1,737 views

கலங்கமில்லாத கதிரவன் உதயம் போல் வீடு தினம் உதயமானது புது புது சிரிப்பில். தாம்பத்தியம் காதலுடன் சங்கமிக்க இருவருக்கும் நடுவில் வாழ்க்கை மின்ன ஆரம்பித்தது. தயாளனுக்கு உடல்நிலை ஓரளவிற்கு தேற ஆரம்பித்தது. படுத்த படுக்கையாக இருந்தவர் ஒருவர் உதவியோடு எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார். நடக்க இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால் இதுவே பெரும் மாற்றமாக தெரிந்தது அவர்களுக்கு.

தரணீஸ்வரனின் உலகம் வேறென்று மாறிவிட்டது. காலை எழுந்து அதே யோகாசனங்களை செய்பவன் சிறிது நேரம் ஜீபூம்பாவோடு விளையாடுவான். அதற்குள் மனையாள் தயாராகி விட்டு வர, காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் பயணப்படுவார்கள்.

மனைவியை கம்பெனி முன்பு விடுபவன் பள்ளிக்கு சென்று விடுவான். காலை இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவன் மதியம்போல் மனைவியிடம் வந்துவிடுவான். இருவருக்கும் சாப்பாடு ஆதிலட்சுமி தயவால் கிடைத்துவிட அங்கேயே மதிய உணவு.

அலுவலகப் பணிகளை கவனிப்பவன் மூன்று மணி போல் கிளம்பி விடுவான். மாலை  இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுத்துவிட்டு அலுவலகம் வர, அவனுக்காக காத்துக் கொண்டிருப்பவள் வீட்டிற்கு கிளம்புவாள்.

வாரத்தின் ஐந்து நாட்கள் இவை அழகாக நடந்தேறும். சனிக்கிழமை தரணீஸ்வரனுக்கு வேலை இல்லை என்பதால் மாலைவேளை போல் மனைவியோடு பறந்து விடுவான் ஊர் சுற்ற. ஞாயிறு அவர்களுக்கான விடுமுறை தினம். மனைவியின் ஆசைக்கு இணங்க அன்றைய நாள் முழுவதும் குடும்பத்தோடு செலவழிப்பார்கள்.

“என்னங்க!”  என்றாள் அகல்யா. சனிக்கிழமை அவர்களுக்கான தினம். அதை மறந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கணவன் மீது கோபப்பட, மடிக்கணினியை மூடி வைத்தவன் நாய்க்குட்டி போல் பின்னால் சென்றான்.

மெரினா கடற்கரையில் அமர்ந்தார்கள். வழக்கம்போல் இனிமையான பேச்சுக்களோடு சில காதல் சேட்டைகளும் மறைமுகமாக அங்கு அரங்கேற, “லயா குதிர சவாரி பண்றியா” என்றான் அவர்களை நோக்கி வரும் குதிரையை காட்டி.

“அய்யய்யோ வேணாங்க.” பதட்டமாக பதில் கொடுத்தாள் அகல்யா.

நியாயமாக வேண்டாம் என்றதும் ஆதரவு கொடுக்க வேண்டியவன் தரதரவென்று இழுத்துச் சென்றான் குதிரையிடம். அவள் கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்ததில் அங்கிருந்த பல பேருக்கு காட்சி பொருளானான் தரணீஸ்வரன்.

“ஈஷ்வா விட்டுடுங்க என்னை ப்ளீஸ்!” பாவமாக கதறிக் கொண்டிருக்க, சிரித்து வெறுப்பேற்றினான் அவளை.

இருக்கும் கடுப்பை எல்லாம் காட்ட முடியாமல் அவள் முறைத்துக் கொண்டு நிற்க, “வாய் மட்டும் பத்து பக்கத்துக்கு பேசுற. குதிரைய பார்த்து பயப்படுறியே வெக்கமா இல்ல. நீ என்ன கெஞ்சி கதறுனாலும் சரி இன்னைக்கு உன்ன அது மேல உட்கார வைக்காம விட மாட்டேன்.” என்றவன் குதிரைக்கு சொந்தக்காரனிடம் விலை பேசினான்.

அவனைப் பேச விடாமல் மனைவி கத்தி சதி செய்ய, அகல்யாவை பார்த்து குதிரை மிரள ஆரம்பித்தது. தன் வயிற்றுப் பிழப்பிற்கு உதவும் குதிரை மிரள்வதை பார்த்த சொந்தக்காரன், “சார் இந்த அம்மாவ என் குதிரை மேல ஏத்துனா என் குதிரை பாவம். நீங்க வேற ஆள பாருங்க.” என்றான்.

உடனே அகல்யாவின் கண்கள் மின்ன ஆரம்பித்தது. அதைக் கண்டு நாக்கை கடித்தவன், “சார் இவங்களுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை. இந்த மாதிரி பயம் வர ஏதாச்சும் பண்ணாதான் சரியாவாங்கன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க.” என்றவன் கழுத்தை தாவி  பிடித்தாள்.

மனைவியின் கை அழுத்தத்தில் ஒரு நொடி தடுமாறியவன், “பாருங்க சார் இந்த மாதிரி தான் அடாவடி பண்ணுவாங்க. ஒரு தடவை குதிரை மேல ஏத்திவிட்டா எல்லாம் சரியாகிடும். நீங்க கேட்ட காச விட அதிகமா தரேன் என் மனைவிய காப்பாத்திக் கொடுங்க சார்.” என்ற தரணீஸ்வரனை பார்ப்பதற்கு பதில் அகல்யாவை பார்த்துக் கொண்டிருந்தான் குதிரைக்கு சொந்தக்காரன்.

அவளோ அதை அறியாது கணவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, “குடிகார! என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரியா இருக்கு. இன்னைக்கு நீ செத்துடா என் கையால.” என்று அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.

குதிரைக்கு சொந்தக்காரன் பார்வை அகல்யாவின் மீது விசித்திரமாக விழுகிறது என்பதை அறிந்து கொண்ட தரணி, “தப்பா நினைச்சுக்காதீங்க சார் இன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்ததால மாத்திரை கொடுக்கல. அதான் இப்படி ஆக்ரோஷமா நடந்துக்கிறாங்க. இந்த குதிரை மேல ஏற மாட்டேன்னு சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க. இந்த மாதிரி கேஸுக்கு வேணான்னு சொல்றது தான் ரொம்ப பிடிக்கும். ஒருவேளை நீங்க தரலனா உங்களையும் இதே மாதிரி பண்ணாலும் பண்ணுவாங்க.” என்றவனை அதற்கு மேல் பேசவிடவில்லை அகல்யா.

கணவன் என்றும் பாராமல் கண்டமேனிக்கு அவள் அடிக்க, குதிரைக்கு சொந்தக்காரன்  தடுத்தான். கணவன் மீது இருக்கும் கோபத்தில் அவனிடமும் சண்டைக்கு பாய்ந்தாள். இவர்களிடம் சிக்கிய ஐந்தறிவு ஜீவனும் அதற்கு சொந்தக்காரனும் முழிக்க ஆரம்பித்தார்கள்.

சிரிப்போடு அவளை அடக்கி தன்னுள் வைத்துக் கொண்டவன் ஒருவழியாக கேட்டதை விட அதிக பணம் கொடுத்து குதிரை சவாரி செய்ய ஏற்பாடு செய்தான்.

“ஐயோ! சொன்ன கேளுங்க எனக்கு ரொம்ப பயம் இதெல்லாம்.” துள்ளி குதித்துக் கொண்டிருப்பவளை கண்டு இன்னும் மனதுக்குள் சந்தோஷப்பட்டவன்,

“அன்னைக்கு ஒரு நாள் நான் ஆபீஸ்ல அழும் போது எப்படி மிரட்டுன. பச்ச பிள்ளைன்னு கூட பார்க்காம பேய் மாதிரி கத்துனியே… அதுக்கு பழிவாங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு லயா.” என்றவனை திகைப்போடு பார்த்தாள் அகல்யா.

எவ்ளோ நேரம் வேணாலும் பாரு என்பதைப் போல் கண்டுகொள்ளாமல் குதிரை மீது ஏறியவன் அவளையும் ஏற வைத்தான். அழுகையோடு கணவனை வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தாள். மனைவியின் பேச்சை குறைக்க எண்ணியவன் குதிரையை நகர்த்த… உச்சகட்ட பயத்தில் கண்மூடி கொண்டாள்.

கடற்கரை மணலில் நான்கு கால் பாய்ச்சலில் குதிரை ஓட, சாமர்த்தியமாக கையாண்டான் தரணி. இன்னும் பயத்தில் கண்கள் மூடி கொண்டிருக்கும் மனைவியின் காதில், “லயா! சின்ன வயசுல பீச்சுக்கு வரும்போது குதிரை சவாரி செய்யணும்னு ஆசைப்பட்டியாமே உண்மையா?” என்ற பேச்சில் பயத்தையும் மீறிய ஆச்சரியம் அவளின் கண்களில் குடியேற வேகமாக திரும்பி கணவனை பார்த்தாள்.

புருவம் உயர்த்தி புன்னகைத்தவன், “சின்ன வயசுல நான் உன் கூட இல்லை அதனால இத்தனை வருஷம் இந்த ஆசைய தள்ளிப் போட வேண்டியதா போயிடுச்சு லயா சாரி!” ஆடவனிடம் இருந்து இன்னும் தன் பார்வையை மாற்றவில்லை அகல்யா.

பார்வை மாறாது என்பதை நன்கு அறிந்தவன் அவள் கைகளை குதிரையை ஆளும் கயிற்றின் மீது வைத்து ஓட்ட ஆரம்பித்தான் மிதமான வேகத்தில். அதை வெகு நேரம் கழித்து உணர்ந்து கொண்டவள் பயத்தில் பார்வையைத் திருப்ப,

“பயப்படாதடி…நம்ம கரெக்டா கையாண்டா எந்த பிராணியும் நம்மளை எதுவும் பண்ணாது. நான் சொல்ற மாதிரி பிடிச்சிட்டு நேரா பாரு.” எப்படி சவாரி செய்ய வேண்டும் என்பதை அவன் சொல்லிக் கொடுக்க, பயம் இருந்தாலும் ஒருவித சந்தோஷ மனநிலையில் அரைகுறையாக அவன் சொன்னதை செய்ய ஆரம்பித்தாள்.

கடற்கரை மணலை முழுவதுமாக அளந்தார்கள் குதிரையோடு. சிறிது நேரத்தில் அவளை விட்டு பயம் அகல, ஆசைப்பட்ட ஒன்றை அனுபவிக்க ஆரம்பித்தாள். மனைவியின் மாற்றத்தை உணர்ந்தவன் குதிரைக்கு சொந்தக்காரனிடம் இன்னும் விலை பேசி நேரத்தை அதிகப்படுத்தினான். போதும் என்ற வரை ஆனந்தத்தில் மகிழ்ந்தவளை‌ பதமாக கடற்கரை மணலில் நிற்க வைத்தான்.

இவ்வளவு நேரம் தங்களுடன் பயணப்பட்ட குதிரைக்கு அன்போடு விடை கொடுத்தவர்கள் ஓய்வோடு அமர்ந்தார்கள் மணலில். “சின்ன வயசுல அப்பா கூட வரும்போது ரொம்ப ஆசையா இருக்கும் ஈஷ்வா. அப்பாவும் எனக்காக இந்த மாதிரி நிறைய தடவை குதிரைய விலை பேசுவாங்க. என்னமோ தெரியல அதை கிட்ட பார்த்ததும் ரொம்ப பயமா இருக்கும். அதனாலேயே ஒரு தடவை கூட இந்த ஆசை நிறைவேறல.”

“என்னைக்காது என்னை நினைச்சு பயந்து இருக்கியா லயா.”

எதற்கு இந்த கேள்வி என்று புருவம் சுருக்கியவள் பதில் சொல்லாமல் கடல் அன்னையை தரிசிக்க, “எனக்கு தெரியும் நீ என்னை பார்த்து பயந்து இருக்கன்னு.” பதில் கொடுத்தான் அவனே.

“ஆமா! நீங்க ரொம்ப அழுத்தமா பிஹேவ் பண்ணும் போது ஏதாச்சும் விபரீதம் ஆகுமோன்னு பயந்து இருக்கேன். அழுகும் போது உங்களுக்குள்ள அப்படி என்ன வேதனை இருக்கும்னு நினைச்சி பயந்து இருக்கேன். இந்த வாழ்க்கை இனி என்ன ஆகும்னு பயந்து இருக்கேன். இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்.”

“ஏதோ ஒரு கட்டாயத்துல என் கூட வாழ்றல லயா.” என்றதுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்பது போல் மீண்டும் கடலை பார்க்க ஆரம்பித்தாள்.

“அடிக்கடி மனசுல தோணும் லயா. நீ ஆசைப்பட்ட ஆள் நான் இல்லை. இருந்தும் என் கூட வாழுறன்னா அதுக்கு உன்னோட இரக்க குணம் தான் காரணம். என்னோட கடந்த காலத்து மேல உனக்கு வந்த இரக்கம்  உன்னையும் அறியாம என் வாழ்க்கையோடு சேர்த்துடுச்சு. என்ன இருந்தாலும் மனசுக்குள்ள அடிக்கடி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றோம்னு உனக்கு கவலையா தான இருக்கும்.”

“இப்ப எதுக்கு இந்த பேச்சு ?”

“தெரியல! இல்லன்னு சொல்லிடுவன்னு ஒரு நப்பாசை. ஒருவேளை ஆமா’னு சொல்லிட்டா உன்ன என்ன பண்ணி சந்தோஷப்படுத்தலாம்னு யோசிப்பேன்.”

“நான் ரொம்ப சந்தோஷமா தாங்க இருக்கேன்.”

“எனக்காக”

“நமக்காக”

“சாரி!”

“உங்க கடந்த காலத்தை கேட்டதுக்கு அப்புறம் எனக்கு இரக்கம் வந்தது உண்மை தான். அதுக்காக எல்லாம் கூட சேர்ந்து வாழற ஆள் நான் கிடையாது. அதனால போன போகுதுன்னு உங்க கூட வாழ்றன்னு நினைக்காதீங்க.

உண்மைய சொல்லனும்னா என்னையும் அறியாம உங்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் இல்லாம தூங்க கஷ்டப்படுற குழந்தைய ஏங்க விடக்கூடாதுன்னு ஒரு எண்ணம். காதலிச்சு கல்யாணம் பண்ணவ துரோகம் பண்ணதுக்கு அப்புறமும் அவளுக்கான தண்டனைய கொடுக்காம உங்களுக்கான தண்டனை மட்டும் கொடுத்தீங்க பார்த்தீங்களா… அதுக்கெல்லாம் காரணம் அவ மேல நீங்க வச்சிருந்த காதல் தான்.” மனைவியின் வார்த்தை சரி என்பதால் மௌனம் காத்தான்.

உண்மையாகவே அவன் சிவானியை காதலித்தது உண்மை. அதனால் தான் அவள் செய்த துரோகத்தை கண் முன் கண்ட பின்பும் ஒரு வார்த்தை தவறாக பேசாமல் அவள் விருப்பப்பட்ட விவாகரத்தை கையில் கொடுத்தான்.

“சினிமா, கதை, நிஜம்னு எதை எடுத்துக்கிட்டாலும் காதல் தோல்வியால ஒருத்தவங்க கஷ்டப்படும் போது ஒருவேளை இந்த மாதிரி ஒரு காதல் நமக்கு கிடைச்சா எப்படி இருக்கும்னு அதை பார்க்குறவங்களும் படிக்கிறவங்களும் நினைப்பாங்க. அந்த மாதிரி எனக்கு ஒரு நாள் தோணுச்சு.

பொய்யா காதல கொடுத்த அவளுக்கே நீங்க இவ்ளோ உண்மையா இருக்கும்போது உண்மையான காதலை நான் கொடுத்தா எப்படி பார்த்துப்பிங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு. உங்கள மாதிரி எனக்குள்ளையும் ஒரு எண்ணம் இருக்கு.” என்றவள் அவனை ஆழமாக பார்த்தாள்.

முகம் அசைத்து என்னவென்று அவன் கேட்க, “ஒருவேளை சிவானி இப்போ உங்க வாழ்க்கைக்குள் திரும்பவும் வந்தா என்னை வேணாம்னு சொல்லிடுவீங்களா?” என்றவளை உடனே அணைத்துக் கொண்டான்.

அகல்யாவின் மனதில் வெகு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இது. என்னதான் அவள் துரோகத்தில் அளவு கடந்த கோபம் இருந்தாலும் நேசித்தது உண்மை தானே. என்றாவது ஒருநாள் அவள் கண் முன் வந்து நின்று உருகி பேசினால் தன்னை விட்டு விடுவானோ என்று பயம் அவளுக்குள்.

மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, “நீ சொன்ன வார்த்தைய நான் மறுக்கல லயா. ஆனா அவ என்னோட கடந்த காலம். உண்மையான காதலுக்கு துரோகம் எவ்ளோ பெரிய வலியை கொடுக்கும் முழுசா அனுபவிச்சவன் நானு. அதை ஒரு நாளும் உனக்கு கொடுக்க மாட்டேன். என் லயா என் வாழ்க்கையில ரெண்டாவதா வந்திருக்கலாம். ஆனா இனி நான் வாழ போற வாழ்க்கை முழுக்க அவளே… அவ மட்டுமே.” என்றவனை கட்டிக் கொண்டாள்.

***

இரவு என்பது இருவருக்கும் விருப்பமான ஒன்றாக அமைந்துவிட்டது. அந்த அறை அவனின் துயரத்தை பார்த்து சோர்ந்து இருக்க, அகல்யாவின் வருகையால் விழித்தது. தரணியை தாங்கிக் கொள்ளும் அகல்யாவின் அன்பில் தன்னை திடப்படுத்திக் கொள்ள, இருவரின் சகஜமான சிரிப்பில் மகிழ ஆரம்பித்தது. அதற்கெல்லாம் உச்சகட்டமாக இருவரும் காதலித்து சோர்வில் படுக்கும் நொடிதான் உற்சாகத்தின் எல்லையை கடந்தது.

கடற்கரை மணலோடு அறைக்குள் நுழைந்தவர்கள் ஆசையாக கட்டிக் கொள்ள, “லொள்!” என்றது ஜீபூம்பா.

அண்ணனும் அண்ணன் மனைவியும் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவர்களை தேடி அறைக்கு வந்த ஜீபூம்பா ஆள் இல்லாததால் மெத்தையில் கடுப்போடு படுத்திருந்தது. அதை கவனிக்காதவர்கள் மெய்மறந்து ஒட்டிக்கொள்ள, கோபம் மொத்தத்தையும் ஒரே ஓசையில் காட்டி பிரித்தது.

“இவனுக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைக்கணும் லயா, இம்சை தாங்க முடியல.”

“முடிஞ்சா அதை பண்ணுங்க. இல்லன்னா நீங்களும் உங்க தம்பியும் தயவு செஞ்சு வெளிய போயிடுங்க. ஒவ்வொரு தடவையும் நீங்க கொஞ்சிட்டு வர்றதும் அவன் குரலை கேட்டு அரண்டு ஓடுறதையும் பார்த்தா இந்த ஊர் உலகம் என்னை தப்பா நினைக்கும்.” என தலையில் அடித்துக் கொண்டவள் உடைமாற்ற குளியல் அறை சென்று விட்டாள்‌.

தம்பதிகளை பிரித்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் அண்ணனிடம் தாவிக் கொண்டது ஜீபூம்பா. செல்லம் கொஞ்சி அதனோடு விளையாடியவன் அழைத்துச் சென்றான் தோட்டத்திற்கு. மஞ்சள் நிற ரோஜாக்கள் அவனை ஏன் மாலை வரவில்லை என்ற கோபத்தோடு வரவேற்க, அன்பு நிறைந்த இடத்தில் செல்லப்பிராணியோடு ஐக்கியமானான்.

உடை மாற்ற சென்றவளும் அங்கேயே வந்து விட, இரவு பொழுது இனிமையாக கழிய ஆரம்பித்தது. வசதி வாய்ப்பு கொண்டிருந்தாலும் சமைக்க மட்டும் ஆள் வைக்கவில்லை ஆதிலட்சுமி. அவை குடும்பத்தின் முக்கிய கட்டத்தில் ஒன்று என்பதாய் கருதியவர் தானே சமைப்பதை பழக்கப்படுத்திக்கொண்டார். மருமகள் வந்தபின் அந்த எண்ணத்தில் சிறு மாறுபாடு வர சமையலறை மருமகள் கைக்கு மாறியது.

பெரும்பாலும் மாலை நேரம் இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விடுவாள் தோட்டத்திற்கு. மகன் வருகைக்கு முன்பாகவே அங்கு பேசிக் கொண்டிருந்தவர்கள் இவர்களை பார்த்து மனம் மகிழ்ந்தார்கள். தரணீஸ்வரன் பள்ளிக்கு சென்ற நாளிலிருந்து ஆதிலட்சுமி சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார் மகனிடம்.

“அகல் நாளைக்கு மறுநாள் முக்கியமான மீட்டிங் இருக்கு மறந்துடாத.”

“ஞாபகம் இருக்கு அத்தை. உங்க மகன நாளைக்கு ஸ்கூலுக்கு போக வேணாம்னு சொல்லி இருக்கேன். காலைலயே மீட்டிங்க முடிச்சா தான் நமக்கு கொஞ்சம் வேலை ஈஸியா இருக்கும்.”

“போன தடவ பேசுனதுக்கு மாறா அக்ரிமெண்ட் போட்டவங்க நடந்துக்கிட்டாங்க. அதனால இந்த தடவை கறாரா நம்ம சைடு என்ன பண்ணனும்னு சொல்லிடலாம்.” என்ற அன்னையின் பேச்சு புரியாததால் தரணீஸ்வரன் விளக்கம் கேட்க,

“அடுத்தடுத்து விழா வரதால புது டிசைனுக்கு டிரஸ் ஆர்டர் சொல்லி இருந்தோம். அவங்களும் நமக்கு தரதா சொல்லிட்டு கடைசி நேரத்துல ரொம்ப கம்மியான குவான்டிடிய கொடுத்துட்டாங்க. நம்ம எதிர்பார்த்த அளவுக்கு அதுல ஒன்னும் பண்ண முடியல. அக்ரீமெண்ட் போட்டுட்டு  மாத்தி பண்றீங்களேன்னு கேட்டதுக்கு முன்ன மாதிரி உங்க கிட்ட தரம் இல்லனு ஒரே வார்த்தையில முடிச்சிட்டாங்கங்க.” மாமியாருக்கு பதில் விளக்கம் கொடுத்தாள் மருமகள்.

“என்ன தரம் குறைஞ்சிடுச்சாம்? அக்ரிமெண்ட் போடுறதுக்கு முன்னாடி இதெல்லாம் விசாரிக்காம போட்டதுக்கு அப்புறம் சொன்னா என்ன அர்த்தம்? அப்படியே தரம் குறைஞ்சு இருந்தா கூட அதை அவங்க காண்ட்ராக்ட் விஷயத்துல காட்டக்கூடாது.”

“போன தடவைக்கு முன்னாடி ஒரு தடவை அக்ரீமெண்ட் போட்டுட்டு கடைசி நேரத்துல இதே காரணத்தை சொல்லித்தான் கேன்சல் பண்ணாங்க தரணி.”

“அப்போ என்ன காரணம் அம்மா சொன்னாங்க?”

“நம்ம தரம் குறைஞ்சு இருக்குறதால நிறைய பேர் டிமாண்ட் பண்றதா சொன்னாங்க.”

“நான் கம்பெனிக்கு போனதும் கடந்த ரெண்டு வருஷமா இருக்க பைல்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணேன். பார்ட்னர்ஷிப்ல வர ஆர்டர் குறைஞ்சு இருக்கே தவிர நம்ம தரம் குறையல.  இந்த தடவை மீட்டிங்க நான் அட்டென்ட் பண்றேன்.”

“கோபப்படாதீங்க ஈஷ்வா. நம்ம கூட இவங்க ரொம்ப வருஷமா அக்ரிமெண்ட் போட்டுட்டு இருக்காங்க. இப்ப ஏதாச்சும் பேச போய் அக்ரிமெண்ட் கேன்சல் ஆனா நமக்கு தான் நஷ்டம்.”

“என்ன லயா பேசுற? ரொம்ப வருஷமா அக்ரிமெண்ட் போட்டா அவங்க என்ன சொன்னாலும் தலை ஆட்டனுமா? தரம் குறைஞ்சு இருக்குன்னு சொல்லும்போதே சரியான காரணம் கேட்டிருக்கணும் நம்ம. நாளைக்கு எனக்கு அவங்க சரியான விளக்கம் கொடுத்தாகணும் இல்லன்னா மொத்தமா அவங்க காண்ட்ராக்ட முடிச்சுக்கலாம்.” என்று விட்டான் பட்டென்று.

அகல்யாவிற்கு அதில் விருப்பம் இல்லாமல் போக மாமியாரை திரும்பி பார்த்தாள். அவரும் யோசனையோடு மருமகளை பார்த்துக் கொண்டிருக்க, “உனக்கு என்ன தோணுதோ அதை செய் தரணி.” என்றார் தயாளன்.

“என்ன மாமா நீங்களும் அவர மாதிரி பேசுறீங்க.”

“இல்லம்மா தரணி சொல்றது சரிதான். தரம் குறைவா இருக்குன்னு சொல்றதை நம்ம ஏத்துக்கிட்டா நம்மளே நம்ம தொழில அசிங்கப்படுத்துன மாதிரி. நேர்மையா தொழில் நடத்துற நமக்கு இந்த பேர் பொருத்தமா இருக்காது. இவ்ளோ செலவு பண்ணி கம்பெனி நடத்துற நம்மளால வேற ஒரு புது காண்ட்ராக்டயா பிடிக்க முடியாது. எனக்கு தரணி சொல்றது தான் சரின்னு படுது. இனிமே இந்த அக்ரிமெண்ட் விஷயத்தை அவனை பார்த்துக்கட்டும்.” என்றார் முடிவாக.

தந்தை மகன் எடுத்த முடிவில் மாமியார் மருமகள் தலையிட விரும்பாததால் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர்.

***

“கம்பெனி விஷயத்தை பத்தி நான் பேசுனதுல எதாச்சும் கோவமா லயா.” அந்த பேச்சுக்களை முடித்தவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

அவன் வந்ததிலிருந்து ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள் அகல்யா. அதைத் தவறாக புரிந்து கொண்டவன் கேட்க, “இதுல கோபப்பட என்னங்க இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோங்க தொழில் பண்ற நம்ம சில நேரம் எதிரியா இருந்தா கூட பகைச்சிக்க கூடாது. நாசுக்கா இரண்டு பக்கமும் பச்சைக்கொடி காட்டுனா மட்டும் தான் நரிவலைக்குள்ள சிக்காம இருக்க முடியும்.” என்றாள்.

அவள் சொல்வது கம்பெனியின் நலனுக்கு என்பதால் ஒப்புக்கொண்டவன் சம்மதமாக தலையசைக்க, “உங்க தம்பி எங்க இருக்கான்னு பார்த்துட்டு வந்துட்டீங்களா. அப்புறம் பாதி ராத்திரில எந்திரிச்சு ஓட போறீங்க.” என்று நாசுக்கா கேலி செய்த மனைவியை சினத்தோடு நோக்கியவன்,

“இந்த வாய் ரொம்ப பேசுது இப்ப எல்லாம். இதுக்கு தரணி யாருன்னு காட்டுனாதான் சரியா வரும்.” சொன்னது போல் அவன் செயலில் இறங்க, இது தண்டனை அல்ல அவன் தன் மேல் கொண்டுள்ள அளவு கடந்த நேசத்தின் அளவு என்பதை அறிந்தும் தண்டனை பெறுவது போல் காட்டிக் கொண்டாள்.

இதழ் நோவு எடுக்க, “விடுங்க” என்று அதைக் காப்பாற்றிக் கொண்டாள். பாவம் பார்த்து விட்டவன் பதமாக ஒத்தடம் கொடுக்க, இந்த முறை மறக்காமல் மருந்தை ஏற்றுக் கொண்டாள்.

போர்வைக்குள் பாம்பாக இருவரும் வளைந்து நெளிய துவங்க…தளர்வு இல்லாத அழுத்தமும், முத்தமும் தளர்வு பெற்றது. மனைவியின் உடல் சோர்ந்து விட்டதை அறிந்தவன் தன் காதல் விளையாட்டுகளை முடித்துக் கொண்டான். அவனோட பிரியாமல் படுத்திருந்தவள்,

“ஈஷ்வா” என்றாள்.

இரவு நேரத்தில் தொடங்கப்படும் காதல் தருணங்கள் முடிவு பெறும் நிலைக்கு வந்ததும் இருவரும் அதிகம் விரும்புவது மன நிம்மதியான பேச்சுக்களை தான். துவங்குவதற்கு முத்தம் எவ்வளவு உதவி செய்கிறதோ அதேபோல் அன்றைய இரவை  மனநிறைவாக நிறைவு செய்ய இனிமையான பேச்சுக்கள் உதவும்.

அதற்கான அச்சாணியாய் மனைவியின் பேச்சு அமைந்துவிட, ஏற்கனவே இறுக்கமாக இருக்கும் உடலை இன்னும் இறுக்கி கட்டிக் கொண்டவன், “சொல்லுங்க மிஸ்ஸஸ் ஈஷ்வா” என்றான்.

“நான் ஒன்னு கேட்பேன். அதை நீங்களே கேட்குற மாதிரி அத்தை கிட்ட சொல்லணும்.”

சற்று விலகி அவள் முகம் பார்த்தவன் சீற்றமில்லா வெத்து முறைப்புடன், “நிறைய தடவை சொல்லிட்டேன் லயா என்கிட்ட பர்மிஷன் கேட்காத ஆர்டர் போடுன்னு.” என்றான்.

இதைத்தான் அவன் சொல்வான் என்பது தெரிந்தாலும் இதைப்பற்றி கேட்க சங்கடமாக இருந்தது அவளுக்கு. அதனால் பதில் கொடுக்காமல் அவன் மார்போடு படுத்துக்கொள்ள, மனைவியின் செயலை உணர்ந்து வருடி கொடுத்தான் இயல்பாக.

“லயா என்கிட்ட கேக்குறதுக்கு எதுக்கு உனக்கு இவ்ளோ கூச்சம். நீ சொல்லி நான் செய்ய மாட்டன்னு நம்புறியா.” என்பதற்கு அவள் ‘இல்லை’ என்று தலையசைக்க,

“அப்புறம் எதுக்காக இவ்ளோ யோசனை. இது எனக்கு வேணுங்க செய்யுங்கன்னு சொல்லு.” என்றான்.

“நமக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாசத்துக்கு மேல ஆயிடுச்சு….” அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவள் அந்த பேச்சை இழுக்க, மனைவியை மெத்தையில் சாய்த்தவன், “என்னடா? எதுவா இருந்தாலும் சொல்லு. தப்பா இருந்தா கூட நான் தப்பா நினைக்க மாட்டேன்.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

“தாலி கட்டுன கயிறு அப்படியே இருக்குங்க. அதை மாத்தி தாலிக்கொடி எடுத்து தரீங்களா.” என்றவள் விழியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

அதில் தெரியும் சங்கடத்தை உணர்ந்தவன் மனதுக்குள் வருத்தப்பட்டான் மிகவும். இதை எதற்காக இவ்வளவு யோசனைகளுக்கு பின் கேட்கிறாள் என்பது புரியாமல், “வேற என்னமோ கேட்க போறன்னு நினைச்சேன் லயா. இதுக்கா இவ்ளோ நேரம் தயங்கிட்டு இருந்த.” என்றிட,

“நம்ம கல்யாணம் பிடிக்கலன்னு பல தடவை வீட்ல இருக்க பெரியவங்க கிட்ட சொல்லி இருக்கேன். இப்போ அவன்கிட்ட போய் இதை கேட்க ரொம்ப தயக்கமா இருக்குங்க. அவங்க ஏதாச்சும் கிண்டலுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டா கூட எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். முன்னாடி நான் இந்த தாலிய ரொம்ப அசிங்கமா பேசி இருக்கேன். எப்போ இதை பத்தி பேச ஒரு மாதிரி இருக்குங்க.” மனைவியின் விழிகளில் இருந்து அவன் விழி அகலவில்லை.

“என்னங்க?” என்றவனுக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவன், “எதை பத்தியும் யோசிக்காம தூங்கு லயா. நீ ஆசைப்பட்டது நிச்சயம் நடக்கும். யாரும் உன்ன கேலி பண்ண மாட்டாங்க. அப்படி பண்ணவும் இங்கு யாருக்கும் உரிமை இல்ல. உன்னை இந்த அளவுக்கு சங்கடமான நிலைக்கு தள்ளினது நான் தான்னு நினைக்கும் போது தான் ரொம்ப வருத்தமா இருக்கு.” என்றான்.

“அய்யோ! என்னங்க இப்படி பேசுறீங்க. உங்க மனசு சங்கடப்படுதுன்னா இதை பத்தி பேச வேணாம்.” பதறி பதில் கொடுத்தாள். புன்னகையோடு அந்த பேச்சை முடிக்க எண்ணியவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள, யோசனையில் தூங்கினாள் அகல்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
70
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *