Loading

அகச்சவாரி செய்திட்ட என்னை

அறமற்ற மௌனத்தால் 

ஆதாரமில்லாமல் அழிக்கிறாயே

அரவமின்றி மடிகிறேனே..

 

என்றேனும் உணர்வாயா வீழ்த்தியது தன்னையே என்று!

 

மனமும் நானும்…

 

கணினியின் முன்னே அமர்ந்து எதையோ தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் மைத்ரேயன். அவனது உதட்டில் புன்னகை உறைந்திருந்தது. அதாவது அவன் செயலாற்ற நினைத்த செயலில் வெற்றியை கண்டு விட்ட புன்னகை அது.

 

அப்போது அவனைப் பார்க்க ஒருவன் வந்தான். அவன் பொதுவாக எந்த காரியத்திற்கும் நேரில் வந்து பேசுவதெல்லாம் கிடையாது. திமிர் அவன் உடன் பிறவாத பெரும் சொத்து. ஆணவம், அதிகாரம், அகந்தை, அசுர பலம் என்று அகத்தின் அசாதாரணங்கள் மண்டிக் கிடக்கும் மனிதன் அவன்.   அனைவரிடமும் திமிராய் இருப்பான் என்று ஒரு வார்த்தையில் கூறிட இயலாது. பார்வையில் திமிர், பழகுவதில் திமிர், உடையில் திமிர், நடையில் திமிர், வாரியிறைக்கும் பணத்திலும் திமிர்‌. அதோடு சேர்ந்து அதிகாரமும் அலங்காரம் சேர்க்க அமர்ந்த இடத்திலிருந்து அனைவரையும் விரட்டுவது தான் அவனின் தலையாய செயல். இப்பொழுது அவன் மைத்ரேயனை காண வந்திருக்கிறான் என்றால் விஷயம் மிகவும் விபரியமானது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இல்லை மிகவும் முக்கியமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 

இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது. மைத்திரேயன் இவனின் கண்ணாடி பிம்பம். வந்தவன் திமிர் பிடித்தவனாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு காரியம் ஆகவேண்டும். காரணம் தெரிய வேண்டுமே. அதனால் மைத்ரேயனைக் காண வந்தான். 

 

தன்னைப் போல் மற்றொருவன் இந்த உலகில் இருக்கக்கூடாது என்பதில் திடமாக இருந்தாலும், இவனிடம் இல்லாத ஒன்று மைத்ரேயனிடம் இருக்கிறது. அது தேவையான வரை அவன் உயிருடன் இருக்கட்டும் என்ற எண்ணம் அடி மனதில் இருந்தது. 

 

மைத்ரேயனின் அறைக்குள்ளே வந்தான் அவன். அவனின் காலணி எழுப்பிய ஒலி அறையை நிரப்ப, மைத்ரேயன் நிமிர்ந்து பார்ப்பான் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் வந்தவன் எதிர்பார்க்கவில்லை போலும். வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையை அமர்க்களத்துடன் இழுத்து, அதில் அமர்ந்தான். அவனின் அதிரடியும் வேகமும் எதிரில் இருந்தவனை சிறிதும் பாதிக்கவில்லை. அவன் கையில் இருந்த கோப்பைக் கீழே வைத்தவன், மிக நிதானமாக, “என்ன விஷயம்” என்றான் ரத்தினச் சுருக்கமாக.

 

“மிஸ்டர் மைத்ரேயன்.. நிதானமா இருக்க மாதிரி நல்லாவே நடிக்கப் பழகிட்டீங்க..”

 

“சொல்லிக் கொடுத்ததே நீங்கதான் ஆல்ஃபா.. சித்திரமும் கைப்பழக்கம். நிதானம் மூளையின் பழக்கம்.”

 

“என்ன கிண்டலா?”

 

“நிச்சயம் இல்ல உங்கள அப்படித்தானே எல்லாரும் கூப்பிடுறாங்க.”

 

“நீ எப்பவும் என்னை அப்படி கூப்பிட்டது கிடையாதே.”

 

“இனிமே கூப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

 

“ஏதாவது காரணம் இருக்கா?” என்றான் நக்கலான புன்னகையுடன்.

 

“இப்ப நீங்க என்ன பார்க்க வந்திருக்கதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?”

 

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லல.”

 

“நான் கேட்ட கேள்விக்கு உங்களின் பதில் ஆம் என்றிருந்தால், நீங்க கேட்ட கேள்விக்கும் அதுதான் பதில்.”

 

“புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பு.”

 

“நினைப்பெல்லாம் இல்ல. நான் நிச்சயம் புத்திசாலிதான் அதனாலதான் உங்க நிறுவனம் எனக்கு டாலர்களை அள்ளி வழங்கியது.”

 

“நீயும் டாலர்கள் அள்ளிக் கொடுத்தவன்.”

 

“கொடுத்ததை விட நிறைய திருப்பி வாங்குவேன்” என்றான் உறுதியாக.

 

வார்த்தை கடலில் அவனை வெல்ல முடியாது என்று பலர் கூறக் கேட்டதுண்டு. இன்று நேரிடையாக காண்கிறான். எப்படி இவனால் உணர்வுகளை தொலைத்து இப்படி வாழ முடிகிறது. அனைத்திற்கும் ஒப்புக்கொண்டு இப்படி இரும்பு மனிதனாக மாறுகிறான் என்றாலே அவன் இளகும் தன்மை அற்றவன் என்று உறுதியாகிறது. அவனிடம் அடிபணியும் உணர்வை இவன் எதிர்பார்த்தால் கிடைக்குமா என்ன.

 

இப்படித்தான் அவனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது. என்னதான் நேருக்குநேர் மைத்ரேயனிடம் அவன் மோதிக்கொண்டு இருந்தாலும் மைத்ரேயனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரே காரணம்தான் அதற்கு.  அவன் தன்னையே பிரதி எடுத்தது போல் இருப்பது தான். உருவத்தில் அல்ல. அவன் சிந்தனையில்.

 

“நான் வந்ததுக்கு நிச்சயம் காரணம் இருக்கு. ரெண்டு நாளா என்னோட பி.ஏ. உன்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்காரு. நீ ஏன் பேசல?” என்றான் அதிகாரமும் ஆத்திரமும் கலந்த குரலில்‌.

 

“நான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்” என்றான் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல்.

 

இந்த பதிலுக்கு அவனால் பதில் கூற முடியாது. ஒருவகையில் மைத்ரேயன் நினைத்ததை அவன் செய்துவிட்டான்.

வழக்கமாக அவன் கையாளும் உத்தியை இன்று எதிரில் இருப்பவன் கையாண்டு விட்டான். தன்னையே தோற்று நிற்பது போல் உணர்ந்தான் அவன். 

 

“சரித்திரம் திரும்புகிறது..” மைத்ரேயன்.

 

“எல்லா நேரத்திலும் சரித்திரம் திரும்பாது. திரும்பவும் விடமாட்டேன்.”

 

“பார்க்கலாம்..”

 

“சரித்திரமே இல்லாமல் செய்யவும் முடியும். முன்னனுபவம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.”

 

“இருக்கு. ஆனால் அதையும் தாண்டி உங்க முன்னாடி நிக்கிறேன். உங்களை வச்சே அதை நிறைவேற்றவும் செஞ்சேன்” என்றான் திமிராக.

 

“எங்கிட்ட நானே பேசுற மாதிரி இருக்கு.”

 

“இருக்கும். உங்ககிட்டேர்ந்து கத்துக்கிட்டது‌.”

 

“சரி நீ பேசணும் நினைச்ச விஷயத்தை சொல்லலாம். எதுக்காக என்னைப் பார்க்கணும்னு நினைச்ச?”

 

“என்னோட நெக்ஸ்ட் டார்கெட் நற்பவி” என்று மைத்ரேயன் கூற, எதிரில் இருப்பவன் அதிர்ந்து விட்டான். இருக்கையில் இருந்து எழுந்து விட்டான்.

 

“திஸ் ஈஸ் நாட் ஃபேர்..”

 

“நான் உங்கிட்ட செய்யலாமான்னு கேக்கல. செய்யப் போறேன்னு சொன்னேன்.”

 

“அவ வேண்டாம். இது ரொம்ப ரிஸ்க் ஜாப். ஷி ஹேஸ் ஃபிசிகல் ஸ்டெபிலிடி அண்ட் ஆல்சோ மெண்டல் ஸ்டெபிலிடி. நமக்கு ஆயிரம் பேர் இருக்கும்போது இது தேவை இல்லைன்னு தோணுது” என்றான் அர்த்தத்துடன்.

 

“நீங்க முதல் கட்டத்தில் இருக்கணும்னு நினைக்கிறீங்க. நான் அடுத்த கட்டத்துக்கு போகணும்னு நினைக்கிறேன். நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியாது. வாழப்போற கொஞ்ச நாளுக்குள்ள எதையாவது சாதிக்கணும் எனக்கு. பெருசா சாதிக்கணும். அது மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கணும். சாவு எனக்கு பெரிசு கிடையாது. அது உங்களுக்கே தெரியும். நான் ஏற்கனவே பார்த்துட்டு வந்தவன். ஆனால் அது திரும்பி என்னைப் பார்க்குறதுக்குள்ள, நான் நினைச்சதை செஞ்சிருக்கணும்.”

 

“உன்னோட ஆசையை என் நிறுவனத்தில் திணிக்கக் கூடாது.”

 

“நீங்க உங்களோட ஆசையை என் மேல் திணிக்கும்போது, நான் ஏன் அதை செய்யக் கூடாது.”

 

“ஏனா இது என் நிறுவனம்.”

 

“நான் உங்களின் அடிமையில்லை. இங்கு வேலை செய்பவனும் இல்லை. உங்களோட முதலீடு நான். நான் நினைத்தால் இந்த நிறுவனத்தின் பங்குகளை மதிப்பிழக்க வைக்க முடியும்” என்றான் மிரட்டலாக.”

 

சற்று நேரம் அமைதி நிலவியது அங்கே.

 

“ஸோ.. வாட்ஸ் யுவர் ப்ளான்?” என்றான் மைத்ரேயனைப் பார்த்து. 

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் தகவல் வரும். வெயிட் அண்ட் வாட்ச்” என்றான் சுழல் நாற்காலியில் இருந்து முன் வந்து. எதிரில் இருந்தவனின் விழிகள் உணர்வுகளை விழுங்கியிருந்தாலும், உள்ளுக்குள் எரிமலை ஒன்று வெடித்துக் கொண்டிருந்தது. 

 

இவன் எழுந்து சுழல் நாற்காலியை எட்டி உதைத்தான். அதை முகத்தில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தவனைக் கைத்தட்டி அழைத்தான் மைத்ரேயன். 

 

“மிஸ்டர் ஆல்ஃபா.. உங்களோட மனசு எனக்கு குழி தோண்ட திட்டம் தீட்டலாம். ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க. நீங்க தோண்டுன குழியில் நான் விழுந்தா, நீங்களும் விழ வேண்டியிருக்கும்.”

 

இதைக் கேட்ட அவன் நகைத்தான்.

 

“இன்னும் கொஞ்சம் பயம் இருக்கோ எனக்கு. இல்லை மனசுக்குள்ள ஓரமா ஒளிஞ்சிருக்க பயத்தோட வெளிப்பாடா இது.”

 

“பயம் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

 

“நீ என்னோட முதலீடுன்னு சொல்லிட்ட. பின்ன உனக்கு எப்படி குழி தோண்ட முடியும்‌. யூ ஆர் அன் டெட் இன்வெஸ்ட்மெண்ட். கீப் தட் ஆல்சோ இன் மைண்ட்..” என்று அவனைக் குத்திக் கிழித்துவிட்டு சென்றான் அவன். 

 

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் மைத்ரேயன். அவனின் திமிரை அடக்கிப் பார்க்க உயிரையும் விலை பேசலாம் என்றே தோன்றியது மைத்ரேயனுக்கு. அடுத்து நற்பவியின் அடி என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருந்தான் நன்றாகவே. அவள் நினைத்தது போல் அந்த வீட்டின் உரிமையாளர் அவனின் இலக்கு அல்ல. அவள்தான் அவனுடைய இலக்கு. ஒருவனுக்கு அழைத்து ஒரு சில கட்டளைகளைப் பிறப்பித்தான் அவன்.

 

இதுவரை இலக்குகள் தவறியதில்லை. நற்பவி விடயத்தில் இரண்டுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதை செய்து பார்ப்பதில் உறுதியுடன் நின்றான் மைத்ரேயன்.

 

நற்பவி தன் எல்லைக்குள் நுழைய முடியாது என்று தீவிரமாக நம்பினான் அவன்‌.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்