983 views

காலையில் எழுந்த அன்பினி உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்க தாமதமாக கண்விழித்தவன் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த பின்னும் அன்பினி எதுவும் பேசவில்லை. 
 
அவன் பார்க்காதவாறு வேறு பக்கம் வந்தவள் உடற்பயிற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்க, அவள் இருக்கும் பக்கம் திரும்பியவன் பெருமாள் போல் கையை தலைக்கு தாங்கி ரசிக்கும் வேளையில் ஈடுபட்டான்.
 
முறைத்துக் கொண்டு அவளும் தன் பணியில் கவனமாக, “ஏண்டி குடிக்காரி குடிக்காம எப்படி இருக்க.” தன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் அன்பினியை வம்புக்கு இழுக்க,
 
“நான் எங்க குடிக்காம இருக்க டெய்லி நைட் ராவா குடிச்சிட்டு தான இருக்கேன்.” என்றவள் கண்களை மூடி மூச்சுப் பயிற்சியில் ஈடுபட, அக்னிக்கு ஒன்றும் புரியவில்லை. 
 
கட்டிலில் உருண்டவன் அவள் அருகில் இருக்குமாறு படுத்துக்கொண்டு, “என்னடி சொல்ற.”என அவள் முடியை பிடித்து இழுத்தான்.
 
முடியை காப்பாற்றிக் கொண்டு எழுந்து நின்றவள், “சொல்ல முடியாது போ.” என நகர பார்த்தாள்.
 
 
 
அவசரமாக எழுந்தவன் நடப்பவளின் கால்களை தட்டி விட, கீழே விழும் முன் அவனை சேர்த்து பிடித்து விழுந்தாள். இதை எதிர்பார்க்காத அக்னி தரையில் “தொப்” என்று விழ, அவனுக்கு மேல் விழுந்தாள். “ஆமா உன் வெயிட் என்ன?” நெஞ்சில் கை வைத்து அக்னி கேட்க,
 
“எதுக்கு?”என்றாள் அன்பினி.
 
“ஏதோ பத்து யானை ஒரே நேரத்துல தும்பிக்கையால அடிச்ச மாதிரி அம்புட்டு கனமா இருக்கு அதான் கேட்டேன்.” என்றவன் லாரியில் அடிபட்டு பாவமாக கிடப்பது போல் அவளைப் பார்த்தான்.
 
வார்த்தையில் வெகுண்டு எழுந்த அன்பினி புரூஸ் லீ போல் எகிறி அவன் வயிற்றில் அமர, “அய்யோ!” என்று அலறினான் அக்னிசந்திரன்.
 
“நான் உனக்கு யானை மாதிரி இருக்கேனா அதுவும் பத்து.” என்று டி-ஷர்டை பிடித்துக் கொண்டு அவன் வயிற்றில் எகிறி குதித்தாள்.
 
அடிவயிறு தரையோடு தரையாக காணாமல் போனது போன்று உணர்ந்தவன், “கட்டின மஞ்சள் கயிறு ஈரம் கூட இன்னும் காயல அதுக்குள்ள என்னை கொல்ல பார்க்கிறியே சதிகாரி.” என்றவன் வாய் சும்மா இல்லாமல் 
“எந்திரி டி யானை தீவு.” என்று விட, எகிறி குதிப்பதை இன்னும் அதிகமாக்கினாள்.  
 
 
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தவன் அவளை தலை கீழாக தள்ளி மேல் அமர, “யானை தீவு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சி டி உனக்கு. ரெண்டு வாராம திட்டாம இருக்கல அதான்.” இரண்டு வார காலங்கள் பெரிய சண்டைகள் ஏதும் இன்றி அழகாக நகர்ந்ததை அவன் சுட்டிக்காட்ட,
 
“இவரு பெரிய இவரு திட்டாம கொழுப்பு கூடி போச்சு. போடா எகிறி வைத்தியம் பண்ணிடுவேன்.” என்றவளின் பேச்சு நின்றது அக்னி எகிறி குதித்ததால்.
 
கண்ணெல்லாம் கலங்கிவிட்டது  அன்பினிக்கு. அதைப் பார்த்தவன், “எங்க இப்ப பேசு.” என்று எகிறுவதைப் போல் பாவனை செய்ய,
 
“காட்டெருமை எந்திரி.” என்று விலகப் பார்த்தாள். 
 
“புருஷனுக்கு மரியாதை தர லட்சணத்தை பாரு.” என்றவன் அவள் வாயில் அடிக்க, திரும்பி தாக்க ஆரம்பித்தாள். இருவரும் விடாமல் மல்யுத்தம் போட்டுக் கொண்டிருக்க, அவளை அடக்கி வென்றவன்,
 
“டெய்லி ராவா என்ன குடிக்கிறன்னு சொல்லு விடுறேன்.” என நிபந்தனை வைக்க,
 
“நீ விடு அப்பதான் சொல்ல முடியும்.” என்று போராடினாள்.
 
அவன் விடாமல் பதிலை கேட்டுக் கொண்டிருக்க, “கிட்ட வா சொல்றேன்.” என அழைத்தாள்.
 
கேட்கும் ஆர்வத்தில் அவன் நெருங்க, கழுத்தை பிடித்தவள் அவனின் போதை இதழ்களை ருசி பார்க்க, கண்கள் விரிந்து நோக்கினான் அக்னி. அவன் முகபாவனைகளை கண்டவள் உதட்டை விடுவது போல் விட்டு மீண்டும் தன் உதட்டோடு புதைத்துக் கொண்டாள். கைகள் ஊனி அவள் மேல் படுத்திருந்தவன் இதழ் மயக்கத்தில் மொத்தமும் சரிந்து விட, தாங்கிக் கொண்டாள் அன்போடு. 
 
போதும் என்ற அளவிற்கு ருசி பார்த்து விட்டவள் புருவத்தை உயர்த்தி அவனோடு பேச, இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “பிரஷ் பண்ணல இன்னும்.” என்றான் உதட்டை துடைத்து.
 
“அதான் இன்னைக்கு டேஸ்ட் அதிகம் போல.” என்றதும் நொடியில் அவளை மேலே ஏற்றிக் கொண்டான் உருண்டு படுத்து. அன்பினி நடக்கப் போவதை எதிர்பார்த்து சிரிக்க, ஆழமான பார்வையை செலுத்தியவன் தொந்தரவு செய்யாமல் அடக்கமாக இருந்த முடியை இவன் தொந்தரவு செய்தான் காதுக்கு பின்னால் நகர்த்தி. கண்களை வருடி கோலம் போட்டவன் நேராக இதழில் நாட்டியம் ஆட, சிரித்தாள் அவள். சிரிப்பில் வெளிவந்த பற்களை தொட செல்ல, நாசுக்காக கடித்தாள். சத்தம் வராமல் விரலை உதறியவன், 
 
“சேட்டைக்காரி” என்று முத்தம் கொடுக்க வந்தான். அவனுக்கு போக்கு காட்டியவள் தலையை நகர்த்திக் கொண்டிருக்க, திமிரோடு பார்த்தவன் எழ முயன்றான்.
 
சுதாரித்துக் கொண்ட அன்பினி டி-ஷர்டை இழுக்க, அந்த கைகளுக்கு முத்தம் கொடுத்தவன் கர்வமாக ஆளுமை கொண்டான் அவனுக்கானவள் உதட்டில். 
 
இரண்டு வாரங்களாக நிறைய சண்டைகள். அதிலும் செல்வகுமார் கொடுத்த நோட்டீஸ் அறிக்கையை படித்தவன் அந்த கோபம் முழுவதையும் கொட்டினான் வீட்டில். பரமேஸ்வரி இத்தோடு விடும்படி மன்றாடியும் கேட்காதவன் தன் தரப்பு வழக்கறிஞரை தொடர்பு கொண்டு தயார்படுத்தினான் ஆதாரங்களை. விஷயம் அறிந்த அன்பினி விடும்படி கேட்க, இருவருக்குள்ளும் சண்டை துளிர்விட்டது. 
 
இருப்பினும் சண்டை எந்த அளவிற்கு உயிர் பெற்றதோ அதே அளவு இருவருக்குள்ளும் காதலும் உயிர் பெற்றிட, இதோ! அடுத்து நடக்க போகும் சண்டைக்கு முன்னர் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள். 
 
 
ஒரு வழியாக காலை நேர காதல் சேட்டைகளை முடித்தவர்கள் அடுத்த வேலையை கவனிக்க சென்றார்கள். குளித்து முடித்த அக்னி அறையை விட்டு வெளியேற, கழுத்தைப் பிடித்து தடுத்தாள் அன்பினி.
 
“என்ன?” என்றவனை மெத்தையில் தள்ளியவள், “நீ மட்டும் என் முன்னாடி ரெடி ஆகுற. நான் மட்டும் ஆளே இல்லாத சுவற்றை பார்த்து ஆகணுமோ.” என்றவளை  முறைத்தவன்,
 
“பைத்தியக்காரி என்ன பேசுற விடு என்னை.” என்றவன் செல்ல,
 
“இப்ப மட்டும் நீ இருக்கல கம்பெனிக்கு போக மாட்ட.” என்று மிரட்டினாள்.
 
தலையில் அடித்துக் கொண்டவன் அமைதியாக அமர்ந்திருக்க, குளித்து முடித்து வந்தவள் சோதித்தாள் அவனை. கண் மூடிக் கொண்டவன் பற்களை கடித்து கண்டிக்க,
 
“சீன் போடாத அவ்ளோ தான் ரெடி ஆகிட்டேன்.” என்று அவன் முன்பு நின்றாள்.
 
அன்பினி தலையில் அடித்தவன் கிளம்பினான். படி இறங்கி கொண்டிருக்க, “அக்னி பாட்டிக்கு உடம்பு முடியலையாம். வா போகலாம்.” என்று பதறியபடி  பின்னால் வந்தாள்‌.
 
சமையலறையில் இருந்த பரமேஸ்வரி இதைக்கேட்டு வேகமாக வெளியில் வந்தார். அலட்டிக் கொள்ளாமல், “என்னால வர முடியாது நீ வேணா கிளம்பு.” என்றான்.
 
“கோபத்தை காட்டுற நேரம் இது இல்ல. போற வழி தான கூட்டிட்டு போ.” என்றவள் அவன் கைப்பிடிக்க, கைகளை உதறினான்.
 
“உன் இஷ்டத்துக்கு என்னை வளைக்க பார்க்காத. என்னால வர முடியாது. உன் பாட்டி தான நீ போ.” என்றவன் எதுவும் நடக்காதது போல் படி இறங்கினான்.
 
“அக்னி பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல நீ உடனே அவளை கூட்டிட்டு கிளம்பு.” என்று பரமேஸ்வரி அழுகையோடு கூற,
 
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அப்படியே ஆனாலும் பார்த்துக்க அவங்க குடும்பம் இருக்காங்க. நீங்க பதட்டப்படாம வேலைய கவனிங்க.” அவர் பேச்சையும் கேட்காமல் அக்னி பேச,
 
“நீ எல்லாம் மனுஷனா அக்னி. உடம்பு முடியாம இருக்க ஒருத்தவங்க கிட்ட உன் கோபத்தைக் காட்டுற வெக்கமா இல்ல. அவங்க எனக்கு மட்டும் இல்ல உனக்கும் பாட்டி தான். நீ வந்து தான் ஆகணும்.” என்றாள் அன்பினி.
 
 
“உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட நான் மனுஷனா இருக்கணும்னு அவசியம் இல்ல. இந்த உலகத்துல நொடிக்கு நொடி யாராவது ஒருத்தருக்கு உடம்பு முடியாம தான் போகுது அவங்க எல்லாருக்கும் வருத்தப்பட  முடியுமா.” என்றவனின் மீது  கோபம் வந்தது பரமேஸ்வரிக்கு.
 
 
“அக்னி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் நீ முதல்ல அவங்களை பார்க்க கிளம்பு.” என்று மணிவண்ணனும் எடுத்துக்கூற,
 
“என்ன ஆள் ஆளுக்கு அந்த வீட்டுக்கு போக சொல்றீங்க. போறதா இருந்தா நீங்க போங்க என்னை போக சொல்லாதீங்க. உங்களுக்கு வேணா பழசெல்லாம்  மறந்து இருக்கலாம் என்னால மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.” என்றான் வீம்பாக. 
 
“என்னங்க அவன் கேட்க மாட்டான் வாங்க நம்ம அம்மாவை பார்த்துட்டு வரலாம்.” என்றவர் கிளம்ப, 
 
“தாராளமா போங்கம்மா. ஆனா ஒன்னு அந்த செல்வகுமார் உங்களை கேட் கிட்ட கூட விடமாட்டான். ஏற்கனவே ஒரு தடவை அசிங்கப்பட்டு வந்ததை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.” என்றதும் கிளம்பியவரின் கால்கள் நின்றுவிட்டது. 
 
 
அம்மாவின் உடல்நிலை ஒரு பக்கம் செல்வகுமாரின் பேச்சுக்கள் ஒரு பக்கம் என அவரை வாட்டி வதைக்க அழுக மட்டுமே முடிந்தது பரமேஸ்வரியால். மணிவண்ணனும் மகனின் வார்த்தையில் அமைதியாக நின்றிருக்க,
 
“ச்சீ! உன்ன மாதிரி ஒருத்தன காதலிச்சதை நினைச்சு வெட்கப்படுறேன். உன் அளவுக்கு மிருகம் கூட நடந்துக்காது. மனசாட்சின்னு ஒன்ன கடவுள் உனக்கு படைக்கவே இல்லை. அவங்க கிட்ட கோபத்தை காட்டுறியே உங்க கிட்ட என்ன தப்பு இருக்குன்னு யோசிச்சி பார்த்தியா.என் பாட்டிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்ன சும்மா விடமாட்டேன் அக்னி.” என்றவள் அவனையும் தாண்டி கிளம்பினாள்.
 
பரமேஸ்வரி அழுகையோடு தன் அறைக்க சென்று விட, மணிவண்ணன் சமாதானப்படுத்த பின்னால் சென்றார். திவ்யா நடந்த கலவரத்தில் கல்லூரி செல்லாமல் நின்று விட்டாள். மனைவியின் பேச்சை காதில் வாங்காதவன் கிளம்பினான். 
 
 
தெருமுனையை தாண்டியவன் பார்வையில் நடந்து கொண்டிருந்த அன்பினி விழ, காரை அவள் நோக்கி நகரத்தினான். ஹாரன் சத்தத்தில் திரும்பியவள் அவனைக் கண்டு கொள்ளாது நடந்தாள். அருகில் சென்றவன், “எதுக்கு நடந்து போய்க்கிட்டு இருக்க ஆட்டோ பிடிச்சு போக வேண்டியது தான.” என்றான்.
 
“உனக்கு என்ன வந்துச்சு உன் வேலையை பார்த்துட்டு போ.” என்றவள் வேக நடை போட்டாள்.
 
கோபம் மூக்கின் நுனியை முட்டிக்கொண்டு நின்றாலும், “எவ்ளோ தூரம் நடந்து போவ.” என்றான் அவள் நடப்பதை பார்க்க முடியாமல்.
 
“எங்கிட்ட இருந்த எல்லாத்தையும் எங்க வீட்டுல கொடுத்துட்ட. நீ இருக்க தைரியத்துல காசு வேணும்னு யோசிக்காம இருந்துட்டேன். இப்ப  யார்கிட்டயும் பிச்சை கேட்க முடியாது .  என்னால முடிஞ்ச அளவுக்கு போவேன். இல்லையா வர வண்டியில விழுந்து செத்துடுறேன்.” என்றவள் அவனைக் கண்டு கொள்ளாமல் நடந்தாள்.
 
