1,904 views

 

அகல்யா கண்விழிக்கும் பொழுது தரணீஸ்வரன் பக்கத்தில் இல்லை. கணவனை தேடியவள் அறையை திறக்க முயல, அவனே உள்ளே வந்தான்.

“குட் மார்னிங் லயா!” என்ற வாழ்த்தோடு காலை வேளையை தொடங்கி வைத்தான். புன்னகையோடு கட்டிக் கொண்டவள், “ஐயா என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது.” கேட்டாள் அவனின் உற்சாக முகத்தை ரசித்து.

“எல்லாம் ராத்திரி என் பொண்டாட்டி செஞ்ச மாயம்.” என்று கண்ணடிக்க, “குடிகாரா!” என்று அடித்தாள் அவனை.

“சீக்கிரம் குளிச்சிட்டு வா லயா ஒரு இடத்துக்கு போகணும்.”

“இன்னைக்கு சண்டே மறந்துட்டீங்களா? வீட்டை விட்டு எங்கயும் போகக்கூடாது.”

“நான் சொல்லல லயா உன் அத்தை தான் எங்கயோ போகணும்னு உன்ன கிளம்ப சொன்னாங்க.”

“அத்தையா!” என்று யோசித்தவள் அடுத்த கேள்வியைக் கேட்கும் முன், “சொல்றதை கேளு லயா” என குளியல் அறைக்கு தள்ளி விட்டான்.

குளித்து முடித்தவள் வெளியில் வர அவளுக்காக புது புடவை ஒன்று காத்துக் கொண்டிருந்தது. ‘நேத்து ராத்திரி பேசுனதை செய்ய போறீங்க அதான!’ கணவனின் கள்ளத்தனத்தை அறிந்து கொண்டு ஆசையோடு கிளம்பினாள்.

தலைவாறும் நேரம் அறைக்குள் வந்தவன் அவளை அலங்கரிக்க துவங்கினான். அதெல்லாம் அவனுக்கு பழக்கப்பட்ட விஷயம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு ஆசையில் ஒவ்வொன்றையும் அவளிடம் கேட்டு செய்தான். இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் கணவனை ஏமாற்ற விரும்பாமல் அவளும் எதுவும் தெரியாதது போல் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் அவள் செய்யும் அலங்காரத்தை விட இன்று அதிக அலங்காரத்தோடு இருப்பதைப் போல் உணர்ந்தாள். அகல்யாவை அதிகம் யோசிக்க வைக்க விடாத தரணீஸ்வரன் அழைத்துச் சென்றான். வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க,

“எங்கங்க யாரையும் காணோம்.” என்றாள் தனக்குள் வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“இங்கதான் இருக்காங்க, வா கூட்டிட்டு போறேன்.” என்றவன் பின்னால் சிரிப்போடு நகர்ந்தாள்.

வாசல் வரை முன்னே நடந்தவன் சற்றென்று மனைவிக்கு பின்னால் வந்து நின்றான். அகல்யா யோசித்து திரும்பி பார்ப்பதற்குள் இரு கண்களையும் மூடியவன், “என் லயா என்ன ஆசைப்பட்டாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவேன். ஒரு தாலி கொடிய போட மாட்டனா…” என்றவாறு அழைத்துச் சென்றான்.

“எனக்கு அப்பவே தெரியும் நீங்க இதுக்காக தான் கிளம்ப சொன்னீங்கன்னு.” சிரிப்போடு தன் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜாக்கிரதையாக நடந்தாள்.

“என்ன தெரியும்”

“வீட்ல எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்லிட்டீங்கன்னு தெரியும்.”

“அப்புறம்”

“இப்ப என்னை நகை கடைக்கு கூட்டிட்டு போறீங்கன்னு தெரியும்.”

“அப்புறம்”

“தாலிக்கொடி வாங்க போறோம்னு தெரியும்.”

“அப்புறம்”

“அப்புறம் என்ன நடக்கும்னு ஊருக்கே தெரியுங்க.” என்றவளை ஓரிடத்தில் நிற்க வைத்தவன், “இப்ப என்ன நடக்க போகுதுன்னு உன்ன தவிர இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் லயா.” கணவனின் வார்த்தையை அப்பொழுது கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை அகல்யா.

