1,265 views

கண்விழித்த அக்னி எழ முயற்சிக்க முடியவில்லை.  தூக்கத்தை விட்டு வெளியில் வந்த கண்கள் விழித்துக் கொள்ள, குனிந்து பார்த்தான். தலையை நெஞ்சில் சாய்த்துக் கொண்ட அன்பினி கை, கால்கள் முழுவதையும் அவன் மீது போட்டிருந்தாள். தள்ளி விட வந்தவன் அமைதியாகி விட்டான் அவள் முகத்தை பார்த்து.

தூக்கம்  கலைந்து விடாமல் கையை எடுத்துவிட, “ம்ம்!” என்ற முனங்களோடு மீண்டும் அவன் மீது போட்டாள். அக்னி பத்து தடவைக்கு மேல் பொறுமையாக எடுத்து விட அடங்குவதா இல்லை அன்பினியின் தூக்கம். மணி ஆவதை உணர்ந்தவன் தூக்கம் கலைந்தாலும் பரவாயில்லை என்று எடுத்து போட,

“டேய்!” என்றவள் அவன் மீதே படுத்து கொண்டாள்.

“எனக்கு டைம் ஆகுது.”  என்றவன் பேச்சை காதில் வாங்காமல் துயில்  கொண்டிருக்க, பொறுத்திருந்து பார்த்தவன் முகத்துக்கு நேராக இருக்கும் அவள் முகத்தை பற்றினான்.

தூக்கத்தில் பொம்மை போல் அசைந்தது அவள் தலை. ரசிக்கும் படி மனம் சொல்லியும் கேட்காதவன் அன்பினி தாடையை கடித்தான்.
அலறி துடித்து எழுந்தவள் புரிந்துக் கொண்டு தாக்க வருவதற்குள் ஓடிவிட்டான்.

 

காலை டிபன் தானே செய்வதாக வாக்கு கொடுத்த அன்பினி கடமையை மறந்து கணவனிடத்தில் கொஞ்சி கொண்டிருக்க, மருமகளை எதிர்பார்த்து ஏமாந்த பரமேஸ்வரி கருப்போடு சமையலை கவனித்துக் கொண்டிருந்தார். அன்னையின் மனம் புரியாத திவ்யா,

“என்ன ம்மா நீங்க சமைக்கிறீங்க.” கேட்டாள்.

“டெய்லி நான் தான சமைக்கிறேன் இது என்ன கேள்வி.” என்றவர் மருமகள் மீது இருக்கும் கோபத்தை குழம்பில் காட்டிக் கொண்டிருந்தார்.

“அண்ணி சமைக்கிறதா சொன்னாங்க. அதான் கேட்டேன்” என்றவள் சும்மா இல்லாமல்,

“நேத்து அண்ணி வச்ச சாம்பார் செமையா இருந்துச்சு.” என்றாள்.

குழம்பில் இருந்த கரண்டியை எடுத்து கல்மேடையில் ஓங்கி வைத்தவர், “இத்தனை நாள் உனக்கு என்ன விஷத்தையா வச்சு கொடுத்தேன். செம்மையா இருந்துச்சாம் செமையா.” என்றதும் தான் எதுவோ தவறாக இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள் திவ்யா.

“மகாராணி இன்னும் கீழே இறங்கி வரல. இந்த லட்சணத்துல முன்னாடியே முன்பதிவு வேற நானே பண்ணுறேன்னு. வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டா. வரட்டும் இன்னைக்கு இருக்கு.” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு குழம்பை கூட்டி முடித்தார்.

“அம்மா குழம்ப விட நீங்க ரொம்ப சூடா இருக்கீங்க போல.” என்ற மகளை ஏகத்துக்கும் முறைக்க,

“எனக்கு என்னமோ நீங்க கோபத்துல பேசுற மாதிரி தெரியல. மருமக வரலையேன்னு தவிப்புல கேட்கிற மாதிரி இருக்கு.” என்றாள்.

பதில் சொல்லாதவர் வேலையை கவனிக்க, “அண்ணி கைக்குள்ள போட்ட முதல் ஆளே நீங்கதாம்மா” என்றவள் அவர் அடிப்பதற்குள்   வெளியில் சென்று விட்டாள்.

அன்னையின் கோபத்தை தெரிவிக்க எண்ணியவள் அண்ணனின் அறை கதவு முன்பு நின்றாள். “அண்ணி!” என்று இரு முறை ஓசை கொடுக்க,

கதவைத் திறந்த அக்னி, “என்ன குண்டம்மா” என்றான்.

“ச்ச தள்ளு!”  அவனை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தவள் அண்ணியை தேட, தலையணையை இம்சை செய்தவாறு படுத்துக் கொண்டிருந்தாள் அன்பினி.

பக்கத்தில் இருந்த மற்றொரு தலையணையை எடுத்து அடித்தவாறு, “அடியே அண்ணி! அங்க உங்க மாமியார் நீங்க இன்னும் வரலன்னு கொதிச்சிட்டு இருக்காங்க எந்திரிங்க!” என்றிட,
‘சிக்கிவிட்டது அடிமை’ என்று பாவமாக பார்த்தான் அக்னி.

அவன் நினைத்தது போல் அடித்துக் கொண்டிருப்பவளின் கையைப் பிடித்து மெத்தையில் தள்ளி, அவள் கத்துவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூங்க ஆரம்பித்தாள் அன்பினி.

“அண்ணா என்னடா உன் பொண்டாட்டி என்னை இப்படி கொடுமை பண்றாங்க.” என்றவள் காட்டு கத்தலாக கத்திக் கொண்டிருந்தாள் அன்பினி காதில்.

“நானே இப்ப தான் அவகிட்ட மல்லுக்கட்டி எந்திரிச்சேன். உன்னை யாரு சிக்க சொன்னது.” என்றவன் காஃபி குடிக்க சென்றுவிட்டான்.

சமையலறையில் இருந்த பரமேஸ்வரி மகனை பார்த்ததும் அறைக்கு செல்ல, “அம்மா இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் கோபமா இருக்க போறீங்க.” என்க,

“நான் சொன்னதை நீ கேட்கிற வரைக்கும்.” என்றார்.

“கம்பெனி விஷயத்தை தவிர மீதி என்ன வேணா சொல்லுங்கம்மா கேட்கிறேன்.” அக்னி.

“இனி நான் சொல்லி கேட்க வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துருச்சு உனக்கு என்ன வேணும்னு உனக்கே தெரியும்.  அந்த கம்பெனிய யார் கிட்ட இருந்து வாங்கினியோ அவங்க கிட்டயே கொடுத்துடு.” என்றவர் சென்றுவிட,

“அது மட்டும் முடியாது ம்மா. சாதாரணமா நீங்க கொடுத்து இருந்தா கூட நான் விட்டு இருப்பேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில உங்களை நிக்க வச்ச அந்த செல்வகுமார அதே மாதிரி நிக்க வைக்கிற வரைக்கும் கம்பெனியை தர மாட்டேன்.” கத்தினான் அக்னி.

“முடிஞ்சு போன விஷயத்தை கிளற போய் தான் மண்டபத்துல அத்தனை பேருக்கு முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னோம். எங்க கிட்ட முன்னாடி ஒரு வார்த்தை கேட்டு இருந்தா இவ்ளோ தூரம் எதுவும் நடந்திருக்காது. நீ செஞ்ச தப்புக்கு ஊர் முன்னாடி நாங்களும் அவமானப்பட்டு நின்னோம்.” இருவரும் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மணிவண்ணன் பொறுக்க முடியாமல் சொல்லிவிட,

“அப்படி என்ன அசிங்கப்படுத்திட்டேன் உங்களை. ” என்று கேட்டான் அக்னி.

“என்ன பண்ணல. கம்பெனிய வாங்க போறன்னு அவன் வீட்டு பொண்ணையும் சேர்த்து வாங்கிட்டு வந்துட்ட. கடைசில ஒரு பொண்ண ஏமாத்தி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண பார்த்ததா ஊரே எங்களை தான் காரி துப்புச்சு.” மணிவண்ணன் குரல் உயர்த்தினார். அந்த சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த அன்பினி எழுந்து வெளியில் வர,

“நீங்க சொன்னதால தான் அவ கழுத்துல தாலி கட்டினேன். மத்தபடி எதுவும் இல்லை.” என்றவனுக்கு,

“இன்னொரு தடவை அந்த வார்த்தையை சொல்லாத. உன்ன கட்டாயப்படுத்தி யாரும் தாலி கட்ட வைக்கல. உனக்கு விருப்பமில்லாத விஷயத்தை யாரு சொன்னாலும் நீ பண்ண மாட்டேன்னு எங்களுக்கு நல்லா தெரியும்.” இப்போது பரமேஸ்வரியும் குரல் உயர்த்த,

“நீங்க சொல்ற எதுவும் உண்மை இல்லை. சத்தியமா உங்களுக்காக தான் தாலி கட்டினேன்.” விடாப்பிடியாக அவன் கருத்தில் நின்றான் அக்னி.

“அந்த இடத்துல உன் பொண்டாட்டியை தவிர வேற ஒரு பொண்ணு   இருந்தா தாலி கட்டி இருப்பியா.” மகனை மடக்க பரமேஸ்வரி கேட்க,

“யாரா இருந்தாலும் அதைத்தான் பண்ணி இருப்பேன்.” என்றான் உறுதியாக.

“நாங்க சொன்னா இன்னொரு பொண்ணு கழுத்துலையும் தாலி கட்டுவியா?” என்ற அன்னையைப் பார்த்தவன்,

“என்ன ம்மா பேசிட்டு இருக்கீங்க. செக் பண்ணி பார்க்கறீங்களா. நான் உங்க மகன் விளையாட்டு பொம்மை இல்லை.” என முறைத்தான்.

“கேள்விக்கு இன்னும் பதில் வரல.” என்று வாக்குவாதம் செய்தார் பரமேஸ்வரி.

பதில் சொல்லும் முன் பார்வை படியில் நின்று கொண்டிருக்கும் அன்பினி அருகில் செல்ல, அவளோ அவன் சொல்லப் போகும் பதிலைக் கேட்க தயக்கத்தோடு நின்றிருந்தாள்.

“அம்மா எதுக்காக அண்ணனை கார்னர் பண்றீங்க.” என்று திவ்யா கேட்க,

“பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது என்ன இது! காலேஜ் கிளம்புற வேலைய பாரு.” கண்டித்தார் மணிவண்ணன்.

பெற்றோர்களை பார்த்தவன் நம்பிக்கை பெற, “நீங்க சொன்னா என்ன வேணாலும் செய்வேன்.” என்றான் அன்பினி புறம் திரும்பாமல்.

கேட்டதும் அவள் முகம் வாடி விட்டது. மனதில் அவனுடன் பேசிக் கொண்டவள் அறைக்கு செல்ல படி ஏற,

“அப்போ அவ கழுத்துல கட்டுன தாலியை நீயே கழட்டிடு.” என்ற பரமேஸ்வரியின் வார்த்தையில் தடுக்கி நின்றாள்.

அன்னையின் வார்த்தையில் திடுக்கிட்ட அக்னி அவசரமாக மனைவியை பார்க்க, அவள் கண்களோ அழுது விடுவேன் என்ற நிலையில் துடித்தது. இருவரையும் பார்த்த பரமேஸ்வரி,

“என்ன பார்த்துட்டு இருக்க கழட்டு.” என்றார்.

“அம்மா அண்ணி பாவம்” என்ற திவ்யாவை கடுமையாக பரமேஸ்வரி முறைக்க, “விடு பரமு இப்ப எதுக்கு இதெல்லாம்.” என்று மனைவியை சமாதானம் செய்தார் மணிவண்ணன்.

“நம்ம ஒன்னும் ஆரம்பிக்கலங்க விட. ஆமா நானும் காதலிச்சேன்னு ஒரு வார்த்தை சொன்னா முடிஞ்சு போச்சு. அதை விட்டுட்டு என்னமோ நமக்காக அவன் வாழ்க்கையை தியாகம் பண்ண மாதிரி பேசுறான். பண்ற எல்லா களவாணித்தனத்தையும் பண்ணிட்டு பழி மட்டும் நமக்கு” என்று ஆதங்கமாக பேசினார்.

அந்த வார்த்தையில் அன்பினி மீதான காதல் மறைய, “நான் அவளை காதலிக்கல. விருப்பப்பட்டு கட்டுனா தான் தாலி.  அவ கழுத்துல இருக்கிறது வெறும் கயிறு. அதை கழட்டுறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என்றவன் அவளை நோக்கி நகர,

“உன்னை நீயே ஏமாத்திக்காத அக்னி. நீ அவளை விரும்புறன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.  வேலைக்கு கிளம்புற வேலைய பாரு.” என்றார் பரமேஸ்வரி.

அதில் மேலும் அவனுக்கு கோபம் வந்து விட்டது. அன்பினி அருகில் சென்று தாலியில் கை வைக்க, கன்னம் நொடி பொழுதில் வீங்கி விட்டது அவள் அடித்த அடியில் அக்னிக்கு. பக்கத்தில் நின்றிருந்த திவ்யா தானாக கன்னத்தில் கை வைத்துக் கொள்ள,

“தாலி கட்டுற உரிமை மட்டும் தான் உனக்கு. இன்னொரு தடவை இந்த தாலியில உன் கை பட்டுச்சு வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் என் கூட குடும்பம் நடத்துவ.” என்றவள் அக்னியின் பெற்றோர்களை பார்த்து,

“என்னையும் அக்னியையும் பிரிக்கிற மாதிரி இனி ஒரு வார்த்தை இந்த வீட்டுல வந்தா சும்மா இருக்க மாட்டேன். அன்பினி சுயரூபம் தெரியாம பலி ஆகிடாதீங்க.” என்று விறுவிறுவென சென்று விட்டாள்.

வீடு மயான அமைதியில் இருந்தது அன்பினியின் கர்ஜனையில். அடிவாங்கிய அக்னி அப்படியே நின்றிருக்க, திவ்யா தான் பயத்தில் தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டாள். அதில் திரும்பி தங்கையை முறைத்தவன் நகர்ந்து விட, “தைரியம் தான் அடி வாங்குனதுக்கு அப்புறமும் மேல போறான் பாரு.” என்றாள் குறையாத பயத்தோடு.

 

உள்ளே நுழைந்த அக்னி பால்கனியில் நின்றிருக்கும் மனைவியின் முதுகை பார்த்தான். அவனுக்கும் மனம் வலிக்க தான் செய்தது. உள்ளுக்குள் அவள் மீது இருக்கும் காதலுக்கு தோதாக பெற்றோர்களும் நின்று விட, கோபம் இருப்பினும் மனம் இணங்கியது தாலி கட்ட. அவை அக்னிக்கு புரிந்தாலும் அவமானப்பட்ட கோபத்தில் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான்.

ஒருவேளை அவள் தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் கழட்டி இருப்பான். அதன்பின் அன்பினி உடனான உறவு எப்படி என்று இப்போது யோசிக்க பரிதவித்துப் போனான். செய்ய நினைத்த முட்டாள்தனத்தை கடிந்து கொண்டு அவளிடம் பேச நெருங்க,

“கிட்ட வராது அக்னி.” என்றாள்.

கண் மூடி அவள் வார்த்தையின் வலிகளை உணர்ந்தவன் தன்னைத் தானே நொந்து கொண்டு குளிக்கச் சென்றான். பாதி குளியலில் இருக்கும் பொழுது கதவு தட்டப்பட்டது. அன்பினி தான் என்பதை உணர்ந்தாலும், “என்ன?” என்றான்.

பதில் கொடுக்காத அன்பினி தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தாள். என்னவோ என்று பதறியவன் துண்டை கட்டிக்கொண்டு கதவை திறக்க, புயலாக உள்ளே நுழைந்தாள்.

விசாரிக்க வாய் எடுத்த அக்னியின் வாயில் ஒன்று வைத்தவள், “இது வெறும் கயிறா! எவ கழுத்துல வேணாலும் தாலி கட்டுவியா.” என்று அடிக்க ஆரம்பித்தாள்.

அவள் அடியில் தடுமாறியவன், “ஏய்! என்னடி?” என்று மடக்க,

கை விரல்களை பிடித்து இஷ்டத்துக்கும் வளைத்தவள், “அவ்ளோ தைரியமா உனக்கு. எங்க கட்டிப் பாரு எவளுக்காது தாலிய. உன்ன மட்டும் இல்ல உன் குடும்பத்தையே கொன்றுவேன். உன் பக்கத்துல எவ நின்னாலும் அவ ரத்தத்தை குடிச்சிடுவேன். இந்த கை தான கழட்டா வந்துச்சு.” என்று அவ்விரலை வளைத்து தன் போக்கில் கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பித்தாள்.

அக்னி தடுத்துக் கொண்டிருக்க, “உங்க அம்மா என்ன சொன்னாலும் செய்வியா? ஆஹான்! சொல்லுடா செய்வியா? இப்ப தான் எங்கிட்ட உன்னை சாக சொன்னாங்க . வா சாவு” என்றவள் தலை முடியை பிடித்து தண்ணீருக்குள் முக்கி மூச்சு திணற வைத்தாள்.

முட்டி போட்டு பக்கெட் தண்ணீரில் கவிழ்ந்து இருந்தவன், “செத்துட போற விடுடி.” கெஞ்சினான் கைகளைப் பிடித்துக் கொண்டு.

அந்த கையில் ஓங்கி மிதித்தவள் இன்னும் முக்கி, “சாவுடா!” என்று தொடர்ந்தாள் ‌.

பிரஷை எடுத்து அவன் விரல் முட்டியில் விடாமல் அடித்துக் கொண்டிருக்க, “ஐயோ விடுடி!” என்றான்.

“இன்னொரு தடவை இந்த மாதிரி கேனத்தனமா ஏதாச்சும் பண்ண நானே உன்னை கொன்னுட்டு இந்த தாலிய கழட்டிடுவேன்.” என்று மீண்டும் ஒருமுறை தண்ணீரில் முக்கி எடுத்தாள்.

“விடு டி” என்றவன் தள்ளி விட்டு நிற்க, மூச்சு வாங்க பத்திரகாளியாய் நின்று இருந்தாள் அன்பினி சித்திரை.

அவள் கோலத்தைப் பார்த்து லேசாக அக்னிக்கு சிரிப்பு வந்து விட்டது . அவனை சோதிக்கும் விதமாக உதடு காட்டிக் கொடுத்தது. பார்த்தவள் மீண்டும் பாய்ந்தாள். அப்படி ஒரு வேகம் அவள் செய்கையில். சோப்பு நுரை எடுத்து அவன் கண்ணில் நன்றாக தேய்த்தவள்,

“புருஷன் கொடுமை காட்டுகிறாயா. பதிலுக்கு நான் பொண்டாட்டி கொடுமைய காட்டுனா தாங்க மாட்டடா.” என்றவள் இடுப்பில் இருக்கும் துண்டை உருவ…

மானத்தை காப்பாற்ற  நினைத்து அதை இறுக்கமாக பற்றிக் கொண்டான். “விடுடா”  ஆக்ரோஷமாக அவள் முறைக்க,

“நீ விடுடி என் மானம் போயிடும்.” என்று கெஞ்சினான் அக்னி.

“கட்டுன பொண்டாட்டிய வச்சு வாழ தெரியாதா உனக்கு எதுக்குடா மானம். ” என்று வேகமாக அதை உருவ பார்த்தாள்.

இதற்கு மேல் விட்டால் சரி வராது என்று உணர்ந்த அக்னி வலுக்கட்டாயமாக  ‌ அவளை பிடிக்க, திமிரலோடு அடங்கி நின்றாள். கண்ணில் மட்டும் கோபம் தீர்ந்த பாடில்லை.  கோபத்தை உணர்ந்தவன்,

“சாரி!” என்றிட, கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

வாங்கிக் கொண்டவன், “சாரி!” என்று இன்னொரு அடியை வாங்கிக் கொண்டான்.

“கோவத்துல தான் பண்ண வந்தேன் அன்பு. உனக்கு எவ்ளோ வலிக்குதுன்னு புரியுது. சத்தியமா சொல்றேன் நமக்குள்ள இனி எந்த பிரச்சனை வந்தாலும் அந்த தப்பை மட்டும் திரும்ப பண்ண மாட்டேன். மன்னிச்சிடு!” மனம் வருந்தி பேசினான்.

கோபத்தை குறைத்துக் கொண்டவள் அங்கிருந்து நகர, “மன்னிச்சிட்டன்னு சொல்லு.” என்றான் பிடித்து வைத்து.

பதில் உரைக்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு அன்பினி நிற்க, முகத்தை திருப்பியவன் கெஞ்சினான்.

“பனிஷ்மென்ட் தருவேன் செய்றேன்னு சொன்னா மன்னிக்கிறேன்.”பெரிய மனதோடு அவள் விட்டுக் கொடுக்க,

“நாய் வாலை நிமித்த முடியாது.” என்று அடங்கி சென்றான் அக்னி.

கண்டிஷன் பெயரில் குளித்து முடித்த அக்னி அலங்காரம் செய்யும் பொம்மை போல் நின்றிருக்க… ஒவ்வொரு ஆடையாக போட்டு பார்த்து சோதித்தாள் அன்பினி.

எட்டாவது சட்டை அவளுக்கு பிடித்துப் போக, “அழகு புருஷன்.” என்று திருஷ்டி கழித்தாள். தனக்குப் பிடித்தது போல் தலை சீவி அலங்கரித்தவள், “இனிமே டெய்லி தப்பு பண்ணு நான் டெய்லி பனிஷ்மென்ட் தரேன்.” என்று கன்னத்தில் முத்தம் வைத்து இடுப்பை கட்டிக் கொள்ள,

“எல்லாம் என் நேரம் டி.” என்றாலும் கண்ணாடியில் தன்னை ரசித்தான் அக்னி.

***

“என்னை இருந்தாலும் நீ அப்படி பேசி இருக்கக் கூடாது பரமு.” என்று மணிவண்ணன் குறைபட,

“தப்பு தாங்க. ஆனா எப்ப பாரு நமக்காக தாலி கட்டுனன்னு சொல்றதை ஏத்துக்க முடியல. அவனும் அந்த பொண்ண விரும்புறான். ரெண்டு பேருக்குள்ள இருக்க காதல் தான் இந்த நாலு நாளும் வீடு அமைதியாக இருக்க காரணம். நானும் பார்த்துட்டு தான இருக்கேன் ரெண்டு பேரும் சண்டை போடுறதையும் உடனே சமாதானம் ஆகுறதையும். என் மனசுல இருக்க கோபம் எல்லாம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்னு தாங்க.” என்றார் வருத்தத்தோடு.

“அவனுக்கே அவன் காதல் புரியாம இருக்கலாமே பரமு.” என்ற கணவனை அவர் புரியாமல் பார்க்க,

“இல்லன்னா நமக்காக அந்த பொண்ண வேணாம்னு முடிவு பண்ணி இருக்கலாம். ஏதோ ஒன்னு இனி அந்த பொண்ணு தான் நம்ம மருமகள். நீ பேசுனது கொஞ்சம் அதிகம்னு தோணுது. எந்த பொண்ணாலையும் அந்த வார்த்தையை தாங்கிக்க முடியாது. திவ்யா மாதிரி தான் அவளும். முடிஞ்ச அளவுக்கு ஒதுங்கி நிற்க பார்ப்போம்.” என்றார் மகனின் வாழ்க்கையை நினைத்து.

“நான் என் மருமகளை கஷ்டப்படுத்தணும்னு அப்படி ஒரு வார்த்தையை சொல்லல. அப்பவாவது வாயை திறந்து அவன் உண்மையை சொல்லுவான்னு தான் சொன்னேன்.” என்று விட்டு அமைதியாக பரமேஸ்வரி அமர்ந்திருக்க,

“இருந்தாலும் நம்ம மருமக பெரிய சண்டைக்காரி போல. என்னா அடி பக்கத்துல நின்ன திவ்யா அலறி கன்னத்துல கை வச்சுட்டா.” என்று மணிவண்ணன் சிரித்தார்.

“நானே பயத்துல தாங்க நின்னுட்டு இருந்தேன். இதுல நம்மள வேற மிரட்டினதும் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். வருங்காலத்துல மருமக கொடுமைய அனுபவிக்கனும் போல.”   பரமேஸ்வரி சிரித்தார்.

***
வீட்டில் இருந்த நால்வரும் சங்கடத்தோடு  சாப்பிட்டுக் கொண்டிருக்க அதையெல்லாம் தூசு தட்டிய அன்பினி, ” இன்னொரு தோசை வைங்க” என்று ஐந்தாவது தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, “மாமியாரே இருக்கிறது அஞ்சு பேர் . எதுக்கு குடம் குடமா தண்ணி ஊத்தி வச்சிருக்கீங்க சாம்பார. இதுக்கு தான் என் நாத்தனார் என்னை சமைக்க சொன்னாளா.” என்று திவ்யாவை மாட்டி விட, பரமேஸ்வரியின் முறைப்பிற்கு அளவே இல்லை.

“அண்ணி ஏன் இப்படி” என்று முகத்தை பாவமாக வைக்க,

“கவலைப்படாத நாத்தனாரே நாளைல இருந்து டான்னு அண்ணி சமையல் கட்டுல ஆஜர் ஆகிடுவேன்.” என்று அவள் தோளை தட்டினாள்.

“முதல்ல எந்திரிக்கிறியான்னு பாரு அப்புறம் சமையல் கட்டுக்கு வரலாம். உன்ன நம்பி இருந்தா
இன்னைக்கு எல்லாரும் பட்டினியா தான் இருந்திருக்கணும்.” அவளைப் பார்க்காமல் பேசினார் பரமேஸ்வரி.

“நான் என்ன பண்றது உங்க மகன் தான் எந்திரிக்க விடாம தொல்லை பண்றாரு.” என்றதில் அக்னிக்கு புரை ஏறி விட,

“எப்படி அண்ணி இப்படி சரளமா பொய் பேசுறீங்க.” ரகசியமாக கேட்டாள் திவ்யா.

“உன் குடும்பத்தை சமாளிக்க கடவுள் எனக்கு காட்டுன ஒரே வழி இதுதான்.” என்று கண்ணடித்தவள் அக்னியை பார்த்து,

“இனிமே விடியுற நேரம் என்னை தொந்தரவு பண்ணாத மாமா. இந்த வீட்டு மருமகளா எனக்கு நிறைய கடமை இருக்கு.” என்றதும் மணிவண்ணன் தலையில் அடித்துக் கொண்டார்.

தந்தையின் செயலில் மீண்டும் மனைவியை முறைத்தவன்  அவள் காலை எட்டி மிதிக்க, “சும்மா இரு மாமா வயசு பொண்ணு பக்கத்துல இருக்கா. கால தடவுறதை பார்த்தா என்ன நினைப்பா.” என்று கூச்சம் பார்க்காமல் பேசியவள் கண்ணும் கருத்துமாக சாப்பிட, இப்போது அனைவரும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.

பேச்சுக்களுக்கு நடுவில் மாமனாரை பார்த்து, “உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றாள் பொறுமையாக.

திருத்திருவென முழித்தவர் மகனையும் மனைவியும் பார்க்க, திவ்யாவிற்கு சிரிப்பு வந்து விட்டது. திவ்யா சிரிப்பதை பார்த்து அக்னியும் சிரித்து விட, “அடுத்து உங்க கிட்ட தான் வருவேன்.” என்றதில் இருவரின் பற்களும் பளிச்சிட மறந்துவிட்டது.

அவர் அமைதியாக தலையசைக்க, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த சண்டையில    பெரியவங்க பேசும் போது பேசாதன்னு திவ்யாவை தடுத்தீங்க. ஏன் மாமா அவ பேசக்கூடாதா. இது அவளோட வீடு  நீங்க எல்லாரும் அவ சொந்தம். உங்க வார்த்தைய கேட்டு அவ மனசு இனி எந்த பிரச்சனை வந்தாலும் பேச கூடாதுன்னு நினைக்கும். இதே பழக்கம் புகுந்த வீட்டிலயும் கண்டினியூ ஆகும்.” என்றவள் அவர் முகபாவனையை பார்த்தாள்.

பரமேஸ்வரி,அக்னி, திவ்யா மூவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க தொடர்ந்தாள், “பெத்த பொண்ணு உங்களுக்கு சமமா நின்னு பேசும் போது தடுத்த நீங்களும், தன்னை விட தங்கச்சி திறமையா இருக்கிறதை பார்த்து தடுக்க நினைச்ச எங்க அப்பாவும் ஒன்னு தான.” என்றதும்,

“அன்பு!” என்று அவள் பேச்சை கண்டித்தான் அக்னி.

“நான் என் மாமா கிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்றவள் அவரைப் பார்த்து, “ரெண்டு பேருக்கும் இருந்தது சுயநலம். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும்னு எண்ணம். வீட்டுல ஆரம்பிச்சு இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பொண்ணுக்குன்னு ஆண் வகுத்து வைச்சிருக்கிற கட்டமைப்பு. அதைத்தான் எங்க அப்பாவும் செஞ்சாரு. இன்னைக்கு நீங்களும் செஞ்சிங்க. அவர் பண்ணது தப்புன்னா நீங்க பண்ணதும் தப்பு தான்.” என்றாள் மனதில் இருப்பதை மறைக்காமல்.

“உங்க அப்பனுக்கு சமமா எங்க அப்பாவ வைக்காத. அவர் ஒன்னும் ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது உதவி செய்றேன்னு நம்ப வச்சு ஏமாத்தல.” தந்தைக்காக வாதிட்டான் அக்னி.

“ரெண்டு பேர் பண்ண தப்பும் ஒன்னு இல்ல.  அத்தையோட நிர்வாக திறமையை பத்தி நல்லா தெரிஞ்ச உங்க அப்பா இப்ப வரைக்கும் அவங்களை வீட்டுக்குள்ள தான வச்சிட்டு இருக்காரு. வசதி வாய்ப்பா வச்சிருக்க நினைச்சாரே தவிர தன் மனைவியோட திறமையை அங்கீகரிக்கனும்னு நினைக்கலையே.” என்றவள் கை கழுவ சென்றுவிட,
மனைவியை குற்ற உணர்வோடு பார்த்தார் மணிவண்ணன்.

***

செல்வகுமாரை பார்க்க மகேஷ் வந்திருந்தான். அவர் விக்ரமோடு தொழில் நடவடிக்கைகளை பேசிக் கொண்டிருக்க, உத்தரவு கேட்டு அவர்களுடன் அமர்ந்தான்.

“என்ன அங்கிள் கேஸ் எந்த அளவுக்கு இருக்கு.” என்றிட, விக்ரம் முகத்தில் கடுகடுப்பு.

“லாயர் கிட்ட பேசிட்டேன் மகேஷ். நாளைக்கு நோட்டீஸ் அனுப்பிடலாம்.” என்றவரிடம்,

“அங்கிள் உங்களுக்கு கம்பெனி மட்டும் வேணுமா இல்ல உங்க பொண்ணும் வேணுமா.” என்று நைசாக பேச்சு கொடுத்தான்.

“இப்ப எதுக்கு அவளை பத்தி பேசுற. அவ கொடுத்த அவமானத்தை சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். அவளை அவன் கிட்ட இருந்து பிரிக்கலாம்னு நினைச்சேன் ஆனா இப்போ தோணுது அவ செத்தாலும் கவலை இல்லைன்னு.” என்றவருக்கு,

“உங்களுக்கு வேணா அவ பொண்ணா இல்லாம இருக்கலாம். என்னைக்கும் அவ என்னோட தங்கச்சி. என் முன்னாடி இந்த மாதிரி பேசுறத நிறுத்திக்கோங்க.” என்றான் விக்ரம்.

தந்தை மகன் இருவரும் அன்பினியை வைத்து வாதம் புரிந்து கொண்டிருக்க, “நான் சொல்ல வந்த விஷயத்தை கேட்காம உங்களுக்குள்ள சண்டை போட்டுட்டு இருக்கீங்க.” என்று தடுத்தான் மகேஷ்.

“பிரச்சனையே உன்னால தான் ஆரம்பிச்சது. இப்ப எதுக்கு தேவை இல்லாம அன்பினி பத்தி பேசின.” என்ற விக்ரமை பார்த்தவன்,

“அவளுக்கு நடந்த அநியாயத்தை சொல்ல.” என்றான்.

வார்த்தையில் எதிரில் இருந்த இருவரும் அவனைப் பார்க்க,  மாலில் நடந்த விஷயங்களை அப்படியே ஒப்புவித்தான். கோபம் கொண்ட விக்ரம், “என்ன தைரியம் இருக்கும் அவனுக்கு. அதனால தான் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் கொடுத்துட்டு போனானா. என் தங்கச்சி எதுக்கும் குறைவில்லாம வளர்ந்தவ. அவளை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டானே. ” என்று கொதித்தான் ‌.

செல்வகுமார் பேசவில்லையே தவிர மனதில் மகளை நினைத்து உண்மையாகவே வருந்தினார். விக்ரமை விட அதிகம் பிடித்தது அவளை தான். அதனாலே செல்லத்தை அதிகமாக கொடுத்து வளர்த்தார். அப்படிப்பட்ட பெண் இன்று கஷ்டப்படுவதை பார்த்து ஒரு தந்தையாக வருத்தப்பட்டார்.

“அவன் வீட்டுக்கு வந்ததால  சந்தேகப்பட்டு பின்னாடியே போனேன்.” வேவு பார்க்க சென்றதன் காரணத்தையும் கூறினான் மகேஷ்.

இப்பவே விக்ரம் கேட்பதாக கிளம்ப, “இரு விக்ரம் அவசரப்படாத. அன்பினி இந்த மாதிரி கல்யாணம் பண்ற பொண்ணு இல்ல. அதுவும் அவன சுத்தமா பிடிக்காதுன்னு நம்ம கிட்ட எத்தனையோ தடவை சொல்லி இருக்கா. அப்படி இருக்க இந்த கல்யாணம் எதனால நடந்துச்சுன்னு முதல்ல கண்டுபிடிக்கணும். கம்பெனி விஷயத்துல பித்தலாட்டம் பண்ண மாதிரி அன்பினி விஷயத்துல நிச்சயம் அவன் ஏதாவது பண்ணி இருக்கணும். அதை கண்டுபிடிச்சு நம்ம பொண்ண கூட்டிட்டு வரணும்.” வஞ்சகமான பேச்சை விக்ரமின் மனதில் விதைக்க, தங்கையின் கஷ்டத்தை அறிந்து கவலைப்பட்டான்.

 

செல்வகுமாருக்கும் அப்போது தான் அந்த யோசனையை வந்தது. மகளை எப்படியாவது அவனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற முடிவு இப்போது பலமானது அவருக்குள். நாகராஜிற்கு ஃபோன் செய்தவர் பார்க்க வரும்படி கேட்டார். விக்ரம் இவ்விஷயத்தில் நடுநிலையாக இருப்பான் என்பதை உணர்ந்தவர் அவனை நாசுக்காக அனுப்பிவிட்டு மகேஷோடு சேர்ந்து திட்டம் தீட்டினார்.

***

வீட்டிற்கு வந்த அக்னி  தேடியது அவனின் தர்மபத்தினி அன்பினியை தான். அவளோ இவன் வருகை அறியாமல் திவ்யாவோடு கதை அளந்து கொண்டிருக்க,
“குண்டம்மா எப்ப பாரு இவ கூட ஜோடி போட்டு சுத்துறியே படிக்கிற வேலை எல்லாம் உனக்கு இல்லையா.” என்றவாறு அவர்களிடம் வந்தான்.

“எங்களையே நோட் பண்றியே உனக்கு வேற வேலை எல்லாம் இல்லையா.” என உடனே அவளும் பதில் கொடுக்க, சிரித்தாள் அன்பினி.

பார்வையால் அதை நிறுத்திய அக்னி, “அம்மா கூப்பிடுறாங்க போ.” என்றான் தங்கையிடம்.

அவனை சந்தேகமாக பார்த்தவள், “வாங்க அண்ணி போலாம்.” என்று அன்பினியை இழுத்துச் சென்றாள்.

அக்னியை திரும்பி பார்த்தவள் என்னவென்று விசாரிக்க, ‘ரூம்க்கு வா.’ என சைகை செய்தான் அக்னி.

கண்ணில் மின்னல் பல வெட்ட, “நாத்தனாரே! கையை விடு என் புருஷன் கூப்பிடுறான்.” என்று திவ்யாவிடம் சொல்ல… அவளோ அண்ணனை திரும்பி பார்த்து,

“அவனை நம்பி போகாதீங்க. அவன் சரியான அம்மா பையன். காலையில உங்களுக்காக நான் தான பேசினேன்.” என்றிட, கணவனை முறைத்தவள், “வா நம்ம போலாம்.” என்று கிளம்பினாள் திவ்யாவோடு.

ஹாலில் அமர்ந்துக் கொண்டு மணிவண்ணன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க, பரமேஸ்வரி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னையிடம் விசாரித்தவள் அண்ணனை மனதுக்குள் திட்டிக்கொண்டு, “அண்ணி அவனுக்கு என்னவாம் திடீர் பாசம்.” என்று சந்தேகம் கேட்டாள்.

“அதான் நாத்தனாரே எனக்கும் தெரியல.”

இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பரமேஸ்வரி, “என்ன அங்க ?” என விசாரிக்க,

“பேசிட்டு இருக்கோம் மாமா” என்றார்கள் கோரசாக.

மணிவண்ணன் தலை உயர்த்தி இருவரையும் பார்த்து அமைதியாகிவிட, “நாத்தனாரே உனக்கு விஷயம் தெரியுமா.” என்ற அன்பினி சித்திரையின்  பார்வை பரமேஸ்வரி மீதுதான் இருந்தது.

மணிவண்ணன் உஷாராகி தலை உயர்த்தாமல் இருக்க, பரமேஸ்வரி காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.
“உன் அப்பா, அண்ணன் கிட்ட இனிமே பேசணும்னா என்கிட்ட சொல்லு நான் சொல்லிக்கிறேன்.” என்றாள்.

“எதுக்கு அண்ணி அவங்க தான் இங்க இருக்காங்களே.”

“உனக்கு விஷயம் தெரியாதா.” என்றவள் மாமியாரின் அருகில் அமர்ந்து, “அவங்க எல்லாரும் இப்போ என் கைக்குள் இருக்காங்க.” என்று ஓரக்கண்ணால் பரமேஸ்வரியை பார்க்க, அவரோ மகளை ஏகத்துக்கும் முறைத்தார்.

அதைப் பார்த்த அன்பினி அவர் தோளை இடித்து, ” மாமா! என் கையே கொஞ்சூண்டு இருக்கு அதுல இவ்ளோ டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கீங்க. என்னால வெயிட் தாங்க முடியல.” என்று உள்ளங்கையை பார்த்து பேச, மணிவண்ணன் குனிந்து தலை நிமிராது திருத்திருவென்று முழித்தார்.

“அப்பா பாவம் அண்ணி கை வலிக்க போகுது கீழ இறங்குங்க.” என்று திவ்யாவும் அன்பினி உள்ளங்கையை பார்த்து பேச,

“அப்படியே உங்க அண்ணன் கிட்டயும் சொல்லு திவ்யா.” என்றாள் பாவமாக.

“அவன் எங்க அண்ணி இருக்கான் காணோம்.” என்று உள்ளங்கையை பிடித்து திவ்யா தேட,

“அட கண்ணு தெரியாத நாத்தனாரே இங்க பாரு அவங்க அம்மா பின்னாடி எப்படி ஒளிஞ்சி உக்கார்ந்துட்டு இருக்கான்னு.” என்று அவள் தலையில் தட்டினாள்.

“அட ஆமா அண்ணி! அம்மாவ பாருங்களேன் எப்படி கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்காங்க.” என்று விட்டு, “சும்மா சொல்லக்கூடாது அண்ணி பொறுப்பான மருமகளா எங்க குடும்பத்தையே உள்ளங்கையில வச்சி தாங்குறீங்க.”என்று அவளைப் புகழ்ந்து பேச,

“போங்க நாத்தனாரே எப்ப பாரு புகழ்ச்சி தான்.” என்று வராத வெட்கத்தை வர வைத்து வெறுப்பேற்றினாள் பரமேஸ்வரியை.

