தெம்மாங்கு 20
சிமெண்ட் தரையில் சிந்திய அனைத்தையும் சுத்தம் செய்தவன், குப்பையில் போட்டுவிட்டு, “சாப்பாட்டை வீணாக்காதம்மா…” என்று கரிசனமாகக் கூறினான்.
“ஐய்யோ! தயவு செஞ்சு இப்படிப் பேசாத. எந்த உரிமையில நீ எனக்குச் சாப்பாடு கொடுக்கிற. உன்னால எனக்குன்னு துணையா இருந்த ஒரு உசுரும் போய் சேர்ந்துடுச்சு. நீ மட்டும் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லாம இருந்திருந்தா, அந்த உசுரு அனாமத்தா போயிருக்காது. என்கிட்ட இருந்த எல்லாத்தையும் பிடிங்கிட்டு, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம சோறு ஆக்கிப் போட்டுட்டு இருக்க.”
“தாத்தா என்னால தான் போயிட்டாருன்னு சொல்றியாம்மா.”
“அதுதான் உண்மைன்னு உனக்குத் தெரியாதா?”
“நான் என்னம்மா பண்ணன்?”
“ச்சைக்! மனுசனே இல்ல நீ. தயவு செஞ்சு எனக்கு எதுனா நல்லது பண்ணனும்னு நினைச்சா இங்க இருந்து போயிடு. என்னைப் பாதுகாக்குறேன்னு எரிச்சல் படுத்தாத…”
“நான் பார்த்துப்பேன் என்ற நம்பிக்கைல ரெண்டு உசுரு மண்ணுக்குள்ள தூங்கிட்டு இருக்கு.”
“அப்படின்னு நீ நினைச்சிட்டு இருக்க. அன்பு நிச்சயமா நீ பண்ணதை ஏத்துக்க மாட்டான். உன்னை மன்னிக்கவும் மாட்டான். அவனோட இடத்துல என்னைக்கும், உன்ன நானும் வைக்க மாட்டேன். கோட்டை கட்டி அசிங்கப்படாம கிளம்பு.”
“அந்த மாதிரி எந்த எண்ணத்துலயும் இதைப் பண்ணலம்மா. என் அன்போட குழந்தை பத்திரமா இந்தப் பூமிக்கு வரணும். வந்ததுக்கப்புறம், அதுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது. அதுக்காகத்தான் இந்த வீட்டைச் சுத்தி வந்துட்டு இருக்கேன்.”
“இப்படித்தான் வாய் கிழிய என்னை மீறி தான், என் நண்பனுக்கு நடக்கும்னு சொன்ன. கடைசில கண்ணு முன்னாடி இருந்தும் என் புருஷனை அநியாயமா சாக விட்டுட்ட.”
“மன்னிச்சிடும்மா”
“அது இந்த ஜென்மத்துல நடக்காது. நீயா வெளிய போறது ரெண்டு பேருக்கும் நல்லது.”
“தனியா என்னமா பண்ணுவ?”
“என்னமோ பண்ணிட்டுப் போறன், உனக்கு எதுக்கு? நீ என்கூட இருக்குறதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு. உன் மூஞ்சப் பார்க்கும்போது, ஊருக்கு மத்தியில நீ சொன்னது தான் நியாபகத்துக்கு வருது. இது என் புருஷனோட குழந்தை. அதை உனக்கும், இந்த ஊருக்கும் நிரூபிச்சுக் காட்டுவேன்.”
“இது என் அன்புவோட குழந்தையா இருக்குறதால தான் பாதுகாக்கணும்னு துடிக்கிறேன்.”
“ச்சீ! உன்ன மாதிரி ஒரு சூடு, சொரணை இல்லாத ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை. கூடவே இருந்தவன் பொண்டாட்டிய, உனக்குச் சொந்தமாக்க நினைக்கிறியே வெட்கமாயில்ல.”
“தப்பாப் பேசாதம்மா.”
“வாய்க்கு வந்தபடி பேச வைக்காத. நீ இந்த வீட்ல இருக்குற வரைக்கும், பச்சத் தண்ணி பல்லுல படாது. எந்த உசுரக் காப்பாத்தணும்னு வம்படியா பண்ணிக்கிட்டு இருக்கியோ, அந்த உசுரு இல்லாம போயிடும்.” என்றதும் அவளை முறைத்தான்.
அவள் அதைக் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காது வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். பொறுமையைக் கையாள நினைத்தவன், சமைக்கக் கூரை வீட்டிற்குச் சென்று விட்டான். இவ்வளவு சொல்லியும், வீம்பாக இருக்கும் அவனைக் காண எரிச்சல் முட்டியது. இன்று அவனா நானா என்று பார்த்துவிட முடிவுக்கு வந்தாள்.
உணவோடு உள்ளே வந்தவன், “உனக்குச் சோறாக்கிப் போட்டுப் பாதுகாப்பா இருக்க மட்டும் ஆசைப்படுறம்மா. மத்த எந்த எண்ணமும் என் மனசுல இல்ல. உள்ள இருக்க உசுர மனசுல வச்சுக் கொஞ்சம் சாப்பிடு.” என்றவன் தட்டைக் கீழே வைத்த அடுத்த நொடி பறந்தது.
அவள் வீம்புக்கு முன்னால் தோற்றுப் போய் நின்றான் குமரவேலன். உள்ளே இருக்கும் குழந்தையின் நிலை குறித்து ஓயாமல் பரிதவித்தவன், கடைசியாகச் சாப்பிடச் சொல்ல, கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவள் முடியாமல் மயங்கிச் சரிந்தாள். துடித்து ஓடியவன் தண்ணீரை முகத்தில் அடித்து, “ம்மா…” எனக் கன்னத்தில் அடிக்க, சில நிமிடங்களுக்குப் பிறகு விழி திறந்தவள் அவன் மடியில் இருப்பதைப் பார்த்துத் தள்ளிவிட்டாள்.
“குழந்தை மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லையாம்மா.” என்றவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவளுக்கு முன்பு வந்து நின்றவன், “எங்குச் செல்கிறாய்?” என்று கேட்க, “மரியாதையா வழிய விடு.” என்றாள்.
“இந்த மாதிரி நேரத்துல எங்கயும் போகாதம்மா. கொஞ்ச நாளைக்கு என் பேச்சைக் கேளு.”
அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “நீ சொல்றதக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீ இந்த வீட்ல இருக்குற வரைக்கும் நான் இருக்க மாட்டேன்.” என அவனைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.
“தேனிசை ரொம்ப நல்ல பொண்ணு. தனக்கு நடந்ததை ஏத்துக்க முடியாம எல்லாத்தையும் உன்கிட்டக் காட்டுது. அந்தப் பிள்ளை என்ன பேசினாலும், எனக்காகப் பொறுத்துக்கப்பா. இந்தக் கிழவன் இல்லனா கூட அந்தப் பொண்ணக் கை விட்டுடாத.” எனக் கடைசியாக மாணிக்கம் சொன்னது அவன் நினைவில் ஓடியது.
கண்மூடித் தன்னை நிதானம் கொள்ளச் செய்தவன், “நான் போறம்மா…” என்றிட, நடந்தவள் நின்றாள்.
நடை நின்றதைக் கண்டு அவள் முகம் பார்த்தவன், “உள்ள போம்மா” என்றான்.
அவனை நம்பாமல் தேனிசை தேவி அதே இடத்தில் நிற்க, தான் செல்லும் வரை செல்ல மாட்டாள் என்பதை அறிந்தவன் பேசாமல் வெளியேறினான்.
***
அவன் சென்றதும் நிம்மதியாகச் சிறிது நேரம் அமர்ந்தாள். கோபத்தில் வறண்டு போன வயிறு கத்திக் கூச்சலிட, பிள்ளையின் உயிருக்காகச் சமைக்க முடியாமல் சமைத்துச் சாப்பிட்டாள். சமைக்கும் வாசனை நாசியில் ஏறியதுமே, குமட்டிக் கொண்டு வந்தது வாந்தி. அதையெல்லாம் கடந்து ஒரு வழியாகச் சமைத்தவள், சாப்பிட்டு முடித்த கையோடு அனைத்தையும் வெளியே தள்ளினாள். அதே போராட்டத்தோடு அன்றைய நாள் முழுவதும் கழிய, மாலை நேரம் மறைந்த இரு உயிர்களுக்கு விளக்கேற்றி வைத்தவள், ஏதேதோ சிந்தனையில் நேரத்தைக் கடந்தாள்.
“வராம எங்க போகப் போறேன். எனக்காகக் காத்துட்டு இரு. என் உசுரு உன்னத் தேடி ஓடிவரும்.”
கடைசியாகத் தன் மனம் கவர்ந்தவன் பேசிவிட்டுச் சென்ற வார்த்தை, நினைவில் வந்து கண்ணீரைச் சுரக்க வைக்க, “இனி நான் வரமாட்டேன், என் பிள்ளை தான் வரும்னு சொல்லாம சொல்லிட்டுப் போனியா. ஏன்டா என்னை விட்டுட்டுப் போன? இந்தக் குழந்தையைச் சுமக்கவா உன்னைக் காதலிச்சேன். நடந்ததைக் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல அன்பு. நீ இல்லாத வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கக் கூட இல்ல, அதுக்குள்ள உன் கூட இருந்தவனை…” எனச் சொல்ல முடியாமல் உதடு வெடிக்க அழுதாள்.
நேரம் கடந்து அவளே அவளைச் சரி செய்து கொண்டு, “ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தை விடக் கொடுமையா தெரியுது. என்னைச் சுத்திப் பார்க்குறவங்க கண்ணு கொல்லாம கொல்லுது. எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை? என்னைக் காதலிச்ச பாவத்துக்காக உனக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை. எந்தத் தப்புமே செய்யாத தாத்தாவைக் கூட நான் பண்ண பாவம் விட்டு வைக்கல. என்னால இந்தக் குழந்தை அப்பா இல்லாம நிக்குது.” என்றவள் எண்ணிற்கு அழைப்பு வந்தது.
எடுத்தவளுக்குக் காவல் நிலையத்திலிருந்து, “நாளைக்கு உன் புருஷன் கொலை விஷயமா, ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டுப் போம்மா…” என்றார் அதிகாரி ஒருவர்.
“தப்பானவங்களைப் பிடிச்சு வச்சுகிட்டு, தப்புப் பண்ணவங்களை வெளிய விட்டு இருக்கீங்க சார்.” என அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
“யாரைப் பிடிக்கணும்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். நாளைக்கு ஸ்டேஷனுக்கு மட்டும் வா…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இந்த வழக்கு இவர்களிடம் இருக்கும் வரை ஒரு நீதியும் கிடைக்காது என்று எண்ணியவள், எப்படியாவது நீதிக்கு முன்னால் நிறுத்த முடிவு செய்தாள். இவள் முடிவைத் தடுப்பதற்காகவே ஒருவன் இருக்கிறான் என்பதை அறியாது இரவு உணவை உண்டு முடித்தவள், யாரும் இல்லாத இல்லத்தில் தனியாக உறங்கப் படுத்தாள்.
அந்நேரம் உள்ளே வந்த குமரவேலனைக் கண்டு முகம் சுருக்கியவள், “எதுக்கு வந்த?” கேட்க,
“உனக்குத் துணையா படுத்துக்குறம்மா…” என உள்ளே நுழைந்தான்.
அவனை வரவிடாமல் பிடித்து வெளியில் தள்ளியவள், “எத்தனை தடவ உன் புத்திக்கு உறைக்கிற மாதிரி சொல்லுறது? உன் எண்ணம் ஒரு நாளும் நடக்காது, போடா வெளிய…” என்றாள்.
“தப்பாவே புரிஞ்சிக்கிறம்மா…” என்றவனைப் பார்க்கச் சகிக்காது கண்டமேனிக்குக் கத்த ஆரம்பிக்க, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஒன்று கூடினார்கள்.
அவர்கள் வந்த பின்னும் தன் வாயை மூடாதவள், அவனை வெளியேறச் சொல்லி விடாப்பிடியாக நிற்க, வந்தவர்கள் சமாதானம் பேச முயன்றார்கள். யாருக்கும் இடம் கொடுக்காமல், அவனைத் துரத்துவதில் மட்டும் குறியாக இருக்க, “ஊருக்கு முன்னாடி தாலி கட்டும்போது சும்மா இருந்துட்டு, இப்ப வெளிய போன்னு சொல்ற…” என்றார் ஒருவர்.
“அதான் பாருப்பா! பண்ணக்கூடாத அசிங்கத்தைப் பண்ணிட்டு, இப்ப உள்ள வராதன்னு சொல்றா. அப்பவே கட்டுக்கோப்பா இருந்திருந்தா, ஊருக்கு முன்னாடி அசிங்கப்பட்டு நின்னுருக்கத் தேவை இல்லல்ல.”
“யோவ்! இது அவங்க வீட்டுப் பிரச்சனை, தலையிடாம ஒதுங்கி நில்லுங்க.” என்ற சந்தானத்தின் குரலைத் தாண்டி ஒலித்தது.
“கேட்டியா? எல்லாரும் சொல்றதைக் கேட்டியா? இதுக்குத் தான நீ ஆசைப்பட்ட. இப்படி ஒரு அசிங்கத்தைத் தேடித் தந்த இந்தக் குழந்தை எனக்கு வேணாம். இப்பவே இதை அழிச்சிட்டு நானும் போறேன்…” என வேகமாக வீட்டிற்குள் ஓடி கதவைச் சாற்றினாள்.
அதுவரை என்ன நடந்தாலும் சரி என்ற ரீதியில், அமைதியாக நின்றிருந்தவன் ஓடிச்சென்று, “ம்மா” எனக் கதவைத் தட்டினான்.
கூடியிருந்தவர்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் புடவையை எடுத்துச் சுருக்குப் போட்டவளை, ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு வேகமாகக் கதவை உடைத்தான்.
பழைய கதவு பட்டென்று திறந்து கொள்ள, அவளை நாற்காலியில் இருந்து கீழே இறக்கியவன், ஓங்கி அடித்துச் சுவரில் மோதி நிற்க வைத்தான். அரண்டு துடித்தவள், பாதி மயக்க நிலையில் சாய்ந்து கொண்டிருக்க, சுற்றி நின்று கத்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தவன்,
“ஏய்ய்ய்ய்! வாய மூடிட்டு வெளிய போங்கடா எல்லாரும்.” எனக் கர்ஜித்தான்.
***
“பைத்தியக்காரி! கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா உனக்கு? உன் பிள்ளைக்கு நான் போராடிட்டு இருக்கேன். நீ என்னடான்னா சாவப் பார்க்குற. உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை? ஆமா நான் துரோகி தான்…” என்றவன் சுவரில் சாய்ந்து கொண்டிருந்த தேனிசையை நெருங்கினான்.
அரை மயக்கத்தில் நின்றிருந்தவளைச் சிறைப் பிடித்தான், இரு கைகளையும் சுவரில் வைத்து. அவன் நெருக்கத்தை உணர்ந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்றிருந்தவளிடம், “போதுமா! நானே ஒத்துக்குறேன், நான் பச்சைத் துரோகி தான். இந்தத் துரோகியால உன் புருஷன் உயிரைக் காப்பாத்த முடியல. நேத்து வரைக்கும், இந்த வீட்டுக்கு உழைச்சுப் போட்ட அந்த ஜீவனைக் காப்பாத்த முடியல. அவங்க ரெண்டு பேரையும் கொன்னது நான் தான்… இதான உனக்கு வேணும்? அப்படியே வச்சுக்க…” என்றான்.
காதருகே கேட்ட கர்ஜிக்கும் சத்தத்தில், முகத்தைச் சுளித்தவளை விட்டுத் தள்ளி நின்றவன், “நீ என்னை மாதிரி துரோகி இல்லல்ல, உன்னால என்ன பண்ண முடிஞ்சுது? அன்னைக்கு வீட்டுக்கு வந்து தரதரன்னு இழுத்துட்டுப் போனானுங்களே, அவனுங்ககிட்ட இருந்து உன்னைக் காப்பாத்திக்க முடிஞ்சுதா? புருஷன் சாவுக்கு நியாயம் கேட்கப் போனியே, அங்க உனக்கு நியாயம் கிடைச்சுதா? துரோகியா இல்லாத நீ என்ன சாதிச்சிட்ட?” கேட்டான்.
“என் மேல இருக்க கோபத்துல வயித்துல இருக்க பிள்ளையைப் பட்டினி போட்டியே, உன்ன விடவா நான் துரோகி ஆகிட்டேன். ஒரு உசுரோட மதிப்பு என்னன்னு தெரியுமா? ஒன்னுக்கு ரெண்டா தூக்கிக் கொடுத்துட்டு உட்கார்ந்து இருக்கேன். வலிய வாய் விட்டுச் சொல்லக்கூட முடியல. புருஷன் இல்லனாலும், அவன் பிள்ளையை நல்லபடியா பெத்து வளர்ப்பன்ற நம்பிக்கையில தான், உனக்குப் பாதுகாப்பா இருக்கணும்னு முடிவு பண்ணேன். எப்போ அதையே கொல்லனும்னு முடிவு பண்ணிட்டியோ, தாராளமா நீ சாவு. ஏற்கனவே ரெண்டு பேருக்குக் காரியம் பண்ண எனக்கு, உங்க ரெண்டு பேருக்கும் பண்ணத் தெரியாதா? அந்தப் பாவத்தையும் இந்தக் கையால பண்றேன். செத்துத் தொல, போ…”
பேச முடியாமல் அவனை ஏறெடுத்துப் பார்த்தவளை, “இத்தனைக்கும் காரணம் நீதான்… நீ மட்டும் எனக்கும், என் அன்புக்கும் நடுவுல வராம இருந்திருந்தா, இது எதுவும் நடந்திருக்காது. நான் இன்னைக்கு அனாதையாக நிற்கிறதுக்கும், உன் வயித்துல இருக்க குழந்தை அனாதையா நிற்கிறதுக்கும், நீ ஒருத்தி தான் காரணம். நான் சொல்லவா, ரெண்டு கொலைய நீ தான் பண்ணன்னு. உன்னால அந்த வார்த்தையைத் தாங்கிக்க முடியுமா?” என்ற கேள்வியில் ஆடிப் போய்விட்டாள் மயங்கி இருந்தவள்.
“உன்னை இவன் கூடச் சேர்த்து வச்சதுக்கு…” என அன்புக்கரசன் புகைப்படத்தைக் காட்டிய குமரவேலன், “என்னைக் கொலை பண்ண ஆள் அனுப்புனது உன் அண்ணன் கருப்பன்…” என்றவனை அதிர்வுக்கு மேல் அதிர்வோடு நோக்கினாள்.
“என்ன பார்க்குற? எனக்கு எப்படித் தெரியும்னா?” என அவளைப் பார்க்காமல் திரும்பியவன், “அன்னைக்கு நடந்த எல்லாமே இப்பக் கூடக் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. நானும் என் அன்பும், சந்தோஷமா சிரிச்சுப் பேசிகிட்டு நடந்து போயிட்டு இருந்தோம். யாரோ ரெண்டு பேர், என்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போனானுங்க. முன்னப் போனவன் அப்படியே போகாம என்னைத் தேடி வந்தான். உன் அண்ணன் அனுப்புன ஆளுங்க…” என்பதற்கு மேல் வார்த்தை வரவில்லை அவனிடம் இருந்து.
அழுவதற்குச் சாட்சியாக அவன் உடல் குலுங்கியது. அவன் முதுகை வெறித்துக் கொண்டிருந்தவள் செவியில், “என்னைக் காப்பாத்த அவன் உசுரக் கொடுத்துட்டான். அவனோட ரத்தம் என் கையில… மரணம் கூட அவ்ளோ வலியைக் கொடுக்காது. அவனை நான் எழுப்பிட்டே இருந்தேன். என் பேச்சைக் கேட்காம என்னை விட்டுப் போயிட்டான். அவன் மட்டும் போல… இந்தக் குமரனோட உணர்வையும், சேர்த்து எடுத்துகிட்டுப் போயிட்டான். அவனும் இல்லாமல், உணர்வும் இல்லாமல், செத்த பிணமா இருந்தேன்.” என்றான்.
தேனிசை தேவியின் கண்களில் இருந்து கட்டுக்கடங்காமல் உவர்நீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அவளைத் திரும்பிப் பார்த்தவன், நொடி நிதானித்துப் பற்களுக்கு இடையில் தன் அளவு கடந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்தினான். குடும்ப ஆள்கள் தான் செய்திருப்பார்கள் என்பதை உறுதியாக நம்பியவள், நேரடியாக அதைப் பார்த்தவன் கூறக் கேட்டுக் கதறினாள். தன்னவன் எவ்வளவு வலியில் துடித்திருப்பான் என்று எண்ணவே அவள் உடல் துடித்தது.
“இனிமே எதுவும் இல்லன்னு பைத்தியக்காரனா இருக்கும்போது, அவன் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுது. அதை எப்படி நான் விடுவேன்? அவன் மட்டும் அன்னைக்குக் குறுக்க வராம இருந்திருந்தா, இந்நேரம் நான் செத்துப் போயி உன் புருஷனோட, இந்தப் பிள்ளையை வரவேற்று இருப்ப. எனக்காக உயிரைக் கொடுத்தவனுக்கு என்னால என்ன கொடுக்க முடியும்?
நீ கேட்கலாம், உனக்கு தான் எல்லாம் தெரியுமே, எதுக்காக போலீஸ்கிட்டப் போகலன்னு. போனா மட்டும் என் அன்பு திரும்ப வந்துடுவானா? அப்படியே அவங்களை ஜெயிலுக்கு அனுப்பினாலும், பெருசா என்ன தண்டனை கிடைச்சிடப் போகுது. சட்டத்துல ஆயிரம் ஓட்ட இருக்கு. எண்ணிப் பத்து வருஷத்துக்குள்ள எல்லாரும் வெளிய இருப்பாங்க. என் அன்போட உயிர் வெறும் பத்து வருஷம் தானா?”
இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தவன், பேச்சை நிறுத்திவிட்டுத் தன் நண்பன் புகைப்படத்திற்கு முன் நின்றான். அவன் முகத்தை வருடி உள்ளம் வதங்கியவன், “சத்தியமா அவன் போனதுக்கு அப்புறம் நான் நானா இல்ல… பழிவாங்க இந்த உடம்புல தெம்பு இல்ல. என் அன்பு கூட இருக்கிற வரைக்கும், ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கலாம் என்கிற தைரியம் எனக்குள்ள இருந்துச்சு. எப்போ என் கண்ணு முன்னாடி நடந்தும், ஒன்னும் பண்ண முடியாமல் போச்சோ அப்பவே என்னோட வீரத்தைச் சூழ்நிலை தான் தீர்மானிக்குதுன்னு நல்லாப் புரிஞ்சுகிட்டேன். நான் மட்டும் இல்ல, எந்த ஒரு சராசரி மனுஷனும் சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டவன். அந்த நிமிஷம், அவன் கண்ணு முன்னாடி நடக்கப் போறதைத் தடுக்கவே முடியாது.
எனக்காக உசுர விட்டவன், எனக்காகக் கடைசியா இந்த பூமியில விட்டுட்டுப் போனது அவன் குழந்தையை மட்டும் தான். அவனுங்க வெளிய வந்ததும், திரும்பவும் ஏதாவது பண்ணா என்ன பண்ணுவேன்?
என் அன்ப இழந்த மாதிரி அவன் குழந்தையை இழக்குற தெம்பு என்கிட்ட இல்ல. நான் கோழையாப் போறதால, என் அன்பு புள்ள வாழ்வான்னா அப்படி வாழ நான் தயார். அவனுங்களைப் பழி வாங்குறதை விட, இந்தக் குழந்தை நல்லபடியா வளர்றது தான் முக்கியம். அவனை ஒதுக்கி வச்ச மாதிரி, அவன் பிள்ளையை யாரும் ஒதுக்கிடக் கூடாது.” என்றான்.
நொடி நிதானித்து, “அன்புவோட முகத்தைத் திரும்பப் பார்க்குறதுக்கு, கடவுள் எனக்குக் கொடுத்த ஒரே ஒரு வாய்ப்பு இந்தக் குழந்தை மட்டும் தான். யாரும் ஜெயிலுக்குப் போக வேண்டாம், யாரும் செஞ்ச தப்ப உணர வேண்டாம். என் நண்பனோட உயிருக்கு நீதி கூடக் கிடைக்க வேண்டாம். அவனோட புள்ளயை இந்தக் கைல வாங்கி, எனக்காக உயிரை விட்டதுக்கு நன்றிக் கடனா வளர்க்கணும். அவனை நல்லபடியா வளர்த்துப் பெரிய பதவில உட்கார வச்சு, நீதி கிடைக்காமல் போன அவன் அப்பா சாவுக்குக் காரணமானவங்க முன்னாடி அதிகாரத்தோட நிக்க வைக்கணும்.” என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
நிற்க முடியாமல் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தவளைக் கண்டு உள்ளம் கனிந்தவன், தண்ணீரை எடுத்து வந்து கொடுக்க, வாங்க மனம் வராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் இருந்த சொம்பைக் கீழே வைத்தவன்,
“உன் மனசுல இருக்குற எண்ணமெல்லாம், உன்ன அடையத் தாலி கட்டுனன்னு தானம்மா. இந்த நிமிஷம் வரைக்கும், நீ என் அன்புவோட மனைவியா மட்டும் தான் தெரியுறம்மா. என் அன்புவ எனக்குத் திருப்பிக் கொடுக்கப் போற சாமிம்மா நீ… உன்ன இந்தக் கடவுளுக்கு இணையா வச்சிருக்கேன். என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சு, உன்னை அசிங்கப் படுத்திக்காதம்மா.
உனக்குப் பிடிக்குதோ இல்லையோம்மா, எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. உன்னச் சுத்தி தான் நான் இருப்பேன். இந்த வீட்ல இருக்குற நாயா கூட நீ என்னை நினைச்சுக்கம்மா. இந்த நாய் உனக்கும், உன் பிள்ளைக்கும் பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்குமே தவிர, பாயில படுக்க நினைக்காது.” எனச் சென்று விட்டான்.
வெளித் திண்ணையில் அமர்ந்தவனுக்கு மூச்சு விடச் சிரமமானது. தன்னோடு ஒட்டியமர்ந்து தோள் மீது கை போட்டுக்கொண்டு, கதை அளக்கும் அன்புக்கரசனைத் தேடியது உள்ளம். இத்தனைப் பாரங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பொழுது, வேடிக்கை பார்க்கும் அவனைத் திட்ட முடியாமல் தவித்துப் போனான். ‘இத்தனைப் போராட்டங்களைத் தனக்குக் கொடுத்ததற்கு பதில், உயிர்ப் பிச்சை கொடுக்காமல் போயிருந்தால் உள்ளே இருப்பவளின் மனமாவது கொதிக்காமல் இருந்திருக்குமே.’ என்று நண்பனைக் கடிந்தான்.
நேரம் என்ன ஆனதோ தெரியவில்லை. அதே நிலையில் அமர்ந்திருந்தான். மனதில் அடுக்கி வைத்திருந்த அனைத்து வார்த்தைகளையும் அடுக்கடுக்காகக் கொட்டி விட்டான். இத்தனைப் பாரமான பேச்சுக்களை வாங்கிக் கொண்டவள் நிலையைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தவன், அவள் முகத்தைப் பார்க்கச் சங்கடப்பட்டான். நிசப்தமான இரவு, நள்ளிரவைத் தொட்டு விட்டதை உணர்த்தியது.
மெல்லக் கல் வீட்டை எட்டிப் பார்த்தான். அவன் வெளியேறும் பொழுது இருந்த அதை நிலையில் அமர்ந்திருந்தாள் தேனிசை தேவி. பேசிய கடுமையான வார்த்தைகள், உள்ளத்தை வாட்டி வதைக்க உள்ளே சென்றான். குமரவேலனின் வரவைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு எங்கோ சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
அவள் நிலை கண்டு மிகவும் வருந்தியவன், “ம்மா…” என்றழைக்க, அவளிடம் அசைவில்லை.
சிறிது நேர மௌனத்திற்குப் பின், “கோபத்துல வாய் தவறிச் செத்துப் போன்னு சொல்லிட்டேம்மா. உன் நிழலக் கூட என்னைக்கும் நெருங்க மாட்டேன். எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவனோட பிள்ளைக்குக் காவலா இருக்க மட்டும் அனுமதி கொடு. நான் வெளிய படுத்துக்கிறேன். ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்காதம்மா, இடுப்பு வலிக்கும்.” என்றவன் வெளியில் வந்து கட்டிலை விரித்துப் படுத்துக் கொண்டான்.
உள்ளே இருந்தவளை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தும், எந்த மாற்றமும் இல்லை. இனி
அவளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறு என்று உணர்ந்தவன், தூங்காமல் விடியலை வரவேற்றான். அவன் எழும் நேரம் தன்னையே அறியாமல் தூங்கிப் போனாள் தேனிசை தேவி.