Loading

மஹாபாத்ராவின் வலி நிறைந்த வதனத்தை, தஷ்வந்த் ஆராயும் போதே, சட்டென முக பாவத்தை மாற்றிக் கொண்டாள். அதையும் உள்வாங்கிக் கொண்டவன், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல?” என்றான் அவளை மேலிருந்து கீழ் வரை அளவெடுத்து.

அவனது துளைக்கும் பார்வை, அவளுக்கு புதிது. ‘எதுக்கு இப்படி பாக்குற?’ எனக் கேட்க வந்தாலும் கேளாமல், “என்ன பதில்?” எனக் கேட்டாள் புரியாமல்.

“என் அக்கா பையன் உங்கிட்ட எப்படி?” எனக் கேட்டவன், அவனே பதிலாக, “உங்கிட்ட இருக்குற அடியாள் பத்தாம, குழந்தைகளையும் கடத்தி அடியாளா வளர்க்குறியோ?” என கேலி நகை உதித்தான். அது விரக்தியில் பூத்த முறுவல்.

அவனை முறைத்த மஹாபத்ரா, “அப்படியே வச்சுக்கோ.” என்று சீறினாள்.

அதற்குள் நிதின், “டாலுமா, மஞ்சுமாவை அழ வேணாம்ன்னு சொல்லு.” என்று பாவமாக முழிக்க, அதன் பிறகே அந்த பெயரை சரியாக கவனித்தவன், அவளை அர்த்தத்துடன் பார்த்தான்.

அதில், அவனது பார்வையை தவிர்த்தவள், பதில் பேசாமல், மாடி வீட்டுக்கு சென்று விட்டாள்.

அவள் செல்லும் வரை, அவனது விழிகள் அவளையே தொடர்ந்தது கோபத்துடன்.

ஒருவாறாக, மஞ்சுளாவும் வசீகரனும் தங்களைத் தேற்றிக்கொண்டு, நிதினை ஆர தழுவிக் கொள்ள, இன்னும் கூட மஞ்சுளாவால் நம்ப இயலவில்லை. தொலைந்த தன் குழந்தை தன்னிடம் மீண்டிருப்பதை.

அடுத்த சில மணி நேரத்தில், தன்னுடமைகளை எடுத்து வைத்தாள் மஹாபத்ரா. நிதினுடைய உடமைகள் மட்டும் அங்கிருந்தது. இனி அது மட்டுமல்ல, அவனும் கூட அவளுக்கு சொந்தமில்லை என்ற உண்மை சுட்டது.

அவனுக்கு விவரம் தெரிய தொடங்கிய போதே, மெல்ல மெல்ல அவனது தாய் தந்தையைப் பற்றி சொல்வாள் தான். இத்தனை வருடமாக தேடியும் அவனது பெற்றோர் கிடைக்காததால், அவளே தேடும் பொருட்டு இந்தியா வந்தடைந்தாள்.

எப்படியும் நிதினின் பெற்றோரிடம் அவனை ஒப்படைக்கும் எண்ணத்தில் இருந்தவள் தான். ஆனால், ஏனோ வலித்தது. தன் வாழ்வின் பிடிப்பாக தன் கை வந்து சேர்ந்தவன்! இத்தனை மணி நேரம் ஆகியும், அவன் அவளைத் தேடி கூட வரவில்லை.

அவனுக்கு தான் ஏற்கனவே, மஞ்சுவைப் பிடிக்குமே. இப்போது அவளே தாயென்றதும், அவனுக்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. அவர்களிடம் ஆறு வருட கதையையும் அளந்து கொண்டிருந்த நிதினை, பெற்றவர்கள் தான் கண்ணில் நீர் தேங்க, இதழ்களில் புன்னகை மிதக்க பார்த்திருந்தனர்.

தஷ்வந்திற்கு, தமக்கையின் முகத்தில் கண்ட நிம்மதியில் அவனுக்கும் மனம் சற்றே சமாதானம் அடைய, ஆனால், அதில் நெருப்பை ஊற்றும் வண்ணம் பெண்ணவளின் நினைவுகள் கொய்தது.

எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவனுக்குள் பல கேள்விகள்! சில ஆற்றாமைகள்! எதற்கும் அவளிடம் பதில் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம் அவனுக்கு.

அதனை உறுதி படுத்தும் விதமாக, துணிப்பை சகிதம் அங்கு வந்தாள்.

அப்போது தான் நிதின், “நீங்க கதை கேட்டது போதும் மஞ்சுமா பயங்கரமா பசிக்குது.” என்று உதட்டை பிதுக்க, அதில் தான் நிகழ்வுணர்ந்தவள், “ரெண்டே நிமிஷம் குட்டி.” என தன் மகவிற்காக ஆசையாக சமைக்க எழுந்தாள்.

எழுந்தவள், மஹாபத்ராவை கண்டு புருவம் சுருக்கி, “எங்க கிளம்பிட்ட மஹா?” எனக் கேட்டாள். அவளுக்குமே, நிதின் எப்படி அவளிடம் இருந்தான் என்ற சந்தேகம் அரித்துக் கொண்டிருந்தது தான்.

“நான் யூகே கிளம்பிட்டேன். நிதினோட திங்ஸ் எல்லாம் மாடில இருக்கு மஞ்சு…” என பேச முயற்சித்தவளுக்கு குரல் நடுங்கியது.

நிதினைப் பார்த்தாலே, நிச்சயம் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி விடுவோம் என்றெண்ணி, அவனைப் பாராமல் தவிர்க்க, நிதின் தான் இதழ்களை குவித்து அவளை முறைத்தான்.

“இதுக்கு தான் டாலுமா சொன்னேன். அவசர அவசரமா ஸ்கூல்ல சேர்க்காதன்னு. இப்ப பாரு பாதில கிளம்புற மாதிரி இருக்கு. ஆனா, இன்னைக்கே கிளம்பணுமாம்மா. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்.” என அவளுடன் அவனையும் சேர்த்து பேச, மஹாபத்ரா திகைத்தாள் என்றால், மஞ்சுளாவிற்கு தலையே சுற்றியது.

மீண்டுமொரு முறை மகனை இழப்பதா? அது அவளால் இயலாதே. வசீகரனுக்கும் பெரும் குழப்பம். தங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டவன், இப்போது தங்களை விட்டு செல்வதற்கும் தயாராக இருக்கிறானே என்று.

அவன் முன் அமர்ந்த மஹாபத்ரா, “என்ன பேசுற நிதி. அதான் உன் பேரண்ட்ஸை கண்டுபிடிச்சாச்சே. நீ இனிமே அவங்க கூட தான இருக்கணும். இப்ப நான் மட்டும் தான் யூகே போறேன்” என்றதும், அவன் விழிகளை விரித்தான்.

ஒரு முறை மஞ்சுளாவையும் வசீகரனையும் பார்த்துக் கொண்டவன், “அதான் என் பேரண்ட்ஸ் யாருன்னு தெரிஞ்சுடுச்சுல டாலுமா. இனிமே வெகேஷன் வரும் போதெல்லாம், நானும் இவங்களை பார்க்க வந்துடுறேன்.” என தலையை ஆட்டிக் கூற, மஹாபத்ராவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“நிதி… நான் சொல்றது புரியுதா இல்லையா? நீ இனிமே இவங்க கூட தான் இருக்கணும். அதுக்காக தான இவங்களை தேடி இவ்ளோ தூரம் வந்தோம்.” என்றாள் குழப்பமாக.

நிதினுக்கு தான் அது அதிர்ச்சியாகி இருந்தது போலும். அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டவன், “நீ என் பேரண்ட்ஸை தேடி கண்டுபிடிக்கணும்ன்னு தான டாலுமா சொன்ன, என்னை இவங்ககிட்ட விட்டுட்டு போவேன்னு நீ சொல்லவே இல்லையே.” என எதிர்கேள்வி கேட்டு அவளை அதிர வைத்தான்.

அவளோ பேச்சற்று அவனைப் பார்க்க, “நீ முன்னாடியே சொல்லிருந்தா, நான் இவங்களை தேட சொல்லிருக்கவே மாட்டேன். என்னை விட்டுட்டு நீ மட்டும் போறல்ல. நான் உன் அமுல் பேபி இல்லல. என்கிட்ட பேசாத. போ!” என தேம்பி அழத் தொடங்கி விட்டான்.

பிடித்து வைத்த கண்ணீர் துளியொன்று மஹாபத்ராவின் விழிகளில் இருந்து வழிய, நிதினின் அன்பின் ஆழம் கண்டு உடைந்தாள்.

மகனின் அழுகை தாளாமல், அவனை அணைத்துக் கொண்டவள், “இல்ல அமுலு. நான் உன்னை விட்டுட்டு எங்கயும் போகல. என் அமுல் பேபி, எதுக்குமே அழ மாட்டீங்க தான. இங்க பாரு… என்னை பாரு அமுலு.” என்று அவன் கண்ணீரை துடைத்து விட்டு, அவளைப் பார்க்க வைத்தாள்.

“நிஜமா என்னை விட்டுட்டு போக மாட்ட தான?” அவன் நம்பாமல் வினவ, “போக மாட்டேன்.” என தலையசைத்தாள், அவனுக்கு எப்படி நிஜத்தை உணர்த்துவது என்ற புதிர் புரியாமல்.

வசீகரனுக்கு, நிதினின் உணர்வுகள் துல்லியமாக புரிந்தது. தாய் தந்தையின் பாசத்திற்காக, அவர்களின் அரவணைப்பிற்காக ஏங்குபவன், எதற்காகவும் மஹாபத்ராவின் மீதான உரிமையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அந்த அளவு அவன் மீது பாசத்தையும் கொட்டி வளர்த்திருக்கிறாள் என்று என்னும் போது, அவனுக்கு வருத்தம் எதுவும் எழவில்லை. மஞ்சுளாவிற்கும் தான்.

இதுநாள் வரை, தன் குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா? அல்லது தவறானவர்களிடம் சிக்கி, கஷ்டப்படுகிறானா என்றே வேதனையில் உழன்றவர்கள் ஆகிற்றே. நன்முறையில் அவன் வளர்ந்து வந்து, தங்கள் மீதும் பாசத்தைப் பொழிவது கண்டு உண்மையில் மனநிறைவே.

ஆனால், அதற்காக நிதினை மீண்டும் எப்படி பிரிய இயலும்? கலங்கிய விழிகளுடன் மஞ்சுளா நிற்க, நிதினுக்கு எப்படி புரிய வைப்பதென்று புரியாமல் குழம்பியிருந்தாள் மஹாபத்ரா.

அத்தனை நேரமும் எதிலும் தலையிடாமல், மஹாபத்ராவை மட்டுமே ஆழ்ந்து நோக்கியிருந்தது தஷ்வந்தின் விழிகள்.

அவளது ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கிக் கொண்டிருந்தவனின் இதழ்களில் ஏனோ ஏளனப் புன்னகை.

அதே புன்னகையுடன், அவளருகில் சென்றவன், அவளை உரசியபடியே நிதினின் முன் அமர்ந்தான்.

குழப்பத்தில் இருந்தவள் முதலில் அவனது தீண்டலை உணரவில்லை.

தஷ்வந்த் தான் புன்னகை மாறாமல், நிதினிடம், “நீ எங்கயும் போக கூடாது டாலு! உன்னை மறுபடியும் நான் தொலைக்க மாட்டேன்.” என்றான் அழுத்தமாக.

‘அந்த கட்டளை நிதினுக்கு மட்டுமா? அல்லது தனக்கும் சேர்த்தா?’ என ஒரு நொடி திகைத்த மஹாபத்ரா, அதன் பிறகே அவனது தீண்டலை உணர்ந்து எழப் போக, அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன், அவள் நூலளவு விலகுவதற்கும் இடம் கொடுக்கவில்லை.

அவனிடம் இருந்து கரத்தை இழுத்தவளால், முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. அவன் கொடுத்த அழுத்தத்தில், அவளது மணிக்கட்டு கன்றி சிவந்தே போயிருந்தது.

கூடலின் போது கூட, மென்மையை மட்டுமே காட்டியவன் ஆகிற்றே. இந்த சிறு கையணைப்பிலும் வன்மையைக் காட்டி, அந்த அழுத்தத்தில் கோபத்தையும் கொட்டினான்.

ஆனால், அதனை முகத்தில் காட்டாமல் மறைக்கும் வித்தையை இத்தனை வருடத்தில் கற்று வைத்திருந்தான்.

நிதினோ, “அப்போ டாலுமாவையும் இங்க இருக்க சொல்லுங்க அங்கிள். டாலுமா எங்க இருக்காங்களோ நானும் அங்க தான் இருப்பேன்.” என்றவனின் குரலில் விட்டு சென்று விடுவாளோ என்ற பயம் அதிகமே தெரிந்தது.

“உன் டாலுமாவும் எங்கயும் போக போறது இல்ல நிதின். எப்பவும், இங்க உன் கூடவே இருப்பாங்க. பட், உன் அப்பா அம்மாவை விட்டுட்டு எப்பவும் நீ பிரியணும்ன்னு நினைக்க கூடாது டாலு. இத்தனை வருஷமா, உன்னை பிரிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. நீ இல்லன்னா அவங்களுக்கும் அது கஷ்டம் தான…?” சிறுவனுக்கும் புரியும் விதத்தில் தலையை ஆட்டி கேட்டிட,

அவர்களை ஒரு நிமிடம் பார்த்தவன், மஞ்சுளாவின் கண்ணீரைக் கண்டு, “அப்போ, டாலுமா என்னை விட்டு போனா எனக்கு கஷ்டமா இருக்காதா?” என எதிர்கேள்வி கேட்டு ஆடவனை திணற வைத்தான்.

அதில் மென்முறுவல் பூத்தவன், “கண்டிப்பா கஷ்டமா தான் இருக்கும். ஆனா உன் டாலுமா தான் இங்கயே இருப்பாங்கன்னு சொல்லிட்டேனே… “என அவன் கன்னத்தில் கை வைத்துக் கொள்ள,

“இந்தியாவுக்கு வந்ததே என் அப்பா, அம்மாவை தேடி தான். வந்த வேலை தான் முடிஞ்சுதே, அப்பறமும் எப்படி டாலுமா இங்க இருப்பாங்க.” எனக் கேட்டு மஹாபத்ராவை பார்க்க, அவளோ இன்னும் அவனிடம் இருந்து கைகளை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்.

அடிக்குரலில், “விடு தஷ்வந்த்…” என்று பல்லைக்கடிக்கவும் தவறவில்லை.

அதனை சட்டை செய்யாதவனின், பிடி இறுகிக் கொண்டே செல்ல, “வந்த வேலை முடிஞ்சுதுன்னு யார் சொன்னா டாலு? இனிமே தான் உன் டாலுமாவுக்கு நிறைய்ய்ய வேலை இருக்கு…” என கூறியவனின் தொனியே அவளுக்கு கலக்கத்தை தான் கொடுத்தது.

தனது முயற்சியை கை விட்டு, அவனைப் புரியாமல் பார்க்க, அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல், நிதினிடம், “உன் டாலுமாவும் நானும் மேரேஜ் பண்ணிக்கிட்டா, உன் டாலுமாவும் இங்க தான் இருப்பாங்க வாழ்க்கை முழுக்க. நீயும் உன் அப்பா அம்மாவை விட்டு பிரிய தேவை இல்ல. உன் டாலுமாவை விட்டும் பிரிய தேவை இல்ல.” என்று கூறிய நொடி, சிறுவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

“ஹை… நிஜமாவா சொல்றீங்க? நிஜமா நீங்களும் டாலுமாவும் மேரேஜ் பண்ணிப்பீங்களா? ஆனா அம்மா அதுக்கு ஓகே சொல்லணுமே. ஏற்கனவே யூகேல ஒரு அங்கிள் இப்படி தான், அம்மாகிட்ட மேரேஜ்க்கு கேட்டதுக்கு, சப்புன்னு அடிச்சுட்டாங்க.” என்றான் பாவமாக.

“இஸ் இட்? ஆனா, என்னை அடிக்க மாட்டாங்க டாலு. ட்ரையல் பாக்குறியா?” புருவம் சுருக்கி தீவிரமாக கேட்டவன், மஹாபத்ரா புறம் திரும்பி, “என்ன டாலு… உங்கிட்ட மேரேஜ் பண்ணிக்க கேட்டா, என்னை அடிப்பியா? ம்ம்?” என்று அர்த்தப்பார்வை வீசினான்.

அவளோ இதனை எதிர்பாராமல் உறைந்திருக்க, “சொல்லு பத்ரா… என்னை கல்யாணம் பண்ணிப்ப தான?” என்றவன், அவள் பேச இடம் கொடாமல், “ஐ நோ, நீ மறுக்க மாட்ட. வீம்பா நீ இங்க இருந்து கிளம்புனா, உன் அமுல் பேபி தான நீ இல்லாம ஏங்கி போயிடுவான்…” என மீண்டும் நக்கல் நகையுடன் கூற, அவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“ஐ மீன், நான் நிதினை சொன்னேன். உன் அமுல் பேபி அவன் தான…?” இப்போதும் அவளை துளைக்கும் பார்வை.

அதில் இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டவள், “கையை விடு!” என்றாள் சிறு சினத்துடன்.

“நீ மேரேஜ்க்கு ஓகே சொல்லு டாலு… உன் அமுல் பேபி உன் பதிலுக்காக வெயிட்டிங் பாரு…” என்றவனின் கேலியில் அவள் முறைக்க, “இப்பவும் நான் நிதினை தான் சொன்னேன்.” என்றான் தோள்களை குலுக்கி.

வெடுக்கென கையை உதறியவள், “உளறாத தஷ்வந்த்.” என முகத்தை சுருக்கினாள்.

மணிக்கட்டு சிவந்திருக்க, வலியும் அதிகமாகவே எடுத்தது. கையை தேய்த்தபடி, எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்ட, அவன் அவளையும் அவளது கையையும் ஒரு முறை ஏறிட்டுவிட்டு, “பதில்?” என்றான் கடுமையாக.

நிதினோ, “டாலுமா, நீ மேரேஜ்க்கு ஓகே சொன்னா, நானும் மஞ்சுமா வசீப்பா கூடவே இருப்பேன். நீயும் என் கூடவே இருக்கலாம். ஓகே சொல்லுமா ப்ளீஸ்.” என்றவனின் கெஞ்சலில் அவள் பதில் பேச இயலாமல் திணறினாள்.

எங்கே, தாய் தந்தையை பிரிந்து சென்று விடுவோமோ என்ற அச்சம் ஒரு புறம், மஹாபத்ராவை இழந்து விடுவோமோ என்ற தவிப்பு ஒரு புறமும் தாக்க நின்றிருந்த நிதினைக் கண்டு, பாவமாகவும் இருந்தது அவளுக்கு.

ஆறு மாதத்தில் தொலைந்து போனது அவன் தவறில்லையே! அவள் அமைதியைக் கண்டு மேலும் கலவரமாகி, “ப்ளீஸ் டாலுமா. ஓகே சொல்லேன்” என அவள் கையை பிடித்து கெஞ்ச தொடங்கிய நிதினை முறைப்புடன் பார்த்தவள், “நான் எங்கயும் போகல நிதின். நீயும் இங்கயே இரு. அதுக்காக என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது.” என்றாள்.

தஷ்வந்த்தோ, புருவத்தை உயர்த்தி, “நம்பாத நிதி டாலு. உன் டாலுமா, ஈஸியா எல்லாரையும் நம்ப வச்சு ஏமாத்திடுவாங்க. நாளைக்கே, உன்னை இங்க விட்டுட்டு கிளம்பி போய்டுவாங்க. அதெல்லாம் உன் டாலுமாவுக்கு சர்வ சாதாரணம். நம்புனவங்க கழுத்தை அறுக்குறது…” என இறுதி வரியை மட்டும் அவளுக்கு கேட்கும் படி, ஆத்திரத்துடன் கூறினான்.

நிதினுக்கு அவனது கூற்றுகள் புரியவில்லை என்றாலும், தன்னை விட்டு சென்று விடுவாள் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

“நீ என்னை விட்டுட்டு போனா, நான் உண்மையாவே இங்க இருந்து யார்கிட்டயும் சொல்லாம எங்கயாவது போய்டுவேன்” என விழிகளை உருட்டி மிரட்டினான்.

அவளோ பதறி, “என்ன பேசுற அமுலு? அப்படி எல்லாம் செஞ்சுறாத!” என்றிட,

“அப்போ நீ தஷு அங்கிளை மேரேஜ் பண்ணிட்டு, என் கூடவே இருந்துடு.” என்று செக் வைத்தான்.

எப்படி பேசினால், காரியம் ஆகுமென தெரிந்து வைத்து, சிறுவனை தூண்டி விட்டு, இப்போது மஹாபத்ராவின் தவிப்பை அமர்த்தலாக ரசித்துக் கொண்டிருந்தான் தஷ்வந்த்.

அதில் தஷ்வந்தை நோக்கி காரப்பார்வை வீசியவள், “ஓகே” என்று முடித்துக் கொண்டாள்.

அவளது ‘ஓகே’ வில் அவனுக்கு இப்போதும் கூட அத்தனை நம்பிக்கை இல்லை தான். ஆனால், இம்முறை அவனும் “தென் ஓகே…” என்று அசட்டையாக கூறி விட்டு, நிதினுக்கு ஹை ஃபை கொடுத்துக் கொள்ள, அவனும் துள்ளிக் குதித்து, தஷ்வந்தை கட்டிக்கொண்டான்.

மஞ்சுளாவும் வசீகரனும் தான் நடப்பது எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். சில மணித்துளிகளிலேயே தனது பேரனின் வரவை அறிந்து, திலகா அங்கு ஓடோடி வர, மஞ்சுளாவின் பெற்றோரும் வந்து விட்டனர்.

குழந்தை பிறந்த பின்னும் மகளிடம் பாராமுகத்துடன் இருந்த கதிரேசன், குழந்தையை இழந்து நின்ற மகளிடம் அதே கோபத்தைக் காட்ட இயலவில்லை. அவர்களுமல்லவோ, மஞ்சுளாவின் வேதனையைக் கண்டு துவண்டிருந்தனர்.

இப்போது இரு வீட்டினரும், நிதினைக் கொண்டாடி தீர்த்தனர். அவனும், புது உறவுகளை குதூகலத்துடன் ஏற்றுக் கொள்ள, அன்றிரவே, தான் மஹாபத்ராவை திருமணம் செய்து கொள்ள போவதாய் தாய் தந்தையிடம் கூறி இருந்தான் தஷ்வந்த்.

மஞ்சுளா வியக்கும் வண்ணம், கதிரேசன் அவனது திருமணத்திற்கு உடனே ஒப்புக்கொண்டார், இருவரின் வயது வித்தியாசத்தை அறிந்தும் கூட.

“இவ்ளோ வருஷமா நீ மஹா பத்தி பேசுனதே இல்லையே தஷு?” மஞ்சுளா முறைப்பாகக் கேட்க, “பேசுற அளவு அவள் ஒர்த் இல்ல…” என்று முடித்துக்கொண்டான்.

“தஷு… நீ பேசுறது எதுவும் சரியா படல. நீ அவள் மேல கோபமா இருக்குறது எனக்கு புரியுது. கோபத்தை கூட வெளிப்படையா காட்டிடு தஷு. உள்ளுக்குள்ள கோபத்தையும் வச்சுக்கிட்டு, கல்யாணமும் பண்ணிக்க போறேன்னு சொல்ற… எனக்கு ஒன்னும் புரியல. இதுல ரெண்டு பேரோட வாழ்க்கையும் இருக்கு… கோபத்தோட வாழுற வாழக்கைல நிம்மதி இருக்காது தம்பூ.” என அவள் கூறி முடிக்கும் முன்னே,

செயற்கை புன்னகை பூத்தவன், “நிம்மதியா? அது என்னைக்கோ என்னை விட்டு போய்டுச்சு மஞ்சு. அவள் பறிச்ச நிம்மதியை அவள்கிட்ட தான தேட முடியும். இன்ஃபாக்ட்… சிதைஞ்சு போன என் வாழ்க்கையை அவள் தான் சரி பண்ணனும்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பெருமூச்சு விட்ட மஞ்சுளா, “ஆமா, அப்பா எப்படி மேரேஜ்க்கு ஓகே சொன்னாரு தஷு. அதுவும் இவ்ளோ சீக்கிரமா?” எனக் கேட்க,

“உண்மையை சொன்னேன்…” என்று கண்சிமிட்டினான்.

“டேய்… என்னை கடுப்பேத்தாத! அப்படி என்ன உண்மைய சொன்ன?” மஞ்சுளா கேட்டதில்,

பொறுமை இழந்தவன், “எனக்கும் அவளுக்கும் கசமுசா முடிஞ்சுருச்சுன்னு சொன்னேன். பையனோட கற்பு போயிருச்சேன்னு, என்னை கெடுத்தவளயே கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டாரு. போதுமா?” என்றான்.

அவளோ வாயில் கை வைத்து, “உனக்கு எது எதுல விளையாடுறதுன்னு விவஸ்தையே இல்லடா…” என செல்லமாக அதட்டினாள்.

‘உண்மையை சொன்னா, லூசு நம்ப மாட்டேங்குது.’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன், மஹாபத்ராவை பார்க்கும் பொருட்டு மாடி ஏறினான்.

நிதின், உறக்கம் வந்ததுமே, மாடிக்கு சென்று அவனது அறையில் உறங்கி விட்டான். முதல் நாளிலேயே தங்களுடன் இருக்க வைத்து, அவனை இழுத்துப் பிடிக்க தம்பதியர்கள் விரும்பவில்லை. அவன் விருப்பப்படியே விட்டனர்.

மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் தனதறைக்கு வந்த மஞ்சுளா, கட்டிலில் கண்ணை மூடி அமர்ந்திருந்த வசீகரனின் அருகில் வந்தமர்ந்தாள்.

“நம்ம பையன் திரும்ப கிடைப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கல வசீ. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? ஒன் ஆஃப் தி பெஸ்ட் டே…” என தன் போக்கில் வளவளக்க, வசீகரனும் அதனை ஆமோதிக்கும் வண்ணம் சிறிதாய் புன்னகைத்தான்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டே சென்றவள், “என்ன வசீ ஒன்னுமே சொல்ல மாட்டுறீங்க?” என குறைபட, “சொல்லணும் தான். இதை சொல்ல தான், தூங்காம உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றவனைப் புரியாமல் பார்க்க, அவனோ இயல்பாக, “நீ கேட்ட டைவர்ஸ இப்ப நான் தரலாம்ன்னு இருக்கேன்…” என அவள் தலையில் இடியை இறக்கினான்.

“வ… வசீ?” உதடு துடிக்க அவள் வெறிக்க,

“பொண்டாட்டி கேட்டு எதுவும் மறுக்க கூடாதாம் மஞ்சு. அதான், நீ ஆசையா கேட்டதை இப்ப நிறைவேத்தலாம்ன்னு பாக்குறேன். உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு, வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னீல. இப்ப இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு. நானும் எத்தனை நாள் தான் துறவி வாழ்க்கை வாழுறது. இப்ப தான் என் பையனும் கிடைச்சுட்டானே, சோ, வேற மேரேஜ் பண்ணிட்டு, அவனை என் கூட வச்சுக்குறேன்.” என்று இயல்பாக திட்டம் தீட்டிட, அவளுக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது.

இவை அனைத்தும் அவள் கூறியது தானே! பழையதை மறந்து, இருக்கும் நிமிடத்தை மகிழ்வுடன் கழிக்க எண்ணி, அவளுடன் ஒன்ற முயலும் ஒவ்வொரு முறையும், அவளுக்கு மகன் தொலைந்து போன குற்ற உணர்வே அரிக்கும்.

தந்தை என்ற பட்டத்தை, தந்தையான பிறகும் பறித்து, அவனுக்கு துரோகம் சென்று விட்டவள் நான் தானே, என ஒவ்வொரு முறை கூனி குறுகினாள்.

இதனை அறிந்து, அவளைக் கண்டித்தவன், காதலை காட்டியும் கூட அவளால் ஏனோ அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

“ப்ளீஸ் மஞ்சுமா. நம்ம வாழ்க்கையை நம்மளே வீணாக்கிக்க வேணாம். எனக்கு மட்டும் நம்ம குழந்தையை பத்தின நினைப்பு இல்லாம இருக்கும்ன்னு நினைக்கிறியா? என்ன வேலை செஞ்சாலும், ஒரு ஓரத்துல அவனோட நினைப்பு ஓடிட்டு தான் இருக்கு. ஆனா, அதுலேயே தேய்ஞ்சு போறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லைடா. நம்ம இன்னொரு பேபி பெத்துக்கலாம். அந்த பேபியை பத்திரமா வளர்க்கலாம்.” என அவளது கையைப் பிடிக்க, அவளோ முற்றிலும் அவனை தவிர்த்தாள்.

“வேணாம் வசீ. என் வயித்துல ஒரு குழந்தை பிறந்து அது கஷ்டப்படுறதே போதும். இன்னொன்னும் வேணாம். எனக்கு எதுவுமே வேணாம். ப்ளீஸ்…” என அவனை விட்டு ஒதுங்கிப் போக, அவனோ தளராமல் அவளை சமன் செய்யும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல், அவளது அருகாமைக்காக ஏங்கத் தொடங்கியது அவனது மனமும் உடலும்.

அவளை அணைக்க வந்தால் கூட, சட்டென விலகி செல்பவளைக் கண்டு தவிப்பான். காதலித்து மணம் புரிந்தவளுடன் வாழ்ந்ததே ஒரு வார காலம் தான். அதற்குள், வெளிநாட்டில் வேலை கிடைக்க, அதற்காக அலைந்தவனுக்கு, அடுத்த சில நாட்களிலேயே அவள் கருவுற்றது அறிந்து மகிழ்ச்சி தாளவில்லை.

ஆகினும், “நம்ம இன்னும் மேரேஜ் லைஃபை அனுபவிக்கவே இல்லை மஞ்சுமா. நானும் இப்ப ஃபாரீன் போறேன். இப்போ பேபி அவசியம் தானா. கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துருக்கலாமோ? இப்போ என்னால உன்னை பார்த்துக்க கூட முடியாது.” என வாடிப் போக,

“குழந்தை வர்றதெல்லாம், கடவுளோட ப்ளெஸ்ஸிங் வசீ. இப்படியெல்லாம் பேசாதீங்க. நீங்க தைரியமா போயிட்டு வாங்க. நான் பாத்துக்குறேன்.” என தைரியம் கொடுத்தாள்.

அவன் வெளிநாடு செல்வது கூட, மஞ்சுளாவின் தந்தை கதிரேசன் அவனை அவமானப்படுத்தியதால் தானே.

அவனுடன் திருமணம் முடிந்து, தன் வீட்டிற்கு வந்த மகளை முறைத்து வைத்தவர், அவர்களை வெளியில் அனுப்பவெல்லாம் இல்லை. உள்ளே அழைத்து விருந்து கொடுக்க ஏற்பாடு செய்ய, அவர்களுக்கே வியப்பு தான்.

ஆனால், அவரோ வசீகரனின் வேலையை பற்றி கேட்க, அவனும் கூறினான். அப்போது சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவனை, ஏற இறங்க பார்த்தவர், “இந்த சம்பளத்தை வச்சு, குடும்பத்தை எப்படி நடத்துவீங்க. உங்களுக்கு அடுத்து தங்கச்சி இருக்கு. கல்யாணம் பண்ணி குடுக்கணும். இப்ப கல்யாணமும் ஆகிடுச்சு. வசதியா இல்லன்னாலும், மூணு வேளை சாப்பாடாவது குடுக்க முடியுமா என் பொண்ணுக்கு?” எனக் கேட்டு விட்டு,

“வந்தவங்களை வெளிய போக சொல்லி எனக்கு பழக்கம் இல்ல. அதான், உங்களை உள்ள கூப்பிட்டேன். இனிமே என்னை இப்படி தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதீங்க.” எனறு வாசலில் கை காட்ட, மஞ்சுளா தந்தையை கொலைவெறியுடன் முறைத்து, வசீகரனை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அதன் பிறகு, அவனுக்கு மனமே சரி இல்லை. அவர் கூறியது ஓரளவு உண்மை தானே. தன் குடும்பத்தையும், தன்னை நம்பி வந்தவளையும் குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றே முட்டி மோதி வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்தான்.

முதலில் வசீகரனை தடுத்தவள், பின் அவன் மனம் காயப்பட்டது போனதை உணர்ந்து, அவன் போக்கிலேயே விட்டு விட்டாள்.

ஆனால், பிரிந்து செல்வது தான் அத்தனை வலி கொடுத்தது இருவருக்கும். அவன் வெளிநாட்டிலும், இவள் வயிற்றில் குழந்தையுடன் இங்கேயும் இருக்க, ஒவ்வொரு முறையும் கண்ணீருடன் தான் போனை வைப்பாள்.

அப்போதெல்லாம், திலகாவும் அவனது தங்கையும் தான் அவளுக்கு ஆறுதல். வீட்டிற்கு வந்த மருமகளை அத்தனை அன்புடன் பார்த்துக்கொண்டனர் இருவரும். அவளும் அவர்களுக்கு சளைத்ததில்லை என்பது போல பாசம் காட்டினாள்.

ஆனால், குழந்தை தன்னை விட்டு சென்ற பிறகு, உள்ளுக்குள் துடித்தவனுக்கு, தான் மட்டும் உடன் இருந்திருந்தால், மனைவியையும் மகனையும் இப்படி துன்பத்தில் ஆழ்த்தி இருந்திருக்க தேவை இல்லையே என நொந்து போனவன், அதன் பிறகே, வெளிநாடு செல்லும் யோசனையை மூட்டை கட்டி வைத்து விட்டான்.

இங்கேயே தொழில் தொடங்க எண்ணும் போது தான், தஷ்வந்த் அவனுக்கு தேவையான உதவிகளையும், வங்கி கடனும் வாங்க உடன் அலைந்து, அவனுக்கு பக்க பலமாக இருந்தான்.

மனைவியின் ஒதுக்கத்தின் வேதனையில் இருந்து தப்பிக்க தொழிலில் கவனத்தை செலுத்தியவனுக்கு, அடுத்து அடுத்து வெற்றிகளே கிடைத்தது.

அது எதுவும் அவனுக்கு நிம்மதி தரவில்லை என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று! ஆனால், திடுதிப்பென மஞ்சுளா விவாகரத்து கேட்பாள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. அதில் முற்றிலும் உடைந்தவன், “வேணாம்… மஞ்சுமா. இப்படியெல்லாம் பேசாத. என்னால உன்னை எப்படிடி விட முடியும். அதுவும் இன்னொருத்தியை… என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது” என எத்தனையோ கெஞ்சிட, அவள் அவளது முடிவில் உறுதியாக இருந்தாள்.

அதன் விளைவே, அவனது பாராமுகம்.

இப்போதோ, பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகும் இவன் ஏன் விவாகரத்து கேட்க்கிறான் எனப் புரியாமல், “நிதின் தான் கிடைச்சுட்டானே வசீ…” உள்ளே சென்ற குரலில் கேட்டாள் மஞ்சுளா.

“நமக்குள்ள நிதின் மட்டுமே இருக்குறனால தான் டைவர்ஸ் கேக்குறேன். ஒரு துளி காதலாவது இருந்திருந்தா, இத்தனை வருஷத்துல நீ ஒரு தடவையாவது என் காதலை பத்தி யோசிச்சுருப்ப. என்மேல உனக்கு இருக்கற காதல் செத்து ரொம்ப வருஷமாகுது மஞ்சு.” என இறுக்கத்துடன் கூறியவனைக் கண்டு அதிர்ந்தாள் மஞ்சுளா.

அதிகாரமாக மஹாபத்ராவின் கட்டிலில் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் தஷ்வந்த்.

அவளோ கோபத்தை அடக்கியபடி, “இங்க என்ன செய்ற?” எனக் கேட்க,

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை பார்க்க வந்துருக்கேன் டாலு.” அவன் எழுந்து அவள் புறம் வந்தான்.

“இது சுத்த முட்டாள் தனம் தஷ்வந்த். நிதினை வச்சு என்னை கார்னர் பண்ணாத. உனக்கு என்னை பத்தி தெரியும்…” என்று அவள் பார்வையாலேயே எரிக்க,

“எஸ்… உன்னை பத்தி நல்லாவே தெரியும். உன்னை நல்லா தெரிஞ்ச ஒரே ஆள் நான் மட்டும் தான் டாலு…” ‘நல்லா’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன், ஏளனத்துடன் இதழ்களை வளைத்து, “எங்க எங்க வளைவு இருக்கு! எங்க எங்க மேடு பள்ளம் இருக்கு… எல்லாமே எனக்கு தெரியுமே!” என்றான் விஷமத்துடன்.

அதில் அவள் முகத்தில் அதிர்வு ரேகைகள். “நா… நான் அதை சொல்லல…” வார்த்தைகள் பிசிறடிக்க,

“நான் அதையும் சேர்த்து தான் சொன்னேன் டாலு!” என்று அவளை மேலிருந்து கீழ் வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட்டான்.

அவனது பார்வை அவளை ஏதோ செய்ய, “கண்ணை நோண்டிடுவேன் தஷ்வா. என் கண்ணை பார்த்து பேசு எப்பவும் போல!” என்றால் பொறுமை இழந்து.

அவள் அழைத்த ‘தஷ்வா’வில் சிறு வெற்றி நகை வீசியவன், “உன் கண்ணை பார்த்து காதல் செய்யவா நான் வந்துருக்கேன். உனக்கு விவரமே தெரியல டாலு.” என போலியாய் வருத்தப்பட்டான்.

அவளோ திகைத்து நிற்க, அதனை கருத்தில் கொள்ளாமல், “நாளை மறுநாள் நமக்கு கோவில்ல மேரேஜ். அப்படியே ரெஜிஸ்டர் ஆஃபிஸ் போய் மேரேஜ் ரெஜிஸ்டர் பண்றோம். உன்னோட சர்டிஃபிகேட்ஸ் குடு.” என அவளுக்கு செய்தியாக கூறிட, அவளோ பொங்கினாள்.

“நிதின் முன்னாடி என்னை கார்னர் பண்ணிட்டு, இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி சர்டிஃபிகேட்ஸ் கேக்குற? முதல்ல யாரை கேட்டு நீ மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணுன?” மஹாபத்ரா பற்களைக் கடித்தாள் முறைப்புடன்.

“யாரை கேட்கணும்?” பேண்ட் பாக்கெடினுள் கையை நுழைத்து, எகத்தாளமாக கேட்டான் தஷ்வந்த்.

“என்னை கேட்கணும் தஷ்வந்த்…” என்று முகத்தை சுருக்கியவளின் பொன்னிற மேனி மீது பார்வைதனை அலைய விட்டான்.

அவளது “அமுல் பேபி” என்ற அழைப்பைக் கேட்டு பல வருடங்கள் கடந்திருக்க, இப்போதும் அவ்வழைப்பை எதிர்பார்த்து நின்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“உன்கிட்ட எதுக்கு கேட்கணும்?” மீண்டும் நக்கல் வினா தொடுத்தான்.

“நீ கல்யாணம் பண்ணிக்க போறது என்னை தான அப்போ என்னை தான் கேட்கணும். எனக்கு இது சுத்தமா பிடிக்கல.” கோபத்தில் சிவந்த பெண்ணவளின் கன்னங்களை அழுத்தத்துடன் வருடிய தஷ்வந்த்,

“உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு நான் கேட்கல. நான் சொல்றதை நீ  கேட்டே ஆகணும். சோ, நல்ல பொண்ணா தூங்கி எழுந்துருச்சு,  மேரேஜ்க்கு ரெடி ஆகு. இட்ஸ் மை ஆர்டர்.” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனது கையை தட்டி விட்டவள், “உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?” என கத்திட,

“ஆமா டாலு… பைத்தியம் தான்… உன் மேல…  என்னை பைத்தியம் ஆக்குனதும் நீ தான!” என்றவனின் இதழ்கள் கேலியில் விரிந்தது.

ஆனால், விழிகள் என்னவோ உணர்ச்சிகளற்று தான் அவளை நோக்கியது.

எப்போதும் உணர்வுகளை முகத்தில் காட்டிக் கொடுத்து விடுபவனின், இந்த முகமோ இறுகி இருந்தது.

அதில் இருந்தது, கோபமா, தாபமா, வெறியா, காதலா எதையும் அவளால் அறிந்து கொள்ள இயலவில்லை.

அவனைப் படிக்க முயன்று தோற்றவளின் முயற்சியைக் கண்டு நக்கல் நகை புரிந்தவன்,

“என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாத பத்ரா. உன்னால முடியாது…” என்று அவளுக்கு அதிர்ச்சி அளித்ததோடு, நெற்றி முத்தத்தையும் கொடுத்தவன், கன்றி இருந்த அவளது மணிக்கட்டை பிடித்து, இதழ் பதித்தான்.

அதில் ஆசையும் இல்லை. காதலும் இல்லை. “காயத்துக்கு மருந்து போடு.” அவளை அழுத்தத்துடன் பார்த்தபடி அவன் கூற, அவளோ அவனது முத்தங்களில் தடுமாறி, “என்னது?” என விழித்தாள்.

“உன் கைல இருக்குற காயத்துக்கு மருந்து போடுன்னு சொன்னேன். அட்லீஸ்ட் அதுக்காவது மருந்து போடு!” என்றான் வலியுடன்.

“எனக்கு தெரியும். நீ போ!” என அவனைப் பாராமல் திரும்பிக்கொண்டவள், ‘கையை டைட்டா பிடிச்சு ரத்தம்கட்ட வச்சுட்டு, மருந்து போடாம்…!’ என்ற எரிச்சலை முகத்தில் காட்ட,

“இப்போ டைட்டா இழுத்து பிடிச்ச மாதிரி, அப்பவே டைட்டா பிடிச்சிருந்தா, நீ என்னை இளிச்சவாயனாக்கிருக்க மாட்டல்ல…?” கண்ணை சுருக்கி தீர்க்கத்துடன் கேட்டான்.

அவளோ பே வென பார்த்ததில், “நீ மனசுல நினைச்சது எனக்கு எப்படி தெரியும்ன்னு பாக்குறியா?” என நக்கலாக கேட்டவனிடம், சிவந்த முகத்துடன் தலையை ஆட்ட,

அவளது தாடையை பற்றி தன் முகத்தருகில் இழுத்தவன், “அகத்தின் அழகு முகத்துல தெரியுது டாலு!” என்று, குவிந்திருந்த இதழ்களுக்கு தன்னிதழ்களை தண்டனையாக கொடுத்தான்.

காயம் ஆறும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
46
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்