிரட்ட, அவள் அசட்டையாக, “அய்ய… அப்படிலாம் அவன் என்னை கலுயாணம் பண்ணிட முடியாது. அடிச்சு துவைச்சுருவேன். இல்லைன்னா, அவன்கிட்ட இருந்து தப்பிச்சுருக்க முடியுமா. ஆனா, அன்னைக்கு உன் அண்ணாரு தான் அடி பிண்ணி எடுத்துட்டாக” என்று சொல்ல, கார்த்தி, புருவத்தை சுருக்கி “என்னைக்கு?” என கேட்டான்.

“அதான் அன்னைக்கு கூட, அவன் மேல குண்டு பட்டுச்சே அன்னைக்கு தான்” என்று அன்று நடந்ததை கூறினாள். அதனை கேட்டவனுக்கு கடுங்கோபம் வந்தது.

“உன்கிட்ட அப்படி நடந்துருக்கான் அவனுக்காகவா நீ அழுத?” என்று கோபத்துடன் கேட்க,

“அவன் அப்படிதா… என் அம்மையும் அவன் பொறந்ததுல இருந்து நான் தான் அவனுக்குன்னு சொல்லி சொல்லி வளத்துருச்சு. அதான், என்கிட்ட எப்போ பாரு வம்பு வளத்துட்டு இருப்பான். இதை வீட்டுல சொன்னா, இதான் சாக்குன்னு கலியாணம் கட்டி வச்சுடுவாக. அதான், அவனை நானே என்கிட்டே வம்பு பண்ணும் போதுலாம் அடிச்சுப்புடுவேன்” என்று விழிகளை உருட்டி சொல்ல, அவனுக்கு அவளின் பெற்றோர் மேல் தான் கோபமாக வந்தது.

பின், “சரி அதான் நீ இங்க வந்துட்டீல இனிமே அவன் உன்னை தொல்லை பண்ண மாட்டான்…” என்றவன், “சரி நீ பேசு” என்று அவளை பார்க்க, அவள் “என்னய்யா பேச?” என்று புரியாமல் கேட்டாள்.

“என்னவா? இங்கிலிஷ்ல பேசு.” என்று சொல்ல, அவள் தலையை சொரிந்து கொண்டு, “என்ன பேசுறது” என்று பாவமாக கேட்டாள்.

அதில் வந்த சிரிப்பை அடக்கியவன், “என்ன பேசுறதுன்னு கேட்குறதை இங்கிலிஷ்ல கேட்கலாம்ல” என்றவன், “சரி நான் ஸ்டார்ட்பண்றேன்… ம்ம்” என்று விட்டு, “ஹேட் யுவர் டின்னர்?” என்று கேட்க, அவள் பெக்க பெக்க என விழித்து விட்டு, “இது புக்குல இருக்குற கேள்வி மாதிரியே இல்ல…” என்று புத்தகத்தை புரட்டினாள்.

அதில் “ஐயோ ஹா ஹா ஹா ஹா” என வாய் விட்டு சிரித்தவன், “நீ சாப்டியான்னு கேட்டேன் காட்டுவாசி.” என தலையில் அடித்து கூறிட,

அவள் அவனை முறைத்து, “யோவ் உன்கூட தான் உக்காந்து சாப்புட்டேன். அப்பறம் ஏய்யா தெரியாத மாதுரி கேக்குற லூசா நீ” என்று கையை நீட்டி திட்டினாள்.

அவனோ “லூசு தான் உனக்கு இங்கிலிஷ் சொல்லி குடுக்க வந்தேன்ல நான் லூசுதான்…” என்று முறைக்க, அவள் “தெரிஞ்சா சரி” என முணுமுணுத்தாள்.

அதில் மேலும் முறைத்தவன், “உன்னை கொல்ல போறேன்… ஒழுங்கா நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு” என்று விட்டு, “வாட் இஸ் யுவர் டுமாரோ பிளான்?” என்று கேட்க,

அவள் “டுமாரோன்னா நாளைக்கு தான?” என்றாள் எதையோ கண்டுபிடித்த மிதப்பில்.

“ம்ம் ஆமா நாளைக்கு தான் சொல்லு…” என்றவனிடம்,

“பிளான்னா… அடுப்படில இருக்கே அது பேரு என்ன…” என்று யோசித்தவள், “ஹான் காம்ப்ளென் அதான” என சொல்லி விட்டு, “நாளைக்கு எனக்கு காம்பிளான்லாம் வேணாயா. எனக்கு அது பிடிக்கவே இல்ல உவெக்” என்று தீவிரமாக சொன்னதில், அவன் வெறியாகி விட்டான்.

