“மிது போனை வைச்சுட்டு தூங்கு! இன்னும் எவ்ளோ நேரம் முழிச்சு இருப்ப” கண்டிப்புடன் தேவஸ்மிதாவை அதட்டினான் அமர மகரந்தன்.
“தூக்கம் வரல அமர்” என உதட்டைப் பிதுக்கி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளின் அருகில் அமர்ந்த அமர மகரந்தன், “உன் போன்ல கேம் விளையாடி சார்ஜ் தீர்ந்துடுச்சுன்னு என் போனையும் எடுத்து வச்சு விளையாடிட்டு இருக்க. இப்ப தூங்கப் போறியா இல்லையா?” என்று முறைக்க,
“பகல்ல தூக்கம் தூக்கமா வருது, நைட்டு ரொம்ப தெளிச்சியா இருக்கு அமர காவியம். ஒருவேளை உன் பேபி நைட் டியூட்டி பாக்குதோ” என விழிகளை உருட்டிக் கேட்க, அதனை ரசித்துச் சிரித்தவன், “கொஞ்ச நாள்ல செட் ஆகிடும் மிதுக்குட்டி” என அவள் கன்னம் கிள்ளும் போதே, அவனது அலைபேசி அழைத்தது.
மைதிலியின் எண்ணைக் கண்டதும் புருவம் சுருக்கிய தேவா, “என்ன உன் ஆருயிர் தோழி இந்த நேரத்துல கால் பண்றா” என அழைப்பை ஏற்று போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டாள்.
“அமர்…” நடுங்கிய குரலுடன் மைதிலி அழைக்க, “மைதிலி ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான் அமர்.
“அமர் பிரஷாந்த் அங்க இருக்காரா?” எனத் தடுமாற்றத்துடன் கேட்டவளிடம், “பிரஷாந்த்தா?” எனக் குழம்பியவன் “இல்லையே மைதிலி. இன்னும் அவன் வீட்டுக்கு வரலையா?” எனத் திகைத்தான்.
“ஓ… தயா… தயா கூட எதுவும் இருப்பாரோ…” என்றவளின் குரலில் சுதி குறைய, தேவஸ்மிதா “நான் ஒன்பது மணி வரை அங்க தான் இருந்தேன் மைதிலி. பிரஷாந்த் வரலையே. அதுக்கு அப்பறம் வந்துருந்தாலும் எனக்குத் தெரிஞ்சு இருக்கும். அவனுக்கு கால் பண்ணி பாத்தியா?” என்றதும் மைதிலியின் கண்ணில் தேங்கி இருந்த நீர்த்துளி ஒன்று கன்னம் வழியே வழிய,
“போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு. எப்பவும் லேட் ஆனாலும் இன்பார்ம் பண்ணுவாரு. அப்படினாலும் இவ்ளோ லேட் ஆனது இல்ல. வெளில போய் தேடலாம்னா மகி தூங்கிட்டு இருக்கா. தனியா விட்டுட்டும் போக முடியல. எங்க போனான்னு தெரியல தேவா” என்றவளின் பேச்சிலேயே அத்தனை பயம் தெறித்தது.
அமர், “அவன் ஆபிஸ்ல கூட லாக் ஆகி இருக்கலாம் மைதிலி. நீ பதட்டப்படாத. வந்துடுவான். நான் அவன் ஆபிஸ்ல போய் பாத்துட்டு உனக்கு கூப்பிடுறேன்” என்று சொல்லிக்கொண்டு டீ ஷர்ட்டை மாட்டிக்கொண்டான்.
தந்தைக்காக காத்திருந்து அவன் வராத ஏமாற்றத்திலேயே சிறிது நேரத்திற்கு முன் தான் மகிழினியும் உறங்கிப் போனாள்.
அமர், பிரஷாந்தின் அலுவலகத்திற்குச் சென்று விட, தேவாவின் தயவில் அனைவர்க்கும் விஷயம் கசிந்தது.
ஆனால் பிரஷாந்த் அலுவலகத்தில் இருந்து ஏழு மணி அளவிலேயே கிளம்பி விட்டதாக தகவல் வந்ததில் மைதிலிக்கு சர்வமும் நடுங்கி விட்டது.
அமர மகரந்தன் அலுவலகத்தில் இருந்து நேராக மைதிலியின் வீட்டிற்குச் சென்று அவளையும் மகிழினியையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.
எத்தனை யோசித்தும் அவன் எங்கு சென்றிருப்பான் என்ற தெளிவே இல்லை. தொடர்ந்து மைதிலி அவனது எண்ணிற்கு அழைத்து ஓய்ந்து போனாள்.
எதுவும் தவறாக நடந்திருக்குமோ என்ற அச்சம் நெஞ்சைத் துளைக்க குடும்பத்தினரும் செய்வதறியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
வரும் வழியின் விபத்து நேர்ந்திருக்குமோ எனப் பலவகையில் மைதிலியின் மூளை பயத்தைக் கொடுக்க, நிதானமின்றி தவித்தாள்.
தயானந்தன் மொத்த பயத்தையும் மறைத்துக்கொண்டு, “மைதிலி ரிலாக்ஸ். அவன் நம்பர் எதுவும் ட்ரேஸ் பண்ண முடியுமா?” எனக் கேட்க,
தேவாவோ “அதான் ஸ்விட்ச் ஆப்ல இருக்கே டா” என்றாள்.
அமர் “அட்லீஸ்ட் எங்க ஸ்விட்ச் ஆப் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்ல தேவா” என்றதும் மைதிலி “எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்க இருக்காங்க. கேட்குறேன்” என வேகமாக போனை எடுத்து அந்த வேலையைப் பார்த்தாள்.
அவளது வழக்கு விஷயத்தில் எப்போதும் உதவி செய்யும் ஒரு நபரைப் பிடித்து பிரஷாந்த்தின் போன் ஸ்விட்ச் ஆப் ஆன இடத்தைக் கண்டறிய உதவி கேட்க, அந்த தகவல் வரும் வரை மைதிலிக்கு உயிரே இல்லை.
‘கடவுளே அவனுக்கு எதுவும் தப்பா ஆகிடக் கூடாது. துணை வேணும்னு கேட்டேன், குடுத்துட்டு கண்ணிமைக்கிற நேரத்துல பறிச்சுட்ட. தனிமையைக் கேட்டேன் இவனைக் கண்ணுல காட்டி மறுபடியும் என் மனசுல ஆசையை வளர்த்துவிட்ட. என்னை மறுபடியும் ஸீரோ ஆக்கிடாத. ஐ நீட் ஹிம். ஒருவேளை அவனுக்கு ஏதாவது தப்பா ஆகிருந்தா, இப்படியே என் உயிரையும் பறிச்சுடு’ என்று இரு கையையும் நெற்றியில் ஊன்றி கண்ணை மூடி துவண்டு கொண்டிருந்தவளின் விழி வழியே கண்ணீர் துளிகள் சொட்டு சொட்டாக தரையில் விழுந்து கொண்டிருந்தது.
அவளைப் பார்க்கவே மகேஷிற்கு அத்தனை வேதனையாக இருந்தது. மிருணாளினிக்கும் திவ்யஸ்ரீக்கும் பயத்தில் பேச்சே எழவில்லை. கவனமாக பெரியவர்களை எழுப்பாமலேயே வேலையை செய்து கொண்டிருந்தனர்.
அவனது இறுதி லொகேஷனை ட்ரேஸ் செய்து தகவல் வருவதற்கே ஐந்து மணி ஆகி விட்டது.
அலைபேசி அழைத்ததும் ஒரே ரிங்கில் காதில் வைத்தவள், “எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்க எதிர்முனையில் கூறிய செய்தியில் “வாட்?” என அதிர்ந்தாள்.
போனை வைத்து விட்டு குழப்ப ரேகைகள் அவளைச் சூழ, “அமிஞ்சிக்கரை போலீஸ் ஸ்டேஷன்ல தான் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கு. ஆனா அவன் ஏன் போலீஸ் ஸ்டேஷன்ல” எனக் குழம்பியவள், “அங்க போய் பாக்கலாம்” என்று எழுந்தாள்.
எப்படியோ அவனுக்கு விபத்து எதுவும் நேரவில்லை என்றதே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
ஏதோ ஒரு சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்ட மைதிலி யோசனையுடனே காவல் நிலையத்திற்குச் சென்றாள். அவளுடன் அமரும் தயாவும் சென்றனர்.
காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும் மைதிலியின் விழிகள் பிரஷாந்தைத் தான் தேடியது. ஒரு முறையேனும் அவனை முழுதாய் கண்ணில் காட்டி விடு ஆண்டவா என்றதே அவளது அதிகபட்ச வேண்டுதலே!
விடியல் நேர சோம்பல் காவலர்களின் முகத்தில் தென்பட, எஸ். ஐ நாஞ்சில் நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடிப் படுத்திருந்தார். வயது 50 ஐ நெருங்கி இருந்தது.
“சார்?” என்ற குரல் கேட்டு கண் விழித்தவர் எதிரில் நின்ற மூவரையும் யாரெனப் பார்க்க, மைதிலி தான் ஆரம்பித்தாள்.
“நான் மைதிலி அட்வொகேட். என் ஹஸ்பண்ட்ட நேத்துல இருந்து காணோம். அவரோட மொபைல் லொகேஷன் இங்க தான் காட்டுச்சு” என்னும் போதே, “மைலி” என்ற தன்னவனின் குரல் கேட்டு திரும்ப அவன் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் முகம் வாடி தலை கலைந்து நின்றிருந்தான்.
பிரஷாந்தை கண்டதும் அமரும் தயாவும் திகைக்க, அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்து அவன் கண் முன் முழுதாய் இருந்ததில் நிம்மதியுற்ற மைதிலிக்கு அவனை காவல் நிலையத்தில் குற்றவாளிகளுக்கு மத்தியில் பார்க்க சிறிதும் ஒப்பவில்லை. “ரஷு” எனப் பாய்ந்து அவனருகில் சென்றவளை தடுத்தது கம்பிகள்.
“ரஷு நீ எப்படி இங்க வந்த? என்ன ஆச்சு?” என்று தவிக்க, “நேத்து ஆபிஸ்ல இருந்து வரும் போது காரணமே சொல்லாம அந்த இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வந்துட்டாரு மைலி. நான் எதுவுமே பண்ணல” என்றவனின் கம்பியைப் பற்றி இருந்த கையை அவள் பற்றினாள்.
அதில் அழுத்தம் கொடுத்து, “நான் பேசிக்கிறேன்… யூ ஜஸ்ட் ஸ்டே காம்” என்றவள், நாஞ்சிலிடம் வந்து “எதுக்கு சார் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க?” என்றாள் கோபமாக.
நாஞ்சில் அசட்டையுடன், “இங்க பாரும்மா இஸ்பெக்டர் தான் அவனை அரெஸ்ட் பண்ணாரு. எதுவா இருந்தாலும் அவருகிட்ட பேசிக்க…” என்று திமிராக பதில் அளிக்க,
“அதெப்படி சார் வாரண்ட் இல்லாம சரியான காரணம் இல்லாம அரெஸ்ட் பண்ணுவீங்க. எனக்கு இப்போ காரணம் தெரியலைன்னா, நீங்களும் உன் இன்ஸ்பெக்டரும் கம்பி தான் எண்ணனும்” என்று தீப்பொறி பறக்க கத்தினாள்.
“காரணம் இல்லாம யாரையும் அரெஸ்ட் பண்ணல. வாரண்ட் இருக்கு. அகரனோட இறப்புல இவன் மேல சந்தேகம் இருக்கு. மர்டர் சஸ்பெக்ட். எப். ஐ ஆரூம் போட்டாச்சு. எதுவா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்க” என கறாராக கூற, “வாட்?” என அதிர்ந்தனர் மூவரும்.
அமரோ, “சார் அவன் ரேஸ்க்கு போய் செத்ததுக்கு இவன் என்ன செய்வான்?” என குழம்பிட,
“அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா. வேணும்னா இன்ஸ்பெக்டர் வரவும் விவரம் கேளுங்க” என்றார்.
“உங்க இன்ஸ்பெக்டர் எப்ப வருவாரு” தயா கேட்டதும், “வருவாரு வருவாரு அப்படி உட்காருங்க… வந்ததும் கூப்புடுறேன்” என்றதில் மைதிலிக்கு ஆயாசமாக இருந்தது.
“வாரண்ட்டை காட்டுங்க…” எனக் கேட்டதும் நாஞ்சிலும் ம்ம் என சில தாள்களை நீட்ட,
அதனைப் படித்து திகைத்துப் போனாள்.
“என்ன சார் இது? உங்க வாரண்ட்ல கொஞ்சமாவது நியாயம் இருக்கா? அகரன் இறந்து போனப்ப பிரஷாந்த் துபாய்ல இருந்தாரு. அவரும் மிருணாளினியும் சேர்ந்து அவனை வேணும்னே கொலை பண்ணுன மாதிரி பிரேம் பண்ணிருக்கீங்க” என பொருமியதில் மூன்று ஆடவர்களுமே உறைந்து விட்டனர்.
அந்த வாரண்ட்டை வெடுக்கென பிடுங்கிய நாஞ்சில், “படிச்சுட்டீல கிளம்பு” என்று எகத்தாளமாகப் பேச,
“ஹைதராபாத்ல நடக்குற கேஸ்க்கு இங்க எதுக்கு சார் தேவை இல்லாம இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கீங்க?” மைதிலி வெகுண்டு எழுந்தாள்.
“ஹைதராபாத்ல இருந்து தான் இந்தப் பையனை கஸ்டடில எடுக்க சொல்லி எங்களுக்கு ஆர்டர் வந்துருக்கு. சும்மா இங்க கத்திக்கிட்டு இருக்காம, போய் உட்காரும்மா” என்று காதைக் குடைந்தபடி கூற, அவளுக்கு வந்ததே ஆத்திரம்.
அந்த காவலரை அறைய கை துறுதுறுவென இருந்தது அமருக்கு. இந்தப் பிரச்சனை வேறு எங்கோ சென்று மிருணாளியையும் பிரஷாந்தையும் வேறு மாதிரி தாக்குகிறது என்று புரிந்து கொண்ட தயானந்தனுக்கு இவர்களிடம் பேசி பிரயோஜனமில்லை என்றே தோன்றியது.
“மைதிலி முதல்ல பெயில்ல அவனை எடுத்துட்டு மேல பேசிக்கலாம்” என்றிட, மைதிலிக்கு நெஞ்சை அடைத்தது. திரும்பி பிரஷாந்தைப் பார்க்க, அவளது மனநிலை புரிந்தவன் போல தனது வேதனையை மறைத்துக்கொண்டு ‘ரிலாக்ஸ். நான் பாத்துக்குறேன்’ என்று சைகை செய்து அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான்.
அது அவளுக்கு கேவலை கொடுக்க முயன்று தன்னை அடக்கியவளிடம் அமரும் “வா மைதிலி பெயில் எடுத்துட்டு பேசிக்கலாம்” என்றிட,
“முடியாது அமர். இன்னைக்கு சனிக்கிழமை. ரெண்டு நாள் கோர்ட் லீவ். பெயில் எடுக்கணும்னா மண்டே தான் எடுக்க முடியும்” என்று கூறி விட்டு மீண்டும் பிரஷாந்தை இயலாமையுடன் பார்த்தாள்.
இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் இருப்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை. அவளைப் பிரிந்து இருப்பது தான் கொடும் வேதனையாக இருந்தது.
அவளுக்கும் தான். ஒரு இரவு பிரிவே அவளுக்கு துயரத்தை அள்ளிக்கொடுக்கிறதே. அவனை காவல் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டிற்குச் செல்ல எப்படி அவளால் இயலும்? மகிழினி தந்தையைக் கேட்டால் என்ன பதில் அளிப்பாள்?
அனைத்தும் அவனது பெற்றோர்களின் கை வண்ணம் எனப் புரிந்தது. வேண்டுமென்றே அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ய வைத்து, இரவு முழுக்க விவரம் தராமல் அலைய விட்டு இப்போது அவனை பெயிலில் கூட எடுக்க இயலாதவாறு தெளிவாக காய் நகர்த்தி உள்ளனர் என்ற நிஜம் உறைக்க, உடைந்து போனாள்.
மீண்டும் அவனிடம் சென்ற மைதிலி, “நான் வந்துடுவேன் ரஷு. எப்படியாவது ட்ரை பண்றேன். கோர்ட்ல லீவ்ன்னா ஒண்ணுமே பண்ண முடியாது. எனக்குப் புரியல என்ன செய்றதுன்னே…” எனத் திணறியவளின் கன்னத்தை கம்பியின் வெளியில் கையை நீட்டிப் பிடித்தவன்,
“இட்ஸ் ஓகே மைலி. தப்பு என் மேல தான. நீ சொன்ன மாதிரி நான் செஞ்சுருக்கணும். பிரச்சனை வரக்கூடாதுன்னு நினைச்சு நான் ஒன்னு செய்யப் போக, இப்போ அதுவே மிருவுக்கும் பெரிய பிரச்சனையா வந்து முடிஞ்சுருக்கு” என வேதனையுடன் பேசியவனை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் மூக்கு நுனி சிவக்க கலங்கினாள்.
“உன் பேச்சைக் கேட்காததுக்கு ரெண்டு நாள் இங்க இருந்தா தான் எனக்கு அறிவு வரும். நீ இப்போ பெயில் எடுக்க முடியாதுன்னு தெரியும் மைலி. ரெண்டு நாள் தான சரி ஆகிடும்” என்றதில் தேம்பியவள் “நீ இல்லாம முடியல ரஷு” என்றாள் அவன் கையை வைத்து முகத்தை மூடி அழுக,
அவனுக்கும் மனம் கனத்து கண்ணில் நீர் நிறைந்தது.
“எனக்கும்… ரெண்டு நாள் இங்க இருக்குறது கூட பிரச்சனை இல்ல எனக்கு. நீயும் பேபியும் இல்லாம தான்…” என கீழுதட்டைக் கடித்து சட்டையில் கண்ணீரை துடைத்துக் கொண்டவன், “ஹே ஒரு லாயர் இப்படி நின்னு அழுதா நல்லா இருக்காதுடி. ஸ்டே ஸ்ட்ராங் மைலி. சரி ஆகிடும்… ப்ளீஸ்…” என்றதில் அவள் இன்னும் குலுங்கினாள்.
தயாவிற்கும் அமருக்கும் கண் கலங்கியது. அவனிடம் சென்று பேசிட தான் விழைந்தனர். எல்லாரும் கும்பலாக நின்று காவலரை கோபப்படுத்தி அவர்களது சிறு உரையாடலையும் கலைக்க விரும்பாமல் வெளியில் சென்று விட்டனர்.
“என்ன அமர் இது? இப்படி போட்டு படுத்துதுங்க அந்த பெருசுங்க” என்று நொந்து போன தயா, “இதெல்லாம் மிருவுக்கு தெரிஞ்சா எப்படி தாங்குவா?” என்றான் வேதனையோடு.
அமர் பெருமூச்சுடன், “இப்போதைக்கு அவளுக்கு தெரிய வேணாம். அவங்க டார்கெட் இப்போ பிரஷாந்த் தான். அவளை பிடிச்சா அவங்களுக்கு பேக் பயர் ஆகும்னு தெரிஞ்சு வச்சு, பிளான் பண்ணிருக்காங்க” என ஆத்திரத்துடன் உரைத்தான்.
அழுது வீங்கிய முகத்துடன் வெளியில் வந்த மைதிலியைக் கண்டு இருவருக்கும் அத்தனை வலித்தது.
“வேற வழில பெயில்க்கு ட்ரை பண்ணலாமா மைதிலி?” என தயா கேட்க,
“முடியாது தயா. முடியாதுன்னு தான இவ்ளோ தைரியமா பொய் கேஸ் போட்டு இருக்காங்க. எனக்குப் பயமா இருக்கு ரஷுவை இங்க விட்டுட்டு வரவே…” எனக் குரல் நடுங்க பேசியவளிடம், “ஏன்?” என கேட்டான் அமர்.
“எனக்கு போலீசை பத்தி தெரியாதா? அவனுங்க ஒருத்தனை வாண்டடா அரெஸ்ட் பண்ணி வச்சா, கண்டிப்பா ஏதோ பண்ண போறாங்கன்னு அர்த்தம். ஏதோ சரி இல்ல அமர்…” என வலி தாளாமல் துவண்டவளை தேற்ற வழியின்றி தவித்தனர் இரு ஆடவர்களும்.
அதன் பிறகு என்னன்னவோ முயன்று யார் யாரிடமோ பேசியும் பிரயோஜனமின்றி போனது.
இறுதியாக மோனி ஜாய்க்கும் போன் செய்து விவரத்தைக் கூறினாள்.
அதில் அதிர்ந்தவர், “ஓ மை காட். ஆனா எதுவா இருந்தாலும் மண்டே தான மைதிலி பண்ண முடியும். ஜட்ஜ் நினைச்சாலும் பெயில் தர முடியாதே” என்றவர், “மண்டே கண்டிப்பா பெயில் வாங்கிடலாம். ஸ்டேஷன்ல அவனுக்கு எந்த பிராப்ளமும் வராத மாதிரி நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல பேசுறேன் மைதிலி. டோன்ட் வொரி” என்றதில், “எனக்குப் பேசிட்டு சொல்லுங்க அங்கிள். அவரோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்” என்றாள் தவிப்பாக.
“அப்டி எதுவும் பண்ணிட முடியாது மைதிலி. அவன் மேல கை வைச்சாலே இன்ஸ்பெக்டருக்கு வார்னிங் அண்ட் பனிஷ்மென்ட் கிடைக்கும்னு தெரியும். சோ பயம் இருக்கும்” என்றதும்,
“எனக்கு என்னமோ பயந்து அமைதியா இருப்பாங்கன்னு தோணல அங்கிள். ஒருவேளை அப்படி எவனாவது ரஷு மேல கையை வச்சா, இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்குற ஒருத்தனையும் நான் விட மாட்டேன். லீகலி ஆர் இல்லீகலி, இந்த ஸ்டேஷன்ல ஒர்க் பண்ற போலீஸ் ஆபிசர்ஸ், அந்த பெருசுங்களுக்கு ஆதரவா வாதாடுற வக்கீல், அப்பறம் அவனோட பேரண்ட்ஸ் யாருமே வெளில நடமாட கூடாது. நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணியே ஆகணும் அங்கிள்” என்றாள் தீர்மானமாக.
“இல்லீகலி…” என இழுத்த மோனியிடம், “எப்படியோ நீங்க ஹெல்ப் பண்ணனும், ரகுகிட்ட என் வாழ்க்கையை அடமானம் வச்சதுக்கு நீங்க எனக்கு செய்ற கடமை” என அழுத்தம் திருத்தமாகக் கூற மோனி பேச்சற்று திகைத்தார்.
“நான் என்ன ஹெல்ப் வேணாலும் பண்றேன் மைதிலி” என்றவர், பிரஷாந்த் அவரை விளாசிய பிறகு நிறைய மாறி இருந்தார்.
இரு நாட்களும் மைதிலிக்கு இருப்பு கொள்ளவில்லை. உணவு துளியும் இறங்கவில்லை. உறக்கம் சுத்தமாக இல்லை. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அடைகாத்தாள்.
மணிக்கொரு முறை அவனைப் பார்த்து விட்டு சென்றாள்.
இன்ஸ்பெக்டர் மாணிக்கமும், நாஞ்சிலும் அவளை முறைத்து வைக்க, அவர்களை கண்டுகொள்ளவே இல்லை அவள்.
ஏற்கனவே மேலிடத்தில் இருந்து அவன் மீது கை வைக்கக் கூடாதென்று பல அழுத்தங்கள். அதனால், வாயை மூடிக்கொண்டிருந்த மாணிக்கம் போனை எடுத்துக்கொண்டு தனியே சென்றார்.
“சார்… இங்க ரொம்ப ப்ரெஷரா இருக்கு. நீங்க ஏதோ சாதாரண ஆளுன்னு ஈஸியா அரெஸ்ட் பண்ண சொன்னீங்க. காலைல இருந்து எஸ்பி, டி ஐ ஜி, ஐ ஜி வரை கால் பண்ணிட்டாங்க சார். அந்தப் பையன் மேல கை வைக்கிறது எல்லாம் நடக்காத காரியமா இருக்கு. இதுல அந்தப் வக்கீல் பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் வாசல்லேயே இருக்கா. கூட அவள் வீட்டு ஆளுங்களும் மாறி மாறி இருக்கானுங்க. இது ஏதோ பெரிய பிரச்சனை ஆகும் போல இருக்கேயா” என்று பணிந்திட,
எதிர்முனையில் வக்கீல் ஜானக், “யோவ் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. அந்த பொண்ணு லேட் ஆர்மி மேனோட வைஃப் அந்த இன்ப்ளுயென்ஸ் வச்சு சும்மா சீன் காட்டுறா. நேரம் பார்த்து அவனை…” என்று நிறுத்த, மாணிக்கம் தயங்கினார்.
“உனக்கு ரெண்டு லட்சம் அட்வான்ஸ் போட்டு விட்டுருக்கேன். வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்க, “சரிங்க சார் நான் பாத்துக்குறேன்” என்று சிரித்த முகத்துடன் போனை வைத்தார்.
ஞாயிறு இரவு வரையிலும் தன்னவனை நொடி விடாமல் காவல் நிலைய வாசலிலேயே காவல் காத்தாள்.
அமர்,தயா,மகேஷ் என மாறி மாறி அவளுக்குத் துணையாக அவளுடன் இருந்தனர். பிரஷாந்த் தான், “மைலி எனக்கு ஒன்னும் இல்ல. நீ மார்னிங் பெயில் எடுக்குற வேலையைப் பார்க்கணும்ல. நீ போய் நிம்மதியா தூங்குடி. நாளைக்கு வந்துடுவேன்” என்று தைரியம் கூற,
“நீ இல்லாம நிம்மதியா தூங்கவா? நீ ரொம்ப நிம்மதியா இருக்கியா” என்று முறைத்தவளிடம், மெல்ல முறுவலித்தவன், “செர்ரி லிப் பாமை டேஸ்ட் பண்ணலாம்னு இருந்த என்னை ஜெயில்ல கம்பி என்ன விட்டுட்டானுங்க” எனக் கிண்டலாகக் கூறியதில், அவளுக்கு மீண்டும் விழி கலங்கியது.
“ஹே விடு மைலி. சீக்கிரம் இதெல்லாம் கடந்து போய்டும். ம்ம். நீ வீட்டுக்குப் போ!” என்று அனுப்பி வைக்க, மகிழினி பிரஷாந்தும் மைதிலியும் இல்லாமல் சில நேரம் அழுது கொண்டே இருப்பது அறிந்து வீட்டிற்குச் சென்றாள். மகேஷாலும் அவளை சமாளிக்க இயலவில்லை.
அமர் காவல் நிலைய வாசலிலேயே இருப்பதாகக் கூறியதற்கு அவளே மறுத்து விட்டாள்.
“வேணாம் அமர். எப்ப சான்ஸ் கிடைக்கும் பொய் கேஸ் போடலாம்னு இருக்கானுங்க. தேவ இல்லாத பிரச்சனை வேணாம். நாளைக்கு பாத்துக்கலாம்” என்றதில் அனைவருமே வீட்டிற்கு வந்தனர்.
ஆனால், மைதிலிக்கு உறக்கமே இல்லை. அவளை மீறி கண்ணயர்ந்த போதும், “மைலி எனக்கு உன்னைப் பாக்கணும்” என பிரஷாந்த் அழைப்பது போல இருக்க, விருட்டென எழுந்து அமர்ந்தவளுக்கு நெஞ்செல்லாம் படபடவென துடித்தது.
விடியல் தோன்ற சில நாழிகைகளே இடிக்க, பதற்றத்துடன் வெளியில் வந்தவளின் அரவம் கேட்டு, ஹாலிலேயே சோபாவில் அமர்ந்து சாய்ந்து கண்ணயர்ந்த அமரும் தயாவும் எழுந்தனர்.
“எனக்கு என்னவோ மனசே கேட்கல. ரஷுவை பாக்கணும்” எனப் பரிதாபமாகக் கேட்டவளிடம், “இதுக்கு தான் நாங்க அங்கேயே இருக்கோம்னு சொன்னோம். சரி வா போகலாம்” என்று உடனடியாக அவளை அழைத்துச் சென்றனர்.
சரியான நேரத்திற்காக காத்திருந்த மாணிக்கம், அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டதை அறிந்து, செல்லுக்குள் நுழைந்தார் கையில் லத்தியுடன்.
அவரைப் புருவம் சுருக்கிப் பார்த்த பிரஷாந்திடம், “பெரிய இவனா நீ. ரெகமெண்டேஷன் எல்லாம் பெரிய இடத்துல இருந்து வருது. அண்ணன் பொண்டாட்டி கூட சேர்ந்து கூட்டு களவாணித் தனம் பண்ணி தான உன் அண்ணனை கொன்ன” என்று சீண்ட, “டேய்” என மாணிக்கத்தின் சட்டையைப் பிடித்தான்.
“போலீஸ்காரன் மேலயே கை வைக்கிறியா?” என லத்தியாலேயே அவன் வயிற்றில் குத்த, வாயில் இருந்து இரத்தம் தெறித்தது பிரஷாந்திற்கு.
அதன் பிறகு நாஞ்சிலும் இணைந்து அடித்து குதறினர்.
தலையில் இருந்தும் இரத்தம் வலிய, கையை உடைத்து சித்ரவதை செய்தனர்.
நாஞ்சில் “கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வந்துடும். தப்பிச்சுப் போக முயற்சி செஞ்சதால அடிச்சு அவனுக்கு இஞ்ஜூரி ஆனதா இருக்கட்டும். அப்பறம் போற வழியில தப்பிச்சுப் போய்ட்டான்னு சொல்லிடலாம். ஆம்புலன்ஸ்லேயே கதையை முடிச்சுடு” என்று திட்டம் கூறினார் மாணிக்கம், எல்லாவற்றிற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக அனுபவிக்கப் போவது அறியாமல்.
ஆனால், விடியும் முன்னே வந்து விட்ட மைதிலியைக் கண்டு மாணிக்கம் திகைக்க, “பிரஷாந்த் எங்க?” எனக் கேட்டு அவன் இருந்த இடத்தைப் பார்த்தவள் அதிர்ச்சியில் சமைந்து போனாள்.
இரத்த வெள்ளத்தில் அரை மயக்கத்தில் கிடந்த பிரஷாந்தைக் கண்டு “ஐயோ ரஷு…” என அவசரமாக அவனிடம் செல்ல, அவனது நிலை கண்டு தயா மாணிக்கத்தை அடிக்கப் போனான்.
“டேய் எதுக்குடா கை வச்சீங்க?” என எகிறியவனை அமர் தடுத்து, “கொஞ்சம் வெய்ட் பண்ணலாம் தயா. நான் மோனி அங்கிள்கிட்ட பேசிட்டு வரேன்” என்று பதறிய நெஞ்சத்துடன் அவசரமாக அவருக்கு போன் செய்து விவரம் கூறினான். முந்தைய நாளே அவரது எண்ணையும் வாங்கி வைத்திருந்தார்.
மோனி விவரம் அறிந்து திகைத்து, அவரது நண்பரான ஐஜியிடம் பேசிட, அடுத்த நிமிடம் ஐஜி மாணிக்கத்திற்கு போன் அடித்து விட்டார்.
அவனது வேலையே பறிபோகும் அளவிற்கு ஐஜி மாணிக்கத்தை துளைத்து எடுக்க, அப்போது தான் லேசாய் பயம் தோன்றியது.
மைதிலிக்கு ஆத்திரம் சரமாரியாக சூழ்ந்தது. மாணிக்கத்தை நோக்கி நெருப்புப் பார்வை வீசியவள், “கதவை திறடா” என்றாள் கர்ஜனையாக.
திட்டம் அனைத்தும் பாழாய் போன பதற்றத்தில் மாணிக்கம் கதவை திறக்க, ஓடிச் சென்று மயங்கி கிடந்தவனை மடியில் கிடத்தினாள்.
“ரஷு… ரஷு என்னை பாரு ரஷு. இங்க பாருடா” என கேவியவளின் குரல் கேட்டு மெல்லக் கண்ணைத் திறந்தவன், “ஐ ஆம் ஓகே மைலி” என குரல் எழும்பாமல் கூறி இரத்தம் வழியும் விரலால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு மீண்டும் மயக்கத்திற்குச் செல்ல, “ஐயோ ரஷு…” என அவனை நெஞ்சில் புதைத்துக் கொண்டு வாய் விட்டு கதறினாள் மைதிலி.
உயிர் வளரும்
மேகா