“பைத்தியம் மாதிரி பேசாத” சட்டென மூண்ட கோபத்துடன் அதட்டினான் அமர மகரந்தன்.
அவனது கோபம் அவளை ரசிக்க வைக்க, “எல்லாரும் ஒரு நாள் எக்ஸ்பயர் ஆக தான போறோம்.” என சிலுப்பிக் கொள்ள, அவன் மேலும் முறைத்தான்.
பின் முகம் மாறிய தேவஸ்மிதா, “சாரி அமர். பிரஷாந்த் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவனோட அண்ணன் இறந்தது எனக்கு ரீசன்ட்டா தான் தெரியும். அவனும் யூ.எஸ்ல இருந்து ரெண்டு வாரம் முன்னாடி தான் வந்தான். இவ்ளோ விஷயம் தெரிஞ்சுருந்தா, நான் அவன் வந்த அன்னைக்கே ஹைதராபாத்க்கு போய் அவன் மூஞ்சிலயே நாலு குத்து குத்தி புரிய வச்சு இருப்பேன்.” என்றாள் ஆற்றாமையுடன்.
மீண்டும் தங்கையின் கண்ணீர் நினைவு வர, மனமுடைந்து போன அமர், “ப்ச் விடு.” என்றபடி மீண்டும் பால்கனி கம்பியைப் பிடித்துக் கொண்டு எங்கோ வெறித்தவன், “நானும் அவன் மேல இருக்குற கோபத்தை உன்மேல காட்டி இருக்கக் கூடாது. அங்கிள் ஆண்ட்டிகிட்ட கூட சொல்லாம வந்துட்டேன். வருத்தப்பட்டுருப்பாங்க.” என்று நிலையுணர்ந்து கூறியவன், அவர்கள் நினைவு வந்ததுமே பூபாலனுக்கு அழைத்துப் பேசினான்.
மன்னிப்பை வேண்டியவன், அவர்களை எதை நினைத்தும் கவலை கொள்ள வேண்டாமென கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அதன் பிறகே பூபாலனுக்கு மனது நிம்மதி அடைந்தது.
“அமர் மாப்பிள்ளை ரொம்ப தங்கம் துர்கா. கோபம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும்ன்னு சொல்லுவாங்க. நம்ம வீட்டாளுங்க காட்டுற கோபத்தைப் பார்த்து பார்த்து பழகிப் போன எனக்கு கோபப்படுறவங்களைப் பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது. ஆனா அமர் அதுல எக்செப்ஷன். தேவாவை நினைச்சு மனசு ஒரு மாதிரி புழுங்கிக்கிட்டே இருந்துச்சு. இப்ப தான் எனக்கு மூச்சே விட முடியுது.” என்றவரின் மனதோரத்தில் மகளின் மணவாழ்வை எண்ணி இத்தனை நேரமும் கலங்கி கொண்டிருந்ததே உண்மை
துர்காவும் அதனை ஒப்புக்கொண்டாலும், “அதுக்காக தயாவை அடிச்சது தப்பு இல்லையாங்க. அவன் என்ன செய்வான்? பிரஷாந்த் செஞ்ச வேலையால அவங்களுக்குள்ள சண்டை வர பாத்துருச்சு.” என்று வருந்தினார்.
“எனக்கும் அது உறுத்துச்சு. ஆனா நீ கவனிச்சியா. அவங்களை கண்டிக்க எனக்கு உரிமை இருக்குன்னு மாப்பிள்ளை ரொம்ப போல்டா சொன்னாரு. தயாவும் அவரு அடிச்சதை பெருசு பண்ணாம அமைதியா நின்னது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. கூட பிறந்தவள கட்டிக் குடுத்துனால அதை வாங்கிக்கிட்டு பிரச்சனை பண்ண கூடாதுன்னு கோபத்தை அடக்குன மாதிரி எனக்கு தெரியல. ஸ்கூல் படிக்கிறப்ப, ஏதோ ஒரு பையன் அடிச்சதுக்கே எவ்ளோ கோபப்பட்டு, அந்த பையனை திருப்பி அடிச்சான். ஏதோ நடக்குது அவங்களுக்குள்ள.” என்றார் சுவாரஸ்யமாக.
“என்னவோ, இதே மாதிரி இன்னொரு தடவை பிரச்சனை வராம இருந்தா சரி தான். எல்லா நேரமும் ஒரே போல இருக்காது” என்று தனது பேரனைப் பார்க்க எழுந்து சென்று விட, இங்கோ தேவஸ்மிதா கணவனை வியப்பு பொங்க பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவன் “என்ன?” எனப் புருவம் உயர்த்திக் கேட்க, “இல்ல… இந்நேரம் என் டேடி உங்களை புகழ்ந்து தள்ளிட்டு இருப்பாரு.” என்று கேலியாய் சிரித்தாள்.
அவன் அதற்கும் முறைத்து வைக்க, “தயாவை எதுக்கு அடிச்சீங்க?” என்று கேட்க,
“ம்ம்… வெறும் காலேஜ் மேட்ன்னு சொன்னதுக்கு தான்.” என்றான் சட்டென.
தேவாவோ திருதிருவென விழிக்க, “சில நேரம் நம்ம உரிமையை விட்டுக் கொடுக்குறது சம்பந்தப்பட்டவங்களுக்கு வலியை குடுக்கலாம் தேவா. அது ஏன் அவனுக்கு புரிய மாட்டேங்குது.” என்றான் எரிச்சலாக.
“பிரஷாந்த் ஏற்கனவே அவளைத் தப்பா நினைச்சு பேசுறான். வீட்டு ஆளுங்களுக்கு அவன் லவ் மேட்டர் தெரியாது அமர். அப்போதைக்கு அதை சொல்லி அது இன்னும் கொஞ்சம் அவளை கஷ்டப்படுத்தும்ன்னு நினைச்சு கூட அவன் அப்படி சொல்லி இருக்கலாம்ல” என்றவள் சகோதரனுக்கு வக்காலத்து வாங்கினாள்.
“யார் என்ன நினைச்சா என்ன? நாலு பேர் இருக்குற இடத்துல உறுதியா அவளைக் காதலிக்கிறதை கூட சொல்ல முடியல அவனால. அவன் என்னைக்கு இந்த தயக்கத்தையும் இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோன்ற குழப்பத்தையும் முழுசா தலைமுழுகிட்டு அவள் மேல இருக்குற காதலை பகிரங்கமா ஒத்துக்கிறானோ அப்போ தான் அவனை நான் நம்புவேன். நேரடியா சப்போர்ட் பண்ணுவேன்.” என்று தீர்க்கமாக உரைக்க, தேவா செய்வதறியாமல் நின்றாள்.
“எல்லாம் இந்த பிரஷாந்த் லூசால வந்தது. லூஸ் டாக் பண்ற ஆள் இல்லை அவன் அமர். அவனை ஃபர்ஸ்ட் ஸ்டாண்டார்ட் படிக்கிறதுல இருந்து தெரியும். என் வெரி பெஸ்ட் ப்ரெண்ட். கண்டிப்பா அவன் பேசுன பேச்சு எல்லாம் தப்புன்னு அவனுக்குப் புரியும். அப்போ அதிக அளவு வருத்தப்படுறதும் அவனா தான் இருப்பான்.” என்றவளுக்கு பிரஷாந்த் மீதிருந்த வருத்தத்தைத் தாண்டி, அவனது உறவு நிரந்தரமாக துண்டிக்கப்படுமோ என்ற பயமும் எழுந்தது.
அவளைக் கூர்மையுடன் பார்த்த அமர், “அவன் பேரை என் முன்னாடி சொல்லாத. இரிடேட்டிங்கா இருக்கு. இன்னொரு தடவை அவனைப் பத்தி என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி புருஷன் முக்கியமா ப்ரெண்ட்ஷிப் முக்கியமான்னு யோசிச்சுப் பேசு.” என்று சினத்தை வாரி இறைக்க, தேவா சற்று அதிர்ந்தே விட்டாள்.
இதற்கு மேலும் அவனைப் பற்றி பேசுவது நல்லதல்ல என்று புரிந்தாலும் மனதில் ஒரு வலி பிறந்ததை மறுக்க இயலவில்லை.
அவள் முகம் கன்றிப் போனதை உணர்ந்தாலும் அமர் அவனது பிடிவாதத்தை விடாமல் பிடித்துக் கொள்ள, “மிருவோட ஹஸ்பண்ட்க்கு என்ன ஆச்சு?” என்று வினவினாள்.
அதற்குள் கீழே இருப்பு கொள்ளாமல் அங்கு வந்திருந்தார் சிந்தியா.
“தேவா… நீ கீழ போ.” என்று உத்தரவிட, “கொஞ்ச நேரம் கடலை போட விடமாட்டாங்களே…” என முணுமுணுப்புடன் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு கீழே சென்றாள்.
அவளை உதட்டுக்குள் மறைத்த சிரிப்புடன் பார்த்த அமர், தாயிடம் முகம் காட்டாமல் திரும்பிக் கொண்டான். அவரும் அவனை முறைத்து விட்டு, “சாப்ட வா” என்று அழைக்க, அவன் வருவது போல தெரியவில்லை என்றதும் பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
தயானந்தனின் நிலை தான் வெகு மோசம். கண்கள் ஏனோ கலங்கிக்கொண்டே இருக்க, மிருணாளினியின் வேதனை நிறைந்த முகம் நினைவிலாடி நெஞ்சைக் கிழித்துக் கூறு போட்டது.
“நல்லி! நீ ஓகே தான?” அமைதியாய் இருக்க இயலாமல் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட,
அவளோ ஜன்னல் வழியே இலக்கற்று பார்வையை படரவிட்டிருந்தாள். அலைபேசியின் ஒலி கேட்டதும் கவனத்தை சிதற விட்டவளுக்கு, தயாவின் கேள்வி குடைந்தது.
என்னன்னவோ கூற மனது முன் வந்தும் விரல்கள் அதனை வார்த்தைகளில் வடித்திட இயலாமல் தவித்தது.
“ம்ம் ஓகே” என்று மட்டும் அனுப்பி விட்டவளின் பதில் அவனுக்கு திருப்தியாய் இல்லை.
“சாப்டியா?”
“இனிமே தான்.”
“லன்ச் டைம் தாண்டிடுச்சு. காலைலயும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட. பாப்பா இருக்குல்ல சாப்பிடு.” என்று அவன் அக்கறையாகக் கூற,
“பாப்பா இல்லைன்னா சாப்பிட தேவை இல்லையா?” ஏதோ ஒரு ஆதங்கத்தில் கேட்டு விட்டாள்.
அதனைக் கண்டதுமே உடனே அவளுக்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்ப மறுத்து விட்டு, அந்த குறுஞ்செய்தியை அழித்து விட்டாள்.
“மிருணா?” கண்டிப்புடன் தயா அனுப்ப,
“என் குழந்தையைப் பாத்துக்க எனக்குத் தெரியும் தயா. என் புருஷனைக் கொன்ன மாதிரி என் பிள்ளையையும் கொன்னுட மாட்டேன்.” என்று விரக்தியின் விளிம்பில் அவள் பதில் அனுப்பிட, அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“ஏண்டி இப்படி பேசுற? நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு எனக்கு தெரியும் நல்லி. எவனும் உன்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போக முடியாது. நான் விட மாட்டேன்.” என்று தீர்மானமாகக் கூறிட, அவளிடம் அமைதி மட்டுமே பிரதிபலித்தது.
“பேசுடி!”
“பாப்போம்” என்று விட்டேத்தியாக பதில் கூறியவள் இணையத்தைத் துண்டித்து விட்டாள்.
‘இவளோட…’ என நொந்து போன தயாவிற்கு தான் அவளை அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென மனம் அடித்துக் கொண்டது.
இதற்கு தீர்வு கண்டுபிடிக்க தேவாவிடமே கேட்போமென எண்ணி, வேகமாக அவளது அறைக்கதவைத் தட்டினான்.
“தேவா… தேவா. கதவை திறடி” என்று அவள் அறைக்கதவை தட்டிக்கொண்டு நின்றவனை குடும்பமே பரிதாபமாகப் பார்த்தது.
அவர்களின் பார்வையை உணர்ந்த பின்னரே, அவள் இங்கு இல்லை என்றே உணர்ந்தவன் மானசீகமாக தலையில் அடித்து விட்டு, “பழக்கதோஷம்” என அசடு வழிந்து விட்டு அறைக்குச் சென்று ஒரு மூச்சு அழுது தீர்த்தான்.
அப்போதே தேவஸ்மிதாவிடம் இருந்து அழைப்பு வர, முகத்தை நன்கு துடைத்துக் கொண்டவன், குரலில் உற்சாகத்தை ஏற்றி “ஹலோ தேவா” என்றிட, அதிலேயே அனைத்தும் உணர்ந்து கொண்டவள், “என்னை நினைச்சியாடா?” என்று கேட்டாள் உள்ளுணர்வு உந்த.
அதில் மீண்டும் அவனது கண்கள் கலங்கிப் போனது. அவனை சரி செய்யும் விதம் தெரியாமல் தவித்தவள்,
“ஹே மேன் நீ உன் ஆளை நினைச்சு கண்ணீர் விடுவன்னு பாத்தா என்னடா என்னை நினைச்சு அழுதுட்டு இருக்க. அம்புட்டு பாசமாடா உனக்கு.” என்றாள் நக்கலாக.
“அவ்ளோ சீன் இல்லடி. அம்மா வெங்காயம் வெட்டிட்டு இருந்தாங்க. அது கண்ணு கலங்கி வாய்ஸ் ஒரு மாதிரி ஆகிடுச்சு.” என்று மூக்கை உறிஞ்சி சமாளித்தான்.
“உருட்டுக்கும் ஒரு அளவு இருக்கு நாயே. என்ன விஷயம்ன்னு சொல்லு.” என்று கேட்க, “எனக்கு என் நல்லியை பார்க்கணும்டி” என்றான் ஏக்கமாக.
“ம்ம்க்கும் நம்ம மாமியார் இதை கேட்டா நம்ம நல்லி எலும்பை எடுத்து சூப்பு வச்சுடும்டா.” என சலித்துக் கொண்டவள், “நாளைக்கு நீங்க என்னை மறுவீட்டுக்குக் கூப்பிட வருவீங்கன்னு மாமியார் மங்கம்மா சொல்லுச்சுடா. அப்ப நீயும் வா. நானும் அவளோட பேச வேண்டியது இருக்கு. நாளைக்கு அவளை கோழி அமுக்கற மாதிரி அமுக்கிடலாம்.” என்றிட, அதில் தயாவின் முகத்திலும் அத்தனை நேரம் இருந்த கவலை மறைந்து புன்னகை துளிர்த்தது.
அன்றிரவு புதுமணத் தம்பதிகளுக்கு முதலிரவு ஏற்பாடு ஆக, ‘அய்யயோ எனக்கு வெட்க வெட்கமா வருதே’ என்ற ரீதியில் குஷியுடன் தயாராகிக் கொண்டிருந்தாள் தேவஸ்மிதா. இனி தினமும் அவனுடன் அவனது அறையில் அவனுக்கு அருகில் அவனது வாசத்தை சுவாசித்தே வாழ்நாள் முழுதும் கழிக்கப் போகிறாள். அதனை எண்ணும் போதே வெட்க ரேகைகள் மேனி முழுதும் பாய்ந்து சிவப்பைத் தந்தது.
அவளிடம் ஒரு கண்ணாடி டம்பளரில் பால் கிளாஸைக் கொடுத்த சிந்தியாவிடம், “எனக்கு ஹார்லிக்ஸ் தான் பிடிக்கும் அத்தை. உங்க பிள்ளை வெறும் பால் தான் குடிப்பாரா. ஒரு டம்பளர்ல ஹார்லிக்ஸ்ஸும் குடுத்துடுங்களேன்” என்று எதற்கு வந்தோமென மறந்து விட்டு ஹார்லிக்ஸிற்கு அடி போட்டவளை நான்கு அடி போடலாமா என்றிருந்தது சிந்தியாவிற்கு.
பல்லைக்கடித்து அவள் கேட்ட ஹார்லிக்ஸை கலக்கிக் கொடுத்தவர், “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள ரூமுக்குப் போ தேவா.” என்று விட்டு, அவளது முந்தானையை எடுத்து முடிந்தபடி, “உன் புருஷனை முந்தானைல முடிஞ்சு வச்சுக்கோ.” என்றவரை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.
‘பர்ஸ்ட் நைட்க்கு போகும் போது முந்தானையே தேவை இல்லையே’ என்று கிளுகிளுப்பாக யோசித்தவள், ‘ச்சீ தேவா… உன் தாட்ஸ் எல்லாம் வர வர 18 + ஆவே இருக்கு.’ என்று தலையில் தட்டிக்கொண்டாள்.
வெட்கமும் ஆர்வமும் போட்டி போட ஆடவனது அறைக்குள் நுழைய, அவனது அறையே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனும் வேஷ்டி சட்டையிலேயே இருக்க, கையில் ட்ரேயுடன் வந்த தன்னவளைப் பார்வையால் விழுங்கினான் அமர மகரந்தன்.
கூடவே சிறிதாய் ஒரு அடக்கப்பட்ட சிரிப்பும். ட்ரேயை டேபிளில் வைத்தபடி “எதுக்கு சிரிக்கிறீங்க? என் கெட்- அப் பார்த்தா சிரிக்கிற மாதிரி இருக்கா?” என தேவா சிலுப்பியபடி கேட்க,
“அது இல்ல… பொதுவா பால் சொம்போட தான வருவாங்க. நீ கிளாஸோட வந்ததும் சிரிப்பு வந்துடுச்சு.” என்றான் இதழ் மடித்து.
“அத்தைகிட்ட சொம்பு ஸ்டாக் இல்லைன்னு நினைக்கிறேன் அமர்.” எனக் கண்ணடித்து சிரித்தவள், “சரி சரி எந்திரிங்க” என்றாள் அவசரமாக.
அவனோ “எதுக்கு கால்ல எதுவும் விழுக போறியா? ச்ச்சே ஐ டோன்ட் லைக் திஸ் ஃபார்மிலிடீஸ்” என மறுத்து விட்டதில்,
“கால்ல விழுகவா?” எனப் பேந்தப் பேந்த விழித்தவள், “ஹி ஹி மரியாதை எல்லாம் மனசுல தான். கால்ல விழுந்து காட்டுறதுக்கு நான் என்ன அரசியல்வாதியா.” என்றாள் வாயைப் பொத்திக்கொண்டு.
“அடியேய்” தன்னை வாரியவளை அவள் இடையில் கை கொடுத்து முறைக்க, “சரி சரி கூல். உங்க கையைக் காட்டுங்க” என்றதில், அவனும் புரியாமல் கையை நீட்டினான்.
அவளோ அவளது முந்தானையை எடுத்து அவனது கையில் சுற்றி முடிச்சு இட்டு, “எஸ்… இப்ப தான் அத்தை சொன்னாங்க. உங்களை முந்தானைல முடிஞ்சுக்கணுமாம். அதான் சரியா வேலையை முடிச்சுட்டேன்” என்று கையைத் தூசி தட்டுவது போல தட்டிக்கொண்டாள்.
“ஓஹோ…” என இதழ் குவித்தவன், கையை இழுக்க, அவள் முந்தானையோடு சேர்ந்து அவளும் அவன் மீது வந்து விழுந்தாள்.
இருவரின் தேகமும் புது ஸ்பரிசத்தில் நெகிழ, மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று தழுவியது.
அமர், “முந்தானைல இறுக்கமா முடிஞ்சா இப்படி சில டச்சிங்க்ஸ்ஸும் இருக்குமே” என்று ஹஸ்கி குரலில் கூறியதோடு, இன்னும் அவளை நெருங்கும் பொருட்டு முந்தானையைக் கையால் சுற்றிக்கொண்டான்.
‘இருக்கட்டுமே…’ மனதினுள் கூவிக்கொண்டவளுக்கு வெளியில் அவனைக் காண கூச்சம் தடுத்தது.
மேலுதட்டைக் கடித்து, வெட்கத்தை அடக்கியபடி நின்றவளை ரசனை பொங்கப் பார்த்தான்.
முந்தானையில் குத்தி இருந்த ஊக்கு அவன் இழுப்பதில் கழன்று விழுந்து விடுமோ என்ற பதட்டத்தில் இரு கையாலும் அதனை இறுக்கிப் பிடித்தபடி நின்றிருந்தவளை நோக்கி குனிந்து, அந்த கைகளுக்கு மென்முத்தமொன்று வைத்தான்.
அவனது கேசம், அவள் முகத்தில் உரச, அதனைக் கண் மூடி ரசித்தபடி நின்றிருந்தவளை மொத்தமாகக் கொள்ளையிடும் வேகம் எழுந்தாலும் முயன்று அடக்கிக்கொண்டவன், தனது கைக்கட்டை அவிழ்த்து விட்டு,
“போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. இவ்ளோ மேக் அப்போடவா தூங்கப்போற.” என்றான் புன்னகைத்து.
‘ஏதே தூங்கவா?’ என்ற ரீதியில் அவள் விழிக்க,
“நம்ம கல்யாணம் தான் ஏதோ அவசரமா நடந்துடுச்சு. அதுக்காக மத்ததும் அவசரமா நடக்கணும்ன்னு அவசியம் இல்ல தேவா. என்னைப் பொறுத்தவரை கல்யாணம்ன்றது அடுத்த பத்து மாசத்துலயே குழந்தைப் பெத்துக்கணும்ன்ற கமிட்மென்ட் இல்ல. இட்ஸ் அ பியூர் அபெக்ஷன். நீயும் நானும் கடமைக்காக நம்ம மேரேஜ் லைஃபை ஸ்டார்ட் பண்ண வேணாம். இன்னும் நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புருஞ்சுக்கலாம். தென் நமக்குன்னு வர்ற டைமை இன்னும் ஸ்பெஷலா மாத்திக்கலாம்.” என்றவனின் பேச்சில் நிதானமும் அவளை துளியும் காயப்படுத்தி விடக்கூடாது என்ற அன்பும் அதிகம் தெளித்தது.
அவளது முடிந்து போன திருமணத்தைப் பற்றிய காயங்களும் சரி, ஆயுதத்துடன் அவளைத் துரத்தும் ஆபத்தையும் சரி, இரண்டிற்கும் தீர்வு கண்ட பிறகே, எவ்வித மனஸ்தாபங்களும் இன்றியே தங்களது வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென முடிவுடன் இருந்தான். பாவம்… அவனது உறுதியை அவனே தளர்த்தி அவளுக்கு காயங்களை மட்டுமே பரிசாகத் தரப்போவதை அவன் அறியவில்லை.
உயிர் வளரும்
மேகா