“ஆமா உனக்கு காம்பிளான் பூஸ்ட் போர்ன் விட்டா எல்லாம் குடுப்பாங்க. கொய்யால கலாய்க்கிறியா? உன்னை…” என்று அவளை அடிக்க துரத்த, அவள் ஜெட் வேகத்தில் அங்கிருந்து ஓடினாள். கார்த்தி வேகமாக ஓட முடியாமல், “ஏய் காட்டுவாசி ஒழுங்கா இங்க வந்து என்கிட்டே நாலு அடி வாங்கிடு. இல்ல ரொம்ப சேதாரம் ஆகும்” என்று மிரட்ட, 

அவள் “வரமாட்டேன் போயா…” என்று அவனுக்கு அழகு காட்டி விட்டு சோபாவின் மறுபுறம் ஓட, அவன் குறுக்கே வந்து அவளை பிடிக்க வந்ததில் கால் தடுமாறி அவள் மேலேயே விழுந்துவிட்டான்.

அவன் விழுவதை எதிர்பாராத பூவரசியும் பின்னால் இருக்கும் சோபாவில் விழ, கார்த்தி அவள் மேலே சென்று விழுந்து, விழுந்த வேகத்தில் கன்னத்தில் முத்தமும் கொடுத்து விட்டான்.

அதில் திருதிருவென விழித்தவன்,  ‘ஐயோ இவள் லைட்டா பக்கத்துல வந்தாலே அடி வயித்துல குத்துவாளே இப்போ தெரியாம முத்தம் வேற குடுத்துட்டோம். இன்னைக்கு செத்தோம்’ என அவளை மிரண்டு பார்க்க, அவன் அருகாமையிலும் கொடுத்த முத்தத்திலும் கன்னங்கள் செங்கொழுந்தாய் சிவந்து போய் கண்ணை இறுக மூடி இருந்தாள் அவனது காட்டுவாசி.

அவள் சிவப்பில் கண்ணை அகற்ற முடியாமல் அவளையே பார்த்திருக்க, பூவரசி, மெல்ல இமைகளை திறந்து, அவனை நோக்கியதில் அவள் கண்ணில் தெரிந்த வெட்கத்தை கண்டு திகைத்தவன், பட்டென்று அவளை விட்டு எழுந்து விட்டான்.

அவன் எழுந்ததும், அவளும் எழுந்து தலையை குனிந்து நிற்க, “சாரி… கால் தடுக்கி” என்றவன் மேலே எதுவும்  பேசாமல், அவன் அறைக்குள் சென்றிட, பூவரசி தான் நகர கூட தோன்றாமல் அப்படியே நின்றாள்.

கட்டிலில் மெத்தை விரிப்பை விரித்துக் கொண்டிருந்த கயலின் அருகில் சென்ற ஜீவா, “ஹக்கும்” என்று தொண்டையை கனைக்க அதில் திரும்பாமலே, குறுநகை புரிந்தவள், அவனை கண்டு கொள்ளாமல் கட்டிலில் சென்று படுத்து விட, ‘அடிங்க என்கிட்டயேவா’ என்று நினைத்து விட்டு, அவள் அருகில் சென்று ஒட்டியபடி படுத்தான்.

அவள் முறைக்கவும் “என்ன ஸ்வீட் ஹார்ட் முறைக்கிற… எப்படியும் தூக்கத்துல என்னைத்தான் கட்டிபிடிச்சுக்க போற. அதுக்கு எதுக்கு நான் அந்த மூலையிலையும் நீ இந்த மூலையிலையும் படுக்கணும் ம்ம்?” என்று விழியுயர்த்தி அவள் புறம் திரும்பி கேட்க,

அதில் அவள் தான் ‘ஐயோ தூக்கத்துல இதெல்லாம்மா பண்ணுனோம்’ என்று தன்னையே திட்டிக் கொண்டு, அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்.

அவளை நெருங்கியவன், அவளைத் திருப்பி, “குட் நைட்” என்று சொல்ல, அவளும் “குட் நைட்” என்று திரும்ப போக, அவளை விடாமல் பிடித்துக் கொண்டவன், “இரு ஸ்வீட் ஹார்ட்! இன்னும் குட் நைட் கிஸ் கொடுக்கவே இல்ல… நான் எப்பவும் நீ தூங்குனதுக்கு அப்பறம், உன் லிட்டில் லிப்ஸ் ஹனியை டேஸ்ட் பண்ணிட்டு தான் தூங்குவேன்…” என்று குறும்பாக கூற, அதில் அவளுக்கு தான் வெட்கமாக போய் விட்டது.

