Loading

“மலை ஏறுவோமா வக்கீலு” எனக் கேட்ட ஜிஷ்ணுவை முறைத்த வசுந்தரா, “ஏற்கனவே போய் கத்தி குத்து வாங்குனது பத்தலையா உனக்கு. ஆல்ரெடி அடி பட்டுருக்கு. இன்னொரு தடவ கத்தி குத்து வாங்கினா போய் சேர வேண்டியது தான்…” என்றாள் நக்கலாக.

அவனோ காரை விட்டு இறங்கியபடியே, “அதனால என்ன மூச்சு குடுத்து காப்பாத்த தான் ஒரு டாக்டரையும் கூட கூட்டிட்டு போறேனே…” அர்த்தத்துடன் அவளைப் பார்க்க, நொடியில் சிவந்தவள், இதழ்களைக் கடித்தாள்.

அது ஏற்கனவே, அவனின் அடியில் காயமாகி இருக்க, இப்போது வலியில் எரிந்ததில், ஸ்ஸ்… என முகத்தை சுருக்கினாள்.

“என்ன ஆச்சுடி?” கேட்டபடி அவன் அருகில் வர, அவனைப் பாராமல், “ஒண்ணும் இல்ல…” என்றவளை, விழி விலகாமல் பார்க்கும் போதே, ஒருவன் பதற்றத்துடன் ஓடி வந்தான்.

“ஜீ… ஜீ… இங்க வாங்க. அங்க… அங்க…” என மூச்சு வாங்கினான் வேலையாள்.

இருவரும் புரியாமல், அவன் காட்டிய திசையில் விரைந்து ஓட, அங்கோ, அவர்கள் வெட்டிய ஆழமான குழியில் ஒரு அழுகிய சடலம் தெரிந்தது.

வசுந்தரா அதிர்ந்திட, ஜிஷ்ணு உடனே அவன் நம்பத்தக்க காவல் அதிகாரிக்கு போன் செய்து விவரம் கூறினான்.

அடுத்த சில மணித் துளிகளில், அந்த சடலம் ஆய்வுக்கு அனுப்பப்பட, அதற்குள் இவ்விஷயம் மீடியாவிற்கும் சென்றது.

நீலகண்டனோ உறைநிலையில் இருந்தார். கன்னிமனூரில் நீர்வளமும், இயற்கை வளமும் அபாரம்.

அங்கிருக்கும் மலையைக் குடைந்து, அதனை சுற்றுலாத் தளமாகவும், தொழிற்சாலைகள் நிறுவி அதன் மூலம் பணம் பார்க்கவும் விரும்பியது அரசியல்வாதிகளின் மனம்.

ஆனால், அது அத்தனை விரைவில் நடைபெறவில்லை. அதற்காகவே அவ்வூரில் ஒருவனான ஜிஷ்ணுவை கையில் போட்டுக் கொண்டு, அங்கு இருக்கும் வளத்தை சுரண்டத் திட்டமிட்டனர்.

அவர்களின் திட்டம் என்னவோ நன்றாக தான் இருந்தது. ஆனால், அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த ஆள் தான் தவறு என்பதை உணராது போனார்கள்.

“என்னடா இது? ஊருக்குள்ள டெட் பாடி இருக்கு. என்ன நடக்குது இங்க?” எனக் குழம்பிய வசுந்தராவை நிமிர்ந்து பார்த்தவன்,

“இங்க பல வருஷமா இது தான் நடந்துட்டு இருக்கு. இப்ப தான் வெளில வருது.” என்றான் கோபத்துடன்.

“புரியல…” அவள் புருவம் சுருக்கி நோக்க,

“எல்லாம் உன் ஊருக்காரானுங்களோட ஜாதி வெறி தான். வேற ஜாதி பசங்களை லவ் பண்ணா, வீட்டு ஆளுங்களே அவளை கொன்னு, இந்த ஊருல புதைச்சுடுறாங்க.” என்றதில் அவள் வெகுவாகத் திகைத்தாள்.

“என்ன சொல்ற அடியாளு? ஒரு தடவை அப்பா கூட ஏதோ ஒரு பொண்ணு கன்னிமனூர் பையனை லவ் பண்ணாள். ஆனா அவள், அவன் கூட ஓடி போய்ட்டான்னு சொன்னாரே…” என யோசனையாகக்  கூறிட,

“அவன் என் பிரெண்டு தான் வக்கீலு. அவன் பேர் ரமேஷ். உண்மையா ரெண்டு பேரும் ஓடி போறதா தான் இருந்திச்சு. ஆனா, அந்த பொண்ணு அன்னைக்கு வரவே இல்லை. அப்படியும் பழியை தூக்கி அவன் மேல போட்டு, போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் அடி அடின்னு அடிச்சு இருக்கானுங்க. ஆனா, உண்மையிலேயே அவளை அவ வீட்டாளுங்க தான் கொன்னுருக்காங்க.” என்றான்.

“ம்ம்… ஞாபகம் இருக்கு. அப்போ நீயும் குமரனும் சொல்லிட்டு இருந்தீங்கள்ல? ஆனா, பாடியை இந்த ஊர்ல ஏன் புதைக்கணும்?” அவள் கேள்வியாக பார்க்க,

“அப்ப தான எங்க ஊரு பசங்க மேல பழி போட முடியும்.” அசட்டையாக தோளைக்  குலுக்கினான்.

“கடவுளே… இது எப்படி உனக்கு தெரியும்?”

“அன்னைக்கு ராதிகாவை கொலை பண்ணிட்டு, அவளை வழக்கம் போல கன்னிமானூர்ல புதைச்சுடலாமான்னு அந்த நாய்ங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தானுங்க. அப்ப தான் எனக்கே இதுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்குன்னே தெரிஞ்சுது.” என்றதில்,

“அப்பவே இவனுங்கள உண்டு இல்லன்னு ஆக்கிருக்கணும் ஜிஷு…” புசுபுசுவென கோபம் வந்தது அவளுக்கு.

“ம்ம். எனக்கும் அதே வெறி தான் இருந்துச்சு. எப்படி பெத்த பொண்ணை கொலை பண்ண மனசு வருதுன்னு தெரியல…! ஆனா, அந்த நேரத்துல நான் என்ன செஞ்சுருந்தாலும், கடைசில என் ஊர் பசங்க தான் மாட்டுவானுங்க. என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பி இருந்தப்ப தான், முட்டாள் மினிஸ்டர் தானாவே ஆஜர் ஆனான்…” என்றவனின் இதழ்கள் இழிவாய் விரிந்தது.

“கன்னிமனூர பகடை காயா யூஸ் பண்ணி, காசை கறக்கலாம்ன்னு அவன் செஞ்ச பிளானை நான் எனக்கு ஃபேவரா மாத்திக்கிட்டேன். அப்போ, இந்த ஊர்ல டெட் பாடி இருக்குன்னு மீடியால சொல்லிருந்தா கூட, நாலாவது பக்கத்துல, சின்ன பாராகிராஃப்ல இந்த விஷயத்தை முடிச்சு இருப்பானுங்க. ஆனா, இதே இந்த ஊர் ட்ரெண்டிங் டாபிக் – ஆ இருந்தா? இங்க பொண்ணுங்களை புதைச்ச வெறிப்பிடிச்சவங்களுக்கும் பயம் வரும். அதான், கமுக்கமா என் கட்சியாளுங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டி, என் பிளானை எக்சிகியூட் பண்ணேன்.” என்றான் வெற்றிப் புன்னகையுடன்.

அவள் தான், அவனை விழி விரித்துப் பார்த்தாள். ஊருக்காகவும், இங்குள்ள மக்களுக்காகவும், இறந்த பெண்களுக்கு நியாயம் புரிவதற்காகவும் தான் தன் மீது சேற்றைப் பூசிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து அதிர்ந்து போனாள். அவனிடம் முதிர்ச்சியும், விவேகமும் அதிகமாக இருக்கும் என அவளுக்கு தெரியும் தான். ஆனால், பதுங்கி அடிக்கும் பொறுமையை அவனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும் என்ற அவளின் கர்வம் சிறிது சிறிதாக அழியத் தொடங்க, உள்ளுக்குள் பெரும் புயல் ஒன்று தாக்கியது போல உணர்ந்தாள்.

பாவையின் பாவனைகளையே கண்டும் காணாதது போல படித்துக் கொண்டிருந்த ஜிஷ்ணுவின் எண்ணத்தை கலைத்தது அலைபேசி.

சில நிமிடங்கள் அவ்வழைப்பில் நேரத்தை கடத்தியவனின் முகம் பல அதிர்வலைகளை தாங்கி இருக்க, கூடவே கோபமும் மின்னியது. அதில் வசுந்தராவும் நிகழ்விற்கு வந்து, என்ன என்பது போல பார்த்தாள்.

“போன வாரம், இதே மாதிரி ஒரு டெட் பாடியை இந்த ஊர்ல இருந்து எடுத்து, போஸ்ட் மார்ட்டம் அனுப்பி இருந்தேன். அது வேற யாரும் இல்ல. கொஞ்ச நேரம் முன்னாடி, ஒரு பொண்ணை பத்தி பேசிட்டு இருந்தோம்ல. அவளோட பாடி தானாம். இப்ப தான் கன்ஃபார்ம் ஆகியிருக்கு. இதுக்கு காரணமான எல்லாரும் செத்தானுங்க.” என கூறியவனின் வார்த்தைகளில் அனல் அடித்தது.

நெற்றி மத்தியில் முடிச்சு விழ, ஏதோ சிந்தித்திருந்த வசுந்தரா, “அவளை புதைச்ச இடத்துல இருந்து ஏதாவது எவிடன்ஸ் கிடைச்சுதா?” எனக் கேட்க, “இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் தெரிய வரும்” என்றான்.

“இப்போ, அந்த பொண்ணோட லவர், அதான் உன் ப்ரெண்ட் ரமேஷ் எங்க இருக்கான்?” என வினவ,

“அவன் இந்த ஊர்ல தான் இருக்கான். சொல்ல போனா, அந்த பொண்ணோட எலும்பு கூடை எடுக்கும் போதே, அதுல ஒரு செயின் இருந்தது, அதை பார்த்தே அவன் அந்த பொண்ணு தான்னு சொல்லிட்டான். அதனால, அந்த கேஸை மட்டும் இன்னும் மீடியாகிட்ட சொல்லல. ஏன் கேக்குற?” அவன் புரியாமல் பார்த்தான்.

சற்றே நிதானித்தவள், “ஜிஷு… ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தியா? இந்த அளவு பக்காவா கொலை பண்ணிட்டு கன்னிமனூர்ல புதைச்ச பேரண்ட்ஸ் எல்லாரும் அவ்ளோ புத்திசாலியா இருப்பாங்கன்னு தோணல. ஆனா, இதுக்கு பின்னாடி பெரிய மாஸ்டர் மைண்ட் இருக்கணும்.

அவன் தான், ரொம்ப அறிவாளித்தனமா ஜாதி வச்சு இங்க புரளியை கிளப்பி, பொண்ணுங்களை கொலை பண்ண வச்சு இருக்கான். இவ்ளோ செஞ்சவனுக்கு ஒரு நாள் இல்ல ஒரு நாள் இது வெளிய வரும்ன்னு தெரிஞ்சு இருக்கும் ஜிஷு. சோ, கண்டிப்பா எந்த எவிடன்ஸ்ஸும் இங்க விட்டு வச்சு இருக்க மாட்டான்.

