212 views

அத்தியாயம் 20 

தன்னுடைய அடியாளான பாரத் அனுப்பிய இடத்தைப் பார்வையிட்டான் பிரித்வி.

அது சரியாக எங்கு உள்ளது? எத்தனை தூரப் பயணம்? பாதுகாப்பானதா? என்பவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து விட்டு, அதையும் விவரமாக தன் முதலாளிக்கு
அனுப்பி வைத்திருந்தான்.

உடனே அவனுக்கு அழைத்த பிரித்வி,
“பாரத்! இந்த இடம் பெர்ஃபெக்ட் ஆக இருக்கு. நானும், தன்வந்த்தும் இங்கேயே மீட் பண்றோம்! நான் தன்வந்த் கிட்ட பேசிட்டு கூப்பிடறேன்” என்றான்.

அது மட்டுமில்லாமல், வீட்டிற்குச் செல்வதை தள்ளிப் போட்டவன், காரின் உள்ளே இருந்தபடியே தன்வந்த்திற்கு அழைப்பு விடுத்தான்.

மாடியறையில் தன்னுடைய மடிக்கணினியில் வேலையாக இருக்கும் போது, தன் செல்பேசி ஒலிப்பதைக் கேட்டு அதை எடுத்துப் பார்த்தான் தன்வந்த்.

‘பிரித்வி’ என்று அதில் பெயரைப் பார்த்தவன்,
” சொன்ன மாதிரியே கால் பண்ணிட்டானே!” என்று தன் தொழில் உலகப் போட்டியாளன்  அழைத்திருப்பதை சில மணித்துளிகள் பார்த்து கர்வமாக சிரித்தான் தன்வந்த்.

“ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது” என்று கூறிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

“ஹல்லோ பிரித்வி!” என்று பயங்கர நக்கலாகப் பேசினான்.

அதைக் கேட்டாலும் , கோபப்படும் நேரம் இதுவல்ல என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் பிரித்வி.

“தன்வந்த்! என் ஆள் உனக்குக் கால் செய்திருந்தானே! எல்லாம் கேட்டிருப்ப! அதனால், நான் மறுபடியும் சொல்ல வேண்டியது இல்லை” என்றதும்,

“ஆஹ்ஹா!! கேட்டேனே! ஆனால் உன் வாயாலேயும் ஒரு தடவை கேட்கனும் போல இருக்கே பிரித்வி!” என்று வேண்டுமென்றே இவனைச் சீண்டிப் பார்த்தான் தன்வந்த்.

“சரி…நான் உன்னை மீட் பண்ணனும்.நான் சொல்ற இடத்துக்குத் தான் நீ வரனும்.உனக்கு ஓகே யா?” என்று கேட்டான்.

“ம்ஹ்ம்!! அதென்ன மீட்டிங்கும் உன்னோட திட்டம்! இடமும் நீ தான் முடிவு பண்ணுவ! நான் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாக வரனுமா?” என்று எரிச்சலாக கேட்டான்.

“ஓகே தன்வந்த்.நீயே இடத்தை முடிவு பண்ணு. எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை” என்று அமைதியாக கூறினான் பிரித்வி.

நியாயமாக தன்வந்த்தின் மீது பிரித்விக்குத் தான் கோபமும், ஆத்திரமும்   வர வேண்டும். ஏனெனில், கோழை போல தன்னை விபத்துக்குள்ளாக்கி விட்டு இன்னும் அதற்கான தண்டனையை அனுபவிக்காமல், சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான். அதையே இன்னும் வட்டியும் முதலுமாக வசூலிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறான். அதை நினைத்துப் பார்க்காமல் ஏக வசனத்தில் பேசி, பிரித்வியை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான் தன்வந்த்.

“நான் பார்த்துட்டு உனக்கு லொகேஷன் அனுப்புறேன் பிரித்வி” என்று அலட்சியமாக கூறி அழைப்பை வைத்தான்.

அவன் பேசியதைக் கேட்டு மண்டை சூடாகிப் போய்ப் பற்களைக் கடித்துக் கொண்டான் பிரித்வி.

🌸🌸🌸

‘கணவன் செய்வது தவறு’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்த அதிரூபாவின் மனமோ, உண்மையில் அவன் தவறு செய்தானா? என்பதை அன்றிலிருந்து இன்று வரை ஒருமுறை கூட பரிசோதனை செய்து பார்க்கவே இல்லை.

