434 views

 

 

மான்குட்டிக்கு மருத்துவ சிகிச்சைகள் உள்ளே நடந்து கொண்டிருக்க, தந்தையானவன் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் அவள் இருக்கும் அறையை பார்த்துக் கொண்டிருந்தான். மகிழினி ஆகாஷிடம் நடந்ததை கேட்க, “நீ உயிரோட இருக்கணும்னா இங்க இருந்து போ” பார்வையை மாற்றிக் கொள்ளாமல் உரக்க பேசினான் ரகுவரன்.

 

அனைவரின் பார்வையும் அவளிடம் திரும்ப, “ரகு” அதிர்ந்தாள் மகிழினி.

 

“உன்னை காதலிச்சதுக்காக பொறுமையா பேசிட்டு இருக்கேன். என் தங்கத்துக்கு அப்பாவா நடக்க வைச்சிடாத. உன்ன பார்க்குறது மட்டும் இல்ல உன் குரலைக் கேட்க கூட எனக்கு அருவருப்பா இருக்கு. என் பொண்ணு முகத்துக்காக உன்ன சும்மா விடுறேன். இனி என் மூஞ்சிலயே முழிக்காத. நான் செத்தா கூட என்னை பார்க்கணும்னு நினைக்காத.”

 

“என்னப்பா இப்படி பேசுற அவளும் உன்ன மாதிரிதான பிள்ளைய நினைச்சு அழுதுட்டு இருக்கா. இந்த மாதிரி நேரத்துல ஆறுதல் சொல்லாம இன்னும் நோகடிச்சிட்டு இருக்க.” 

 

“இங்க யாருக்கும் பேச உரிமை இல்லை. அவளுக்கு ஆதரவா பேசுற யாரா இருந்தாலும் அவ கூடவே போயிடுங்க.”

 

“ரகு கொஞ்சம் யோசிச்சு பேசு” என்ற அன்னைக்கும் அவன் கோபத்தையே பதிலாக கொடுக்க, “நான் என்ன பண்ணேன் ரகு” என்றவள் கணவனின் தோள் மீது கை வைத்தாள். 

 

 

கையோடு சேர்ந்து ரகுவரன் அமர்ந்திருந்த இருக்கையும் தலைகீழாக விழுந்து அந்த மருத்துவமனையை அலறவிட்டது. மகிழினி உட்பட அனைவரும் அதிர்ந்து காதில் கை வைத்துக் கொள்ள, மருத்துவமனை ஊழியர்கள் அத்தனை பேரும் அங்கு வந்து விட்டனர். 

 

 

ரகுவரனின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்டபடி வசை பாடியவர்கள் நோயாளிகளுக்கு தொந்தரவு தராமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். யார் பேசினாலும் தன் கோபம் குறையாது என்ற தோரணையில் சுவற்றில் பார்வையை பதித்தான் ரகுவரன்.

 

“இப்ப எதுக்கு இந்த மாதிரி அவகிட்ட பிகேவ் பண்ணிட்டு இருக்க? உனக்கு மட்டும் தான் குட்டிமா கிட்ட அக்கறை இருக்கிற மாதிரி ஓவரா பண்ற. உன்ன விட அம்மா அவளுக்கு தான் அதிக கஷ்டம் இதுல. கடத்தினவன் கிட்ட கோபத்தை காட்டுன சரி…இவ என்ன தப்பு பண்ணா? இவ கிட்ட கட்டிட்டு இருக்க.” அக்காவிற்காக  பேசுவதாக எண்ணி ரகுவரனின் கோபத்தை அதிகப்படுத்தினான் ஆகாஷ்.

 

 

மகள் கண் முழிக்கும் செய்தி தான் தனக்கு முக்கியம் என்ற எண்ணத்தோடு வார்த்தையை விடாமல் அமைதி காத்தான். ஆனால் சுற்றி இருந்த ஆட்கள் யாரும் அதற்கு ஒத்துழைக்காமல் போக, 

 

“என்ன நடந்தாலும் இவள தான் நீ தப்பு சொல்ற. அப்படி என்ன இப்போ இவ தப்பு பண்ணிட்டா? சொல்லுடா என்ன பண்ணிட்டா… என்னமோ குட்டிமாவ கடத்துனதுக்கு இவதான் காரணம்ங்கிற மாதிரி பேசுற.” என்றிட, ஆகாஷை திரும்பி முறைத்தவன் “ஆமாண்டா என் தங்கத்தை கடத்துனதுக்கு இவதான் காரணம்” என்றான் மனைவியை நேருக்கு நேராக பார்த்து.

 

 

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழினியை திரும்பி பார்க்க, அவளோ ரகுவரனை பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். “இந்த வாடகை தாய் விஷயத்துல தலையிடாத சம்பந்தப்பட்ட அதிகாரிங்க பார்த்துப்பாங்கன்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன். என்கிட்ட இனிமே பண்ண மாட்டன்னு சொல்லிட்டு மறைமுகமா அவனை கைது பண்ண எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணி இருக்கா. பதிலுக்கு அவனும் இவளுக்கு நிறைய குடைச்சல் கொடுத்து இருக்கான். ஏதாச்சும் ஒன்னு சொன்னாளாடா உன் அக்கா?” என்றவன் கோபத்தை மனைவியிடம் திருப்பினான்.

 

“உனக்கு என்னடி நீ தான் நாட்டை காப்பாத்த போறன்னு நினப்பா? எல்லாரும் எல்லா விஷயத்தையும் ஒரே மாதிரி பண்ணிட்டு இருக்க முடியாதுன்னு உன் மரமண்டைக்கு எத்தனை தடவை சொல்றது? சரி பண்ணி தொலைச்ச இதைத்தான் பண்றன்னு எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன? 

 

அதை கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா யாரு கடத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம நீயே எல்லாத்தையும் பண்ண பாரு… அந்த துரோகத்தை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் டி. சொன்னது சொன்னதுதான் நான் செத்தாலும் இனிமே நீ என் முன்னாடி வரக்கூடாது.” என்றவன் திருப்பிக் கொள்ள, அதிர்ந்த முகம் அதிர்த்தபடியே இருந்தது நாயகிக்கு.

 

 

ரகுவரன் வார்த்தையை கேட்ட பின் யாரும் எதுவும் பேசவில்லை அங்கு. நிசப்த அமைதி நிலவியது அவரவர் உள்ளம் உட்பட. ஐந்து நிமிடம் கழித்து வெளியில் வந்த மருத்துவர் பிள்ளை நலமாக இருப்பதாக செய்தி உரைக்க, கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். வேண்டிய தகவலை சொல்லியவர் புறப்படும் நேரம்,

 

“டாக்டர்” என்றழைத்தான்.

 

மருத்துவர் ரகுவரனை நோக்க, இதுவரை பயத்தில் இருந்த முகம் சங்கடத்தில் தடுமாறியது. அதை உணர்ந்து கொண்டவர் எதற்காக என்று கேட்டிட, “என் பொண்ணு…” அதற்கு மேல் பேச முடியாமல் வாய் பின் வாங்கியது.

 

 

ரகுவரன் கேட்க வருவது புரியாமல் அங்கிருந்த ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவரோடு சேர்ந்து முழிக்க, ” தங்கம்…உள்ள…படு…படுத்து…” எவ்வளவு முயன்றாலும் முழுதாக மனதில் இருப்பதைக் கேட்க முடியவில்லை ரகுவரனால்.

 

 

என்றும் இல்லாத தடுமாற்றம் ரகுவரனிடம் தென்படுவதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயந்துவிட்டார்கள். ஆகாஷ் மச்சானுக்கு தோள் கொடுக்கும் எண்ணத்தோடு ஆதரவு தர, “அவன்… என் தங்கம்…” பலமுறை முயற்சித்தும் கேட்க முடியாததால் மண்டியிட்டவன் கதறி அழுதான் தன் மனதில் இருக்கும் பாரம் அத்தனையும் குறையும் வரை.

 

 

இதுவரை இப்படி ஒரு ரகுவரனை சந்திக்காதவர்கள் அவனிடமே தஞ்சம் அடைந்தார்கள் தோள் கொடுத்து. எவ்வளவு பலம் கிடைத்தாலும் ஈடுகொடுக்க முடியாமல் பலம் இழந்தவன் கதறிக் கொண்டிருந்தான் இவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து வைத்திருந்த மனதிற்கு விடுதலை கொடுத்து.

 

தந்தையின் அழுகையில் மகிழ்வரன் அழுக துவங்க, பிள்ளைகளுக்காக தேற்ற ஆரம்பித்தார்கள் உறுப்பினர்கள். இருந்தும் அடங்க மறுத்தவன் கால் மடக்கி தரையில் விழுந்தான் அழுகையோடு. தந்தையின் செய்கைகளை காண பொறுக்காத மகிழ்வரன்  அருகில் சென்று கண் துடைத்தான்.

 

 

பற்ற தூண்டுகோல் இல்லாமல் மனதளவில் தவித்துக் கொண்டிருந்தவன் மகனை கட்டி அணைத்து முன்பு அழுததை விட சத்தமாக அழுக ஆரம்பித்தான். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள,

 

“என் பொண்ணு உடம்பளவுல பாதிக்கப்படாம இருக்காளா டாக்டர்…” என்ற வாசகம் தான் அவன் அழுகையை நிறுத்தியது.

 

 

மகிழனியின் வார்த்தையை கேட்ட மற்றவர்கள் திடுக்கிட்டு மருத்துவரை பார்க்க, மனைவி முகத்தைப் பார்த்தான் ரகுவரன். கணவன் மீது இருக்கும் பார்வையை மாற்றாமல் கண் கலங்க… நின்று கொண்டிருந்தவள், 

 

“அதைத்தான் என் புருஷன் கேட்க முடியாம தடுமாறிட்டு இருக்காரு. உண்மைய சொல்லுங்க என் பொண்ணு என் பொண்ணாவே இருக்காளா…” அடக்க முடியாமல் உதடு விம்மி துடித்தது கேட்டு முடிப்பதற்குள் அவளுக்கு.

 

 

தந்தையின் கதறலை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்த பெண் மருத்துவர், “மிஸ்டர் ரகுவரன் உங்க பொண்ணு ரொம்ப நலமா இருக்காங்க. முக்கியமா உங்க பொண்ணா இருக்காங்க. மயக்க மருந்து கொஞ்சம் அதிகமா கொடுத்ததால எழுந்திருக்க லேட்டாகும் அவ்ளோ தான்.” என்றதும் கையெடுத்து கும்பிட்டான்.

 

 

எத்தனையோ சம்பவங்களை கடந்து வந்த பெண் மருத்துவர், “உங்கள மாதிரி ஒவ்வொரு ஆணும் நினைச்சிட்டா பெண்கள் யாருக்கும் இதை நினைச்சு பயப்பட வேண்டிய தேவை இருக்காது. உங்க பொண்ணு ரொம்பவே லக்கி இப்படி ஒரு அப்பா கிடைச்சதால.” மனதார வாழ்த்துவிட்டு விடை பெற்றார்.

 

 

பிள்ளையை பார்த்து விட்டு வந்தவர்கள் பெற்றோர் இருவரையும் காண, அவர்கள் இருவரும் மகளைப் பார்க்கவில்லை. யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் அப்படியே அனைவரும் அமர்ந்திருக்க, தன்னை தேற்றிக்கொண்டு மருத்துவரை சந்தித்தவன் அடுத்த சில நிமிடங்களில் மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஏற்பாட்டை செய்தான். 

 

 

கண் திறக்கும் வரை இங்கேயே இருக்கட்டும் என்ற பெரியவர்களிடம், “என் தங்கத்துக்கு நடந்த எதுவும் தெரியக்கூடாது. அவ ஏதாச்சும் கேள்வி கேட்டா நான் சமாளிச்சிக்கிறேன். என் பொண்ணு கண்ண திறக்கும் போது வீட்ல இருக்கணும். எல்லாரும் நடந்ததை மறந்துட்டு பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பட்ட பண்ணுங்க.” என்று விட்டு சொன்னது போல் அனைத்தையும் செய்தான் ஒரு முறை கூட மனைவியை பார்க்காமல்.

 

 

வெளியில் அழைத்து வரும்பொழுது ரகுவரன் மகளை பார்க்காமல் திரும்பிக் கொள்ள, மகிழினி யாரையும் பார்க்காமல் ஒதுங்கிக் கொண்டாள். இருவரின் நிலையும் அறிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்கள் அங்கிருந்தவர்கள். 

 

***

 

மான்விழி உறக்க நிலையில் அப்படியே படுத்திருக்க, அவள் பக்கத்தில் தமையன் மட்டும் சோக முகத்தோடு அமர்ந்திருந்தான். தாய் தந்தை இருவரை தவிர அவளை சுற்றி அனைவரும் நின்றிருந்தார்கள். தந்தையானவன் மகள் இருக்கும் அறையைப் பார்த்தவாறு வெளியில் அமர்ந்திருக்க, மகிழினி வேறொரு அறையில் இருந்தாள். 

 

இருவரும் மகள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தார்கள் குற்ற உணர்ச்சியில். அவள் எழுந்து விட்டால் சமாளிக்க ஏற்கனவே ரகுவரன் கதை ஒன்றை மனதுக்குள் திரித்து வைத்திருக்க, மகள் கேட்க போகும் கேள்வியில் தான் அதன் வீரியம் இருக்கப் போகிறது.

 

பருவ வயதை எட்டப் போகும் பிள்ளையின் மனதில் விதைத்து விட்ட இந்த சம்பவத்தை எப்படி நினைவில் இருந்து அழிப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் மகிழினி. இருவரின் நினைப்போம் மகள் மீது இருக்க, இருவரும் அவரவர் துணையின் உணர்வுகளை நினைக்க தவறினர்.

 

காலையில் மயங்கிய பிள்ளை மாலை நான்கு மணி போல் எழுந்தது. உயிர்த்துடிப்புகள் அனைவருக்கும் வேகமாக துடிக்க, ரகுவரன் முன்னரே சொல்லிவிட்டதால் அழாமல் உணர்வுகளை கட்டுப்படுத்தினர்.

 

தலை சுற்ற திறந்த கண்கள் மீண்டும் மூடிக்கொண்டது. தம்பியானவன் கன்னத்தை உசுப்ப, விழி திறக்க முயன்றாள். மகள் கண் விழித்த விஷயத்தை பெற்றோர்களுக்கு பகிர்ந்தார்கள். இருவரும் இருக்கும் தோரணையை மாற்றிக் கொள்ளவில்லை.

 

 

என்ன முடிவோடு இருக்கிறார்கள் என்பதை அறியாத குடும்ப உறுப்பினர்கள் மான்விழியை சமாளிக்கும் தெம்பு இல்லாமல் தடுமாற, எழுந்த பிள்ளை ஒன்றும் புரியாமல் வீட்டை சுற்றிப் பார்த்தது. 

 

“குட்டிமா என்னடா அப்படி பார்க்குற?” என்ற மாமனுக்கு ஒன்றும் இல்லை என தலையாட்டியவள், “அப்பா” என தந்தையை கேட்டாள்.

 

 

அனைவரையும் முந்திக்கொண்டு குரல் ஓசை மகள் செவியை எட்டியது, “தங்கம் அப்பா எங்க இருக்கேன், வாங்க” என்ற ரகுவரனின் சத்தம்.

 

*****

 

 

பழைய நினைவுகளில் ஆழ்ந்து வெளிவர முடியாமல் தத்தளித்தான் ரகுவரன். இதுவரை நடந்ததை கேட்டுக் கொண்டிருந்த அழகுசுந்தரம் கண்ணில் அருவி. அவரையும் அறியாமல் அவை விடாமல் கொட்டிக் கொண்டிருக்க, கைகள் பேச்சை நிறுத்திய ரகுவரனின் தோள்களை தொட்டது. 

 

உணர்ந்தாலும் திரும்பாமல் அவன் நிற்க, “உங்களுக்குள்ள என்னவோ பிரச்சனை இருக்கும்னு விளையாட்டா கேலி பண்ணிட்டு இருந்தேன். இதைக் கேட்டதுக்கு அப்புறம் தான் பிரச்சனையோட வீரியம் என்னன்னு புரியுது மருமகனே… மன்னிச்சிடு.” என்றார்.

 

 

வலி நிறைந்த பக்கத்தை புரட்டியதால் அவருக்கு பதில் சொல்லாமல் ரகுவரன் அமைதிக்காக்க, “என்ன இருந்தாலும் இதுல மகிழினியும் ரொம்ப பாவம் தான். அவ மட்டும் என்ன தெரிஞ்சா எல்லாத்தையும் செஞ்சா. நீ பேசின வார்த்தை அவ மனச ரொம்ப காயப்படுத்திடுச்சு போல அதனால தான் அங்க இருந்து வந்துட்டா.”  என்றவரை இந்த முறை திரும்பி பார்த்தான்.

 

“தப்பு செஞ்சவளுக்கு சப்போர்ட் பண்றன்னு நினைக்காத மருமகனே. இதை அவ வேணும்னே பண்ணல அதனால தான் பேசுறேன். அப்படியே தப்பு பண்ணாலும் உன் பொண்ணு மாதிரியே பொண்டாட்டியும் உனக்கு முக்கியம் தான. திட்டி அடிச்சுட்டு அரவணைச்சு இருக்கலாம். அதை நீ பண்ணாததால தான் இந்த பிரிவு உங்களுக்குள்ள.”

 

 

ரகுவரன் எதையோ அவரிடம் சொல்ல வந்தான். தடுத்து நிறுத்தியவர், “உன்னோட கோபமும் நியாயம் தான் மருமகனே நான் அதை எப்பவும் மறுக்க மாட்டேன். சில நேரம் குடும்பத்துக்குள்ள நம்ம நியாயத்தை விட, குற்றத்தை மன்னிச்சி விடுறது தான் ரொம்ப முக்கியம். தண்டனை வழங்க குடும்பம் ஒன்னும் கோர்ட் இல்ல, நீ நீதிபதியும் இல்லை.” என அவர் வாழ்ந்த அனுபவத்தில் அறிவுரை கூறினார்.

 

 

அதன்பின் ரகுவரன் பேசுவதை நிறுத்தி விட, தொடர்ந்து அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் பெரியவர். முடிந்து போன விஷயத்தை கிளறி காயப்படுத்தியதும் இல்லாமல் அறிவுரை என்ற பெயரில் விடாமல் காதை செவிடாக்கும் அழகின் மீது சிறிது கோபம் வர துவங்கியது ரகுவரனுக்கு. 

 

அதை அறியாத கொடைக்கானலின் ஹீரோ இப்போதே மகிழினியிடம் பேசி சரிப்படுத்த போவதாக குதித்தார். ரகுவரன் எவ்வளவோ தடுத்து பார்த்தும் அடங்குவதாக இல்லை அவர். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்வை நடத்துபவர் போல், “நான் இப்பவே என் பொண்ண கூட்டிட்டு இங்க வரேன். உங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல வைச்சி இன்னையோட இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” ஒரு வேகம் எடுத்து புறப்பட்டார்.

 

 

இதற்கு மேலும் அவரை தடுக்கக் கூடாது என்ற முடிவில் ரகுவரன் தடுப்பதை நிறுத்திக் கொள்ள, அழகுசுந்தரம் கதவை திறக்கும் நேரம் போருக்கு படையெடுக்கும் வீரர்கள் போல் அவரை தள்ளி விட்டுக்  ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்மணிகள் ரகுவரனை கட்டிக் கொண்டனர்.

 

 

சாதாரணமாக திரும்பி நின்றவன் தன்னை தாக்கும் புயல்களை பார்க்க முடியாமல் தடுமாற, கட்டு பிடித்துக் கொண்டு சாவு வீட்டில் கதறுவது போல் சத்தமிட்டு அழுதனர். அவர்களின் சத்தத்தை வைத்து தான் வந்திருந்தது இங்கு வசிக்கும் குடும்ப தலைவிகள் என்பதை கண்டு கொண்டான். வந்தவர்களை கண்டு அழகுசுந்தரம் வாய்ப்பிளந்து பார்க்க,

 

“எப்பா… இப்படி ஒரு கஷ்டத்தை உனக்குள்ள வச்சுக்கிட்டா ரெண்டு நாளா சிரிச்ச முகமா இருக்க.” என்றார் அழுது கொண்டிருந்தவரில் ஒருவர்.

 

“ஒரு அப்பனா உன்னோட துடிப்பும் பாசமும்… வியப்பா இருக்கு. உன்ன மாதிரி ஒரு அப்பனை இந்த ஊரு உலகம் பார்த்தே இருக்காது.”

 

“தங்கம் தங்கம்னு வாய்க்கு வாய் இப்படி பேசறதை வச்சே தெரியுது உன் பொண்ணு தான் உன்னோட உலகம்னு. அந்த பொண்ணுக்கு ஒரு ஆபத்து வந்ததுக்கு அப்புறம் நீ எப்படிப்பா கோபத்தை காட்டாம இருப்ப.”

 

“உன் முன்னாடியே உன் பொண்ண கடத்திட்டு போய் உன்னை இவ்ளோ பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டானுங்களே பாவி பசங்க அவனுங்க நல்லா இருப்பாங்களா.” ஒருவர் பின் ஒருவராக புலம்ப ஆரம்பித்தார்கள்.

 

 

திரும்ப முடியாமல் சிறை பட்டுக்கொண்டிருந்த ரகுவரன் அவர்களை விட்டு விலக முயற்சிக்க, அப்போதுதான் அவனை இறுக்கமாக பிடித்திருந்த ஒரு இல்லத்தரசி, “என் மகனும் அப்படியே உன்ன மாதிரி தான். என் மேல அம்புட்டு ஒரு பாசமா இருப்பான். என்ன ஆச்சோ ஏதாச்சோ கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே மாறிட்டான். இப்போ என்னன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்கிறான். உன்ன மாதிரி என் மேல பாசம் காட்ட எனக்கு ஒரு ஜீவன் இல்லையே…” தன் வீட்டுக் கதையும் சேர்த்து சுமத்தினார் ரகுவரன் மீது.

 

 

“உன்னை ஏதோ பொறுப்பில்லாத பையன்னு வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டிட்டேன்ப்பா என்னை மன்னிச்சிடுப்பா.” என்ற ஒருவர் அவரை விட்டு விலகி நிற்க, அதை பயன்படுத்தி அனைவரையும் விலக்கினான். 

 

 

மூச்சு வாங்கி பாவமாய் நிற்கும் ரகுவரனை பார்த்த ஒருவர், “உன்னோட வருத்தத்தை எங்களால புரிஞ்சுக்க முடியுது. உன்னோட இடத்துல யாரா இருந்தாலும் இதைவிட மோசமா நடந்திருப்பாங்க. உன் பொண்டாட்டி மேல வச்ச பாசத்தால வார்த்தைய விடாம வைராக்கியமா வாழ்ந்துட்ட.” என்றார்.

 

“எனக்கு அப்பவே தெரியும் அவ தான் ஏதோ வேல பார்த்து இருக்கான்னு. இல்லனா பொண்டாட்டி போய்ட்டா ஜாலியா ஊர் சுத்துற இந்த ஆம்பளைங்களுக்கு மத்தியில இவ்ளோ தூரம் தேடி வந்திருப்பானா இவன்.” ஆறுதல்  சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு நடுவில் ஆக்ரோஷமான குரல் ஒன்று ஒலித்தது. 

 

அவரை யார் என்று ரகுவரன் பார்ப்பதற்கு முன், “எனக்கு கூட க்கா… அவளை பார்க்கும் போதே ஏதோ சரியில்லன்னு தோணுச்சு. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்… அன்னைக்கு என்னமோ

பார்க்ல அந்த மாதிரி அடிச்சிட்டு போறா. பக்கத்துல இருந்த எனக்கே ரொம்ப மன வருத்தமாயிடுச்சு. கட்டுன புருஷன் இவனுக்கு எப்படி இருக்கும்.” பல்டி அடித்தார் கூடவே இருந்த மற்றொருவர்.

 

 

“அட சும்மா இருங்க! ஒரு பொண்ண பத்தி இப்படி வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. ஒரு அம்மாவா அவளுக்கு இல்லாத பயமும் அக்கறையுமா அப்பா இவனுக்கு இருக்க போது. இந்த மாதிரி ஆகும்னு அவ என்ன கனவா கண்டா.”

 

“நீங்க சொல்ற பாயிண்ட் எனக்கும் சரின்னு படுது மேடம். அவ பக்கம் இருக்க நியாயத்தை கேட்டுட்டு தான நம்ம ஒரு முடிவுக்கு வர முடியும். பிள்ளை‌ மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தா யாரு உதவியையும் எதிர்பார்க்காம தானே கண்டு பிடிக்கணும்னு முயற்சி எடுத்து இருப்பா.”

 

 

“நீங்க பேசறது எல்லாம் சரிதான் மேடம் அதுக்காக புருஷன் கிட்ட  மறைக்கிறது தப்பு தான.”

 

“அவ ஒன்னும் வேணும்னே மறைக்கல இவன் அன்னைக்கு இனிமே எதுவும் பண்ண கூடாதுன்னு சொன்னதால தான அவ மறைச்சா.”

 

“ஆம்பள புத்தி இல்லாம சொல்லிட்டாலும் புரிய வைக்க வேண்டியது ஒரு பொண்டாட்டியோட கடமை.”

 

“இந்த இடத்துல கடமைய பத்தி எதுக்காக மேடம் நீங்க பேசுறீங்க? அப்போ புருஷனுக்கு கடமை செய்ய தான் பொண்டாட்டி இருக்காளா!”

 

“இருந்தா என்ன மேடம் தப்பு? நீங்க நான் முதல் கொண்டு எல்லாரும் இங்க அப்படித்தான இருக்கோம்.” என்றவர் சபையை பார்த்து,

 

“என்ன எல்லாரும் வினோதினி மேடம் பேசுறதை கேட்டு சும்மா இருக்கீங்க. நம்ம எல்லாரும் புருஷன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தான இங்க நடக்கிறோம். இந்த காலத்து பொண்ணுங்கள மாதிரி ஏட்டிக்கு போட்டியா நம்ம எதுவும் பண்றது இல்லயே.” என்றிட, அவருக்கு துணையாக வந்த கூட்டம் பாதி சேர்ந்து கொண்டது.

 

 

எதிர் தரப்பில் பேசிக் கொண்டிருந்தவர் மீதமிருந்த கூட்டத்தை பார்த்து, “இதெல்லாம் அடிமைத்தனமா தெரியலையா உங்களுக்கு. ஒரு பொண்ணா இருந்துட்டு நம்மளே ஒரு பொண்ணோட உணர்வை புரிஞ்சுக்காம நசுக்கும் போது ஆண் சமூகம் எப்படி புரிஞ்சிக்கும். இப்போதான் காலம் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. இந்த மாதிரி பழமைவாதிகளால திரும்பவும் புதைஞ்சு போயிடும்.” என்றிட, மீதமிருந்த கூட்டம் அனைத்தும் இவர் பக்கம் நின்றுகொண்டது.

 

 

“புதுமை பண்றோம்னு நீங்க ஆரம்பிச்ச விஷயத்தால தான் இப்போ எல்லாம் குடும்பம் ரெண்டா கிடக்குது. முக்கியமா புருஷன் பேச்சை பொண்டாட்டி கேக்குறது இல்ல பொண்டாட்டி பேச்சை புருஷன் கேக்குறது இல்ல.” 

 

“எதுக்காக கேட்கணும்? இது குடும்பமா இல்ல கோர்ட்டா வர ஆர்டரை அப்படியே செய்ய.”

 

“அப்படி செய்யாம போனதால தான் மகிழினி இப்படி வாழா வெட்டியா இங்க வந்து இருக்கா.”

 

“இந்த மாதிரி செய்யணும்னு கட்டாயப்படுத்துனதால தான் இவனும் இங்க வந்து பொண்டாட்டி பின்னாடி கெஞ்சிட்டு இருக்கேன்.”

 

“ரகுவரன் ஒன்னும் பொண்டாட்டி பின்னாடி சுத்துற ஆள் கிடையாது. அவனுக்கு தன்னோட குடும்பமும் பெண்ணும் ரொம்ப முக்கியம். அதனால தான் சிதைய கூடாதுன்னு இங்க வந்து நிற்கிறான்.”

 

“இவன் அந்த எண்ணத்தோட இங்க வரல. பொண்டாட்டி இல்லாம குடும்பத்தை சமாளிக்க முடியாம வந்திருக்கான். இப்பவாவது ஒரு பொண்ணோட தேவை இல்லனா குடும்பம் நல்லபடியா இருக்காதுன்னு புரிஞ்சுக்கோங்க.”

 

“ரகுவரன் அம்மாவுக்கு அம்மாவாவும் அப்பாவுக்கு அப்பாவுமா இருந்து பிள்ளைகளை பார்த்துக்குற தெம்பு அவனுக்கு இருக்கு. தாலி கட்டினவ மேல பாசம் வச்சதால தான் இங்க வந்திருக்கான் அதை புரிஞ்சுக்கோங்க முதல்ல நீங்க எல்லாரும்.”

 

 

“மேடம் வீணா பேச்ச வளர்க்காதீங்க தப்பு மகிழினி மேல தான் இருக்கு.”

 

“இல்லவே இல்ல ரகுவரன் மேல தான் முழு தப்பும் இருக்கு.”

 

“என்ன தப்ப கண்டுபிடிச்சிட்டீங்க இவன் மேல.” என்ற பெண்மணி ஒருவர் ரகுவரின் சட்டையை பிடித்து இழுத்து கேட்க, முழி பிதுங்கி விட்டது அவனுக்கு. 

 

 

மருமகனின் அவஸ்தையை கண்ட அழகுசுந்தரம் பெண்களுக்கு மத்தியில் வந்து சமாதானப்படுத்த, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் தூக்கி அடித்தார் ஓரமாக. நல்ல வேலையாக அங்கு இருக்கை ஒன்று இருக்க, உயிர் பிழைத்த நிம்மதியில் மூச்சை இழுத்து விட்டார் அழகுசுந்தரம்.

 

 

அதற்குள் ரகுவரனின் சட்டையை பிடித்திருந்தவர் மீண்டும் தவறை கேட்க, “நான் செய்யக்கூடாதுன்னு சொன்னதை செய்யவே கூடாதுன்னு தடுத்து வச்சது தப்பு. அதனால தான் அவ யாருக்கும் தெரியாம செய்ய வேண்டியதா போச்சு.” என்றதும் அவன் சட்டையைப் பிடித்திருந்த பெண்மணி வேகமாக உதறி தள்ள, அழகுசுந்தரத்தின் மேல் விழுந்தான் ரகுவரன்.

 

அதைக் கூட அறியாது அங்கிருந்தவர்கள் முட்டிக்கொண்டனர். “நல்லது சொல்ற புருஷன் பேச்சை கேட்காம போனதால தான் பொண்ண கடத்துற அளவுக்கு போச்சு.” என்று.

 

 

“சரி பிரச்சனை நடந்ததுக்கு அப்புறமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.”

 

 

“அதேதான் ரகுவரன் கிட்டயும் நாங்க கேட்கிறோம். என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சவன் அப்பவே பொண்டாட்டி கிட்ட கேட்க வேண்டியது தான.”

 

“இவன் பிள்ளைய தேடுவானா இல்ல பொண்டாட்டி கிட்ட சண்டை போடுவானா?”

 

“அப்புறம் எதுக்கு பொண்ண ஹாஸ்பிடல்ல வச்சிட்டு சண்டை போடணும். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தனியா கூப்பிட்டு கேட்கலாம்ல. எல்லார் முன்னாடியும் சண்டை போட்டு இருக்கானே… அவ தன்மானம் என்ன ஆகுறது?”

 

 

“பொண்ண கடத்திட்டு போனவங்க ஏதாச்சும் பண்ணி இருந்தா பிள்ளையோட நிலைமை என்ன ஆகுறது?.”

 

“அந்த அளவுக்கு எல்லாம் எதுவும் நடந்திருக்காது நீங்க கற்பனையில பேசாதீங்க.”

 

“அதேபோல நீங்களும் அவ தன்மானம் போச்சுன்னு நடந்தது தெரியாம பேசாதீங்க மேடம்.” எதற்காக இங்கு வந்தோம் என்ற காரணத்தையே மறந்து ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர் இரு அணி சார்பாக.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்