“அவுட் பேஷண்ட் இருக்காங்களா?” செவிலியரிடம் வினவியபடி, தன் இருக்கையில் வந்தமர்ந்தான் அமிஷ்.
முந்தைய நாளில் இருந்து வீட்டிற்கும் செல்லவில்லை. நைட் டியூட்டியையும், பகல் டியூட்டியையும் ஒரே மூச்சாக பார்த்துக் கொண்டிருந்த அமிஷிற்கு கண்கள் எரிந்தது. விழிகள் உறக்கத்திற்கு கெஞ்ச, தனது சீட்டின் பின் பக்கம் சாய்ந்து விட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
தற்போது டெல்லியில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிகிறான். அன்றிரவே சென்னைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். அதனை எண்ணும் போதே மனதில் ஒரு வித வலி எடுத்தது.
பொங்கிய ஆற்றாமையை அடக்கிக்கொண்டு, நிதினுக்கு வீடியோ கால் செய்தான். ஆனால் அவன் எடுத்தபாடில்லை.
கடந்த இரு வாரமாக, நிதினிடம் பேசவில்லை. அவன் அழைப்பை எடுக்காததே ஒரு வித பயத்தைக் கொடுத்தது அமிஷிற்கு.
சென்னையில் புகழ் பெற்ற மருத்துவமனையில் மந்த்ரா வேலைக்கு சேர்ந்து அன்றுடன் நான்கு நாட்கள் ஆகி விட்டது.
புது இடம், புது மனிதர்கள் தாய்க்கும் மகளுக்கும் ஆறுதலாக அமைந்தது. அவளும் உற்சாகமாக நாட்களை நகர்த்த, அமிஷும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். அங்கு அமிஷ் பல முறை வந்திருப்பதால், மருத்துவரைக் காணும் பொருட்டு, அவரது அறைக்கதவை லேசாக தட்டி விட்டு, பதில் வரும் முன்னே, உள்ளே நுழைந்தான்.
அப்போது தான், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவளை பரிசோதித்து விட்டு, தன்னிருக்கையில் அமர்ந்த மந்த்ரா, விழிகளை நிமிர்த்திட, அங்கு நிச்சயமாக அமிஷை அவள் எதிர்பார்க்கவில்லை.
ஒரு கணம் தன்னை சுற்றி இருக்கும் அனைத்தும் ‘ஃப்ரீஸ் மோடி’ற்கு சென்று விட்டது போலொரு பிரம்மை. எத்தனை வருட காத்திருப்பு! அதுவும் இந்த நிச்சயமில்லாத காதலுக்காக. அவனைக் கண்டால், கோபத்தில் பளாரென அறைய வேண்டும் என்று தான் எண்ணியிருந்தாள். ஆனால், இப்போது முடியவில்லை. கண்ணில் அவளறியாமல் நீர் கோர்த்தது.
ஓடிச் சென்று, அவனை அணைத்து, ‘நீ இல்லாமல் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. உன்னை அத்தனை காதலித்தேனடா மடையா’ என்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது. ஒருவேளை, அவனது விழிகளில் சிறு அதிர்வையோ, அல்லது நேசத்தையோ கண்டிருந்தாள் நிச்சயம் செய்திருப்பாள்.
ஆனால், அவன் தான் ஒன்றைக் கூட காட்டவில்லையே.
அதற்குள் செவிலியப் பெண் ஒருத்தி, “ஹலோ அமிஷ் சார். பெரிய டாக்டரோட ரூம மாடில ஷிஃப்ட் பண்ணியாச்சு.” என்று விளக்கம் கொடுக்க, “ஓ! சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்…” என சிறு சிரிப்புடன் கூறியவன், அவளைத் தெரிந்தது போன்றே காட்டிக்கொள்ளாமல் கதவை அடைத்து விட்டு சென்று விட, அவளுக்கோ அவனது உதாசீனம் முகத்தில் அறைந்தது.
என்ன செய்து விட்டு சென்றான் அவன்? என்னை காதலித்ததும், அவன் கண்ணில் நான் கண்ட காதல் அனைத்தும் பொய்யா? இத்தனை வருடமாக தன் முன் வராமல் இருந்ததற்கு, காரணமே சொல்லவில்லை என்றாலும் கூட அவளுக்கு பரவாயில்லையே! ஆனால், நேசம் கொண்ட விழிகள் இன்று உதாசீனத்தை அல்லவா கக்கி விட்டு செல்கிறது… அவளால் அங்கு ஒரு நொடி கூட இருக்க இயலவில்லை.
கோபமும், ஆற்றாமையும், காதல் வலியும் அவளைக் கூறு போட்டது. அதில், மறுகணம் அங்கிருந்து கிளம்பி இருந்தவளின் கண்களில் நீர் கசிந்தது.
செவிலியரால் பெரிய டாக்டர் என்று அழைக்கப்பட்ட முருகனின் அறை வாசலில் நின்றிருந்த அமிஷ், கதவைத் திறக்க பிடிக்காமல் தலையில் கை வைத்து நின்றிருந்தான்.
ஏற்கனவே வாழ்க்கை நரகமாக நகர, இதில் தன் மனம் கவர்ந்தவளின் தரிசனம் அவனை இன்னும் நரகத்தில் தள்ளியது. தன்னைக் கண்டதும், அவளது விழிகள் காட்டிய வியப்பும், கண்ணீரும் அவனுக்கே உரித்தானதா? அதனை ஆராயும் அளவு அவனுக்கு இப்போது பொறுமை இல்லை. அதனை ஆராய்ந்து பிரயோஜனமும் இல்லை.
அவளைக் கண்டும் காணாதது போல வந்து விட்டது, வேதனையாக இருந்தது தான். ஆனால், அவளிடம் என்னவென்று பேசுவது? ஒன்றும் புரியாமல், பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை சமன் செய்து கொண்டவன் முருகனின் அறைக்குள் நுழைந்தான்.
நேரம் காலை 10. பத்திலிருந்து அடுத்த அரை மணி நேரம், மதனுக்கு தவ நிலை தான். அலைபேசியை அணைத்து வைத்துக் கொள்பவனுக்கு, யாரும் அத்தவ நிலையை கெடுப்பது முற்றிலும் பிடிக்காதது. அந்த அரை மணி நேரமும், தன்னவளின் கரம் பற்றி தன் முகத்தில் தேய்த்துக் கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதுமென அந்நேரம் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவனுக்கும் அவளுக்குமாக கிடைக்கும் நேரத்தை அவன் ஒரு நாளும் தவறவிட்டதில்லை.
24 மணி நேரமும் அவளுடனே இருப்பான் தான். ஆனால், இந்த அரை மணி நேரம் யாருடைய தொந்தரவும் இருக்காது. அவளை ரசிப்பான். தலை கோதிக் கொள்வான். பிடித்த கரத்தை சிறிதும் விலக்கமாட்டான். ஆனால், இது எதுவுமே அறியாமல் அவள் தான் ஆழ்ந்த நித்திரையில் இருப்பாள். ஆஷா… அவளது விழிகள் மூடி பல வருடம் ஆகிறது. இன்னும் திறந்தபாடில்லை. ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வது நல்லது தான், ஆனால் இத்தனை வருடமாக உறக்கமா? மனத்தினுள்ளேயே அவளிடம் சண்டையிட்டுக் கொண்டான் மதன்.
சிவந்த அவளது வதனம் மெலிதாய் கருத்திருந்தது. அவளுக்கு அருகில், ஏதேதோ மருத்துவ உபகரணங்கள், அவள் இன்னும் உயிருடன் இருப்பதாய் அவ்வப்போது காட்டிக்கொண்டது. உயிர் கொண்ட பெண்ணிற்கு உணர்வுகள் திரும்பும் நேரம் தான் யாருக்கும் தெரியவில்லை. ‘கோமா ஸ்டேஜ்’ என்று மருத்துவர்கள் கூறினாலும், அவனுக்கு அவள் இன்னும் உறக்கத்தில் இருந்து எழவில்லை அவ்வளவுதான்.
அவ்வப்பொழுது விழிநீரால் அவளது கரங்களை நனைத்துக் கொள்வான். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. வெறும் தொடுகையில் மட்டுமே அவனை உணர வைத்தான்.
அவனது தவ நிலையை கலைக்கும் வண்ணம், யாரோ வரும் அரவம் கேட்க, பட்டென அவளது கரங்களை விட்டு விட்டான். சரியாக அப்போது அமிஷ் உள்ளே நுழைய, அவனைக் கண்டு அசட்டு புன்னகை வீசியவன், “நீ எப்ப வந்த அமி?” எனக் கேட்டான்.
சிறிதாய் புன்னகைத்த அமிஷ், “இப்ப தான் டாக்டரை பார்த்துட்டு வரேன்.” என்றவாறு ஆஷாவின் மீது பார்வையைப் பதித்தான்.
எப்போதும், பேச்சும் சிரிப்புமாக வலம் வருபவள். இப்போதோ, படுத்த படுக்கையாக! இரு தோழிகளையும் ஒரு சேர இழந்த வலி அவனைக் கூறு போட்டது. ஆஷாவின் கேசத்தை மென்மையாகக் கோதி விட்டவன், “நான் பேசுறது கேட்குதாடி?” என்றான் கரகரப்புடன்.
சில நொடிகளில், அவளுக்கு உடல் தூக்கிப் போட, இரு ஆடவர்களும் பதறி விட்டனர்.
“ஆஷா என்ன ஆச்சுடி? ரிலாக்ஸ் ஆஷா.” என அமிஷ் அவளை ஆசுவாசப்படுத்த முயல எதற்கும் அவளது மேனி செவிசாய்க்கவில்லை.
அவளை ஆரம்பத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரான முருகனை அழைக்க அமிஷ் ஓட, செவிலியர் அவசரமாக ஒரு ஊசியை போட்டு விட்டார். அதில் தன்னிச்சையாக மதனின் கரங்கள் அவளை பற்றி இருந்தது. ஊசியினாலா அல்லது அவனது கரம் தந்த பாதுகாப்பினாலா என்பது தெரியாமலேயே அவள் இயல்பு நிலைக்கு திரும்ப, மதன் உள்ளுக்குள் துடித்தான்.
எப்போது தான் இதிலிருந்து விமோச்சனம் கிடைக்கும் என்று புரியாமல் தோய்ந்து போனான். அமிஷின் நிலையும் அதுவே! அவளது நிலை நாளைக்கு நாள் மோசமாக செல்ல, இன்று ஒரு முடிவெடுக்கத் தான் அமிஷை வரக் கூறி இருந்தார் முருகன்.
“நீங்களே பாருங்க அமிஷ். அவங்க சாகவும் முடியாம உயிரோட இருக்கவும் முடியாம எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு. நாள் போக போக, அவங்க நினைவு திரும்புற சாத்தியக்கூறு ரொம்ப கம்மியாகிக்கிட்டே போகுது.” என்றிட அமிஷ் வேதனையில் அமிழ்ந்தான் என்றால், மதனுக்கு உயிரே போனது.
‘வேணாம்… எப்பவும் இதே மாதிரி நான் அவளை பார்த்துட்டே இருக்கேன். கொஞ்ச நேரமாவது அவள் கையை பிடிச்சுக்குறேன். அவள் இப்படியே என்கூடவே இருக்கட்டும்’ எனக் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லை!
இருவரும் ஒவ்வொரு விதத்தில் எங்கோ வெறித்திருக்க, முருகன் தான் சும்மா இராமல், “நீங்க ரெண்டு பேரும் ஓகே சொன்னா, நான் மஹாகிட்டயும் பேசுவேன்” என்றார்.
அதற்கு பதில் கிடைக்காமல் போக, வேறு வழியற்று மஹாவிற்கே அழைத்தார்.
வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்த மஹாபத்ராவிற்கு கடுப்பாக வந்தது. ‘இவனும் இவன் பேச்சும் ஆளே சரி இல்ல…’ என்று தஷ்வந்த்தை மனதினுள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், காலையிலேயே அவன் கேட்ட டாக்குமெண்டை நிதினிடம் கொடுத்து விட்டாள்.
அதனைக் கண்டு மர்ம புன்னகை பூத்தவனுக்கு, அவள் கோபப்படாமல் கொடுத்தனுப்பியது இன்னும் கோபத்தையே கிளப்பியது.
இருந்தும் அதனை அடக்கிக்கொண்டு, கல்யாண வேலையைப் பார்த்தான்.
அப்போது தான் முருகன் மஹாவிற்கு போன் செய்தது.
அவரின் எண்ணைக் கண்டதும், அவசரமாக போனை எடுத்தவள், “டாக்டர் ஆஷா ஓகே தான? ஒன்னும் இல்லல” எனப் பதற்றத்துடன் கேட்டாள்.
அவர் பதில் கூற தவறிய ஒரு நொடியில் அவளது இதயமே நின்றிருக்கும். இந்த பதற்றம் அவளுக்கு ரத்த அழுத்தத்தைக் கொடுக்கிறதென்றே, அவள் மதனுக்கு மட்டும் அழைத்து ஆஷாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்துக் கொள்வாள்.
“ரிலாக்ஸ் மஹா. இப்ப வரை பிரச்சனை இல்ல” என்ற முருகனின் பேச்சில் தான் ஆசுவாசமானவள் அடுத்து அவர் கூறிய விஷயத்தில் கொந்தளித்தாள்.
“நான் சொல்றதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க மஹா. நீங்களும் டாக்டர் தான். உங்களுக்கும் ஆஷாவோட ஹெல்த்தை பத்தி நல்லாவே தெரியும். அவங்க உடல்நிலை மோசமா போறதும் உங்களுக்கு தெரியும். ஏன் நம்ம இன்னும் அவங்களை கஷ்டப்படுத்தணும்?” என வினா தொடுக்க, அவளிடம் அமைதி.
அதில் அவர் கொஞ்சம் தைரியம் பெற்று, “அவங்களால நிம்மதியா வாழ தான் முடியல. அட்லீஸ்ட் இறப்பையாவது நிம்மதியா குடுக்கணும் மஹா. நீங்க சரின்னு சொன்னா, அவங்களை கருணைக்கொலை…” என்று பேச ஆரம்பிக்க, மஹா பல்லைக்கடித்தாள்.
“உனக்கு உயிரோட இருக்கணும்ன்ற ஆசை இல்லைன்னு நினைக்கிறேன் மிஸ்டர் முருகன். எப்ப என்ன பண்ணனும், என்ன புடுங்கணும்ன்னு எனக்கு தெரியும். அவள் நிம்மதியை பத்தி நீ யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னொரு தடவை, இப்படி ஒரு யோசனை உனக்கு வந்துச்சு… அடுத்து யோசிக்க நீயும் இருக்க மாட்ட. உன் ஹாஸ்பிடலும் இருக்காது. மைண்ட் இட்!” அவள் சினத்துடன் மிரட்டிய தொனியில் அவருக்கு வியர்த்து விட்டது.
சட்டென போனை வைத்து விட்ட முருகன், அமிஷை பாவமாக பார்க்க, அவரை முறைத்து வைத்தவன், “இனிமே உங்களுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்” என்று நக்கலாகக் கேட்க, அவர் திரும்பிப் பாராமல் அறைக்கு சென்று விட்டார்.
மதன் தான் சற்று ஆசுவாசமாகி, “எனக்கு என்னமோ இந்த டாக்டர் மேல நம்பிக்கையே இல்ல அமி. வேற ஸ்பெஷலிஸ்ட் இருந்தா பாக்கலாமா?” எனக் கேட்க, “நானும் அதான் யோசிக்கிறேன் மதன்.” என்று யோசனையில் ஆழ்ந்தான்.
மருத்துவர் மீது எழுந்த கோபம் சற்றும் அடங்கவில்லை மஹாபத்ராவிற்கு. ‘எவ்ளோ தைரியம் இருந்தா அவளை கொலை பண்ணனும்ன்னு என்கிட்டயே சொல்லுவான். ராஸ்கல்!’ என மேலும் கீழும் மூச்சு வாங்க திரும்பிட, அங்கு அவளை கை கட்டி பார்த்தபடி தஷ்வந்த் நின்று கொண்டிருந்தான்.
“தேங்க் காட்! நீ இன்னும் ரௌடியாதான இருக்க? எங்க திருந்திட்டியோன்னு நானே கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்.” என்றவனுக்கு, அவள் யாரையோ மிரட்டுகிறாள் என்பது மட்டுமே புரிந்தது.
அவனை முறைத்தவள், “உனக்கு தேவையானதை நான் அமுல்…” எனக் கூற வந்து விட்டு, சட்டென “நிதின்கிட்ட குடுத்து விட்டுட்டேனே!” என்றாள் அவனைப் பாராமல்.
“எனக்கு தேவையானது இங்க இருக்கும் போது, ஆஃப்டர் ஆல் அந்த பேப்பர்ஸை வச்சு நான் பூஜையா பண்ண போறேன் டாலு?” என கேலியாய் விளித்தவன், கையில் இருந்த பையை அவளிடம் கொடுத்தான்.
‘என்ன இது?’ என அவள் பார்வையால் வினவ, “கல்யாணப்புடவை. நாளைக்கு நம்ம மேரேஜ்க்கு நீ பேண்ட் ஷர்ட்டோட வந்தா நல்லா இருக்காதே டாலு. நாளைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் வேற… அப்போ புடவைல இருந்தா தான, உன்ன ரசிக்க ஈஸியா இருக்கும்…!” என விழி உயர்த்திக் கேட்க, அவளுக்கு கன்னங்கள் சிவந்து விட்டது.
கூடவே கோபத்திலும் மூக்கு நுனி சிவக்க, “என் மேல கை வச்ச, கையை உடைச்சுடுவேன் தஷ்வந்த்…” என்றவளின் மிரட்டலில் இப்போது அழுத்தம் சுத்தமாகவே இல்லை.
“கையை உடைச்சுட்டு, ஒரு கைல ரொமான்ஸ் பண்ணுனா நல்லா இருக்காது டாலு.” என உதட்டைப் பிதுக்கினான்.
அவள் தான் பொறுமை இழந்து, “நான் தான் நீயும் வேணாம், உன் காதலும் வேணாம்ன்னு போய்ட்டேன்ல. நமக்கு பிரேக் அப் கூட ஆகிடுச்சு. அப்பறம் ஏன், இப்படி பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க?” எனக் கத்திட,
அவனோ புரியாமல், “எஸ் அஃப்கோர்ஸ். உனக்கும் எனக்கும் பிரேக் – அப் ஆகிடுச்சு. எப்ப என் காதலை நீ முட்டாள்தனம்ன்னு சொன்னியோ அப்பவே உன்மேல இருக்குற காதலை டெட்டால் ஊத்தி அழிச்சுட்டேன் டாலு. நொவ் ஐ ஹேட் யூ டோட்டலி. அதான், மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொல்றேன்.” என முன்னுக்குப் பின் முரணாகப் பேச, அவளுக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை.
“புரியலைல… உனக்கு புரிய மாதிரி நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல சொல்றேன்…” என கண் சிமிட்டி விட்டு சென்றான்.
அப்போது அவன் கூறிய ‘ஐ லவ் யூ’ வை விட, இப்போது உரைத்த ‘ஐ ஹேட் யூ’ வலித்தது. ஒவ்வொரு முறை அவன் அவளைக் காதலித்ததை கூறிய போது, அவள் மறுத்து ‘நீ வெறும் பாய் ப்ரெண்ட்’ என்று கூறி அவனை ரணப்படுத்தியதை இப்போது அவன் செய்தான்.
இன்னும் செய்யப் போகிறான் என்றறியாமல், அவள் மறுநாள் திருமணத்திற்கு தயாரானாள்.
மஞ்சுளாவிற்கு கணவனின் பாராமுகம் வேதனையாக இருந்தது. அவனும் இப்படித்தானே வேதனைப்பட்டிருப்பான் என்று நினைக்கையிலேயே, தன் மீதே கோபம் எழுந்தது. அப்போதைக்கு அதனை ஒதுக்கி விட்டு, மஹாபத்ராவை அலங்கரித்தாள்.
“நானே பாத்துக்குறேன் மஞ்சு…” அவள் தடுக்க, மஞ்சுளா தயங்கினாள்.
“உனக்கும் என் தம்பிக்கும் என்ன பிரச்சனை மஹா? நிதின் எப்படி உன்கிட்ட வந்தான்?” என அவள் கேள்வி எழுப்ப,
“இன்னைக்கு எனக்கு கல்யாணம் மஞ்சு. உனக்கு பதில் சொல்றதுக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சுடும்” என்று நக்கலாக சிரித்தவளை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
“தஷு, நிதினுக்காக உன்னை கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்றானேன்னு நான் ஃபீல் பண்ணுனா… நீ என்னமோ ஜாலியா கிளம்பிட்டு இருக்க” என தலையை சொரிந்திட, அவளைப் பார்த்து சிரித்து வைத்த மஹாபத்ரா தான்,
“நான் மனசு வைக்காம என்னை ஃபோர்ஸ் பண்ண உன் தம்பியால கூட முடியாதாக்கும். அது உன் தொம்பிக்கே தெரியும்!” என்றவள், “இன்னும் கொஞ்சம் வளையல் போட்டு விடு. உன் சொத்தா அழியப்போகுது…?” என மஞ்சுளாவை திணற வைத்தாள்.
இங்கோ வசீகரன், பட்டு வேட்டி சகிதம் கண்ணாடி முன் நின்று, முன்னும் பின்னும் திரும்பி தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த தஷ்வந்தை தீயாக முறைத்துக் கொண்டிருந்தான்.
கண்ணாடி வழியே வசீகரனைக் கண்டு குறுநகை புரிந்தவன், “என்ன மாம்ஸ், பார்வைல அனல் பறக்குது?” எனக் கேட்டு வைக்க, அவனோ திட்டத் தொடங்கினான்.
“நீ இப்படி செய்வன்னு நான் நினைச்சு கூட பார்க்கல தஷு. ஏன் மஹாகிட்ட ஹார்ஷா பிஹேவ் பண்ற? பாவம் அந்த பொண்ணு. நிதினை எவ்ளோ நல்லா வளர்த்துருக்கா. அவளை இப்படி கார்னர் பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல…” என்றதில் அவன் வாய் விட்டே சிரித்திருந்தான்.
மச்சினனின் சிரிப்பு முகத்தை வெகு வருடங்கள் கழித்து அவனும் இப்போது தான் பார்க்கிறான். தனக்காவது குழந்தை தொலைந்து போன வேதனை. ஆனால், இவனும் அல்லவோ அந்த வேதனையை சுமந்து, இத்தனை வருடமும் போலி புன்னகையுடன் வலம் வந்தான்… என எண்ணும் போதே, நெஞ்சம் உருகியது.
“நான் ஹார்ஷா பிஹேவ் பண்றேன்? அந்த பொண்ணு பாவம்? அவளை நான் கார்னர் பண்றேன்?” என அவனது ஒவ்வொரு கேள்வியையும் கூறி சத்தமாக சிரித்து வைத்தான்.
அதில் கடியான வசீகரன், “சொல்லிட்டு சிரிடா!” என்றிட,
“நான் பண்றதுக்கு பேர் ஹார்ஸ்ன்னா, அவளை கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருந்தா, என்ன சொல்லிருப்பீங்களோ…” என்றவன்,
“அவள் பாவமா? பாவின்னு வேணா சொல்லுங்க மாம்ஸ் பொருத்தமா இருக்கும். அண்ட் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். கார்னர் பண்ணுவது எப்படின்னு அவள் ஒரு புக்கே போடலாம். அந்த அளவு யார் யாரை எப்படி இம்சை பண்ணணும்ன்னு அவளுக்கு நல்லாவே தெரியும். அவளுக்கு வக்காலத்து வாங்குறதை விட்டுட்டு, என் வேஷ்டியை சரி பண்ணுங்க. எப்ப கழண்டு விழுமோன்னு பயமா இருக்கு…” என்று பேச்சை திருப்பினான்.
இப்போது தலையை சொறிவது வசீகரனின் முறையானது.
நிதினுக்கு தான் சந்தோஷம் தாளவில்லை. அவனே திருமணத்தை முன் நின்று நடத்துவது போல, அங்கும் இங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தான்.
மஹாபத்ராவை புடவையில் கண்டதும், “வாவ் டாலுமா… உனக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கு.” என அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
அதற்கு சிறு சிரிப்பை மட்டும் கொடுத்தவளிடம், “இப்பவாவது அமி அங்கிள்க்கு கால் பண்ணட்டா?” என்று கேட்டதில், முகத்தை தீவிரமாக்கியவள், “அமுலு… வந்த வேலை இன்னும் முடியல. முடியிற வரை, அவன் கால் எதுவும் அட்டென்ட் பண்ண வேணாம்.” என்று முடிவாக கூறி விட, ‘நம்ம அப்பா அம்மாவை தான் கண்டுபிடிச்சாச்சே’ என்று அவனும் குழம்பினான்.
பின், தஷ்வந்தை கண்டதும், அதனை மறந்து விட்டு, “வாவ் தஷு மாம்ஸ்… நீங்களும் ஹாண்ட்ஸமா இருக்கீங்க!” என்றிட, மருமகனை கையில் அள்ளிக்கொண்டவன், “தேங்க்ஸ் டாலு…” என்றான் அவன் கன்னத்தில் முத்தமிட்டு.
தஸ்வந்த், வசீகரனை ‘மாம்ஸ்’ என்று அழைப்பதை பார்த்து விட்டு, “என் அப்பாவை நீங்க மாம்ஸ்ன்னு கூப்புடுற மாதிரி நானும் உங்களை மாம்ஸ்ன்னு தான் கூப்பிடுவேன்” என்று குறும்பு கொப்பளிக்க கூறியவன், அப்போதிருந்தே அவனை மாம்ஸ் என்றே அழைக்கிறான்.
பெரியவர்களின் ஆசியுடன், தஷ்வந்திற்கும் மஹாபத்ராவிற்கும் திருமணம் இனிதே முடிவடைந்தது. அவளது கழுத்தில் தாலி அணிவிக்கும் போதும் அதன் பிறகும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
நிதின் மட்டுமே இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். அதற்கும் அவர்களிடம் இருந்து, சிறு தலையசைப்பு தவிர வேறு எதுவும் வரவில்லை.
திருமணம் முடிந்து, மஞ்சுளாவின் வீட்டிலேயே அவர்களுக்கான இரவு ஏற்பாடு ஆனது. கதிரேசன் தான் மகனை வீட்டிற்கு அழைக்க, அவன் நிதினை விட்டு விட்டு வர இயலாது என்று மறுத்து விட்டான்.
வசீகரன் இன்று வரை மஞ்சுளாவின் தாய் வீட்டிற்கு செல்லவில்லை. கணவனை அவமானப்படுத்தியதால், அவளும் இப்போது வரை தாய் வீட்டிற்கு செல்லவில்லை. நிதினை மட்டும் அழைத்துச் சென்றால், நன்றாக இராது என்றெண்ணி, தஷ்வந்த் தமக்கையின் வீட்டிலேயே இருந்து கொண்டான்.
மஹாபத்ராவோ யாருக்கு வந்த கேடோ என்பது போல மடிக்கணினியில் புதைந்திருக்க, மஞ்சுளா தான், “ரெடி ஆகலையா மஹா. நல்ல நேரம் முடியப்போகுது.” என்றாள் தயக்கமாக.
“டூ மினிட்ஸ் மஞ்சு” என்ற மஹாபத்ரா, சொன்னது போன்றே இரண்டு நிமிடத்தில், அவள் முன் வந்தாள்.
“காலைல மேக் அப் ஓவரா பண்ணிட்ட மஞ்சு. இப்போ நானே பண்ணிக்கிறேன். சேரி மட்டும் கட்டி விடு. ஐ டோன்ட் நோ ஹொவ் டு வியர்.” என்றவள், அவன் வாங்கி வந்ததில் லேசான டிசைனர் புடவை ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
“ம்ம். இது ஓகே…” என்றதில், அவளை மேலும் கீழும் விசித்திரமாக பார்த்த மஞ்சுவிற்கு மீண்டும் தலை சுற்றியது.
காலையில் இருந்து அவளையும் அவனையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இருவரின் முகத்திலும் மருந்துக்கு கூட மகிழ்ச்சி இல்லை. உள்ளுக்குள் இருந்தாலும், அதனை வெளிக்காட்டா வண்ணம் இருவரும் தங்களை அடக்கிக்கொண்டனர்.
அது அவளுக்கும் புரிந்தே இருந்தது. கோவிலிலும் பதிவு அலுவலகத்திலும் அவள் முகத்தை கண்டு விட்டு, இப்போது சாந்தி முகூர்த்துக்கு கிளம்ப சொல்ல மஞ்சுளாவிற்கே ஒப்பவில்லை. ஆனால், இவளோ தன்னை இப்படி குழப்புகிறாளே என நொந்து போனவள், யோசனையுடன் புடவையைக் கட்டி முடித்தாள்.
மஹாபத்ராவோ புருவம் சுருக்கி மஞ்சுளாவை முறைக்க, அவளோ பதறி “என்ன ஆச்சு மஹா?” என்றாள்.
“இது என்ன? சேரியை இப்படி சுத்தி வச்சுருக்க?” என்றதில்,
“எப்படி சுத்தி இருக்கேன். கரெக்ட்டா தான் கட்டிருக்கேன் மஹா” என்றாள் புரியாமல்.
“கரெக்ட்டா தான் கட்டி இருக்க. ஆனா, கேப் விடாம எல்லா இடத்துலயும் பின் குத்தி வச்சுருக்க. நான் ஃபர்ஸ்ட் நைட்க்கு போறேனா, இல்ல கும்பாபிஷேகத்துக்கு கூழ் ஊத்த போறேனா? கொஞ்சம் செக்சியா கட்டி விடு மஞ்சு” என்று கண்ணடித்தவளைக் கண்டு அவளுக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.
அதில் அவளது இடுப்பில் இருந்த சேஃப்டி பின்னை மட்டும் கழற்றிய மஞ்சுளா, “வேற எப்படி கட்ட?” எனக் குழப்பமாகப் பார்க்க,
“நீ எல்லாம் எப்படி லவ் மேரேஜ் பண்ணி, குழந்தை வேற பெத்துக்கிட்ட. கொஞ்சம் கூட ரசனையே இல்ல. பாவம் வசீகரன்…” என்று வசீகரனுக்கு பாவம் பார்த்தவளைக் கண்டு முறைத்தாள்.
பின், “நான் லவ் மேரேஜ்ன்னு உனக்கு எப்படி தெரியும்?” எனப் புரியாமல் கேட்க, அதற்கு பதில் கூறாமல், சென்டர் கிளிப் குத்தி விரித்து விடப் பட்ட கூந்தலில் மல்லிகை சரத்தை சூடிக்கொண்டாள்.
“பிளவரோட ஃப்ராகிரன்ஸ் ஆஸம் மஞ்சு. மணக்குது… உன் தம்பியை ஃபிளாட் ஆக்க, இது போதும்ல.” என கேள்வியாக கேட்டபடி, புடவையை சரி செய்தவளைக்கண்டு தலையில் அடித்துக்கொண்டவள், “இதுக்கு மேல இங்க இருந்தேன்னா… நீ என்னை கெடுத்துடுவ தாயே. தயவு செஞ்சு அவன் ரூமுக்கு போ!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
“வாட் மஞ்சு… இந்த தமிழ் படத்துல வர்ற மாதிரி, பொண்ணை கூட்டிட்டு போய் ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல கும்பலா விட மாட்டீங்களா?” என யோசனையாகக் கேட்க,
“ம்ம்… அதுக்கு, பொண்ணு கொஞ்சமாவது வெட்கப்படணும். உன்னை கும்பலா வேற வந்து விடணுமாக்கும்.” என நொடித்துக் கொண்டவள், சிரித்து விட்டு, தஷ்வந்தின் அறை வாசலில் விட, “ஹே… பால் சொம்புலாம் தர மாட்டிங்களா?” என்ற மஹாபத்ராவின் கேள்வியில் மஞ்சுளா கடுப்பானாள்.
“அடியேய்… இப்ப நீ உள்ள போகல… இங்க நடக்குறதே வேற… பால் சொம்பு வேணுமாம் பால் சொம்பு. போடி முதல்ல.” என்று மூச்சிரைக்க, ‘ஒரு பால் சொம்பு கேட்டதுக்கு இவள் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறா…’ என நக்கலடித்தபடி அறைக்குள் சென்றாள்.
அவனுடன் ஒரே அறையில் தங்குவது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. ஒரே படுக்கையை பகிர்வதும் புதிதல்ல. ஆனால், இப்போது ஏனோ அடி நெஞ்சில் ஒரு வித சொல்லொணா உணர்வு தாக்க, அவ்வுணர்வு அவளுக்கும் பிடித்தது. அவன் அறையில் இல்லாது போனதில், கண்ணாடி முன் நின்று, தலை முடியை சரி செய்து கொண்டிருந்தாள்.
அப்போது, அவளது வெற்றிடையில் விரல் பதித்து, பின்னோடு அணைத்துக் கொண்ட தஷ்வந்தின் கண்களில் மோகம் அளவுக்கு மீறி வழிந்தது.
அவன் தொட்ட இடம் குறுகுறுக்க, “கையை எடு” என்றாள் பிடிக்காத பாவனையுடன்.
“கையை எடுக்கவா… லைசன்ஸ் வாங்கி இருக்கேன். நொவ் யூ ஆர் மைன் டாலு…” என்றவன், கண்ணாடி வழியே அவளது கண்களை பார்த்தபடி, பின்னங்கழுத்தில் அழுந்த முத்தமிட, அவளுக்கு சிலிர்த்தது.
கழுத்தில் பயணித்து, காதில் வந்து முத்தங்களுடன் நிறுத்திய தஷ்வந்த், “யூ ஆர் காட்ஜியஸ் டாலு.” என்றபடி, விரல்களால் அவளது வளைவுகளை சோதித்தான்.
அவனது தீண்டலில் நெளிந்தவள், கண்கள் மூடி நிற்க, அதனைக் கண்டு அப்போதும் அவனிடம் ஏளன சிரிப்பு.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு டாலு. ஆனா, வைஃப் – ஆ இல்ல…” என்று நிறுத்த, மெல்ல மோகம் கலைந்து கண் விழித்த பத்ரா புரியாமல் பார்த்தாள்.
“எனக்கு இந்த கமிட்மெண்ட்ல எல்லாம் இன்டரஸ்ட் போய்டுச்சு பத்ரா. லவ்… மேரேஜ்… பிளா பிளா… இதெல்லாம் சுத்த வேஸ்ட். உனக்கும் அப்படி தான்னு எனக்கு தெரியும் டாலு. பட், எனக்கு உன்னை பிடிச்சு இருக்கே. சோ, நம்ம ஏன் இந்த கமிட்மெண்ட் எல்லாம் விட்டுட்டு, வெறும் ஃபிஸிக்கல் பார்ட்னர்ஸா இருக்க கூடாது?” என மூக்கை சுருக்கிக் கேட்க, அவள் முகத்தில் லேசான அதிர்ச்சி.
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு!” அவள் ஏமாற்றத்துடன் கூற,
“ப்ச், கம் ஆன் டாலு. உனக்கே இந்த ஃபார்மாலிட்டில எல்லாம் நம்பிக்கை கிடையாது. இதெல்லாம் ஜஸ்ட், பெரியவங்களுக்காக. என்னால உன்னை மாதிரி, யாரை பத்தியும் கவலைப்படாம, லிவ் – இன்ல இருக்க முடியாதே. அதான், இந்த கல்யாண ஏற்பாடு. மத்தபடி, நம்ம ஏன் இல்லாத காதலை நமக்குள்ள தேடிக்கணும். லெட்ஸ் என்ஜாய் திஸ் மொமெண்ட் டாலு. கல்யாணம் ஆனாலும் அதே லவ் இல்லாத லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை இப்போ கன்டினியூ பண்ணலாம். உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே… ப்ச். இருக்காது. யூ ஆல்சோ லைக் தட்…” எனக் கேள்வியும் அவனே பதிலும் அவனே என அவள் பேசிய வார்த்தைகளை எல்லாம் சேர்த்து வைத்து, இப்போது அள்ளி வீசினான்.
ஆனாலும், அவனது விழிகள் அவளிடம் எதையோ தேடியது. அவள் விழிகளும் அவனிடம் எதையோ ஆராய, சில நொடிகள் அதிர்ச்சி மறைந்து, “ஓகே” என்றாள் தோளைக்குலுக்கி.
அதில் அவனுக்குள்ளும் ஒரு ஏமாற்றம். அதனை கச்சிதமாக மறைத்தவன், “தென் ஓகே…” என அவளைப் போன்றே கூறி விட்டு, பெண்ணவளை பூவாக மலர வைக்கும் பணியில் இறங்கினான்.
காயம் ஆறும்!
மேகா.