Loading

தலையில் ஏற்பட்ட காயம் சற்று பலமாக இருந்தது பிரஷாந்திற்கு.

அடுத்த இரு நாட்கள் சுயநினைவு திரும்பாமல் போக, மைதிலிக்கு உயிரையே பிழிந்து எடுப்பது போல அத்தனை வலித்தது.

ஒரு நொடி கூட, அவளது விழிநீர் வற்றவில்லை.

கவனமாக மகிழினியை வீட்டிலேயே வைத்துக்கொண்ட பெரியவர்களும் வேண்டுதலிலேயே பொழுதைக் கழிக்க, இளையவர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே இருந்து விட்டனர்.

அமருக்கும் மிருணாளினிக்கும், மைதிலியைப் பார்ப்பதா? அல்லது நண்பர்களை எண்ணி வாடும் தேவாவையும் தயாவையும் சமன் செய்வதா? அல்லது தங்கையின் வாழ்க்கையை எண்ணித் துன்புறும் மகேஷிற்கு ஆறுதல் உரைப்பதா என்றே தெரியவில்லை. முதலில் அவர்களும் திடத்தை ஏற்றிக்கொள்ள வேண்டுமே!

திவ்யஸ்ரீ தான், மகேஷை கவனித்துக் கொள்ள, தேவஸ்மிதா சேரில் அமர்ந்து கையை தலைக்கு கொடுத்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள்.

“மிது” என அமர் மிருதுவாக அழைக்க, சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்த தேவஸ்மிதா, “பயமா இருக்கு மகரா. இவன் ஏன் கண்ணு முழிக்காம சோதிக்கிறான். ஏன் தான் இப்படி ஒன்னு மாத்தி ஒன்னு வந்துக்கிட்டே இருக்கோ தெரியல. சின்ன வயசுல இருந்து ஊர் பிரச்சனை எங்களைத் துரத்தும். அப்போ கூட வீட்டளவுல கவனமா இருந்துப்போம். ஆனா, உங்களை எல்லாம் பார்த்தப்பறம், உங்களுக்குலாம் பிரச்சனை வரும் போது தான் ரொம்ப வலிக்குது மகரா” எனத் தளர்ந்தவள் அவன் மீது சாய்ந்து அழ,

“மிது ப்ளீஸ். யூ ஆர் கேரியிங் நொவ். அவனுக்கு ஒன்னும் ஆகாது வந்துடுவான் மிது. பிலீவ் மீ!” என அவள் தலை கோதினான்.

தயானந்தனுக்கோ குற்ற உணர்வு தாளவில்லை. எங்கோ வெறித்தபடி கண்ணீர் நிற்காமல் வழிந்தவாறு இருக்க, மிருணாளினி அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

“சரி ஆகிடும் தயா!” என்றவளுக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“தப்பு என்மேல தான் நல்லி. அவன் பிரச்சனை வேணாம்னு வீட்டை எழுதிக் குடுத்துட்டேன்னு சொன்னதும், அவனைக் கண்டிச்சு நம்ம ஏற்கனவே போட்ட பிளானையே எக்சிகியூட் பண்ணிருக்கணும். எமோஷனல் ஆகி, அப்போதைக்கு பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? ரொம்ப கில்ட்டியா இருக்கு மிரு” என்றதும் அவளுக்கும் கேவல் பிறந்தது.

“எல்லாம் என்னால தான் தயா. இன்னும் என் தலைல என்ன தான் எழுதி இருக்குன்னு தெரியல. பேசாம அகரன் செத்தப்பவே நானும் செத்துருக்கணும்” என்று தேம்ப, அவள் வாயிலேயே அடித்து விட்டான்.

“அறிவு கெட்டத்தனமா பேசாத. என்ன பேச்சு இது மிரு. வாழுறதுக்கு தான இவ்ளோ போராடுறோம். செத்துட்டா நீ நிம்மதியா இருப்ப. ஆனா இருக்குறவங்க நிலைமையை யோசிச்சுப் பார்த்தியா? ஒவ்வொரு நாளும் உன் அண்ணனும் உன்னைப் பெத்தவங்களும் செத்து செத்து வாழ்ந்துருப்பாங்க. நான்? நீ என்னை ஒரு செகண்ட் கூட காதலிச்சு இருக்க மாட்டியான்ற ஏக்கத்துலயே தினம் தினம் காதல் வலியை அனுபவிச்சு இருப்பேன். பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேசு.”

அவன் கோபத்தைக் கண்டு முகம் சுண்டியது அவளுக்கு.

“சாரி…” என முணுமுணுக்க, “நீ ஆறுதல் கூட சொல்ல வேணாம். மூடிட்டு இருந்தாலே போதும்” என்று எரிந்து விழுந்தவனைக் கண்டு உதட்டைப் பிதுக்கிட, அதற்கு மேல் அவளைக் காயப்படுத்த மனமற்று இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.

அமர் தேவாவை சமன்செய்து தோற்று, பின் மைதிலியிடம் சென்றான்.

அழுது வீங்கிய முகம், அவனைக் கலங்கச் செய்ய, “மைதிலி…” என அழைத்ததில்,

அவனைப் பாராமலேயே, “எனக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது போல அமர். ஆசைப்பட்டது ஒன்னு கூட கிடைக்காத வலி இருக்குல்ல, அது ரொம்ப கொடுமையா இருக்கும். எல்லாமே முடிஞ்சுது, இனி புதுசா ஆசைப்படலாம்னு நினைக்கும் போது அப்பவும் நீ ஆசைப்பட தகுதியே இல்லன்னு இந்த வாழ்க்கை என் மண்டைல உறைக்கிற மாதிரி சொல்லிட்டுப் போயிடுது. இப்ப என் ஆசையெல்லாம் அவன் கூட வாழணும்னு கூட இல்ல. திரும்ப வந்தாலே போதும்” என்னும் போதே முகத்தை மூடி வாய் விட்டு கதறினாள்.

அவளிடம் என்ன சொல்லி ஆறுதல் உரைப்பது. அவள் கண்ணீரைக் கண்டு அவனும் கண்ணீர் விட்டது தான் மிச்சம்!

இரு நாட்களுக்குப் பிறகு தான், அவன் உடல்நிலையில் நல்லதொரு மாற்றம் வந்திருப்பதாக மருத்துவர் கூற, அப்போது தான் அனைவரின் அழுகையும் மட்டுப்பட்டது.

மேலும், தலையில் அடிபட்டு இருப்பதால் அம்னீசியா வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூற, தயாவும் தேவாவும் சலித்தனர்.

தேவ அமரைக் கை காட்டி, “இதோ இவன் தலைல அவ்ளோ பெரிய அடிபட்டும், ஒரு எழவும் மறக்கல. அந்த போலீஸ் அடிச்சு தான் அவனுக்கு மறக்குதாக்கும்…” என நொடித்துக் கொள்ள,

“அடிப்பாவி” எனப் பார்த்தான் அமர்.

“பின்ன என்ன, சரி அப்படியே நீ மறந்துருந்தா நான் பொய் சொன்னதையும் மறந்துடுவ புதுசா ப்ரொபோஸ் பண்ணலாம்னு பார்த்தேன்” என்று இளித்து வைத்து அவனிடம் முறைப்பையும் பரிசாக வாங்கி கொண்டான்.

மைதிலிக்கு தான் பயமாக இருந்தது. அவளது விதியைப் பற்றி தான் அவளுக்கு நன்றாக தெரியுமே. ஒருவேளை அவன் மறந்திருந்தால்? என்ற எண்ணமே அவளைத் துடிக்க வைத்தது.

மருந்தின் வீரியத்தில் உறக்கத்தில் இருந்த பிரஷாந்த் கண் விழித்தாலும் சில நொடிகளில் மீண்டும் மயக்க நிலைக்கு சென்று விடுவதில், மேலும் மூன்று நாட்கள் ஆனது மருந்தின் வீரியம் குறைந்து அவன் முழு நினைவிற்கு வர.

இதற்கிடையில், மைதிலி மாணிக்கத்தின் மீதும் நாஞ்சிலின் மீதும் வழக்கு தொடுக்க, மாணிக்கத்தின் போன் ரெக்கார்டை எல்லாம் பறித்து, எதிர்க்கட்சி வக்கீல் ஜானக் அவனுடன் பேசியது அனைத்தையும் கடை பரப்பினாள்.

அகரன் இறப்பிற்கு சரியான காரணம் ரேஸ் விபத்து தான்.

ஆனால், அவன் போதை மருந்து எடுத்து இறந்து போனதாக பொய்யான சாட்சியும் தயார் செய்து, அந்த போதை மருந்தை அவனுக்கு வழங்கியதே அவனது பெற்றோர் தான் என திரித்து அழகாய் போலியான ஆதாரங்களை தயார் செய்தாள்.

அதற்கு முழு மூச்சாய் உதவியது மோனி ஜாய் தான். அவரும் இரு நாட்களுக்கு முன்பே கிளம்பி சென்னைக்கு வந்து விட்டார்.

அது மட்டுமின்றி, மிருணாளினியை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், பிரஷாந்தின் கணக்கு வழக்குகளைக் காட்டி, அவனது பணத்தை குடும்பமே ஏமாற்றிப் பிடுங்கி விட்டதாகவும் திட்டமிட்டு ஆதாரங்களை தயார் செய்து வைத்தாள்.

மிருணாளினிக்கு சேர வேண்டிய மானநஷ்ட பணத்தையும், பிரஷாந்த் அவனது சொந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்ததோடு மட்டுமல்லாமல், போலியான வழக்கு தொடுத்து அவனை உயிர் போகும் அளவு அடிக்க வைக்க பெரும் பங்கு வகித்ததில் கொலை முயற்சி பழியையும் போட்டு பிழிந்து எடுத்தாள்.

அவர்கள் பிரஷாந்தின் மீது தொடுத்த ஒற்றைப் போலி வழக்கை முறியடிக்க, அவர்கள் மீது பல போலி வழக்கைத் தொடுத்து, அதற்கு சரியான ஆதாரத்தையும் சமர்ப்பித்தாள்.

பிரஷாந்த் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டானென்றதும், படபடவென அடுத்த மூன்று நாட்களுக்குள் அனைத்தும் தயார் செய்து, கோர்ட்டிலும் சமர்ப்பித்து விட்டாள்.

பிரஷாந்தின் பெற்றோரும், ஜானக்கும் ஆடிப்போகினர்.

அது மட்டுமின்றி, சுகுமாரும் அகரனும் இணைந்து நடத்திய ரியல் எஸ்டேட் மோசடியில் பெரும் பங்கு ஜானக்கிற்கும் இருந்தது. அதனாலேயே சுகுமாரை வெளியில் எடுக்க அவர் அத்தனை ஆர்வம் காட்டியது. அதையும் நிரூபித்து வக்கீலை ஆட்டம் காணச் செய்தாள்.

வெள்ளிக்கிழமை இரவு தான், அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிட்ட நிம்மதியுடன் பிரஷாந்தின் அருகில் அமர்ந்தாள்.

இன்னும் அடுத்த வாரம் நிகழவிருக்கும் ஹியரிங்கில் அவர்களை கூண்டோடு தூக்கி விடலாம் என்ற நம்பிக்கை மிளிர, இன்னும் கூட கண்ணைத் திறந்து தன்னைப் பாராதவனை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவனது ஒரு கை, கழுத்தோடு முழுக்க கட்டிடப்பட்டு இருந்தது. ஒரு காலின் முட்டியில் இருந்து பாதம் வரை கட்டுப் போட பட்டிருக்க, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த ஒரு கையை மெதுவாகப் பிடித்தாள்.

“ரஷு” குரல் எழும்பாமல் அவள் அழைக்க, லேசாய் புருவம் சுருக்கினானே தவிர எழவில்லை.

“ஸ்ஸ்… ஓகே ஓகே தூங்கு” என்று நெறித்த புருவத்தை மெல்ல நீவி விட்டாள்.

அந்நேரம் மகிழினியும் அடம்பிடித்து மருத்துவமனைக்கு வந்தாள். மோனி ஜாய் தான் அவளை அழைத்து வந்தது.

பிரஷாந்தைக் கண்டு அழும் நிலைக்குச் சென்றாள் மகிழினி.

“அம்மா அப்பா எப்போ என்னைப் பார்ப்பாங்க. என் சர்ப்ரைஸை பார்க்க எப்போ வீட்டுக்கு வருவாங்க” என்று ஏக்கத்துடன் கேட்க, “அப்பா நாளைக்கு காலைல உன்னை பார்ப்பாங்க மகி. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் சர்ப்ரைஸ் பண்ணலாம்” என மகளின் குடுமியை கோதி சமாதானம் செய்தாள்.

கல்கத்தாவிற்கு வரும் போது மகிழினி பிரஷாந்தை அங்கிள் என்று அழைத்ததும் இன்று அப்பாவென அழைப்பதுமே அவர்களுக்குள் ஏற்பட்ட இணக்கமும் அன்னியோன்யமும் புரிந்து போக, அவருக்கு கோபம் ஏதும் வரவில்லை.

ரகுவைத் தந்தையென அறிமுகப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் எழவில்லை.

அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் உருகும் நிகழ்வுகளைத் தான் பார்க்கிறாரே! அந்த அன்பை குறைத்து மதிப்பிட மனது வரவில்லை.

நிம்மதி பெருமூச்சு எழ வெளியில் சென்று விட்டார்.

இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் பிரஷாந்தும் மெதுவாக கண் விழித்து விட்டு பின் முடியாமல் கண்ணை மூடிக்கொள்ள,

“தூங்கு ரஷு. உனக்கு மெடிசின் பவர்னால முழிக்க முடியல. நாங்க உன் பக்கத்துலயே இருக்கோம். தூங்கு” என்று மீண்டும் அவன் புருவத்தை நீவி விட்டாள் மைதிலி.

கண் விழித்து நீ யாரென கேட்டு விடுவானோ என்ற பயம் வேறு அவளுக்கு!

மகிழினி தான், “அம்மா அப்பாவுக்கு வலிக்கும்ல. அதான் தூங்க முடியலயாம். நீ என்னைத் தூங்க வைக்க பாட்டுப் பாடுற மாதிரி அப்பாவுக்கும் பாடி தூங்க வைம்மா…” என்றாள் அக்கறையாக.

‘சும்மா பாடு மைலி. கழுதை எல்லாம் வராது’ என ஒருமுறை பிரஷாந்த் கேலி செய்ததும் தான் முறைத்ததும் நினைவடுக்குகளில் வந்து போக, அவளை மீறி கசந்த முறுவல் பூத்தது.

“சரி… நீயும் படுத்துக்கோ” என்று மகளை நாற்காலியில் அமர்ந்தபடியே மடியில் படுக்க வைத்துக்கொண்டவளின் விழிகள் அவன் மீதே நிலைத்து நின்றது.

நெடுங்காலமாய்
புழங்காமலே எனக்குள்ளே
நேசம் கிடக்கின்றதே…
உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

அலை பாய்ந்த நெஞ்சுக்குள்
அமைதியை தந்தாயே
நான் தேடிக் கண்ட திரவியமே
எனை உனக்காய் வார்த்தேனே
என் ஜீவன் முழுதும் வாரித்தந்து
உன் உயிரை காப்பேனே…

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா நான்
கண்கள் மூட மாட்டேனடா
செல்லம்மா நான் கண்கள் மூட
மாட்டேனடா செல்லம்மா

பாட பாட தேம்பலும் அதிகமாக இதழ்களை அழுந்தக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டவள், மகளையும் கணவனையும் ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்துச் சென்றாள்.

மறுநாள் காலையிலேயே பிரஷாந்த் கண் விழித்து விட்டான். இளையவர்கள் அனைவரும் அவன் முன் நிற்க, தயானந்தன் “மச்சி என்னை தெரியுதா?” என்றான் கையை ஆட்டி.

தேவாவோ “மலைமாடு மாதிரி முன்னாடி நிக்கிறியே அப்பறம் எப்படிடா உன்னைத் தெரியாம போகும். அவன் என்ன கண் ஆபரேஷன் பண்ணிட்டா வந்துருக்கான். கண்ணு தெரியாம போக” என்று தலையில் அடித்தவள், “என்னை ஞாபகம் இருக்காடா. மீ யுவர் தேவா. யூ மை தளபதி” என்று அவனுக்கு நினைவூட்டினாள்.

‘ஆரம்பிச்சுடுங்க’ என்று மற்றவர்கள் கடுப்பாய் முறைக்க, அமர் தேவாவை அடிக்க இயலாத கடுப்பில் தயாவின் தலையை தட்டி, “பெரிய தளபதி ரஜினி அரவிந்த் சாமின்னு நினைப்பா. மூடுங்க” என்று அதட்டியதில் இருவரும் கப்சிப்.

பிரஷாந்தோ புருவம் சுருக்கி அனைவரையும் பார்த்து விட்டு, கண்ணில் தவிப்புடன் நின்ற மைதிலியையும் பார்த்தான்.

“மைதிலி” என்று அழைத்ததுமே அவளுக்கு நெஞ்சம் நடுங்கியது.

“நீங்க ஏன் என் துரோகிங்க கூட நிக்கிறீங்க. நம்ம கேஸ் விஷயம் என்ன ஆச்சு? என் அண்ணன் சாவுக்கு நியாயம் கிடைக்கும் தான. ஆமா எனக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டதில், மைதிலிக்கு சர்வமும் ஆட்டம் கண்டது.

அனைவரும் அவனை ‘பே’ வென பார்க்க, மகேஷ் திகைத்தான்.

திவ்யஸ்ரீ “அய்யயோ அடேய் இவன் மறுபடியும் பல மாசத்துக்கு முன்னாடி போய்ட்டான்டா. இனி இவன் பழி வாங்கி, திரும்ப புரிய வச்சு, அட போங்கடா!” என்று சலித்து அமர்ந்தாள்.

மிருணாளினியோ “அண்ணா” என அழைக்க கூட பயந்து நிற்க, அமர் “உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையாடா” என்றான் குழப்பமாக.

“வாடா போடான்னு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என அவன் முதலில் இருந்து ஆரம்பிக்க, தேவாவோ “என்ன கருமாந்திரம் இது?” என்று கன்னத்தில் கை வைத்து நின்றதில், தயா “மீண்டும் மீண்டுமா” என தலையைச் சொறிந்தான்.

“பிரஷாந்து நம்ம பிரச்சனை எல்லாம் முடிஞ்சு போச்சு. நீ இப்ப எங்க எதிரி இல்ல பிரெண்டு தான். இதோ இவள நீ கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட. பிழிஞ்சு பிழுஞ்சு காதலிச்சு இவள் கிட்ட செருப்படி கூட வாங்குன. எதுவும் ஞாபகம் இல்ல?” எனக் கேட்க,

குழப்பமாக மைதிலியைப் பார்த்த பிரஷாந்த் “வாட் மீ?” என அதிர்ச்சியாகக் கேட்டான்.

அவன் ‘மைலி’ என அழைக்காத போதே அனைத்தும் மறந்து விட்டான் என்று உறைத்து உறைந்து போனாள் மைதிலி.

“காதலிச்சேனா? அதுவும் இவளை? அப்படி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே!” என யோசித்த பிரஷாந்திடம், “மறந்துட்டீல விட்டுடு…” என்று இறுகளுடன் கூறிய மைதிலி அங்கிருக்கவே மனம் வலித்து நகரப் போனாள்.

அடுத்த கணமே “மைலி…” எனக் குறும்புடன் வந்த தன்னவனின் குரல் கேட்டு சரட்டென திரும்பியவள் பிரஷாந்த் கேலிப்புன்னகையுடன் அவளைப் பார்த்தப்பதை கண்ட பிறகே இத்தனை நேரம் நடித்திருக்கிறான் எனப் புரிந்து “டேய் தார்னி டெவில்” என்று பல்லைக்கடித்து அவன் நெஞ்சில் வலிக்காமல் குத்திட, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையால் அவளை மெல்லப் பிடித்து இழுத்ததில் அவன் நெஞ்சில் முகம் பதித்தாள் ரஷுவின் மைலி.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
96
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்