Loading

“ஒன் ஏஞ்சல் கிஸ்?” எனக் கிசுகிசுப்பாக கேட்டவனை தடுமாற்றத்துடன் பார்த்த வான்மதி, சிவந்த கன்னங்களுடன் குனிந்து கொள்ள, “வீட்டுக்கு போலாமா?” என்றான் அதே ரகசிய குரலில்.

அதில் நிமிர்ந்து லேசாய் முறைத்தவள் பின், “ஒழுங்கா போய் வேலைய பாருங்க.” என்று வெட்கத்துடன் மொழிந்து விட்டு, ஆரவ் அழைத்தும் நிற்காமல் வெளியில் ஓடி விட்டாள்.

‘எப்படியும் வீட்டுக்கு தான வருவ…’ என புன்சிரிப்புடன் முணுமுணுத்துக் கொண்டவன், என்றுமில்லாததொரு உற்சாகத்துடன் வேலையில் மூழ்கினான்.

அன்றும் சுதாகர் ஆரவின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தான்.

ஆரவிடம் ஒரு மணி நேரமாக ஏதோ பேசியவன் வெளியில் வர, வான்மதி தான் அவனை யோசனையுடன் ஏறிட்டாள்.

“வெயிட் பண்ணு. நானும் கடைக்கு வரேன் சேர்ந்து போகலாம்” என்றவள் ஆரவின் அறைக்குள் புக, அவனின் விழிகள் ஹேமாவைத் தேடியது.

அவளோ அப்போது தான், கவினிடம் சென்று, “டேய் கவி. புதுசா ரெண்டு ஃப்ரெஷர் பொண்ணு எடுத்து இருக்கேன். சிங்கிள் தான். உன் டீம்லயே போட சொல்றேன்.” என்று நேரம் காலம் தெரியாமல் அவனுக்கு நல்லது செய்ய, அவனருகில் நின்றிருந்த லயா தான் கவினை முறைத்தாள்.

“ஓ. ஆபிஸ்ல இந்த வேலை வேற நடக்குதா?” இயல்பாய் எழுந்த கடுப்புடன் கேட்டவளைக் கண்டு அவனுக்கு தான் விழி பிதுங்கியது.

ஹேமாவோ, “ஆமா லயா. இவனும் தன்வியும் ஆபிஸ்ல ஜாயின் பண்ற பொண்ண தான் கரெக்ட் பண்ண டிரை பண்றானுங்க. ஆனா ஒன்னும் தேறல.” என நமுட்டு சிரிப்பு சிரிக்க,

“ஓஹோ… கரெக்ட் பண்ண வேற வேலை நடக்குதா?” என்றபடி, கையில் போட்டிருந்த காப்பை பின்னால் நகர்த்தி தீயாக பார்க்க,

கவின் தான் ‘அடிப் பைத்தியமே. இன்னைக்குன்னு பார்த்து ஏன்டி இவளோ நல்ல ஃப்ரெண்டா இருக்க…’ என ஹேமாவை மனதினுள் வஞ்சித்துக் கொண்டு,

“அது ஜஸ்ட் ஃபார் ஃபன் லயா” என்றான் அசட்டு சிரிப்பை உதித்து.

“எதே ஃபன் ஆ? அப்பறம் ஏன்டா ஏதோ பொண்ணு பாக்க சொல்ற மாதிரி என் உசுர வாங்குன.” என ஹேமா எகிற, அவனுக்கோ அய்யோ என்றிருந்தது.

அந்நேரம் தான் சுதாகர் அவன் கண்ணில் பட, “ஹேமா. உன் சைட்டுடி. தனியா வேற நிக்கிறான். போய் அவனை கரெக்ட் பண்ணு.” என்று பேச்சை மாற்ற அப்போது தான் அவனை கவனித்த ஹேமாவிற்கு வாயெல்லாம் பல்லானது.

“யூ ஆர் மை பெஸ்ட்டு பிரெண்ட்டா கவி. உனக்கு நீயே எதிர்பார்க்காத அளவு அழகான ஃபிகரா பார்த்து வேலைக்கு எடுத்து உங்க கல்யாணத்துக்கு நானே முன்னாடி நிக்கிறேன்” என்று சபதம் எடுத்து விட்டு சுதகாரை நோக்கி செல்ல,

‘பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லடி. பீஸ்ட் ஃப்ரெண்ட்…’ என அவளை கண்ட மேனிக்கு திட்டியவன், எதிரில் அவனையே அழுத்தமாக பார்த்தபடி லயா நிற்பதைக் கண்டு தன்னை நொந்தான்.

“என்கிட்ட புரொபோஸ் பண்ணிட்டு, இங்க தனியா சார் பொண்ணு பாக்குறீங்களோ?” நக்கலாக கேட்டவளிடம்,

“ஹே. புரொபோஸ் பண்ணது மட்டும் தான் உண்மை. இதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு…” என்றதில், இன்னும் அவளின் அனல் பார்வை தொடர்வதை கண்டு,

“நீ ஓகே சொல்லிருந்தா நானும் உன்ன மட்டும் நினச்சு காலத்த ஓட்டி இருப்பேன். நீ தான் நோ சொல்லிட்ட. அதான்…” என்று தோளை குலுக்கினான்.

“அதான்…?” என அவள் இரு புருவத்தையும் உயர்த்தி வினவ,

“இல்ல… நீ தான் நோ சொல்லிட்ட. உனக்காக வெயிட் பண்ற டைம்ல அப்படியே வேற ஃபிகர்க்கு அப்ளிக்கேஷன் போட்டா… ஒருவேளை அது வொர்க் அவுட் ஆகிட்டா… திரிஷா இல்லன்னா திவ்யான்னு…” என அடக்கிய சிரிப்புடன் அவன் பேசிக்கொண்டே செல்ல, அவளோ கொலைவெறி ஆனாள்.

“அடப்பாவி… அப்போ என்கிட்ட அப்ளிக்கேஷன் தான் போட்டியா?” என்றே அவன் நெஞ்சில் குத்தியவள், “மூஞ்ச பாரு.” என முறைத்த படி நகரப் போக, கவின் அவளைப் பார்த்தவாறே அவளின் கையைப் பற்றினான்.

சற்று நிறுத்தி “உன்ன காலேஜ்ல முதல் நாள் பாக்கும் போதே எனக்கு உன் மேல எக்ஸ்ட்ரீம் க்ரஷ்டி. உன் கூட பழக ஸ்டார்ட் பண்ணதும் அது லவ் ஆ மாறிடுச்சு. நீ ஆரவை லவ் பண்றன்னு தெரிஞ்சதும், கொஞ்சம் கஷ்டமா… இல்ல ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு.

அப்பறம், காதலை எல்லாம் முடிஞ்ச அளவு மறந்துட்டு நார்மல் ஆ தான் இருந்தேன்… ம்ம் இருக்க டிரை பண்ணேன். இப்ப வரை பண்ணிட்டு இருக்கேன்.” என்றவன் சிறிதாய் வலியுடன் கூடிய புன்னகை ஒன்றை சிந்தி விட்டு,

“ஆரவ் மிருணாவ கல்யாணம் பண்ணதும் எனக்கு சந்தோஷமா இருந்ததை விட, நீ வருத்தப்படுவன்னு இன்னும் கஷ்டமா தான் இருந்துச்சுடி.

இது என்ன கேடுகெட்ட லவ்வுன்னு கூட உனக்கு தோணலாம். ஆனா, ரியல் லவ் என்னைக்கும் யாரையும் காயப்படுத்தாது லயா. நீ ஆரவ் மேல வச்ச காதல்… இதுவரை அவனை காயப்படுத்துனது இல்ல. அதே மாதிரி நான் உன் மேல வச்ச காதலும் உன்ன காயப்படுத்தாது.

அதுக்காக உன்ன மறந்துட்டு வேற பொண்ண மேரேஜ் பண்ணிப்பேன்னுலாம் சொல்ல மாட்டேன். காலேஜ் முடிச்சு இப்போ வரை என்னால உன்ன மறக்க முடியல. இனிமேலும் உன்ன மறப்பேன்னு தோணல. பட் இப்படியே இருக்க எனக்கு பிடிச்சு இருக்கு.”
என பேசி முடித்த பின்னே லயாவின் கைகளை விடுவித்தான்.

ஆனால், அவன் விட்டது கூட உணராமல் இன்னும் அவளின் கரம் அவன் முன்னே நீட்டி இருக்க, சில நொடிகள் கழித்தே நிகழ்வுக்கு வந்தவளுக்கு மனம் குழம்பிய குட்டையாக இருந்தது.

அவனை புருவம் நெளித்து ஒரு பார்வை வீசியவள், “போடாங்… பைத்தியம். சும்மா இருந்த என்னை ஏன்டா குழப்புற? சாவடிச்சுடுவேன் இனிமே இப்படி டயலாக் பேசுனீனா…” என விரல் நீட்டி எச்சரித்தவளை, கவின் தான் “என்னது டயலாகா?” என்றே விழித்தான்.

அவளோ, கிளம்ப எத்தனித்து விட்டு பின் நின்று, “இப்போ நான் டெல்லி போகவா வேணாமா?” எனக் கேட்டாள் கடுப்பாக.

அவன் தான் குழம்பி, “உன் இஷ்டம். இவளோ நாள் என்கிட்ட கேட்டா போன” என்றான்.

“ப்ச்… கேட்டதுக்கு பதில் சொல்லு. போகாவா வேணாமா.” என அவள் மீண்டும் வினவ,

சில நொடிகள் அமைதி காத்தவன், “என் மேல லவ் வந்தா இங்க இரு. இல்லன்னா போ” என்றான் கையை கட்டியபடி.

“ரெண்டுமே இல்லன்னா?” அவள் குழப்பத்துடன் வினவ,

“ம்ம். பாய்சன் குடிச்சுடுங்க பிரெண்ட். பிசாசு… விடாம கேள்வி கேக்குறா. ஓடிடு” என கடியானவனை அவளும் கடியாகி முறைத்து விட்டு செல்ல, அவன் இதழோரம் குறுநகை பிறந்தது.

“ஹாய் சுதாகர்” என கூற வந்த ஹேமா, அவன் இவளை கண்டு கொள்ளாதவாறு நிற்பதைக் கண்டதும்,

“நீ…நீங்க… உங்களை நான் எங்கயோ பார்த்து இருக்கேன்” என்று அவனைப் பார்த்து புரியாமல் பாவனை செய்தாள்.

அவனும் “அட… நான்… நானும் உங்களை எங்கயோ பார்த்து இருக்கேன்.” என அவளைப் போன்றே பாவனை செய்தவன்,

“ஹான் ஞாபகம் வந்துடுச்சு. நீங்க சினி ஸ்டார் தான. சமந்தா சிஸ்டர்?” என பொங்கிய சிரிப்புடன் வினவ,

அவள் தான், “க்கும்… சமந்தா கேட்டா சூசைட் பண்ணிப்பாங்க சுதாகர்.” என்றாள் பாவமாக.

அதில் பக்கென சிரித்து விட்டவன், அவளையே பார்வையால் அளவெடுக்க, அவளுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

“கொ… கொஞ்சம் வொர்க் இருக்கு. நான் போறேன்” என அங்கிருந்து நகர்ந்து அவள் அறைக்கு சென்று விட்டவளுக்கு, லேசாய் மூச்சிரைத்தது.

‘நம்ம தான அவன சைட் அடிக்கிறோம். அவன் ஏன் நம்மள இப்படி பாக்குறான். ஒருவேளை அவனும் நம்மள சைட் அடிக்கிறானா?’ என தீவிரமாக சிந்தித்தவள்,

‘ஆமா, அவனுக்கு இருக்குற அழகுக்கும் பணத்துக்கும் நம்மள தான் சைட் அடிக்கிறான் பாரு.’ என தன்னையே திட்டிக்கொண்டவள், அவளறையில் இருந்தபடியே அவனை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்தாள்.

“என்ன இவ… பேசுறதுக்குள்ள போய்ட்டா…” என அவளை பின் தொடர எத்தனிக்கும் போதே வான்மதி வந்து விட, அவளை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.

செல்லும் போதே, “இஷுவ தூக்கிட்டு வரலையா மதி” எனக் கேட்க, “அவன் தூங்குறான்” என்று பதில் அளித்தவள்,

“உனக்கும் ஆரவ்க்கும் நடுவுல என்ன ரகசியம் ஓடுது” என நேரடியாக கேள்வியைத் தொடுக்க, சற்று தடுமாறிய சுதாகர்,

“எனக்கும் என் மச்சானுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும். நீ ஏன் அத கேக்குற.” என்றான் சிலுப்பிய படி.

“அதென்ன ரெண்டு பேரும் இவளோ க்ளோஸ் – ஆ இருக்கீங்க? எங்க மேரேஜ்க்கு அப்பறம் தான உனக்கு அவர தெரியவே செய்யும்…”

அக்கேள்வியில் மெல்ல புன்னகைத்தவன், “நான் ஆரவ பாக்கும் போதெல்லாம் நினைப்பேன் வண்டு. அவனே முதல்ல ஏன் உன்ன கல்யாணம் செஞ்சுருக்க கூடாதுன்னு.

சச் அ ஜென்டில் மேன். ரொம்ப ஷார்ட் டைம்ல அவன் பெஸ்ட் ப்ரெண்ட் ஆனது மாதிரி ஒரு ஃபீல். ரொம்ப வருஷம் ஆச்சு ஃப்ரெண்ட்ஸ், கிண்டல் கேலின்னு டைம் ஸ்பெண்ட் பண்ணி. ரொம்ப வொர்க்ஹாலிக் – ஆ இருந்துட்டோமோன்னு இப்ப தான் வருத்தமா இருக்கு. என்னமோ இங்க வந்தாலே மைண்ட் ரெஃப்ரெஷ் ஆகிடுது.” என்றவன், சில நொடி கழித்து,

“என்ன பிராப்ளம் வந்தாலும், அவன விட்டு போகணும்ன்னு மட்டும் நினைச்சுறாத வண்டு” என போற போக்கில் வார்த்தையை விட்டிருந்தவன், நாக்கை கடித்துக் கொண்டான்.

ஆரவை பற்றி பேச விட்டு கேட்டுக் கொண்டே இருக்க அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு.

மென்னகையுடன் கேட்டிருந்தவள், “என்ன பிராப்ளம் வரும்? அப்படியே வந்தாலும் நான் அவர விட்டு போக மாட்டேன் சுத்தி.” என்றாள் உறுதியாக.

அவனும் சட்டென நிம்மதியாகி, பேச்சை மாற்ற, “அந்த ஹேமா பொண்ண கரெக்ட் பண்ண ஐடியா குடு வண்டு” என்றான் முகத்தை சுருக்கி.

“நீ தான் இத்தனை தடவ ஆபிஸ் வரியே. அப்படியே பேச வேண்டியது தான?” என அவள் சிரிக்க,

“எங்க பேச. எப்போ பாரு குரங்கு குட்டிங்க மாதிரி அவள் கூடவே ரெண்டு மலமாடுங்க சுத்துதுங்க. அவனுங்கள தாண்டி அவளை தனியா பார்த்து பேசுனா வேலை இருக்குன்னு ஓடிட்டா. அவளை எப்படி அப்ரோச் பண்ணன்னே தெரியல மதி” என்றவன் நிஜத் தவிப்புடன் கேட்க,

அதில் நன்றாகவே சிரித்து விட்டவள், “நீ மலமாடுன்னு சொன்னது மட்டும் கவின் அண்ணாக்கும், தன்வி அண்ணாவுக்கும் தெரிஞ்சுது… உன்னை மொத்திடுவாங்க.” என்றாள் நக்கலுடன்.

பின் அவளே, “ஜோக்ஸ் அபார்ட். ஹேமா மாதிரி சும்மா சைட் அடிக்க கிண்டல் பண்றியா? இல்ல உண்மையாவே லவ் பண்றியா சுத்தி?” என கேட்க,

அவனோ முறைத்து, “எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா சும்மா சைட் அடிக்க… ஐ ரியலி லவ் ஹர் மதி. அவளை கடைல பார்த்ததுல இருந்தே, நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன். இதுவரை அவகிட்ட பெருசா பேசிக்க கூட இல்ல தான். ஆனாலும் ஒரு மாதிரி வித்தியாசமான ஃபீல். என்னால எக்ஸ்ப்ளயின் பண்ண முடியல” என்றான் உணர்ந்து.

அவளால் உணர முடிந்தது. ஆரவ் மீதும் முதன் முதலில் இதே உணர்வில் தானே சிக்கித் தவித்தாள்.

கூடவே விழிகள் எங்கோ வெறித்திருக்க,

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத சுத்தி. நான் தான் வீட்டோட இல்ல. நீ வீட்டுக்கு தெரியாம அவங்க அனுமதி இல்லாம கல்யாணம் பண்ணிக்க முடியாது.

நம்ம வீட்ட பத்தி உனக்கே தெரியும். ஸ்ட்டேடஸ் பார்ப்பாங்க. ஹேமா மிடில் கிளாஸ் தான். நீ அவங்கள லவ் பண்றன்னா… தயவு செஞ்சு உடனே அவங்ககிட்ட சொல்லிடு. வீட்லயும் பேசிடு.

அவங்க கடைசி வரை ஓகே சொல்லலன்னாலும் ஹேமாவ விட்டுடாத. அதே நேரம் நம்ம வீட்டு ஆளுங்க அவங்க ஸ்டேடஸ் வச்சு தப்பா பேசவும் அலோ பண்ணாத.

அது அவங்களுக்கு ரொம்ப ஹர்டிங் ஆ இருக்கும். சில காயங்களை மனசு அவ்ளோ சீக்கிரம் மறக்காது. அதுவும் காதலால வர்ற காயம் ரொம்ப வலிக்கும். அட்லீஸ்ட் நீயாச்சு, இந்த காதலை சரியா ஹேண்டில் பண்ணிடு…” என்று ஆழ்ந்த குரலில் கூறி முடிக்கையிலேயே கடை வந்துவிட, இறங்க சென்றவளை தடுத்தான் சுதாகர்.

“நீயாச்சும்ன்னா? என்ன அர்த்தம் மதி?” குழப்பத்துடன் அவன் வினவ, அவள் தடுமாறவில்லை.

“ஜஸ்ட் சொன்னேன். அண்ணிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.” என சிறு புன்னகையை வலுக்கட்டாயமாக உதிர்த்து விட்டு செல்ல, அவளையே யோசனையுடன் பார்த்திருந்தான் சுதாகர்.

ஆரவிற்கும் வான்மதிக்கும் வீடு செல்லும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடப்பாக இருந்தது.

வீட்டை அடையும் வரை, பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் பற்றி அலசியவர்கள் வீட்டிற்கு வந்ததும் மௌனமாய் புன்னகைத்துக் கொண்டனர்.

ஆரவ், அவளின் கரங்களைப் பற்றிட, அவளுக்கு முந்தைய நாள் கொடுத்த பட்டர் ஃபிளை முத்தமே நினைவில் ஆடி கூச்சத்தைக் கொடுத்தது.

இன்று கண்ணை திறந்து அவனை நிச்சயம் காண இயலாது என உணர்ந்தவள், அவளின் கையைப் பற்றியதுமே கண்ணை மூடிக் கொண்டாள்.

அவன் தான் மென் சிரிப்புடன், “குட். ஏஞ்சல் கிஸ்க்கு கண்ணை மூடி தான் குடுக்கணும்.” என அவனுக்கே உரித்தான குரலில் கூற, அவளோ இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

“இவளோ டைட்டா மூடாதடி.” என்றவன், அவ்விழிகளை ரசித்தபடி அதற்கு மெல்ல முத்தமிட்டான்.

“கண்ணுல கிஸ் பண்றது தான் ஏஞ்சல் கிஸ் கண்ணம்மா.” என்றவன், மற்ற விழிக்கும் முத்தம் வைத்து விட்டு,

“கண்ணுல மட்டும் இல்ல, கண்ணை சுத்தி எங்க வேணாலும் குடுக்கலாம்…” என்றவன், விழிகளை சுற்றி இதழ்களைக் கொண்டு வட்டமடித்தான்.

அவளோ அவன் முத்தத்தில் உருகி கிறங்கி நிற்க, அவனோ “இதுல இன்னொன்னும் இருக்கு” என்று நிறுத்தினான்.

அவள் மெல்ல கண் விழித்து அவனைக் காண முயன்று அது முடியாமல் மூடிக் கொள்ள, “என்னன்னு கேக்க மாட்டியாடி?” எனக் கேட்டான் சிணுங்களாக.

“என்… என்ன?” அவள் திணறலுடன் வினவ,

“அதாவது, ஏஞ்சல் கிஸ் யார் குடுக்குறாங்களோ அவங்களுக்கும் ரிடர்ன் குடுக்கணும். அப்போ தான் ஏஞ்சல் கிஃப்ட் குடுக்கும்” என்றான் அவளை முதன் முதலில் பார்த்தபோது அவள் கூறியது போன்றே.

அதில் இறுதி வரியை கவனியாமல், செக்கச் சிவந்தவள், “போங்க ஆரவ்…” என விலக போக, அவளைப் பற்றி தன்னருகில் இழுத்தவன்,

“ஒரே ஒரு கிஸ்டி பிளீஸ்.” என்றான் கெஞ்சலாக.

அத்துடன், வெட்கத்தை சற்றே விடுவித்தவள், “எதுக்கு பிளீஸ் எல்லாம். குடுன்னா குடுக்க போறேன்.” என அவசரமாகக் கூறி விட்டு, பின், “கண்ணை மட்டும் மூடிக்கோங்க…” என்றாள் தயக்கத்துடன்.

அவனோ விழி விரித்து, “அப்போ உண்மையாவே குடுக்க போறியா?” எனக் கேட்டவன், அவள் ஒப்புக்கொள்வாள் என்றெல்லாம் நினைக்கவில்லை.

அவனின் வியப்பான பாவனையும், ஏக்கம் கலந்த பார்வையும் அவளை சிறிது வதைக்க, சட்டென அவனின் கன்னம் பற்றி, ஆடவனின் அழுத்த இமைகளில் அழுத்த முத்தம் ஒன்றை பதித்திருந்தாள்.

இப்போது கண்ணை இறுக்கி மூடி நிற்பது அவனின் முறையானது.

அதில் அவனை ரசித்திருந்தவள், மற்ற விழியிலும் இதழ் பதித்து விலக, முத்தம் பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் மன அழுத்தம் குறைவதை எண்ணி சற்றே வியக்கவே செய்தாள்.

அதிலும் நேசத்துடன் கொடுக்கும், வாங்கும் முத்தம் தான் எத்தனை இனிது… என கண் மூடி அதனை உணர்ந்தவளை மேலும் உணர வைக்கும் பொருட்டு, அவன் இதழ்கள் மீண்டும் அவள் இமைகளை முற்றுகை இட்டது தாபமாக.

உறங்கும் நேரம் வரையிலும், அவளை அவ்வப்பொழுது முத்தமிட, அவளுக்கு தான் ஒவ்வொரு முறையும் விழிகள் புத்துணர்வு பெறுவது போல பரவசமாக இருந்தது.

“கண்ணம்மா?” என அவன் அழைக்க, “ம்ம்” என்றவளிடம்,

“எஸ்கிமோ கிஸ் தெரியுமா?” என்றான் சிறு சிரிப்புடன்.

அதில் விழி திறந்து விழித்தவள், “நீங்க என்ன கிஸ்க்கு டிக்ஷனரி வச்சு இருக்கீங்களா” என கேட்டு விட, அவன் சத்தமாக சிரித்து விட்டான்.

“எல்லாம் கூகிள் ஆண்டவர் கருணை தான்.” என கண்ணடித்தவனைக் கண்டு சிவந்தாள்.

பின், “என்ன எஸ்கிமோ கிஸ்ன்னா, கண்ணை திறந்து கண்ணுல கிஸ் பண்ணனுமா” அவள் சிரிப்புடன் வினவ,

“அந்த கண்ணு என்னை பல நாள் தூங்க விடல தான். ஆனா அதுக்காக அதுக்கு மட்டுமே கிஃப்ட் தந்தா, மத்ததெல்லாம் கோச்சுக்கும் கண்ணம்மா.” என்றான் குறும்புடன்.

அதில் அவளுக்கு தான் இதயம் பலவாறாக துடிக்க, அவனின் விழிகள் கண்ணை தாண்டி கீழே இறங்கி நெருங்க, இப்போதும் அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

அவனோ, அவளின் மூக்கின் மீது வைத்து மூக்கை இருபுறமும் இடித்து, “மூக்கும் மூக்கும் இடிச்சுக்குறது தான் எஸ்கிமோ கிஸ்” என்றான் ரகசியமாக.

வெட்கம் நெஞ்சை நிறைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கருவிழிகள் கீழிறங்கி இதழ்களை காண்பதைக் கண்டு,

“டைம் ஆச்சு போய் தூங்குங்க ஆரவ்…” என்று விட்டு அவள் அறை நோக்கி செல்லப் போக, அவளை தடுத்தான்.

“நாளைக்கு என்ன கிஸ் வேணும்ன்னு சொல்லிட்டு போ கண்ணம்மா.” என அவளைக் குறுகுறுவென பார்த்தபடி வினவ,

“உங்களுக்கு என்ன வேணுமோ அது தான் எனக்கும் வேணும்…” என அவனைப் பாராமல் கூறி விட்டு அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டவளைக் கண்டு அழகாய் புன்னகைத்தது ஆரவின் இதழ்கள்.

“வேலை முடிஞ்சுதா கண்ணம்மா?” என்ற ஆரவின் குறுஞ்செய்தி கண்டு புன்னகைத்தவள், “முடிஞ்சுது ஆரவ்… வாங்க” என்றாள்.

“ஆன் தி வே…” என பதில் வந்ததில் இன்னுமாக இதழ் விரித்தவள், அன்று கடையில் இருந்து வேகமாக கிளம்பத் தொடங்கினாள்.

அந்நேரம், “என்னம்மா எப்படி இருக்க?” எனக் கேட்டபடி, வான்மதியின் பெரியம்மா கார்த்திகாவும், பெரியப்பா கஜேந்திரனும் உள்ளே வர, அவளுக்கு உற்சாகம் வடிந்த நிலை தான்.

‘கொஞ்ச நாள் சொந்தக்காரங்க இம்ச இல்லாம இருந்தேன்.’ என தனக்குள் நொந்தவள், “வாங்க பெரியப்பா, வாங்க பெரியம்மா நல்லா இருக்கீங்களா?” எனக் கேட்டாள் சம்பிரதாயமாக.

கார்த்திகா, “நாங்க நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க” என அவள் கழுத்தை ஆராய்ந்தார்.

“எனக்கு என்ன குறை நல்லா இருக்கேன்.” என்றாள் எப்போதும் போன்றே.

“என்ன அதிசயமா மஞ்சள் கயிறு கழுத்துல இருக்கு.” என கார்த்திகா நக்கலாக வினவினார். விவாகரத்து ஆகும் முன்பே மாங்கல்யத்தை கழற்றி தான் வைத்திருந்தாள்.

அதில் தான் நிலைமை உணர்ந்தவள், “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு பெரியம்மா” என சற்றே தயக்கத்துடன் கூற,

“அதான் ஆகி விவாகரத்தும் ஆகிடுச்சே” கஜேந்திரன் முறைப்பாக வினவ, “ரெண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு பெரியப்பா” என்றாள் அழுத்தமாக.

அவர்கள் சற்றே அதிர்ந்திட, சுதாகரும் எதுவும் சொல்லவில்லையே என அவனைக் கடிந்து விட்டு கஜேந்திரன்,

” பெத்தவங்க உயிரோட இருக்குறப்ப சொல்லாம கொள்ளாம இப்படி கல்யாணம் பண்ணிருக்கியே.
என்னமோ, இப்ப இருக்குற பொண்ணுங்களுக்கு கல்யாணம்ன்னா விளையாட்டு பொருள் மாதிரி ஆகிடுச்சு. என் தம்பிக்கு தெரிஞ்சா அவன் மனசு என்ன பாடு படும்” என்று சலித்தார்.

கார்த்திகாவோ, அவளிடம் ஏதோ ரகசியம் பேச வருவது போல அருகில் வந்து சற்று சத்தமாகவே,

“உனக்கு தான் புருசன் தொட்டா பிடிக்காதே. அப்பறம் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட? இவனும் தொட்டான்னு கேஸ் போட்டுடாத. ஏற்கனவே உள்ளதுக்கே அசிங்கம் இன்னும் போகல.

இவனவாவது தொட விடுவியா? இல்ல…” என்று மேலும் பேச வரும் முன் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இந்த பேச்சை எதிர்பார்த்து இருந்தாள் தான். ஆனால் கேட்கும் போது நாரசமாக இருந்தது.

கண்ணீர் திவலைகள் கன்னங்களை நனைக்கும் போதே, “கண்ணம்மா!” என்ற ஆரவின் குரல் கேட்க, தாயை கண்ட சேயை போல, “முகில்” என்று அவனருகில் சென்று நின்று கொண்டாள்.

ஆரவ் சற்றே அழுத்தத்துடன், அவர்களை பார்த்து விட்டு, “யார் நீங்க?” என வினவ, வான்மதி கண்ணீரை மறைத்துக் கொண்டு “சுதாகரோட அப்பா அம்மா…” என்றாள்.

கஜேந்திரன் “நீ யாரு?” எனக் கேட்டார் புருவம் சுருக்கி.

“மதியோட புருஷன்.” என்று அழுத்தத்துடன் உரைக்க,

“க்கும், ஏதோ மொதோ புருஷன் மாதிரி பேசுறான். இவ வண்டவாளம்லாம் தெரியாது போல” என கணவனிடம் முணுமுணுக்க, கார்த்திகாவை சொடுக்கிட்டு அழைத்தவன்,

“நீங்க உங்க புருஷனுக்கு எத்தனாவது பொண்டாட்டி?” எனக் கேட்டான் எகத்தாளமாக.

அதில் கார்த்திகா முகத்தை சுருக்க, அவரோ, “வார்த்தையை அளந்து பேசு” என்றார் எச்சரிக்கையாக.

“என் பொண்டாட்டியோட இடத்துக்கு வந்து, என் பொண்டாட்டிய தப்பா பேசுற அதிகாரத்தை உங்களுக்கு யாரு குடுத்தது?” என கர்ஜித்தவன், “செக்யூரிட்டி” என்று உறுமினான்.

அடுத்த நொடி அறை வாசலில் நின்றிருந்த காவலர் உள்ளே வந்திருக்க,

“அனாவசியமா இனிமே யாராவது இங்க வந்தா முதல்ல உன் வேல தான் போகும். பிடிச்சு வெளிய தள்ளு.” என்று அவர்களை பார்த்து கூற, இருவருக்கும் சுர்ரென கோபம் வந்தது.

“போனா போகுதுன்னு இவளுக்கு இந்த கடையை எழுதி குடுத்தோம். இப்ப வர எங்க பையன் தான் இங்க மாடு மாதிரி உழைக்கிறான். நீ எங்களையே வெளிய போக சொல்றியா” கஜேந்திரன் பொங்கினார்.

“வயசு வெறும் நம்பர் தான்னு நம்புறவன் நான். வயசுக்குன்னு தனி மரியாதை எல்லாம் குடுக்க மாட்டேன். நீங்க சுதாகர் ஓட அப்பா அம்மான்ற ஒரே காரணத்துக்காக தான் இப்ப வரை என் கை உங்க மேல படாம இருக்கு. இல்ல… பேசுன வாய் கிழிஞ்சு இருக்கும்” என கார்த்திகாவை பார்த்து தீப்பிழம்பாய் பேசியவனைக் கண்டு சற்றே கலக்கம் தோன்றியது.

அடித்து வைத்தால் அதுவும் அவமானம் தானே என பயந்த கார்த்திகா, கணவரை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல, வான்மதி தான் உதட்டை அழுந்தக் கடித்தபடி நின்றிருந்தாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தவன்,
தோளில் துயில் கொண்டிருந்த இஷாந்தை அவளிடம் கொடுத்து விட்டு, “போலாமா?” எனக் கேட்டான்.

வீட்டிற்கு செல்லும் வரையிலும் அவள் எதுவும் பேசவில்லை.

விழித்துக் கொண்ட மகனிற்கு, அவனே உணவும் கொடுத்து, சற்று நேரம் விளையாட்டு காட்டிட, அவள் தான் இறுகிய முகத்துடன் இருந்தாள்.

அதில், இஷாந்தை கீழே விட்டு விட்டு, அவளை அள்ளி மடியில் கிடத்தியபடி சோஃபாவில் அமர்ந்தான்.

அவன் செயலில் தான் தன்னிலை வந்தவள், “ஆ ஆரவ்… என்ன பண்றீங்க?” என்று திடுக்கிட்டாள்.

“மேடம் என்ன டீப் திங்கிங்ல இருக்கீங்கன்னு சொன்னா. நானும் யோசிப்பேன்ல” அவன் குறும்பை தாங்கி வினவ,

முதலில் அவனின் நெருக்கத்தில் சற்று நெளிந்தாலும், அதுவே அவளுக்கும் வேண்டும் போல இருக்க, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், “நான் தான் தப்பா இருக்கேனா ஆரவ்?” எனக் கேட்டாள் கலங்கிய குரலில்.

“சொல்ல வர்றதை முழுசா சொல்லி முடி. அப்பறம் நான் பதில் சொல்றேன்.” என்றவன், முகத்தில் விழுந்த அவளின் முடிக் கற்றைகளை பின்னால் நகர்த்தியபடி கூற,
அவள் அமைதி காத்தாள்.

“மனசுல இருக்கிறத கேட்டுடு கண்ணம்மா…!” அவன் மென்மையுடன் ஊக்குவிக்க,

“அவன் நிஜமாவே ரேப் தான் பண்ணான் ஆரவ். நான் வேணும்ன்னு கேஸ் குடுக்கல. இவங்கள்லாம் பேசுறத பார்த்தா நான் தான் தப்பா இருக்கேனோன்னு தோணுது. உங்களை கூட நான் தொட விட மாட்டுறேன் தான. எனக்கு ஒண்ணுமே புரியல ஆரவ். என்னை யாருக்குமே புரியலையா. இல்ல, நான் தான் யாரையும் புரிஞ்சுக்கலையா?” எனக் கேட்டு விட்டு அவன் மீதே சாய்ந்து கண்ணீரில் கரைந்தாள்.

ஒரு நொடி அவனுக்குள் சுள்ளென வைத்தாலும், அவளை சமன் செய்வது தான் முக்கியம் என்று உணர்ந்தவன்,

அவளின் முதுகை நீவி விட்டு, “இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.

அதில் நிமிர்ந்தவள், புரியாமல் விழிக்க,

“இப்போ நீ என்னை கட்டி பிடிச்சு தான கண்ணம்மா அழுதுட்டு இருக்க. நானும் உன்ன ஆசையா கிஸ் பண்றேன். நீயும் எனக்கு கிஸ் குடுக்குற. எந்த கஷ்டம்ன்னாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிற. எனக்கு ஒன்னுன்னா துடிக்கிற. என் மேல அவ்ளோ அன்பா இருக்க. நானும் உன்ன அவ்ளோ அவ்ளோ அவ்ளோ லவ் பண்றேன். இதுக்கு மேல நமக்குள்ள என்ன தாம்பத்யம் வேணும்?

அப்படியே நமக்குள்ள தொடுதல் இருந்தா கூட, அது அன்பான கூடலா தான் இருக்குமே தவிர. ரேப் ஆ இருக்காது மதி. முதல்ல, நீ செஞ்சது சரி தான்னு உன்ன நீ நம்பு. அப்பறம் மத்தவங்களுக்கு புரிய வைக்கலாம்.”
என அழுத்தம் திருத்தமாக கூறியவனைக் கண்டு எப்போதும் போல கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்.

சில நொடிகள் கழிய, “நீங்க… நீங்க என்ன சொன்னீங்க?” என தொண்டை கமற கேட்டவள், அவன் புருவம் சுருக்கி பார்த்ததும், “நீங்க லவ்… ன்னு ஏதோ சொன்னீங்களே. உண்… உண்மையாவா?” எனக் கேட்டாள் தட்டு தடுமாறி.

அதில் மென்மையாய் குறுநகை பூத்தவன், “ஆமா, என் கண்ணம்மாவை நான் நிறய நிறய லவ் பண்றேன். லவ் பண்றதுனால தான, என் மனசுல இருந்ததை எல்லாமே சொன்னேன். கிஸ் பண்றேன். அவளை ரசிக்கிறேன். தினம் தினம் அவள் மேல பைத்தியம் ஆகுறேன்.” என்றவன், அவளின் பின்னந்தலை கூந்தலை கோதி விட்டு, அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி,

“லவ் யூ கண்ணம்மா. டூ யூ லவ் மீ?” என அத்தனை காதலையும் குரலில் தேக்கி கூறியவனை, கண்ணில் நீர் தேங்க பார்த்தவள், “ம்ம்” என தலையசைத்தாள் வேகமாக.

“ம்ம் ன்னா என்ன அர்த்தம்…? வாய திறந்து சொல்லுடி. என்னை நீயும் லவ் பண்றியா…?” எனக் கேட்டான் தொண்டை அடைக்க.

அவளோ, “லவ் பண்றதுனாள தான, மனசுல அவ்ளோ அருவருப்பு இருந்தும், நீங்க என்னை கிஸ் பண்ணும் போதும், இப்படி ஹக் பண்ணி ஆறுதல் சொல்லும் போதும் மனசு லேசாகுது. நீங்க என் பக்கத்துல வரும் போது அவ்ளோ பாதுகாப்பா இருக்கு. ஆசையா என் கன்னத்தை பிடிக்கும் போது எனக்கும் ஆசையா இருக்கு உங்க கன்னத்தை பிடிச்சுக்கணும்ன்னு…” என்றவள், அவன் கன்னத்தை வருடி,

“லவ் யூ ஆரவ்.” என தலை சாய்த்து நீர் வழிய கூறி முடித்தவள், மறுநொடி அவனின் இறுகிய அணைப்பில் புதைந்திருந்தாள்.

தேன் தூவும்…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
43
+1
245
+1
6
+1
4

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. priyakutty.sw6

   பெரியவங்க வயசுக்கு தகுந்த மாதிரியா பேசுறாங்க… 😡

   ரெண்டு பேரோட லவ்… 😍

  3. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.