Loading

உத்ரா முத்தம் கொடுத்து விடுவேன் என மிரட்டியதும், அவளை முறைத்து விட்டு காருக்கு வந்த துருவ் குறுநகை ஒன்றை சிந்தினான்.

ஏனோ அவள் அவனை நெருங்கி நெருங்கி வந்தாலும், அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவனுக்கு வேண்டியது உத்ராவின் பரிதாபம் நிறைந்த காதல் அல்ல, அவனின் ஹனியின் நிபந்தனையற்ற காதல் தான்.

ஆனாலும், அவள் செய்யும் சேட்டையை ரசிக்காமல் இருக்கத்தான் முடியவில்லை.

இங்கு உத்ராவும், அவன் சென்ற திசையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்

தான் சொன்னதை நினைத்தவளுக்கு உண்மையில் அப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கையில் மெல்லிய இழையாய் ஒரு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

கூடவே, தான் ஏன் இவனை மட்டும் மறந்தோம்… என்று மனம் ரணப்படவும் செய்தது.

அர்ஜுன் பேசியதைக் கேட்டு மிரண்டிருந்த மீராவுக்கு, அழுகை பொங்கி கொண்டு வந்தது.

அதிலும், தனக்காக, தன் சந்தோஷத்திற்காக அனைத்தையும் யோசிக்கும் அர்ஜூனே அவளிடம் சஞ்சுவை பிரிக்கும்படி பேசியது, மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.

பின், அவளே, அர்ஜுன் சொன்னதும் உண்மைதானே. அவன் இந்த வீட்டு வாரிசு. அவன் இங்குதான்  வேண்டும். பாட்டி, தாத்தா, அத்தை மாமான்னு அவனுக்கு இங்க பெரிய குடும்பமே இருக்கு… என்னால அவனுக்கு என்ன தரமுடியும். என்கூட சேர்ந்து அவனும் அனாதையா தான் வளரனும்’ என்று தன்போக்கில் சிந்தித்தவளுக்கு சஞ்சுவை விட்டுக் கொடுப்பதைப் பற்றி நினைக்கவே உயிரைப் பிரித்தெடுப்பது போல் வலியைக் கொடுத்தது.

மூன்று வருடம்  முன்பு அர்ஜுனை பிரியும் போதும் இதே வலிதான். இப்போதுவரை அந்த வலி தன்னை தொடர்கிறது தானே. இப்போது மறுபடியும் ஒரு பிரிவா… என்று வெதும்பினாள். பின் ஒரு முடிவோடு அலுவலகம் சென்றவள், துருவிடம் சென்று ஒரு கவரை நீட்டினாள்.

அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்து, “என்ன இது” என்று கேட்க,

“என் ரெசிக்னேஷன் லெட்டர்.” என்று அவனை பாராமல் கூற, அவன் சிறிது நேரம் அவளையே உற்று நோக்கி விட்டு, அந்த கவரை வாங்கி கொண்டு,

“இன்னைல இருந்து 3 மந்த்ஸ் நோட்டீஸ் பீரியட் முடிஞ்சதும், நீ உன் செர்டிஃபிகேட்ஸ் வாங்கிக்கோ” என்றான் அலட்சியமாய்.

அவன் சட்டென்று இப்படி கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை அவள். ஒரு மறுப்பாவது சொல்லுவான், இல்லை என்றால், காரணமாவது கேட்பான் என்று நினைத்திருக்க, அவன் எதுவுமே கேட்காதது அவளுக்கு மேலும் கண்ணீரைக் கொடுத்தது.

அரும்பாடு பட்டு, அதனைக் கட்டுப்படுத்தி விட்டு, அவள் அறைக்கு சென்று, தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில், சரியாக அர்ஜுன் துருவிற்கு போன் செய்து,

“என்ன உன் தொங்கச்சி வந்து வேலையை விட்டு போறேன்னு சொன்னாளா.” என்று கேட்க,

துருவ் பெருமூச்சு விட்டு, “ம்ம். அவள் காலைல உன்னை பார்க்க வரும்போதே நினைச்சேன். இப்படி ஏதாவது முட்டாள்தனமா முடிவெடுப்பாள்ன்னு” என்றான் சிறு கடுப்புடன்.

அர்ஜுனும், சோர்வாய் புன்னகைத்து,” நானும் நினைச்சேன். அவள் இங்க இருந்து கிளம்புனதும் நேரா உன்கிட்ட ரெசிக்னேஷன் லெட்டர் குடுக்க தான் வருவான்னு” என்றான்.