அதே நேரம், இங்க புதைச்ச பொண்ணுங்களோட, லவ்வர்ஸ் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு ஆதாரத்தை விட்டு வச்சு இருப்பான். அப்போ தான, இந்த டெட் பாடி கைல கிடைச்சா கூட, ஈஸியா அப்பாவி பசங்க மேல பழியை போட்டு எஸ்கேப் ஆக முடியும்…?” என தன் சந்தேகத்தை அவனிடம் கூற, ஜிஷ்ணுவின் முகம் இன்னும் தெளியவில்லை.

“உனக்கு புரியலையா? என் கெஸ் கரெக்ட்ன்னா, ரமேஷ் தான் கொலை பண்ணான்னு ப்ரூவ் பண்ற மாதிரியான ஆதாரம், அந்த பொண்ண புதைச்ச இடத்துல கண்டிப்பா இருக்கும்.” என்றாள் தீர்க்கமாக.

ஜிஷ்ணுவிற்கும் இந்த கோணம் இப்பொழுது தான் உறைத்தது. அப்படி மட்டும் உறுதியாகி விட்டால், இத்தனை வருட அவனின் திட்டம் அனைத்தும் பாழாகி, அவனின் ஊர் ஆண்களை அவனே கைது செய்ய வைக்கும்படி ஆகி விடுமே என திகைத்து விட்டான்.

அவளின் கணிப்பு சரியே என்பது போல, சில நிமிடங்களில், அவனுக்கு போன் வர, அதில் கூறப்பட்ட விவரம் அவனை அதிர்வுக்குள்ளாக்கியது.

“நீ சொன்னது சரி தான் வசு. ரமேஷோட மோதிரம் ஆதாரமா கிடைச்சு இருக்கு. அது மட்டும் இல்ல, அவனோட கை ரேகை, டி. என். ஏ எல்லாமே கிடக்குற மாதிரி செட் அப் பண்ணி இருக்கான் அந்த ராஸ்கல்…” எனப் பல்லைக்கடித்தான்.

“ப்ச்… இப்ப என்ன பண்றது?” கடுப்புடன் கேசத்தை கோதிக் கொண்டவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.

“அடியாளா இருக்கும் போதே எல்லா வில்லத்தனமும் பண்ணுவ. இப்ப எம். எல். ஏ வேற! உன் பதவியை யூஸ் பண்ணி ஏதாவது பண்ணலாம்ல ஜிஷு” மென்மையாக அவள் கூற,

“அதை வச்சு தான இவ்ளோ தூரம் வந்தேன். ஆனா, ஆதாரத்தை எப்படி அழிக்கிறது வசு. தேவை இல்லாம அவசரப்பட்டு மீடியாக்கு வேற தெரியப்படுத்திட்டேன்” என்றான் குழப்பமாக.

மெலிதாய் புன்னகைத்துக் கொண்டவள், “எம். எல். ஏ சார் தான், சட்டத்துல ஓட்டையே உருவாக்குவீங்களே…! இதுலாம் ஒரு விஷயமா?” என நக்கலடிக்க, அவனுக்கும் புன்னகை எழுந்தாலும் அதனை அடக்கிக்கொண்டு முறைத்தான்.

அவன் முறைப்பில் மேலும் விரிந்த புன்னகையுடன், “அந்த ஆதாரத்தை சுட்டுடலாமா அடியாளு?” எனக் கேட்டு கண் சிமிட்டினாள்.

ஒரு கணம் முற்றும் தன்னிலை இழந்து போனான் ஆடவன். கரங்கள் அவனை மீறி, அவளது முக அளவை அளக்க எத்தனிக்க, மறுநொடியில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவளின் முகம் பாராமல், “என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

கம்மி வந்த அவனது வார்த்தைகளையும், மாற்றங்களையும் அவள் உணரவில்லை. அடுத்து செய்யப் போகும் காரியத்தை பற்றியே சிந்தித்திருக்க,

“அதான் ஜிஷு, கன்னிமனூர் பசங்களுக்கு எதிரா இருக்குற ஆதாரத்தை சுட்டு, உண்மையா இதுக்கு காரணமானவனோட எவிடன்ஸ் கிடைக்கிற மாதிரி மாத்தி வச்சுடலாம்.” என்றாள் இலகுவாக.

