தெம்மாங்கு 21
பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டவன், சூரியனை நிமிர்ந்து பார்த்தான். கொளுத்தும் வெப்பத்திற்குச் சொந்தக்காரன், பனித்துளியாய் உதயமாகிக் கொண்டிருந்தான். நேற்று வரை உச்சி வெயிலாக இருந்தவன், இன்று உதிக்கும் சூரியனாக மாறிவிட்டான்.
அந்த மாற்றம் உறுதியைக் கொடுத்து விடியலைத் துவக்கிவிட்டது. எழுந்தவன், தொடர்ந்து நான்கு ஐந்து குடங்களைத் தலையில் ஊற்றிக் குளித்து முடித்தான். ஏன் என்று தெரியவில்லை, அவனுக்கு இப்படி அழுத்தமான நீர் தலையில் இருந்து கொட்டும் பொழுது மனம் குளிர்வது போல் இருக்கிறது. குளித்து முடித்துக் கூரை வீட்டிற்குள் நுழைந்தவன், கல்வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே சென்றான்.
உறக்கத்தில் இருந்தவளைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், ஆடைகளை மாற்றிக்கொண்டு வேலைகளைக் கவனித்தான். இரண்டு நாள்களில் சமையல் என்பது, யாருக்கும் அத்துப்படி அல்ல. இவனை விட்டால் செய்யவும் அங்கு ஆளில்லை. இனி மாணிக்கத்தின் வேலை, தன்னுடைய வேலை என்ற எண்ணத்தை உள்ளுக்குள் ஆழமாக விதைத்துக் கொண்டவன் பால் காய்ச்சினான்.
அதற்குள் குழாயிலிருந்து நீர் கொட்ட ஆரம்பித்தது. அதைப் பிடிப்பதற்காகப் பெரிய வாளி ஒன்றை வைத்துவிட்டு உள்ளே வருவதற்குள், காய்ச்சிய பால் அனைத்தும் கொட்டி விட்டது. கொதிக்கும் பாலைக் கட்டுப்படுத்தும் சூட்சுமம் குமரனுக்குத் தெரியவில்லை. முதலில் இதைப் பழக வேண்டும் என்று பெருமூச்சு விட்டவன், அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பால் காய்ச்சினான்.
அதற்குள் வாளி நிரம்பிவிட்டது. அதை மாற்றி விட்டு வருவதும், காய்ச்சிய பாலை ஊற்றுவதும், என்று ஒரு மணி நேரம் சென்று விட்டது. ஒரு வழியாகப் பாலைக் காய்ச்சி முடித்தவன், தேனிசைக்கு எடுத்துச் சென்றான். அவன் வருவதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நல்ல உறக்கத்தில் இருந்தாள். எழுப்ப வந்தவன் அவள் நிலை கண்டு அப்படியே திரும்பி விட்டான்.
கல் வீட்டை மட்டும் விட்டுவிட்டு, வெளித் திண்ணை, கூரை வீடு என்று அனைத்தையும் கூட்ட ஆரம்பித்தான். தண்ணீர் முழுவதையும் பிடித்து வைத்தவன், தன் நண்பன் புகைப்படத்திற்குப் பூ வைத்து விளக்கேற்றினான். இப்படியான தருணத்தைப் பார்க்க வைத்த கடவுள் மீது வெறுப்பு வந்தது குமரவேலனுக்கு. நண்பனைத் தொட்டு வருடியவன்,
“நேத்து உன் மனைவிய அடிச்சதுக்காக மன்னிச்சிடு அன்பே.” என்றான் மனதார.
மன்னிப்புக் கேட்டாலும், நெருடலாக இருந்தது குமரவேலனுக்கு. தேனிசையிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன், காலை உணவைத் தயாரிக்கச் சென்றான். வெளியில் வரும் பொழுது அவன் கண்ணில், அன்புக்கரசன் அணிந்திருக்கும் செருப்பு விழுந்தது. அலங்கோலமாக இருந்த அதை எடுத்துத் துடைத்து வைத்தவன், மெல்லச் சிரித்தான், அணிந்திருக்கும் அவன் கால்களை நினைத்து.
இட்லி அவித்துச் சாம்பார் வைப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டான். வேர்த்துக் கொட்டியது உடம்பு. இதுபோன்ற அனலின் முன்பு இருப்பது இதுவே முதல்முறை. வேர்வைத் துளிகளைத் துடைக்கத் தோன்றாது, கூட்டி வைத்த சாம்பாரை ருசி பார்க்க, நாக்கு சுரணை அற்றுப் போனது அதன் சுவையில். அஷ்ட கோணலான தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்காமலே உணர்ந்து கொண்டவன், ‘இதை எப்படிக் கர்ப்பிணிப் பெண்ணிற்குக் கொடுப்பது?’ என்று யோசித்தான்.
வைத்த சாம்பாரை வீணடிக்காமல், வேறு என்ன வைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. அதை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, காரம் என்று தோன்றியதெல்லாம் சேர்த்து ருசி பார்த்தவனுக்கு, ஓரளவிற்குப் பரவாயில்லை என்று தோன்றியது. தப்பித்த நிம்மதியில் காலை உணவை ஒரு தட்டில் வைத்தவன், தேனிசையிடம் எடுத்துச் செல்ல வெளியில் வர, மகனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார் பேச்சியப்பன்.
அவர் உள்ளம், எரிந்து கொண்டிருந்த நெருப்பை விட உச்ச அளவிற்குக் கொதித்தது. ஒரே வாரிசான தன் பிள்ளை அடுப்பங்கரையில், அதுவும் எந்த ஒட்டும் உறவும் இல்லாத ஒருவனுக்காகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க மனம் கசந்தது. எப்படி எல்லாம் சொகுசாக வளர்த்த பிள்ளை? இப்படி வேலைக்காரனைப் போல் இருப்பதைக் காணச் சகிக்க முடியவில்லை அவரால்.
நேற்று இரவு நடந்த கலவரங்கள், மெல்லக் குமரவேலன் வீட்டிற்கும் சென்றது. மகனை நினைத்துக் காலையிலேயே அழ ஆரம்பித்துவிட்டார் இந்திரா. வெற்றிலை, பாக்குப் போட்டுக் கறை படிந்திருந்த பற்களைக் காட்டி புலம்பிக் கொண்டிருந்தார் முத்துமாரி. காதில் கேட்ட செய்தியில் இருப்புக் கொள்ளவில்லை பேச்சியப்பனுக்கு. என்னை இருப்பினும், அவருடைய ரத்தம் அல்லவா குமரவேலன்!
தன்மகன் படும் துயரத்தையும், அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர் என்ன செய்தாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். வந்தவரின் கண்கள், இருண்டு போனால் என்ன என்று தோன்றியது. இதைவிடப் பெரிய துயரம் தனக்குக் கிடைக்காது என்று எண்ணியவர்,
“என்ன பொழப்புடா இது உனக்கு? எதுக்கு உனக்கு இந்த வேலை? உனக்குன்னு வேலை செய்ய அம்புட்டுப் பேர் இருக்கானுங்க. அப்படி ஒரு ராஜியத்தை விட்டுட்டு, இங்க வந்து பிச்சைக்காரன் மாதிரி இருக்க…” என்றவரின் வரவைச் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாதவன் முகத்தைத் திருப்பினான்.
“உன்கிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன். எதுக்காக இங்க வந்து உட்கார்ந்து இருக்க? என்னதான்டா உன் மனசுல நினைச்சுட்டு இருக்க. நேத்து ராத்திரி நடந்த கூத்த அவனவன் வீட்டு வாசல்ல நின்னு சொல்லிட்டுப் போறான். இதையெல்லாம் கேட்கவா உன்னைப் பெத்து வளர்த்தேன்?”
கைக்குள் இருந்த தட்டை உள்ளே கொண்டு வந்து வைத்தவன், திரும்பாமல் அப்படியே இருக்க, “பொய் சொல்லித் தாலி கட்டி என்னத்தைச் சாதிச்ச? நண்பன்னு சொல்லி இன்னும் எத்தனைப் பாவத்தை எனக்குப் பண்ணப் போற? அந்தப் பொண்ணு தான் உன் மூஞ்சில காரித் துப்பாத குறையா வெளிய போன்னு சொல்லுதுல்ல. அப்புறம் எதுக்காகடா மானங்கெட்டு உட்கார்ந்து இருக்க…” என்றவர் மகனின் கையை இறுக்கமாகப் பிடித்து,
“இப்பவாது பெத்தவன் சொல்றதைக் காது கொடுத்துக் கேளு. எவனோ பிள்ளையைக் கொடுத்துட்டுப் போவான், நீ அப்பனாவியா? இந்த அசிங்கத்தைத் தூக்கிப் போட்டுட்டு வாடா என்கூட.” என்றார்.
அவர் கையை உதறிவிட்ட குமரவேலன் வெளியில் வர, சத்தம் கேட்டுக் கண் திறக்க ஆரம்பித்தாள் தேனிசை தேவி.
மகன் செயலில் கடுப்பானவர், “இவன் கூடச் சேராதன்னு எத்தனைத் தடவை சொல்லி இருப்பேன். கடைசில எந்த மாதிரியான வாழ்க்கையைக் கொடுத்துட்டுப் போய் இருக்கான்னு பாரு. இப்பவாது புரிஞ்சுக்கோ, தகுதி தராதரம் பார்த்துப் பழகணும்னு.” என்ற தந்தையின் வார்த்தையில் கோபம் முளைத்தது குமரவேலன் முகத்தில்.
அதற்குச் சாட்சியாகப் புருவங்கள் இரண்டும் நெட்டி நின்றது. பற்கள் நரநரக்க ஆரம்பித்தது. இதயம் தன் துடிப்பை இரு மடங்காக்கியது. மெல்ல இமைகளைச் சிமிட்டியவள், முழுவதுமாகத் திறந்தாள் பேச்சியப்பனின் குரல் என்று அறிந்து.
“தகுதியா?” என்றவன், நேருக்கு நேர் நின்று தந்தை விழியைத் திடமாகச் சந்தித்து,
“ஓஹோ! அதான் தகுதியா இருக்க, கருப்பன விட்டு என்னைக் கொல்ல ஆள் அனுப்புனீங்களா?” கேட்டான்.
ஒன்றும் புரியாமல் அவர் முகம் சுளித்தார்.
ஏளனமாகச் சிரித்தவன், “தகுதி தராதரம் இல்லாத இவன் தான், உங்க புள்ளையை, அதாவது உங்க வாரிசை விட்டு வச்சிட்டுப் போயிருக்கான்.” என்றான்.
எழுந்து வந்த தேனிசை தேவி கல்வீட்டின் வாசல் முன்பு நிற்க, “இந்த மாதிரி ஆளு முன்னாடி எல்லாம் நிக்கிறது நல்லது இல்லம்மா. உள்ள போய் உட்காரு.” என்றவன்,
“கௌரவம், தகுதி, வசதின்னு நீங்க பார்த்துப் பழகுன உங்க நண்பரோட பையன், அன்புவக் கொலை பண்ண ஆள் அனுப்புனதா தான இப்ப வரை நம்பிட்டு இருக்கீங்க. அவன் ஆள் அனுப்பிக் கொலை பண்ணச் சொன்னது என்னை. அன்னைக்கு வந்தவனுங்க என்னைப் பிடிச்சு வச்சுக்கிட்டு, என் கழுத்தை அறுக்க ரெடியா இருந்தானுங்க. அறுக்கப் போறதுக்கு முன்னாடி என்ன தெரியுமா சொன்னாங்க…” என்றவன் தந்தையின் முகத்தில் தோன்றும் அதிர்ச்சியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான்.
இன்னும் தன் மனதை மகிழ்விக்க எண்ணியவன், “என் கழுத்தை அறுத்துப் போட்டுட்டு வந்தா, பேசுன காசைப் பத்து மடங்காய் தரேன்னு சொன்னானாம்.” என்றிட, சர்வமும் அடங்கியது பேச்சியப்பனுக்கு.
“யார் கூடச் சேரக் கூடாதுன்னு சொன்னீங்களோ, எவனுக்குத் தகுதி இல்லன்னு ஒதுக்கி வச்சீங்களோ, எவன் கூடச் சேர்ந்தா உங்க கௌரவம் போயிடும்னு துடிச்சீங்களோ, அவன் முன்னாடி வந்து நின்னு உங்க ஒத்த வாரிசைக் காப்பாத்துனான். என் அன்புவோட நட்புக்கு முன்னாடி, புழுவா இருக்கக் கூடத் தகுதி இல்ல உங்களுக்கு. உண்மையான நட்புக்கும், துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம இத்தனை நாள் போட்ட ஆட்டத்துக்கு, இந்தத் தண்டனையே உங்களுக்குப் போதும்னு நினைக்கிறேன்.
இன்னும் உங்க மனசைக் குத்தி நோகடிக்க எங்கிட்ட நிறைய இருக்கு. அத்தனையும் சொன்னன்னா, பாரம் தாங்காம இதே இடத்துல செத்துப் போயிடுவீங்க. இத்தோட என்னை விட்டு விலகி இருக்குறது தான் உங்களுக்கும், உங்க கௌரவத்துக்கும் நல்லது.” என்றவன் விழிகளைக் கூர்மையாக்கி,
“உங்க கௌரவத்தைக் காப்பாத்தப் பொறந்த குமரவேலன், செத்து ரொம்ப நாள் ஆகுது. இங்க நிக்கிறது அன்புக்கரசனோட விசுவாசி. இனி இதுதான் என் வீடு. அவனோட பிள்ளை தான் என் உறவு. என்னை நெருங்க நினைக்காதீங்க… எந்திரிச்சுத் திருப்பி அடிக்க ஆரம்பிச்சேன், ஒருத்தனும் இருக்க மாட்டிங்க.” என்று விட்டு உள்ளே செல்ல, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேனிசை தேவி.
அசையாது இரும்புத் தூண் போல் நின்றிருந்தவருக்கு, ஒன்றும் விளங்கவில்லை. பெற்ற மகன் சொல்லிவிட்டுச் சென்றதைப் புரிந்து கொள்ளவே பல நொடிகள் தேவைப்பட்டது. உள்ளம், கேட்டதை உணர்த்த ஆரம்பித்ததும் வெதும்பித் துடித்தவர், உண்மை எதுவென்று அறியாது பித்துப் பிடித்தது போல் அங்கிருந்து கிளம்பினார்.
மகன் சொல்வதைப் பொய் என்றும் ஏற்க முடியவில்லை. ஒன்றாகப் பழகிய நண்பனைச் சந்தேகப்படவும் முடியவில்லை. சிறுவயதிலிருந்தே கௌரவ நண்பர்களின் நட்பு தொடர்வதால், அதை எளிதில் தனக்கு எதிராக வைத்துப் பார்க்க முடியவில்லை பேச்சியப்பனால். தன்மகனை, ஒருபோதும் பொன்ராசு கொல்ல நினைத்திருக்க மாட்டான் என்பதை உறுதியாக நம்பியவர், கருப்பனும் செய்திருக்க மாட்டான் என நம்பினார்.
இருப்பினும் மகன் சொன்ன செய்தி சற்று நெருடலாக இருக்க, எதுவென்று கேட்டு விடலாம் என்று நண்பன் வீட்டிற்குச் சென்றார். பெற்ற பிள்ளை சொல்லிய போது கூட நம்பாதவர் கண்ணை, நல்ல நேரமாகப் பார்த்துத் திறந்து விட்டது தெய்வம். முதல்முறையாகத் தோற்றுப் போனது போல் உணர்ந்தார் பேச்சியப்பன்.
நேற்று நடந்த விஷயம் பேச்சியப்பன் வீட்டிற்கு எப்படி வந்ததோ, அதேபோல் பொன்ராசு வீட்டுக்கும் வந்தது. புலம்புவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை பவானியால். பாரமான மனதோடு தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, மகன் அறையில் பேசிக் கொண்டிருந்தார் பொன்ராசு.
“அசிங்கத்துக்கு மேல அசிங்கம். வெளிய தலை காட்ட முடியல.”
“எல்லாம் இந்த நாதாரிப் பயலுங்களால வந்தது. அவனக் குத்திப் போட்டுட்டு வாங்கடான்னு சொன்னா, அந்த அன்புவக் குத்திப் போட்டு எல்லாத்தையும் நாசமாக்கிட்டானுங்க.”
“வாய மூடு கருப்பா! நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நான் சொன்ன மாதிரி செஞ்சிருந்தா, அன்பும் செத்து இருக்க மாட்டான். இப்படிக் குமரனும் அந்த மூதேவி கழுத்துல தாலி கட்டி இருக்க மாட்டான். இப்ப எனக்குத் தான் சிக்கலுக்கு மேல சிக்கல்.”
“நீங்க சொல்ற மாதிரியெல்லாம் செஞ்சிருந்தா, அவனுங்களுக்கு வலிச்சிருக்காது. நான் பிளான் பண்ண மாதிரி குமரன் செத்திருந்தா, அதுக்குக் காரணம் அன்பு தான்னு பேச்சியப்பன் மாமாவ உசுப்பி விட்டு, அவர் மூலமா அவனைப் பழி தீர்த்து இருக்கலாம். ஓடிப் போனவளும் வாழ்க்கையை இழந்துட்டுத் தன்னந்தனியா நின்னு இருப்பா… நாதாரி நாயிங்க மாத்திக் கொன்னு இன்னைக்கு அவளுக்குத் துணையா இவனை நிக்க வச்சு, ஒண்ணுமே செய்ய முடியாம ஆக்கிட்டானுங்க.”
“இப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தான்டா, தலப்பாடா அடிச்சுக்கிட்டேன். குமரவேலனைக் கொல்ல எனக்குத் தெரியாதா? அவன் பேச்சியப்பனோட மகன். அந்தக் காரணத்துக்காக தான், அவன் உசுர எடுக்குறதுக்குப் பதிலா வாழ்க்கையை எடுக்கனும்னு, தெய்வானை விஷயத்துல அவ்ளோ வேலை பார்த்தேன். நீ பண்ண முட்டாள்தனத்தால, இன்னைக்கு நம்ம வீட்டு மருமகனா நிக்கிறான்.”
“என்னது? மருமகனா… என்னப்பா திடீர்னு கட்சி மாறுற மாதிரி இருக்கு.”
“என்னடா பண்ணச் சொல்ற? இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? என்ன இருந்தாலும், அவன் பேச்சியப்பனோட மகன். அதுவுமில்லாம நம்ம தகுதி, தராதரத்துக்குக் குறைவில்லாதவன். இப்படி ஒருத்தனை அவ காதலிச்சு இருந்தா, நானே கட்டி வச்சிருப்பேன். அந்த வக்கத்தவனைக் காதலிச்சதால தான் இவ்ளோ வினை. நல்லதோ கெட்டதோ, பேச்சியப்பன் புள்ள என் மருமகன் ஆகிட்டான். இதுக்கு மேல எந்தப் பிரச்சனையும் பண்ணாம அமைதியா இரு.”
“நல்லா இருக்குப்பா நீங்க பேசுறது. இத்தனைக் கலவரத்தையும் பண்ணது அவரோட மகன் தான். அவனப் பார்த்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. இதுல திரும்பவும் அவளுக்குத் தாலி கட்டித் தீர்க்க முடியாத அசிங்கத்தை உண்டாக்கிட்டான். சரி போகட்டும்னு நீங்க விட்ட மாதிரி என்னால சும்மா விட முடியாது.”
“வேணாம் கருப்பா, குமரவேலனப் பத்தி உனக்குத் தெரியாது. அவன் இவ்ளோ தூரம் அமைதியா இருக்குறதே ரொம்பப் பெரிய விஷயம். அவனோட அமைதிக்குப் பின்னாடி என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோன்னு பயந்துட்டு இருக்கேன்.”
“இந்தப் பூச்சாண்டி எல்லாம் உங்களோட நிறுத்திக்கோங்க. ஆறு பேர் சுத்தி நின்னதும், ஒன்னும் பண்ண முடியாம நின்னதைக் கேள்விப்பட்டீங்க தான. திரும்ப அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்?”
“கருப்பா!”
“இந்த விஷயத்துல என்னைத் தடுக்காதீங்கப்பா.”
“புத்தி கெட்ட தனமா பண்ணிட்டு இருக்காத. இப்ப வரைக்கும், தன்னோட மகனைக் கொல்ல தான் ஆள் அனுப்பி இருக்காங்கன்னு தெரியாம, என் மேல இருக்க மதிப்புக்காக உன்னைக் காப்பாத்திட்டு வரான். நாளைக்கு விஷயம் தெரிஞ்சு புள்ளைக்கு ஆதரவா நின்னான்னா, எல்லாம் தலை கீழா மாறிடும்.” என்றவர் எதார்த்தமாகத் திரும்ப, நண்பனைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் பேச்சியப்பன்.
பேச்சியப்பனைச் சற்றும் எதிர்பார்க்காதவர், உடலில் உள்ள நரம்புகள் மொத்தமும் சுருண்டு போனது. சர்வமும் அடங்கிப் போனது கருப்பனுக்கு. மகன் சொல்லியபோது கூட நம்பிக்கை கொள்ளாதவர், நட்பின் மீது நம்பிக்கை வைத்து இங்கு வர, உடைபட்டது அவரின் நம்பிக்கை வெள்ளம்.
தன்னுடைய நட்பின் மீது வைத்த நம்பிக்கையை மகன் மீது சிறிதேனும் வைத்திருந்தால், இப்படியான நிலைக்கு வந்திருக்க மாட்டார் பேச்சியப்பன். குமரவேலனைக் கொல்லத்தான் இந்தச் சதித்திட்டம் என்று தெரியாமல், அதைச் செய்தவனை எப்பேர்ப்பட்ட வேலைகளை எல்லாம் செய்து காப்பாற்றினோம் என்பதை நினைத்து உள்ளம் உடைந்தது. வழக்கில் இருந்து கருப்பனைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அன்று தேனிசையை வைத்து நடந்த சம்பவங்கள் எதுவும் அரங்கேறி இருக்காது.
அந்தச் சம்பவத்தை அரங்கேற்றித் தன் மகனை முழுவதுமாகத் தொலைத்தவர், அதிர்வு மாறாது பார்த்துக் கொண்டிருக்க, “பேச்சி…” என்ற பின் வார்த்தை வரவில்லை பொன்ராசுவிற்கு.
பலகட்டப் புயலுக்குப் பின், நிற்க முடியாமல் தள்ளாடியவரைத் தாங்க தேனிசையின் தந்தை ஓடி வர, அதை விரும்பாது தள்ளி நின்றவர் நண்பனின் முகம் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார்.
“பேச்சி…”
…
“நில்லுப்பா… நான் சொல்றதைக் கேளு.”
எவ்வளவு அழைத்தும் திரும்பாதவர் முன் பொன்ராசு நிற்க, அவர் பார்த்த பார்வையில் ஒருமாதிரி ஆகி விட்டது முன்னில் நின்ற கருப்பனின் தந்தைக்கு.
“என் பிள்ளையக் கொல்ல ஆளை அனுப்பிட்டு, என்னை வச்சே உன் பிள்ளையக் காப்பாத்த வச்சிட்டியே. உனக்காக, உன் கௌரவத்துக்காக, என் மகனைக் கூட எதிர்த்து இருக்கேன். குழி பறிக்கப் போறது எனக்குன்னு தெரியாமலே கூடி இருந்திருக்கேன் பாரு… நான் எவ்ளோ பெரிய முட்டாள்ல…” என்றவர் அடுத்த நொடி அங்கு இல்லை.
***
“சாப்பிடும்மா…”
ஏதோ சிந்தனையில் அமர்ந்து கொண்டிருந்தவள் முன்பு, உணவுத் தட்டை வைத்தவன் அவள் முகம் பார்க்காமல் செல்ல, “போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணும்.” என்றாள்.
அவ்வார்த்தையில், அவள் முகம் பார்த்தவனுக்குக் குற்ற உணர்ச்சி மேலோங்கியது. நேற்று அடித்த அடியில் லேசாகக் கன்னம் வீங்கி இருந்தது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இந்த அளவிற்கு வதைத்திருப்பதை எண்ணி வருந்தியவன்,
“எதோ ஒரு கோபத்துல என்னையும் மீறி அடிச்சிட்டேன். எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டாலும், பண்ண தப்பு சரியாகாதுன்னு தெரியும். இனி ஒரு தடவை இப்படி நடந்துக்காமப் பார்த்துக்கிறேன். இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னிச்சிடும்மா…” எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.
அவன் முகம் பார்க்காமல், “அன்பு கேஸ் விஷயமா, நேத்து போன் பண்ணி வரச் சொல்லி இருந்தாங்க.” என்று மட்டும் உரைக்க,
“சாப்பிட்டு ரெடியா இரும்மா, ரெண்டு பேரும் போயிட்டு வந்துடலாம்.” என்றான்.
குளித்து முடித்து வந்தவள், நேற்றைப் போல் உணவை உதாசீனம் செய்யாது சாப்பிட்டு முடித்தாள். காலியான தட்டைக் கண்டு நிம்மதி அடைந்தவன், அவளை எடுக்க விடாமல் தானே எடுத்து, “பத்து நிமிஷம் உட்காரும்மா, வந்துடுறேன்.” என்ற விட்டுச் சென்றவன், சரியாகப் பத்து நிமிடத்திற்குள் வந்துவிட்டான்.
“கார் நிக்குதும்மா” என்றதும் தேனிசை தேவி எழ, தலை சுற்ற ஆரம்பித்தது.
கையைத் தலைக்கு வைத்துத் தாங்கியவள் அப்படியே அமர்ந்துவிட, பதறிவிட்டான் குமரவேலன். ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் குடித்தவளுக்கு, அடுத்த நொடி குபுகுபுவென வந்தது வாந்தி. ஓடிச்சென்று எடுத்து வந்தவள் முன்பு மீண்டும் தண்ணீரை நீட்டினான்.
“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போலாமாம்மா.”
“வேணாம், கிளம்பலாம்”
மறுபேச்சுப் பேசாமல் வீட்டைப் பூட்டிக் கொண்டவன், கார் கதவைத் திறந்து அவளை உள்ளே அமர வைத்தான். முன்னால் அமருவான் என்று தேனிசை தேவி எதிர்பார்க்க, “நீங்க முன்னப் போங்க அண்ணா, நான் பின்னாடி வரேன்.” என்றவன் அன்புக்கரசனின் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான்.
அவளுக்குப் பின்னால் பொறுமையாக வந்து கொண்டிருந்தவனை எண்ணிக் கொண்டே காவல் நிலையத்திற்குள் கால் வைத்தாள் தேனிசை தேவி. வந்தவளைக் கண்டு கொள்ளாது, அங்கிருந்தவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, “உட்காரும்மா, ரொம்ப வேலையா இருக்கானுங்க எல்லாரும். இவனுங்க இப்படி வேலை பார்க்குறதால தான் நாட்டுல சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு.” என அங்கிருக்கும் அதிகாரி காதில் விழுமாறு பேசினான்.
“என்னடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்காரங்களை நக்கல் பண்ணிட்டு இருக்க.”
“இந்தப் புள்ள மாசமா இருக்கு சார். மலைக்குச்சில இருந்து இங்க வர்றதுக்குள்ள அவ்ளோ பள்ளம் மேடு. வந்த பிள்ளையப் பார்த்தும் பார்க்காத மாதிரி உட்கார்ந்து இருக்குறவங்களை வேற என்ன சொல்றது?”
“எங்களுக்கு இந்த ஒரு பிரச்சனை மட்டும்தான் இருக்கா?”
“உங்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்ல சார். கொடுக்கல், வாங்கல் பண்றவங்களுக்கு விசுவாசமா வேலைய முடிச்சு விட்டிருக்கீங்க. இதுக்குச் சிறப்பான கவனிப்பு வருமே தவிர அலைச்சலும், நேர விரயமும் வராது.”
“எதுக்கு வந்தியோ அதை மட்டும் பாரு.”
“சரிங்க சார்” என்றவன் ஒரு காகிதத்தை அவர் முன்பு நீட்டினான்.
தன்னோடு இருந்தவனைத் தேனிசை தேவி கேள்வியாகப் பார்க்க, “என்னமோ நியாயம் கேட்கப் போறேன், நீதி கேட்கப் போறேன்னு இந்தப் பொண்ணு அன்னைக்கு வந்து ஸ்டேஷன ரெண்டு பண்ணுச்சு. இப்ப இந்தக் கேஸ்ல இருந்து விலகுறேன்னு எழுதிக் கொடுத்திருக்க.” என்றவனை அதிர்வோடு பார்த்தாள்.
“நீங்கதான் கொலை பண்ணவங்களைப் பிடிச்சு, அதுக்கான தண்டனையை வாங்கித் தரவும் தீவிரமா இருக்கீங்களே சார். இதுக்கு மேல நாங்க எதுக்குத் தனியா அலையனும்? எங்களுக்கு எங்க பொழப்பப் பார்க்க வேண்டிய தேவை இருக்கு. நடக்க வேண்டியதையும், போலிக் குற்றவாளிங்களுக்குத் தண்டனை வாங்கித் தரதையும் நீங்களே பார்த்துக்கோங்க.”
அங்கிருந்தவர்கள் பேசுவதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல், தேனிசை தேவியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவன் காரில் அமர வைக்க, வெளியில் வந்த காக்கி உடை அணிந்த ஒருவர்,
“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது. இந்த வழக்கு சம்பந்தமா எப்பக் கூப்பிட்டாலும் வரணும்.” என்றிட,
“வழக்கு சம்பந்தமா வரதுக்கு, எங்களுக்கு விருப்பம் இருந்தா வருவோம். மத்தபடி நாங்க கொடுத்த புகார்ல இருந்து விலகிக்கிறோம்.” எனக் கார் ஓட்டுனருக்குக் கண்ணைக் காட்டியவன், பின் தொடர்ந்தான் இருசக்கர வாகனத்தில்.
தேனிசை தேவிக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்றாலும், மேற்கொண்டு அவனிடமும், சட்டத்திடமும் பேச விருப்பமில்லை. அமைதியாக வீடு வந்து சேர்ந்தவள் சோர்வில் படுத்து விட, மதிய உணவை சமைக்க ஆரம்பித்தான்.
வெகு நாள்களாகத் துவைக்காமல் இருந்த அவள் துணிகளை எடுத்துத் துவைக்கத் தொடங்கியவன் கைகளுக்கு, மாணிக்கத்தின் ஆடை விழ, கண் கலங்க முகத்தில் வைத்து ஒற்றி எடுத்தவன், அடுத்த நொடியே எதுவும் நடக்காதது போல் அவர் துணியும் சேர்த்துத் துவைக்க ஆரம்பித்தான்.