Loading

உத்ரா, துருவ் சென்ற திசையைப் பார்த்து மெலிதாய் புன்னகைக்க, அர்ஜுன் அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.

உத்ரா சட்டென்று முக பாவத்தை மாற்றி கொண்டு. “நீ என்ன பண்ற இங்க. ஹாஸ்பிடல் கிளம்பு” என்று விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்.

மற்றவர்களுக்கும் அவளிடம் இதனைப் பற்றி கேட்கவும் பயம், மறுபடியும் அவளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய்விடுமோ என்று.

உத்ராவிற்கு தான் பெரும் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. அஜயும் சுஜியும் அவள் குழம்பிய முகத்தை பார்த்து என்னவென்று கேட்க,

“ஐம் சோ கன்ஃபியூஸ்ட். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ ஏன் அந்த சைதன்யா இவ்ளோ வேலை பார்க்குறான்.

துருவ் இன்னும் என்கிட்ட எதையோ மறைக்கிறான். அது என்னவா இருக்கும்? மீராவும், சஞ்சுவும் அவனுக்கு யாரு?

ஜஸ்ட் செகரட்டரி மட்டும் தானா? இல்ல அவள் சைட்ல எதுவும் பிளாஷ்பேக் இருக்கா? அர்ஜுன் பத்தி நான் அவன்கிட்ட சொல்லிருப்பேன். சோ அவனுக்கு அர்ஜுனை தெரியும்.

பட் அவள் லவர் மீரா தான்னு அவன் என்கிட்டயே சொல்லல. அப்பறம் எப்படி துருவ்க்கு தெரிஞ்சுச்சு. அவன் எதுக்கு அவளை இங்க கூட்டிட்டு வரணும்.

அதுலயும் நம்ம வீட்ல எதுக்கு தங்க வைக்கணும். அர்ஜுனும் அவளும் சேரனும் அப்டிங்கிறதுக்காகவா இல்ல… வேற ஏதாவது காரணமா?

அர்ஜுனை லவ் பண்ணுன மீரா ஏன் பாதில அவனை விட்டுட்டு கை குழந்தையோட ஆஸ்திரேலியா போனாள்” என்று தலையை தட்டி சொல்லிக்கொண்டு இருந்தவள்,

திடீரென “வெய்ட் வெய்ட்… துருவ் சொன்னதை பார்த்தா, அவன் லண்டன்ல தான் பிசினெஸ் பண்ணிக்கிட்டு  இருந்தான். இப்போ அவன் லண்டனை தவிர மத்த எல்லா நாட்டுலையும் பிரான்ச் வச்சிருக்கான்.

அவன் எதுக்கு ஆஸ்திரேலியா வந்தான்? அங்க மீரா எதுக்கு போனாள்?” என்று குழம்பினாள்.

சுஜி அங்கிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என தண்ணீரைக் குடித்து விட்டு, அஜய்க்கும் கொடுத்தாள். அவனும் பாவம் உத்ரா பேசியதில் தலை சுற்றிப் போய் தான் அமர்ந்திருந்தான்.

மேலும் உத்ரா பேச போக, சுஜி “போதும் பங்கு, ஸ்கூல்ல கொஸ்டின் கேட்டா கூட, சாய்ஸ் குடுப்பாங்க. ஆனால் நீ சாய்சும் கொடுக்காமல், இதான் ‘சிலபஸ்’ன்னும் சொல்லாமல், இப்படி கேட்டுகிட்டே இருந்தால், நாங்க எல்லாம் பாவம் இல்ல. எல்லாமே அவுட் ஆஃப் சிலபஸ் ஆகவே இருக்கு” தயவு செய்து இதற்கு மேல் எதுவும் கேட்காதே என்ற ரீதியில் கெஞ்சினாள்.

அஜய், “பங்கு, இதெல்லாம் நீ துருவ்கிட்ட கேட்டா அவனே பதில் சொல்லிடுவானே. வா அவன்கிட்ட கேட்கலாம்” என்று சொல்ல,

உத்ரா, மறுப்பாய் தலையாட்டி “அவன் சொல்லமாட்டான்” என்றாள்.

அஜய், “ஏன் சொல்லமாட்டான்… இவ்ளோ விஷயத்தை சொன்னவன் இதை சொல்லமாட்டானா” என்று கேட்டதும்,

சுஜி, “என்ன ஆனாலும் பரவா இல்லை. வா பங்கு. நம்ம கேட்கலாம்” என்று உத்ராவை இழுத்துக் கொண்டு செல்ல, அஜயும் அவர்கள் பின்னே சென்றான்.

துருவின் அறைக்கு வெளியில் நின்று கொண்டு, உத்ரா, “வேணாம் பங்கு அவன் எதுவும் சொல்லமாட்டான். நான் அன்னைக்கு கேட்ட கேள்விக்கே அவன் இன்னும் பதில் சொல்லல. நம்ம எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும்” என்று எச்சரித்தாள்.

அஜய் “ப்ச் இன்னொரு தடவை கேட்கலாம் பங்கு வா.” என்று வெளியிலேயே மூவரும் தீவிரமாய் வாதம் செய்து கொண்டிருக்க, அஜயும், சுஜியும் மாறி மாறி அவளிடம் கெஞ்சினர்.

அதில் உத்ரா காதைப் பொத்திக் கொண்டு, “சரி சரி போய் கேட்டுத்தொலைவோம். அவன் மட்டும் பதில் சொல்லல, உங்க ரெண்டும் பேரையும் கொலையே பண்ணிடுவேன்.” என்று மிரட்டி விட்டு, அவன் அறையைத் திறக்க போக, அந்த நேரத்தில் அவனும் சிசிடிவி கேமராவில் இவர்களை பார்த்து விட்டு, கதவை உட்புறமாக திறந்தான்.

உத்ரா இதனை எதிர்பார்க்காமல், கதவை ஃபோர்சாக தள்ளியதில் துருவ் மேலேயே சென்று விழுந்து விட்டாள்.

துருவும் இதனை சற்றும் எதிர்பார்க்காததால், அவள் அவன் மேல் விழுகவும் இவனும் தடுமாறி அவளைத் தாங்கி கொண்டு கீழே விழுந்து விட்டான்.

உத்ரா துருவின் மேல் படுத்து, அதிர்ந்து அவனையேப் பார்க்க, பொற்குவியலாய் தன் மேல் கிடந்த உத்ராவை கண்ணெடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் துருவ்.

வெகுநேரமாய் அவளும், எழும்பாமல், அவனும் அவளை எழுப்பாமல் இருவர் கண்ணும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்க, அஜயும், சுஜியும் திருதிருவென முழித்து கொண்டிருந்தனர்.

சுஜி அஜயை இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல,

அஜய்,”ஹே எதுக்கு பஜ்ஜி இப்படி இழுத்துட்டு வர? அங்க உத்ரா அவன்கூட தனியா இருக்காள்” என்றதும்,

“டேய், நீ கூட இருந்த இப்படி பேசியே அவங்களை பிரிச்சுடுவ..
ஒழுங்கா போயி வேலைய பாரு” என்று விட்டு,

‘ஹையோ சும்மா இருந்தவகிட்ட கேள்வியா கேட்டு என்னை குழப்பி விட்டுட்டு, இப்போ ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காளே…’ என்று நொந்து கொண்டாள்.

துருவின் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு தான் ஏதேதோ உணர்வுகள் எழும்பியது.

ஏதோ அவனுடன் பல ஜென்மம் பழகிய ஒரு உணர்வு. அவன் பழையதைப் பற்றி பேசிய போதும், அவன் கண்ணில் சிறு பொய் கூட இல்லையே. அதனால் தானே அவன் சொன்னதை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தடுமாறினாள்.

இப்போது, அவன் கண்ணில் தெரிந்த காதலில் மொத்தமாய் அவனுள் தன்னை இழந்து கொண்டிருந்தாள் மறுபடியும்.

ஆனால், அது சில நிமிடம் தான். துருவ் சட்டென்று தன்னை சுதாரித்து, இறுகிய முகத்துடன் அவளை எழுப்பினான்.

உத்ரா அவன் முகத்தையே அமைதியாய் பார்த்து விட்டு, அவனை விட்டு தள்ளி நின்றாள்.

துருவ் “எதுக்கு மூணு பேரும் வாசலிலேயே நின்னுகிட்டு இருந்தீங்க” என்று கேட்க அப்பொழுது தான் அவளுக்கு ‘எதற்கு வந்தோம்’ என்ற  ஞாபகமே வந்தது.

அவசரமாய் பின்னாடி திரும்பி பார்த்தவள், அவர்கள் சென்றிருப்பதைக் கண்டு தலையில் அடித்து கொண்டு,

“அவங்க ரெண்டு பேரும் தான் உங்ககிட்ட ஏதோ கேட்கணும்னு சொன்னாங்க…” என்று சொன்னதும் என்ன என்பது போல் பார்த்தான்.

அவள் “ஒன் மினிட்” என்று, வெளியில் வந்து அவர்கள் மண்டையில் அடித்து அழைத்து வந்து, “பங்கு கேளு,” என்று சுஜிக்கு கண்ணை காட்டினாள்.

துருவ் “என்ன கேட்கணும்” என சுஜியை பார்த்துக் கேட்க, அவள் “அய்யோயோ எனக்கு கேட்ட கேள்விக்கு பதிலே, சரியா சொல்ல வராது.

இதுல அத்தனை கேள்வியை சிங்கிள் ஷாட்ல திரும்பி எல்லாம் என்னால கேட்க முடியாது.” என்று அரண்டு அஜயைப் பார்க்க, அவன் துருவை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

அப்பொழுது மீராவும் ஏதோ வேலையாக அங்கு வர, இவர்களை புரியாமல் பார்த்தாள்.

பின், உத்ராவே ‘இதுங்க இப்போதைக்கு கேட்காதுங்க’ என்று நினைத்து விட்டு, அவளே சந்தேகங்களை கேட்க, துருவ் உத்ராவையே சிறிது நேரம் பார்த்து விட்டு, தொண்டையை கணைத்ததில், அவன் ஏதோ பிளாஷ்பேக் சொல்லப்போகிறான் என்று உத்ரா ஆர்வமாய் அவனை பார்த்தாள்.

அவனோ “கன்ஸ்ட்ரக்ஷனை மூணு மாசத்துல முடிக்க பாரு. இன்னும் ஆளுங்க வேணும்னா போட்டுக்கலாம்… பட். ஃபினிஷ் இட் அஸ் சூன் அஸ் பாச்சிப்பில்.

அப்பறம், நீ ஓகே பண்ணிருக்க க்ளையண்ட்ஸ் கிட்ட கேர்ஃபுல் ஆ இரு” என்று பேசிக்கொண்டே போக, உத்ராவிர்க்கு சப்பென்று ஆகி விட்டது.

அவள் கடுப்பாகி, நான் சொன்னேனே அவன் சொல்லமாட்டான்னு என்று இருவரையும் வெறித்தனமாய் முறைக்க, அவர்கள் தான் இவள் கொலை எதுவும் செய்து விடுவாளோ என்று மிரண்டு விட்டனர்.

சுஜி, துருவ் அருகில் வந்து, அவனிடம் ரகசியமாக, “தெய்வமே, நீங்க ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுங்க தெய்வமே. நீங்க சொல்லுவீங்கன்னு அவளை கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தோம். இல்லைனா இந்த உத்ரா எங்களுக்கு உயிரோட  சமாதி கட்டிடுவாள். நான் வேணும்னா உத்ராவை உங்களுக்கே கரெக்ட் பண்ணி விடறேன்.” என்று பாவமாய் கூற, துருவ் சிரித்தே விட்டான்.

“இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்?” என்று புன்சிரிப்புடன் கேட்க,

சுஜி, “தெய்வமே மறுபடியும் முதல்ல இருந்தா? நீங்களே கேட்ட கேள்வியை யோசிச்சு பதில் சொல்லுங்க” என்றாள் பாவமாக.

அவன் மீராவைப் பார்த்து, “மீரா ஏன் ஆஸ்திரேலியா வந்தாள்னு அவள் தான் பதில் சொல்லணும். பட், எனக்கு உங்க எல்லாரையும் நல்லா தெரியும். 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், அர்ஜுன் போட்டோவை மீரா பேக்ல பார்த்தேன். அப்போ தான் அவளுக்கும் அர்ஜூனுக்கும் என்ன ரிலேஷன் ஷிப்ன்னு தெரிஞ்சுக்க, டிடெக்ட்டிவ் வச்சு விசாரிச்சப்போ, இவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆ பழகுனது எனக்கு தெரிஞ்சுது.

அதையும் தாண்டி ஏதோ இருக்கும்னு தோணுச்சு அதான் அவளையும் கூட்டிட்டு வந்து அர்ஜுனை மீட் பண்ண வச்சேன். பட் அதுக்கு மேல மீரா தான் சொல்லணும்” என்று மீராவை பார்க்கவும்,

அவள் கண்ணீரை கட்டுப்படுத்திகொண்டு, “அது… அது… இதுல நான் சொல்ல என்ன இருக்கு? நான் அர்ஜுனை லவ் லவ் பண்ணல. அவ்ளோ தான். அந்த நேரத்துல எனக்கு இந்த கம்பெனில வேலை கிடைச்சது நான் போய்ட்டேன்.” என்றாள் தவிப்பாக.

உத்ரா சந்தேகமாக, “சஞ்சு யாரு மீரா?” என்று கேட்டதும்,

  “தெரியாது… ஆனால் இப்போ அவன் என் பையன் அவ்ளோ தான்” என்றதில், உத்ராவிற்கு அய்யோ என்றிருந்தது.

துருவ் மீராவிடம், “அர்ஜுனை லவ் பண்ணாம தான் அவன் போட்டோவை பேக்ல வச்சுக்கிட்டே இருந்தியா. அவனை லவ் பண்ணாம தான் சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம, அவன் போட்டோவை பார்த்து அழுதுகிட்டு இருந்தியா?” என்று கேட்க, அவள் இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ந்து பார்த்தாள்.

துருவ் அழுத்தமாக “பதில் சொல்லு மீரா” என்று கேட்க,

“அவள் எந்த பதிலும் சொல்ல வேண்டாம்” என்று அர்ஜுனின் குரல் கேட்டது.

அஜய் தான் “அதான பார்த்தேன்.
முக்கியமான விஷயம் பேசும்போது, யாராவது ஒட்டு கேட்கணுமே. இன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்துருச்சு” என்று அர்ஜுனைப் பார்க்க,

அவன் மீராவை முறைத்துக் கொண்டு,

“அவள் எந்த பதிலும் சொல்ல வேண்டாம் துருவ். அவள் தான் என்னை லவ் பண்ணவே இல்லையே. அப்பறம் அவள் என்ன பண்ணுனா எனக்கு என்ன.” என்று வலியுடன் கூறினான்.

பின் தன்னை சமாளித்து விட்டு, உத்ராவிடம், “உதி இன்னைக்கு கருணா மாமாவுக்கு பர்த்டே. அம்மா இன்னைக்கு பெருசா செலிப்ரேட் பண்ணனும்னு சொன்னாங்க. இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் ஃபிரீ ஆகிக்கோங்க” என்றான்.

உத்ரா, “சே! இன்னைக்கு பெரியப்பா பர்த்டேல மறந்தே போய்ட்டேன்” என தலையில் கை வைத்ததும்,

சுஜி “ஆமா நீ இதை மட்டுமா மறந்த” என்று முணுமுணுக்க, உத்ரா அவளை முறைத்தாள்.

அர்ஜுன், துருவிடம், “துருவ் ஈவினிங் நீயும் வந்துடு” என்று அழைக்க, “எனக்கு வேலை இருக்கு நான் வரல…” என்று நகரபோனவனை பிடித்து நிறுத்தினான்.

“நீ வர்றியான்னு நான் கேட்கலை கண்டிப்பா நீ வர்ற. இல்லை நானே உன்னை வந்து கடத்திட்டு போயிடுவேன்.” என்று அவனை மிரட்டி விட்டு செல்ல, துருவ் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான்.

உத்ரா தான் ஏதோ யோசனையுடன், அர்ஜுன் பின்னே சென்று, “என்னடா அவன்கிட்ட ஓவரா பாசத்தை பொழியிற. நீ யார்கிட்டயும் அவ்ளோ சீக்கிரம் ஒட்ட மாட்டியே.” என்று கேட்க,

அவன் விரக்தியாய் சிரித்து விட்டு, “நம்ம உயிரா காதலிச்சவங்க அந்த காதலை உதாசீனப்படுத்துறது எவ்ளோ வலின்னு எனக்கு தெரியும் உதி.

அதை இப்போ வரை நான் அனுபவிச்சிட்டு தான் இருக்கேன். அப்போ அவனுக்கு எவ்ளோ வலிக்கும்.

கண்ணெதிர்ல அவன் காதலிச்சு, யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணுன பொண்ணு இருந்தும், அவளுக்கு அவன் யாரோ ஒருத்தனா இருக்குறது மரண வேதனை உதி.

ஆனால்… உனக்கு இதெல்லாம் புரியாது. நீ அவனை இப்போ லவ் பண்ணலைனாலும் பரவாயில்லை. ஆனால் அவன் உன் மேல வச்சுருக்குற அன்பை உதாசீனபடுத்தாத.

ஒரு நண்பனா என்னைக்கும் நான் அவன் கூட இருப்பேன். நீ அவனை ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும்” என்றான் உறுதியாக.

அவள் அமைதியாய் அர்ஜுனை பார்த்து விட்டு, “இன்னைக்கு யார் யாரை இன்வைட் பண்ணனும். ரொம்ப க்ளோஸ் ஆனவங்க தவிர வேற யாரையும் கூப்பிட வேணாம்ல” என்று சாதாரணமாய் கேட்க, அர்ஜுனுக்கு தான், கடுப்பாக இருந்தது.

“உதி நீ என்னதான் நினைக்கிற” என்று நேரடியாகவே கேட்டுவிட,

அவள் “இது எனக்கும் துருவ்க்கும் நடுவுல இருக்குற பிரச்சனை. இதுல வேற யாரும் தலையிட வேணாம். என்ன பண்ணனும், என்ன பண்ணக் கூடாதுன்னு எனக்கு தெரியும்.” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

அர்ஜுன் தான் “பிடிவாதம் பிடிச்சவ…” என்று அவளை திட்டி விட்டு, சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தான்.

‘என்ன நம்ம முக்கியமான விஷயம் பேசி இருக்கோம். இன்னும் யாரும் ஒட்டு கேட்கலை. சீன் சீக்குவென்ஸ் தப்பா இருக்கே.’ என்று யோசித்து திரும்ப, அங்கு துருவ் நின்றிருந்தான்.

அர்ஜுன் அதிர்ந்து அவனைப் பார்க்க, துருவ் அர்ஜுனின் நண்பன் என்ற வார்த்தையில் அவனை மறந்து பெருமூச்சுடன்,

“நான் தோத்துட்டேன் அர்ஜுன். ஒரு நண்பனா, ஒரு லவரா, ஒரு பையனா நான் நான் தோத்துட்டேன்… என்னால எதுவுமே பண்ணமுடில அர்ஜுன்.

என் பிரெண்ட்ஸ்கிட்ட நல்ல ஆ
ஃப்ரண்டா இருந்து அவங்களை திருத்தவும் முடியல. என் காதலை காப்பாத்திக்கவும் முடியல. ஒரு நல்ல பையனா என் அப்பா அம்மாவ பார்த்துக்கவும் இல்லை…” என்றான் தளர்ந்த குரலில்.

“லூசு மாதிரி பேசாதடா. உன் பிரெண்ட்ஸ் ஆ? இன்னுமா நீ அப்படி நினைக்கிற. அவங்களுக்கலாம் உனக்கு ஃப்ரெண்டா இருக்க தகுதியே இல்லடா…

உண்மைய சொல்லனும்னா அவங்கதான் ஒரு நல்ல நண்பனா இல்லாமல் உன்கிட்ட தோத்துட்டாங்க.

உதி உன்னை மறந்துட்டாள். உன் ஞாபகம் அவளுக்கு இல்ல. ஆனால் உனக்கு இருக்கே. நீ அவளை லவ் பண்ற தான. உன் மேல இருக்குற காதலை மறந்து, அவள் வாழ்க்கைல அவள் தான்டா உன்னை இழந்துட்டா.
இப்பவும் ஒரு லவரா நீ ஜெயிச்சுதான் இருக்க.

அப்பறம் என்ன தான் உன் அப்பா அம்மா உன்னை சரியா பாத்துக்கலைனாலும், அவங்களுக்கு பெருமை சேர்க்குற மாதிரி நீ பெரிய அளவுல வளர்ந்துருக்க. இப்போ அவங்களோட பையன்னு உன்னை சொல்ல மாட்டாங்க. உன் அப்பா அம்மா தான் அவங்கனு சொல்லுவாங்க. அந்த பெருமையை அவங்களுக்கு குடுத்து ஒரு பையனா நீ இப்பவும் ஜெயிச்சுருக்க துருவ்.” என்று பேசி விட்டு அவனை பார்த்து,

“இனிமே இப்படி மூஞ்சியை பக்கத்துக்கு ஊரு வரைக்கும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காம, ரிலாக்ஸா இரு.

அந்த பிரெண்ட்ஸ்க்கு உன் நட்போட மதிப்பு தெரியல. அதான் உன்கிட்ட தோத்து போய்ட்டாங்க. பட் உன்னோட இந்த பிரென்ட் உன்னையும் தோற்க விடமாட்டேன். நானும் தோற்க மாட்டேன்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் துருவ் அவனை கட்டி அணைத்துக் கொண்டான் கண்ணீருடன்.

அர்ஜுனும் புன்னகையுடன் அவனை அணைத்து கொள்ள,

துருவ் சிறு இதழ் வளைவுடன் “இப்போதான் தெரியுது உத்ராவுக்கு பேச்செல்லாம் எங்க இருந்து வருதுன்னு.

அவளும் இப்படித்தான். நான் தோத்துட்டேன்னு நினைக்கும்போதெல்லாம் என்னை அவள் அன்பால ஜெயிக்க வச்சுடுவாள். ஆனால் இப்போ…” என்று அவன் தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கண் கலங்கினான்.

அர்ஜுன்க்கு தான்  அவன் தொழில் விஷயத்தில் எதிரிகளை எப்படி பந்தாடுவான்… இன்று சிறு பிள்ளை போல் தவித்து கொண்டிருக்கிறானே என்று ஆச்சர்யமாய் இருந்தது.

அர்ஜுன் அவனை விலக்கி “இப்பயும் அவள் அதே உத்ரா தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சுஜியும் அஜயும் அங்கு வர,

சுஜி,”அட சே… நான் கூட நீங்க தனியா வரவும், உங்க உங்க ஆளுங்ககிட்ட பேசி கரெக்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தா, மாறி மாறி உங்களை நீங்களே கரெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று தலையில் அடித்து கொண்டாள்.

அஜய், சுஜியை முறைத்து விட்டு அர்ஜுனிடம் “சாரிடா. நான் அன்னைக்கே சொல்லி இருந்துருக்கணும்” என்று கலங்கிய விழிகளுடன் கூற,

அர்ஜுன், “விடுடா, நான் தான் அன்னைக்கு ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன் நீ தெரிஞ்சா பண்ணுன.” என்று அவனை அணைத்து கொண்டான். துருவ் அஜயைப் பார்க்க, அவன் துருவை பார்த்து குனிந்து கொண்டு “சாரி” என்றான்.

துருவ் பேசுவதற்குள் சுஜி, “ஷப்பா போதும் போதும் உங்க செண்டிமெண்ட் சீனு. அர்ஜுன் உனக்கு புது பிரென்ட் கிடைச்சதுக்கு எங்களுக்கு ட்ரீட் குடு” என்று கேட்க,

“இன்னைக்கு வீட்ல இதையும் சேர்த்து செலிப்ரேட் பண்ணி. துருவ்க்கு பதவி பரிமாணம் பண்ணிடலாம்” என்று சிரிப்புடன் கூற துருவ் என்ன என்று புரியாமல் பார்த்தான்.

அதற்கு அர்ஜீனே “அது ஒன்னும் இல்ல பங்கு… எங்களுக்கு யாரு ஃப்ரெண்ட் ஆனாலும், அவங்கள எல்லாருக்கும் இன்ட்ரோ குடுத்து ஒரு ட்ரீட் வைப்போம்.

அது மட்டும் இல்லை..இனிமே இந்த வானரக்கூட்டங்கள் செய்ற எல்லா சேட்டைக்கும் உனக்கும் பங்கு இருக்கு. நீயும் இனிமே எங்க மாமாகிட்ட அப்போப்போ திட்டு வாங்கணும். நண்பேன்டா
..” என்று சொல்லி கண்ணடிக்க, துருவ் தலையில் அடித்துக் கொண்டு,

“உங்க பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேண்டாம்டா” என்று சிறு நகையுடன் நகர்ந்தான்.

மாலையில், அர்ஜுன் துருவையும் கையுடன் அழைத்து கொண்டு, கருணாகரன் வீட்டிற்கு சென்றான்.

அங்கு ஏற்கனவே அனைவரையும் அழைக்கப்பட்டு, சீரியல் லைட்டுடன் வீடே ஜொலித்து கொண்டிருந்தது.

லக்ஷ்மியும், கர்ணனும் துருவின் கையைப் பிடித்து கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் பா… அன்னைக்கு நீ தான் உத்ராவை காப்பாத்துனன்னு அர்ஜுன் சொன்னான். அவள் தான் எங்க வீட்டு தேவதை பா. அவளை காப்பாத்திக் குடுத்த உனக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது” என்று உணர்ச்சிவசப்பட்டு பேச, துருவ்க்கு தான் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அவன் அர்ஜுனைப் பார்க்க, “மா, போதும்மா வந்தவனை இப்படித்தான் நிற்க வச்சே பேசுவீங்களா” எனும் போதே,

கருணாகரனும் அங்கு வந்து, துருவிடம், “ரொம்ப தேங்க்ஸ்பா… நீ மட்டும் அன்னைக்கு இல்லைன்னா” என்று கண்ணாடியை கழட்டி கொண்டு கண்ணை துடைத்தார்.

துருவ் “அதான் எதுவும் ஆகலையே அங்கிள்… நான் இருக்குறவரைக்கும் எதுவும் ஆகவும் விட மாட்டேன்.” என்று சொல்ல, அவர் அதை புரிந்து கொள்வதற்குள்,

உத்ராவின் பெரியம்மா அன்னம் வந்து அவனிடம் “ரொம்ப நன்றி பா. நீ தான்…” என்று ஆரம்பிக்க,

சுஜி ‘ஐயோ இந்த குடும்பம் இன்னைக்கு கேக் வெட்டி சாப்பாடு கொடுக்குமா குடுக்காதா’ என்று மனதினுள் கதறிக் கொண்டு திரும்பினாள்.

அங்கு, அஜய் ஷர்வானி உடையில் விதுனுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு வருவதை பார்த்தவள், ஏதோ அப்பொழுது தான் அவனை முதன்முறை பார்ப்பது போன்று அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

இன்னைக்கு என்ன இவன் இவ்ளோ அழகா இருக்கான்… என்று அவனின் சிறு சிறு அசைவிலும் கூட அவனை மட்டுமே ரசித்து கொண்டிருந்தாள்.

அஜய் அவள் அருகில் வந்து, அவளை உலுக்க, அதன் பிறகே பேந்த பேந்த முழித்தாள்.

அஜய், “எதுக்கு பஜ்ஜி இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிற. ஆமா இதென்ன காமெடி. சும்மாவே உன்னை பார்க்க முடியாது. இதுல பஞ்சு மிட்டாய் கலர்ல சுடிதார் வேற. சகிக்கல” என்று அவளை கிண்டலடித்து விட்டுச் செல்ல,

எப்போதும் அவன் இவ்வாறு கிண்டல் செய்கையில் கண்டுகொள்ளாமல் இருப்பவளுக்கு இன்று அவனின் வார்த்தைகள் முள்ளாய் மனதில் தைத்து ஏதோ ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

துருவ் ஒருவழியாய் வீட்டினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அமர, சஞ்சு “அங்கிள்” என்று அவன் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.

துருவ் “ஹே சஞ்சு பாய்… இந்த வீடு உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்க,

அவன் “ம்ம் தொம்ப பிடித்துருக்கு… லக்சு  பாத்தி. தாத்தா, அப்பறம் விக்கி அண்ணா, மோனி அக்கா எல்லார் கூடயும் விளையாடுவேன்.” என்று மழலை குரலில் கூறினான். விதுனின் அண்ணன் அகிலனின் குழந்தைகள் தான் விக்கியும், மோனியும்.

அவனிடம் பேசியபடியே துருவ் வீட்டையே அளந்தான். உத்ராவை தேடித்தான்.

பின், சஞ்சுவிடமே “உத்ரா எங்க?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க, அவன் யோசிக்குமாறு பாவனை செய்து, கண்ணை உருட்டி, “உதி ஆண்ட்டி நீங்க என்கிட்ட அவங்க எங்கன்னு கேட்டால், சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க அங்கிள்” என்று வெகுளியாகக் கூற, துருவ் தான் திகைத்தான்.

‘நான் இவன்கிட்ட கேட்பேன்னு அவளுக்கு எப்படி தெரியும்…?’ என்று நினைத்து விட்டு நிமிர,

அங்கோ அவனுக்கு அருகில் நின்று அவனையே நோட்டமிட்டு கொண்டிருந்த உத்ரா, ‘என்னை நீ அறியும் போது, என் உணர்வுகள் உன்னை அறியாதாடா முட்டாள்…’ என்று முறைத்தாள்.

பாவம் அவளின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத்தான் அவனால் முடியவில்லை.

உத்ரா, துருவை பார்த்தபடி, அவன் அருகில் வந்து அவனைத் தீண்டிக்கொண்டு சஞ்சுவை தூக்கியதில் துருவ் சிலையாகி விட்டான்.

அவனை பார்த்துக் கொண்டே, சஞ்சுவிற்க்கு முத்தம் கொடுத்து,

“குட் பாய். இப்படி தான் இருக்கணும். யாரு என்னைக் கேட்டாலும் சொல்லக்கூடாது” என அவனைக் கொஞ்ச,

துருவ் “பிராடு…” என்று அவளையே ரசித்து கொண்டிருந்தான்.

உத்ராவின் கைகளில் இருந்த சஞ்சுவை வெடுக்கென யாரோ பிடுங்குவது போல் இருக்க, அங்கு ரிஷியை பார்த்து வெகுவாய் அதிர்ந்து விட்டாள்.

துருவ் அவனை தடுத்து “ரிஷி குடு அவனை” என்று கண்டிப்பாய் கேட்க,

ரிஷி சினத்துடன், “என் பையனை எத்தனை நாளைக்கு என் கண்ல படாமல் மறைச்சு வைப்ப வேந்தா…” என்றதில், அங்கிருந்த அனைவரும் உறைந்து விட்டனர்.

உறைதல் தொடரும்.
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
65
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.