அந்த நேரத்தில் தான் அதிரூபாவிற்கு அவளது நெடுநாளைய தோழி யாஷிகாவிடம் இருந்து கால் வந்தது.

“யாஷ்!”

“ரூபா!” என்று இரு தோழிகளும் தங்களது மகிழ்ச்சியைக் குரலில் பரிமாறிக் கொண்டனர்.

“எப்படி இருக்க?” என்று விசாரித்தாள் யாஷிகா.

“நான் நல்லா இருக்கேன். ஆமாம் உன்னை இவ்ளோ மாசமா ஆளையேக் காணோமே! எங்கே போன யாஷ்?” என்று கேட்டாள் அதிரூபா.

“வீட்டில் சொத்துப் பிரச்சினை ஆகி, அதுவே எங்களைக் கொஞ்சம் டயர்ட் ஆக்கிடுச்சு ரூபா! அதையெல்லாம் முடிச்சுட்டு , இப்போ தான் நாங்களும் திரும்பி வந்தோம்” என்று தன் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி நண்பியிடம் முழுமையாக தெரிவித்தாள் யாஷிகா.

“சொந்தக்கார ஆளுங்க இப்படியெல்லாமா இருப்பாங்க? கஷ்டம் தான் யாஷ். எப்படியோ கேஸில் உங்கப் பக்கம் நியாயமான தீர்ப்பு வந்துடுச்சுல்ல! அது போதும்!” என்றாள் அதிரூபா.

“உன் மேரேஜைத் தான் சீக்கிரம் நடத்திட்ட.நானும் வந்தேனா! கிஃப்ட் குடுத்தேனா! போனேனான்னு இருந்துட்டேன்.ஒன்னுமே என்ஜாய் பண்ணலை. இப்போ ரொம்ப நாள் கழிச்சுப் பேசியிருக்கோம். வேறெங்கயாவது மீட் பண்ணலாமா ரூபா?” என்று ஆசையாக கேட்டாள் யாஷிகா.

“போகலாமே யாஷ். நாமளும் நிறைய பேச வேண்டியிருக்கே!”என்று
மறுநாள்  தங்களுக்கான சந்திப்பை வைத்துக் கொள்ள முடிவெடுத்தனர் இருவரும்.

🌸🌸🌸

“நீங்களும், பிரித்வியும் சந்திச்சுக்கப் போறீங்களா?” என்ற கேட்டவாறே, கணவனுக்கு அருகில் வந்து நின்றாள் காஜல்.

“கேட்டுட்டியா? ஆமாம் காஜல்! அவன் தான் கால் பண்ணிக் கேட்டான். எனக்கு நோ பிராப்ளம். அதான் சரின்னுட்டேன்” என்றான் தன்வந்த்.

“இப்போ எதுக்கு இந்த மீட்டிங்?”என்று வினவினாள் மனைவி.

“தெரியலை! அவன் தான் கால் பண்ணிக் கூப்பிட்டு இருக்கான். போனால் தான் தெரியும் காஜல்” என்று மனைவியிடம் சொன்னான்.

“ப்ளீஸ் தன்வந்த். நீங்க கொஞ்சம் பொறுமையாகப் பேசனும்” என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டாள் மனைவி.

அவளை விசித்திரமாகப் பார்த்த தன்வந்த், “என்ன எனக்கு இப்படியொரு அட்வைஸ் பண்ற? நான் பொறுமையாக இருந்ததே இல்லையா என்ன?” என்று காஜலிடம் கேட்டான்.

“அப்படி இருந்து இருக்கீங்க! ஆனாலும்…” என்று தயங்கினாள்.

“என்ன சொல்ல வர்ற?” என்று அதிரடியாக அவளிடம் கேட்டான் தன்வந்த்.

“ரெண்டு பேரும் சண்டையை முடிச்சு விடுங்க” என்று மென்மையாக கூறினாள்.

அதற்கு கணவனோ, “அவன் தான் என்னை இன்சல்ட் பண்றா மாதிரி நிறைய பண்ணியிருக்கான். அதுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா?”என்று பொறுமையை வரவழைத்துக் கொள்ள முயன்றான்.

“நீங்க அவரைக் கொலை செய்ய முயற்சி பண்ணி இருக்கீங்களே! அது போதாதா?”

மனைவியின் கேள்வியில் துணுக்குற்ற தன்வந்த்,”இதுக்கு நான் வேற கேள்வி கேட்டுடுவேன். ஆனால் உன்னை நான் எப்போதும் சந்தேகப்பட மாட்டேன் காஜல்.எங்களுக்குள்ள இருக்கிறதை நீ மூளையில் ஏத்திக்காத!” என்று அவளுக்குத் தக்க பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கூறி விட்டான்.

அவனுடைய சொற்கள் தன்னை எந்தளவிற்குக் காயப்படுத்தியது என்பதை முகத்தில் காண்பித்தாலும்,
“நீங்க சந்தேகப்பட்ற அளவுக்கு நான் நடந்துக்கல ங்க! உங்க மேல இருந்த காதல் அப்பறம் அக்கறையில் தான் அதைக் கேட்டுக்கிட்டேன். அதுக்கு இப்படி  பதில் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கல” என்று வெளியேறி விட்டாள் காஜல்.

அவளது உதாசீனத்தை திகைத்துப் போய்ப் பார்த்து நின்றான் தன்வந்த்.

🌸🌸🌸

‘இப்போ தான் செக் பண்ணேன்.எங்கிட்ட காஜலோட நம்பரும் இருக்கு. அவளையும் வர சொல்லுவோமா ரூபா?’ என்ற யாஷிகா அனுப்பிய புலனச் செய்தியைப் பார்த்ததும்,

‘வர சொல்லு யாஷ்! அப்படியே எனக்கும் அவ நம்பரை அனுப்பு’ என்று தயக்கமின்றி பதிலளித்தாள் அதிரூபா.

‘இரு அவளுக்கு மெசேஜ் பண்ணிக் கேட்டுக்கிறேன்’ என்று செய்தியை அனுப்பி விட்டு,

காஜலின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் யாஷிகா.

தன்வந்த்தின் மீதிருந்த மனக்கிலேசத்தால் துவண்டு போயிருந்தவள், தன் செல்பேசியிலிருந்து வந்த அறிவிப்பைப் பார்த்தாள் காஜல்.

‘ஹாய் டி! அதிரூபா கிட்ட பேசினேன். உன்னோட நம்பர் கேட்கிறா! அவளுக்கு அனுப்பவா?’ என்று கேட்டிருந்தாள் யாஷிகா.

வெகு நாட்களுக்குப் பிறகு, யாஷிகாவின் குறுந்தகவல் மற்றும் அதிரூபாவிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது அதைத் தவற விட விரும்பவில்லை அவள்.

அதனால், ‘அனுப்பி விடு யாஷ். குரூப் கிரியேட் பண்ணு’ என்று அனுப்பினாள் காஜல்.

‘ஷ்யூர்!’ என்று அவளது எண்ணை அதிரூபாவிற்கு அனுப்பி விட்டு, தங்கள் மூன்று எண்களை உபயோகித்துப் புலனக் குழு ஒன்றை தொடங்கி விட்டாள் யாஷிகா.

‘இரு நாங்க முதல்ல தனியாகப் பேசிக்கிறோம்’ என்று அதிரூபாவின் எண்ணுக்குத் தனி குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘ஹாய் அதிரூபா!’

‘சூப்பர் ஹாய் காஜல்!’

கல்லூரியில் நடத்திய அத்தனைச் சண்டைகள் மற்றும் கோபங்களை எல்லாம் மறந்து நட்பு பாராட்டிக் கொண்டனர் இருவரும்.

சில பரஸ்பர உரையாடல்களுக்குப் பிறகு,
குழுப் பக்கம் தலை காட்டினர் காஜலும், அதிரூபாவும்.

மூவரும் சந்திக்கலாமா? என்று பொதுவாக வினவினாள் யாஷிகா.

ஏற்கனவே அதிரூபா அதற்கு ஒப்புக் கொண்டிருக்க , தனக்கும் மறுப்பு இல்லை என்று அனுப்பி வைத்தாள் காஜல்.

அவள் தான் தன்வந்த்தின் மனைவி என்பதை அறிந்திருந்தும் அதிரூபாவிற்கு அவளிடம் பேசுவது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் தன் கணவனை விபத்திற்கு ஆளாக்கியவன் மீது அதிகளவிலான கோபத்தில் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அதிரூபா.அவனால் தனக்கும் ஆபத்து தான்.எனவே, தற்போது அவளைச் சந்திப்பது தெரிந்தால், தன்வந்த் மற்றும் பிரித்வியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கூட தோன்றியது அதிரூபாவிற்கு.

காஜலுக்கும் அதே எண்ணம் இருக்கும் தானே? ஆனால் தன்வந்த் பேசிய ஈட்டி போன்ற வார்த்தைகளைக் கேட்ட பிறகு வீட்டிற்குள் முடங்கி இருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு.

அதேபோல, தன்வந்த்தைப் பற்றி அவளிடம் கூறி, தங்கள் கணவர் இருவருக்குமிடையேயான போட்டியை முடிவுக்கு கொண்டு வர அதிரூபாவிடம் உதவி கேட்கலாம் என்றும் நினைத்தாள் காஜல்.

🌸🌸🌸

இந்நிலையில், அதிரூபாவிற்கு தன் கணவன் பிரித்வி அவனது எதிரியான தன்வந்த்துடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறான் என்பது தெரியாது.

அதை மனைவியிடம் பகிர்ந்து கொள்வானா என்பதே கேள்விக்குறி தான்.

காரில் வீட்டை அடைந்த பிரித்வி, தனக்காக காத்திருந்த மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான்.

“நாளைக்கு நான் வெளியே போறேன்!” என்று கூறவும்,

‘ஒருவேளை வீட்டை விட்டுப் போகிறாளோ?’ என்று அவளை ஏமாற்றத்துடன் பார்த்தான் பிரித்வி.

“என்ன அப்படி பார்க்கிறீங்க? வீட்டை விட்டுப் போகல! காலேஜ் ஃப்ரண்ட்ஸை மீட் பண்ணப் போறேன்” என்று திட்டவட்டமாக கூறினாள் அதிரூபா.

“காலேஜ் ஃப்ரண்ட்ஸ்னா நம்ம கூட படிச்சவங்க தான?” என்று கூர்மையான குரலில் கேட்டான்.

“ஆமாம்.யாஷிகா அப்பறம் காஜல்!” என்று இரண்டாமவளின் பெயரை மட்டும் சற்று அழுத்திக் கூறினாள்.

அவள் பெயரைக் கேட்டதும் மனைவியை முறைத்துப் பார்த்த பிரித்வி,
“வேண்டாம் அதி. ஏற்கனவே சூழ்நிலை சரியில்லை. அதுவும் அவங்க தன்வந்த்தோட வொய்ஃப். உனக்குப் பாதுகாப்பு இல்லை” என்று எச்சரித்தான்.

அதற்கு அதிரூபாவோ, “உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற சண்டையை நீங்க எப்படியோ தீர்த்துக்கோங்க. நானும், அவளும் என்னப் பண்ணினோம்?” என்று கேட்டாள்.

“நீங்க எப்படி சகஜமாகப் பேசினீங்கன்னு புரியல.நேரில் மீட் பண்ணா இன்னும் சங்கடமாக தான் இருக்கும்.இதுக்கு எப்படி சம்மதம் சொன்னன்னு எனக்குத் தெரியல அதி!”

“நாங்க காலேஜில் நடந்ததை எல்லாம் மறந்துட்டோம் பிரித்வி. அதனால் தான் மீட் பண்றதுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல” என்று உறுதியாக கூறினாள்.

“ஓஹ்!! நான் சொல்வதைக் கேட்கவே மாட்ட! சரி இருக்கட்டும். நீ தான் என்னை நம்பவே இல்லையே!” என்று ஆற்றாமையுடன் கூறினான்.

அதை மனைவிக்கு ஞாபகப்படுத்தி விட்டு விட்டான். கணவனைப் பற்றிய சிந்தனைகள் யாவற்றையும் நிதானமாக யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவளுக்கு ,  அவனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்க நினைத்தாள்.

எனவே, “இதை இன்னொரு நாள் பேசிக்கலாம் பிரித்வி. நான் யோசிக்கனும்” என்று கூறினாள் அதிரூபா.

நொடித்துப் போன மனதுடன் அமைதியாக சென்று விட்டான்.

கணவன் அவனது எதிரி தன்வந்த்தைச் சந்திக்கப் போகிறான் என்பது முன்னரே அதிரூபாவிற்குத் தெரிந்து இருந்தால் அவனைத் தடுத்து தானும் காஜலைப் பார்க்கப் போயிருக்க மாட்டாளோ?

🌸🌸🌸

“நாளைக்கு ஃப்ரண்ட்டைப் பார்க்கப் போகனும்” என்றாள் காஜல்.

அவள் இறுக்கம் கொண்டிருப்பது தெரியவும்,
“யாரு? ஸ்கூல் அல்லது காலேஜ் ஃப்ரண்ட் ஆ?” என்று வினவினான்.

“காலேஜ் ஃப்ரண்ட்!இப்போ தான் சான்ஸ் கிடைச்சிருக்கு. பேசனும்”

“யாருன்னு கேட்டேன்?” என்று கேட்டவனிடம்,

“அதிரூபா” என அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தாள் மனைவி.

“பிரித்வியோட வொய்ஃப்!” என்று கண்கள் பளிச்சிடக் கூறினான் தன்வந்த்.

அதைக் கண்டதும், “அவளுக்கு உங்களால் அங்கே எந்த ஆபத்தும் வரக் கூடாது. நீங்க பிரித்வியை ஆக்ஸிடன்ட் பண்ணது தெரிஞ்சும் நான் அவளைப் பார்க்கப் போறேன்னா, எனக்கு அவகிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு.உங்களோட தொழில் சண்டையை எங்களுக்குள்ள கொண்டு வராதீங்க. நம்மப் பிள்ளையாவது அமைதியான சூழ்நிலையில் பிறக்கனும்” என்று வயிற்றில் கையை வைத்தாள் காஜல்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் பாய்ந்து சென்று, தானும் மனைவியின் வயிற்றில் கை வைத்து,”கர்ப்பமா இருக்கியா?” என்று ஆசையாக கேட்டான் தன்வந்த்.

“சரியாகத் தெரியல.ஹாஸ்பிடலுக்குப் போய்ச் செக் செய்து கன்ஃபார்ம் பண்ணனும்” என்றதும்,

“இதுக்காகவே நான் அதிரூபாவை எதுவும் செய்ய மாட்டேன்.போய் சந்தோஷமாகப் பேசிட்டு வா” என்று மனைவிக்கு அனுமதி அளித்தான்.

“தாங்க்ஸ்” என்று அங்கிருந்து சென்றாள் காஜல்.

நான்கு நாட்களாக காஜலுக்கு உடல் உபாதைகள் படுத்தி எடுப்பதால் இந்த முறை கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று வேறு வழியின்றி இதை வைத்து தன்வந்த்தை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறாள்.

திருமணம் ஆன பிறகு தனிக் குடித்தனம் வந்திருந்தனர். இப்போது காஜலுக்குத் தன் பெற்றோர் அல்லது தன்வந்த்தின் பெற்றோராவது உடனிருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.ஆனால் அது சாத்தியமில்லை என்பதும் அவளுக்குத் தெரியும்.

🌸🌸🌸

‘இந்த இடத்துக்கு வந்துடு பிரித்வி. பேச்சு வார்த்தைக்குத் தான் கூப்பிட்டு இருக்கிற. அதனால் மறைமுகமாக எந்த வேலையும் செய்ய மாட்டன்னு நம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்’ என்று நேரத்தையும் புலனத்தில் அனுப்பியிருந்தான் தன்வந்த்.

அதைப் பார்த்ததும், பாரத்திற்குக் கால் செய்து,”நான் உனக்கு வாட்ஸ்அப் செய்திருக்கேன் பாரு. அந்த இடத்தை உடனே போய் செக் பண்ணு. சிசிடிவி கேமராவைச் செக் பண்ணிடு.நான் சொல்ற வரைக்கும் எந்த தாக்குதலும் வேண்டாம். அவன் அப்படி எதாவது முயற்சி செஞ்சா மட்டும் யோசிக்காமல் சுட்டுடு” என்று உத்தரவு பிறப்பித்தான் பிரித்வி.

தன் மனைவி வரும் விஷயம் எப்படியும் தன்வந்த்திற்கும் தெரிந்து இருக்கும். அதனால், அதிரூபா செல்லும் இடத்திற்கும் அதிகளவிலான ஆட்களைப் பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்க ஆணையிட்டான்.

🌸🌸🌸

தோழிகளின் சந்திப்பும், எதிரிகளின் சந்திப்பும் ஒரே நாளில் நிகழப் போகிறது! இதில் எது நல்லபடியாக நடந்து முடியும்? அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்