அதில், உணர்வுகளை அடக்கப்பட, “நல்ல ஐடியா தான். ஆனா, இது என் ஆளுங்க மூலமா நடந்தா, ஏதோ ஒரு வகைல நான் வேணும்ன்னு செஞ்சேன்னு தெரிஞ்சுடும் வக்கீலு. சோ, இத வேற யார் மூலமாவது தான் பண்ணனும்…” எனத் தாடையை தடவி சிந்தித்தான்.

“ம்ம்… எஸ். முதல்ல நம்ம பசங்க மாட்டாம இருக்கணும். அதுக்கு அப்பறம், இதுக்கு காரணமானவன மாட்ட வைக்கலாம். ஆனா, யாரை வச்சு எக்சிகியூட் பண்றது?” அவள் யோசனையுடன் கேட்க அவன் இதழ்கள் கேலி நகை புரிந்தது.

“அதான் நீ ஒரு அடிமை வச்சு இருக்கியே?” என்ற ஜிஷ்ணுவை கண்டு விழி விரித்தவள், “டேய்… அவன் அப்பிராணிடா.” என்றாள் பாவமாக.

“அதான் நமக்கும் வேணும். அப்பிராணி மாதிரி இருந்தாலும், எனக்கு தெரியாம என் வீட்டுலயே ட்ரக்ஸ் வச்சு, என் வீட்ல இருக்குற டாக்குமெண்ட்ஸையே ஆட்டய போட்டான்ல. அதனால, அவன் இதுக்கு கரெக்ட் – ஆ இருப்பான்…” என்றதில், “ஹலோ… அது எல்லாம் என் பிளானாக்கும்.” என்றாள் சிலுப்பலாக.

“தெரியும்! தெரியும்!” எனத் தலையை ஆட்டியவன், “ஆனா, அதை தைரியமா எக்சிகியூட் பண்ணான்ல” என்றதில் அவளும் ஆமோதித்தாள்.

பின் அவனே, “ஆமா, அவனை எங்க இருந்து பிடிச்ச?” என அசுவாரஸ்யமாகக் கேட்க,

“நான் எங்க பிடிச்சேன். அவனா வந்து ஒட்டிக்கிட்டான். சென்னைல கேஸ் விஷயமா போயிருந்தப்ப தான் அவனை பார்த்தேன். என் ஸ்கூல்மேட் அவன். ஆனாலும் பெருசா பேசிக்கிட்டது இல்ல. அவனுக்கு டிடெக்டிவ் ஆகணும்ன்னு தான் ஆசை. ஆனா அவன் அப்பாவோட கம்பல்ஷன்ல வக்கீல் படிச்சுட்டு, சும்மா சுத்திட்டு இருந்தான். நான் தான் அவன் டிடெக்டிவ் மூளையை நான் யூஸ் பண்ணிக்கிறேன்னு என்கூட ஒர்க் பண்ண சொன்னேன்.” என்று கூறி முடிக்கும் முன்னே,

“அதுவும் முழுக்க முழுக்க என்னை ஃபாலோ பண்ண தான?” என்றான் தெனாவெட்டாக.

உண்மையை கண்டுகொண்டானே என்ற திகைப்பில் அவள் பேந்த பேந்த விழிக்க, அவ்விழிகளுக்கு முத்தமிட ஆவல் உந்தியது ஜிஷ்ணுவிற்கு.

இங்கோ குமரனின் அலுவலகத்தில் மூவர் குழு நகுலனின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

அம்முயற்சியின் விளைவில் கிடைத்த தகவல்கள் அவர்களை வெகுவாய் திகைக்க வைத்தது.

“ப்ரோ! இவன் என்ன இவ்ளோ பெரிய அயோக்கியனா இருக்கான்?” பரத் வாய்விட்டே புலம்பி விட,

அர்ச்சனாவோ, “ஆமா பரத் சார். ஒட்டு மொத்த ஊரையும் இவன் தான் கண்ட்ரோல்ல வச்சு இருக்கான். பெரிய மனுஷன் பண்ற வேலையா இதெல்லாம்” என்று முகத்தை சுளித்தாள்.

குமரன் கோபத்துடன், “இவன்லாம் என்ன பெரிய மனுஷன்? மனுஷத்தன்மை வயசுல இல்லைன்னு நிரூபிச்சுட்டான். என்னாலேயே இதை ஜீரணிக்க முடியல. வசு எப்படி இதை அக்செப்ட் பண்ணுவா?” என்னும் போதே, தோழியின் நிலை எண்ணி கலக்கம் எழுந்தது.

மற்றவர்களுக்கும் அதே வருத்தம் எழுந்தாலும், அவனால் இன்னும் என்ன என்ன ஆபத்து நிகழுமோ என்ற பயம் தான் பூதாகரமாக எழுந்தது.

அந்நேரம், ஜிஷ்ணு குமரனுக்கு போன் செய்து, விவரம் கூற அவனோ பரத்தை மேலும் கீழும் பார்த்து விட்டு “ஓகே மாப்ள!” என நமுட்டு சிரிப்புடன் போனை வைக்க, இப்போது பரத்திற்கு வயிற்றில் புளியை கரைத்தது.

அதிலும், அவன் தான் ஆதாரங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஜிஷ்ணுவின் உத்தரவில் இதயம் வெளியில் வந்து விடும் போல துடித்தது.

“ஆக, என்னை பலி குடுக்க ஒரு மனதா எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க?” எனக் கேட்டவனைக் கண்டு அர்ச்சனா சிரித்து வைக்க,

குமரன் வெகு தீவிரமாக, “இப்போ இந்த ஆதாரம் எல்லாம் எஸ். பி ஆபிஸ்ல தான் இருக்கு.” என்றதில், “என்னது எஸ். பி ஆபிஸா?” என்று மேலும் வெளிறினான்.

அர்ச்சனா தான், “பயப்படாதீங்க சார். நம்ம எம். எல். ஏ சார் வீட்ல டாக்குமெண்ட்ஸை எடுத்த மாதிரி இங்கயும் எடுத்துடலாம். சிசிடிவியை நான் கிராஷ் பண்ணிடுறேன். பவர் கட்டும் பண்ணிடலாம்.” என விலாவரியாக கூறிக்கொண்டே செல்ல, குமரன் அவளை கண்ணை சுருக்கி முறைத்து வைத்தான்.

அதன் பிறகே, உண்மையை உளறியதை எண்ணி விழித்தவள், அசடு வழிந்தாள்.

“அது… அது… இதெல்லாம் மேம் தான் பண்ண சொன்னாங்க. தைரியம் இருந்தா அவங்களை போய் முறைங்க” என்று சமாளிக்க, முதல்ல உன்ன பாத்துக்குறேன் இரு என மனதினுள் வறுத்தான்.

அவர்களின் திட்டப்படி, எஸ் பி அலுவலகத்திற்கு சற்று தள்ளி, ஒரு வேனில் குமரனும் அர்ச்சனாவும் அமர்ந்திருக்க, அர்ச்சனா வேகமாக எஸ். பி அலுவலகத்தில் இருந்த சிசிடிவியை கிராஷ் செய்யும் முயற்சியில் இருந்தாள்.

அவளையே பார்த்திருந்த குமரன், “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” எனக் கேட்க, அவள் வேலையில் கவனமாக, “நான் கம்பியூட்டர் ரிலேட்டடா நிறைய படிச்சு இருக்கேன். அதுல ஹேக்கிங்கும் தெரியும்.” என்றதில்,

“ஓஹோ, அதான பார்த்தேன்…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன பார்த்தீங்க?” என வினவினாள்.

