2,131 views

தன் காதலுக்கு பதில் கேட்டு, பாவையவளின் முகம் நோக்கி காத்திருந்த ஜீவாவிற்கு பதில் கூறாது அமைதியாய் இருந்த கயலின் முகத்தை நிமிர்த்தினான் ஜீவா.

“ஸ்வீட் ஹார்ட். உன்னை ஃபர்ஸ்ட் டைம் எங்க பார்த்தேன் தெரியுமா…” என்று மென்மையான குரலில் கேட்க,

அவள் புரியாமல், “என் காலேஜ்ல தான பார்த்தீங்க. அதுவும் என்னை தப்பா நினைச்சு…” என்று கூறும் போதே, அவளுக்கு கண் கலங்கி விட்டது.

அதில் மறுப்பாக தலையாட்டியவன், “இல்ல ஸ்வீட் ஹார்ட். உன்னை அதுக்கு முன்னாடியே பார்த்துருக்கேன்…” என்றதும் தான் அவளுக்கு, அன்று ஜீவா ‘நான் காதலித்த பெண்’ என்று கூறியது நினைவு வர, அதனை அடக்கிக் கொண்டு, அவனை ‘எங்க’ என்பது போல் பார்த்தாள்.

அவன் சிறு நகையுடன், அவனது போனில் ஒளிந்திருந்த அவளின் புகைப்படத்தைக் காட்ட, அதனைக் கண்டவள் விழி விரித்து ஜீவாவைப் பார்த்தாள்.

மென்னகை ஜீவாவின் இதழ்களில் பரவ, “இந்த மழைல தான் உன்னை முதல் முதல்ல பார்த்தேன் ஸ்வீட் ஹார்ட். பார்த்ததுமே என்னால உன்னை கடந்து போக முடியல. என்னையவே அறியாம உன்னை போட்டோ எடுத்துட்டேன்.

அதுக்கு அப்பறம் எப்போ கோயம்பத்தூர் வந்தாலும் போற வழியில எல்லாம் உன் முகத்தை தான் தேடுவேன்.

அந்த நாய்க்குட்டிக்கு மழைல நனையாத மாதிரி நீ குடை பிடிச்சுட்டு நின்னியே… அதை நினைக்கும் போதெல்லாம், அந்த குடைக்குள்ள உன்னை உரசிகிட்டு நான் நிக்கணும் போல இருக்கும்.

அந்த நாய்க்குட்டிக்கு குளிராம இருக்க, நீ உன் உள்ளங்கையை சூடாக்கி அதை தடவி குடுத்தியே… அப்போ, அந்த நாய்க்குட்டியாவே நான் பிறந்துருக்கலாம்னு தோணும்…

அதே மாதிரி நீ என்னை பார்த்துக்கிட்டா எப்படி இருக்கும்னு நினைச்சு நிறைய நாள் ஏங்கிருக்கேன்.

சில நேரம், தூக்கம் வரலைன்னா கூட, உன் முகத்தை நினைச்சா, நிம்மதியா தூங்கிடுவேன். என் மனசுல ஆழமா பதிஞ்ச நீ… அன்னைக்கு அப்படி பேசுனதை கேட்டதும், எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு.

ஒருவேளை உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நான் நிச்சயமா அப்போவே வந்து அவளை அடிச்சுருப்பேன்.

ஆனால் உன்னை உன்னை அங்க எதிர்பார்க்காததுனால என்னால அங்க நிக்க கூட முடியல. ஏதோ ஒரு ஏமாற்றம் மனசு நிறைய…

அப்படியும், கார்த்தி கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிக்க தான் அவனை அந்த இடத்துல வெய்ட் பண்ண சொன்னேன். ஆனால் அவன் தற்கொலை பண்ணிக்கிட்டது தெரிஞ்சதும், நான்… நான்… ஐ வாஸ் டோட்டலி அவுட் ஆஃப் மை கண்ட்ரோல்…” குரல் இடறியது அவனுக்கு.

“உன்மேல அவ்ளோ கோபம், அவளோ பகையை வளர்த்துக்கிட்டேன். உன்னை டார்ச்சர் பண்ணனும்னு நினைச்சேன்.

ஆனா நீ அழுகுறதை பார்க்கும் போதெல்லாம்  எனக்கு… எனக்கு…” என கேசத்தை அழுத்தக் கோதியவன்,

“என்னால முடியாதுடி. என்னை எவ்ளோ கண்ட்ரோல் பண்ணிட்டு உன்னை அப்படி பண்ணேன் தெரியுமா. எங்க உன்னை பார்த்தா என் கோபம் மறைஞ்சுடுமோ, உன்கிட்ட என்னை இழந்துடுவேனோன்னு பயத்துல உன்னை பார்க்காம வெளிய ஓடிடுவேன்.

அதுக்கு அப்பறம் உன்மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சதும், எனக்கே என் மேல கோபம். நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு அப்போதான் எனக்கு புரிஞ்சுது. 

உன்கிட்ட வந்து நான் என்னன்னு சொல்றதுன்னு கூட தெரியல. இதெல்லாம் சொன்னா நீ என்னை நம்புவியா இல்லையான்னு கூட தெரியல…

உங்கிட்ட பாசமா பேசணும்னு தான் நினைப்பேன். ஆனா நீ என்னை பார்த்து பயப்படும் போதுலாம் எனக்கு கோபம் தான் வரும் என்மேலேயே.

அந்த கோபத்தையும் கடைசில உன்மேலேயே காட்டிடறேன். அப்போவே உன்கிட்ட லவ் சொல்லணும், சாரி கேட்கணும்னு தோணும், ஆனா ஏதாவது நடந்து, உன் மேல கோபப்படுற மாதிரி ஆகிடுச்சு…” என்றான் தொண்டை.அடைக்க.

ஆடவனுக்கு கண்கள் கலங்கி இருக்க, “எனக்கு தெரியல கயல். நான் யார்கிட்டயும் அன்பாலாம் இருந்தது இல்ல. ஈவன் கார்த்தி கிட்ட கூட…

எனக்கு அன்பை காட்ட தெரியாததுனாலயோ என்னவோ என் சொந்த தம்பி கூட, என்னை அழிக்கணும்னு தான் நினைக்கிறான்.” என்று மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் கொட்டி தீர்த்தவன்,

“இ… இப்போ கூட, உனக்கு ஆக்சிடென்ட்ன்னு சொன்னதும், என் உயிரே என்கிட்ட இல்லடி. நான் எவ்வளவோ இழந்துருக்கேன். ஆனால் தெரியாம கூட உன்னை இழக்க என்னால முடியாது கயல்… ஐ லவ் யு கயல்…” என அழுத்தம் திருத்தமாய் காதலைக் கூறி முடித்தவனை, கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் கயல்விழி.

அவனும் அவளின் விழிகளில் விழுந்து, அவளையே பார்த்து, “தூக்கத்துல சொல்ற ‘லவ் யு’ வ நேர்ல சொல்லு ஸ்வீட் ஹார்ட்…” என்று குறும்பு மின்னும் குரலில் யாசகமாக கேட்க, அதில் அவள் மேலும் விழி விரித்து, பேந்த பேந்த விழித்தாள்.

அவள் விழியைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன், “ஆனால் நீ ரொம்ப ஸ்வீட்ஸ்ட் ஸ்வீட் ஹார்ட்… தூக்கத்துல சூப்பரா கிஸ் குடுத்து, ப்ரொபோஸ் பண்ணி நல்லா கோ – ஆபரேட் பண்ணுவ…” என்று உதட்டை மடித்து சிரிக்க,

அவளோ செக்க சிவந்த வானமாய் சிவந்து, ‘ஐயோ தூக்கத்துல கனவுன்னு நினைச்சு வேற என்ன என்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணுனோமோ…’ என்று தலை குனிந்தாள்.

பின், அவனை எதிர் கொள்ள இயலாது ஜன்னல் புறம் திரும்பி அமர்ந்தவள், ‘எனக்கு தெரியாம கிஸ் குடுத்துட்டு எப்படி பேசுறான் பாரு…’ என்று மனதில் வறுத்தாலும், அவனின் பார்வை இவளையே தழுவிக் கொண்டிருந்ததில் திக்கு முக்காடிப் போனாள்.

அவளது திணறலை ரசித்த ஜீவா, “கயல்…” என அழைக்க, அவள் திரும்பாவே இல்ல.

“ஸ்வீட் ஹார்ட்…” கிசுகிசுப்பாய் மீண்டும் அழைக்க, அதில் அவள் உருகிப்போனாலும் திரும்பாமல் வீம்பாக அமர்ந்திருந்தாள்.

அதில் சற்று கடுப்பானவன், அவளின் முகத்தை திருப்பி, “ஏய் இப்போ சொல்லுவியா மாட்டியாடி…” என்று கத்த, அதில் அவள் முகத்தை உர்ரென வைத்தபடி திரும்பினான்.

“ப்ச் ஏண்டி என்னை கொல்லுற… ஒன்னு பேசாம சாகடிக்கிற. இல்ல பேசி வார்த்தையால கொல்லுற. இப்போ லவ் யு சொல்லுவியா மாட்டியா…” என்று கெஞ்சலாக ஆரம்பித்து மிரட்டலாக முடித்தான்.

அத்துடன் பொறுமை இழந்தவள், “என்ன சும்மா சொல்லு சொல்லுன்னு சொல்றீங்க… உங்களை லவ் பண்ணாம தான், நீங்க என்னை தப்பா நினைச்சாலும், உங்க கூட இருந்து உங்களுக்கு புரிய வச்சுடலாம்ன்னு நினைச்சு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?

உங்களை லவ் பண்ணாம தான், நீங்க என்ன செஞ்சாலும் அமைதியா இருந்தேனா?

இல்ல உங்களை லவ் பண்ணாம தான், நீங்க என்னை காதலிக்கலைன்னு தெரிஞ்சும், உங்களை விட்டு போகாம முட்டாள் மாதிரி உங்க கூடவே இருந்தேனா?” என ஆதங்கத்துடன் கேட்டவளுக்கு அழுகையும் வர, ஜீவா சற்று திகைத்து அவள் கையை தன் கைக்குள் திணித்துக் கொண்டான்.

“சாரி கயல்… நான் உன்னை ஹார்ட் பண்ணிட்டேன்னு எனக்கு தெரியுது. சாரி டி. தெரியாம பண்ணிட்டேன்…” என்றவன்,

“சரி உன்கோபம் போகணும்ன்னா நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு. பண்றேன்…” என்க,

அவள் “நான் என்ன சொன்னாலும் பண்ணுவீங்களா?” என்றாள்.

“என் உயிரை கூட குடுப்பேன்…” என்று உடனடியாய் பதில் கூறியதில், உள்ளுக்குள் குளிர்ந்தாலும், அசட்டையாக,

“உங்க உயிர் ஒன்னும் எனக்கு வேணாம்… அதை நீங்களே வச்சுக்கோங்க” என்று முகத்தை திருப்பிட,

“அடிப்பாவி…” என முறைத்தான் ஜீவா.

அவள் அதனை கண்டுகொள்ளாமல், “சரி, நான் என்ன சொன்னாலும் கேட்பீங்க தான? அப்போ முதல்ல, உங்களுக்கும் அஸ்வின்க்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க” என்று கேட்க,

அவன் பெருமூச்சு விட்டு, ‘இவள் என்னை வச்சு செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டா. . நீ மட்டும் லவ் யு சொல்லுடி அடுத்த நிமிஷம் உனக்கு எப்படிலாம் தண்டனை குடுக்குறேன்னு மட்டும் பாரு’ என்று மனதில் சிரித்து கொண்டு, நடந்ததை கூறினான்.

நிர்மலா அசோகனிடம் விவாகரத்து வாங்கி விட்டு சென்றதும், அவள் வீட்டில் அவளை கண்டிக்க தான் செய்தனர்.

அதனால், அங்கும் இருக்காமல் தனியாய் இருக்க முடிவெடுத்தவரை சீனிவாசன் தான், “சின்ன பையனை வச்சுக்கிட்டு தனியா இருக்க முடியாது, நீ என் வீட்டுல வந்து இரு. உங்களுக்கும் பாதுகாப்பா இருக்கும்” என்று சொல்ல, அவரும் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த அத்தை மகன் ஆதலால் எதுவும் யோசியாமல் அவருடன் சென்று விட்டார்.

கொஞ்ச நாளில், அவர் இவளிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதற்கு, அவள், “இப்போதான், அந்த சிறையிலே இருந்து தப்பிச்சேன். மறுபடியும், என்னால அந்த கூட்டுக்குள்ள அடைய முடியாது” என மறுத்து விட்டார்.

நிர்மலாவின் கைகளில் பணம் தாராளமாக புரள, சீனிவாசனோ, அவளிடம் இருக்கும் பணத்தை, அடைய வழி தெரியாமல் திணறினார்.

பின், பொறுமையாய் இருந்து, அவளின் சொத்துக்களை வாங்கலாம் என்று நினைத்தவர் அமைதியாய் இருக்க, வருடங்களும் உருண்டோடியது.

அஸ்வினை வைத்து, அவளிடம் காரியம் சாதிக்கலாம் என நினைத்து, அவரை அப்பா என்றே அழைக்க வைத்திருந்தார் சீனிவாசன்.

நிர்மலாவும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் வாழ்க்கைப் பாடத்தை அவரும் கண்டு கொண்டார், ரத்த புற்றுநோய் அவரை தாக்குகையில்.

படுத்த படுக்கையாய் இருந்த போது தான், ஜீவாவின் நினைவு அவரை வெகுவாக தாக்கியது.

சொத்துக்கள் எல்லாம், வைத்தியத்திற்கே கரைந்து, தாயின் வலியை பார்க்க முடியாமல், கலங்கிய சிறுவன் அஸ்வினைக் கண்டு மனம் தவித்தார்.

நோய் முற்றி அவருக்கு மேலும் வைத்தியம் செய்ய வேண்டும் என்ற நிலையில் பணம் இல்லாமல் தவிக்க, சீனிவாசனோ, அவ்வளவு வருடமாக அவளின் பணத்திலேயே வாழ்ந்து விட்டு, சிலதை சுருட்டிக்கொண்டு, “என்னிடம் பணமே இல்லை” என்று சாதித்தார்.

அப்போது தான், ஜீவாவும், கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து வந்தான். ஆனாலும் தன் படிப்பையும் விடாமல், கார்த்திக்கும் எந்த விதத்திலும் குறை இல்லாமல் வளர்க்கவே அவனிடம் பணம் இருந்தது.

அதுவும், சில நேரம் இல்லாமல் திண்டாடுவான். அவன் எஸ்டேட்டிலும் இல்லாமல், மற்ற எஸ்டேட்டில் சென்று வேலை பார்த்து, பணம் ஈட்டுவான்.

அந்த நிலையில் தான் சீனிவாசன், அஸ்வினை தூண்டி விட்டு, “உன் அண்ணன்  நிறைய பணம் வச்சிருக்கான். அவ்ளோ பெரிய பங்களாவில் தான் இருக்கான். சொந்தமா எஸ்டேட்டும் இருக்கு. நீ போய் அவன்கிட்ட பணம் கேளு…” என்று ஏத்தி விட, 13 வயது சிறுவனுக்கும், அவன் கடனில் இருக்கிறான் என்று புரியவில்லை.

அவன் “அப்போ நீங்க போய் கேளுங்க அப்பா” என்று சொல்ல, “நீயும் வா” என அவனை அழைத்துக் கொண்டு, ஜீவாவின் வீட்டிற்கு சென்றவர், அவனை வெளியில் நிற்க வைத்து விட்டு, உள்ளே செல்ல, ஜீவா அவரைப் பார்த்து இறுகிப் போனான்.

அதன் பிறகே, அவனின் அம்மாவின் உடல்நிலை பற்றி அறிந்தவன், திகைத்து, செய்வதறியாமல் நின்றான்.

பின், சீனிவாசனை உறுத்து விழித்து, “என் அப்பாகிட்ட இருந்து ஆட்டைய போட்ட காசுலாம் உன்கிட்ட தான இருக்கும்… இவ்ளோ வருசமும் என் அம்மா காசுல தான சாப்புட்ருப்ப. பணம் இல்லைன்னு பச்சையா ஏன்யா பொய் சொல்ற…” என்று கடுகடுக்க,

அவர், “மரியாதையா பேசு ஜீவா..” என்றார் பல்லைக் கடித்து.

“ஏய் என்னை ஜீவான்னு கூப்பிடாத. என் பேரை வச்ச என் அம்மாவுக்கு கூட அப்படி கூப்பிட உரிமை இல்ல.” என்றவன், அவருக்கு பின்னால் பார்வையைப் பதித்தான்.

அங்கு அஸ்வின் மிரண்டு அவனை பார்த்திருந்ததை கண்டு, தன்னை கட்டுப்படுத்தியவன், “போ… இங்க இருந்து” என்று அவரை அனுப்ப முயல,

அவரோ, “எனக்காக இல்ல, உன் அம்மாவுக்காக இல்ல உன் தம்பிக்காகவாவது இதை செய்யக்கூடாதா…” என்று வருந்திய குரலில் நடிக்க,

அவன் “கெட் அவுட்” என்றான் கர்ஜனையாக. அப்போது ஏற்பட்ட வன்மம் தான் ஜீவாவின் மேல் அஸ்வினுக்கு.

ஆனால் நிர்மலாவை அப்படியே விடவும் ஜீவாவிற்கு மனமில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் ஆகிற்றே…

அவர் இவனை மறந்து விட்டு சென்றாலும், இவனால் அப்படி இருக்க முடியவில்லை. ஆனால் அவனிடமும் பணம் இல்லையே.

என்ன செய்வது என்று யோசித்தவன், அவன் இருந்த வீட்டின் மேல், அவனின் குடும்ப வக்கீல் உதவியுடன் மேலும் கடன் வாங்கி, ஒருவாரமாக பணத்திற்கு நாயாய் பேயாய் அலைந்தான்.

அந்த வருடம், அவனின் கல்லூரிக்கு பீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை சேர்த்து போட்டு, பணம் புரட்டியவனுக்கு நேரில் சென்று கொடுக்க, விருப்பம் இல்லை.

இங்கு, அஸ்வின் அவனின் தாயிடம் “அவன் அவ்ளோ பெரிய வீட்டுல இருக்கான். ஆனால் பணம் இல்லைன்னு சொல்லிட்டான்மா” என்று விழிகளை உருட்டி, கோபமாக சொல்ல,

அவருக்கோ அவன் பணம் தந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. ஒரு முறை மட்டும் அவனைப் பார்க்க வேண்டும் போல் மனம் ஏங்கியது.

சீனிவாசனிடம், அவனை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அஸ்வினிற்கு பிடிக்கவில்லை என்றாலும், சீனிவாசனை விட்டு அவனை அழைக்க கூறினான்.

ஆனால் அவரோ, “நான் போய் கூப்பிட்டேன் நிர்மலா. அம்மா செத்தாலும் நான் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டான்” என சொல்ல, அதில் அஸ்வினுக்கு அவன் மேல் மேலும் பகை வளர்ந்தது.

ஆனால் அவரோ, ஜீவாவை சென்று பார்க்கவே இல்லை. ஆனால் அவனை வேவு பார்த்ததன் மூலம் பணத்தை தயார் செய்து நிர்மலாவின் பெயரில், மருத்துவமனையில் கட்ட போவது தெரிந்தது.

அந்த மருத்துவமனை ரிசெப்ஷனிஸ்ட் – ஐ விலைக்கு வாங்கி, ஜீவாவிடம் போலியான பணம் கட்டிய ரசீதை கொடுக்க ஏற்பாடு செய்து, அந்த பணத்தையும் அவரே சுருட்டிக் கொண்டார்

அதற்கு அடுத்த நாளிலேயே, நிர்மலா இறந்து விட, வைத்தியம் பார்க்க பணம் இருந்தும் தராமல், கடைசி ஆசையை கூட நிறைவேற்றாமல், தன் தாயை தன் அண்ணனே கொலை செய்து விட்டான் என்ற எண்ணம் அந்த பிஞ்சு மனதில், வேரூன்றி நின்றது.

நிர்மலாவின் இறப்பை கேள்விபட்ட, ஜீவா திகைத்து, அவரைப் பார்க்க செல்ல, அஸ்வின் அவனை பார்க்கவே விடவில்லை. அவன் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஜீவாவை தாக்க, ஜீவாதான் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து நின்றான்.

அதன் பின் மருத்துவமனையில் சென்று “பணம் கட்டிய பிறகும் ஏன் சிகிச்சை செய்யவில்லை” என்று சண்டை இட, அதன் பிறகே அவன் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

பெரிய அளவு ஆதரவு இல்லாமல் அவனாலும், அதற்கு மேல் அந்த பிரச்சனையை வளர்க்க முடியவில்லை.

பின், மேலும் கடனுடன் அந்த வீட்டில் இருக்க முடியாமல், வீட்டை விற்றவனுக்கு அதிலிருந்து எல்லாமே கடனுக்கு போய்விட, மீண்டும் உழைத்து நல்ல நிலைக்கு வந்தான், என்று சொல்லி முடித்தான்.

ஜீவா கோபத்துடன், “அந்த ஆளு தான், எல்லாத்துக்கும் காரணம். எனக்கும் அப்போ அஸ்வினுக்கு புரியவைக்கிற அளவுக்கு பொறுமை இல்ல. நேரமும் இல்ல. அவனுக்கு புரிஞ்சுக்க கூடிய வயசும் இல்ல. அதனால அவனை அப்படியே விட்டுட்டேன்…” என்றான்.

அவளோ, “உண்மையிலேயே அப்படியே விட்டுடீங்களா ஜீவா… என்னால நம்ப முடியல” என்று ஆழமாய் அவனைப் பார்த்து கேட்டவளுக்கு, அவனின் காயம் அவளையும் வெகுவாய் கீறியது.

ஜீவாவோ, அவளை விழி விரித்து பார்த்து, பின், அவள் புரிதலில் புன்னகைத்து விட்டு, “ம்ம் அவனை அப்படியே விட முடியல… அதான், ஸ்கூல்ல அவனுக்கு ஸ்காலர்ஷிப் தர்ற மாதிரி, சொல்ல வச்சு, அவனோட படிப்பு செலவை நான் பார்த்துக்கிட்டேன். அப்பறம் காலேஜ்லையும், எல்லா செலவும் ஸ்காலர்ஷிப் மூலமா அவனுக்கு போற மாதிரி அவனை நம்ப வச்சு…”என்றவன் பெருமூச்சு விட, கயலுக்கு தான், அவனின் மேல் காதல் பொங்கியது.

அவனின் கோபம், பிடிவாதத்திற்கு பின்னால், தம்பிகளை காக்க வேண்டும் என்ற பொறுப்பும், சரியான நேரத்தில் அன்பை பெற முடியாத வலியும், இருப்பதை உணர்ந்தவள், அவனையே நேசமாக பார்த்தாள்.

வீட்டில் கார்த்தி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, அப்போது தான் கல்லூரியில் இருந்து வந்த பூவரசி, “யோவ் ஏன்யா இவ்ளோ வேகமா நடக்குற, அப்பறம் மறுபடியும் கால் ஒடைஞ்சுட போகுது” என்று நக்கலடிக்க,

அவளை முறைத்தவன், “ப்ச்… நானே அண்ணாவையும், கயலையும் காணோம்னு பதட்டத்துல இருக்கேன் நீ வேற” என கடுப்படித்தான்.

அவளோ, “அவக என்ன ஸ்கூல் புள்ளைகளா தொலைஞ்சு போக”, என்று மீண்டும் நக்கலாக பார்க்க, கார்த்தி, நடந்ததை சொல்லி, பதட்டப்பட்டான்.

உடனே பூவரசி, “ஏன்யா அதான் கையில இந்த டப்பா வச்சுருக்கியே இதுல இருந்து அக்கா lகிட்ட பேசலாம்ல…” என்று சந்தேகமாக கேட்க, அப்போது தான் ஒரு போன் கூட செய்யமல் லூசு மாதிரி நின்று கொண்டிருக்கிறோம் என்றே அவனுக்கு உறைத்தது.

இருந்தும், அதனை வெளியில் காட்டாமல், “எது என் ஐ போனு உனக்கு டப்பாவா. எங்களுக்கு போன் பண்ண தெரியும், நீ போய் படி போ” என்று அவளை அனுப்பியவன், இவளால நம்ம ரொம்ப அசிங்கப்படுறோமே என நினைத்து விட்டு, ஜீவாவுக்கு அழைத்தான்.

அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே திருடிக் கொண்டிருக்க, கார்த்தியின் அழைப்பில் தான் இருவரும் சுய நினைவுக்கு வந்தனர்.

பின், அவனிடம் விவரம் சொல்லி விட்டு காரை வீட்டிற்கு விட்டவன், அறைக்கு சென்றதும், “ஸ்வீட் ஹார்ட்… அதான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே. இன்னும் கோபம் போகலயா” என்று கேட்க,

அவள், “இன்னும் நீங்க செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கு அப்பறம் நான் யோசிக்கிறேன்…” என குறும்பாக சொல்லி விட்டு அவனிடம் இருந்து தப்பித்து வெளியில் போக,

‘நீ பண்ணுடி… பண்ணு.. என்கிட்ட சிக்குவீல அன்னைக்கு இருக்கு உனக்கு’ என்று மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான்.

நேசம் தொடரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
53
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்