Loading

          “அதி என்ன சொல்றான் அழகி?” அதிர்ச்சி விலகாது மிருதுளா கேட்க, அழகி கல்லென இறுகினாள்.

          

         “வெல்லக்கட்டி போய் கவி பாப்பா கூட விளையாட்றீங்களா? நான் வந்து உங்க ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்.” என்று கதிர் கேட்க, அதிரனும் சரி என்று தலையாட்டி கன்னத்தில் முத்தமிட்டு அவனிடத்திலிருந்து இறங்கி ஓடினான்.

         

         “மிருதுளா!” என கதிர் தொடங்க, 

         “வேண்டாம் கதிர்! நானே சொல்றேன்.” என்று அழகி அவனை தடுத்தாள்.

         

         மற்றவர்கள் கதிரையும் அதிர்ந்து நோக்க, அதனை பொருட்படுத்தாத கதிர் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக நின்று கொண்டான். நிரஞ்சனும் அவனருகே சென்று நின்று கொள்ள மற்ற மூவரும் ஏனென்று புரியாது திகைத்தாலும் அழகி கூறப்போவதை கேட்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

         

      மூச்சை இழுத்து விட்ட அழகி, “அதி சொல்றது உண்மை தான் அண்ணி! அதி என் புள்ள தான். நான் அவனை பெத்தெடுக்கல. ஆனா அவன் பிறந்ததிலிருந்தே அவனை தூக்கி வளர்த்துருக்கேன்.” என்றாள்.

      

       “அப்போ அதி?” என மிருதுளா கேள்வியாய் பார்க்க, ஒரு நொடி அமைதி காத்தாள் அழகி.

       

       “அதிரன் என் சீனியர்ஸோட பையன். அவங்க ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. இனிமே எதுக்கு வாழணும்ன்ற எண்ணம் வந்தப்ப அதுக்கான பதிலா வந்தவன் அதி! என்னை மாதிரியே யாருமில்லாம போனவனுக்கு எல்லாமுமா இருக்கணும்னு அவன என் புள்ளயா வளர்த்துக்கிட்ருக்கேன்.” என இடைவெளிவிட்டவள்,

 

      “நான் கல்யாணமாகி டிவோர்ஸ் ஆனவ.” என்ற அழகியின் குரல் உடைவதை உணர்ந்த கதிர், 

 

     “அழகி போதும். மிச்சத்த நான் சொல்லிக்கிறேன்.” என குரலுயர்த்தி தடுத்தான்.

 

     “இல்லை கதிர். நானே..” என அவள் பேச முயல, “நான் சொல்லிக்கிறேன்னு சொல்றேன்ல.” என கதிர் அழுத்தமாய் உரைத்து அதே அழுத்தத்தை பார்வையிலும் காட்ட, அழகி அமைதியானாள்.

 

     “உங்களுக்கென்ன அழகியோட பாஸ்ட் பத்தி தெரியணும். நான் சொல்றேன். அழகி நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணமானவ தான். ஆனா அவள கட்டுனவன் சாகல. உயிரோட தான் இருக்கான். ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சு.” என்ற கதிர் அவளது கடந்தகாலத்தை ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரின் மனதை போலவே அச்சூழலும் கனம் கூடியதாக மாறியது.

 

     “பெத்தவங்களும் கைவிட்டு தனியா நின்னப்ப அவளுக்கு ஆதரவா இருந்து தங்களோடவே வச்சு பார்த்துக்கிட்ட அவளோட காலேஜ் சீனியர்ஸோட பையன் தான் அதிரன். கொஞ்சமா இவ தெளிய ஆரமிச்சப்ப அடுத்த அடியா அவளுக்கு ஆதரவா இருந்தவங்களும் ஆக்ஸிடென்ட்ல போக, உடைஞ்சு போய் கிடந்தவளுக்கு நம்பிக்கைய தந்தது அதிரன் தான். அவனுக்காக எழலாம்னு எழுந்து நிக்கிறா. தான் கண்ணு முன்னாடி தன்னோட அப்பா அம்மாவ ஒரு கார் மோதுனது அதிரன ரொம்ப பாதிச்சுருச்சு. அவன மறுபடி இயல்பாக்கணும்னு தான் அழகி நிரஞ்சன் ஃப்ரண்ட் நேத்ரா மூலமா இங்க வேலைக்கு வந்தா. வாழ்க்கைல எது எதெல்லாம் ஒருத்திக்கு நடக்கக்கூடாதோ அத்தனையும் அவளுக்கு நடந்துருக்கு. அத்தனையும் தாண்டி கடந்து வந்து நிக்கிறவளுக்கு வாழ்க்கை எவ்வளோ அழகானதுனு அவக்கூட வாழ்ந்து காட்ட விரும்பறேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அதிரனுக்கு இதுதான் வாழ்க்கை இப்படி தான் வாழணும்னு வாழ்ந்துக்காட்ட ஆசைபட்றேன்.” என்று நிறுத்தி மூச்சுவிட்டவன்,

 

      “அழகிய பத்தி இப்ப எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கல்ல. உங்க மூனு பேருக்கும் ஒரு ரெக்வஸ்ட். அழகிக்கிட்ட இனிமே அவ பாஸ்ட் பத்தி பேசவோ கேக்கவோ செய்யாதீங்க. அதே போல அதிரன இப்ப எப்படி பார்க்குறீங்களோ அப்படியே பாருங்க. அதி அழகியோட புள்ளதான்! என் பையன் தான்!” என்று அனைவரையும் பார்த்தான்.

 

      மிருதுளா கண்களிலிருந்து பொலபொலவென்று நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அழகியின் வாழ்வில் இவ்வளவு துயரங்களா? என்று எண்ணியவள் கண்ணீர் வழிய தலைக்கவிழந்து நின்றிருந்த அழகியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அழுதாள்.

 

     “உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு டி. சத்தியமா உன் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லடி.” என்ற மிருதுளா அவளது பிறைநுதலில் இதழொற்றி, “எதுக்குடி அழற? இனிமே நீ அழவே கூடாது.” என அவளது கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

      கண்கலங்கி நின்றிருந்த சக்கரவர்த்தியும் ராம்குமாரும் இருபெண்களையும் கண்டு மெலிதாய் இதழ் வளைத்தனர்.

 

     சக்கரவர்த்தி அழகியின் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு செல்ல, ராம்குமார் ஆதுரமாய் அவளது தலை வருடி கொடுத்து புன்னகைக்க, அவனை நிமிர்ந்து நோக்கிய அழகியின் கண்ணீர் அழுகையாக மாறியது.

 

     “அழாத டா. உனக்கு அண்ணன் நான் இருக்கேன் எப்பவும்.” என்ற ராம்குமாரும் கண்கலங்க, “ஏங்க என்னங்க நீங்களும் சின்ன புள்ள மாதிரி.” என மிருதுளா அவனது கரம் பற்ற, “இல்ல டி.” என்ற ராம்குமார் அதற்கு மேல் பேச முடியாது அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான்.

 

    “ஏங்க.. கதிர் அழகியை பாரு.” என்றுவிட்டு மிருதுளாவும் அவனது பின்னே சென்றாள்.

 

     கதிர் அழகியின் அருகே வர, அவனை பார்த்த அழகி வெடித்து அழுது அவனை கட்டிக் கொள்ள, தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட நிரஞ்சன் அவர்களுக்கு தனிமை தந்து அங்கிருந்து அகன்றான்.

 

       அவளது அழுகை அவனை வேதனையுற செய்ததில், “அழகி போதும் டி. அன்னைக்கே அவ்வளோ அழுதுட்ட. இன்னைக்கு மறுபடியும் அழாத. இனிமே உன் பாஸ்ட்ட நினைச்சோ இல்ல அதிரன நினைச்சோ நீ அழவே கூடாது.” என்றான்.

 

    அவள் அப்பொழுதும் அழுகையை நிறுத்தாதிருக்க, “ஏய் இப்ப நீ அழறத நிறுத்த போறியா இல்லயா? அழகி இங்க பாரு டி. அழாத டி.” என அவளது முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.

 

    “அழாத டி.” என கண்களை துடைக்க, அவளோ “நான் என் பாஸ்ட்ட நினைச்சு அழல.” என்றிட, “பின்ன?” என அவன் குழப்பமாக பார்த்தான்.

 

     “உன்னை நினைச்சு அழறேன்.” என்கவும் அவன் புரியாது பார்க்க, “நீ எனக்கு கிடைச்சத நினைச்சு சந்தோஷத்துல அழறேன் மக்கு சாம்பிராணி.” என அவள் மெலிதாய் கண்ணீரினூடே இதழ் வளைத்து அவனது நெற்றியில் தட்டினாள்.

 

     “ஒரு நிமிஷம் துடிச்சுட்டேன் டி எருமை.” என அவனும் அவளது நெற்றியில் தட்டி அவளை இறுக்கி கட்டிக்கொள்ள, அவளோ அவனை அடித்தாள்.

 

     “ஏய் ஏன் டி அடிக்கிற?”

 

     “நீ ஏன் டா முன்னாடியே என் வாழ்க்கைல வரல?” என்று அழகி அழுகையோடு வினவ, அவளது விழியிலிருந்த வலியை உணர்ந்தவன் பட்டென்று அவளை தன் நெஞ்சில் புதைத்து இன்னும் இறுக்கி அணைத்து கண்கலங்கினான்.

 

      அழகியும் அவனை இறுக்க கட்டிக்கொண்டு அவனோடு ஒன்றினாள். அவளுக்கு அந்த அணைப்பு மிகவும் தேவையாய் இருந்தது. இருவரும் இறுகிய அணைப்பினில் அன்பை வெளிப்படுத்தி தங்களது மனம் கொண்ட வலியை கடக்க முயன்றனர். 

 

       நிமிடங்கள் கரைந்துக் கொண்டிருந்தது. அழகியின் அழுகை நின்றிருந்தது. இருவரும் அணைப்பிலிருந்து விலகவில்லை. இறுக்கம் மட்டும் மெல்ல தளர்ந்துக் கொண்டிருந்தது. உடன் அவர்களது மன இறுக்கமும் தான்! 

 

     “அழகி!” , மென்மையாய் அழைத்தான்.

 

    “ம்ம்.” 

 

     “அழகி! இங்க பாரு டி.” என்றவன் அழைக்க, “கொஞ்ச நேரம் கதிர்!” என அழகி மேலும் அவனது நெஞ்சில் முகம் புதைக்க, 

 

     “நிமிர்ந்து மட்டும் பாரு டி.” என்றவன் கெஞ்சலாய் கூற, அழகி மெல்ல நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

 

     அவளது பிறைநுதலில் முத்தமிட்ட கதிர், “இப்ப நான் வந்துட்டேன்ல. உன்கூட இருக்கேன்ல இனிமே நீ அழாத டி. நீ அழுதா மனசுல யாரோ பெரிய பாறையை ஏத்தி வச்ச மாதிரி இருக்கு. ரொம்ப கஷ்டமாயிருக்கு.” என்று வேதனையோடு கூற, அவன் அனுபவித்த வேதனையை அவனது குரலில் மட்டுமல்லாது விழிகளிலும் கண்ட அழகி மெதுவாய் புன்னகைத்து, “இனிமே எப்பவுமே அழ மாட்டேன். போதுமா?” என்று கூற, அவனது இதழ்களில் மென்னகை விரிந்தது.

 

     அழகி பட்டென்று அவனது கன்னத்தில் முத்தமிட, அவன் விழி விரித்து ஆச்சர்யங்கலந்த மகிழ்ச்சியோடு அவளை பார்க்க, அவளோ புன்னகைப் புரிந்து மீண்டும் அவனது நெஞ்சில் முகம் புதைக்க, அவனும் புன்னகைத்து அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டினான்.

 

      சில நிமிடங்கள் அப்படியே இருந்த இருவரும் மெல்ல பிரிந்து ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 

 

      “போலாமா?” என கதிர் கை நீட்ட, புன்னகையோடு அவனது கையில் அழகி தன் கரம் சேர்க்க, இருவரும் இரவு உணவை உண்ணச் சென்றனர்.

 

     சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தி, ராம்குமார், மிருதுளா, நிரஞ்சன் நால்வரும் இருவரும் சிரித்த முகமாய் கைக்கோர்த்தபடி வருவதைக் கண்டு புன்னகைத்தனர்.

 

       நிரஞ்சனுக்கு இருவரது காதலையும் ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்ட மகிழ்ச்சி! மிருதுளாவிற்கு தனது தம்பிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்த மகிழ்ச்சி! ராம்குமாருக்கு அழகியின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை கண்டு அவளது வாழ்க்கையை பற்றிய கவலையானது மறைந்த நிம்மதி! சக்கரவர்த்தி மட்டும் ஆழ்ந்த அமைதியோடும் புன்னகையோடும் அமர்ந்திருந்தார். அவரது அமைதிக்கும் புன்னகைக்குமான அர்த்தம் யாதென்பதை அவரும் காலமும் மட்டுமே அறிவர்! 

 

         இருவரும் வந்தமர்ந்ததும் அனைவரும் சிரித்து பேசியபடி உண்டு முடித்து அவரவர் அறைக்குச் சென்றனர். கவி பாப்பாவோடு விளையாடிபடியே உறங்கிவிட்டிருந்த அதிரனை தூக்கி தோளில் போட்டுக் கொண்ட கதிர் அழகியையும் அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் செல்லவும் வாசலில் ஒலியெழுப்பியபடி மகிழுந்து ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

 

       யாரென்று பார்க்க வாசலுக்கு சென்ற மிருதுளா, சென்ற வேகத்திலேயே திரும்பி ஓடி வந்து நிரஞ்சனது காதில் எதையோ கூற, நிரஞ்சன் வேகமாக அழகியின் அறை நோக்கிச் சென்றான். 

 

     மிருதுளாவின் பதற்றத்தை கண்ட ராம்குமாரும் சக்கரவர்த்தியும் யார் வந்திருப்பது என்று வினவிட, அவள் “அம்மா!” என்றதுமே அவளது பதற்றம் இருவருக்கும் தொற்றிக் கொண்டது. நொடியில் சுதாரித்த இருவரும் பதற்றத்தை வெளிக்காட்டாது மிருதுளாவையும் அமைதியாக இருக்கும்படி கூறினர்.

 

      ராம்குமார் தனது கைப்பேசியின் வழியே கதிருக்கு அழகியின் அறைவிட்டு வெளி வர வேண்டாம் என்றும், நிரஞ்சனை உடனடியாக கீழே வரும்படிக் கூறியும் குறுந்தகவல் அனுப்பிவிட்டு தனது மாமியாரை வரவேற்க தயாரானான்.

     

       

          

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்