சிரிப்போடு கைகளை எடுக்க முயல, “சர்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்…..” என்றவன் வேகமாக அவளுக்கு முன்பு வந்து நின்றான்.

கண் திறந்தவள் கணவனை பார்த்து குழம்பிக் கொண்டே அவனுக்கு பின்னால் பார்வையை செலுத்த, வாழ்வின் கடைசி நொடி வரை இந்த தருணத்தை மறக்க மாட்டாள் அகல்யா.

எந்த இடத்தை முதன் முதலாக அகல்யா ரசித்து கணவனை உள்ளுக்குள் பாராட்டினாளோ அதே இடம் மணமேடை போல் காட்சி அளித்தது. பூ அலங்காரங்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற ரோஜாக்கள் வீற்றிருந்தது. அமரும் இருக்கை வண்ண காகிதங்களால் ஒளிர்ந்து கொண்டிருக்க, சுற்றியும் இரு வீட்டாரின் பெரியவர்கள். அவை அனைவரையும் தாண்டி சிரிப்பை வரவழைத்தது ஜீபூம்பாவின் வேட்டி சட்டை. பாவம் வாயில்லா ஜீவனை போட்டு பாடாய் படுத்தி இருக்கிறான்.

அகல்யாவின் உணர்வுகள் வெளிப்படுவதற்கு முன் அழைத்துச் சென்று அமர வைத்தான் அவர்களுக்கான இடத்தில். அழுகை, சிரிப்பு இரண்டும் இல்லாத முகபாவனையோடு அவனை பார்த்துக் கொண்டிருக்க,

“ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுற முக்கியமான விஷயத்துல தாலிக்கொடியும் ஒன்னு. அது கூட உன்ன இப்படி சங்கடத்தோட கேட்க வச்சிட்டேன். மன்னிச்சிடு லயா! திரும்பத் திரும்ப சொல்றன்னு சலிச்சுக்காத. என் கடந்த காலம் மாத்த முடியாத ஒன்னு. ஆனா நீ வந்ததுக்கப்புறம் மறந்து போன உண்மை. உனக்கான எல்லா அங்கீகாரத்தையும் நீ ஆசைப்படுறதுக்கு முன்னாடியே இனிமே செஞ்சிடுவேன். ஏதாச்சும் மறந்தா கூட உரிமையா கேளு லயா. உன்னோட சந்தோஷத்தை விட வேற எதுவும் எனக்கு முக்கியம் இல்ல.” என்றவன் அங்கிருக்கும் ஐயரிடம் சைகை செய்தான்.

தாலி பிரித்து கோர்க்கும் விழா என்பதால் பெரிதாக மந்திரங்கள் இல்லை. தரணியின் அவசரத்தால் நல்ல நாள் கூட பார்க்கவில்லை பெரியவர்கள். அதனால் மனப்பூர்வமாக கடவுளை வேண்டிக் கொண்டு அகல்யா ஆசைப்பட்ட தங்க தாலி கொடியை கையில் கொடுக்க, விழி மொழிகள் பேசிக்கொண்டது இருவருக்கும். ஆதிலட்சுமி பழைய தாலி கயிற்றை லேசாக பிரித்து விழுகாதவாறு அவள் தோள் மீது தொங்கவிட்டார்.

அழும் நிலையில் இருக்கும் மனைவியை புன்னகைக்க கண்சிமிட்டியவன் தங்க கொடியை தாரத்தின் கழுத்தில் அணிந்தான். அங்கிருப்பவர்கள் மலர் தூவ, மனம் நிறைந்த நிம்மதியோடு வாங்கிக் கொண்டாள் தலை குனிந்து.

இப்படி ஒரு நிலையை காண ஆசைப்பட்ட வீட்டின் பெரியவர்கள் மனம் குளிர்ந்து விட்டது. அதிலும் ஆதிலட்சுமிக்கு சொல்ல முடியாத உணர்வு பெருக்கு. நினைவுகள் நேற்று இரவு நடந்ததை நினைக்க ஆரம்பித்தது.

அகல்யாவை தூங்க வைத்தவன் மணியை பார்க்க அது சரியாக இரண்டு முப்பது என்று காட்டியது. அவள் தூக்கம் கலையாதவாறு படுக்க வைத்தவன் யோசித்தான். விடிவதற்குள் அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற எண்ணியவன் தட்டினான் பெற்றோர்களின் அறை கதவை.

