Loading

20

அந்த அறை முழுவதும் அமைதி நிலவியது. நால்வரின் மூச்சுக் காற்றின் சத்தம் கூட வெளி வராத அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

ஒருபக்கம் ரகுநந்தனை முறைத்துக் கொண்டிருந்தாள் நறுமுகை. ‘இவ அக்கா தான் என்னை முறைக்கிறானா இப்போ இவளும் ஆரம்பிச்சுட்டா’ என மனதினுள் புலம்பியவன்,

‘ப்ளீஸ், கொஞ்சம் நேரம்…’ என கண்களால் அவளிடம் கெஞ்ச, அதன்பின் முறைப்பதை நிறுத்தினாள்.

சிரஞ்சீவியோ, மொழியறியா படம் பார்ப்பதைப் போல் அமர்ந்திருந்தான் ரகுநந்தனின் அருகில்.

அவர்கள் மூவரும் நிர்மலாவின் முன் அமர்ந்திருந்தனர். நிர்மலா, கோவை மாநகரில் புகழ்பெற்ற உளவியலாளர்.

அங்கிருந்த மௌனத்தை உடைத்தது நிர்மலாவே. “இவங்க தான் ஜானுவோட சிஸ்டரா ரகு?” என்றாள் அவள்.

“ஆமா நிரு” என்றவன், நறுமுகையிடம் திரும்பி, “இது நிர்மலா, என் பிரண்ட்” என அவளையும் அறிமுகப்படுத்தினான்.

‘என்னை விட்டு ஒரு வருஷம் தான டா இந்த கோயம்புத்தூர்ல இருந்த, அந்த ஒரு வருஷத்துல ஜானு, நிர்மலானு லிஸ்ட் பெருசா போகுதே’ என்ற ரீதியில் சிரஞ்சீவி அவனைப் பார்க்க,

“என்னோட ஸ்கூல்மேட் டா நிரு, இப்போ ரீசன்ட்டா தான் மீட் பண்ணேன்” என அவன் மனக்கேள்விக்கு இவன் வாய்மொழி பதில் அளிக்க, அவனோ ‘ம்…’ என தலையாட்டினான்.

பின் சிரஞ்சீவியையும் நிர்மலாவிற்கு அறிமுகப்படுத்தியவன், “எனக்கு என்ன பண்றதுனு ரொம்ப குழப்பத்துல இருக்கும் போது தான் நிருவ நான் மீட் பண்ணேன். கிட்டத்தட்ட என்னைப் பத்தியும் ஜானு பத்தியும் அவக்கிட்ட சொல்லிட்டேன், இனி உனக்கு என்ன கேள்வினாலும் நிரு கிட்டயே கேளு முகி” என்றவன் அமர்ந்திருந்த இருக்கையில் தலைசாய்ந்து கண்களை இறுக மூடினான்.

“மாமா தான் ராமன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், ஏன் அக்கா இவரு மேல கோபமா இருக்கிறாங்கிறது தான் புரியல மேடம். இவர்கிட்ட கேட்டா ராமன், கிருஷ்ணன்னு கதை சொல்றாரு. இவங்க காதல்ல எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல” என அவள் தலையை அழுந்திப் பிடிக்க,

“உன்னோட நிலை எனக்கு புரிகிறது முகி. நான் இப்போ சொல்றத கவனமா கேட்டுக்கோ, உனக்கான விடை இதுல கிடைக்கும்” என்றவள் பேசத் தொடங்கினாள்.

“என்கிட்ட முதன்முதலா ரகு ஜானுவ பத்தி சொல்லும் போது ஆச்சரியமா இருந்தது. பத்து வயசுல ஏற்பட்ட ஒரு நட்புக்காக அவ பதினாலு வருஷம் காத்திருக்கிறது மட்டுமில்லாமல் அவன் மேல அளவுக்கதிமான காதலோட இருக்கிறதும் ஆச்சரியமான விசயம்.

அவளோட ராமன் வருவான்னு அவ நம்பிக்கையா இருந்தது அவ ரகுமேல வச்ச நம்பிக்கைய காட்டுது. ஆனா அதே நம்பிக்கை கிருஷ்ணா மேல இல்ல, அதுக்கு அந்த பேரு தான் காரணம்னு நான் சொல்லுவேன். ஏன்னா விவரம் தெரியாத வயசுல, அவள் படித்த புத்தகங்களில் அவளுக்கு ராமன் மேல ஈர்ப்பையும் கிருஷ்ணன் மேல வெறுப்பையும் உண்டு பண்ணி இருக்கிறது.