“இல்ல, கோர்ட்ல வாதாட சொன்னா ‘பே பே’ன்னு உளறுறியே. உன்ன எப்படி வசு கூட வச்சு இருக்கான்னு பார்த்தேன். விஷயம் இதுல இருக்கா…?” என சற்று சுவாரஸ்யத்துடன் கூற, தான் முதல் முதலில் வாதாடிய வழக்கை அவன் பார்த்திருக்கிறான் என அறிந்ததில், கன்னங்கள் சூடானது அவளுக்கு.

அவன் பார்வை வேறு சற்று வித்தியாசமாக தன்னைத் தொடர, கரங்கள் வேலை செய்யாமல் தர்ணா போராட்டம் செய்தது.

சிவந்த பெண்ணவளின் கன்னங்கள், குமரனுக்கு பல்வேறு உணர்வுகளைக் கிளற, அவனை மீறி அவனது விரல்கள், அவளின் விரல் மீது படிந்தது.

அத்தீண்டலில், சிலிர்த்த அர்ச்சனாவிற்கு தேகம் முழுதும் அந்தி வானமாகி இருக்க, அவளின் வெட்கத்தில் அவனுள் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்தது.

அப்போது தான், ப்ளூடூத்தின் மறுமுனையில், பரத் கதறிக் கொண்டிருந்தான்.

“அர்ச்சு, சிசிடிவியை ஆஃப் பண்ணிட்டியா இல்லையா? சீக்கிரம் பண்ணு. டைம் போயிட்டே இருக்கு” என்று கடிந்திட, அவன் குரலில் தான் மோன நிலையில் இருந்து வெளிவந்த அர்ச்சனா விருட்டென கையை உருவிக் கொண்டாள்.

“சா… சார்… டூ மினிட்ஸ்…” நடுக்கமாக வெளிவந்த வார்த்தைகளுடன் அவள் வேலையைத் தொடர, குமரனோ அவளை சைட் அடிக்கும் வேலையே செவ்வனே செய்தான்.

நகுலன் பற்றிய விவரங்களை குமரன் மூலம் தெரிந்து கொண்ட ஜிஷ்ணுவிற்கு சினம் பீறிட்டு எழுந்தது.

வசுந்தரா தான், “சித்தப்பா பத்தி ஏதாவது தெரிஞ்சுதா ஜிஷு?” என வினவ,

சற்று தயங்கியவன், “குமரா இன்னும் முழு தகவல் தரலடி” என்றான்.

இருவரின் அழைப்பும் மீண்டும் பழையபடி மாறி இருக்க, அதனை உணர்ந்தாலும் இருவரும் தடுக்க முயலவில்லை. தடுக்கவும் தோன்றவில்லை.

அப்போதே விடியும் நேரம் வந்திருக்க, இருவரும் காரினுள்ளேயே சில நேரம் மௌனம், சில நேரம் உரையாடல் என நேரத்தைக் கடத்தினர்.

அந்நேரம், இரவு அவர்களை துரத்திய இரு கார்கள், அவனின் காரை ஒட்டி நிறுத்தப்பட்டிருக்க, ஜிஷ்ணுவும் வசுந்தராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

உடனே, ஜிஷ்ணு காரை கிளப்ப முயல, அதில் பக்கவாட்டில் நின்ற கார் இரண்டும் அவன் காரை வேகமாக மோதியது.

இருந்தும், அவன் கார நிறுத்தாமல் நேராக மலை அடிவாரத்தில் நிறுத்திட, இருவரும் காரை விட்டு இறங்கினர்.

மற்ற இரு கார்களில் இருந்த ஆட்களும் கையில் கத்தியுடன் இறங்க, அவர்களின் பார்வையோ வசுந்தராவின் மீதே இருந்தது.

வேகமாக அவளை நோக்கி கத்தியுடன் ஒருவன் வர, நிமிடத்தில் அவனை நிலத்தில் வீழ்த்தினான் ஜிஷ்ணு தர்மன்.

அதன் பிறகு வந்த ஆட்களின் நிழலும் தன்னவளின் மீது விழாமல் அடித்து மேய்ந்தவன், மேலும் ஆட்கள் வந்த படி இருந்ததில், வசுந்தராவை இழுத்துக் கொண்டு, மலை மீது ஏறினான்.

“ஜிஷு… இப்ப ஏன் மலைல ஏறுறோம்” அவள் மூச்சு வாங்க புரியாமல் கேட்க, அவன் அதற்குள் அவனின் ஆட்களுக்கு போன் செய்து வர செய்திருந்தான்.

“வேற எங்க ஓடுறது? முதல்ல உன்ன சேஃப் – ஆ ஒரு இடத்தில இருக்க வைக்க வைக்கணும்” எனக் கூறியவனிடம்,

“அவனுங்க ஏன் என்னை கொல்ல வந்தானுங்க?” என்றாள் புரியாமல்.

“இதுல என்ன டவுட் உனக்கு? உன்ன கொலை பண்ணுனா ஆல்ரெடி உனக்கு பகையா இருக்குற என் மேல தான பழி வரும். அதுக்கு தான் உன்ன டார்கெட் பண்றானுங்க.” என்றவன், யாரும் பின் தொடராததை உணர்ந்து ஒரு பாறை மீது ஆசுவாசமாக அமர,

அவளோ அவ்விடத்தைக் கண்டு பழைய நினைவில் சிதைந்தாள்.

இங்கு வரும் போதெல்லாம், இருவரும் அப்பாறை மீது அமர்ந்தே முத்தப் போரை நிகழ்த்துவர்.

அந்நினைவில் சிறிதாய் ஏக்கம் கொண்டவள், “என்னை கொலை பண்ண வந்தா நீ ஏன் காப்பாத்துற?” எனக் கேட்டவளுக்கு, இருவருக்குள்ளும் இருக்கும் உறவை பற்றி அறிய ஆவல் மேலோங்கியது.

அவனோ அவள் குரலை கவனியாது, எப்போதும் போல சீண்டலாக, “உன்ன கொலை பண்ணிட்டு பழியை என் மேல போடுற வரை என்னை வேடிக்க பாக்க சொல்றியா? அப்பறம் என் அரசியல் வாழ்க்கை என்ன ஆகுறது?” எனத் தோளைக் குலுக்கினான்.

அதில் அவள் முகம் சட்டென சுருங்கிவிட, அதனை உணர்ந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை. இன்னும் தன் மீது அவள் கொண்ட அவநம்பிக்கையும், வீசிய வார்த்தைகளும் நெஞ்சை விட்டு அகல மறுத்தது. ஆனாலும், அவளுடன் உறவாட துடிக்கும் இதயத்தை என்ன செய்து அடக்குவது என்று தான் புரியாது போனான்.

“இன்னும் ஓட வேண்டியது இருக்கும் வக்கீலு…? கொஞ்ச நேரம் உட்காந்துக்கோ” என அவனுக்கு அருகில் கண்ணைக் காட்ட,

“எவ்ளோ ஓடுனாலும் என் கால் ஒன்னும் உடைஞ்சுடாது. உன் வேலையை மட்டும் பாரு” என்றாள் சிடுசிடுப்பாக.

மெல்ல எழுந்த புன்னகையை அவன் வெளிக்காட்டும் முன்னே, ஆட்கள் அவனை நோக்கி வருவது தெரிய மீண்டும் இருவரின் ஓட்டமும் தொடர்ந்து, அவர்கள் எப்போதும் செல்லும் பிள்ளையார் கோவிலில் வந்து நின்றது.

மீண்டும் பழைய நினைவில் புதைந்தவளை நோக்கி, துப்பாக்கி குண்டு வர, ஜிஷ்ணு சரட்டென அவளை தன் பக்கம் இழுத்திருந்தான்.

எதிரில் வஞ்சத்தின் மொத்த உருவமாக, விழியில் கொலைவெறி தெறிக்க நின்றிருந்தார் நகுலன்.

தீயோ தென்றலாய் அவள்(ன்)

மேகா…

அடுத்த பதிவு நாளைக்கு போடுறேன் drs🥰🥰🥰

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
66
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்