‘சே, கிஸ் கொடுக்குறது கூட தெரியாம தூங்கிருக்கோம்’ என்று உதட்டைக் கடித்து வெட்கத்தை கட்டுப்படுத்த முயன்றவள், அது முடியாமல் கையால் முகத்தை மூடிக் கொள்ள, தன்னவளின் செயலில் புன்னகைத்தவன், அவள் கையை எடுத்து விட்டு,

“அதான் உனக்கு நான் கிஸ் கொடுக்குறது தெரிஞ்சுருச்சே… அப்பறம் எதுக்கு நீ தூங்குற வரை வெய்ட் பண்ணனும். இப்போவே குடுத்துடுறேன்” என்க, அவளோ “என்னது?” என்று விழி விரித்து அவனை பார்க்கும் போதே, அவள் இதழ்கள் அவன் வசம் இருந்தது.

அவன் கொடுத்த முத்தத்தில் தொய்ந்து போன கயல், அவன் டி ஷர்ட்டை இறுக்கமாக பற்றிக் கொள்ள, அதில் மேலும் அவன் ஆழமாக அவளின் இதழில் மூழ்க, சில பல நிமிடங்களுக்கு பிறகே, அவள் இதழுக்கு விடுதலை கொடுத்தான். அதுவும் மனமில்லாமல்.

அவளை விட்டு விலகியவன் உதடுகள் நடுங்க, கண்ணை மூடி, இன்னும் டி – சர்ட்டை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த கயலின் காதருகில் சென்று, “இன்னைக்கு ஹனி எக்ஸ்டரா ஸ்வீட்டா இருந்துச்சு ஸ்வீட் ஹார்ட்… என்ன ஸ்பெஷல்” என்று கிசுகிசுப்பாய் கேட்க, அவளோ வெட்கம் தாங்க முடியாமல் அவன் டீ ஷர்ட்டிலேயே முகத்தை புதைத்து கொண்டாள்.

அதனை ரசித்தவன், அவளை அணைத்து நெஞ்சில் போட்டு, முடியை கோதி விட, கயல் இன்னும் அந்த முத்தத்தில் இருந்து வெளியில் வரவே இல்லை.

ஜீவா “ஸ்வீட் ஹார்ட்… லவ் யு டி.” எனக் காதல் பெருக்கெடுத்த குரலில் கூற, அவள் நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு, மீண்டும் அவன் நெஞ்சிலேயே புதைந்து, “நான் சொல்றதை கேட்குறேன்னு சொல்லிருக்கீங்க” என்று  அவனுக்கு நினைவு படுத்த, அதில் முறுவலித்தவன், “கண்டிப்பா கேட்பேன். சொல்லு நான் என்ன பண்ணனும்.” என்று  கேட்டான்.

சற்று அமைதி காத்தவள், “அஸ்வின் மறுபடியும் இங்க வரணும் உங்க தம்பியா…” என்று சொல்ல,  சில நொடிகள் அவள் முடியை கோதுவதை  நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்து, “அவன் வரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால் அவன் தான் வரமாட்டேங்குறானே.” என்றான் சலிப்பாக.

“நீங்க அவன்கிட்ட பேசிப்பார்க்கலையா இத்தனை வருஷத்துல?” என்று கேட்க, அவன் இல்லை என்று தலையசைத்தான்.

கயல் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “ஏன்?” எனக் கேட்க,

அவன், ” எங்க பேசுறது…? நான் அவன் முன்னாடி வந்தாலே கோபமா எதையாவது என்  மேல தூக்கி எறிவான். என்னை பேசவிட்டாத்தான” என்று பெருமூச்சு விட, அவள், “ம்ம் உங்க தம்பி உங்களை மாதிரி தான இருப்பான் ” என்றாள் நக்கலாக.

ஜீவா சிறிதாய் சிரித்து “அது என்னம்மோ உண்மைதான்” என்றதில், உதட்டை சுளித்து அழகு காட்டியவள், அவனை விட்டு நகர்ந்து படுத்தாள்.

அவன் மீண்டும் அவளை தூக்கி நெஞ்சில் போட்டு கொண்டு, “என்மேல அவ்ளோ கோபமா ஸ்வீட் ஹார்ட்?” என்று ஏங்கிய குரலில் கேட்க, அவளுக்குத் தான் அந்த குரல் என்னவோ செய்தது. பின், மெல்ல மறுப்பாய் தலையாட்டியவள், “ஏன்னே தெரியல உங்க மேல கோபமே வரமாட்டேங்குது. ஆனால் கஷ்டமா இருக்கு.” என்று சிறு குரலில் சொல்ல,

அதில் அவள் முகத்தைத் தாங்கியவன் “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல உன்னை டார்ச்சர் பண்ணி… தப்பா பேசி… நான் நான் என்ன பண்ண ஸ்வீட் ஹார்ட் எனக்கு தெரியல. நான் இதை எப்படி சரி பண்றதுன்னு..” என்று திணறினான்.

“நான் அதை சொல்லல” என்றவளை புரியாமல் பார்த்தான் ஜீவா.

“நீங்க என்னை பொய்யா… பொய்யா தான லவ் பண்ணீங்க. நான் தப்பு பண்ணிருக்க மாட்டேன்னு ஒரு தடவை கூட தோணலையா” என்று கலங்கிய கண்களுடன் கேட்க,

அதில் திகைத்தவன், “ஒரு தடவை இல்ல ஆயிரம் தடவை தோணுச்சு, நீ தப்பு பண்ணிருக்க மாட்டன்னு. ஆனா என் கோபம் தான் என்னை யோசிக்கவிடாம பண்ணிடுச்சு. உன்னை பொய்யா லவ் பண்ணேன்னு யாரு சொன்னா, உன்னை நான் உண்மையாவே லவ் பண்ணுனேண்டி…” என்னை நம்பேன் என்ற ஏக்கத்துடன் அவளை பார்த்தான்.

அவளோ, “இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு தான் இப்படி சொல்றீங்க” எனக் குரல் கமற சொன்னதும், அவளை எழுப்பி விட்டு அவளும் எழுந்தவன், “எதை வச்சுடி அப்படி சொல்ற…? இன்னைக்கு சாயந்தரம் தான நான் உன்கிட்ட எல்லாத்தையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனேன். அது உன் மண்டைல ஏறவே இல்லையா.” என்றான் சற்று கோபமாக.

முகத்தை சுருக்கியவள், “நீங்க தான் கார்த்தி பார்க்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்களே… என்னை லவ் பண்ணிருந்தா ஏன் அப்படி சொல்லணும்?” என்று முணுமுணுப்பாக கேட்டவளுக்கு, கண்ணீர் வெளியே வந்து விடும் நிலையில் இருக்க, ஜீவாவோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

உருண்டு பிரண்டு சிரித்தவனை முறைத்தவள், அப்பொழுது தான் அவன் வாய் விட்டு சிரிப்பதையே பார்க்கிறாள். அவனையே ஆச்சர்யமாய் விழித்தவள், அவள் கோபத்தை விடுத்து அவனை ரசிக்கத் தொடங்க, ஜீவா சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்னடி ஸ்வீட் ஹார்ட் சைட் அடிக்கிறியா?” என்று விழி உயர்த்தி கேட்க, அவள் சட்டென்று சுதாரித்து “எதுக்கு சிரிக்கிறீங்க” என்றாள் கோபத்தை வரவழைத்து.

“பின்ன சிரிக்காம… நான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு கார்த்தி ஆசைப்பட்ட பொண்ணு நீதான்னு எனக்கு தெரியும்டி. அதான் உன்னை வெறுப்பேத்த அப்படி சொன்னேன். அப்படியாவது நீ என்மேல கோபப்பட்டு சண்டை போடுவ அப்படியே உன்னை சமாதானப்படுத்திடலாம்ன்னு பார்த்தேன்.” என்றதும், வெட்கத்துடன் பார்த்தவள்,

“அப்போ உங்களுக்கு நான் தான் அந்த பொண்ணுன்னு ஏற்கனவே தெரியுமா” என்று விழிகளை உருட்டிக் கேட்க, அவன் “ம்ம்” என்று சிரிப்புடன் தலையாட்டினான்.

அவள் “எப்படி? நானும் சொல்லல, அப்போ கார்த்தியும் இல்ல” என்று யோசிக்கும் பாவனையுடன் கேட்க, அதில் ஜீவா தான் திருதிருவென விழித்தான். 

‘ஐயோ இவள் போன்ல தான் பார்த்தோம்னு சொன்னா அதுக்கு வேற ஆரம்பிப்பாளே’ என்று முழிக்க, கயல், “என் போன்ல கார்த்தி பேசுனதை பார்துடீங்களா” என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்துக் கேட்க,

அவன் “அது ஒரு கியூரியாசிட்டில பார்த்துட்டேன் கயல். அதை பார்த்ததும், உன்னை ரொம்ப வம்பிழுக்கனும் போல தோணுச்சா” என்று சமாளிக்க, அவனை முறைத்தாள்.

ஜீவா தான், “சாரி டி… சத்தியமா உன்னை தப்பா நினைச்சு சந்தேகப்பட்டு பார்க்கல. உங்கிட்ட நான் பொய்யா நடிக்கவும் இல்ல. ஐ ட்ரூலி லவ் யு டி…” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூற, அவனின் முகத்தைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

இருந்தும் அவனிடம் இருந்து மறைத்தவள், “சரி சரி வாங்க தூங்கலாம் தூக்கம் வருது” என்று படுத்து விட, ‘மனுஷனை ஏத்தி விட்டுட்டு தூங்க போறாளாம்…’ என்று மனதில் புலம்பியவன், அவள் கையை பிடித்துக் கொண்டே உறங்கியும் விட்டான்.

அடுத்த இரண்டு நாட்களுடம் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் சிறப்பாக தொடர, ஒவ்வொன்றிற்கும் ஜீவாவை மிரட்டிக் கொண்டே இருந்தாள். சாப்பிடும்போது, போனை நோண்டியதில் அதனை பிடுங்கி வைத்தவள் தட்டை பார்த்து சாப்பிடணும் என்பதும், அவன் அறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பீர் பாட்டிலை எல்லாம் அவனை விட்டே எடுக்க வைத்து அப்புறப்படுத்தி,

‘இனிமே இதெல்லாம் வீட்டுக்குள்ள வந்துச்சு… அப்பறம் நீங்க அதையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்’ என்றும் சிலுப்பிக் கொண்டாள்.

அதில் சிரித்தவன், “இனிமே ப்ராமிஸ் – ஆ நான் குடிக்க மாட்டேன்.” என்று ஆழமாய் பார்த்துக் கொண்டு சொல்ல, அவள் ‘ம்ம் பாப்போம் பாப்போம்’ என்று குறுநகை புரிந்தாள்.

ஆகினும், அவன் அவளுக்கு தரக்கூடிய முத்தங்கள் மட்டும் எந்த தடையும் இல்லாமல் சென்று கொண்டு தான் இருந்தது.

அன்று காலையில் வெகு தீவிரமாய் சிந்தித்து கொண்டிருந்த கயல், ஜீவா எஸ்டேட்டிற்கு சென்றதும், அஸ்வினை பார்க்க காவல் நிலையம் சென்றாள். அங்கு இவளை பார்த்ததும் அஸ்வின், “இப்போ எதுக்கு நீ இங்க வந்த?” என்று கடுப்படிக்க,

அவள் “அஸ்வின் நான் உங்கிட்ட பேசணும். ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ்” என்றதில்,

“நீ என்கிட்ட பேச எதுவும் இல்ல. உன் புருஷனை நான் ஒன்னும் இல்லாம ஆக்காம விடமாட்டேன். முதல்ல போ இங்க இருந்து” என்று கத்த,

அவள் “என்னால போக முடியாது. நான் வெளிய நிக்கிறேன் நீ வர்ற… உன் அண்ணியா இது என்னோட ஆர்டர்” என்று கண்டிப்பாய் சொல்லி விட்டு ஸ்டேஷனுக்கு வெளியில் சென்று நின்றாள்.

கால் மணி நேரமாய், அவள் அங்கேயே நிற்க, அஸ்வின் தான் “கால் கடுக்க நில்லு எனக்கென்ன வந்துச்சு” என்று தோளை குலுக்கி அவன் வேலையைப் பார்க்க, அப்போது எங்கிருந்தோ வந்த கார் ஒன்று, கயலை இழுத்து உள்ளே போட்டுக் கொண்டு சென்றது.

கயல் இதனை எதிர்பாராமல், “அஸ்வின்” என்று கத்தி அவனை அழைக்க, அஸ்வின் திகைத்து நின்றான்.

நேசம் தொடரும்
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
36
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்