நேரம் கெட்ட நேரத்தில் வந்ததால் இருவரும் பதற்றத்தோடு விசாரிக்க, “நம்ம வழக்கமா நகை எடுக்குற அந்த கடைக்காரர் நம்பர் இருந்தா கொடுங்க.” என்றான் ஆர்ப்பாட்டம் இல்லாமல்.

குழம்பியவர்கள் எதற்கு என்று கேட்க, “எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவ இன்னும் அன்னைக்கு கட்டுன தாலி கயிறோட இருக்கா. கம்பெனிக்கு போயிட்டு வர பொண்ணு எப்படி இருக்குறது நல்லா இல்ல. அதான் தாலிக்கொடி மாத்தி போடலாம்னு இருக்கேன்.” என்றான்.

இதை ஆதிலட்சுமியும் நினைத்தது உண்டு. ஆனால் மருமகள் விருப்பம் இல்லாமல் செய்யக்கூடாது என்று தள்ளி போட, அதற்கு தோதாக தயாளனின் உடல்நிலை அமைந்துவிட்டது.

“சரிப்பா அதுக்கு என்ன இப்போ அவசரம். விடியட்டும் நல்ல நேரம் பார்த்து நீ சொன்ன மாதிரி செஞ்சிடுவோம்.” என்ற தந்தைக்கு உடனே மறுப்பு கொடுத்தான்,

“நாளைக்கு காலைல இது நடக்கணும்.” என்று.

மகனின் அவசரத்தைக் கண்டு பயந்தவர்கள், “நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விஷயம் இல்லை தரணி. ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியமான விழா. அதை இப்படி ஏனோ தானோன்னு பண்ணக்கூடாது. ” என்றார்கள்.

“புருஷன் பொண்டாட்டிக்கு தாலி எடுத்து போடணும்னு நினைக்கிறதை விட நல்ல நேரம் அவ்ளோ ஒன்னும் முக்கியம் இல்ல. ஏற்கனவே நல்ல நேரம் பார்த்து தான கல்யாணம் பண்ணி வச்சீங்க. இப்போதைக்கு எதுவும் அவசியமில்லை எனக்கு விடிஞ்சதும் நான் ஆசைப்பட்டது நடக்கணும்.” என்றான் விடாப்படியாக.

மணி நான்கை தொட்டது. மகனை முடிந்த வரை சமாளித்து பார்த்தார்கள் பெற்றோர்கள். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அவன். பெருமூச்சு விட்ட ஆதிலட்சுமி கடைக்காரரின் கைபேசி எண்ணை கொடுத்தார். அங்கிருந்து வெளியேறியவன் அவருக்கு அழைத்தான்.

இவன் அவசரத்திற்கு அவர் என்ன செய்வார் பாவம்! கடுப்போடு யார் இந்த நேரத்தில் அழைக்கிறார்கள் என்று தாமதமாக எடுத்தார். விஷயத்தை சுருக்கமாக கூறியவன் கோரிக்கை வைத்தான். தெரிந்த இடம், அதுவும் வழக்கமாக பல வருடங்களாக நகை எடுத்துக் கொண்டிருக்கும் குடும்பம் என்பதால் சம்மதித்தார்.

ராத்திரி நேர திருடன் போல் லேசான விடியல் இருக்கும் நேரத்தில் நகை கடைக்கு சென்றான். அந்த அவசரத்திலும் பொறுமையாக நகையை தேர்வு செய்தான். பாவம் கடைக்கு சொந்தக்காரர் தான் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் அவனை வசை பாட முடியாமல். மனநிறைவாக ஒன்றை கையில் எடுத்தவன் வெளியில் வர, முக்கியமான இடம் என்பதால் மக்கள் கூட்டம் வெளிப்பட ஆரம்பித்தது.

தொடர்ச்சியாக  பூக்களை சுமந்து கொண்டு வரும் வாகனம்  பட, கண்ணில் மின்னல் வெட்டியது. தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்தவன் வரும் வழியில் மாமியாரை அழைத்து உடனே வீட்டுக்கு வரச் சொன்னான். ஆதிலட்சுமியை தொடர்பு கொண்டவன் அவருக்கு தெரிந்த ஐயரை வரவழைத்தார். பெரிய அலங்காரம் இல்லை என்றாலும் அவளுக்கு விருப்பமான இடத்தில் இதை செய்தால் மனம் மகிழ்வாள் என்பதற்காக தோட்டத்தை தேர்வு செய்தான்.

ஜீபூம்பாவிற்கு அடுத்து அந்த வீட்டில் இவனால் நோகடிக்கப்படும் ஜீவன்கள் என்றால் அது ரோஜா பூக்கள் தான். முதலில் கண்டுகொள்ளாமல் வாட விட்டவன் பின் மனைவியின் பிறந்த நாளுக்காக அவள் உருவத்திற்கு ஏற்ப மாற்றி வைத்தான். அந்த அழகை இத்தனை நாள் ரசித்துக்கொண்டிருந்தவன் இன்று மாற்றி விட்டான் மணமேடையை அலங்கரிக்க.

சிறியவர்களை கண்டு கொள்ளாமல் பெரியவர்கள் அங்கிருந்து நகர்ந்து விட, வேகமெடுத்து மார்பில் புதைந்தாள். ஆனந்தத்தோடு கட்டிப்பிடித்தவன் அவள் அழுகையை உணர்ந்து விலக்க முயன்றான். உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருந்தவள் அவன் செயலுக்கு தடை விதித்து இதயத்தில் முத்தமிட்டாள்.

“லயா நீ சிரிக்கணும்னு தான் இதை பண்ணது அழ இல்ல.”

“நீங்க பண்ண காரியத்துக்கு எப்படி சிரிக்க முடியும்.”

“போதும் அழுதது.”

“என்னால முடியல”

“உன்னை இப்படி பார்க்க என்னால முடியல.” என்றதும் அவனை விட்டு பிரிந்தவள் முகம் முழுவதும் முத்தமிட்டாள் அளவு இல்லாமல். அத்தனையும் புன்னகையோடு வாங்கிக் கொண்டான்.

“இதெல்லாம் எதுக்கு பண்றீங்க?”

“அதான் சொன்னனே… நீ சிரிக்க”

“இனிமே இந்த மாதிரி இன்ப அதிர்ச்சி கொடுக்காதீங்க. சிரிக்கிற அளவுக்கு தெம்பு இல்லை எனக்கு.”

“இதை தவிர இனி எனக்கு வேற வேலை இல்லயே லயா.”

“போதும்!”

“அந்த வார்த்தைய சொல்ற உரிமை உனக்கு இல்லை.”

அழுகையை நிறுத்தியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “வேற என்ன வார்த்தை சொல்ல உரிமை இருக்கு?” கேட்டாள்.

“நீ செய்யுறது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இல்ல இன்னும் ஏதாச்சும் செய்ன்னு சொல்லு.” என்றான் புன்னகையோடு.

மீண்டும் அழ துவங்கி விட்டாள். இப்படியே விட்டால் ஆடை நனைந்து குளிரெடுக்கும் என்பதால் பலம் கொண்டு நிறுத்தினான் அவளையும், அழுகையையும். காதல் வார்த்தைகளால் சமாதானம் செய்தவன் அவள் நெற்றியில் முத்தமிட, பதிலுக்கு முத்தமிட்டு கட்டிக் கொண்டாள்.

வெகு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவர்கள் அங்கிருந்து நடையை கட்ட திரும்ப, நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அவர்களையே படம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீபூம்பா. தலையில் அடித்துக் கொண்டு தரணீஸ்வரன் தம்பியை முறைக்க, இப்பொழுது தான் அகல்யா புன்னகைக்கு ஆரம்பித்தாள்.

***

மீட்டிங் ஹாலில் காத்துக் கொண்டிருந்தாள் அகல்யா. அவளின் கணவன் இன்னும் வரவில்லை. வெகுநாட்கள் கழித்து ஆதிலட்சுமியும் அங்கு இருக்க, “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற உத்தரவோடு உள்ளே வந்தான் தரணீஸ்வரன்.

வந்தவன் தோரணையைக் கண்டு அங்கிருந்தவர்களுக்கு யோசனையை கொடுத்தாலும், வரவேற்றார்கள். அகல்யாவிற்கு கண்ணை காட்ட… ஆரம்பித்து வைத்தாள்.

“நீங்க சொல்றது பேச்சுக்கு சரியா இருக்கலாம் ஆனா செயலுக்கு ஒத்து வராது. உங்களை விட இப்ப நல்ல மார்ஜின்ல நிறைய கம்பெனி ஒப்பந்தம் போட  தயாரா இருக்காங்க.”

“சார் இன்னைக்கு உங்களுக்கு நிறைய பேர் கிடைக்கலாம். ஆனா அவங்க எல்லாம் லாபத்துக்காக வரவங்க. எங்களுக்கு லாபமே இல்லனாலும் நிறைய அக்ரீமெண்ட் உங்க கூட போட்டு இருக்கோம்.” அகல்யா.

“இல்லன்னு நாங்க யாரும் சொல்லல மேடம். இப்போ உலகம் ரொம்ப மாறிடுச்சு பழைய அதே பஞ்சாங்கத்தை வைச்சு கம்பெனி நடத்த முடியாது.”

“பழைய பஞ்சாங்கம்னு எதை சொல்றீங்க?” கம்பீரமாக ஒலித்தது தரணீஸ்வரனின் குரல்.

அகல்யா வியப்போடு அவனை நோக்க, “நீங்க கொடுக்குற டிசைன்ஸ், டிரஸ் குவாலிட்டி, பிரைஸ் எல்லாமே தான் சொல்றோம்.” என்றார்கள் அவர்களுடன் ஒப்பந்தம் போட்டவர்கள்.

“கொஞ்சம் விளக்கமா சொன்னா நான் பதில் கொடுக்க சரியா இருக்கும்.”

“புது புது டிசைன் உங்ககிட்ட இருந்து வரதில்ல.”

“வரதில்லையா இல்ல வாங்கிக்க தயாரா இல்லையா!” என்றவன் பார்வையும் பேச்சும் அவர்களுக்கு திகைப்பை கொடுத்தது.

“வாங்கிக்க நாங்க தயாரா இருக்கோம். ஆனா, உங்க விலை எங்களுக்கு கட்டுப்படி ஆகாது.”

“விலை ஒப்பந்த அடிப்படையில தான நிர்ணயம் செய்யப்படுது. விலை ஒத்து வரலைன்னா உங்களோட ஒப்பந்தம் சரியில்லைன்னு அர்த்தம்.”

“உங்களோட குவாலிட்டிக்கு இந்த அளவுக்கு தான் ஒப்பந்தம் போட முடியும்.”

“குவாலிட்டி இல்லாத இடத்துல ஒப்பந்தம் வைக்கிறது உங்களோட தப்பு.”

“இப்ப என்னதான் சார் சொல்ல வரீங்க? இத்தனை நாள் இந்த கம்பெனியில உங்களை கேட்டு நாங்க எந்த ஒப்பந்தமும் போடல. திடீர்னு வந்து எங்களை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.”

“கம்பெனிக்கு சொந்தக்காரன் எப்ப வேணா வந்து கேள்வி கேட்கலாம். என் கையெழுத்து இல்லாம இங்க எந்த ஒப்பந்தமும் போட்டு இருக்க மாட்டாங்க. முதல்ல அக்ரிமெண்ட்ல யார் சைன் போடுறாங்கன்னு தெரிஞ்சிட்டு அப்புறம் பேசுங்க.”

“முன்ன மாதிரி அதே ஒப்பந்தத்துக்கு புது டிசைன் நீங்க தரதா இருந்தா நாங்க இனிமே உங்க கூட ஒப்பந்தம் போடுறோம்.”

“முடியாதுன்னு சொன்னா?”

“எங்களாலையும் ஒன்னும் பண்ண முடியாது சார்” என்றார்கள் பேச வந்திருந்தவர்களில் ஒரு சிலர்.

எழுந்து நின்றவன் அனைவரையும் சுழன்று பார்த்துவிட்டு, “உங்களோட பழைய ஒப்பந்தத்துல புது வர்த்தகத்தை கொடுத்தா அது எங்களுக்கு  நட்டம். இங்க நாங்க செய்யறது தொழில் சேவை இல்லை. கொஞ்ச நாளா நான் இந்த கம்பெனில இல்லாம இருந்தது உண்மைதான். அதே நிலைமை இனியும் இருக்கும்னு நினைக்காதீங்க.

உங்களுக்கு ஒப்பந்தம் போட ஆயிரம் கம்பெனி இருக்கிற மாதிரி எங்களுக்கும் புதுசா ஒப்பந்தம் போட நிறைய பேர் இருக்காங்க. குறைஞ்ச தொகைய வைச்சு அதிக லாபம் பார்க்குறது எப்படின்னு எங்களுக்கும் தெரியும். விருப்பம் உள்ளவங்க கூட இருக்கலாம். மத்த எல்லாரோட ஒப்பந்தமும் இன்னைக்கு கேன்சல் ஆகிடும்.”

“சார்! இப்ப கேன்சல் பண்ணா எங்களுக்கு நட்டமாகிடும்.”

“ஆகட்டுமே அதனால எனக்கு என்ன? புதுசா வேற ஒருத்தரோட ஒப்பந்தம் போட்டு நாங்க எங்க கம்பெனிய பார்த்துகிறோம்.” என்ற   கணவனின் கம்பீரப்பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

தடாலடியான முடிவை எடுப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இதில் தங்களுக்கும் சிக்கல்கள் இருந்தாலும் ஒப்பந்தம் போட்டவர்களுக்கு தான் அதிக சிக்கல் என்பதை அறிந்து அமைதியானாள். அதை அறிந்த ஒப்பந்த சொந்தக்காரர்கள் சமாதான உடன்படிக்கைக்கு இறங்கி வர, நேரம் பார்த்து அடித்தான் ஒப்பந்தத்தை மறு பதிப்பு செய்து புது ஒப்பந்தமாக மாற்ற. வேறு வழியில்லாததால் அவன் சொன்ன உடன்படிக்கைக்கு சம்மதித்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

***

“மாமா இந்த ஸ்டிக்க பிடிச்சிட்டு நடந்தா சரியா வரும்.”

“அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம் லயா. நம்மை யாராது ஒருத்தர் அப்பா கூட நடந்தா தான் சரியா வரும்.”

“ஒரு கைல ஸ்டிக்க பிடிச்சிட்டு ஒரு கைல நம்மள பிடிச்சிட்டு நடந்தா சரியா இருக்கும். அப்போதான் மாமாவால சீக்கிரம் ஸ்டிக்க பிடிச்சிட்டு நடக்க முடியும்.”

“பயமா இருக்குடி. அப்பாவால  பேலன்ஸ் பண்ண முடியலனா கீழே விழுந்துடுவாரு.” என்ற கணவனை ஒரு மாதிரியாக பார்த்தவள்,

“நீங்க இதை பிடிச்சுக்கோங்க மாமா” என்றாள்.

“ஏய்! என்னடி லுக் எல்லாம் வேற மாதிரி இருக்கு.” என்றவனை இந்த முறையும் ஒரு மாதிரியாக பார்த்தவள், “என்னமோ அப்பாவ காத்துப்படாம தண்ணி படாம பாதுகாப்பா வைச்சிருந்த மாதிரியே பில்டப் பண்றீங்க. பண்ற எல்லா வேலையும் பண்ணிட்டு திடீர்னு பாசம் வேற.” என்றாள் பார்வையை மாற்றாமல்.

மருமகளின் வார்த்தையை கேட்டவர் சிரிப்போடு அவள் கொடுத்த வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். தினமும் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார் ஆதிலட்சுமி. இன்று ஏதோ கோவிலுக்கு செல்ல வேண்டி இருக்க அவர் அங்கு சென்று விட்டார். மருமகளும் மகனும் நடக்க வைக்கிறேன் என்று அவரை இம்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அப்பா அவ தான் சொல்றானா நீங்களும் சிரிக்கிறீங்க.”

“ஏண்டா சொன்ன உன் பொண்டாட்டிய விட்டுட்டு சிரிச்ச என்னை வந்து கேள்வி கேக்குற. இதுல இருந்தே தெரியல நீ பொண்டாட்டிக்கு பயந்தவன்னு.” அவரும் தன் பங்கிற்கு மகனை கேலி பேச,

“இந்த தரணி லெவல் என்னன்னு தெரியாம பேசுறீங்க. எண்ணி இன்னும் ஒரு வருஷத்துல என்னால பத்து பேராது இந்த உலகத்துக்கு முன்னாடி நிப்பாங்க. அப்போ தெரியும் இந்த தரணி யாரு அவன் திறமை என்னன்னு.”

“உங்க திறமை தான் ஊருக்கே தெரியுமே. ஒரு நாள் முழுக்க தண்ணில மிதக்க உங்களால மட்டும் தான் முடியும். அதுவும் குடிச்சிட்டா பேசுவீங்க பாரு ஒரு பேச்சு ஐயய்யோ… அப்பப்பா.. காது கொடுத்து கேட்க முடியாது.” மொத்தமாக வாரிவிட்டாள் கணவனை.

முறைத்துக் கொண்டு தோட்டத்து பக்கம் சென்று விட்டான் தரணீஸ்வரன். அவன் நடையை பார்த்த இருவரும் சிரித்துக் கொண்டே தங்கள் வேலைகளை கவனிக்க, ஜீபூம்பா வந்து குரைத்தது. தன்னால் முடியாததை செல்லப்பிராணி மூலம் தூது விட்டிருக்கிறான் என்பதை அறிந்த அகல்யா,

“ரொம்ப சத்தம் போட்டன்னா ராத்திரி உனக்கு சோறு கிடையாது.” என்றிட, வாயை மூடிக் கொண்டது ஜீபூம்பா.

ஏனென்றால் தரணி ஜீபூம்பாவிற்கு பலமுறை யோசித்து உணவுகளை கொடுப்பான். ஜீபூம்பா முக பாவனைகளை வைத்து அவனுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்ற வரை நன்கு அறிந்து வைத்திருப்பவன்  ஆகாத உணவுகளை அல்லது அதிகம் கொடுக்கக் கூடாத உணவுகளை நிறுத்தி விடுவான்.

அதில் ஒன்று வறுத்த சிக்கன். ஆனால் அவை தான் ஜீபூம்பாவிற்கு விருப்பமான உணவு. வாசனையை வைத்து குட்டி போட்ட பூனை போல் சமையலறை பக்கம் நடந்து கொண்டிருப்பான். ஒரு பீசை தவிர வேறு அவன் கண்ணில் காட்ட மாட்டான் தரணீஸ்வரன். செல்லப்பிராணி எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் மனம் இறங்க மாட்டான். அகல்யா தான் கணவனுக்கு தெரியாமல் ஜீபூம்பாவின் நாக்கை குளிர்விப்பாள்.

சாப்பாடு பற்றி பேசியதும் அண்ணனை மறந்தவன் அகல்யாவின் பக்கம் தாவி விட்டான். போர் செய்ய அனுப்பிய மாவீரன் இன்னும் வராததால் ஆராய்ச்சி செய்ய வந்த தரணீஸ்வரன் கடுப்பாகிவிட்டான் தயாளனின் கை பிடித்துக் கொண்டு ஜீபூம்பா நடக்க வைப்பதை பார்த்து.

***

தயாளன் யார் உதவியும் இன்றி நடக்க ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது அவர் இயல்பு நிலைக்கு திரும்ப. இன்னும் பழைய நிலைமைக்கு வர மூன்று மாதங்களுக்கு மேலாகும். ஆனால் இந்த நிலைமையே தரணீஷ்வரன் மனதை பெருமளவிற்கு நிம்மதி ஆக்கியது. தன்னால் தன் தந்தைக்கு நேர்ந்த துயரத்தை எண்ணி இன்றளவும் மருகிக் கொண்டிருக்கிறான்.

ஆதிலட்சுமி தயாளன் இருவருக்கும் முழு ஓய்வு அளித்து விட்டான் தரணீஸ்வரன். பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் மனைவியோடு கம்பெனியில் இருக்கிறான். அகல்யாவிடம் முழு பொறுப்பும் வந்துவிட்டது. மனைவிக்கு துணையாகவும் தந்தையின் தொழிலை நிலைப்படுத்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறான்.

கதவு பட்டென்று திறக்கும் ஓசையில் தரணீஷ்வரன் தலை நிமிர, புயலாக வந்தவள் அவனின் கைகளை தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தாள். “என்ன லயா பண்ற?” என்றவனை கண்டு கொள்ளாமல் அவள் கைகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

அகல்யாவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவன், “என்னன்னு கேட்கிறேன்ல” என்றான்.

“உங்க கை இப்ப நடுங்குறது இல்லையாங்க.”

“இல்ல லயா. எதுக்கு கேக்குற?”

“இந்த கை நடுங்குனா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்”

“லூசு!” என்று தலையில் அடித்தவன், “நான் முன்ன மாதிரி குடிச்சுகிட்டா இருக்கேன் கை நடுங்க. ஐய்யா இப்போ வலுவான பாடி.” என்றான் இரு கைகளையும் வலுக்கூட்டி.

கணவனின் கெத்தில் மெச்சிக்கொண்டவள், “இந்த கைய இப்ப நடுங்க வைக்க என்னால முடியும்.” என்றாள்.

“வாய்ப்பே இல்ல லயா கிளம்பு…கிளம்பு.”

“என்னால முடியாதுன்னு சொல்றீங்களா.” என்றவளுக்கு அவன் பதில் சொல்லாமல் தலையை மட்டும் திமிராக ஆட்ட,

“அப்பா ஆக போறீங்க.” என்றதும் ஆட்டிய தலை அப்படியே நின்று விட்டது.

இருக்கையில் அவன் அமர்ந்துக் கொண்டிருக்க நின்று கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவாறு உடல் இயக்கத்தை நிறுத்தி விட்டான்.

சொல்லக்கூடாத பொய்யை சொல்லி இல்லாத வயிற்றில் தேட வைத்த ஞாபகங்கள் கண் முன் தோன்ற, எவ்வளவு முட்டாள் தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம் என்ற எண்ணம்  அதிகம் தோன்றியது. மனதை படிக்கும் சக்தி இல்லை என்றாலும் இப்பொழுது அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவள் “சுரீர்” என்று கன்னத்தில் ஒன்று வைத்தாள்.

வலித்தாலும் உணர்வின்றி அமர்ந்திருந்தான் தரணீஸ்வரன். “உன் காயத்துக்கு மருந்து போட்டதெல்லாம் என்னோட போகட்டும். என் பிள்ளை கிட்ட எந்த எண்ணமும் வரக்கூடாது. இனி ஏதாச்சும் இந்த மாதிரி கிறுக்குத்தனமா நினைச்ச… புருஷன்னு கூட பார்க்க மாட்டேன் தலையில கல்லை தூக்கி போட்டுடுவேன்.” என்று அதட்டியவள் அவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்தாள்.

அகல்யா ஆசைப்பட்டது போல் பெரும் நடுக்கம் உண்டானது அவன் கைகளில். இந்த அதிர்வை தாங்கிக் கொள்ள முடியாதவன் உடனே எடுத்து விட்டான். புன்னகையோடு கணவனின் கைப்பற்றி மீண்டும் வயிற்றில் வைத்தவள்,

“இதான் உங்க முதல் குழந்தை. இது மட்டும் தான் நிஜம் ஈஷ்வா. தயவு செஞ்சு குழந்தை விஷயத்துல தேவை இல்லாததை புகுத்தாதிங்க. இப்போ என்னோட சேர்த்து நம்ம குழந்தையும் உங்களை நம்பி இருக்கு. அதோட எதிர்காலத்தை நல்லபடியா அமைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு.” என்றாள்.

எதையும் பேசக்கூடிய நிலையில் தரணீஸ்வரன் இல்லாததால் குழந்தைக்கு வலிக்காமல் கட்டிக் கொண்டான்.

“என்ன சொல்றதுன்னு தெரியல லயா. உடம்பெல்லாம் என்னமோ பண்ணுது. சிரிக்க சொல்லி மூளை கட்டளையிட்டாலும் அழுக தான் வருது. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. நீ வந்தது, என்னை காதலிச்சது, இதோ நம்ம குழந்தை… எல்லாமே. கண்ண தொறந்தா கனவு காணாம போற மாதிரி நீங்க எல்லாம் என்னை விட்டு போயிட மாட்டீங்களே.”

“உங்க பிள்ளை உள்ள பத்திரமா இருக்கு. நான் உங்க கூட பத்திரமா இருக்கேன். அப்புறம் எப்படி காணாம போவோம். நீங்க பார்க்குறது எல்லாமே நிஜம் ஈஷ்வா. இந்த வாழ்க்கை உங்களுக்கானது. சாகுற வரைக்கும் நீங்க, நான், நம்ம குழந்தைன்னு ஒன்னா இருப்போம்.” என்றவளுக்கு   கொடுத்த முத்தத்தில் தந்தை பார்வை தன் மீது படவில்லை என்று ஏங்கியது குழந்தை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
78
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *