369 views
அத்தியாயம் 20
தாயின் அன்பான வார்த்தைகள் அற்புதம் செய்து விட்டதால், கொஞ்சம் தெளிவு கிடைத்து விட்டது அவனுக்கு.
அதன் பிறகு, தானே ஹரீஷிடம் நடந்ததைக் கூறி விடுவதாக ரோகினியிடம் சொல்லி இருந்ததால், அவனை நேரில் பார்த்து உரையாடக் கோவர்த்தனன் கிளம்பிச் சென்று விட்டதால், அவர் மட்டுமே வீட்டில் தனித்திருந்தார்.
அந்த சமயத்தில் தான், சுமதியின் செல்லிற்குக் கால் செய்து காத்திருந்தார் சிவசங்கரி.
செல் அடித்த சத்தம் கேட்டு, அதைக் கைப்பற்றி ‘யார் அழைப்பது? ‘என்று பார்த்து விட்டு, காதில் வைத்தார்.
“ஹலோ..”
“நான் சிவசங்கரி பேசறேன்ங்க”
சுமதி,”சொல்லுங்க சங்கரி”
“இன்னைக்கு..” சுபாஷினி மயங்கி விழுந்த விஷயத்தைக் கூறி முடித்திருந்தார் சிவசங்கரி.
“அச்சோ..! பிள்ளைக்கு இப்போ பரவாயில்லையா ங்க? “
“ரெஸ்ட் எடுக்குறா, ங்க”
“கோவர்த்தனனும் சொல்லிட்டான் ங்க.அதோட அவனும் , உங்கப் பொண்ணும் பேசினதையும் சொன்னான்”
மகன் தன்னிடம் பகிர்ந்த விஷயங்களை சிவசங்கரியிடம் கூறினார்.
சிறு யோசனைக்குப் பிறகு,
“அவளோட முடிவு, சம்மதம் தான்னு நான் சொல்லிட்டேன் ங்க.அதனால் அவ சொல்றது தான் எனக்கும் முடிவு. சின்னவ சரி ஆகட்டும்னு இருக்கோம்”
“புரியுது ங்க.சின்னப் பொண்ணு சரியாகட்டும்.இளந்தளிரும் நிதானமா முடிவெடுக்கட்டும்.” அவர் பொறுமையாகப் பேசியது சிவசங்கரிக்குமே ஆறுதல் அளித்தது.
உரையாடல் முடிந்து ,செல்பேசியை அணைத்ததும்,சிவசங்கரி மகளிடம் வந்து,
“அவங்க ஒன்னும் நினைச்சுக்கல இளா”என்று விஷயத்தைச் சொன்னார்.
அதில் நிம்மதியுற்றவள்,” அவர் நமக்கு செலவு பண்ணினப் பணத்தைக் குடுக்கனும் அதையும் கேளுங்க ன்னு சொல்ல நினைச்சேன் மா”
“தரகர் கிட்டக் கேட்டு சொல்லி அனுப்பி விட்டுடலாம்” – சிவசங்கரி.
அந்தப் பண விஷயமும் சரியாகி விட்டதால், தற்போது இருக்கும் சூழலின் கனம் குறைந்து மாற்றத்தை சுவீகரிக்க அவளது உள்ளம் துடித்தது.
🌺🌺🌺🌺🌺
“அப்பறம் ஏன்டா உன்னைப் பொண்ணுப் பாக்க வர சொன்னாங்க?” – ஹரீஷ்.
கோவர்த்தனன் அவனை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டு இருக்க,
“சொல்லுடா? நீ தான் மாப்பிள்ளை – ன்னுத் தெரியும் தான? அப்போவே வேணாம்னு சொல்லி இருக்கலாமே?”
“நான் அவங்களை லவ் பண்றேன்னு வீட்ல சொல்லி, தரகர் மூலமா பொண்ணுப் பாக்க வர்றேனோ ன்னு டவ்ட் இருந்துச்சாம் டா அதை கிளியர் பண்ணிக்கிட்டாங்க, எனக்குமே அவங்க சொன்னதுப் புரிஞ்சுச்சு”
“புரிஞ்சுச்சா? டேய் அவங்க டவ்ட் கிளியர் பண்ணிக்கிறதுக்கு இந்த விஷயம் தான்
கிடைச்சுச்சா? நீ சொல்றதையெல்லாம் கேட்டதுக்கப்றம் அவங்களோட தப்பும் தெரியுதே? உன் நம்பரை வாங்கி அவங்களே இதைப் பேசி முடிச்சு இருக்கலாமே? இது வரைக்கும் இழுத்துட்டு வர்றதுக்கு அவசியம் என்ன?”
“இப்படியே விட்டுட நினைச்சு இருந்திருப்பாங்க.என் ஃபோட்டோ வந்ததும் அது என் வேலையா இருக்கும் ன்னுத் தோன்றவும், இவனை நாம இக்னோர் பண்றோமே! வீணாக ஆசையை வளத்துக்காதடா ன்னும், என் தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ணதோட உன்னோட பர்ஃபார்மன்ஸ் முடிஞ்சுருச்சு, இனிமேல் இப்படி பிஹேவ் பண்ணாத, செட் ஆகலன்னு சொல்லியாச்சு.நல்லா மண்டைலக் கொட்டாத குறையா தெளிவா சொல்லனும்ல, அதுக்காக
அந்தச் சந்தர்ப்பம் கிடைச்சுருச்சுப் பேசிட்டாங்க.தட்ஸ் இட் நண்பா!”
“அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.இப்போ உன் ஃபோட்டோ இல்லாம, மாப்பிள்ளை நீ இல்லாம வேற யாராவது வந்திருந்தா வேணாம்-ன்னு
மறுத்திருப்பாங்களா?”
“அதை அவங்க கிட்ட தான் கேக்கனும்.ஆனா எனக்கு ஒரு க்ளாரிட்டிக் கிடைச்சுருச்சுல்ல.தட்ஸ் ஃபைன் ” என்று பெருமூச்சொன்றை வெளியிட்டவனுடைய மனம் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளப் பழகிற்று.
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, “கோவர்த்தனா! சிவசங்கரியம்மா நம்மத் தரகர் மூலமா நீ ஹாஸ்பிடலுக்குக் கொடுத்தப் பணத்தை அனுப்பி விட்ருக்காங்க”சுமதி கூறவும்,
இனிமேல் இதைத் தொடர தனக்குப் பிரியமில்லை என்பது போல்,
” அவங்கக் கடனாளியா இருக்க விரும்பல ம்மா. அதான் பணத்தைக் குடுத்துட்டாங்க ”
அவனுடைய இந்த பதிலைக் கேட்டு,
“அப்படியே இருக்கட்டுமே! ஆனால் கல்யாணம்? ”
கோவர்த்தனன், ” எனக்கு எந்த முடிவும் ஓகே ன்னு தான் இப்போ வரைக்குமே இருந்தேன் ம்மா. ஆனால் இதுக்கப்றமும் நான் எதுவும் எதிர்பார்க்கல. அவங்களுக்கு வேணாம்னா எனக்குமே இஷ்டம் இல்லம்மா. வாங்க சாப்பிடலாம்”
சிவசங்கரி தன் சின்ன மகளின் இன்றைய நிலையைக் கூட சொல்லாமல் விட்டிருக்கலாம், ஆனாலும் அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்றால், அவருக்கு கோவர்த்தனன் மாப்பிள்ளையாக வருவதில் தயக்கம் இல்லை போலும்.
தனது பெண்ணின் விருப்பம் தான் என்று கூறியிருந்தாரே!
இப்போது தன் மகனின் கூற்றைக் கேட்டதும் விருப்பமில்லாதவர்களைத் திருமணப் பந்தத்தில் இணைத்தால் அவர்களது வாழ்வு கெட்டு விடும் என்று தெரிந்திருந்ததால், காலத்தின் போக்கில் இதை விட்டு விட்டார்.
இவ்விஷயத்தைப் பேசி மகனுக்குத் தொந்தரவு அளிக்காமல், இருப்பதே இப்போதைக்கு அவனுக்கு நல்லது என்று உணர்ந்து கொண்டார்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சில வாரங்களுக்குப் பிறகு,
“காட்டுத்தீ! வேற எதுவும் ஆர்டர் பண்ணவா? ” – கோவர்த்தனன் நண்பன் ஹரீஷிடம் சொன்னான்.
இருவரும் உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
“இல்லடா.இதுவே போதும். ஈவ்னிங் டைம் வேற. அதிகம் சாப்பிடக் கூடாதுல்ல”
முன்னொரு சமயம் கோவர்த்தனன் நண்பனுக்கு ட்ரீட் வைப்பதாகச் சொன்னானே அதை இன்று செயலாற்றி உள்ளான்.
“அதெல்லாம் ஏன்டா யோசிக்கிற? நாளைக்கு லீவ் தான! அப்பறமென்ன? நல்லா சாப்பிடு” – கோவர்த்தனன் அவனுக்கு உபசரிப்பில் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டான்.
” உன் பாச மழையை நிறுத்து டா ” என்று கிண்டலடிக்க,
” அங்க…! ” என அவனுக்குப் பின்னால் கை காட்ட,
அங்கே இளந்தளிரும், சுபாஷினியும் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பார்த்து விட்டு, ஒன்றும் அறியாதவன் போல,
“அங்க என்ன?”
“இளந்தளிர்…”என்று தயக்கத்துடன் கூறி, பின்பு அவனே,
” கேட்க நிறைய விஷயம் இருக்கே! போய்க் கேளுடா. இல்லனா மனசு உறுத்திட்டே இருக்கும்ல”
” எனக்கு மனசு எதுவும் உறுத்தலடா. கேட்கவும் ஒன்னுமே இல்லை. அரங்கப் பணத்தையும் அனுப்பி விட்டுட்டாங்களே! அதுக்கு மேல கேட்க என்ன இருக்கு? “
” அடேய் நண்பா! இது எப்போ?” – ஹரீஷ்.
“ம்ம்…அன்னைக்கு அவங்க வீட்ல நடந்ததை உங்கிட்டப் பேசிட்டு வீட்டுக்குப் போனேன்ல.உள்ளே நுழைஞ்ச உடனேயே அம்மா சொன்னாங்க”
இவர்களுக்கு அடுத்து இருந்த டேபிளில் அமர்ந்த சகோதரிகள் இருவரும் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டே, தங்களுக்கான உணவைத் தருவித்து உண்ணும் வேலையைச் செய்தனர்.
இவர்களது கவனம் உணவிலும், பேச்சிலும் இருந்ததால், எதிரே அமர்ந்திருக்கும் ஹரீஷைக் கவனிக்கவில்லை.
கோவர்த்தனன் எப்போதும் போல இருக்கிறான் என்றால், சகோதரிகளோ அவர்கள் அங்கிருப்பதைக் கூட அறியாமல் உணவைச் சுவைத்தனர்.
சுபாஷினியின் மன மாற்றத்திற்காக வீட்டினர் அவ்வப்போது அவளை வெளியே அழைத்துச் செல்வதும், வீட்டில் விருப்பமான பதார்த்தங்களைச் செய்து கொடுப்பதும் வழக்கமாகி இருந்தது.
நீரை அருந்திய சுபாஷினி இப்போது எதேச்சையாக எதிர் திசையைப் பார்க்க,
ஹரீஷின் வதனம் தெரிந்தது.
“ஹரீஷ் அண்ணா ! ” என்று சத்தமாக சொல்லப் போனவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கி மறைந்தது.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும், அவளாக எதையும் இழுத்து விட்டு விடக்கூடாது என்றும், தனக்காக அம்மாவும், தமக்கையும் சிரமப்படுவதைக் கண்டும் தன்னைக் கடிந்து கொண்டு, வந்த வேலையை மட்டும் பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் இவள் முணுமுணுத்துப் பேசியதைக் கேட்ட இளந்தளிர்,
“என்னது சுபா? ஏதோ சொல்ல வந்த?”
“ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ண மறந்துட்டேன்னு சொல்ல வந்தேன் க்கா”
“இப்போ ஆர்டர் பண்ணு சுபா. நாம இன்னும் சாப்பிட்டு முடிக்கலைல” என்று இவள் கூறவும்,
“சரி க்கா” – சுபாஷினி ஐஸ்க்ரீமை ஆர்டர் செய்தாள்.
கோவர்த்தனன், “நண்பா! தந்தூரி சிக்கன் செம டேஸ்ட் டா.இந்தா!” என்று பரிமாறினான்.
அந்த நிமிடம் வரைக்குமே கோவர்த்தனனின் பார்வை இளந்தளிரிடம் செல்லவே இல்லை.உணவை உண்பது , இவனது தட்டில் பகிர்ந்தளிப்பது என்பதை மட்டும் செய்து கொண்டு இருந்தான்.
“வாவ்! நல்லா இருக்குடா!” என ஹர்ஷூமே சுவைக்க,
அங்கே, இளந்தளிர் சாப்பிட்டு முடித்துக் கை கழுவுவதற்காக இவர்கள் புறம் திரும்பும் பொழுது நண்பர்கள் இருவரையும் பார்த்து விட்டாள்.
ஹரீஷ் தனக்கு நேராக அமர்ந்திருக்கிறான் என்றால், முதுகு காட்டி அமர்ந்திருப்பது கோவர்த்தனன் ஆகத் தான் இருக்க வேண்டும் என்று அவதானித்தாள்.
ஹரீஷ் இவளைப் பார்த்தாலும், சாதாரணமாகத் திரும்பிக் கொள்வது போல, வேறு திசையில் பார்வையை மாற்றிக் கொண்டான்.
இளந்தளிர் இதை எதிர்பார்த்தாள் தானே!
அவளுமே ஒன்றும் நிகழாதது போல், கை கழுவி விட்டு வரும் பொழுது, கோவர்த்தனனது பார்வையை நேருக்கு நேராக சந்திக்க நேர்ந்தது.
யாரோ முன் பின் அறியாதவரைப் பார்ப்பது போலான பார்வையைச் செலுத்திய கோவர்த்தனன் தட்டில் இருந்த உணவு முழுவதும் காலியானது கண்டு, பேரரை அழைத்து,
“சிக்கன் பிரியாணி” என்று ஆர்டர் செய்தவன்,
மிச்சமிருக்கும் சூப் – யை காலி செய்தான்.
இவர்கள் இருவரையும், கோவர்த்தனனின் செயலையும் பார்த்த ஹரீஷ் மற்றும் சுபாஷினி அடுத்து என்ன? என்று ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், கோவர்த்தனன் உணவை விழுங்க, இளந்தளிர் கைக்குட்டையால் கையைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று இருக்கைக்கு வந்தாள்.
“நிறைய சாப்பிடப் போறேன்” பிரியாணியை வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தான் கோவர்த்தனன்.
“எனக்கு டபுள் சாக்லேட் கோன் தான ஆர்டர் பண்ணுன?” – இளந்தளிர்.
“ஆமா க்கா.”
இளந்தளிர் தன் அன்னை சிவசங்கரிக்குக் கால் செய்து,
“கிளம்பப் போறோம் மா.உங்களுக்குப் பார்சல் வாங்கிட்டு வரட்டுமா?”
சிவசங்கரி,”பிரியாணியே வாங்கிட்டு வாங்க. வேறெதுவும் வேணாம். சுபா சாப்பிட்டாளா?”
“சாப்பிட்டுட்டு , ஐஸ்க்ரீம் சாப்பிட்றா ம்மா”
“பத்தரமா வாங்க” என்று அழைப்பு வைக்கப்பட்டதும், தானும் பனிக்கூழைக் காலி செய்து விட்டு, பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
இதைக் கண்டு கொள்ளாமல், தன்னுடைய பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான் கோவர்த்தனன்.
ஹரீஷிற்கு , அவன் மீதிருந்த ஒரு சதவிகிதம் சந்தேகம் கூட இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனது.
‘பணம் அனுப்பப்பட்டதை அறிந்திருப்பான் தானே? அதை ஏன் அவன் கேட்கவில்லை?’
இளந்தளிரின் இதயத்தில் சிறு வலி தோன்றி மறைந்ததென்றால்,
‘ஒன்றும் வேண்டாம் என்று பணத்தையும் அனுப்பி வைத்தப் பிறகு, வேறெந்தப் பேச்சிற்கும், ஏன் புன்னகைக்குக் கூட இடமில்லை’ என்றது கோவர்த்தனனின் மனம்.
– தொடரும்