மாடியில் இருந்த அக்னிக்கு சிரிப்பு தாங்கவில்லை. அள்ளி கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது மனைவியை. மாடியில் நின்று மகன் சிரிப்பதை பார்த்த பரமேஸ்வரி போனை எடுத்து,

“அம்மா! உங்க பேத்தி மாமியார்னு கூட மரியாதை இல்லாம என்னை ரொம்ப கிண்டல் பண்றா. அதுக்கு நான் பெத்த ரெண்டும் சிரிக்குதுங்க. சப்போர்ட் பண்ண இங்க வேற ஆள் இல்லை. நீங்க உடனே நாளைக்கு காலைல கிளம்பி இங்க வாங்க பஞ்சாயத்தை பேசி முடிச்சிடலாம்.” என்றவர் இன்னும் கடுப்பாகிவிட்டார் மணிவண்ணன் சிரிப்பதை பார்த்து.

போதும் என்ற வரை ரகளை செய்தவள் வெகு நேரமாக தனக்காக காத்துக் கொண்டிருக்கும் அக்னியை பார்க்க சென்றாள். உள்ளே வந்தவளே கண்டுகொள்ளாமல் தன் போக்கில் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். “ஓய்!” என்றவள் பின்னால் இருந்து கழுத்தை கட்டிக் கொள்ள,

“தள்ளு போ!”  கைகளைப் பிரித்தான்.

அவள் மீண்டும் கை போட்டாள். எடுத்து விட்டு கேம் விளையாடினான். பின்னாலிருந்து கண்களை மூடிக் கொண்ட அன்பினி, “என்னை விட அந்த கேம் முக்கியமா உனக்கு.” என்றதும்,

“நான் கூப்பிடுறேன் கேட்காத மாதிரி அந்த குண்டம்மா கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டு டயலாக்கா பேசுற தள்ளு.” என்றவன் வாயை உள்ளங்கையில் அடைத்தவள் அவன் இதழோடு விரல்களை இசைத்துக் கொண்டிருந்தாள்.

அக்னியின் கீழ் உதட்டை விரலால் அடித்தவள் தொடர்ந்து பேச விடாமல் தடை செய்ய, அந்த கையைப் பிடித்து கடித்து விட்டான். தலையில் ஒரு கொட்டு வைத்தவள் மீண்டும் அதே போல் அவன் உதட்டோடு  வைத்து  உதட்டு ரேகையை உள்ளங்கையில்  நகல் எடுத்தாள் தேய்த்து.

அக்னி பேசாமல் அமைதியாகி விட அவன் காதில்,”ஆங்கிரி பேர்ட் இன்னைக்கு லவ் பேர்ட்டா இருக்கு போல.” என  ரகசியம் பேச, காதின் அருகில் இருந்த இதழை கன்னத்தில் படும்படி மாற்றினான்.

சத்தம் வராமல் சிரித்தவள் அங்கு குடித்தனம் நடத்த, நிற்பவளை மடியில் தாங்கிக் கொண்டான் குழந்தை போல்‌.  அன்பினி செய்த சேட்டைகள், அவன் மீது கொண்ட காதல், விட்டுக் கொடுக்காத உரிமை என அனைத்தும் அவனுள் தன் மனைவி என்ற உரிமையை நிலைநாட்ட, அவற்றை கணவனாய் நிலைநாட்ட ஆரம்பித்தான் முத்தம் கொடுப்பதை நிறுத்தாமல்.

எப்போதும் அவனை முந்திக் கொள்ளும் அன்பினி இந்த முறை முன்னேறாமல் துவண்டு போனாள் ஆழ பதம் பார்த்த எச்சில் ருசியில். விலக முயன்றவளின் பின்னந் தொடையில் கை போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டவன் முகத்தையும் அசையவிடாமல் தன்னுடன் வைத்துக் கொண்டான். காதல் பறவைகள் வானில் சிறகடிக்க, முத்தம் ஊர்வலம் வந்தது மேனியில்.

மூச்சுக்கு போராடியவள் வேகமாக அவன் இடுப்பை கிள்ள, உதடு பிரிந்தது அவள் உதட்டை விட்டு. வலித்த இடத்தை தடவியவன் அவள் கன்னத்தை கடிக்க, இப்போது கத்துவது அவள் முறையானது. இருவருக்குள்ளும் எந்த பேச்சுவார்த்தைகளும் இன்றி பார்வைகளும், முத்தங்களும் குடும்பம் நடத்திக் கொண்டிருக்க வெகு நேரம் தேவைப்பட்டது அதிலிருந்து வெளிவர.

மடியில் இருந்து இறங்காமல்  “அக்னி உண்மையாவே அத்தை என்னை வேணாம்னு சொன்னா விட்ருவியா.” என்னதான் சிரித்து பேசினாலும் மனதில் காலை அக்னி செய்த செயல் உறுத்திக் கொண்டே இருந்ததால் கேட்க,

பதில் சொல்லாதவன் அமைதியாக அணைத்துக் கொண்டான். முகம் முழுவதும் அவன் கழுத்து பகுதியில் புதைந்து விட, “சொல்லு” என்றாள் உதட்டை கழுத்தோடு அசைத்து.

 

மெத்தையில் படுக்க வைத்தவன், “காலைல நான் பண்ணது உனக்கு எவ்ளோ வலிக்கும்னு புரிஞ்சுக்க முடியுது. அதே மாதிரி நீயும் என் நிலைமைய புரிஞ்சுக்க. எந்த பக்கம் போறதுன்னு தெரியாம நடுவுல நிக்கிறேன். உன்ன கஷ்டப்படுத்தனும்னு தோணுது. ஆனா நீ  கொஞ்சம் முகம் சுழிச்சாலும் உன்ன விட எனக்குத்தான் அதிகம் வலிக்குது.” என்ற அக்னி அமைதியாக அவள் பக்கத்தில் உறங்க படுத்தான்.

இதற்கு மேல் பேச்சை வளர்த்தால் இருக்கும் சூழ்நிலை கெட்டுப் போகும் என்பதால் இருவரும் அமைதியாக இருந்து கொள்ள, அவளுக்காக வாங்கி வந்த புது போன்  பரிதாபமாக கட்டிலின் ஓரத்தில் இருந்தது.

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
35
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *