Loading

உத்ரா என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதைப் பார்த்த, துருவ், அவனே அவள் இதழ்களை வசியம் செய்ய, அதில் அவள் தான் மொத்தமாய் தொய்ந்து போனாள்.

ஆரம்பித்து விட்ட துருவிற்கு, இந்த முத்தத்தை முடிக்க மனமே வரவில்லை.

அவளை விட்டு விலகினால், மீண்டும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளிடம் இருந்து பிரித்து வைக்கும் மனதிடம் இருந்து தப்பிக்க, அவள் இதழின் வழியேவே அவள் உயிரையும் உறிஞ்சி எடுத்தான்.

மூன்று வருட, காதலையும், பிரிவையும், தாபத்தையும் ஒற்றை முத்தத்திலேயே அவளுக்கு உணர்த்த முயன்றான் அவனை மறந்து.

அப்படியும் அவனுக்குள் அவளுக்கு தன்னை நினைவில்லை. இப்படி செய்வது தவறு என்று ஒரு புறம் முணுமுணுத்தாலும், காந்தமாய் அவளுடன் ஒட்டிக்கொண்டான்.

சட்டென்று அவள் கூறிய ‘விமனைசர்’ என்ற வார்த்தை அவனுள் தீயாய் சுட, விருட்டென்று அவளை விட்டு விலகினான்.

துருவின் நெடு நீண்ட, முரட்டு முத்தத்தில், மூச்சு விடத் திணறினாலும், அவளுக்கு அவனை தள்ளவே தோன்றவில்லை.

அவனுள் புதைந்து, எழுந்திடவே அவளுக்குள் ஆவல் பிறந்தது.

தன்னிடம் முத்தம் கொடுக்க சவால் விட்டு விட்டு அவனே அவளுக்கு பாடம் எடுப்பதை நினைத்தவளுக்கு கிறக்கத்தில் மயக்கமே வந்துவிட்டது.

அவன் பின்னந்தலை முடியை இறுக்கமாகப் பற்றி தன்னை மறந்தவள், அவனின் திடீர் விலகளில் நிலைகுலைந்து போனாள்.

பெரிய பெரிய மூச்சுக்களை விட்டு கொண்டு, முகம் எல்லாம் சிவந்து நின்றவளை கண்டவன், அவளை வருத்திவிட்டோமோ என்று தன்னையே நொந்தான்.

அவன் விலகியதில் அவனையே உத்ரா புரியாமல் பார்க்க, துருவ் “சாரி” என, நகர போக, உத்ரா “எதுக்கு சாரி” என்று கேட்டாள்.

அவன் தன்னை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற கோபத்தில் பல்லைக்கடித்து கொண்டு, “இனிமே இந்த மாதிரி ஸ்டுப்பிட் மாதிரி பேசிகிட்டு இருக்காத உத்ரா. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. உனக்கு என்னை ஞாபகம் இல்லைன்னு நான் தள்ளி தள்ளி போறேன். ஆனால் நீ இப்படி என்னை சீண்டி விட்டு என்னை உன்கிட்ட விமனைஸர் மாதிரி நடந்துக்க வைக்காத உத்ரா…”கத்தினான்.

அவள் தான், அவனின் கூற்றில் கிறக்கம் தெளிந்து திகைத்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பு, பூக்களைத தூவி,
பனிச்சரிவில் நிற்க வைத்தவன்
சட்டென்று இதயத்தில் நெருப்பையும் கொட்டுகிறாயடா…!

உன் உருவத்தை மறந்த நான்…
என்னுள் நீ விட்டு சென்ற உணர்வுகளை மறக்கவில்லையடா.
மனதினுள் நீ நிரப்பி சென்ற காதலை மறந்த நான்…
அந்த காதல் விட்டு சென்ற தடத்தை மறக்கவில்லையடா.!

கழுத்தில் நீ அணிவித்த பொன்தாலியை மறந்த நான்…
அது என் கழுத்தில் வருகையில் நீ தந்த ஸ்பரிசத்தை மறக்கவில்லையடா…
உன் அன்பை மறந்த நான்…
நீயே என் அன்பு என்று உரைக்கும் போது
அதை மறுக்கவும் இல்லையடா…

ஏனோ எனக்கு நீ யாரோவாக தோன்றியது மாறி…
உனக்கு நான் யாரோவாக தோன்றுவது என்ன விந்தையோ…?

இப்பொழுது எனக்கு இந்த சந்தேகம் தான்…!

பழையதை மறந்த நான்
புதிதாய் உன்னை காதலிக்க நினைக்கிறேன்.

புதியதை ஏற்காத நீ
பழைய காதலியை என்னுள் தேடுகிறாய்…
இப்போது மறதி எனக்கா, இல்லை உனக்கா…
என் ஊனோடு உறைந்தவனே!!!!

என்று மனதில் பெரும் புயல் அடிக்க, ஆடாமல் அசையாமல் துருவையே வெறித்து கொண்டிருந்தாள்.

அவள் பார்வை அவனை என்னவோ செய்ய, அதற்கு மேல் அவளை பார்க்க இயலாமல், அவன் திரும்பி நடக்க, அப்பொழுது அர்ஜுன், உத்ராவிற்கு போன் செய்தான்.

அதன் பிறகே, தன்னை சமன்படுத்தி கொண்டு, அதனை எடுத்தவள் “சொல்லு அர்ஜுன்” என்க, இவ்வளவு நேரம் அனைவருக்கும் மாற்றி மாற்றி போன் அடித்து ஓய்ந்தவன் கடுப்பில் அவளிடம்,

“எதுக்கு எல்லாரும் போன் வச்சிருக்கீங்க… போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்களா? துருவ் எங்க” என்று கேட்க,

உத்ரா, என்னவோ சரி இல்லை என்று நினைத்து, “இங்க தான் இருக்காரு” என்றதில், துருவும் என்னவென்று பார்த்தான்.

அர்ஜுன், நடந்ததை சொன்னதும், உத்ரா “வாட்” என பலமாய் அதிர்ந்தாள்.

“நாங்க உடனே வரோம்…” என்று விட்டு, துருவிடம் பதட்டத்துடன் “சஞ்சுவை காணோமாம்” என்று சொல்ல, அவனும் திகைத்து விட்டான்.

பின், அனைவரும், சஞ்சு காணாமல் போன இடத்திற்கு விரைய, அங்கு, மீரா அழுது கொண்டிருக்க, அர்ஜுன் போலீசிடம் விவரம் சொல்லிக்கொண்டிருந்தான்.

துருவ் “என்னாச்சு அர்ஜுன்” என்று கேட்க, மீரா, மேலும் அழுதாள்.

உத்ரா “மீரா அழாத… யாரு கடத்துனாங்கனு பார்த்தியா” என்று கேட்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

துருவ் அந்த போலீசிடம் எல்லா செக் போஸ்ட்டையும் மடக்கி தேட சொல்ல சொல்லிவிட்டு, மீராவின் அருகில் வர, அவள் முகத்தை மூடி அழுத படி,

“நான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கும் அர்ஜுன்… நான் தான் சரியா பார்த்துக்கல.” என்று கண்ணீரில் கரைய,

அர்ஜுன், “என்ன மீரா இது… பிறந்ததும் சாகப்போனவனை காப்பாத்தி இந்த அளவு வளர்த்துருக்க, அவன் உயிரோட இருக்குறதே உன்னால தான். நீ அமைதியா இரு.

அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. போலிஸ் கண்டுபிடிச்சுடுவாங்க. இல்லைனாலும் நம்ம எப்படியும் அவனை கண்டுபிடிச்சுடலாம்”  என்று அவளை தோளில் சாய்த்துக் கொண்டு அவனும் கண் கலங்கினான்.

உத்ரா, ஏதோ யோசனையுடன், “ரிஷி தான் இப்படி பண்ணி இருக்கணும் நான் அவனுக்கு போன் பண்றேன்” என்று சொல்ல, துருவ் அவளை தடுத்து, “அவன் பண்ணிருக்க மாட்டான்” என்க,

உத்ரா புருவம் சுருக்கி “அப்போ யாரு? சைதன்யாவா.” என்று பார்க்க அவன் “காஞ்சனா” என்றான்.

அவனின் ஆட்களுக்கு போன் செய்து, அவளை ஒரு இடம் விடாமல் தேட உத்தரவிட்டான்.

அஜய், “அவள் தான் பண்ணிருப்பானு எப்படி சொல்ற துருவ்?” என்று கேட்க, அவன் உத்ராவை பார்த்தான்.

உத்ராவும் யோசித்து விட்டு, “சிம்பிள்… சஞ்சுவோட அம்மாவை அந்த காஞ்சனா கொன்னுட்டாள். இப்போ, சஞ்சு ரிஷியோட பையன்னு தெரியவும், அவன் நம்மகிட்ட அவன் இருக்குறது பொறுக்காம, லீகலா அவனை நம்மகிட்ட இருந்து பிரிக்க நினைப்பான். ஆனால் இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனால், காஞ்சனாவோட தப்பு வெளிய வந்துடும்… சோ, அவள் சஞ்சுவை” என்று நடுங்கிய குரலில் சொல்ல, மீரா கதறி அழுதாள்.

உத்ராவுக்கும் அழுகை முட்டிக்கொண்டு வர, ஆனால் இது அழுக சரியான நேரம் இல்லை என்று உணர்ந்தவள்,

மீராவிடம், “ப்ளீஸ் மீரா, அழுகாத…” என்று சமன்படுத்த, துருவ் அவளிடம்

“சஞ்சுவை அவளால ஒன்னும் பண்ண முடியாது மீரா… அப்படி அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா  அவளை எப்படியும் உயிரோட விடமாட்டோம்னு அவளுக்கு நல்லாவே தெரியும். சஞ்சு உயிரோட இருக்குறவரைக்கும் தான் அவளுக்கு பாதுகாப்பு.” என்று சொல்ல, அவள் “அண்ணா” என்று அவன் மேலேயே சாய்ந்து அழுதாள்..

அவன் பரிவாய் அவள் தலையை வருடி கொடுத்து, “நீ முதல்ல அழுகைய நிறுத்து…” என்று சொல்ல, அவள் கேட்கவே இல்லை.

அர்ஜுனும், “மீரா கொஞ்சம் அமைதியா இரு… சஞ்சு கிடைச்சுடுவான்.” என்று சொல்ல அஜய், விதுன், சுஜி மூவரும் அவளை சமாதானப்படுத்தினர்.

உத்ரா, மீராவை இழுத்து, “ப்ச் இப்போ வாயை மூட போறியா இல்லையா… இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா கடத்துனவங்களே உன்கிட்ட வந்து குடுத்துட்டு போய்டுவாங்களா. வாயை மூடிக்கிட்டு போய் உக்காரு” என்று கத்த, அவள் அரண்டே விட்டாள்.

அர்ஜுன், “உதி அவளே” என்று பேச வர, “என்ன உனக்கும் தனியா சொல்லணுமா? அவளை வீட்டுல விட்டுட்டு வா…” என்று அவனுக்கு அழுத்தமாய் கட்டளை இட, மீரா அழுகையை அடக்கிக்கொண்டு “இல்ல நான் இங்கயே இருக்கேன்” என்றாள் கேவலுடன்.

  “நீ இங்க இருக்குறதுனா, போய் தனியா அழுதுட்டு வா. உன் அழுகை சத்தம் எனக்கு கேட்டுச்சு…” என்று மேலும் உத்ரா மிரட்ட, அவள் பாவமாய் அர்ஜுனை பார்த்தாள்.

அர்ஜுன், எதுவும் பேசமுடியாமல் முழிக்க, துருவ் “போதும் விடு…” என்று உத்ராவிற்கு கண்ணை காட்ட, அவளும் அமைதியாகி விட்டாள்.

”ஷப்பா இப்போதான் தெரியுது, ஏன் துருவ் இவள்கிட்டே சுள்ளு சுள்ளுன்னு விழுகுறான்னு.. இவளை இப்படித்தான் கண்ட்ரோல் பண்ணமுடியும் போல’ என்று நினைத்தவளுக்கு துருவ் பேசியது ஒரு தைரியத்தை கொடுத்தது. எப்படியும், சஞ்சுவை காப்பாற்றிவிடலாம் என்ற உறுதியும் பிறந்தது.

பின், அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, செக் போஸ்டிலும் யாரும் அகப்படவில்லை.

வெகு நேரம் அங்கேயே நின்றிருக்க உத்ரா, மீராவிடம், “யாரு கடத்துனதுன்னு பார்த்தியா?” என்று கேட்க, கண்ணீருடன் இல்லை என்று தலையாட்டினாள்.

துருவ் “இங்க சந்தேகப்படுற மாதிரி யாரையாவது பார்த்தியா. யாராவது உன்னை ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சா…” என்று கேட்க, அவள் அதற்கும் இல்லை என்று தலையாட்டினாள் விசும்பலுடன். உத்ரா அவளை முறைக்கவும், வாயை மூடிக்கொண்டாள்.

சுஜிதான் “போதும், உதி அவளை ரொம்ப மிரட்டாத. இந்த நேரத்துல அழுகை தான் வரும். உன்னை மாதிரி கல்லு மாதிரியா இருப்பாள்…” என்று அதட்டி விட்டு, மீராவுக்கு தண்ணீரை வாங்கிக் வந்து கொடுத்தாள்.

உத்ரா பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டு துருவை பார்க்க, அவன் அர்ஜுனிடம், “நீயும் யாரையும் பார்க்கலையா அர்ஜுன்…” என்று கேட்க, அப்பொழுது தான் மீராவுக்கு அர்ஜுன் எப்படி சரியாக அங்கு வந்தான் என்றே தோன்றியது.

“ஆமா அர்ஜுன் அப்போ நீங்க எப்படி இங்க வந்தீங்க…?” என்று கேட்க,

துருவே “அவன்தான், காலைலயும், சாய்ந்தரமும், உங்க ரெண்டு பேருக்கும் பாடி கார்டா உங்க பின்னாடியே தான் வருவானே…” என்றவன் அர்ஜுனிடம் திரும்பி,

“உன் கண்பார்வைல இருக்குற நால தான் நான் கார்ட்ஸ் கூட போடல.
. நீயும் எப்படி பார்க்காம இருந்த அர்ஜுன்” என்று கேட்க, அவனுக்கு தான் ஐயோ வென்றிருந்தது.

எப்பொழுதும் சரியாக வந்துவிடுபவனுக்கு இன்று எனப் பார்த்து, வேலை நெட்டி முறித்தது.

அப்படியும், அதை ஒதுக்கி விட்டு அவன் வருவதற்குள், இப்படி நடந்து விட்டது, என்று கூற, மீராவுக்கு தான், அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாய் இருந்தது. அர்ஜுனை, கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.

மற்றவர்கள் ‘எங்களுக்கு கூட தெரியாம இந்த வேலைய பாத்தியாடா’ என்று பார்க்க, உத்ரா அர்ஜுனை தீயாய் முறைத்தாள்.

இவனுக்கு தான் நான் முக்கியம் இல்லையே அப்பறம் எதுக்கு இவன் அர்ஜுன் கூட நெருக்கமா இருக்கான், என்று வீம்பாய் நினைத்தவள், வலுக்கட்டாயமாக மனதைத் திருப்பி, சஞ்சுவை காப்பாற்றுவதை பற்றி யோசிக்கலானாள்.

கிட்டத்தட்ட, சஞ்சு கடத்தட்டப்பட்டு நான்கு மணி நேரம் ஆனது, இதற்கிடையில் வீட்டில் அனைவருக்கும்  தெரிந்து அவர்கள் பதட்டமானது மட்டும் தான் மிச்சம்.

அந்த ஏரியாவில் சிசிடிவியும் இல்லாததால், என்ன நடந்தது, யார் வந்தார்கள் என்று கூட கண்டறிய முடியவில்லை.

காஞ்சனா பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் கால்களும் எதுவும் வரவில்லை… நேரம் ஆக ஆக  எல்லாருக்கும் பதட்டம் அதிகம் தான் ஆனது.

விதுன் “அந்த ரிஷியும் சைதன்யாவும் எங்க இருக்காங்கனு பார்க்கலாமா” என்று கேட்க,

துருவ் “அவங்களை பத்தியும் எந்த டீடெயில்ஸும் கிடைக்கல…” என்று சொல்ல,

அஜய், “எந்த க்ளுவுமே இல்லாமல் எப்படி கண்டுபிடிக்கிறது” என்று தலையில் கை வைத்தான்.

மீராவுக்கு தான் அழுகை பொத்து கொண்டு வந்தது. அர்ஜுன் மீராவிடம், “மீரா, ஏதாவது யோசிச்சு பாரு… உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா.” என்று கேட்க, அவளும் யோசித்தாள்.

உத்ரா, “இல்ல, கடைக்காரன் கிட்ட பேசும்போது, கார் ஏதாவது உன்னை கிராஸ் பண்ணி போச்சா. கண்டிப்பா ஏதாவது ஒரு சத்தமாவது உனக்கு கேட்ருக்கணும்ல மீரா” என்று கேட்க,

அவள், “இல்ல உத்ரா… நான் கடைக்காரன்கிட்ட காசு குடுக்கும் போது, எனக்கு எந்த சத்தமும் கேட்கல. என் பக்கத்துல தான் நின்னுகிட்டு இருந்தான். ஒரு 2 நிமிஷம் கூட இருக்காது, திரும்பி பார்க்கும்போது அவனை காணோம்.” என்று சொல்ல

துருவ் யோசித்த படியே, மீராவிடம், “நீ பணம் குடுத்துட்டு திரும்பும் போது, சஞ்சுவை காணோம். பட் திரும்பும்போது, வெஹிகிள் எதுவுமே க்ராஸ் ஆகலையா” என்று கேட்க, மீராவுக்கு அழுகையை வந்தது.

“இல்ல அண்ணா எனக்கு எதுவுமே தெரியல… அங்க யாருமே இல்ல” என்று கதறி அழுதாள்.

அர்ஜுன், “சரி மீரா, கண்டுபிடிச்சுடலாம் அழுகாத” என்று சொல்ல,

அவள் “எப்படி அர்ஜுன், எதுவுமே தெரியாம எப்படி கண்டுபிடிக்கிறது. எனக்கு பயமா இருக்கு” என்று நடுங்க, எல்லாரும் குழம்பி போய் இருந்தனர்.

அப்பொழுது உத்ராவிற்கு அன்நோன் நம்பரில் (unknown நம்பர்) இருந்து போன் வர, அவள் போனையே பார்த்து, மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்தாள்.

துருவ் “கண்டிப்பா காஞ்சனாவா தான் இருக்கும். இல்ல அவனை கடத்துனவனா இருக்கும்.” என்று சட்டென்று போலீசுக்கு போன் செய்து, இவள் போனை ட்ராக் செய்ய சொன்னான்.

  உத்ரா போனை ஸ்பீக்கரில் போட, துருவ் நினைத்தது போலவே அது காஞ்சனா தான்.

“என்ன உத்ரா, உன் அண்ணன் மகனை காணோம்னு முழிச்சுகிட்டு இருக்கியா… அவன் என்கிட்ட தான் பத்திரமா இருக்கான்… இப்போ வரை.

ஆனால் இனிமே எப்படினு தான் தெரியாது” என்று நாராசமாக சொல்ல, உத்ரா, கொலைவெறியில் இருந்தாள்.

துருவ் கடுங்கோபத்தில் “வேணாம் காஞ்சனா… அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. உன் சாவு ரொம்ப கொடூரமா இருக்கும்…” என்று உறும,

காஞ்சனா “யாரு என் அண்ணன் மகனா பேசுறது… சு சு… முதல்ல, நீ உன் நண்பன் பையனையும், உன் ஆசை காதலியையும் காப்பாத்த பாரு… அப்பறம் என்னை கொலை பண்றதை பத்தி பார்க்கலாம்.” என்று பாவப்படா,

உத்ரா, “உனக்கு என்ன வேணும்” என்று பல்லைக்கடித்து கொண்டு கேட்டாள்.

அவள், “எனக்கு நீ தான் வேணும்… உன்னை காப்பாத்த தான, துருவ் அவ்வளவு பண்ணுனான். இப்போ, அவன் இருக்கும் போதே, உன்னை ஒண்ணும் இல்லாம ஆக்கணும்.” என்று கத்தியவள்,

பின், “நீ இங்க வரணும்..
நீ மட்டும். அப்படி நீ வந்தா, இந்த பையனை விட்டுடறேன்…” என்று சொல்ல, துருவ் வேண்டாம் என்று தலையசைத்தான்.

உத்ரா, “எங்க வரணும்னு சொல்லு நான் வரேன்… ஆனால் சஞ்சுவுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது” என்று கண்டிப்பாய் கூற,

“உனக்கு இன்னும் 48 மணி நேரம் டைம் தரேன். அதுக்குள்ளே நான் இருக்குற இடத்தை கண்டுபிடிச்சு, நீ இங்க வந்தா.

இவன் முழுசா இருப்பான். உனக்கு க்ளுவும் குடுத்துருக்கேன். முடிஞ்சா கண்டுபிடிச்சு வா. இதுல போலீஸ் தலையிட்டுச்சு இப்பவே இவனை கொன்னுடுவேன். 48 மணி நேரத்துல ஒரு நிமிஷம் தாண்டுனாலும், இவன் ஒவ்வொரு பார்ட்ஸையும் கழட்டி உனக்கு பார்சல் பண்ணுவேன்” என்று நக்கலாய் கூற, அதனைக் கேட்டு, மீரா வெடித்து அழுதாள்.

மற்றவர்களுக்கும் உள்ளுக்குள் நடுங்கியது தான். உத்ரா, கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்தி கொண்டு, அவளிடம் பேச வர,

காஞ்சனா, “48 மணி நேரத்துக்குள்ள என்னை நீ கண்டுபிடிச்சா நம்ம மீட் பண்ணலாம்” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.

துருவ்க்கு போன் செய்த போலீஸ் காலை ட்ராக் செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டு, மேலும், தாங்களும் ரகசியமாய் அனைத்து இடங்களிலும் தேடுவதாய் சொன்னது.

உத்ரா, எந்த க்ளுவும் இல்லாமல் எப்படி கண்டுபிடிக்கிறது… என்று தளர்ந்து போய் அமர, துருவ் “கண்டிப்பா ஏதாவது க்ளூ இருக்கும்… அவனை கடத்துன இடத்துல போய் பார்க்கலாம்” என்று சொல்ல, அனைவரும் அங்கு சென்றனர்.

ஆனால் அங்கே எந்த க்ளுவும் கிடைக்கவில்லை.

தேடி தேடி அலுத்து போகையில் சுஜி சட்டென்று, “உதி எனக்கு ஒரு ஐடியா. மீரா தான் ரோடுப்பக்கம் பார்க்காம திரும்பி நின்னாள். ஆனால் அந்த பலூன் வித்துக்கிட்டு இருந்தவன் ஏதாவது பார்த்துருக்கணும்ல. இல்ல, அவனும் கூட அவளோட ஆளா இருந்துருக்கலாம்ல” என்று சொல்ல,

விது “வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான் உன் மூளையை யூஸ் பண்ணிருக்க” என்று நக்கலடித்ததும் சுஜி அவனை முறைத்தாள்.

துருவ் உடனடியாய், அந்த பலூன் வியாபாரியை தேட போகலாம் என்று சொல்லிவிட்டு, அஜய் விதுனிடம் “பக்கத்து சர்ரௌடிங்ஸ்ல சந்தேகப்படற மாதிரி ஏதாவது பில்டிங் இருக்கானு பாருங்க” என்று அனுப்ப, இரவு நேரம் ஆனதால், அர்ஜுனை சுஜியையும் மீராவையும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு செல்ல சொன்னான்.

மீரா நானும் வருகிறேன் என்று அடம்பிடிக்க, “அந்த கடைக்காரனை கூட்டிட்டு வந்து உன் முன்னாடி நிறுத்துறேன் மீரா, இப்போ வீட்டுக்கு போ.” என்று ஒரு வழியாய் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டான்.

பின், அவன் உத்ராவை அழைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் செலவழித்து, அந்த பலூன் வியாபாரியின் முகவரியை கண்டுபிடித்தான்.

அவனின் வீடு கடல் அருகில் ஒரு குப்பத்தில் இருந்தது. நெருக்கி நெருக்கி இருந்த வீடுகளில், இருவரும் ஒருவாறாக, அவன் வீட்டைக் கண்டறிந்து உள்ளே போக, அங்கு நைந்த ஒரு பாவாடையில் பால் மணம் மாறாத  ஒரு சிறு பெண் தான் இருந்தாள்.

“அந்த கடைக்காரனின் மகளாக இருக்கலாம்…” என்று உத்ரா துருவிடம் சொல்ல,

அவன் “அப்பா எங்கம்மா” என்று கேட்டான்.

அந்த பெண் திருதிருவென முழித்து விட்டு, “அப்பா, கடல் கிட்ட, போட்ல தான் இருப்பாங்க” என்று சொல்லிவிட்டு, “வாங்க காட்டுறேன்…”என்று அழைத்துப் போனாள்.

அங்கு ஒரு படகைக் காட்டி, “இதுல படுத்துருப்பாரு… ஆனால் குடிச்சுட்டு தூங்குறனாள எந்திரிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, ஓடி விட்டாள்.

உத்ரா, “சுத்தம், இவன் குடிச்சுருந்தா எப்படி துருவ் இவன் கிட்ட விவரம் கேட்குறது” என்று புரியாமல் கேட்க,

துருவ் “குடிச்சதை தெளியவச்சுட்டு தான்” என்று விட்டு, அவனை அலேக்காக தூக்கி, கடலில் அவன் தலையை முக்கினான்.

அதில் அவன் உறக்கம் கலைந்து கத்த, துருவ் அவன் வாயைப் பொத்தி, “கத்துன அப்படியே கடல்ல தூக்கி போட்டுடுவேன்…” என்று மிரட்ட, அதில் அவனுக்கு மொத்த போதையும் இறங்கியது.

” சார் சார் யாரு சார் நீங்க…” என்று பதறிப் போய் கேட்க, துருவ் நேராக விஷயத்திற்கு வந்தான்.

“இன்னைக்கு ஒரு பொண்ணு ஒரு சின்ன பையனோட வந்து உன்கிட்ட பலூன் வாங்குனாளா” என்று கேட்க, அவன் தலையை சொரிந்து,

“சார் நிறைய பேர் என்கிட்ட வாங்குனாங்க. நீங்க யாரை கேக்குறீங்க” என்று கேட்க, உத்ரா, அந்த பள்ளியின் பெயரை சொல்லி, அதன் அருகில் வாங்கியவளை கேட்க, அவன் சிறிது யோசித்து விட்டு, “ஆமா” என்று சொன்னதும்,

துருவ் “அந்த பையன், நீ அந்த பொண்ணுகிட்ட காசு வாங்கும் போது தான் கடத்தப்பட்ருக்கான். அவனை கடத்தும் போது நீ அவனை கண்டிப்பா பாத்துருக்கணும். இல்ல பாத்தும் பார்க்காத மாதிரி இருந்துருக்கும்” என்று கை முட்டியை மடக்க,

அவன் மிரண்டு “சார் எனக்கு எதுவும் தெரியாது சார்… அப்படி யாரையுமே நான் பார்க்கல” என்று சொல்ல, அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.

அதில் அவன் “சார் சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்… என் பொண்ணு மேல சத்தியமா சார்” என்று சொல்ல, உத்ராவிற்கு அவன் போய் சொல்கிறான் என்று தோன்றவில்லை.

அவனை துருவ் மேலும் அடிக்கப் போக, அவனை தடுத்து, “விடுங்க துருவ்…” என்று விட்டு, சோர்வாய் திரும்பி நடக்க, அந்த பலூன் வியாபாரி ஏதோ யோசித்து விட்டு, “சார்” என்று அழைத்தான்.

பின் அவனே, “அந்த பையனை கடத்துனதை நான் பார்க்கல. ஆனால் அந்த பொண்ணு என்கிட்ட பணம் குடுத்து நான் சில்லறை குடுக்கும் போது, அந்த பையன் கொஞ்சம் தள்ளி நடந்து விளையாடிட்டு தான் இருந்தான்.

அங்க ஒரு சின்ன சந்து இருந்துச்சு, அதுக்குள்ள தான் அவன் போன மாதிரி இருந்தது. ஆனால் நான் உடனே அங்க இருந்து கிளம்பிட்டேன்…

வேற எதுவும் எனக்கு தெரியல சார்” என்று பாவமாய் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்து கொண்டனர்.

பின் திரும்பி நடக்கப் போகையில் உத்ரா மீண்டும் அந்த பலூன் விற்பவனின் அருகில் வந்து, பளாரென அறைந்து, அவனுக்கு சிறிது பணத்தை கொடுத்தாள்.

அவன் பேந்த பேந்த முழிக்க, “இனிமே நீ குடிக்கறதை நான் பார்த்தேன். நிஜமாவே வந்து உன்னை கடல்ல போட்டுடுவேன். உன் பொண்ணுக்கு நல்ல டிரஸ் வாங்கிக்குடுத்து ஒழுங்கா படிக்க வை… புரியுதா” என்று கர்ஜிக்க, அவன் பேசக்கூட முடியாமல் தலையாட்டினான்.

துருவும், உத்ராவும், வேகமாக சஞ்சு கடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து கொண்டு இருந்தனர்.

உத்ரா, “அந்த சந்துக்குள்ள இருந்து தான் அவனை கடத்திருக்கணுமோ” என்று கேட்க, துருவ் “அப்படித்தான் இருக்கணும்… அங்க போய் தேடி பார்த்தா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்ல, அவளும் இறுக்கமாய் ம்ம் என்று தலையாட்டினாள்..

ஓரிடத்தில் காரை நிறுத்திய துருவ் “அழு உதி” என்றான்.

உத்ரா அவனைப் புரியாமல் பார்க்க, “எவ்ளோ நேரம் அழுகையை அடக்குவ அழுதுரு. அழுது முடிச்சுட்டு… ஃபிரீ மைண்டட் ஆ யோசி” என்று சொல்ல, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பயத்தையும், அழுகையையும் கொட்டினாள்.

துருவிற்கும் சஞ்சுவுக்கு என்ன ஆனதோ என்ற பயம் மனதை அழுத்த, அவனுக்கும் கண்ணீர் வந்தது..

அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொள்ள, மனதில் இருந்ததை அழுகையாய் வெளிப்படுத்தியதா? இல்லை ஒருவர் மற்றவர்க்கு தந்த அணைப்பு தந்த தைரியமா என்று தெரியவில்லை. இருவர் மனதும் இப்போது தெளிவாக இருந்தது. ஒரு சுறுசுறுப்போடு இருவரும், அங்கு வந்து சேர்ந்தனர்.

இங்கு, அர்ஜுன் மீராவை கூட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று அவளை சமாதானப்படுத்தினான்.

அவள், “சஞ்சு கிடைச்சுருவான்ல அர்ஜுன்? அவன் கிடைச்சுட்டா, நான் நான் உங்ககிட்டயே குடுத்துட்றேன். நீங்களே பார்த்துக்கோங்க. ஆனால் அவனை கண்டுபிடிச்சுடுங்க அர்ஜுன் ப்ளீஸ். உங்களை இழந்த மாதிரி நான் அவனையும் இழக்க விரும்பல அர்ஜுன்” என்று தன்னை மறந்து அழுக, அர்ஜுனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

அர்ஜுன், அவளை இறுக்கி அணைத்து, “அவன் உனக்கு சொந்தமானவன்டா. நான் அவனை உன்கிட்ட” என்று சொல்ல வருகையில், விதுன் அங்கு வந்தவன் இவர்களின் நிலையை பார்த்து விட்டு,

அஜயிடம், “பாரு பங்கு இவன் இதான் சாக்குன்னு அவளை கட்டிபுடுச்சுக்கிட்டு இருக்கான்… ஏன் தள்ளி நின்னு சமாதானப்படுத்துனா அவன் கேட்கமாட்டாளாமா” என்று கேலி செய்ய,

அஜய், “விடுடா, சஞ்சு கிடக்கிற வரைக்கும் தான் அவனுக்கு இந்த ஆஃபர். அப்பறம் அண்ணி மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடுவாங்க” என்று முணுமுணுக்க, சுஜி, இருவர் முதுகிலும் சப்பென்று அடைத்தாள். 

“உங்களை துருவ் ப்ரோ வெளிய போய் பார்க்க சொன்னாங்கள்ல, இங்க என்னடா, பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று அவளும் உள்ளே எட்டி, அங்கு நடப்பதை பார்த்ததும்,

“இதை போய் ஏண்டா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று முறைத்தாள்.

அஜய், “ம்ம் தலையெழுத்து இதை பார்க்கணும்னு இருக்கு… அவன் கார் சாவியை எடுத்துட்டு வந்துட்டான்”  என்று கதவை தட்டி, அவனிடம் கார் சாவியை வாங்கிவிட்டு வெளியில் வந்தனர்.

சுஜியும் நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி, அவளும் உடன் சென்றாள்.

செல்லும் வழியில், விதுன் “அஜய் எனக்கு இந்த இடத்தை பார்த்தா டவுட் ஆ இருக்கு…” என்று சொல்ல, அந்த புதருக்கு அருகில் சென்று பார்த்தவர்கள், அங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அதை நோக்கி சென்றனர்.

மெதுவாய் அடி மேல் அடி வைத்து மூவரும் சத்தம் வரும் திசையில் செல்ல, அங்கு, திருட்டுத்தனமாய் ஒரு ஜோடி காதல் செய்து கொண்டு இருந்தது.

அதனைப் பார்த்து விட்டு, அஜயும், சுஜியும் விதுனை முறைக்க, அவன் பாவமாக, “கடத்தல் பண்ற இடத்துல எல்லாம் இதுங்க காதல் பண்ணுனா. அப்பறம் கடத்தலுக்கு என்ன பங்கு மரியாதை” என்று கேட்க, அவனை குனிய வைத்து கும்மி விட்டு மீண்டும், பயணத்தை தொடர்ந்தனர்.

இப்போது சுஜி, ஒரு இடிந்த மண்டபத்தை பார்த்து, “பங்கு எனக்கு இங்க தான் டௌட் ஆ இருக்கு. உள்ள போய் பாப்போமா” என்று கேட்க, மூவரும், உள்ளே சென்றனர்.

அந்த இடம் பார்க்கவே திகிலாக இருந்தது. கடும் இருட்டு வேறு… போனில் லைட்டை அடித்து கொண்டு மூவரும் செல்ல,

அங்கு ஒரு கருப்புப் போர்வை அணிந்த ஒரு உருவம், சடாரென அவர்கள் முன்னே வர, விது “ஐயோ பேய்” என்று கத்தியதில் ஆ வென கத்திக்கொண்டே மூவரும் ஆளுக்கொரு திசையில் ஓடினர்.

உறைதல் தொடரும்…!
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
58
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்