துருவ் “என்ன சொன்ன அவள்கிட்ட” என்று கேட்க, அவன் நடந்ததை சொன்னதும்,

“நான் 3 மாசம் நோட்டீஸ் பீரியட்ல ஒர்க் பண்ணனும்னு சொல்லிருக்கேன். அதுக்குள்ள அவளை சரி பண்ணப்பாரு”  என்றான் உத்தரவாக.

அர்ஜுன், “ப்ச்… என்னத்தை சரி பண்ண, தூங்குறவங்களை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எப்படி எழுப்புறதுன்னு தெரியல” என்று சலிப்பாய் கூற,

துருவ் குறும்பாக, “அவள் தூங்குறப்ப ஏன்டா போய் எழுப்புற” என்று கேட்டதும்,

அர்ஜுன், “ஒரு நிமிஷம் இரு” என்று விட்டு, அவனை அவனே கிள்ளிக்கொண்டான்.

பின், “ஆஆ வலிக்குது” எனக் கத்தி விட்டு, “அப்போ உண்மையிலேயே நீ தான் பேசுனியா…?” என்று ஆச்சர்யமாய் கேட்க,

துருவ் போனிலேயே முறைத்து “டேய்” என்றான் அதட்டலாக.

“பின்ன என்னடா அண்ணன் தங்கச்சிங்களுக்கு பேசுறதுனாலே, ஏதோ உங்களை கொலை பண்ற ரேஞ்சுக்கு பில்டப் குடுப்பீங்களே… அதான் கேட்டேன்.” என்று நகைத்து விட்டு போனை வைத்தான்.

தன் உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தன்னை விட்டு விலக நினைத்தவள், சஞ்சுவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைத்து, அவனை விட்டும் விலகுவாள் என்று அவன் கணித்தே இருந்தான்.

எப்பவுமே உனக்காக நீ யோசிக்கவே மாட்டியாடி என்று வேதனையுடன் எண்ணியவன், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானான்.

அஜய் தீவிரமாக, சுஜியிடம் ஏதோ ஒரு ப்ராஜக்டை விவரித்து கொண்டிருக்க, அவளின் மொபைல் டொடய்ங் டொடய்ங் என்று சத்தம் கொடுத்து கொண்டு இருந்தது.

ஆனால் சுஜி அதனை கவனியாமல், ப்ராஜெக்டில் மூழ்க, சிறிது நேரத்தில் அதன் சத்தத்தில் கடுப்பான அஜய், அவள் மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் சந்துருவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதில் “சி யு அட் தியேட்டர் ஸ்வீட்டி” என்று சந்த்ரு அனுப்பி இருந்ததை கண்டவனுக்கு ஏன் என்றே தெரியாமல் கோபம் வந்தது.

அவனே மறுபடியும் சந்த்ருவிற்கு “எனக்கு வேலை இருக்கிறது.. என்னால் வரமுடியாது” என்று குறுஞ்செய்து அனுப்பி, மறக்காமல் அவன் அனுப்பியதை அழித்து விட்டு, போனை ஏரோப்பிளேன் மோடில் போட்டு வைத்து விட்டு, கமுக்கமாக இருந்து விட்டான்.

தான் ஏன் இப்படி செய்தோம் என்று கூட அவன் யோசிக்கவில்லை. சிறிது நேரத்தில், வேலையை முடித்து விட்டு, நிமிர்ந்தவள் போனை எடுத்து பார்க்க, ஏரோப்பிளேன் மோடில் இருப்பதை பார்த்து விட்டு,

“அச்ச்சோ போன்ல டவர் இல்லை… என்ன ஆச்சு” என்று யோசிக்க, அவளை யோசிக்க விடாமல்,

அஜய், “ஹே பஜ்ஜி இந்த கொட்டேஷன் தப்பா இருக்கு பாரு” என்று அவளுக்கு மேலும் மேலும் வேலை கொடுக்க அதில் அவள் இதை மறந்தும் விட்டாள்.

மறுநாள், எப்பொழுதும் போல், மீரா சஞ்சுவை பள்ளியில் விட்டு விட்டு, வீட்டிற்கு வந்தாள்.

அங்கு லட்சுமி, காலில் சுடுநீர் கொட்டி, மயங்கி விழுந்திருந்ததை கண்டு பதறி போய் அவரை எழுப்பினாள்.

“அம்மா அம்மா…” என்று அவர் கன்னத்தைத் தட்ட, அவர் முழிக்கவே இல்லை.

அன்று என்று பார்த்து, கர்ணனும் வேலை விஷயமாய் வெளியூர்  சென்றிருக்க, வேலையாட்களும் யாரும் இல்லை  என்ன செய்வதென்று பதறி இருந்தவள்,உடனே அர்ஜுனுக்கு போன் செய்ய, அவன் சர்ஜரியில் இருந்ததால் போனை எடுக்க வில்லை.

உத்ரா, அஜய், சுஜிக்கு அழைக்க அவர்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால், கவனிக்க வில்லை.

விது வீட்டிலும் அன்று ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தனர். அவர்களாலும் உடனே வரமுடியாது என்று நினைத்தவள் பின், துருவிற்கு போன் செய்து பதட்டமாய் நடந்ததை சொல்லவும், அவன் உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர சொன்னான்.

நேராய் மருத்துவமனைக்கு சென்றதும், பிபி அதிகமானதோடு, வலியில் மயங்கி விட்டார், பயப்பட எதுவும் இல்லை என்று சொன்னதும் தான் இருவரும் நிம்மதி ஆகினர்.

அதன் பிறகே அனைவரும், மீரா அழைத்திருப்பதை கண்டு, திரும்பி அழைக்க, அவள் சொன்னதை கேட்டு பதறி அடித்து ஓடி வந்தனர்.

உத்ரா, லட்சுமி அருகில் அமர்ந்து, “உங்களை யாரு அத்தை வேலை பார்க்க சொன்னா. பாருங்க எப்படி கால்லாம் வெந்து போயிருக்குன்னு” என்று வருத்தமாய் கூற,

அர்ஜுன், “ஆமா உங்களுக்கு கிச்சன்ல என்ன வேலை” என்று கண்டிக்க,

அஜய், “மொதல்ல அப்பாவுக்கு போன் பண்றேன்” என்றதும், இவ்வளவு நேரம் இவர்களின் திட்டை பொறுமையாய் கேட்டவர், கர்ணன் என்று சொல்லவும் “வேண்டாம் அஜய், அப்பாகிட்ட சொன்னா ரொம்ப பதட்டப்படுவாரு. வேலை விஷயமா போயிருக்காரு. அப்பறம் பதட்டத்துல பாதியில வந்துடுவார். அவர் வந்ததும் சொல்லிக்கலாம்” என்று பதற, துருவிற்கு தான் ஆச்சர்யமாய் இருந்தது.

சட்டென்று அவனுக்கு அவனின் தாய் தந்தையர் தான் நினைவிற்கு வந்தனர்.

அவர்களும் இப்படி இருந்திருக்கலாமே என்று மனம் வருந்த, தானும் கூட இப்படி இருக்க முடியாதோ. இறுதிவரை என் உதியை நான் இழந்து விடுவேனோ என்று கண் கலங்கியது. அப்படியே பின்னால் நகர்ந்து வெளியே வந்து விட்டான்.

தன் அருகில் யாரோ நிற்பது போல் இருக்க, திரும்பி பார்த்தவன், அங்கு உத்ரா நின்று கொண்டிருப்பதை பார்த்து, என்ன என்று கேட்டான்.

அவளோ, “எல்லாரும் ஒரே மாதிரி இருக்குறது இல்ல துருவ். கல்யாணத்துக்கு அப்பறம் ஒருத்தரோட லைஃப் சந்தோசமா இருக்குறதும் இல்லை சண்டை போடறதும் அவங்க அவங்க லைப் பார்ட்னர பொறுத்தது.

ஒருத்தர் சரி  இல்லைனாலும்,அந்த குடும்பமே கஷ்டத்தை அனுபவிக்கும். இதுல ரெண்டு பேருமே நீ பெரிசா நான் பெரிசான்னு சண்டை போட்டா, யாருக்குமே நிம்மதி இருக்காது.

ஆனால், இதெல்லாம் ரொம்ப சாதாரணம் துருவ். இவ்ளோ சண்டை போட்ட, உன் அப்பா அம்மா என்னைக்காவது டிவோர்ஸ் பத்தி பேசி இருக்காங்களா” என்று கேட்க, அவனுக்கு தான் நான் நினைத்தது இவளுக்கு எப்படி தெரியும் என்று வியந்து விட்டு, பின், யோசித்து, இல்ல என்று தலையாட்டினான்.

அவள் “ம்ம்… கூடவே இருந்து எவ்ளோ ஈகோ, கோபத்தோடு சண்டை போட்டாலும், அவங்க பிரியணும்னு நினைச்சதே இல்லை. ஒன்னு, அவர்களுக்குள்ள சண்டை வந்தாலும் காதல் அப்படியே இருந்துருக்கனும். இல்லை, உன் அப்பா அம்மாவை வச்சு, உங்களை தப்பா பேசிட கூடாதுன்னு, ரெண்டு பேருமே அட்ஜஸ்ட்  பண்ணிட்டு இருந்துருக்கனும்.” என்றவள்,

“பட் ரொம்ப லக்கில ரெண்டு பேரும்… இப்பவும் ஒன்னாவே சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி ஒரு லக்..” என்றவளுக்கு குரல் கமர, வேறு ஏதோ சொல்ல வந்தவள், விது அங்கு வரவும், பேச்சை நிறுத்தி கொண்டாள்.

உள்ளே அவனின் முகபாவத்தை அவளும் பார்த்துக்கொண்டு தானே இருந்தாள். அவன் எண்ணத்தை துல்லியமாக அறிந்தே அவனிடம் பேசினாள்.

துருவ் கூட அப்பொழுது தான் இதை யோசித்து பார்த்தான், விவாகரத்து எல்லாம் லண்டனில் சாதாரணம். ஆனால் ஒருநாளும் அவர்கள் பிரிவை பற்றி பேசியதே இல்லையே, என்று நினைத்தவன், உதியை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.

அன்று மருத்துவமனையிலேயே இருக்க சொல்லிட, அனைவரும், வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று யாரோ, “ஹே ஸ்வீட்டி” என்று சுஜியை அழைக்க, சுஜி “யாருடா அது” என்று பார்த்தாள்.

சாட்சாத் சந்துருவே தான்.

சுஜி கடுப்புடன் “அப்படி கூப்பிடத” என்று சொல்ல வர, அங்கு அஜய் இருக்கவும் வேண்டும் என்றே,

“ஹே சந்துரு… வாட் அ சர்ப்ரைஸ் நீங்க எங்க இங்க?” என்று கேட்க,

அவன் “ப்ளட் குடுக்க வந்தேன்…” என்றதில், “ஓ நல்ல விஷயம் தான்…” என்று அஜயை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“ப்ளட் தான குடுத்தான் ஏதோ கிட்னி குடுத்த மாதிரி ஓவரா பண்றாள்” என்று அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சந்துரு அப்போது தான் அஜயைப் பார்த்து, “ஹெலோ அஜய்… ஹொவ் ஆர் யு” என்று கையை குலுக்க, அவனும் வேண்டா வெறுப்பாக கை குலுக்கினான். பின், சுஜி, மற்றவர்களையும் அறிமுகம் செய்தாள்.

உத்ராவிற்கு அவன் யார் என்று தெரிந்தாலும், வேண்டும் என்றே அவளை சீண்ட,

“பங்கு, சார் யாருனு எங்களுக்கு இன்ட்ரோ குடு” என்று கேட்க, அவள் திருதிருவென விழித்து கொண்டு அஜயை பார்த்தாள்.

அவனோ, “எங்க ஃபியான்ஸ்ன்னு சொல்லிப்பாரு” என்று அவளை முறைக்க, அர்ஜுனும், துருவும் தான் இவர்களை சுவாரசியமாய் பார்த்தனர்.

அர்ஜுன், “என்ன சுஜி, சார் யாருனு சொல்லு?” என்று மீண்டும் கேட்க, அவள் “அது நான் சொல்லிருக்கேன்ல சந்துருன்னு அன்னைக்கு மாப்பிள்ளை…” என்று திக்க,

விது “இப்போ நீ ஏன் இன்ஸ்டால்மெண்ட்ல பேசிகிட்டு இருக்க” என்றான் நக்கலாக.

பின், சந்துருவே அவள் தோள் மேல் கை போட்டு, “நானே சொல்றேன்… நான் சுஜியோட ஃபியான்ஸ். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.” என்று கூற, அஜய்க்கு அவன், அவள் மேல் கையை போடவும் சுறுசுறுவென கோபம் வந்தது.

சுஜி இதை எதிர்பார்க்காததால், நெளிந்து கொண்டு, அவனை விட்டு விலக, சந்துரு, “இன்னைக்கு ஏன் படத்துக்கு வரலன்னு சொன்ன. இப்போ ஃபிரீயா” என்று கேட்க,

அவள் ‘நான் எப்போ வரலைன்னு சொன்னேன்’ என்று விழித்தாள்.

அஜய் வேகமாக “இல்ல சந்துரு, இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சுஜி தான் அதை அட்டென்ட் பண்ணனும். அவள் உடனே ஆஃபீஸ் போகணும்” என்று சொல்ல, சந்துரு ஏமாற்றமாய் உணர்ந்து விட்டு சுஜியை பார்க்க, அவள் ‘நம்ம எந்த மீட்டிங் அட்டென்ட் பண்ண போறோம்’ என்று மேலும் முழித்தாள்.

பின், சந்துருவே ஒரு வழியாய் கிளம்பி விட, உத்ராவும், மீராவும் லக்ஷ்மியின் அறைக்கு செல்ல, அஜய் சுஜியிடம் கத்து கத்து என கத்தினான்.

“உனக்கு ஏதாவது அறிவிருக்கா.. அவன் பப்ளிக் பிளேஸ்ல இப்படி உன் மேல கை போடறான் நீயும் பேசாம நிக்கிற.” என்று திட்ட, சுஜிக்கு கோபம் வந்து விட்டது.

நான் என்ன வேண்டும் என்றேவா அப்படி நின்றேன் என்று… இருந்தும் ஒன்றும் பேசாமல் அவனை முறைத்து விட்டு, உள்ளே சென்று விட்டாள்.

அதில் அவன் மேலும் கடுப்பாகி, “நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். அவள் எதுவுமே சொல்லாமல் போறா” என்று அர்ஜுனிடம் கடுப்படிக்க, அர்ஜுனுக்கு அவன் சரியில்லை என்று தெரிந்து விட்டது.

அதில் மெதுவாக, “அவள் கல்யாணம் பண்ணிக்க போறவன். அவள்கிட்ட கேசுவலா  தோள் மேல கை போட்டு பேசுறான். இதுல உனக்கு ஏன் கோபம் வருது.” என்று கேட்க, அஜய்க்கு அப்போதும் அவன் மனம் புரியவில்லை.

” என்னடா பேசுற. நம்ம முன்னாடியே அவன் இப்படி பண்றான். இதுல இன்னைக்கு நைட் ஷோ படத்துக்கு வேற கூப்பிட்டான் அவளை. எவ்ளோ தைரியம்இருக்கணும்.” என்று சொல்ல, அர்ஜுனுக்கு சிரிப்பு தான் வந்தது. விது இவன் ஏன் இப்போ ‘நான் சிங்காவே’ பேசுறான் என்று குழம்பி கொண்டு, பார்த்தான்.

துருவ் தான் அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, “என்னடா அவளை லவ் பன்றியா” என்று கேட்க, அஜய் துருவை முறைத்து,

“சும்மா காமெடி பண்ணாத. அதுக்கு நான் சந்நியாசியாவே போய்டலாம். அன்னைக்கு அவளும் இப்படி தான் காமெடி பண்ணுனா… என்னை லவ் பண்றேன்னு சொல்லி… சரியான லூசு” என்று அவன் பாட்டிற்கு சொல்லிவிட்டு செல்ல, ஏதோ மருந்து வாங்கவேண்டும் என்று தாதியர் சொன்னதில் வெளியில் வந்த சுஜி அதனை கேட்டு விட்டு, ‘ஆமாண்டா உன்னை லவ் பண்ணுனேன்ல நான் லூசுதான்…’ உதட்டைக் கடித்து கண்ணீரைக் கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள்.

அவன் சொன்னதில் அதிர்ந்திருந்த ஆண்கள் மூவரும், சுஜியைப் பார்த்து, நடந்ததை அனுமானித்துக்கொண்டார்கள்.

அர்ஜுன், “சுஜி நீ அஜயை” என்று கேட்க,

அவள் ” நான் யாரையும் லவ் பண்ணல… சும்மா காமெடி தான் பண்ணுனேன்” என்று தெளிவாய் சொல்ல வந்தாலும், அவள் குரல் நடுங்கியே வெளி வந்ததில், அஜய் தவறாக புரிந்து கொண்டான் என்று புரிந்தது. ஆனால் இதை அவன் தானே உணரவேண்டும் என்று அமைதி காத்தனர்.

இப்படியே இரண்டு நாட்கள் செல்ல, மாலையில் சஞ்சுவை பள்ளியில் இருந்து அழைத்து வந்த மீரா, அவனிடம் பேசிக்கொண்டே வர, அவனும் குதூகலமாய் பள்ளியில் நடந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தான்.

பின், “அம்மா பலூன் வேணும்” என்று கை காட்ட, அவளும் “சரி வா வாங்குவோம்” என்று தூக்கிக் கொண்டு சென்றாள்.

அந்த கடையில் சஞ்சுவை கீழே இறக்கி விட்டு விட்டு, பலூனை வாங்கி கொண்டு திரும்பியவள் சஞ்சுவை தேடினாள்.

ஏதோ ஒரு பயம் மனதை அழுத்த “சஞ்சு சஞ்சு” என்று அழைத்தவள், அவனைக் காணவில்லை என்றதும் செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.

எப்பொழுதும், சஞ்சுவிற்கு பள்ளி முடியும் தருணம், அர்ஜுனும் அங்கு வந்து விடுவான். வீட்டில் இருந்து பள்ளி பக்கம் ஆதலால், இருவரும் நடந்தே தான் தான் செல்வார்கள்.

இவன் மீராவிற்கு தெரியாமல், அவர்கள் பேசிக்கொண்டு வருவதை ரசித்து கொண்டு மெதுவாக பின்னாடியே செல்வான். ஆனால் இன்று என்று பார்த்து, ஒரு முக்கியமான வேலை வந்து விட, தாமதமாக தான் கிளம்பி வந்தான். வந்தவன் அவர்கள் செல்லும் வழியில் சென்று தேட, அங்கு மீரா பதட்டத்துடன் சஞ்சுவை தேடுவதை பார்த்து, ஏதோ சரி இல்லையென்று தோன்ற, அவள் அருகில் சென்று “மீரா” என்று அழைத்தான்.

அவன் குரல் கேட்டதும் தான் தாமதம், மீரா ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

“அர்ஜுன் அர்ஜுன் சஞ்சு… சஞ்சுவை காணோம். இங்க இதான் இருந்தான். என் பக்கத்துல நின்னான். சஞ்சுவை காணோம் அர்ஜுன்” என்று கதறி அழுக, அர்ஜுன் அதிர்ந்து விட்டான்.

அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனும் சுற்றி முற்றி பார்த்து தேட, அந்த சாலையே வெறிச்சோடி இருந்தது.

பின், “மீரா இங்க பாரு. ஒன்னும் இல்ல. அவனுக்கு ஒன்னும் ஆகாது” என்று அவளுக்கும் தனக்குமாய் சேர்த்து சமாதானம் சொல்லிவிட்டு, போலீசிற்கு அழைத்து தகவல் சொன்னான்.

அலுவலகத்தில், துருவ் உத்ராவையும் அஜயையையும் திட்டிக்கொண்டிருந்தான்.

“இதென்ன ஆபிஸ் ஆ என்ன…” என்றவன், உத்ரா ஒய்யாரமாய் ரைட்டிங் டேபிளில் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு, கையை நீட்டி, “முதல்ல கீழ இறங்கு” என்று கடிந்து கொள்ள, உத்ரா, பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இறங்கினாள்.

அஜயிடம் இருந்து அவன் கையில் வைத்திருந்த போனை வாங்கியவன், “போய் வேலைய பாரு” என்றதில், அஜய் “என் போன்” என்று கேட்க, துருவ் அவனை முறைத்த முறைப்பில் திடுதிடுவென வெளியில் ஓடிவிட்டான்.

உத்ரா பாவமாய் நின்று கொண்டிருக்க, அவள் அருகில் வந்தவன், “கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோ உத்ரா. நீ இன்னும் காலேஜ் ஸ்டூடன்ட் இல்ல.. இந்த இயர் பெஸ்ட் பிசினெஸ் விமன்ன்னு அவார்ட் வாங்க போற…” என்று சரமாரியாக திட்டி கொண்டிருந்தான்.

அவன் திட்டுவதிலும் நியாயம் இருந்தது. அவளும் அஜயும் செய்த காரியம் அப்படி…

இருவரும், டேபிளில் ஏறி அமர்ந்து கொண்டு, டப்ஸ்மாஷ் பண்ணிக்கொண்டு இருந்தனர். அதோட விட்டிருந்தாலும் பரவாயில்லை.

இவர்கள் செய்யும் சேட்டையை கேமராவில் பார்த்து விட்டு துருவ் போன் செய்ய, அதை கட் செய்து விட்டு, பின், இருவரும் ஈவினிங் ஷோ படத்திற்கு டிக்கெட் புக் செய்து கொண்டிருந்தனர். அதற்கு தான், அவன் இப்படி திட்டிக்கொண்டிருந்தான்.

உத்ரா,” ப்ச் எதுக்கு இப்படி திட்டறீங்க இது பிரேக் டைம் தான” என்று கேட்க, அவன் “பிரேக் டைம்ன்னா உங்க இஷ்டத்துக்கு இருப்பீங்களா. நான் அன்னைக்கே சொன்னேன் இந்த மாதிரி சேட்டை எல்லாம் பண்ணாதன்னு” என்று திட்ட, அவள் புரியாமல் “என்னைக்கு?” என்று கேட்க, அவன் அவளை அமைதியாய் பார்த்தான்.

அதன் பிறகே உத்ராவிற்கு, அவன் தனக்கு மறந்து போன சமயத்தில் நடந்ததை பேசுகிறான் என்று புரிந்தது.

அவனை சரி செய்யும் பொருட்டு, “சும்மா இப்படி கத்திகிட்டே இருக்காதீங்க… எப்போ பார்த்தாலும் உங்களை மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா வேலை பார்த்துகிட்டே இருக்க முடியுமா.” என்ற சிலுப்பியவளுக்கு அவன் திட்டுவது கூட ரசனையைக் கொடுத்தது.

‘அப்போ இவன்கிட்ட இந்த பெர்பக்ஷ்ன்ல தான் நம்ம விழுந்துட்டோமா’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள், அவன் மேலும் திட்ட வருவதைக் கண்டு, “ரொம்ப பேசாதீங்க அப்பறம் நான் அன்னைக்கு சொன்னதை பண்ணிடுவேன்” என்று மிரட்டினாள்.

துருவ் “என்ன சொன்ன” என்று புரியாமல் கேட்க,

அதான், “லிப் டு லிப் கிஸ்” எனக் கண்ணடிக்க, அவன் சிறிது நேரம் அமைதியாய் அவளை பார்த்து விட்டு, “குடுடி பார்க்கலாம்” என்று சவால் விட்டான்.

அதில் அவள் பேந்த பேந்த விழித்துக் கொண்டு அவனைப் பார்க்க, அவன் “என்ன முழிக்கிற குடு” என்று மேலும் அவளை நெருங்க, அவளுக்கு தான் கை கால் எல்லாம் உதறியது.

அவனுக்கு தான் இது புதுசு இல்லை. ஆனால் அவள் தான் கொடுத்த முத்தங்களையும் மறந்து விட்டாளே.

அவளை பொறுத்த வரை இது முதல் முறை தானே. மேலும், அவனை பார்க்க இயலாமல் அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

சிலையாகி நின்றவளிடம், துருவ் “உன்னால குடுக்க முடியாது. அப்போ உனக்கு என் மேல காதல் இருந்துச்சு. அதனால இயல்பா என்கிட்ட பழகுன… இப்போ உனக்கு பரிதாபம் மட்டும் தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு திரும்ப, அவள் அவனை கோபத்துடன் இழுத்து குனிய வைத்து, இதழோடு இதழ் பதித்தாள்.

இப்போது அதிர்வது, துருவின் முறையாயிற்று.

உத்ராவிற்கு வெட்கம் ஒருபுறமும், அதோட, ‘முன்ன பின்ன கிஸ் குடுத்த ஞாபகம் இருந்தாவாவது, எப்படி குடுக்குறதுனு தெரியும். இதுக்கு மேல என்ன பண்றதுனு தெரியலேயே’ என்று அப்படியே திணறிக் கொண்டு நின்றாள்.

அவள் திணறலைக் கண்டவன் என்ன நினைத்தானோ, சட்டென்று இதழ் விரித்து, அவள் இதழை தன் வசம் ஆக்கிக்கொண்டான்.

உறைதல் தொடரும்…
-மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
59
+1
4
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.