683 views

அத்தியாயம் 21

சுபாஷினியின் குற்ற உணர்வு அவ்வப்போது அவளது மனதைத் தாக்கும் போதெல்லாம் தமக்கை மற்றும் தாயிடம் மன்னிப்புக் கேட்டதைப் போல, கோவர்த்தனனிடமும் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அவனது சகவாசமே வேண்டாம் என்பது போல, கோவர்த்தனனைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் முறுக்கிக் கொள்ளும் தமக்கையை வைத்துக் கொண்டு அவனிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது? என்று அவளுக்குமே தோன்றியது. 

 

ஆனால் தான் ஆரம்பித்து வைத்ததை தான் மட்டுமே முடித்து வைக்க முடியும் என்று உறுதி கொண்டவள் முதலில் அக்காவிடம் பேசப் போனாள். 

 

“அக்கா… ” தங்கையின் அழைப்பால், நிமிர்ந்தவள்,

“என்ன சுபா?” என்றாள் இளந்தளிர். 

 

தயக்கத்தின் தாக்கத்தில் இருந்தால் வேலைக்கு ஆகாதென்று, 

“நான் கோவர்த்தனன் சார் கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நினைக்கிறேன்” தடாலடியாக கூறவும், 

 

 தங்கையின் மேலெழுந்தக் கோபத்தை அடக்க இயலவில்லை. 

 

“சுபா…!” அவளது கோப அழைப்பையும் மீறி, 

 

“உங்கிட்டயும்,அம்மாகிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன். அதே மாதிரி அவர்கிட்டயும் சாரி கேட்கனும் தான?அது தானே நியாயம்?” என்றாள் உறுதியுடன்.

 

என்னவாயிற்று இவளுக்கு… ! என்று புரியாமல் விழித்த இளந்தளிர், 

” அதெல்லாம் வேண்டாம் சுபா ” என்று பதில் சொல்ல, 

 

“அக்கா…!” என்று அழைக்க, 

 

“வீட்டுக்கு வந்த அன்றைக்கே கேட்ருக்கலாம்ல?” என்று இடைவெளி விட, 

 

“அப்போ உங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைச்சேன்”

 

சுபாஷினி மட்டுமல்லாது குடும்பமே சிக்கி சின்னாபின்னமாகிய சம்பவங்கள் யாவும் இவளது மனக்கண்ணில் வந்து போனதல்லவா! அதையும் மீறி இப்பேச்சை எடுக்கிறாள் என்றால்! 

 

இளந்தளிரும், அவளும் மட்டும் பேசிக் கொண்டு இருந்ததால், இவர்களுக்குள்ளேயே இதை முடித்துக் கொள்ள நினைத்தாள். 

 

தாய்க்கு விஷயம் போனால் அவருக்குமே மன அழுத்தத்தைக் கொடுக்கும். 

 

“ப்ச்…! வேணாம் சுபா” என்றாள் கடுமையாக. 

 

சுபாஷினி,”இதுல எந்த பிரச்சனையும் ஆகப் போறது இல்லை அக்கா. ஜஸ்ட் ஒரு சேடிஸ்ஃபேக்ஷன்” என்றிட, 

 

“அப்படியென்ன சேடிஸ்ஃபேக்ஷன்? எல்லாமே பேசியாச்சே?” 

 

“பேசியாச்சு தான் அக்கா. ஆனால் நீங்களும், அவரும் தான் பேசினீங்க.நான் பேசி, மன்னிப்புக் கேட்க எனக்கு ஒரு வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைக்கலயே?”

 

“சுபா… !” 

 

” ஆம் அக்கா. பொண்ணுப் பாக்க வந்த போது நீங்களும், அவரும் பேசவும், உங்களுக்கு எல்லாமே தெளிவாகிடுச்சு. ஆனால் எனக்கு? நான் பண்ணின தப்புக்குப் பிராயச்சித்தம் செய்றதுக்கு ஒரு சான்ஸ் கூட கிடைக்கலயே?”

 

இளந்தளிர் ஏதோ பேச ஆரம்பிக்க அதற்குள், 

” நீ என்ன தப்பு பண்ணின? சின்னப் பொண்ணு இதெல்லாம் உனக்குத் தேவையில்லை! அது தானே அக்கா?”

 

“ம்ம்” – இளந்தளிர். 

 

“சாரி கேட்டா எனக்குள்ள இருக்கிற குற்ற உணர்வுக் காணாமல் போயிடும். அதுக்காக கேட்குறேன்” என்றாள். 

 

தங்கை கேட்பது இளந்தளிருக்கு நியாயமாகவே தோன்ற, 

“அம்மாகிட்ட சொல்லி அவரோட நம்பர் வாங்குவோம். நேர்ல மீட் பண்ணி சாரி கேளு” 

 

இளந்தளிர் சொன்னது போல் தாயிடம் விஷயம் சென்றது. 

‘இப்போ எதுக்கு?’ என்பது போல் பார்த்தார். 

 

குற்ற உணர்வால் வாடுவதைக் கூறி, அவரிடம் கெஞ்சிக் கேட்டாள் இளையவள். 

 

“நானும் அடிக்கடி மயக்கம் போட்டு விழுற அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஆகி இருக்கேன்ல அம்மா? அதுக்கு இது தான் காரணம். அதுவும் இல்லாமல் அவரை அக்கா வேணாம் என்று சொன்னாலும் எனக்குப் பண்ணின உதவியை மறக்க முடியாதில்லையா அம்மா?” 

 

இளையவளின் வேண்டுகோள் நியாயமானதாகப் பட, சற்று நேர யோசனைக்குப் பின்னர், 

“ஹூம்…! நாம ஒதுங்கிப் போன பிறகும் இப்படிக் கேட்கிறோமே என்று அவங்க நினைச்சா என்ன செய்ய?” என்றார் சிவசங்கரி. 

 

மறுபடியும் அவர்களை வலியச் சென்று தொல்லை செய்வது போலாகுமே! 

 

“கோவர்த்தனன் சார் அப்படி நினைக்கக் கூடியவர் இல்ல அம்மா”

 

“தரகர் கிட்ட நம்பர் கேட்கிறேன். ஆனால் சுமதி அம்மாகிட்டயும், அவர்கிட்டயும் கேட்டுட்டுத் தான் நம்பர் அனுப்புவார்” என்று கூறினார்.

 

“சரிங்க அம்மா” தனக்குத் தோன்றியதை மறைக்காமல் சொல்லிய சுபாஷினி இனிமேலும் அசட்டுத்தனமான சுபாவங்களைக் கை விடலானாள். 

 

அவர்கள் சென்றதுமே சிவசங்கரி தாமதிக்காமல், சுமதியைச் செல்லில் தொடர்பு கொண்டார். 

 

“சுமதியம்மா… எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்துப் பேச, 

 

எதிர்பாராமல் அவரிடமிருந்து வந்த அழைப்பாயினும், 

“சொல்லுங்க சிவசங்கரி” என்று ஆச்சரியத்தைக் காட்டிக் கொண்டே கேட்டார். 

 

” ஒரு விஷயத்தை உங்க கிட்ட கேட்க கால் பண்ணியிருக்கேன்.நான் கால் பண்ணியது சங்கட்டமாவோ, பிடிக்காமலோ இருந்தா சொல்லிடுங்க” என்று அதீத தயக்கத்துடன் கூறினார். 

 

“அப்படி எதுவுமே இல்லைங்க. பிள்ளைங்களுக்குப் பிடிக்கலன்னு தான் கல்யாணம் வேணாம்னு சொன்னோம். ஆனால் நமக்குள்ள ஒரு நல்ல நட்பு இருக்கு. அதை ஏன் விடனும்? சம்பந்தியாக முடியலனா பரவாயில்லை.நாம இனிமே ஃப்ரண்ட்ஸ்”அவர் புன்னகைத்ததும் சிவசங்கரிக்குமே அந்த நட்பு வேண்டும் என்று தோன்றியது. 

 

“கண்டிப்பாக சுமதி.உங்கப் பையன் கிட்ட சுபாஷினி நன்றி சொல்லனும்னு சொல்றா. அதுனால அவரோட ஃபோன் நம்பர் கிடைக்குமா?”

 

“ம்ம்…கேட்டுட்டு அனுப்புறேன்ங்க.இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்பான்?” 

என்று கூற, 

 

“சின்னவ ரொம்ப ஃபீல் பண்றா அதுதான்” அவரது தயக்கம் புரிந்து, 

 

“கோவர்த்தனன் வந்ததும் சொல்றேன் சிவா” என்று 

 சிவசங்கரியை ‘சிவா’ என்று உரிமையுடன் அழைத்துப் பேசலானார். 

 

அதில் குளிர்ந்து போன சிவசங்கரி, 

“அப்பறம் நாம அடுத்த வாரம் கோயிலுக்குப் போகலாமா சுமதி?” என்று இவரும் தோழமை உணர்வுடன் கேட்க, 

 

“போகலாமே சிவா…! இனிமே இப்படி நிறைய அவுட்டிங் ப்ளான் போடலாம்” என்று கலகலப்பாகப் பேசினார்.

 

“ஹாஹா…! ஜமாய்ச்சுடலாம் சுமதி”சம்பந்திகளாக வேண்டியவர்கள், அது நடக்கவில்லை என்றதும் தோழமைப் பாராட்டிக் கொண்டனர். 

 

” எந்த கோயில்?, எந்த ஏரியா? என்று வாட்சப்பில் அனுப்பி விடு சிவா. நான் வந்துடறேன்” என்று கூறி வைத்து விட்டார். 

 

சுமதிக்கு தனக்குத் தோழி கிடைத்து விட்டாள் என்பதில் ஒரே சந்தோஷம்… !  

 

ஆனால் இதை வைத்து தன் மகனுக்கும் , அவரது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற எண்ணம் சத்தியமாக இவருக்கு இல்லை.அதற்காக சிவசங்கரியிடம் நட்பு பாராட்டவும் இல்லை. 

 

🌸🌸🌸🌸🌸🌸

 

“கேட்டேன் சுபா.பையன் கிட்ட பேசிட்டு நம்பர் அனுப்பி விட்றேன் என்று சொல்லி இருக்காங்க”

 

சுபாஷினியிடம் கூறியவர் தாங்கள் இருவரும் நண்பர்களாகி விட்டதையும் பெருமையுடன் கூறினார். 

 

இளந்தளிருக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்னை அவ்வளவு எளிதில் இம்மாதிரி நட்பைத் தேடிக் கொள்பவர் இல்லையே… ! 

 

அதுவும் இவளைத் தன் மகனுக்குப் பெண் பார்க்க வந்தப் பெண்மணியுடன் நட்பு மலர்ந்துள்ளது என்றால் ஆச்சரியம் ஏற்படும் தானே… ! 

 

“எப்படி அம்மா இவ்ளோ சீக்கிரத்தில் நீங்க அவங்களோட ஃப்ரண்ட் ஆகி இருக்கீங்க?”

 

“அவங்களோட குணம் எனக்குப்  பிடிச்சிருந்தது. அதுவுமில்லாமல் அவங்க தான் ஃப்ரண்ட் ஆகலாமா? என்று கேட்டாங்க நானும் சம்மதிச்சுட்டேன். நாங்க கோவிலுக்குப் போக எல்லாம் ப்ளான் போட்டிருக்கோம்” என்று உற்சாகத்துடன் கூறிய தாயை மகள்கள் இருவரும் வாஞ்சையுடன் பார்த்தனர். 

 

அவரது கண்களில் தான் எத்தனை மகிழ்ச்சி உணர்வு… ! 

 

அந்த உணர்வை வீட்டிற்கு வந்த கோவர்த்தனனும் தனது தாயின் முகத்தில் பார்த்தான். 


  • தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்