அதோட நீட்சி தான் ரகுவ முதன்முறையா புன்னகையோட பார்த்த மிதிலா அவன் பேர் கிருஷ்ணானு தெரிஞ்சவுடனே அவன் மேல அவளாவே ஒரு வெறுப்புங்கிற பிரம்மைய உருவாக்கிக்கிட்டா.

ஆனா அந்த வெறுப்ப ஈர்ப்பா மாற்ற முடிந்த ரகுவால அதோட பிரம்மைய அழிக்காம விட்டுட்டான். அவள் மனதில் அது ஆழமா பதிஞ்சு போச்சு… அதே நேரம் அவனின் ஜானு என்ற அழைப்பு அவன் தனக்கான ராமன் அப்படிங்கிற எண்ணத்தையும் அந்த பிஞ்சு மனசுல ஆழப் பதிச்சுருச்சு. அதோட விளைவு தான் பதினான்கு ஆண்டுகள் கழித்தும் தன் ராமனுக்காக அதே காதலோட காத்திருக்காங்க மிதிலா” என்றவள், பின் இல்லை என தலையாட்டியவள் ‘ராமனோட ஜானகி’ எனத் திருத்தினாள் நிர்மலா.

“அப்போ கிருஷ்ணா மேல வெறுப்பு இருந்தாலும் சில நேரங்கள்ள மாமாவோட சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்காளே!” என்றவளின் நினைவு அன்று மாங்காய் பறிக்க சென்ற போது நடந்தவைகளில் சென்று மீண்டது.

“இப்போ இது தான் அவங்க மனப்பிரச்சனையோட மூலம். ஒருசில நேரங்களில் அவங்க மனம் ரகுவ ராமனா பார்க்க வைக்கிறது. அதே மனம் கிருஷ்ணனாவும் உருவகப்படுத்துகிறது.

இன்னும் சொல்லப் போனா ராமனா அவங்க ரகுவ பார்த்த எந்த ஒரு இன்சிடன்டிலும் அவங்க வாய் பேசி இருக்காது. விழி மொழி மட்டும் தான், ஆம் ஐ கரெக்ட்?” எனும் போது ரகுநந்தனின் தலை “ஆம்” என ஆடியது.

நறுமுகையும் யோசித்துப் பார்க்கலானாள். முதன்முறையாக அவளை மாமரத்தில் இருந்து கீழே விழும் போது அவளை கீழே விழாமல் ரகுநந்தன் அவளை தாங்கும் போது அவள் இமைக்க மறந்திருந்தாள்.

அடுத்த முறை, அவனின் ஜானு என்ற அழைப்பில் மொத்த உலகத்தையும் மறந்து லாரி தன்னை நோக்கி வருவதையும் கவனிக்காமல் அவள் நின்ற கோலம் மனதில் வந்து போனது.

நேற்று அவனின் அறையில் அவர்களின் சிறுவயது புகைப்படத்தை அவள் வருடிக் கொண்டிருக்கும் போது அவன் பின்னிருந்து அணைக்கும் போது அவள் மறுப்பு தெரிவிக்கவே இல்லையே.

ஆம், அவளின் ராமனின் அருகாமையில் தன்னைத் தொலைத்திருந்தாள் ஜானகி.

“அதே நேரம் அவங்க செயல்கள்ள வேற ஏதாவது மாற்றங்கள் இருக்கா? அதாவது ரகுநந்தன தவிர, அவங்களோட நார்மலான வாழ்க்கை முறைல மாற்றங்கள் இருக்கா முகி?” என்றாள் நிர்மலா.

“இல்லை” என அவள் தலை வேகமாக ஆடியது. “அவ முதல்ல எப்படி இருந்தாளோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாள். அவள் வேலையிலும் சரி, வீட்டிலும் சரி வேறு எந்த மாற்றமும் அவளிடம் இல்லை” என்றாள் நறுமுகை.

“அப்போ உனக்கு ஏன் மிதிலா மாறிட்டதா சந்தேகம் வந்தது?” என வினவினாள் நிர்மலா.

“அவ மத்தவங்க முன்னாடி எப்பவும் போல நார்மலா இருந்தாலும் மாமா கூட இருக்கும் போது அவக்கிட்ட நிறைய மாற்றங்கள், அப்புறம் இப்பவும் அந்த போட்டாவ பார்த்து ‘நீ என்கிட்ட வருவ தான ராம்’ அப்படினு திரும்ப திரும்ப சொல்றா. மாமா வந்துக்கு அப்புறமும் அவ ஏன் இப்படி சொல்றா, அதான் எனக்கு புரியல” என்றாள் நறுமுகை.

“அதுக்கு பதில் உன் மாமா தான் சொல்லணும் முகி. ஏன்னா பதினாலு வருஷம் கழிச்சு அவ உன் மாமாவ ராமனா பார்க்கல, கிருஷ்ணனா பார்த்து இருக்கா. அதான் இப்போ பிரச்சனையே” என்றாள் நிர்மலா.

“அத நானே சொல்றேன்” என்றவன் கூறத் தொடங்கினான்.

கல்லூரி முதல் நாளன்று, நறுமுகையிடம் அட்வைஸ் மழை பொழிந்து விட்டு அலுவலக அறைக்கு சென்றாள் மிதிலா.

அங்கு தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் காண்பித்து முதல்நாள் வேலையில் சேர்ந்து தன்னுடைய கையொப்பத்தை அதற்கான நோட்டில் இட்டுக் கொண்டிருந்தாள்.

“ரகுநந்தன் சார்கிட்ட இந்த பைல கொடுத்துருங்க சார்” என அவள் அருகில் இருந்த ஒருவர் கூற,

“அதோ, ரகுநந்தன் சாரே வந்துட்டாரு. அவர்கிட்ட நீங்களே கொடுத்துருங்க” என மற்றொருவர் கூற, ‘ரகுநந்தன்’ என்ற பெயரில் சட்டென திரும்பி பார்த்தாள் மிதிலா.

அங்கே, வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற கீழ்சட்டையும் அணிந்திருக்க, அவன் கரங்கள் கேசத்தை கலைத்துக் கொண்டிருக்க தன் நண்பனுடன் இதழ்களின் புன்னகை உறைய பேசியவாறே வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்ட மிதிலாவின் விழிகள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியில் விழித்தும் கொண்டிருந்தது.

அவனின் புகைப்படத்தை தினமும் பார்ப்பவளாயிற்றே அவள். இந்த பதினான்கு ஆண்டுகளில் அவனிடம் சில மாறுதல்கள் இருந்தாலும் அவள் மனதில் பதிந்த அவனின் உருவத்தை அடையாளம் கண்டு கொண்டாள்.

மீசை இல்லாமல், வழுவழுப்பான கன்னங்களோடு இருந்தவன் இன்று அளவான மீசையும், ஷேவ் செய்திருந்த அந்த வழவழப்பான கன்னங்களையும் தாண்டி அவனின் அலைஅலையான கேசங்கள் முன் நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருக்க அதனை அவனின் கரங்கள் விலக்கியவாறே அவன் இதழில் கண்ட உறையும் புன்னகையும் அவளை மொத்தமாய் சாய்த்திருந்தது.

“ராம்…” என அவள் உதடுகள் முணுமுணுத்த வேளை அவள் அருகில் வந்திருந்தனர் ரகுநந்தனும் சிரஞ்சீவியும்.

அவர்கள் பேசிக் கொண்டது அவளின் காதிலும் விழுந்தது. அப்பொழுது சிரஞ்சீவி, “ஏன் டா உன்கிட்ட ஏதோ நம்ம டிபார்ட்மெண்ட்க்கு வந்திருக்கிற புது ஸ்டாப் கீதா ரொம்ப ஜொல்லு விடுதாமே!” எனக் கேட்க,

இவனோ, “இதெல்லாம் சகஜம் தான டா…” என்றவன், தன் கையில் இருந்த புத்தகம் ஒன்றை அங்கிருந்த மேஜை மீது வைத்துவிட்டு திரும்ப, சிரஞ்சீவியோ, “உனக்கு என்ன டா கிருஷ்ணன் வாழ்க்கை” என முதுகில் தட்டியவன்,

“சரி, வெய்ட் பண்ணு. நான் போய் ரெஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு வரேன்” என்றவன் கிளம்ப, அவனின் வார்த்தைக்கு இவனிடம் வெறும் புன்னகை மட்டுமே பதிலாக வர, அந்த சம்பாஷணைகள் அருகே நின்றிருந்த மிதிலாவின் காதிலும் விழுந்தது.

அப்பொழுது தான் அவள் புத்தியில் உரைத்தது. தான் அவன்மேல் பைத்தியமாய் இருப்பது போல் அவனும் தன்மேல் காதல் கொண்டிருப்பான் என்ற தன் ஆசை எவ்வளவு பெரிய அபத்தம் என்று!

அவள் கண்களில் வெறுப்பை சுமந்து நிற்க, அவள் அருகில் வந்தவனுக்கோ ஏதோ தோன்ற அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் கண்களில் வெறுப்பை சுமந்து நிற்க, ஒன்பது வயது குட்டி மிதிலாவை அவனுக்கு ஞாபகப்படுத்தின. அதே நேரம், அவள் அருகே வந்த ஒருவள், “நீங்க நியூ ஜாயினி தான. மிதிலா?” என கேள்வியுடன் நோக்க,

“ஆமா மேம்…” என்றவள் அதே வெறுப்புடன் அவனைப் பார்த்து முறைத்தவளின் விழிகள் ‘இன்னும் நீ கிருஷ்ணன் தான!’ என்ற கேள்வி அவனை நோக்கிப் பாய்ந்தது.

அவன் அவளிடம் பேச வருவதற்குள், அவள் அந்த இடத்தில் இருந்து கிளம்பி இருந்தாள்.

அவன் மனமோ “என் ஜானு கிடைச்சுட்டா” என குத்தாட்டம் போட்டாலும், ‘இந்த வெறுப்ப தான என்கிட்ட முதன்முதலா காட்டினா. அட கடவுளே, இப்போ திரும்பவும் முதல்ல இருந்தா!’ என மனதினுள் அதிர்ந்தான்.

அதே யோசனையுடன் அவன் தங்கள் டிப்பார்ட்மெண்டிற்கு செல்ல, அங்கே நறுமுகையும் மிதிலாவும் பேசுவதைக் கண்டான்.

அவன் அமைதியாக அங்கேயே நின்றுவிட, தன் தங்கையிடம் பேசிவிட்டு அவள் எதிரே இருந்த விலங்கியல் துறைக்குள் நுழைய அதனைக் கண்டவனிம் மனம் இறக்கை இல்லாமல் பறந்தது.

தன்னைப் போலவே தன்னவளும் தனக்காக தான் காத்திருக்கிறாள் என்று அந்த விலங்கியல் துறை கூறியது போல் இருந்தது அவனுக்கு. தனக்கு பிடித்தமான பாடத்தில் அவள் மேற்படிப்பு படித்துள்ளாள் என்பதே அவனுக்கு அவளின் காதலை பறைசாற்ற போதுமானதாக இருந்தது.

நறுமுகையைப் பார்த்தவுடன் அவளின் தங்கையாக தான் இருக்கும் என்றே அவன் கணிக்க, அவளை அழைத்ததும் அவளும் நறுமுகை என்ற பெயரைக் கூறவும் அவன் மனம் அறிந்தது பதினான்கு ஆண்டு தேடலுக்கு இன்று பதில் கிடைத்ததை.

அதன்பின் நறுமுகையை அவள் வகுப்பில் விட்டுவிட்டு தற்பொழுது எதனை சாக்காக வைத்து விலங்கியல் துறைக்கு செல்லலாம் என அவன் யோசித்து அவன் அங்கு வருவதற்குள் அவனைக் கண்டவள், எழுந்து வெளியே கிளம்பினாள்.

அதன்பின் தான் ஒவ்வொரு இடத்திலும் அவன் ராமன் தான் என அவளுக்கு நிரூபிக்க முயன்றாலும், அவள் மனதில் கிருஷ்ணனாக அவதரித்ததை அவனால் மாற்ற இயலாமல் போய்விட்டது.

அவள் ஏன் தன்னை வெறுப்பாக பார்க்கிறாள் என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு, அன்று அவள் பூங்காவில் வைத்து கூறியதைக் கேட்டவுடன் தான் நிலைமையை புரிந்து கொண்டான்.

“உங்களுக்கு தான் எப்பவும் உங்கள சுத்தி கோபியர் கூட்டம் நிக்குமே! இந்த ஜானுலாம் கண்ணுக்கு தெரிவனா?” என்ற அவள் கோபத்தின் வீரியம் புரிந்தது.

‘அடேய், சிரஞ்சீவி ராமருக்காக சீதாதேவிவ இலங்கைல கண்டுபிடிச்சது அந்த அனுமன் தான். ஆனால் என் வாழ்க்கைல மட்டும் நீ என்கிட்ட இருந்து என் ஜானுவ பிரிக்க வந்துட்டியே டா’ என அவன் மனம் ஓலமிட,

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு அனைத்தும் புரிந்தது இத்தனையும் தன்னால் தான் என்று!

ஆனால் தன் நண்பன் இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் கூறாதது மனதில் பாரத்தை ஏற்றியது.

“ஸாரி டா ரகு, அன்னிக்கு நான் விளையாட்டா சொன்னது இப்படி சீரியஸ் ஆகும்னு நினைக்கல” என மனம் வருந்தி கூறியவனைக் கண்டு,

“இல்ல டா. உன்மேல எந்த தப்பும் இல்ல, அவ கிருஷ்ணாங்கிற பேர் மேல வெறுப்பா இருக்கிறத நான் தான் கேர்லஸ்ஸா விட்டுட்டேன். அப்பவே அத அவளுக்கு நான் புரிய வச்சுருந்தனா இப்போ இந்த கஷ்டம் எனக்கு வந்திருக்காது. என் தவறுக்கு கிடைத்த தண்டனை தான் இது, இனி கண்டீப்பா இந்த தவற திரும்ப பண்ண மாட்டேன்” என்றான் ரகுநந்தன்.

நறுமுகைக்கு அனைத்தும் புரிந்து போனது. ஆனால் ஒன்று மட்டுமே அவள் மனதில் உறுத்தத் தொடங்கியது.

அவளின் குழப்பமான முகத்தைக் கண்ட நிர்மலா, “இன்னும் என்ன குழப்பம் முகி?” என்றாள்.

“அக்கா சின்ன வயசுல கிருஷ்ணாவ வெறுத்தா ஓ.கே, ஆனால் அவ இப்போ ஒரு பிரபஸர். இருபத்தி நாலு வயசு, நல்லது கெட்டத புரிஞ்சுக்கிற வயசு. ஆனா அவ இன்னும் ஏன் அதே வெறுப்ப சுமந்துக்கிட்டு இருக்கா?” என்றாள் நறுமுகை.

“மனசுக்கு எப்பவும், தான் டாக்டரா இல்ல ஆசிரியரானுலாம் புரியாது முகி. அவங்க ஒரு நல்ல ஆசிரியரா இருந்தாலும் அவங்க காதல்னு வரும் போது அது மொத்தமா அவங்கள மாற்றி விடுகிறது. அப்போ இது மனசுக்கு புரியாது, புரிஞ்சுக்கவும் முயற்சி பண்ண மாட்டாங்க. அதோட விளைவு தான் ரகுநந்தன் கிட்ட மட்டும் தன்னோட கோபத்தையும் சரி, காதலையும் சரி. அவன்கிட்ட மட்டும் காட்டுறாங்க” என்றாள் நிர்மலா.

“காதலுக்கு கண்ணில்லைனு தான் சொல்வாங்க. ஆனா, இது…” என மேல கூற முடியாமல் அவள் பார்க்க,

“இதான் அவ என்மேல வச்ச காதல் முகி. காதல்னா என்னனே தெரியாத வயசுல வந்த காதல் மட்டுமல்ல எனக்காக பதினாலு வருசம் காத்திருக்காளே என் ஜானு. இந்த காதலுக்கு நான் தகுதியானவனானு தெரியல, ஆனால் காலம் முழுக்க அதே அளவு அவமேல காதல காட்ட முடியும்” என்றவனைப் பார்த்த நறுமுகைக்கு இவர்களின் காதலை என்னவென்று சொல்ல என்று தெரியாமல் முழித்தாள்.

“எல்லா குழப்பமும் தீர்ந்துருச்சா…” என்றாள் நிர்மலா.

அப்பொழுது சிரஞ்சீவியோ, “ஒரு சின்ன விசயத்துக்காக இவ்ளோ கோபப்பட முடியுமா?” என்றான்.

“ஏன் முடியாதுங்க! முடியும். நம்ம ஒருத்தவங்க மேல கண்மூடித் தனமான காதலையும் நம்பிக்கையும் வச்சு இருந்தா அவங்க பண்ற சின்ன செயல்ல கூட அதிக காதல பார்ப்போம். அதே அளவு, சின்ன தவறுல கூட அதிகளவு வெறுக்கவும் செய்வாங்க. இங்க அந்த தவறோட அளவு முக்கியம் இல்ல, அந்த இடத்துல உள்ள காதல் தான் முக்கியம். அத புரிஞ்சுக்கிட்டா லைப் பார்ட்னர எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டாங்க” என்றாள் நிர்மலா.

மூவருமே ஒரு மோகன நிலையில் இருக்க அதனை கலைத்தது மீண்டும் நிர்மலாவே தான்.

“போதும் டா ரகு. ஏற்கெனவே உன் காதல கேட்டு நான் ஒரு வழி ஆகிட்டேன். இதுக்கும் மேல நம்ம இதப்பத்தி பேசுனோம் அப்புறம் என்னை ஒரு சைக்காலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போக வேண்டிய நிலை வந்துரும்” என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,

அவளின் கூற்றில் புன்னகைத்தவர்கள், “இப்போ அக்காவ எப்படி இதுல இருந்து மீட்கிறது?” என்ற நறுமுகையை பார்த்து,

‘திரும்பவுமா…’ என நினைத்தாலும் கூறத் தொடங்கினாள் நிர்மலா.

“இதுக்கு ஒரே தீர்வு ரகுநந்தனோட காதல் தான். அவன் உன் அக்கா மேல வச்சுருக்கிற காதல அவங்க உணரனும். அத எப்படி உணர வைக்கப் போறானு உன் மாமன்கிட்ட தான் கேட்கணும் முகி” என்றாள் நக்கலான தொனியில்.

“என் ஜானு சின்ன வயசுல எப்படியோ அப்படியே தான் இப்பவும் இருக்கா. அவள மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இன்னும் அவ நட்பு வட்டம் கூட மாறல” என்றவனின் இதழ்கள் சில்வண்டை நினைத்து புன்னகையில் விரிந்தது.

“காதல் முத்திப் போச்சு டா உனக்கு” என நிர்மலா கிண்டல் பண்ண, சிரஞ்சீவியோ குற்றவுணர்ச்சியில் தவித்தான்.

தன்னால் தான் பதினான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்த இருவரும் இப்பொழுது முட்டிக்கொண்டு நிற்கிறார்களே எனத் தோன்றியது. அதுவே அவன் குற்றவுணர்வை அதிகரித்தது.

தன் நண்பனைக் கண்ட ரகுநந்தன் அவனின் எண்ணவோட்டத்தையும் புரிந்து கொண்டு, “கண்டதையும் யோசிக்காத டா. ஏதோ ஒரு விதத்துல எனக்கு நல்லது தான் பண்ணி இருக்க டா. அவ இன்னும் அந்த வெறுப்ப சுமந்துக்கிட்டு இருக்கானு இதன் மூலம் தான் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அதுவே ஒரு விதத்துல நல்லது தான், எங்க வாழ்க்கை இது தெரியாம ஆரம்பிச்சு இருந்தாலும் இன்னும் சிக்கல் தான். சோ, நீ தேவையில்லாம கில்டியா ஃபீல் பண்ணாத” என தன் நண்பனை அணைத்துக் கொள்ள,

“சாரி டா…” என்றவனை ஓங்கி முதுகில் ஒரு போடு போட்டான் ரகுநந்தன்.

“மூடிட்டு வா… ஏதாவது சொல்லிற போறேன்” என்றவன், நிர்மலாவிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர்.

“குழப்பம் எல்லாம் முடிஞ்சுதா கண்ணம்மா” என ரகுநந்தன் வினவ,

“ம்…” என தளையாட்டியவள், “ஆனா… நீங்க எப்படி அவள சமாளிக்க போறீங்க?” என்றாள் நறுமுகை.

“ஆங்கிலத்துல ஒரு பழமொழி கேட்ருக்கியா முகி, விருப்புக்கும் வெறுப்புக்கும் அதிக இடைவெளியில்லை அப்படினு ஒரு பழமொழி இருக்கு. அதே தான் இங்கயும், உன் அக்காவோட விருப்பும் வெறுப்பும் ரெண்டுமே என்மேல தான். அத காதலா மாத்தற சக்தி என்கிட்ட இருக்கு. இனி நான் என்ன பண்ணாலும் அது அவளோட நல்லதுக்குனு நினைச்சுக்கோ” என்றவன்,

ஆட்டோ ஒன்றை பிடித்து, “பார்த்து போ முகி. உன் அக்கா கண்டிப்பா உன்னை எங்க போனனு கேட்பா, ஏதாவது சொல்லி சமாளிச்சுரு” என்றவன், “வீட்டுக்கு போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு” என்றவன், அவள் கிளம்பியபின் தன் நண்பனுடன் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு கிளம்பினான் ரகுநந்தன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்