 
அவள் வார்த்தையில் கட்டுக்கடங்காத கோபம் அக்னியை ஆட்கொண்டது. வேகமாக காரை விட்டு இறங்கியவன், “என்ன வார்த்தை டி சொல்ற செவில் பிஞ்சுரும் அடிக்கிற அடியில. ஏறு வண்டியில.” என்றவன் அவள் திமிருவதையும் பொருட்படுத்தாமல் காரில் தள்ளினான். 
 
“சாகுற அளவுக்கு உன்னை நான் கொடுமை பண்ணிட்டேனா. என்னை விட உன் பாட்டி அவ்ளோ முக்கியம் உனக்கு அப்படித்தான.” என்றவன் அவள் மீதி இருந்த கோபத்தை வேகத்தில் காட்டினான். அரை மணி நேரம் கழித்து அவள் வீட்டின் முன்பு நிறுத்தியவன்,
 
“கிளம்பும்போது கால் பண்ணு.” என்றதோடு தன் பர்சை அவள் கையில் திணித்துவிட்டு மறைந்தான் மின்னலாக. 
 
 
அதிகமாக பேசி விட்டதாய் அன்பினி உணர்ந்தாலும் இப்போது பாட்டி தான் முக்கியம் என்று உள்ளே சென்றாள். அவளைப் பார்த்த செல்வகுமார், “அங்கயே நில்லு! என் வீட்டுக்குள்ள வராத.” என்றார்.
 
 
“இது உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் வீடு தான். இங்க நான் வரத உங்களால தடுக்க முடியாது.”  அவரையும் தாண்டி சென்றாள்.
 
“அதெல்லாம் நீ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும். எப்போ அவன நம்பி ஓடிப்போனியா அப்பவே இந்த வீட்டுக்கும் உனக்கும் இருந்த உறவு முடிஞ்சு போச்சு.” என்றவர் தடுத்தார் அவள் செல்லாமல்.
 
 
“அப்பான்னு மரியாதை கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன். வரம்பு மீறி பேச வைக்காதீங்க. இது என் வீடு நான் எப்ப வேணா வருவேன். மரியாதைய காப்பாத்திக்கோங்க.”என்றவள் சத்தத்தில் விக்ரம் வெளியில் வந்தான்.
 
“என்ன சித் இது. அப்பான்னு கூட பார்க்காம இப்படி பேசுற. உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாரு.” இப்போதெல்லாம் எந்நேரமும் மகேஷ் இருப்பது செல்வக்குமாரோடு தான். விக்ரம் சொல்லி அன்னபூரணி உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்து கொண்டவன் இன்று ஏதாவது செய்து குடும்பத்தை கலைக்கலாம் என்று காத்திருக்க வாய்ப்பும் கிடைத்தது.
 
 
அவனை தாடை கடித்து முறைத்தவள் பேசும் முன், “இது எங்க குடும்ப பிரச்சினை மூணாவது ஆள் உனக்கு இங்க என்ன வேலை. முதல்ல எங்க வீட்டை விட்டு வெளியே போ.” என்றான் விக்ரம். 
 
மகேஷ் வழக்கம் போல் பாவமான வார்த்தைகளை செல்வகுமாரிடம் தெளிக்க, அவரோ மகன், மகள் இருவரையும் வாய்க்கு வந்தபடி பேசினார்.
 
“இவருக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு அன்பினி. நீ வா நம்ம பாட்டியை பார்க்கலாம்.” என்று அழைத்துச் சென்றான் தங்கையை. 
 
 
முதியவர் உடல்நிலை அசதியில் இருந்தது. வயிற்று உபாதைகள் அவரை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்திருக்க, காலையில் தான் மருத்துவமனை சென்று வந்தார். பேரனிடம் மகள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் ஆசை நிறைவேறாமல் போனதில் வருத்தத்தோடு பேச,
 
 
“பாட்டி இதுக்கு எதுக்கு வருத்தப்படுறீங்க. நான் இப்பவே அத்தையை கூட்டிட்டு வரேன்.” என்று கிளம்பினான் விக்ரம்.
 
***
அன்னையின் உடல்நிலை பற்றிய விவரம் தெரியாததால் பரமேஸ்வரி அழுது கொண்டிருக்க, “அத்தை!” என்று தன் வரவை தெரிவித்தான் விக்ரம்.
 
 
“அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு.”  பரிதவிப்போடு கேட்டவருக்கு,
 
“நல்லா இருக்காங்க அத்தை. நீங்க வரலன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க.” என்றதும் மனம் கசந்தது அவருக்கு.
 
பதில் சொல்லாமல் அமைதி காக்கும் அத்தையிடம், “சின்ன பையன் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க அத்தை.  அது உங்க வீடு  அப்பா என்ன பேசினாலும் உரிமையோட வந்துட்டு போகாம தள்ளி நின்னு அவங்களை தண்டிக்கிறீங்க. பெத்த பிள்ளைங்களுக்கு நடுவுல பாவம் பரிதவிச்சு நிற்கிறது பாட்டி தான். நீங்க இப்ப வந்திங்கன்னா அவங்க உடம்பு சீக்கிரம் சரியாகும்.” என்றான்.
 
அவன் பேசுவது சரி என்றாலும் செல்ல மட்டும் தயக்கமாகவே இருந்தது அவருக்கு. அதை புரிந்து கொண்டவன், “அத்தை உங்க மருமகன் மேல நம்பிக்கை இருந்தா வாங்க.” என்று நம்பிக்கை கொடுக்க, பரமேஸ்வரி கணவனை பார்த்தார்.
 
 
போகும் படி அவர் சைகை செய்ய, “மாமா நீங்களும் வாங்க. அப்பா எதுவும் பேசாத படி நான் பார்த்துக்கிறேன்.” என்று சமாதானம் செய்து மூவரையும் அழைத்துச் சென்றான்.
 
 
அவர்களைப் பார்த்த செல்வகுமார் தையத்தக்கா என்று குதிக்க, “இதுக்கு மேல ஏதாச்சும் பேசுனிங்கனா இந்த வீட்டுல நீங்க மட்டும் தான் தனியா இருப்பீங்க. நாங்க எல்லாரும் அத்தையோட போயிடுவோம்.” என்று மிரட்டினான் தந்தையை.
 
 
தனக்கு எதிராக திரும்பி விட்ட அனைவரையும்  முறைக்கு மட்டுமே முடிந்தது அவரால். பல வருடங்கள் கழித்து தன் வீட்டில் கால் வைத்த பரமேஸ்வரிக்கு சொல்ல முடியாத ஆனந்தம். மணிவண்ணன்  தயக்கத்தோடு அங்கிருக்க, திவ்யாவிற்கு சங்கடம் பாதி சந்தோஷம் பாதி என்று இருந்தது. 
 
 
அன்னபூரணியின் அறைக்கு சென்ற பரமேஸ்வரி கட்டியணைத்து அழ, மகளைப் பார்த்தவர் புன்னகைத்தார்.
 
“அம்மாடி இது போதும் எனக்கு இந்த நிமிஷம் உன் மடியில செத்துப் போனா கூட நிம்மதியா போவேன்.” என்று மகளைப் பார்த்த பூரிப்பில் பேச,
 
“அதெல்லாம் எங்கயும் போக மாட்டீங்க. உங்க கொள்ளு பசங்க கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டு தான் உங்களை அனுப்பி வைப்பேன்.” என்ற பரமேஸ்வரி அழுகையோடு சிரிக்க, மகளின் பேச்சில் உடல்நிலை தேறி சிரித்தார் அன்னபூரணி.
 
 
வந்தவர்களை நந்தினி உபசரிக்க, “இருக்கட்டும் அண்ணி இன்னொரு நாள் வரோம்.” என புறப்பட்டார் பரமேஸ்வரி.
 
திவ்யாவும் கிளம்ப பாட்டியின் கோரிக்கையில் அன்பினியோடு வருவதாக தங்கிக் கொண்டாள். கோபத்தில் இருந்த செல்வகுமார் வீட்டை விட்டு வெளியேறிட, அவர் பின்னால் சென்றான் மகேஷ் மந்திரம் ஓத.
 
மதியத்திற்கு மேல் தான் அந்த வீடு அமைதி பூங்காவானது. வெகு நாட்கள் கழித்து அன்பினி தன் தாய் வீட்டில் இருக்க, புதிதாக தாய் வீட்டு உறவுகளோடு பொழுதை கழித்தாள் திவ்யா. நேரங்கள் கடந்து ஃபோனை எடுத்த அன்பினிக்கு அக்னி இடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் கிடைத்தது.
 
 
அதில் “உன் பாட்டி எப்படி இருக்காங்க.” பாட்டி உடல்நிலை பற்றி நாசுக்காக கேட்டிருந்தான் அக்னி. அதை படித்தவள் மனதினுள் சிரிக்க, “என்ன அண்ணி கனவுல டூயட்டா.” என்றாள் அவளின் நாத்தனார்.
 
 
 
சிரித்து மழுப்பியவள் மதிய உணவை முடித்த கையோடு அக்னியை பார்க்க கிளம்பினாள். திவ்யாவும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றிட இருவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான் விக்ரம். 
 
 
 
பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் முன்பு நிறுத்திய விக்ரமின் மனம் லேசாக வலித்தது. என்ன இருந்தாலும் தன் தந்தையின் கம்பெனி என்று உறவு கொண்டாடிய நாட்கள் அவன் கண்முன் தோன்றியது. அண்ணனின் பார்வையை வைத்து புரிந்து கொண்ட அன்பினி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள். 
 
 
அன்பினி கணவனை பார்க்க சென்றுவிட, கனத்த மனதோடு காரை எடுத்தான் விக்ரம். அவன் நடவடிக்கைகளை கவனித்த திவ்யா,
 
“அண்ணன் மேல ரொம்ப கோவமா இருக்கீங்களா மாமா?” என்றாள்.
 
 
புரியாமல் கண்ணாடி வழியாக  அவளை பார்க்க, “ரொம்ப பீல் பண்ணி அந்த பில்டிங்கை பார்த்துட்டு இருந்தீங்க அதான் கேட்டேன்.” என்றதும்,
 
 
“கொஞ்சம் வருத்தம் தான். ஆனா அதே வலி தான் அத்தைக்கும் இருக்கும்னு நினைக்கும் போது சமாதானம் ஆகிடுவேன்.” என்றான்.
 
அதன்பின் பேசிக்கொள்ளாமல் சாலையில் விக்ரம் கவனமாக, “
மாமா  உங்க வைஃப் வீட்டுல இல்லயே எங்க போய்ட்டாங்க‌.” என்று சந்தேகம் கேட்டிட,
 
வாகனத்தின் வேகத்தை குறைத்தவன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு திரும்பினான் .  விக்ரம் பதில் சொல்லப் போகிறான் என்று அவளும் ஆர்வமாக பார்க்க,
 
“என்னை பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரியா இருக்கு.” என்று முறைத்தான்.
 
அதில் கருவிழியை ஒரு சுழற்று சுழற்றி முழித்தவள் ‘ஆமாம்’ என்றதோடு, 
 
“ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரி தெரியுறிங்க மாமா.” என்றாள். எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவனுக்கு. 
 
 
பேசாமல் வண்டியை இயக்க, “சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கா மாமா நீங்க.” என்ற திவ்யாவை கண்ணாடி வழியாக விக்ரம் முறைக்க,
 
“சாரி மாமா திரும்பவும் தப்பா புரிஞ்சுகிட்டேன். சிங்கிள் சரி யங் தப்பு.” என்று அவனிடம் குறும்புத்தனத்தை காட்டினாள்.
 
“அண்ணனுக்கு தங்கச்சி சரியா இருக்க.” என்றான்.
 
“தேங்க்யூ மாமா.” என்றவள் தொடர்ந்து அவனிடம் குடும்ப விவரங்களை கேட்டுக் கொண்டிருக்க,  அவனும் அவளைப் பற்றி விசாரித்தான். 
 
 
இருவரும் சற்று நேரத்திலே நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். வழியில் ஒருவர் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருக்க, “மாமா அதை வாங்கணும் கார நிறுத்துங்க.” என்றாள்.
 
 
எதைக் கேட்கிறாள் என்பது தெரியாமல் காரை நிறுத்த, சொல்லாமல் சட்டென சாலையில் இறங்கி நின்றாள் திவ்யா. சுதாரித்தவன் இறங்குவதற்குள் ஓடினாள் பஞ்சுமிட்டாயை நோக்கி.
 
“திவ்யா நில்லு வண்டி போற ரோடு.” என்று அவன் பின்னால் ஓட,
 
“மனுஷங்களும் போறாங்களே மாமா கண்ணு தெரியல.” என்று சிரித்தவள் ஓடினாள்.
 
பஞ்சு மிட்டாய் பாக்கெட் பத்து வாங்கியவள், “காசு கொடுங்க மாமா.” என்றாள் உரிமையோடு.
 
அவளின் உரிமையான பேச்சு அவனுக்கு பிடித்துப் போக, பர்சை எடுத்து அவளிடமே கொடுத்தான். உள்ளே இருந்த நூறு ரூபாய் தாளை எடுத்தவள், “உங்களுக்கு வேணுமா மாமா.” என்று கேட்க,  அவள் கையில் இருக்கும் பாக்கெட்டை பார்த்தான் விக்ரம்.
 
“இது எனக்கு!” என்று நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் உம்மென்று முகத்தை வைக்க, “அது சரி”  என்றான்.
 
“வேற ஏதாவது வேணுமா திவி” என்றவனை ஏற இறங்க பார்த்தவள், “யாரு கிட்டயும் சொல்லக்கூடாது.” என்று பம்பினாள்.
 
அவன் ‘மாட்டேன்’ என்ற தலையசைக்க, “பஞ்சு மிட்டாய் ப்ராமிஸ்.” என்று கைகளை நீட்டினாள். சிரிப்போடு சத்தியம் செய்தவனிடம்,
 
 
“இன்னும் ஒரு பத்து பாக்கெட் பஞ்சு மிட்டாய் வாங்கலாமா.” என்று முகத்தை கொஞ்சலாக வைக்க, அந்த நொடி விழுந்து விட்டான் விக்ரம்.
 
 
அவள் கேட்டதற்கு மாறாக விற்பவரிடம் இருந்த அனைத்தையும் வாங்கி கொடுத்தான் . துள்ளி குதித்தவள் காரில் ஏறுவதற்குள் ஐந்து பாக்கெட்களை காலி செய்தாள். அதன் அழகை ரசித்தவன் காரை இயக்கும் நொடி,
 
“மாமா இங்க திரும்புங்க.” என்ற திவ்யா அவன் திரும்பும் நேரம் பஞ்சு மிட்டாய் பாக்கெட்டை ஓங்கி அடிக்க, “டப்” என்று சத்தம் கேட்டது.
 
அதில் கண்ணை சிமிட்டி முகத்தை தூரம் வைத்தவன் அவளை முறைக்க, “ஈஈஈஈ” என்று அந்தக் கவரில் இருந்த பஞ்சுமிட்டாய் அவன் வாயில் திணித்தாள். 
 
 
அம்மு இளையாள்.
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
30
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *