Loading

அத்தியாயம் 2

நாயகனின் கால்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்காது, தரையும் அதிர்ந்தது போன்றதொரு பிரம்மை ஏற்பட்டது தேஜஸ்வினிற்கு.

வானுயர்ந்து நின்ற, கண்ணாடி கட்டிடத்தினுள் அதிவேகத்துடன் நுழைந்த ஸ்வரூப் அவ்தேஷ், “நான் சொன்னது எல்லாம் கரெக்ட்டா நோட் பண்ணிக்கிட்டியா?” எனக் கேட்டபடி, கண்ணை மட்டும் திருப்பி தேஜஸ்வினைப் பார்த்தான்.

“பண்ணிக்கிட்டேன் பாஸ்!” அவசரமாகத் தலையை உருட்டியவனுக்கோ, இப்போது தனது முதலாளி என்ன பேசினார் என்றே தெரியவில்லை.

அவன் பின்னால், தினமும் ரன்னிங் ரேஸ் ஓடுவதிலேயே தனது எடை நாளுக்கு நாள் குறைவதை உணர்ந்தவனுக்கு, காதும் மந்தமாகி வரும் அவலம்!

எல்லாம் அவ்வப்பொழுது, ஸ்வரூப்பிடம் வாங்கும் அடி தான் காரணம். ‘சின்ன வயசுலயே செவிடாகிடுவோம் போலயே. இப்ப வேற என்ன பேசுனாருன்னு தெரியல. கேட்டா கண்டிப்பா அடி விழும்…’ என எச்சிலை விழுங்கியவனின், எண்ணங்களை அனுமானித்தபடியே, தனக்கு காலை வணக்கம் கூறிய பணியாளர்களிடம் தலையசைத்தபடி மின்தூக்கியை அடைந்தான்.

அவனது அறை 13 ஆவது மாடியில் இருக்கிறது. அவனுடன் ஒன்றாக பயணிக்கும் இந்த மின்தூக்கி பயணம் கூட, தேஜஸ்வினுக்கு அத்தனை அவஸ்தையாக செல்லும்.

எதற்கு முறைக்கிறான், எதற்கு கண்டிக்கிறான், வேலைகளை கோபமாக சொல்கிறானா, சாதாரணமாக சொல்கிறானா அல்லது தன்னை அன்பாக பார்க்கிறானா… இதனை கண்டறியவே தனக்கு தனியாக ஒரு மூளையை கடவுள் வைத்திருக்கலாம் என்று பல நேரம் வருந்துவதுண்டு.

இன்றும் அதே மிரட்சியுடன் லிஃப்டில் ஏறியவனைக் கண்டு, இறுக்கம் தளர்ந்து இதழ் விரித்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“ஆம் ஐ லுக் லைக் அ டெவில்?” வில்லாக வளைந்த அடர்ந்தப் புருவங்களை உயர்த்திக் கேட்ட ஸ்வரூப்பை, பேய் பயத்துடன் பார்த்தவன்,

“ச்சே இல்ல பாஸ்.” என்றான் வேகமாக.

“அப்போ என்னை பார்த்து ஏன் மேன் இவ்ளோ கேவலமான ரியாக்ஷன்ஸ் குடுக்குற?” என முறைப்புடன் கேட்டான்.

“எல்லாம் ஒரு பயம் தான் பாஸ்!” என்று அவன் விழிக்கும் போதே, ஸ்வரூப்பின் அலைபேசி சிணுங்கியது.

அதனை எடுத்துப் பார்த்தவன், “ப்ச்!” என மெல்ல எரிச்சலுற்று முன்னந்தலையை கோதிக் கொண்டான்.

அவ்வழைப்பை ஏற்காமலேயே, சரியாக பதினோரு மணி அளவில், மீட்டிங் ஹாலுக்குள் ஸ்வரூப் நுழைய, அங்கு ஏற்கனவே ஜோஷித் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிர்புறம் முகத்தில் கடுப்பு மின்ன, சஜித்தும் அமர்ந்திருந்தான்.

‘அதிசயம்… ஆனால் உண்மை!’ என முணுமுணுத்தவாறு, ஸ்வரூப்பும் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து விட்டு, சுந்தரத்தை ஏறிட்டான்.

அவருக்கோ, பெரும் நிம்மதி. காட்டிய ப்ரெசன்டேஷனையே மூன்று முறை மீண்டும் மீண்டும் காட்ட வேண்டிய அவசியம் இல்லயே.

ஜோஷித் தான், கடுகடுவென அமர்ந்திருந்தான். ‘இன்னைக்கு இவனுங்க மூஞ்சில முழிக்கணும்ன்னு இருக்கு…’ என்று எரிச்சலில், சிகரெட்டை எடுக்க, “சுந்தரம்!” என்ற ஸ்வரூப்பின் அதிகாரக் குரலில், நிமிர்ந்தான்.

அப்போதும் அவனைப் பார்க்கவில்லை. ஸ்வரூப்போ, “மீட்டிங் மேனர்ஸ்ன்னு ஒண்ணு இருக்கு. அதை ஃபாலோ பண்ணுங்க.” எனக் கடுமையுடன் கூறியதில் அவர் விழித்தார்.

‘புடலங்கா மீட்டிங்…’ எனகே கறுவியவாறே, ஒரு சிகரெட்டை வாயில் வைக்கப் போக, சுந்தரம், “மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா சார்.” எனக் கேட்டார் பவ்யத்துடன்.

ஸ்வரூப்போ பதில் சொல்லாமல், ஜோஷித்தை அனலாக சுட்டுக் கொண்டிருக்க, அப்பார்வையின் சூடு தாக்கினாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்க முயன்றான்.

முயற்சி செய்ய மட்டுமே முடிந்தது. அதனைப் பற்ற வைக்காம, சட்டென வாயில் இருந்து எடுத்து விட்டவன், “மீட்டிங்க ஸ்டார்ட் பண்ணி தொலைக்கிறீங்களா?” என்றான் உட்சபட்ச கத்தலுடன்.

சுந்தரம், ஸ்வரூப்பை பார்க்க, அவன் ஆமோதிப்பதாய் தலையசைத்ததும் அவரும் தொழில் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

———

ஆந்திரா – தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது சித்தூர் மாவட்டம். சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேங்கட மலைக்கு தெற்குப் பகுதியில் தமிழ்வாழ் மக்கள் வாழ்கின்றனர். மலைவாசிகளும், கிராம வாசிகளுமாக லட்சக்கணக்கில் மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் இருக்கும் அத்தனை இடங்களும், அவ்தேஷ சாம்ராஜ்யத்திற்கு சொந்தமானவை. அது மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக அம்மக்களை ஆட்சி செய்வதும் இவர்கள் தான்.

அவ்வூர் மக்களுக்கு, இவர்களே மன்னர்கள்! இவர்களே தெய்வமும் கூட.

அதன் எல்லைப்பகுதிக்குள், இவர்களது அனுமதியின்றி, காவலர்களும் அரசியல் தலைவர்களும் கூட உள்ளே சென்று விட இயலாது.

அங்கு நடைபெறும், தேர்தல் கூட வெறும் கண் துடைப்பிற்கு தான். அப்போதும், அவ்தேஷ குடும்பத்தினர் யாரை கை காட்டுகிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுவர்.

நரசிம்ம அவ்தேஷ். ஸ்வரூப்பின் தந்தை வழி தாத்தா. அவருக்கு மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும்.

அரச குடும்பம் என்றாலும், சிறிதாய் கூட நீதி தவறியதில்லை. அதனையே தனது வாரிசுகளுக்கும் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்தவர்.

மக்களின் அடிப்படைத் தேவைக்கும், மலைவாழ் மக்களின் கல்வியறிவுக்குமாக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை அடுத்து, அவரது மூன்று மகன்களும் ஆட்சி செய்தனர்.

முதலாமானவர் சாணக்கிய அவ்தேஷ். அவரது மனைவி சித்தாரா. இவர்களின் தவப்புதல்வனே ஸ்வரூப் அவ்தேஷ்.

இரண்டாமானவர் நந்தகோபால அவ்தேஷ். அவரது மனைவி உமையாள். இவர்களின் தவப்புதல்வன் சஜித் அவ்தேஷ்.

மூன்றாமானவர் பாரிராம அவ்தேஷ். அவரது மனைவி கனகரூபினி. இவர்களின் தவப்புதல்வன் ஜோஷித் அவ்தேஷ்.

மூன்று அண்ணன் தம்பிகளுக்கும் ஒரே மேடையில் தான் திருமணம் நிகழ்ந்தது. ஸ்வரூப்பிற்கு ஒரு வருடம் இளையவன், சஜித். அவனை விட ஆறு மாதம் இளையவன் ஜோஷித்.

ஆனால், ஒரு தாய் பிள்ளைகளைப் போன்றே, பெற்றவர்கள் இவர்களை வளர்த்தனர். அன்பிலும் சரி, சேட்டையிலும் சரி இவர்களை மிஞ்ச இயலாது.

அவ்தேஷ குடும்பத்திற்கே ஒரு பழக்கம் உள்ளது. குடும்பத்தை விட, அவர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பை விரும்புவர். மக்களை சரியாக வழிநடத்த வேண்டுமென்றால், முதலில் நாம் சரியாக இருக்க வேண்டும் என்பது அங்கு எழுதப் படாத சட்டம்.

மானத்திற்கும், குடும்ப கௌரவத்திற்க்கும், சுய ஒழுக்கத்திற்கும் அதிக அளவு முக்கியத்துவம் தருபவர்கள். சிறு பிழை நேர்ந்து விட்டாலும் கூட, அது அவர்களது ஒட்டு மொத்த முன்னோர்களின் ஆட்சியையும் களங்கப்படுத்துமே.

வெளியாட்கள் யாரும் அத்தனை சீக்கிரம், அவர்களது வீட்டினுள் நுழைய இயலாது. நரசிம்ம அவ்தேஷ், அவரது மகன், மகளுக்கு கூட, சொந்தத்தில் தான் மணம் முடித்தார். அதே தான், அவரது பேரன்களுக்கும். இரு வருடங்களுக்கு முன்பே, பேரன்களுக்கு மணப்பெண்களை தேர்ந்தெடுத்து விட்டே உயிர் துறந்தார். திருமண விஷயத்திலும் சரி, மற்ற விஷயங்களிலும் சரி, சொந்த விருப்பு வெறுப்புக்கு அங்கு இடமில்லை.

இதுநாள் வரையிலும் இளையவர்கள் கூட இதனையே அச்சுப் பிசகாமல் தொடர்ந்து வருகின்றனர். இடையில் நேர்ந்த கசப்பான சம்பவத்தில், ஜோஷித் தான், புகைப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டான். அதுவும், ஊருக்கு சென்று விட்டால், முற்றிலுமாக குறைந்து விடும். தங்களைப்  பார்த்து, தங்களது மக்கள் எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகி விடக் கூடாது என்பதில் மூவருமே உறுதியாக இருப்பார்கள்.

அதிலும் ஸ்வரூப் அவர்களை விட மூன்று மடங்கு அன்பையும் கோபத்தையும் காட்டுவான். சிறு விஷயம் கூட, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்க கூடாது என்பதில், மிகவும் கவனமாகவே இருப்பான். எந்த அளவு என்றால், தனது இரண்டு சித்தப்பாக்களும் கண் முன்னே தாக்கப்பட்டதைக் கண்டும் கூட. தனது தந்தை இன்னும் உயிருக்கு போராடித் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்தும் கூட… செய்தவர்கள் யார், காரணம் என்ன, தங்கள் குடும்பத்தை தாக்கும் அளவு வஞ்சம் எதற்கு? இனியும் என்ன செய்ய போகிறார்கள்? என்ற கேள்விக்கான பதிலைத் தேடி தான் அவன் இங்கு வந்திருக்கிறான்.

சித்தூரில் இருக்கும் போதே, தந்தைகளைக் கொல்ல வந்த அடியாளை கையும் களவுமாக பிடித்து விட்டான் ஜோஷித்.

அவனை அங்கேயே கொன்று புதைக்கும் படி, தமையனிடம் கூற, ஸ்வரூப்போ மக்களையும், தங்களது குடும்ப நெறியையும் மனதில் வைத்து, அவனை கொல்லாமல் விட்டு விட, அதுவே அவர்களின் வாக்குவாதத்திற்கும் இப்பிரிவிற்கும் முதல் படியானது.

தங்களது வம்சத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக, தந்தையரின் சொல்படி, அவர்கள் பார்த்த பெண்ணையே நிச்சயம் செய்து கொண்டனர்.

———

சரியாக மீட்டிங் முடியும் தருவாயில், கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் மூன்று அழகிகள்.

‘வந்துட்டாளுங்க… இருக்குற பிரச்சனைல இவளுங்க வேற…’ எனக் கடுப்பாகி, சஜித் வெளிநடப்பு செய்ய, அவனை முறைத்திருந்த பெண்ணொருத்தி அவனைப் பின் தொடர்ந்தாள்.

“சஜி நில்லுங்க.” என்ற பாவனா, சஜித்தை வழி மறிக்க, “நீ ஏன் இங்க வந்த பாவனா?” என்றான் எடுத்ததும்.

“இது என்ன கேள்வி… என் ஃபியான்சியை பார்க்க நான் வர கூடாதா?” என அவள் சிணுங்க,

“ப்ச் சும்மா எரிச்சலை கிளப்பாத. ஏற்கனவே பல பிரச்சனை. இதுல ஃபியான்சி ஒண்ணு தான் குறை. அங்க அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க. அம்மாக்களுக்கு துணையா தான உங்களை இருக்க சொன்னோம். எதுக்கு வந்தீங்க.” என்று படபடவெனப் பொரிந்தான்.

“அங்க வேலைக்காரங்களை துணைக்கு விட்டுட்டு தான் வந்துருக்கோம். போன் பண்ணுனா எடுக்குறது இல்ல. பின்ன, கிளம்பி வராம என்ன செய்றது” என்று பாவனா எகிறிட, சஜித் கோபத்துடன் முறைத்தான்.

———

இங்கு அதே கடுமையுடன் ஜோஷித்தும் தனது ஃபியான்சியான அனன்யாவை எரித்துக் கொண்டிருந்தான்.

“வேலைக்காரங்களை நம்பி விட்டுட்டு வர்ற அளவு தைரியம் வந்துடுச்சோ…?” அவன் கேட்ட கேள்வியில் அவள் சற்று அரண்டு விட்டு, பின், “அதில்லங்க ஜோ. உங்களை பாத்துட்டு போகலாம்ன்னு தான்” என்று தயங்கி நின்றாள் அனன்யா.

அதற்கு மேல், அவளுக்கு அருகில் நின்றிருந்த ஸ்வரூப்பின் ஃபியான்சியான இஷானா எச்சிலை விழுங்கினாள்.

பின், தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டு, “வேற எங்களை என்ன பண்ண சொல்றீங்க ஜோ. நிச்சயம் ஆகி பதினஞ்சு நாள்ல இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்க கூடாது தான். இந்நேரம் மூணு பேருக்கும் கல்யாணமே நடந்துருக்க வேண்டியது.” என்னும் போதே, ஸ்வரூப் அவளை அமைதியாக ஏறிட்டான்.

அதில் இன்னும் தைரியம் பெற்ற இஷானா, “நடந்ததை மறந்துடுங்கன்னு சொல்லல. மாமா மூணு பேரும் சீக்கிரம் ரெகவர் ஆகிடுவாங்க. அடுத்த வேலையை பாருங்கன்னு தான் சொல்றோம். நீங்க என்னன்னா, போன் கூட எடுக்க மாட்டேன்னு வீம்பு பண்றீங்க. சரி, உங்க மூணு பேரையும் ஒண்ணா பிடிக்கலாம்ன்னு பார்த்தா, முகத்தை கூட பாத்துக்க மாட்டேங்குறீங்க.

ஓகே… அண்ணன் தம்பிங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும் தான். அதுக்காக, இப்படியே இருந்தா சரி ஆகிடுமா?” என்று மையிட்ட விழிகளை அசைத்துக் கேட்டாள்.

அவளைக் கையைக் கட்டிக்கொண்டு பார்த்த ஸ்வரூப், “சோ, என்ன பண்ண சொல்ற?” என்றான் கூர்மையாக.

அக்கூர்மை அவளை எச்சரித்தாலும், அதனை ஒதுக்கி விட்டு, “ஒண்ணு சேர்ந்து தொழிலை பாருங்க. செட் ஆகலைன்னா, சொத்தை பிரிச்சுட்டு தனி தனியா வேலையை பார்க்க வேண்டியது தான. தனி தனியா ராஜ்யத்தை உருவாக்கிக்க வேண்டியது தான்.” என்றதும் தான் தாமதம், ஸ்வரூப்பின் கைரேகை அவளது கன்னத்தில் பதிந்தது.

அனன்யா, தனக்கே அடி விழுந்த ரீதீயில் கன்னத்தில் கை வைத்து திகைத்திருக்க, ‘லூசா இவ… இப்பவே சொத்த பத்தி பேசி, அவனை கோபப்படுத்தணுமா… இவனுங்களை நிச்சயம் பண்ண வைக்கிறதுக்கே தலைகீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதா போச்சு.’ எனத் தனக்குள் எரிச்சலானாள்.

ஜோஷித், இரு பெண்களையும் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, வெளியில் சென்று விட, “ஜோ நில்லுங்க ஜோ…” என்று அவன் பின்னே சென்றாள் அனன்யா. அங்கு நின்று, ஸ்வரூப்பின் கண்டனப் பார்வைக்கு ஆளாவதற்கு ஜோஷித்திடம் திட்டே வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஜோஷித்தை முற்றுகையிட்டாள்.

கன்னத்தில் எழுந்த வலியில் கண்ணே கலங்கி விட்டது இஷானாவிற்கு.

“நான் அப்படி மீன் பண்ணலங்க ஸ்வரூப். ஊர்ல நீங்க யாரும் இல்லாம, மக்களும் சஃபர் ஆகுறாங்க தான. யாராவது ஒருத்தர் போய் பாத்துக்கிட்டா, நல்லா இருக்கும்ன்னு தான் சொன்னேன்…” என்று சில நொடிகளில் சமாளித்து விட்டாள் இஷானா.

“சொல்றது தப்பில்ல. அது தப்பாகாம சொல்லு.” என்று கண்டிப்புடன் கூறியவன், அவளது பாவமான முகத்தைக் கண்டு, “சாரி” என்றான் மெல்லமாக.

“அது பரவாயில்ல. நீங்க தான அடிச்சீங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா.” என்று மனதைத் தேற்றி, வெளியில் சிரித்து வைத்தாள்.

பின் இஷானாவே தொடர்ந்தாள். “நம்ம கல்யாணத்தை பத்தி பேச தான் வந்தேன்.” என்று ஆரம்பிக்கும் போதே,

“இப்போ இருக்குற நிலமைல, கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியாது இஷா.” என உடனடியாக மறுத்தான் ஸ்வரூப்.

“எனக்கு புரியுது ஸ்வரூப். நீங்களே யோசிச்சு பாருங்க… நம்ம குடும்பத்துல பிரச்சனைன்னு, நடக்க இருந்த கல்யாணம் நிச்சயத்தோட நின்னு போச்சுன்னா, வெளில இருந்து பாக்குறவங்களுக்கு, இன்னும் தைரியம் அதிகமாகிடும். இந்த நிலைமையை யூஸ் பண்ணி, இன்னும் பிரச்சனை பண்ணுவாங்க. நமக்கு மட்டுமா பண்ணுவாங்க. பாவம், நம்ம ஊர் மக்கள் என்ன பாவம் பண்ணுனாங்க. அவங்களும் சேர்ந்து தான சஃபர் ஆகுவாங்க” எனக் கேட்டு விட்டு, அவன் முகத்தை ஏறிட, ஸ்வரூப்பின் புருவம் யோசனையில் சுருங்கியது.

எப்படி பேசினால், தான் நினைத்தது நிறைவேறும் என்று அறிந்தவளாகிற்றே! சும்மாவா, இருபத்தைந்து வருடங்களாக, அவர்களுடன் தானே வளர்கிறாள்.

இப்பெண்கள் மூவருமே, நரசிம்மனின் ஒற்றைப் பெண்ணாக யசோதாவின் வாரிசுகள்!

அவனது குழப்பத்தில் மேலும் கல்லெறிய முயற்சித்தாள் இஷானா.

“நம்ம குடும்ப வழக்கப்படி, நமக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ, குடும்பத்துக்காக எல்லா சூழ்நிலையையும் கையாண்டு தான் ஆகணும் ஸ்வரூப். இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல. அத்தைங்களுக்கும் மனசு ஆறுதல் அடையும்ல.” என்று அவனைக் கரைக்க முயன்றாள்.

பெருமூச்சு விட்ட ஸ்வரூப், “கரெக்ட் தான். அட்லீஸ்ட், மூணு பேரும் கொஞ்சம் எந்திரிச்சு உட்காந்துட்டா கூட போதும். படுத்த படுக்கையா இருக்கும் போது, ஊரைக்கூட்டி கல்யாணம் பண்ணுறது, எனக்கு ஒப்பல இஷா.” என மீண்டும் யோசித்தவன், பின் ஏதோ முடிவெடுத்தவனாக,

“சரி, ஒரு பதினஞ்சு நாள் டைம் குடு. சீக்கிரமே கல்யாண தேதியை அனௌன்ஸ் பண்ணலாம். உன் தங்கச்சிங்ககிட்ட சொல்லி, அவனுங்களோட ஒபினியனையும் கேட்க சொல்லு.” என்றதும், அப்பட்டமாக மகிழ்ச்சியைக் காட்டிய இஷானா, “தேங்க்ஸ் ஸ்வரூப்.” என்று அவன் மடியில் அமர்ந்து, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

‘இது ஆபிஸ் இஷா!’ மீண்டும் கண்டிப்புடன் கூற வந்தவனுக்கு, ஏற்கனவே அவளை அடித்ததில் சற்று பாவம் எழ, சில நொடிகள் அமைதியாய் இருந்தான்.

அவளோ அவன் கன்னத்தில் முத்தமிட, அதில் சுயம் பெற்றவன், அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டு, “கிளம்பு. ஊருக்கு போயிட்டு அங்க இருக்குற நிலவரத்தை சொல்லு.” என்று கிளம்பி விட்டான்.

“ஆமா, பெரிய நிலவரம்! கிழம் மூணும் இழுத்துக்க பறிச்சுக்க படுத்து இருக்கு. ச்ச்சே… இப்ப பார்த்தா இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கணும்.” என விதியை நொந்து கொண்டவள் அறியவில்லை, இன்னும் பல அசம்பாவிதங்கள் நடக்கப்போவது பற்றி.

அத்தியாயம் 3

பெண்கள் மூவரையும் கிளப்பி விட்டதும் தான், ஆடவர்களுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

சுந்தரம், சஜித்திடம், “காலைல பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னீங்க. லேட் ஆகிடுச்சு சார். எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்க,

“அட அதை ஏன் ஞாபப்படுத்துறீங்க சுந்தரம். ஒரு பைத்தியம் என்கிட்ட பிக் பாக்கெட் அடிச்சுருச்சு. அவள் மட்டும் என் கையில மாட்டட்டும் அப்பறம் இருக்கு…” என்று தன் போக்கில் புலம்பிட, அவர்களைக் கடந்து சென்ற ஜோஷித் சற்று நின்றான்.

‘கார்ல வர்றவன்கிட்ட எப்படி பிக் பாக்கெட் அடிச்சுருக்க முடியும்’ என்ற மிகப்பெரிய சந்தேகம் அவனுக்கு.

கேட்கவும் ஈகோ ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், “சுந்தரம், வெட்டியா நின்னு வெட்டிக்கதை பேசாம வேலையை பாருங்க. கார்ல எந்த பைத்தியத்தையும் ஏத்திக்கிட்டு சுத்த வேணாம்…” என்று மறைமுகமாக சகோதரனை வெட்டும் பார்வை பார்த்தான்.

சஜித்தும் அவனை ஏகத்துக்கும் முறைத்து விட்டு, “எனக்கு என்ன ஆசையா கண்டவளை கார்ல ஏத்தி, ஊர்வலம் போகணும்ன்னு, நிச்சயம் பண்ணுனவளை கூட இதுவரை கார்ல கூட்டிட்டு போனது இல்ல சுந்தரம்.” என்று மேனேஜரிடம் எகிற, அவரோ ‘தெரியாம கேட்டுட்டோமோ’ என்று தலையை சொறிந்தார்.

பின் சஜித்தே, “கார் வர்ற வழில பிரேக் டவுன் ஆகிடுச்சு. கேப் கூட அவசரத்துக்கு கிடைக்கல. மீட்டிங்கும் டைம் ஆகிடுச்சுன்னு, அங்க வந்த பஸ்ல ஏறுனேன்.” என்றதுமே சுந்தரம் பதறினார்.

“ஐயோ சார், எனக்கு ஒரு போன் பண்ணிருந்தா நானே வந்துருப்பேனே. நீங்க போய் ஏன் பஸ்ல வந்தீங்க. ஸ்வரூப் சாருக்கு தெரிஞ்சா என்னை தான் திட்டுவாரு…” என்னும் போதே, ஸ்வரூப் அவர்களுக்கு பின்னால் கையை கட்டிக்கொண்டு நின்றான்.

“சுந்தரம்… கார் ட்ரைவர் எங்க?” என ஸ்வரூப் கேட்க, சஜித், “ட்ரைவர் காரை சர்விஸ் பண்ண போயிருக்கான்” என்றான் சுந்தரத்திடம்.

தம்பியைப் பாராமல், “அவன் சர்விஸ் முடிச்சுட்டு வந்ததும், இங்க அவன் சர்விஸ் தேவை இல்லன்னு அனுப்பிடுங்க. வேற ட்ரைவர இமீடியட்டா அப்பாய்ண்ட் பண்ணுங்க.” என்று கூறி விட்டு, “இனி, என் அனுமதி இல்லாம யாரும் எங்கயும் எதுலயும் போக கூடாது…” என்று பொத்தாம் பொதுவாக உத்தரவைக் கொடுத்தவன், அவர்களைத் தாண்டி சென்றான்.

‘இவன் சொன்னா நான் கேட்கணுமா?’ என்ற வீராப்புடன் ஜோஷித் கிளம்பி விட, சஜித் தான், காலையில் நிகழ்ந்த நிகழ்வை கடுப்புடன் எண்ணிப் பார்த்தான்.

——–

வீட்டில் இருந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களை உண்டு விட்டு, மூன்று பெண்கள் அணியும் சாவகாசமாக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றது.

விஹானா தான், “டார்லிங்… எப்ப நமக்கு அடுத்த ப்ராஜக்ட் தருவாங்க. மாசத்துக்கு ஒரு ப்ராஜக்ட்லாம் பத்த மாட்டேங்குது.” என்றதும்,
அக்ஷிதா அதனை ஆமோதித்தாள்.

“கரெக்ட் டார்ல்ஸ். நம்ம திருட்டுக்கு தீனி போடுற மாதிரி ஒரு ப்ராஜெக்ட்டும் சிக்க மாட்டேங்குது. பேசாம பழையபடி பிக் பாக்கெட் அடிச்சு, நம்ம பொருளாதார நிலையை உயர்த்திடலாம்ன்னு இருக்கேன்” என்றாள் சிரிப்புடன்.

“ஹே டார்ல்ஸ்… அப்டி எதுவும் பண்ணி தொலைச்சுடாத. பாஸ் என்ன சொல்லிருக்காரு. சின்ன சின்ன திருட்டு பண்ணி, மாட்டிக்க கூடாதுன்னு சொல்லிருக்காருல.” என்று உத்ஷவி கடிந்து கொள்ள, “அதுனால தான் என் கையை கட்டி போட்டு வச்சுருக்கேன் டார்ல்ஸ்” என்றாள் பரிதாபமாக.

அந்நேரம், அவர்களால் ‘பாஸ்’ என அழைக்கப்பட்டவன், உத்ஷவிக்கு போன் செய்ய, “கருநாக்குடி உங்களுக்கு. பாஸ் தான் கூப்பிடுறாரு.” என்று பேசத் தொடங்கினாள் உத்ஷவி.

பேசி விட்டு வைத்ததும், “ஏதோ பெரிய ப்ராஜெக்ட்டாம் டார்ல்ஸ். என்னை மட்டும் வர சொல்றாரு. நான் போய் டீடெய்ல்ஸ் கேக்குறேன்.” என்றதும் மற்ற இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

விஹானா, “அப்பாடா… ஒரு ரெண்டு மாசத்தை இதை வச்சு ஓட்டிடலாம். சரி நாங்க போய் தேவையான வெப்பன்ஸ் எல்லாம் வாங்கி வைக்கிறோம்.” என்றதும்,  அக்ஷிதா, “ஷவி டார்ல்ஸ், உன் கையை கட்டி போட்டு, ஆபிசுக்கு போயிட்டு வாம்மா.” என்று கிண்டலடித்து, உத்ஷவின் முறைப்பையும் பரிசாக வாங்கி கொண்டாள்.

விஹானாவும் அக்ஷிதாவும் கடைக்கு செல்லும் பொருட்டு, தி நகர் செல்லும் பேருந்தில் ஏறினர். மிதமான கூட்டத்தின் நடுவில், சஜித்தும் அதே பேருந்தில் ஏறி உள்ளே வந்தான்.

வந்தவன், கம்பியைப் பிடித்தபடி நின்றிருந்த அக்ஷிதாவின் அருகில் நிற்க, அவளும் திரும்பி அவனையும் அவனது நேர்த்தியான உடையையும், கையில் வைத்திருந்த சூட்டையும் விசித்திரமாக பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

பின் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தவன், பயணச் சீட்டிற்காக பணத்தை எடுக்க எண்ணி விட்டு, பின் நடத்துனர் இன்னும் வராதிருந்ததில், மீண்டும் உள்ளே வைக்கும் போது, அக்ஷிதா பார்த்து விட்டாள்.

பர்ஸ் முழுக்க, கத்தை கத்தையாக பணம்!

அதனை ஆவலாகக் கூற, அருகில் விஹானாவைத் தேட, அவள் வேறொரு பக்கம் இடம் கிடைத்ததில் அங்கு அமர்ந்து கொண்டாள்.

அக்ஷிதாவிற்கோ, ஆவலை அடக்க இயலவில்லை. பர்ஸில் பணத்தை பார்த்தே பல காலம் ஆகி விட்டது. இப்போதெல்லாம், அனைவரும் க்ரெடிட், டெபிட் கார்டுகளையும், அதற்கும் மேல் ஆன்லைன் பரிவர்த்தனைகளையுமே பெரிதும் உபயோகிக்கத் தொடங்கி விட, அதனை டீ – கோட் செய்து திருடும் அளவு எல்லாம் அவளுக்கு மூளை இல்லையே!

இப்போதும், உத்ஷவி கண்டித்தது உறுத்தினாலும், ‘ப்ச், இப்படி பணத்தோடு பர்ஸை பார்த்து எவ்ளோ நாள் ஆகுது. ஜஸ்ட், ஒரு தடவை ஆட்டய போட்ட்டுட்டு எஸ்கேப் ஆகிடலாம்.’ என்றெண்ணி, நினைத்ததை சாதித்தும் விட்டாள்.

சரியாக நடத்துனர் சஜித்தின் அருகில் வர, அவனும் பர்ஸை எடுக்க சென்று விட்டு திகைத்தான்.

‘கீழே எதுவும் விழுந்து விட்டதா?’ எனப் பதற்றம் கொண்டு தேட, “சார் டிக்கட்!” என்று நடத்துனர் கத்தினார்.

“என் பர்ஸ்! என் பர்ஸை காணோம்…” என்று மீண்டும் குழப்பத்துடன் சஜித் தேட, பின்னால் நின்றிருந்த அக்ஷிதா தான் கண்ணில் பட்டாள்.

“எக்ஸ்கியூஸ் மீ. என் பர்ஸை பார்த்தீங்களா?” எனப் பொறுமையுடன் தான் கேட்டான்.

அவளோ, “ஹலோ என்னை பார்த்தா உங்களுக்கு பர்ஸை ஆட்டைய போடுற மாதிரி இருக்கா. என்கிட்ட வந்து கேட்டுட்டு இருக்கீங்க” என்று வெகு நியாயமாய் பேச, அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தவனை நடத்துனர் திட்ட ஆரம்பித்தார்.

“தினமும் இப்படி யாராவது வந்து என் கழுத்தை அறுக்குறீங்க. யோவ் டிக்கட் எடுப்பியா மாட்டியா” என்றிட,

சஜித்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

அவன் நினைத்தால், இந்த பேருந்து என்ன… இதனைப் போல நூறு வாங்குவானே! இப்போது இதனை விளக்க நேரமின்றி, நடத்துனரிடம் பேசி, ஜி – பே செய்தான்.

அனைத்தையும் அசட்டையாக வேடிக்கைப் பார்த்த அக்ஷிதா, அவனைக் கண்டு கொள்ளாமல் போக, அவனோ இன்னும் கீழே குனிந்து பர்ஸை தேடுவதிலேயே குறியாக இருந்தான்.

அவனைப் பார்க்கையில் சிரிப்பும் சேர்ந்து எழ, ஒரு கட்டத்தில், பர்ஸை மீண்டும் வைத்து விடலாமா என்று கூட தோன்றியது.

இது என்ன விசித்திர உணர்வு? என எண்ணும் போதே, சஜித் மீண்டும் அவளிடம், “ஹலோ… இங்க உங்களை தவிர யாருமே இல்ல. என் பர்ஸை நீங்க கண்டிப்பா பாத்திருப்பீங்க. ஆர் எடுத்து இருப்பீங்க…” என சரியாகக் கணித்து கூற, அவளோ தடுமாறினாள்.

பின், உடனே “ஓஹோ… என்னை பார்த்தா உனக்கு திருடி மாதிரி இருக்கா? வேணும்ன்னா என்னை செக் பண்ணிக்க…” என்று இடுப்பில் கை வைத்து நிற்க, அங்கு அமர்ந்திருந்த பெண்மணிகளும், “ஏன்ப்பா… நீ பர்ஸை எங்கயோ தொலைச்சுட்டு வந்துட்டு, இந்த பொண்ணு கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க…” என்று ஆதரவிற்கு வர, அக்ஷிதா நக்கல் புன்னகை பூத்தாள்.

அந்நேரம், அவள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட, பேருந்தை விட்டு இறங்கியவள், பேருந்து சற்று நகன்றதும், அவனது பர்ஸை எடுத்து அவனிடமே காட்டி, நாக்கைத் துருக்கினாள்.

அதனைக் கண்டதும் திகைத்தவனுக்கோ ஓடும் பேருந்தில் இறங்கவும் தெரியாது. அது போக, தாமதமாக சென்றால், சகோதரர்களை வேறு பார்க்க வேண்டும் என்ற கடுகடுப்பில், அவளைத் தீயாக முறைத்து வைத்தான்.

___________

பார்ப்பதற்கு நவீனக் கட்டிடமாக பல ஆயிரக் கணக்கை வளைத்துப் போட்டிருந்தது உத்ஷவி வந்து இறங்கிய அலுவலகம்.

அவளுக்கு ப்ராஜக்ட் கொடுக்கும் நபர், பிரபல தொழிலதிபர். யாரும் அறியா வண்ணம், எதிராளியின் வீக் பாயிண்ட்டை கண்டறிந்து, அவர்களை வீழ்த்தவே, இவர்களை போன்றோரை வேலைக்கு வைத்து சம்பளமும் கொடுத்து வருகிறான்.

எதிராளியின் கையில் மாட்டாமல் தப்பிப்பது அவர்களின் சாமர்த்தியம். எப்போதும், அவள் அந்த அலுவலகத்தினுள் சென்றதில்லை. அடித்தளத்தில் பார்க்கிங் ஏரியாவிற்கு அருகில் குடோன் போன்ற மிகப்பெரிய அறை இருக்கும். அங்கே தான் அவளது பாஸை சந்தித்து விட்டு, விவரம் பேசி விட்டு வருவாள்.

இன்றும், அதே போல பார்க்கிங் ஏரியாவினுள் நுழைந்தாள்.

அங்கு அப்போது தான் ஸ்வரூப் தனது காரை விட்டு இறங்கி வந்து கொண்டிருக்க, சட்டைக்கு நடுவில் சாம்பல் நிற கூலிங் க்ளாஸை தொங்க விட்டிருந்தான்.

அந்த குளிர் கண்ணாடியைப் பார்த்ததுமே, உத்ஷவிக்கு கை பரபரக்க தொடங்கியது. எப்போதும், கையில் எடுக்க முடிந்த பொருட்களை மட்டுமே எடுத்துக்கொள்வாள். மற்றபடி, இவ்வாறு ஏற்படும் உந்துதலுக்காக ரிஸ்க் எடுப்பதெல்லாம் இல்லை. ஆனால், இப்போது அதனை எடுக்காமல் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாது என்று புரிந்து போக, அவன் பின்னாலேயே அலுவலகத்தினுள் செல்லத் தொடங்கினாள்.

அவனை இதுவரை இங்கு பார்த்ததே இல்லை. ‘வெளியூர்க்காரனா இருக்கும்… இன்னும் கொஞ்ச வளர்ந்திருந்தா, சீலிங்க்லேயே முட்டிக்குவான் போல.’ என தலையில் அடித்துக் கொண்டவள், அவனிடம் இருந்து எப்படி சுருட்டுவது என்று புரியாமல், கண்ணாடி மேல் எழுந்த மோகத்தையும் அடக்க இயலாமல், அவன் சென்ற அறைக்குள் அவளும் சென்று விட்டாள்.

ஆபிஸ் அறை போல இருந்த அறையில், அவன் யாருக்கோ காத்திருப்பது புரிய, அந்நேரம் கண்ணாடியை எடுத்து டேபிள் மீது வைத்தான். இது தான் நேரமென்று, டேபிள் மீதிருந்த கோப்பு ஒன்றை எடுப்பது போல, அவனருகில் சென்றவள், “எக்ஸ்கியூ மீ…” என்று விட்டு, கோப்போடு சேர்ந்து கண்ணாடியையும் எடுத்து விட்டாள்.

அப்போதும், அவன் அலைபேசியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததால் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவள் வெளியில் சென்ற நொடியிலேயே குளிர் கண்ணாடியைக் காணாமல் தேடியவன், சட்டென வெளியில் வர, அங்கு அவனது குளிர் கண்ணாடியை டாப்ஸின் மீது தேய்த்து விட்டு, மாட்டிக்கொண்டாள் உத்ஷவி.

இத்தனை நேரம், அவனது மார்புச் சூட்டில் இருந்ததால், கண்ணாடி சற்று சூடாக இருந்ததில், “சோ ஹாட்” என்று கூறியபடி திரும்ப, அங்கு, அவளைப் பார்வையால் ஊடுருவியபடி நின்றிருந்தான் ஸ்வரூப்.

அவனைக் கண்டதும், அகன்ற விழிகளை மேலும் அகட்டியவள், “என்ன லுக்கு?” என திமிராகக் கேட்க,

தன்னைக் கண்டதும் பயப்படுவாளென்று எண்ணியவனுக்கு சிறு வியப்பு தான்.

“அது என் கண்ணாடி!” என்று புருவத்தை உயர்த்தியவன், அவளனுமதி இன்றியே, அதனை எடுத்துக் கொண்டான்.

அப்போதும், அவள் திருடுகிறாள் என்று எண்ணவில்லை. ஏதோ தெரியாமல் எடுத்திருப்பாள் என்று தான் எண்ணினான்.

அதற்குள் யாரோ அழைக்கவும், பாவையின் மீது அழுத்தப்பார்வை ஒன்றை வீசி விட்டு, வேக நடையுடன் உள்ளே சென்று விட்டான்.

‘வடை போச்சே’ என்ற ரீதியில், அந்த குளிர் கண்ணாடியை பறித்தவன் சென்ற திசையைக் கண்டு, தரையில் காலை உதைத்துக் கொண்டவள், அதன் பிறகே தாமதமாவதை உணர்ந்து மீண்டும் பார்க்கிங்கிற்கு ஓடினாள்.

முதலும் முடிவும் நீ!
மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
30
+1
1
+1
4

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Indhu Mathy

   அண்ணன் தம்பிங்க முறைச்சுக்கிட்டு பேசாம இருந்தாலும் அண்ணன் பார்வைக்கு வார்த்தைக்கே தம்பிங்க கட்டுப்படுறாங்க… ஸோ ஸ்வீட்.. 🥰

   இஷா, அனன்யா, பாவனா இவங்களை கட்டுனா பங்கு பிரிக்கிறதை தான் முதல் வேலையா செய்வாங்க…. எப்படியும் இவங்களுக்கு பட்டை நாமம் தான்… 🤭

   அக்ஷிதா பாவம் சஜித் பர்ஸை திருடிட்டு என்னமா டிராமா போடுறா… 😂
   ஷவி கஷ்டப்பட்டு திருடியும் வடை போச்சே…. 😆