Loading

அவர்களை சாப்பிட அழைக்க வந்த மிருதுளா வெளியே மறைந்திருந்து அவர்கள் உரையாடிதை முழுதாய் கேட்டு கண் கலங்கியிருந்தாள். அதிரன் அங்கு ஓடி வருவதை கண்டவள் அவனை அறைக்குள் செல்லும் முன் தடுத்து நிறுத்தினாள்.

 

    “அத்தை!” என்றவனை வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி கூறி அறையை சுட்டி காட்டினாள்.

 

    அறைக்குள் இருவரும் மெல்ல எட்டிப் பார்த்தனர். அழகி கதிரை அணைத்துக் கொண்டு அழுவதை கண்டு இருவரும் சத்தமிடாது அங்கிருந்து அகன்றனர்.

 

      கதிரை அணைத்திருந்த அழகி மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

 

   “நான் என்ன பண்றது கதிர்?”

 

    “நீ இப்ப பண்ணிக்கிட்ருக்கியே கொஞ்ச நேரம் அதையே எதுவும் பேசாம பண்ணு போதும்.” என அவன் மெலிதாக இதழ் வளைக்க, அவளோ அவனை முறைத்தாள்.

 

    “டேய் நான் சீரியஸா கேக்குறேன்.”

 

    “நானும் சீரியஸா தான்டி சொல்றேன்.” என மீண்டும் இதழ் வளைத்தான்.

 

    அவள் மீண்டும் முறைக்க, “நான் கேக்குறதுக்கு உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு. இப்ப நீ என் பக்கத்துல இருக்க. இப்ப எப்படி ஃபீல் பண்ற?” என கேட்டான்.

 

    “இப்ப உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னதால ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு. கொஞ்சம் நிம்மதியா, மனசு அமைதியா இருக்கு. நீ பக்கத்துல இருக்கும்போது ரொம்ப கம்பர்டபுளா, சேஃபா இருக்குற மாதிரி ஒரு ஃபீல்.” என அவள் கூறிய அனைத்தும் அவளது மனதிலிருந்து வந்ததென்று அவளது இதழ்களில் தெரிந்த மெல்லிய வளைவும் கண்களில் மிளிர்ந்த ஒளியும் சொல்லாமல் சொல்ல, அவன் அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான்.

 

    “ஆனா…” என அவள் தயங்கினாள்.”

 

   “ஆனா?”

 

   “உன் வீட்ல இதுக்கு முழு விருப்பமா எல்லாருக்கும்?”

 

   “கண்டிப்பா இல்லை.” என அவன் வெகு இயல்பாக கூற அவளோ பேவென பார்த்தாள்.

 

   “நீ யார் விருப்பத்தை கேக்குறனு புரியுது. உன்கூட குடும்பம் நடத்த போறது நான். அவங்க இதுல என்ன சொல்றது?”

 

   “கதிர் இப்படி விட்டேத்தியா பேசாத. அவங்க உன்னை பெத்தவங்க.”

 

   “அந்த ஒரு காரணத்தை வச்சுதான் என் வாழ்க்கையையும் சேர்த்து அவங்களே வாழ பார்க்கிறாங்க.”

 

   “என்ன சொல்ற கதிர்?”

 

   அவன் இதழ்களின் வளைவு மறைந்து இறுக்கம் குடிக் கொண்டது. அவனின் முகமாறுதல் அவளை புருவம் சுருக்க வைத்தது.

 

   “நான் காலேஜ் முடிக்கிற வரைக்கும் எல்லாமே நல்லாதான் இருந்தது. அம்மா, அப்பா ரொம்ப அன்பா பாசமா தான் இருந்தாங்க. இப்பவும் அப்படி தான் இருக்காங்க. ஆனா அவங்க ஆசைக்கு என்னை வாழ சொல்றாங்க எப்படி வாழ்றது டி?”

 

    “என்ன சொல்ற கதிர்?”

 

   “நான் டெக்ஸ்டைல் என்ஜினியரிங் படிச்சது எங்க அப்பா தொழில கைல எடுத்துக்குறதுக்குனு அவங்க நினைச்சுருக்காங்க. எனக்கும் அதுல ஆசை இருந்தது தான். ஆனா நான் அதுக்காக மட்டும் அதை படிக்கல. எனக்கு ரொம்ப பிடிச்சு படிச்சேன். இந்த ஃபீல்ட்ல எதாவது சாதிக்கணும்னு பெரிய கனவு இருக்கு எனக்கு.” 

 

   சற்று இடைவெளி விட்டான். அந்த இடைவெளி, அச்சில கண மௌனம் ஓராயிர சங்கதிகள் சொல்வது போன்றிருந்தது.

 

    “காலேஜ் முடிச்சதும் எங்க அப்பா கம்பெனிக்கு போக ஆரம்பிச்சேன். ரொம்ப எக்ஸைட்டடா வேலை பார்த்தேன். ஆனா அது ரொம்ப நாள் நீடிக்கல. நாலாவது மாசம் எங்க அம்மா ஒரு மூனு பொண்ணுங்க ஃபோட்டோ காமிச்சு அதுல யார பிடிச்சுருக்கோ செலக்ட் பண்ணுனு சொன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியல. இப்ப தானே அம்மா படிப்ப முடிச்சேன். நான் இன்னும் நம்ம கம்பெனிய நிறைய டெவலப் பண்ணனும். எனக்கு நிறைய கனவு இருக்கும்மா. கொஞ்ச வருஷம் போகட்டும் கல்யாணத்த பத்தி யோசிக்கலாம்னு சொன்னேன். அப்ப தான் எங்க அம்மா அப்பா மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரிஞ்சுது.”

 

    “மூனு பொண்ணுங்களுமே கோடீஸ்வரிங்க. நம்மக்கிட்ட இல்லாத பணமா? சொத்தா? நீ இனிமே கம்பெனிய டெவலப் பண்ணனும் கோடி கோடியா சம்பாரிக்கணும்னு சொல்றதெல்லாம் புரியுது. அதை கல்யாணத்த பண்ணிக்கிட்டு செய்னு சொன்னாங்க. இது மூனுமே நல்ல சம்மந்தம் கோயம்புத்தூர்லயே பெரிய இடம் மூனும். அவங்க எவ்வளவு செல்வாக்கானவங்க? எவ்வளவு சொத்து பத்து உள்ளவங்க தெரியுமா? இப்பவிட்டா இது மாதிரி சம்மந்தம் அமையுறது டிலே ஆகும் டா. வாய்ப்பு வரும் போதே பயன்படுத்திக்கணும் பா. அவங்களும் பணக்காரங்க நாமளும் பணக்காரங்க அப்புறம் என்ன வேணும்? அதுல ஒரு பொண்ண நீ கட்டுனாலும் தமிழ்நாட்ல பெரும் பணக்காரங்கள்ல நீ ஒருத்தனாகிடுவடா. சோ ஒரு பொண்ண செலக்ட் பண்ணுனு அப்பா சொன்னாங்க. அம்மா அதுக்கு மேல. நம்ம ஸ்டேட்டஸ்க்கும் அவங்க ஸ்டேட்டஸ்க்கும் கரக்ட்டா இருக்கும். அதுவுமில்லாம மூனு பொண்ணுங்களுமே ரொம்ப அழகா இருக்காங்க. இதை விட உனக்கு என்னடா வேணும்னு ஒரு, ஒரு வாரத்துக்கு வீட்ல, ஆபிஸ்ல ஏன் வெளில போனா கூட ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல என் ஃப்ரெண்ட்ஸ விட்டு என்கிட்ட பேச வைச்சாங்க. நானும் அவங்களுக்கு பல தடவை பொறுமையா சொல்லி பார்த்தேன் அழகா இருக்கா, பணக்காரின்றதுக்காகலாம் ஒருத்திய கல்யாணம் பண்ண முடியாது எனக்கு தோணனும்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.”

 

    அழகி அவனின் வதனத்தில் குடியேறியிருக்கும் வலியை கண்டு மனம் துடித்தாள்.

 

    “ஒரு நாள் இப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்லவும் அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஆச்சு. அப்போ அப்பா, இப்ப நாங்க பார்த்துருக்குற பொண்ணுல ஒருத்திய நீ கல்யாணம் பண்ண சம்மதிக்கலனா என் சொத்துல ஒரு ரூபாய் கூட உனக்கு கிடையாதுனு சொல்ல. அம்மா, நாங்க சொல்ற பொண்ண உனக்கு கட்ட பிடிக்கலனா வேற எவள மனசுல வச்சுருக்கனு கேட்டாங்க. அப்படி யாரும் இல்லனு சொன்னேன். அப்ப நாங்க சொல்ற பொண்ண கட்டிக்கனு கம்பல் பண்ணாங்க. நான் முடியாதுனு ஒத்தக்கால்ல நின்னேன். அப்படினா நீ எத்தனை வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணாலும் இந்த வீட்டுக்கு யார் மருமகளா வரணும்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம் அவளுக்கு தான் நீ தாலி கட்டனும். இதுக்கு சம்மதம்னா நீ இந்த வீட்ல இருக்கலாம்னு சொன்னாங்க. அவங்க ஆசைக்கு வாழ நான் என்ன பொம்மையானு தோணுச்சு. பட்டுனு எனக்கு தேவையானத எடுத்துக்கிட்டு வீட்ட விட்டு வந்துட்டேன். அப்ப மிருதுளா ஊர்ல இல்ல. அவ வந்ததும் என்னை எத்தனையோ தடவ வீட்டுக்கு கூட்டிட்டு போக ட்ரை பண்ணா ஆனா நான் போகல. பெத்த அப்பா அம்மாவே அப்படி சொன்ன வலி என்னை போக விடல. மிருதுளாகூட மட்டும் பேசிட்ருந்தேன்.”

 

     கதிரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அழகியும் கண் கலங்கியிருந்தாள்.

 

    “மிருதுளாவும் ராம்குமார் மாமாவும் லவ் பண்ணிட்ருந்தாங்க அப்போ. அப்பதான் சக்கரவர்த்தி மாமா பழக்கமானாங்க. அதுக்கப்புறம் அவங்க தான் என்னை கைட் பண்ணாங்க. உங்க அப்பா கம்பெனில வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் பத்தாது கொஞ்ச நாள் வேற கம்பெனில சேர்ந்து வேலை பாரு. நீ டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரி ஆரம்பிக்கணும்னா அந்த எக்ஸ்பீரியன்ஸ் தேவை. அதுல வர்ற வருமானத்த சேர்த்து வச்சு இன்வெஸ்ட்மென்ட்டுக்கு யூஸ் பண்ணிக்கனு ஐடியா குடுத்தாங்க. நானும் ரெண்டு வருஷம் வேற கம்பெனில வேலை பார்த்தேன். அப்புறம் வேலைய விட்டுட்டு அதுல வந்த வருமானத்துல என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான் பொட்டிக் ஐடியா வந்தது. அதுக்காக உடனே ஆரம்பிக்கல. ஒன்றரை வருஷம் ஃபீல்ட் வொர்க் பண்ணி இப்ப அதை ஓப்பன் பண்ணது உனக்கே தெரியும். இதுல வர்ற லாபத்த வச்சு தான் என் ட்ரீம் கம்பெனிய உருவாக்க போறேன்.” என்றபோது அவனின் கண்களில் அத்தனை நம்பிக்கை.

 

     “மிருதுளா கல்யாணத்தப்ப கூட என்னால அவ பக்கம் வேலை பார்க்க முடியல. மிருதுளா லவ்வ அவங்க அக்செப்ட் பண்ணதே மாமா பணக்காரர்ன்ற ஒரே காரணம் தான். கல்யாணத்தன்னைக்கு கூட அம்மாவும் அப்பாவும் என்கிட்ட பேசல. மிருதுளாவ விட்டே என்கிட்ட இன்னைக்கு வரைக்கும் சமாதானம் பேசுறாங்க. அவங்களுக்கு நேரடியா என்கிட்ட பேச தோணாதப்போ நான் ஏன் பேசணும்? நான் பேசினாலும் மறுபடியும் அவங்க ஆசைக்கு தான் என்னை இணங்க வைக்க பார்ப்பாங்க. அதனால மிருதுளாவே அவங்கக்கிட்ட பேச சொல்லி என்னை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணறதில்ல. உன் நிலைமையும் என் நிலைமையும் கிட்டத்தட்ட ஒன்னுதான் அழகி. ஆனா எனக்கு என் அக்காவும் மாமாவும் கூட நின்னாங்க. நீ எப்படி டி தனியா தைரியமா நிக்கிற?” என கதிர் குரல் உடைய, அழகி சட்டென்று அவனை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

     

      வேலை நிமித்தமாக ராம்குமாரை காண வந்திருத்த நிரஞ்சன், அழகியின் உடல்நிலை எவ்வாறு உள்ளதென்று காண்பதற்காக அவளறைக்கு வந்தவன் கதிரும் அழகியும் இருந்த கோலம் கண்டு ஒரு நொடி திகைத்து பின்,

      

    “ஐயோ நான் எதுவும் பார்க்கலப்பா.” என்று திரும்பிச் செல்ல முயன்றான்.

    

    நிரஞ்சனின் குரலில் திடுக்கிட்டு இருவரும் விலகி கண்களை துடைத்தனர்.

    

   “டேய் அதான் வந்துட்டல்ல வா வா.” என கதிர் அவனை அழைத்தான்.

 

   “என்னடா நடக்குது இங்க?” என நிரஞ்சன் முகத்தில் அதிர்வையும் ஆச்சரியத்தையும் ஒருசேர காட்டினான்.

 

   அழகி தான் தர்மசங்கடமாக தலைக் கவிழ்ந்திருந்தாள்.

 

   “என்ன நடந்துச்சு? என் பொண்டாட்டியும் நானும் கட்டி பிடிச்சுட்டுருந்தோம். உன்னை யாரு கதவை தட்டாம உள்ள வந்து பார்த்து ஷாக்காக சொன்னது?” என கதிர் மிக இயல்பாக தோள் குலுக்கினான்.

 

   “என்ன பொண்டாட்டியா?”

 

   “ஆமா. இதோ இவ தான் என் பொண்டாட்டி!” என கதிர் அழகியின் அருகே சென்று சட்டென்று அவளது தோளில் கைப்போட, அழகி திடுக்கிட்டு அவனை நோக்க, அவனோ “என்ன மச்சான் எங்க ஜோடி பொருத்தம் சூப்பர்ல!” என்று கண்சிமிட்ட, நிரஞ்சன் ஞேவென இருவரையும் பார்த்தான்.

 

    “கை எடு கதிர்.” என அழகி நெளிந்து அவனது கையை விலக்க முயல, “நம்ம நிரஞ்சன் தான் அழகி! அவன் நம்மள பார்த்து சந்தோஷந்தான் படுவான். ஏன் மச்சான் அப்படித்தானே?!” என கதிர் அவளை விடாது நிரஞ்சனிடம் கேட்க, அதிர்விலிருந்து மீண்டவனோ மெலிதாய் சிரித்தான்.

 

    “இதுக்கு தானே டா எல்லாரும் இவ்வளோ நாள் வெயிட் பண்ணோம்.” என நிரஞ்சன் கதிரை அணைக்க, அழகி விலகி நின்று இருவரையும் கண்டு புன்னகைத்தாள்.

 

    “ஆனா அழகி என் மாப்பிள்ளைய இவ்வளோ நாள் நீ வெயிட் பண்ண வச்சதுக்கு சீக்கிரமே அவனை கல்யாணம் பண்ணிக்கோ.” என்று நிரஞ்சன் கூற அழகி புன்னகைத்தாள்.

 

     ராம்குமாரின் மூலம் நிரஞ்சன் அழகியை காண வந்ததை அறிந்து வேகமாக அங்கு வந்த மிருதுளா, 

     “எருமை! எருமை!” என அவன் தலையில் கொட்டினாள்.

 

    நிரஞ்சன் தலையை தேய்த்துக் கொண்டே, “ஏன் இப்ப கொட்டுனீங்க?” என்று கேட்க,

 

   “அவங்களே இப்ப தான் சேர்ந்தாங்க. ரெண்டு பேரும் தனியா மனசுவிட்டு பேசட்டும்னு நானும் அதியும் சத்தம்போடாம கீழ போனா கொஞ்ச நேரத்துல நீ வந்து அதை கெடுத்தா கடுப்பு வாராதா?” என மிருதுளா அவனை முறைத்தாள்.

 

   “எனக்கு எப்படி மேடம் இவங்க சேர்ந்துட்டாங்கனு தெரியும்?” என நிரஞ்சன் கேட்க, கொஞ்சம் யோசித்து “சரி சரி விடு. கொட்டுனதுக்கு சாரி.” என மிருதுளாவும் கோபம் விடுத்தாள்.

 

   “டேய் கதிர் வாழ்த்துகள் டா! ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடனும்.” என்று மிருதுளா கதிரின் கையை பிடித்து குலுக்கினாள்.

 

    “ம்ம். நீ தானே நடத்தி வைக்கணும். சீக்கிரம் ஒரு நல்ல நாளா பாரு.” என்ற கதிர் அழகியை கண்டு கண்ணடிக்க, அழகி திடுக்கிட்டு, 

 

    “நான் அதி என்ன பண்றான்னு பார்த்துட்டு வரேன்.” என்று அங்கிருந்து விட்டால் போதுமென்று அறைவிட்டு செல்ல, 

 

    “அடியேய் கள்ளி! வெக்கமா?! இப்ப போ. அப்புறம் வச்சுக்குறேன் உன்னை. என் தம்பிய எவ்வளோ வெயிட் பண்ண வச்ச? அதுக்கெல்லாம் சேர்த்து கல்யாணத்த சீக்கிரமே வச்சுட்றேன் இரு.” என்று மிருதுளா சத்தமாக சொல்லி சிரிக்க, கதிரும் நிரஞ்சனும் அவளது சிரிப்பில் கலந்துக் கொண்டனர்.

 

    மிருதுளா கூறியது கீழே இருந்தவர்களுக்கும் கேட்க, படிகளில் ஓடி வந்த அழகியை கண்டு ராம்குமாரும் சக்கரவர்த்தியும் புன்னகைத்தனர்.

 

    அழகிக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. அவளும் பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள்.

 

    “அழகி! உனக்கு முழு சம்மதம் தானே!” என ராம்குமார் அக்கறையாக வினவிட, 

 

   “சம்மதம் தான் அண்ணா!” என்ற அழகி அவன் எதிர்பாராது அவனை அணைத்துக் கொண்டு கண்கலங்கினாள்.

 

    ராம்குமாரோ அவள் கலங்குவது கண்டு அவளது முகம் நிமிர்த்த, “எனக்குனு யாரும் இல்லைனு நினைச்சேன். என் அண்ணா இருக்காங்க.” என அழகி மெலிதாக இதழ் வளைக்க, 

    

   அவனும் புன்னகைத்து “இந்த அண்ணன் எப்பவுமே உன்கூட தான் இருப்பான் மா!” என்றிட, “அப்பாவும் இருக்கேன் டா! நீ இனிமே கவலைப்படவேக் கூடாது. கதிர் தங்கமான பையன். உன்னை பத்திரமா பார்த்துப்பான்.” என சக்கரவரத்தியும் வந்து அவளது தலை வருட, அழகி புன்னகைத்து அவரது கையைப் பற்றி கண்களில் வைத்துக் கொண்டாள்.

 

     மேலியிருந்து கீழே இறங்கி வந்த கதிர், நிரஞ்சன், மிருதுளா மூவரும் அக்காட்சியை கண்டு புன்னகைத்தபடி நிற்க, அங்கு ஓடி வந்த அதி “அழகி!” என அவளது கால்களை கட்டிக் கொண்டான்.

 

    அழகி அவனை தூக்கி முத்தமிட்டு “அதி குட்டி சாப்பிட்டாச்சா?” என்று கேட்க,

    

    “ம்ம் நானும் கவி பாப்பாவும் சாப்பிட்டோம்.” என்று கண்கள் விரிய கூறினான்.

    

   “இங்க இருக்குற வரைக்கும் அதிய பத்தி நீ கவலைப்படாத அழகி! அவனை கவனிக்க நான் இருக்கேன்.” என்று மிருதுளா கூறிட, அழகி மென்னகைப் புரிந்தாள்.

   

    அழகியிடமிருந்து இறங்கி கதிரிடம் சென்ற அதிரன், “ஹீரோ! நான் இனிமே உங்களை அப்பானு கூப்பிடலாமா?” என்று கேட்க, அழகிக்கு கண்கள் கலங்கியது.

    

    “ஓஓ கூப்பிடு வெல்லக்கட்டி! என் வெல்லக்கட்டிக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடு!” என்று கதிர் அவனை தூக்கிக் கொள்ள, “அப்பா!” என்றழைத்த அதிரனை இமைக்காது பார்த்த கதிர் கண் கலங்கி அவனது நெற்றியில் முத்தமிட, அழகி மனம் நிறைந்து கண்ணீர் சிந்திட, மற்றவர்களும் சந்தோஷத்தில் கண்கலங்கியிருந்தனர்.

 

    “அழகி எனக்கு அம்மாவா கிடைச்ச மாதிரி எனக்கு அப்பாவும் கிடைச்சுட்டாரே!” என்று அதிரன் சத்தமாக கைத்தட்டி சிரிக்க, கதிர், நிரஞ்சனை தவிர மற்ற மூவரும் அதிர்ந்து அழியை நோக்க, அவளோ அமைதியாக கண்கலங்கியபடி நின்றாள்.

    

 

    

 

     

    

 

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்