Loading

மொட்டைமாடியில் அமர்ந்து நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தான் நந்தேஷ். அவனுக்கு ஒரு பக்கம் ஷைலேந்தரியும் மறுபக்கம் மைத்ரேயனும் கன்னத்தில் கை வைத்து தீவிர சிந்தனையில் இருக்க, விஸ்வயுகா அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

“விடிஞ்சா கல்யாணம்… எல்லா ஏற்பாடும் பார்த்து பார்த்து பக்குவமா பண்ணிருக்கேன். நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காம இருக்கணும் தெய்வமே!” என நந்தேஷ் புலம்பிட,

ஷைலேந்தரி, “நரேஷ் தான் சீரியல் கில்லர்னு அந்த சிபிஐ சொல்லிட்டாரே நந்து. நீ வேணா பாரு இந்த கொலையெல்லாம் இதோட ஸ்டாப் ஆகிடும்” என்று அரை நம்பிக்கையில் உரைத்தாள்.

மைத்ரேயனோ, “அவனே ஏதோ ஃப்ளூட்ல தான் சொன்னான். ஒருவேளை எல்லா கெஸ்ஸும் தப்பா இருந்தா என்ன செய்றது?” என்றதில்,

“என் ஹாண்ட்ஸம் கை தப்பா கணிக்க மாட்டான்டா” என நெஞ்சில் கை வைத்து பீல் செய்ய, மைத்ரேயனுடன் சேர்ந்து அத்தனை நேரமும் நடைபயணம் மேற்கொண்ட விஸ்வயுகாவும் நின்று அவளை முறைத்தாள்.

“நீ எதுக்குடி முறைக்கிற. என் சிங்கிள் லைஃப்ல சிகிரெட்டை வச்சு கொளுத்தி குளிர் காஞ்சுட்டியேடி. சாபம் விடுறேன்… என்னை மாறி நீயும் கமிட் ஆகி, புகுந்த வீட்டுக்குப் போய், சைட் அடிக்கிற ஆப்ஷன் எல்லாம் பறிக்கப்படணும்” என சிட்டிசன் அஜித் தோரணையில் அவள் தீவிரமாகக் கூற, அதில் மூவருமே சிரித்து விட்டனர்.

மைத்ரேயன் அவள் தலையில் தட்டி, “உனக்கு ஒரு நாளைக்கு நாலாயிரம் தடவை கல்யாணமானத ஞாபகப்படுத்த வேண்டியதா இருக்கு” என்றிட, விஸ்வயுகாவோ “கல்யாணம் ஆனதை ஞாபகப்படுத்துனா கூட ஓகே டா. நீ தான் அவள் சைட் அடிக்க வேண்டிய பெர்சன்னும் சேர்த்து ஞாபகப்படுத்த வேண்டியதா இருக்கே” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

“சைட் அடிக்கிறதா இவனையா? இந்த மைதா மாவுக்கு அவ்ளோ சீன் இல்ல” என சிலுப்பியதில்,

“அங்க மட்டும் என்ன வாழுதாம்” என மைத்ரேயனும் நொடித்தான்.

இருவரும் முறுக்கிக்கொண்டு நின்றதில் நந்தேஷ் தான், “யப்பா உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை அப்பறம் வச்சுக்கோங்க. முதல்ல நாளைக்கு நடக்கப்போறதை பத்தி பேசலாம்” என்று பேச்சை திசை திருப்பினான்.

விஸ்வயுகா யோசனையுடன், “முடிஞ்ச அளவு செக்கியூரிட்டி பலப்படுத்தி தான் இருக்கு நந்து. இயர்லியாவே கிளம்பி நானும் ஷைலாவும் பொண்ணு கூட இருந்துக்குறோம். நீங்க ரெண்டு பேரும் மாப்பிள்ளை கூட இருங்க. ஒவ்வொரு மூவ்மெண்ட்ஸும் நமக்கு முக்கியம்” என்றதில் மற்றவை மறந்து காரியத்தில் கவனமாகினர்.

சொன்னது போன்றே விடியும் நேரத்தில் நால்வரும் மண்டபத்திற்குச் சென்று விட்டனர்.

இங்கு யுக்தாவும் பாதுகாப்பை வலுப்படுத்தி, சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தி இருந்தான்.

நால்வரின் இதயத்துடிப்பும் ஹை டெசிபலில் தான் துடித்துக்கொண்டிருந்தது.

ப்ளூடூத் வழியே யுக்தா நால்வருடனும் இணைந்தே இருந்தான்.

“லிசன்… உங்க அனுமதி இல்லாம மாப்பிள்ளையும் பொண்ணும் எதுவும் சாப்பிட கூடாது. எல்லாத்தையும் கரெக்ட்டா வாட்ச் பண்ணுங்க…” என்னும்போதே மைத்ரேயன் இடைபுகுந்தான்.

“இங்க மாப்பிளைக்கு அவங்க அம்மா பால் எடுத்துட்டு வந்துருக்காங்க என்ன செய்ய?” எனக் கேட்டதில், “முதல்ல நீ குடிச்சு பார்த்துட்டு டென் மினிட்ஸ் கழிச்சு அவனுக்கு குடு” என்றான் அசட்டையாக.

“ஹான் வாட்?” மைத்ரேயனுக்கு முன் ஷைலேந்தரி அதிர்ந்தாள்.

அவ்வதிர்வு மைத்ரேயனுக்கு இன்ப அதிர்வாய் மாற, யுக்தா “ஓ! நீங்க கமிட்டடோ. பட், நீ கொஞ்சம் கரெக்ட்டா சூஸ் பண்ணிருக்கலாம் ஷைலு. ஷைலு தான உன் பேரு” என சந்தேகம் போல கேட்டவன், “கொஞ்சம் வெய்ட் பண்ணிருந்தா, எனக்காக பார்த்து பார்த்து சாப்பாடு எடுத்துக் குடுத்த உன்ன நானே கரெக்ட் பண்ணிருப்பேன்…” என்றான் சோகம் போல.

“ரியலி… சே ஜஸ்டு மிஸ்ஸு…” என ஷைலேந்தரி வெகுவாய் வருந்துவது போல பாவனை செய்ததில், மைத்ரேயன் பொங்கி விட்டான்.

“மைண்ட் யுவர் டங்க் யுக்தா. ஷீ இஸ் மை வைஃப்” எனப் பல்லைக்கடிக்க, “இஸ்டன்ட்டா வந்த வைஃப் தான” என்று குத்தியதில், விஸ்வயுகா தான் “நீ உன் வாயை மூடிட்டு வந்த வேலையை மட்டும் பாக்குறியா?” எனக் கடுகடுத்தாள்.

“என் ஏஞ்சலுக்கும் ஜெலஸா?” என ராகம் போட்டபடி அவன் வினவ, “ஆமா ஆமா அவள் உன் பொண்டாட்டி பாரு… உரிமையா பொறாமைப்பட” என மைத்ரேயன் எரிச்சலைக் கக்கினான்.

அதற்கு இந்த பைத்தியம் ஏடாகூடமாக எதுவும் கூறிவிடப்போகிறது என்ற பதற்றத்தில், “டேய் அவனுக்கு கொண்டு வந்த பால் என்ன ஆச்சு?” எனப் பேச்சை மாற்ற முயல, “அவன் பால் வேணாம்னு திருப்பி அனுப்பிட்டான். இப்போதைக்கு என் உயிர் தப்பிச்சுது” என்றான் மைத்ரேயன்.

அதற்குள் ஷைலேந்தரி “அய்யயோ” எனக் கத்த, அருகில் இருந்தவளைக் குத்தினாள் விஸ்வயுகா.

“என்னடி?”

“இங்க பாரு… கல்யாண பொண்ணுக்கு காபி கொண்டு வந்துருக்காங்க. அய்யயோ அவளும் வாங்குறா” எனப் பதற,

அந்நேரம் மணப்பெண்ணின் தயார் அவர்களுக்கும் காபியை கொடுத்தார்.

அதனை எடுத்துக் கொண்ட விஸ்வயுகா, மணப்பெண்ணின் கையில் இருந்த காபியையும் வலுக்கட்டாயமாக வாங்கி விட்டு, “உங்களுக்கு இப்ப தான் லிப்ஸ்டிக் போட்டு இருக்காங்க. கொஞ்சம் காயட்டுமே” என்று காபியை டேபிளில் வைப்பது போல வைத்து அவளுக்கு வந்த காபியை மாற்றி விட்டாள்.

யுக்தா கூர்மையுடன் “அங்க என்ன நடந்துட்டு இருக்கு? ஆல் செட்?” என வினவ,

யாரும் அறியாதவண்ணம் “ம்ம் இப்ப தான் காபியை மாத்துனேன். ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.” என முணுமுணுக்க, மணப்பெண்ணின் தாயாரோ “காபி சூடு ஆறுறதுக்குள்ள குடிங்கம்மா” என்றார்.

“இதோ ஆண்ட்டி” என ஷைலேந்தரி வேகமாக காபியைப் பருக, யுக்தாவோ “ஸ்டாப்… காபியை மாத்தி அந்த பொண்ணோட காபியை நீ எடுத்துட்டியா” என விஸ்வயுகாவிடம் கேட்க, “ஆமா” என்றாள் அசால்ட்டாக.

“இடியட். அதைக் குடிக்காத” என அவன் அதட்ட,

“குடிக்கலைன்னா டவுட் வரும். தேவை இல்லாம எல்லாரையும் பேனிக் ஆக்க வேண்டாம் யுக்தா. காபில எந்த கலப்படமும் இருக்காதுன்னு நம்பலாம்…” என்றிட மறுமுனையில் எந்த சத்தமும் இல்லை.

“விஸ்வூ எதுக்கு இந்த ரிஸ்க்?” என மைத்ரேயனும் நந்தேஷும் பதற, ஷைலேந்தரி தான் “நான் அப்படியே தட்டி விடுற மாதிரி உன் காபியைத் தட்டி விட்டுடுறேன் விஸ்வூ” எனக் கிசுகிசுத்தாள்.

அதற்குள் படாரெனக் கதவைத் திறந்து உள்ளே வந்தான் யுக்தா சாகித்யன். அவனை எதிர்பாராமல் அனைவரும் திகைக்க, யாரையும் கண்டுகொள்ளாமல் மடமடவென வந்தவன், விஸ்வயுகா கையில் வைத்திருந்த காபியை யோசியாமல் அவன் வாயில் ஊற்றி விட்டு அவளை தீப்பார்வை பார்த்து விட்டே வெளியேற எத்தனித்தான்.

அவனைத் தெரியாத மணப்பெண்ணோ “ஹெலோ யார் நீங்க?” என்று கேட்க,

“அந்த மேடமோட ஹஸ்பண்ட்!” என இதழ் வளைத்துக் கூறி விஸ்வயுகாவைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு வெளியில் சென்றான்.

“ஆஆ” ஷைலேந்தரி வாயைப் பிளந்து, “உருட்டுனாலும் உருட்டு இது பெரிய உருட்டுடி” எனக் கண்களை அகல விரிக்க,

மணப்பெண் தான், “மேம் உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?” என்று வியப்பு பொங்க கேட்டாள்.

ஏற்கனவே யுக்தா செய்த காரியங்களில் திகைப்பில் இருந்தவள், இக்கேள்வியில் தன்னிச்சையாக “ம்ம்” என்று விட்டாள்.

“அவ்வ்வ்வா நீ என்னடி அவனுக்கு மேல உருட்டுற” என ஷைலேந்தரி அவள் காதில் கிசுகிசுத்தாள்… இன்னும் இருவரும் நாடகமாடுகிறார்கள் என்றே எண்ணிக்கொண்டாள் பாவம்!

நேரமும் நகர்ந்து கொண்டிருக்க, விடியல் காலையிலேயே திருமணம் என்பதால் அனைத்தும் அதிவேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் நன்முறையில் திருமணம் நடைபெற, அதன்பிறகே நால்வருக்கும் மூச்சு சீரானது.

“நான் சொன்னேன்ல கொலை எதுவும் நடக்காதுன்னு” என ஆசுவாசத்துடன் ஷைலேந்தரி உரைக்க, விஸ்வயுகா அதனைக் கவனியாமல் யுக்தாவைத் தேடி வெளியில் சென்றாள்.

அவன் மற்ற ஆபிசர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்க, “ஆர் யூ ஸ்டில் அலைவ்?” எனக் கேட்டாள் அவன் பின்னே நின்று.

அதில் திரும்பியவன், “லேசா நெஞ்சு எரியுது. தலை எல்லாம் சுத்துது” என நடிக்க, “நீ குடிக்கப் போறன்னு தெரிஞ்சுருந்தா நானே அதுல விஷம் கலந்து குடுத்துருப்பேன்” என்றாள் நக்கலாக.

“ப்ச் விஷம் எதுக்கு… உன் லிப்ஸ லைட்டா டிப் பண்ணி குடுத்துருந்தா நான் டைரக்டா சொர்க்கத்துக்கே போயிருப்பேன் ஏஞ்சல்” என அதிகாலை பனியைத் தாங்கியபடி கரத்தை மார்புக்கு குறுக்கே இறுக்கி கட்டிக்கொண்டு அவன் கூற, கதிரவனின் ரேகைகளுடன் இணைந்து சிவப்பு ரேகைகளும் அவள் கன்னத்தில் தாண்டவமாடியது.

முறைப்புடன் அதனை மறைத்துக் கொண்டவள், “இன்னைக்கு எந்த கொலையும் நடக்கலல. அப்போ நரேஷ் தான் நிஜமான சீரியல் கில்லரா? இனி எந்த பிரச்சனையும் இல்ல தான?” எனக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மற்ற மூவரும் அவர்களின் அருகில் வந்தனர்.

“என் கெஸ் கரெக்ட் தான்!” யுக்தா திணக்கமாக உரைக்க, ஷைலேந்தரி” நான் ஆல்ரெடி சொன்னேன் சார். நீங்க யோசிச்சு அது தப்பாகாதுன்னு இந்த ஃபன்னி கைஸ் தான் கேட்கல” என ஒரு கூடை ஐஸை அவன் தலையில் வைத்தாள்.

நந்தேஷ் தங்கையை அடக்கி விட்டு, “அப்போ இனிமே கொலை நடக்காதுல சார்” என்றான்.

குளிருக்கு ஏதுவாக பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தவன் வாயில் வைத்தபடி “நான் எப்போ அப்படி சொன்னேன்?” எனக் கூலாக கூற, விஸ்வயுகா அவனையும் சிகரெட்டையும் பார்வையாலேயே பற்ற வைத்தாள்.

அவள் பார்வையில் தானாக சிகரெட்டை எடுத்து கீழே போட்டு விட்ட யுக்தாவை, மைத்ரேயன் எரிச்சலாக பார்த்தான்.

“நரேஷ் சீரியல் கில்லரா இருந்தா இங்க கொலை நடக்காதுன்னு தான் சொன்னதா ஞாபகம்”

“ம்ம்… ஆனா அவன் சீரியல் கில்லரா இருக்க மாட்டான்னு எனக்குள்ள ஒரு பட்சி சொல்லிக்கிட்டே இருந்துச்சு. அதனால, இன்னைக்கு சென்னைக்குள்ள நடக்கப்போற மத்த மேட்ரிமோனி மூலமா ஏற்பாடான கல்யாணத்தை எல்லாம் அனலைஸ் பண்ண ஒரு பிளான் பண்ணிருந்தேன். பட், என் பிளானையும் மீறி கொலை நடந்துடுச்சு” எனக் கண் சிவக்க அவன் கூறிட, மற்றவர்கள் அதிர்ந்தனர்.

“அப்போ கொலை நடந்துடுச்சா யுக்தா?” விஸ்வயுகா திகைப்பு மாறாமல் கேட்க,

“ம்ம்… பெசன்ட் நகர்ல ஏ டூ இசட் மேட்ரிமோனி மூலமா பொண்ணும் மாப்பிள்ளையும் பிக்ஸ் ஆகி, கல்யாணம் நடக்க இருந்துச்சு. ஆனா அந்தக் கல்யாண பொண்ணு சரியா கல்யாணம் நடக்குறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி இறந்துட்டா. சஸ்பீஷியஸா யாரும் உள்ள நுழையல. மார்னிங்ல இருந்து அந்த பொண்ணு எதுவும் சாப்பிடவும் இல்ல. தென் எப்படி விஷம் ஏறி இறந்தான்றது ஸ்டில் குவெஸ்ட்டின் மார்க்!” என்றான் நெற்றியைத் தேய்த்துக்கொண்டு.

“மாப்பிள்ளைக்காரன் என்ன ஆனான் சார்?” நந்தேஷ் மிரட்சியுடன் கேட்க,

“இட்ஸ் வியர்ட். அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான். ஆனா லாஸ்ட்டா நடந்த கொலை மாதிரி தான் இந்த பொண்ணோட கொலையும் சிமிலரா நடந்து இருக்கு. மாப்பிள்ளையும் செத்துருக்கணும். ஏன் சாகல. என்ன கனெக்ஷன்…? இது எல்லாமே ஒரே ஆள் செஞ்சதா? இல்ல வேற வேற ஆள் செஞ்சதா… எதுக்கு இந்த மாதிரி கொலைகள் தொடர்ந்து நடக்குது அதுவும் மேட்ரிமோனியை டார்கட் பண்ணி” என்று வரிசையாக அவனை அவனே கேள்வி கேட்பது போல பேசிக்கொள்ள, விஸ்வயுகாவிற்கு தலையே வலித்தது.

“அப்போ அந்த மிஸ்டர் எக்ஸ்க்கு வி. யூ மேட்ரிமோனி மட்டும் டார்கெட் இல்லை. ஒட்டு மொத்தமா எல்லா மேட்ரிமோனியுமே டார்கெட் தான் அப்படித்தான?” எனக் கேட்க,

மைத்ரேயன் “இருக்கலாம் விஸ்வூ. மேட்ரிமோனினால பாதிக்கப்பட்டுருப்பானோ?” என கேள்வியெழுப்பினான்.

யுக்தா, “மே பி. நடக்குற கொலை எல்லாம் பார்க்கும் போது அந்த கில்லர்க்கும் மேட்ரிமோனிக்கும் ஏதோ க்ளாஷ் இருக்கும்னு தோணுது. சென்னைல ரன் ஆகிட்டு இருக்குற மேட்ரிமோனி ஒன்னு விடாம விசாரிக்க சொல்லிருக்கேன். யாராவது பாதிக்கப்பட்டு இருக்காங்களான்னும் விசாரணை நடந்துட்டு இருக்கு” என்றான் யோசனையாக.

ஷைலேந்தரியோ, “ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல. மேட்ரிமோனிக்கும் பாதிக்கப்படுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? கல்யாணம் பண்ணனும்னா, காசைக் கட்டி மெம்பர் ஆகி ப்ரொஃபைல் அப்டேட் பண்ணப் போறாங்க. வேணாம்னா சப்ஸ்க்ரிப்ஷனை கேன்சல் பண்ணப் போறாங்க. அப்படித்தான மோஸ்ட்லி எல்லா மேட்ரிமோனியும் பண்றாங்க. இதுல பாதிக்கப்பட என்ன இருக்கு?” எனக் கேட்டாள் குழப்பமாக.

மைத்ரேயனோ “ஒருவேளை ப்ரொபைல் அப்டேட் பண்ணியும் சரியான பொண்ணு கிடைக்காம விரக்தில சீரியல் கில்லரான 90s கிட்டா இருப்பானோ?” என யோசனையுடன் கேட்க,

“அது ஓகே மைதா… அதுக்கு மேட்ரிமோனி என்ன பாவம் பண்ணுச்சு? தட்ஸ் மை குவெஸ்ட்டீன்” என்றதில் அனைவரின் முகத்திலும் குழப்பம் மிதந்தது. அந்நேரம் யுக்தாவிற்கு ஒரு போன் வர அதனைப் பேசி விட்டு போனை வைத்தவனின் விழிகளில் தீவிரம் அதிகமானது.

“என்ன ஆச்சு யுக்தா? எனிதிங் சீரியஸ்?” என விஸ்வா தன்னிச்சையாய் அவன் கையைப் பற்றி வினவ, அவனும் இறுக்கமாய் பிடித்தபடி, ஒரு கையால் தாடையைத் தடவினான்.

“கடைசியா நடந்த ரெண்டு ஜோடி கொலையிலயும் பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரையும் ஒரே ஆள் கொலை பண்ணி இருப்பான்ற சந்தேகத்துல விசாரிச்சுட்டு இருந்தேன். பட் நொவ், பொண்ணுங்களை கொன்னதும் மாப்பிள்ளைங்களை கொன்னதும் வேற வேற ஆளா இருக்கும்னு ஃபாரென்சிக் ரிப்போர்ட் சொல்லுது. வியர்ட்!” என்றதில் அவளிடம் திகைப்பு பரவ, நந்தேஷின் முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை மீறிய சிறிய பயத்தை மெல்லமாக மறைத்துக்கொண்டான்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
125
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுக்தா விஸ்யூ கியூட்