Loading

அன்றைய சம்பவத்திற்கு பிறகு, வான்மதி இன்னும் கவனத்துடன் வேலையில் மூழ்கினாள். கவின் அவ்வப்பொழுது வேலையில் ஏற்படும் தடுமாற்றத்தில் எரிந்து விழுந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள்.

அதனை ஆரவ் கவனித்து வர, அன்று இன்டர்காம் மூலம் வான்மதியை அறைக்கு அழைத்தான்.

“சார். கூப்பிட்டீங்களா?” அவள் எதிரில் வந்து நின்றதும், மடிக்கணினியில் பார்வையை பதித்தபடியே,

“ம்ம். இனிமே டெய்லி உன் ஒர்க் ஸ்டேட்டஸை எனக்கு சப்மிட் பண்ணிட்டு போ!” என்று உத்தரவிட்டான்.

“ஓகே சார். கவின் சார்க்கு சொல்லிட்டு உங்களுக்கு சொல்லணுமா சார்?” என அவள் புரியாமல் கேட்க,

“அவன்கிட்ட சொல்ல தேவையில்ல. இனிமே நீ டைரக்ட் ஆ என்கிட்டயே ஒர்க் பண்ணு. மார்னிங் உன் டெய்லி டாஸ்க் இனிமே நான் அசைன் பண்றேன்.” என்றதில், அவளும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி விட்டுச் செல்ல, அதனை அறிந்த கவினுக்கோ கடும்கோபம்.

அன்று மாலையே கொலைவெறியுடன் ஆரவ் முன் நின்றவனால், உள்ளுக்குள் மட்டுமே கோபப்பட முடிந்தது. வெளியில், அதனைக் காட்ட இயலவில்லை. எங்கே, இஷாந்த் தான், விடாத அழுகையில் அனைவரையும் கலங்கடித்திருந்தானே. 

ஆரவ் தவிர வேறு யாரிடமும் செல்லாமல் அழுத குழந்தையை ஆரவ் எவ்வளவோ சமாதானம் செய்தும், பால் கொடுத்துப் பார்த்தும், விளையாட்டு காட்டிப் பார்த்தும் சற்றும் சமன் செய்ய முடியவில்லை.

ஒரு கட்டத்தில் சலித்துப் போனவன் அவன் அழுகையைக் கேட்க இயலாமல் காதைப் பொத்திக்கொள்ள, அப்போது தான் ஏதோ சந்தேகம் கேட்கவென ஆரவின் அறைக்கு வந்தாள் வான்மதி. 

இஷாந்தின் அழுகையில் அவளுக்கும் ஏதோ போல் ஆகி விட, கவின் “நீ எதுக்கு வந்த?” எனக் கேட்டான் காட்டமாக.

அதில் பார்வையை திருப்பியவள், “அது… ஒரு டவுட் அதான். நான் அப்பறம் வரேன்.” என்று விட்டு நகர போனவள், சட்டென நின்று, “சார்” என ஆரவை அழைத்தாள்.

அவன் விழி திறந்து என்னவென பார்த்ததும், “நான் வேணா பேபியை வைச்சுருக்கவா.” என்று கேட்டதில்,

“யூ ஜஸ்ட் டூ யுவர் ஓன் பிசினஸ். கெட் அவுட்” என்று கிட்டத்தட்ட கர்ஜித்தான் ஆரவ் முகிலன்.

அவன் திடீரென கத்துவான் என எதிர்பாராதவளுக்கு மனம் படபடவென துடிக்க, கை கால் நடுங்க, வெளியில் சென்று விட்டவளுக்கு இன்னும் மூச்சு முட்டுவது போல் இருந்தது. 

ஆரவ் வான்மதி மீது காட்டிய கோபத்தில் நிம்மதியாக உணர்ந்தது என்னவோ கவின் தான்.

ஆனால், இன்னும் இஷாந்தின் அழுகையை அடக்க இயலாமல் திணறிய ஆரவ், அவனை தூக்கிக்கொண்டு காரில் சுற்றினான். வேடிக்கை காட்டினான்.

சற்று அழுகை நின்றாலும் சிணுங்கல் நிற்கவில்லை. அதற்கு மேல் என்ன செய்வதென்றும் அவனுக்குத் தெரியவில்லை.

குடும்ப மருத்துவருக்கு போன் செய்து கேட்டால், வயிற்று வலியாக இருக்கும், மருந்து கொடுத்தால் தூங்கி விடுவான் என்றிட, அதையும் செய்து பார்த்தாயிற்று. 

ஆனாலும், தன்னுதிரத்தின் கண்ணீரை நிறுத்த இயலாதவனுக்கு, கண்கள் நீரால் சிவந்தது.

இதற்கு மேல் வெளியில் சுற்றினால், இஷாந்தின் உடல்நிலை பாதிக்கப்படும் என்றெண்ணி, மீண்டும் அலுவலகத்திற்கே வந்தவன், மடியில் போட்டு சிணுங்கலுடனேயே மகனை தூங்க வைக்க முற்பட்டான்.

இஷாந்தின் அழுகையை கண்டு மற்றவர்களுக்கும் வேலை ஓடவில்லை. 

மாலை நேரம் ஆகியதால், அன்றைய வேலைப் பற்றிய விவரங்களை கூறி விட்டு கிளம்ப எண்ணி, மீண்டும் ஆரவின் அறைக்கு வந்தாள் வான்மதி. 

வந்தவள், விவரங்களை மட்டும் கூறி விட்டு, உதட்டைப் பிதுக்கி தேம்பிக்கொண்டிருந்த இஷாந்தை கண்டு,

“சார். பேபிக்கு பேம்பர்ஸ் கம்ஃபர்ட்டபிள் – ஆ இல்லைன்னா கூட சிணுங்கிகிட்டே இருப்பாங்க. சில பேபீஸ்க்கு ஒத்துக்காம புண்ணா கூட ஆகிடும். நீங்க ஆபிஸ்க்கு கூட்டிட்டு வர்றனால, மார்னிங் டு நைட் பேம்பர்ஸ் போட்டே வச்சு இருக்கீங்க தான… அதான்…” என மடமடவென பேசியவளை நிறுத்தினான் கவின்.

“எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேண்டியது இல்ல கிளம்பு!” என்று அதட்டிட, அவளும் அவனை அமைதியாகப் பார்த்து, தோளைக் குலுக்கி விட்டு சென்று விட்டாள்.

‘இவள் என்ன என்னை பார்த்து பயப்படவே மாட்டுறா.’ என எரிச்சல் வேறு சூழ்ந்தது அவனுக்கு.

அவள் சொல்லி விட்டு சென்றதையே சிந்தித்த ஆரவ், வேகமாக டயப்பரை கழற்ற எத்தனிக்க, கவினோ “டேய் அவள் சொல்றான்னு…” என்று பேசி முடிக்கும் முன், ஆரவின் சினப் பார்வையில் கப்சிப் என ஆகி விட்டான்.

ஆனால், வான்மதி கூறியது போல, இஷாந்திற்கு பின் பகுதி எல்லாம் சிவந்திருந்தது. அதனை கழற்றியதும் தான், சிணுங்கலை நிறுத்தியவன், மெல்ல துயிலுக்கு செல்ல, நால்வருக்கும் வியப்பு தான். 

“இத்துனூண்டு பேம்பர்ஸை கழட்ட சொல்லியாடா இவ்ளோ நேரம் அழுத…” என தன்விக் தலையை சொரிய,

ஹேமா, “அதான் பாரேன். ஆனா, அவள் எப்படி கரெக்ட் – ஆ இதான் ப்ராப்ளம்ன்னு கெஸ் பண்ணுனா. நல்லவேளை இப்போவாச்சு அழுகையை நிறுத்துனானே.” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கவின் தான், “அவ சும்மா உளறிட்டு போயிருக்கா. அவனும் இவ்ளோ நேரம் அழுது டயர்ட் ஆகி தூங்கிட்டான். என்னமோ பெருசா புகழாத.” என கடுப்பாக கூறிட, ஆரவ் உறங்கி விட்ட இஷாந்தையே மகிழ்வுடன் பார்த்து, ஆசையுடன் முத்தமிட்டான்.

உறக்கம் கேட்டு கண்கள் கெஞ்சினாலும், அதனை பொருட்படுத்தாது விட்டத்தை இலக்கின்றி பார்த்தவாறு படுத்திருந்தாள் வான்மதி.

எங்கு எண்ணங்களை ஓட விட்டாலும், அது இறுதியில் எங்கெங்கோ வந்து முடிந்து, வற்றிய விழிகளில் நீரூற்றை சுரக்க விட, விழிகளைத் திறக்க பயந்து இறுக்கி மூடிக் கொண்டாள்.

இமைகளுக்குள் புதைந்திருந்த கருவிழிகள் அங்கும் இங்கும் அலைப்புற, இறுதியில் மனக்கண்ணிற்குள் முதன் முதலில் அலுவலகம் வந்து ஆரவைப் பார்த்தபோது அவன் கையில் குழந்தையை வைத்திருந்த கோலம் பசுமையாக காட்சியாக, அதில் சலாரென்று எழுந்து அமர்ந்தாள்.

மனம் ஏனென்று அறியாமல் படபடவெனத் துடிக்க, துடிக்கும் மனதை அடக்க வழி தெரியாமல் இமைகளும் படபடத்தது.

பின், அந்த குழந்தையின் அழுத முகம் நினைவு வர,

‘பேபி கியூட் ஆ இருக்கு. ஆனா ஏன் இப்படி அழுக விட்டு, ஆபிஸ்க்கு கூட்டிட்டு வர்றாங்கன்னு தெரியல. பாவம்… பேபி அழும் போது கஷ்டமா இருக்கு.’ என்றெண்ணியபடி வாடியவள், அப்படியே உறங்கியும் விட்டாள்.

க்ளையன்ட் மீட்டிங் இருக்கு. நான் வர டூ ஹவர்ஸ் ஆகும். கொஞ்ச நேரத்துல இஷுக்கு செரலாக் குடுக்கணும். அழுகுறான்னு விட்டுறாத. அவன் சாப்புடுறதே அதான்.” என்று இதோடு பல முறை எச்சரித்தான் ஆரவ்.

கவின் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் தலையாட்டி விட்டு, “ஆறு மாச குழந்தை செரலாக் சாப்பிடாம சேம்பைன் ஆ குடிக்கும்.” என முணுமுணுத்தவன், “நாங்க பாத்துக்குறோம் டா நீ போ” என்றான் அடக்கமாக.

அவனை பார்வையால் எரித்தவன், “அழுக சத்தம் மட்டும் கேட்கட்டும் அப்பறம் இருக்கு உனக்கு.” என பல்லைக்கடித்து உறுமி விட்டே செல்ல, தன்விக் தான் எச்சிலை விழுங்கினான்.

ஹேமா, இப்போதிருந்தே காதில் பஞ்சை வைத்து அடைக்க முற்பட, கவின் “என்ன பண்ற?” எனக் கேட்டதும்,

“எப்படியும் வந்து ரொம்ப இனிமையான வார்த்தை எல்லாம் பேச போறான். அதான், இப்போவே பஞ்சை வச்சு காத அடைக்கிறேன். இப்போலாம், கூட ஒரு பொண்ணு இருக்கேன்னு கூட பாக்காம ரொம்ப பச்சையா பேசுறான் டா.” என்றாள் பாவமாக.

“ஓ நீ பொண்ணா ஹேமா…? அப்போ அப்போ சொல்லு. இல்லைன்னா மறந்துடுது” என அவளை வாரிய கவினை முறைக்கவும் இஷாந்த் கண் விழித்து அழுகவும் சரியாக இருந்தது.

எப்போதும் துயில் கலையும் போது தந்தையின் அருகாமை நிச்சயம் அவனுக்கு வேண்டும். ஆனால், வேலைப்பளுவின் காரணமாக சில நேரம் இப்படி அவனை விட்டு செல்ல நேரும் போது ஆரவ் தான் தவித்துப் போவான்.

பத்து தலைமறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவு சொத்து இல்லையென்றாலும், அடுத்த பத்து வருடம் நட்டம் இல்லாமல் தொழிலை நடத்த அனைத்து திட்டமும் தீட்டி அதனை செயல்படுத்தும் அளவு பணம் கொண்டவன் தான். ஆனால் அதனை தக்க வைக்க அவன் ஓட வேண்டுமே.

அடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த இடைவெளியில் ஆரவ் கவினுக்கு போன் செய்ய, அவனுக்கோ செத்தோம் என்று தான் இருந்தது.

போனை ஆன் செய்ததுமே மகன் அழுவது தெரிய, கவின் “கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவான் டா” என சமன் செய்தான்.

ஆனால், அதனை ஏற்க இயலாமல், மீட்டிங்கை பாதியில் முடித்துக் கொண்டு வந்தவனை, தன்னிருக்கையில் இருந்த வான்மதி தான் நிம்மதியாக பார்த்தாள்.

என்னதான் ஜன்னல்களை அடைத்து வைத்தாலும், இஷாந்தின் அழுகுரல் லேசாக வெளியில் கேட்கத் தான் செய்தது.

அவளுக்கு தான், தவிப்பாக இருந்தது.

‘பேபி இவளோ நேரம் அழுகுதே. சார் எங்க போனாரு. நம்ம போய் பாப்போமா.’ என பல கேள்விகள் எழுந்தாலும்,

‘இது உனக்கு தேவையா. வாங்குன அடி எல்லாம் பத்தலையா’ என்றே உள்மனம் எக்களித்தது.

அதனை ஒதுக்கியவள், ஆரவைக் கண்டதும் நிம்மதியாக வேலையைத் தொடர, ஆனாலும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதில் அதற்கு மேல் இருக்கையில் அமர இயலாமல், அவனறைக்கு சென்றாள்.

அப்போது தான், நண்பர்களை வாய்க்கு வந்த படி காதில் கேட்க இயலா வார்த்தைகளால் ஆரவ் திட்டிக் கொண்டிருக்க, கதவைத் திறந்த வான்மதி அப்படியே காதையும் கண்ணையும் மூடிக்கொண்டு நின்றாள்.

அவளைக் கண்டதும் சற்றே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “உன்ன யாரு இப்ப கூப்ட்டா?” என கடுப்படிக்க, அதனைக் கேட்க அவள் காதில் இருந்து கையை எடுக்க வேண்டுமே!

“ஷிட்.” என டேபிளில் குத்தியவன், கோபத்துடன் அவனின் இருக்கையில் சென்று அமர்ந்து, இஷாந்திற்கு உணவு ஊட்ட முற்பட, அப்போது தான் ஒரு கண்ணை லேசாக திறந்து பார்த்தவள், கவின் அவளை முறைத்திருப்பதை பார்த்து இரண்டு கண்களையும் திறந்தாள்.

கவின், “உனக்கு சென்ஸ் இல்ல. என்னமோ உன் புருசன் வீட்டுக்கு வர்ற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு உள்ள வர்ற.” என்றான் வார்த்தைகள் தடிக்க.

அதில் இறுகிய பாவையவளின், கண்கள் லேசாக பனித்து விட, தலை தாழ்த்தியபடியே வெளியில் செல்ல எத்தனித்தாள்.

அதற்குள் ஆரவ், “வான்மதி!” என அதட்டலாக அழைத்து, “எதுக்கு வந்த?” எனக் கேட்க,

நலுங்கிய குரலில், “பேபி அழுதுகிட்டே இருந்த சத்தம் கேட்டுச்சு அதான். சாரி சார்.” என்றவள் மேலும் பேச விருப்பம் இல்லாமல் நகர,

“உனக்கு பேபியை பாத்துக்க தெரியுமா?” என மறுகேள்வி கேட்டான்.

அதற்கு அவள் ஆமோதிப்பாக தலையாட்ட, “அப்போ வந்து இவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு, அழுகையை நிறுத்து” என்றான் கட்டளையாக.

அதில் நிமிர்ந்தவள், மீண்டும் தலையாட்டி விட்டு, இஷாந்தை கையில் வாங்கினாள்.

ஆனால் அதன் பிறகு, அவள் செய்யாத குட்டிக் கரணமே இல்லை. பார்ப்பவர்கள் பைத்தியம் எனக் கூறும் அளவு, ரைம்ஸ் கூறி, மடியில் போட்டு தட்டிக் கொடுத்து, இவள் இவ்வளவு பேசுவாளா என எண்ணும் அளவுக்கு ஏதேதோ கதை கூறியவளின் வார்த்தைகள் புரிந்தது போல இஷாந்தும் “ஆ… ஆ…” என அவள் வாயையே பார்த்து பேச முயன்று, அவ்வப்பொழுது அவள் முகத்தை அஷ்டகோணலாக்கி விளையாட்டு காட்டுவதில் சிரிக்கவும் செய்தான்.

அவள் செய்வதை எல்லாம் பே வென பார்த்திருந்த நண்பர்கள் மூவரில், ஹேமா , “டேய் கவி தன்வி வாங்கடா வெளிய போலாம்.” என பரபரக்க, இருவரும் என்ன என்று பார்த்தனர்.

“இந்த பொண்ணு இப்டிலாம் பண்ணி, அவன் அழுகையை நிறுத்திட்டாள். சாப்டவும் வச்சுட்டா அப்பறம் ஆரவ் நம்மளை துரத்தி துரத்தி அடிப்பான்” என்று பயமுறுத்த, தன்விக்கிற்கு அப்போதே பயப்பந்து உருண்டது.

கவினுக்கும் தான். ஆனால் இவளிடம் குழந்தையை விடுவதா என எரிச்சல் மேலோங்கினலும் ஹேமாவின் வற்புறுத்தலில் இருவரும் வெளியில் சென்றனர்.

“யாருடி பட்டுக்குட்டி உங்களை அடிச்சா ஏன் அழுகுறீங்க. வயிறு வலிக்குதா. பேம்பர்ஸ்ஸ கழட்டிடலாமா?” என அவளின் ஒவ்வொரு செயலுக்கும் வாய் மூடவே இல்லை.

“பேபி பாத்ரூம் போனானா?” என அவனிடம் விளையாடிய படியே ஆரவிடம் கேட்க அவன் தான், அவள் பேசியதே காதில் வாங்காமல் திருதிருவென விழித்தான் பாவம்.

‘என்ன பண்றா இந்த பொண்ணு. லூசா இவ.’ என எண்ணினாலும், அது தான் குழந்தைக்கும் பிடிக்கிறது என உணர்ந்து கொண்டவனை, மீண்டும் கேள்வி கேட்டாள் வான்மதி.

“ம்ம். மார்னிங் போனான். ஆனா அப்போவும் கொஞ்சம் அழுதுகிட்டே தான் போனான். டைஜஸ்ட் பிராப்ளம் இருக்கு போல” என்றவனை அவள் விழிகள் சற்று வியப்பாகவே பார்த்தது.

நிச்சயம் இக்கேள்விக்கு இவனுக்கு விடை தெரியாது என்று தான் நினைத்து இருந்தாள்.

என்ன தான் குழந்தை மீது அக்கறையாக இருந்தாலும், அந்த அளவு துல்லியமாக குழந்தையின் தேவைகளை பார்த்துக் கொள்பவன் போல அவளுக்கு தெரியவில்லை போலும்.

ஆனால், வீட்டிலும் எந்நேரமும் மகனுடனே நேரத்தை செலவழித்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனை பற்றி அவளுக்கும் தெரியவில்லை.

அதனை சரியாக கணித்தவன், விளக்கமேதும் தராமல் அவளை அமைதியாக பார்க்க, வான்மதி தான், “ரொம்ப பேம்பர்ஸ் யூஸ் பண்ணாதீங்க சார். அட்லீஸ்ட் சாப்பிடும் போதாவது ஃப்ரீயா விடுங்க.

எப்போவும் சாப்பாடு குடுத்து முடிச்சதும் பேபிய, கொஞ்ச நேரம் உட்கார வச்சு இல்லன்னா நிக்க வச்சு, பேச்சு குடுங்க. நம்மள மாதிரி ஆக்டிவிட்டிஸ் பண்ணுனா ஜீரணம் ஆகும். ஆனா பேபி இன்னும் தவக்க கூட இல்ல தான. சோ நம்ம தான் அவங்களுக்கு ஜீரணம் ஆக ஹெல்ப் பண்ணனும்.”

என்றவள், சொன்னவாறே செராலக் ஐ ஊட்டி விட்டு. சிறிது நேரம் தரையில் நிற்க வைத்து பிடிக்க, இஷாந்த் குஷியாக கையை காலை ஆட்டினான்.

அதில் அவள் மடியின் மீதே அவன் ஈரமாக்கத் தொடங்க, ஒற்றைக் கண்ணை மூடி திறந்தவள், “ஷேம் ஷேம்…” என அழுவது போல பாவனை காட்ட அதற்கும் கன்னக்குழி விழ சிரித்து வைத்தான் இஷாந்த்.

ஆரவ் தான் வேகமாக, “ஹே! இங்க குடு அவன” என்று வர,

“வேணாம். வேணாம் சார். அவன் ஒன் பாத்ரூம் போகும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அப்பறம் பயந்துடுவான். சம்டைம்ஸ் நீர்க்கடுப்பு கூட ஆகிடும்.” என்று தடுத்திட, அவனுக்கு தலை சுற்றியது.

மேலும், வைப்ஸ் கொண்டு குழந்தையின் உடலை துடைத்து விட்டவள், “பேபி பவுடர், மை, ஆயில் எல்லாம் இல்லையா சார்?” எனக் கேட்க அவன் இப்போதும் விழித்தான்.

“எல்லாம் வீட்ல இருக்கு. அவன் அதெல்லாம் போட வந்தாலே தட்டி விட்டு அழுவான்” என்றவன், “ஒன் செக்” என்று விட்டு போனில் கவினுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

இஷாந்தை மடியில் போட்டு தட்டிக் கொடுத்த வான்மதி, “அப்படி தான் அழுவாங்க சார். நீங்க தூங்கும் போது அதெல்லாம் போட்டு விடுங்க.” என்று தலையாட்டிட,

‘அவன் தூங்குறப்ப தான நானே வேலை பாக்குறேன்’ என எண்ணிக்கொண்டாலும் வெளியில் தலையசைத்து வைத்தான்.

சில நிமிடங்களில் குழந்தையும் கண்ணசர, கவின், ஆரவ் கேட்ட
பொருட்களை வாங்கி கொண்டு உள்ளே வந்தவன், “இதெல்லாம் இங்க எதுக்கு டா?” எனக் கேட்டான் புரியாமல்.

ஆரவ் அதனை கவனியாமல், பேபி பவுடர், மை, சீப்பு என அனைத்தையும் அவள் முன் கடை பரப்ப, ‘இதை எப்ப வாங்க சொன்னாரு’ என மெச்சியபடியே, துயிலுக்குள் சென்ற இஷாந்திற்கு மை போட்டு, தலை சீவிட, அதன் பிறகே நன்றாக வளர்ந்திருந்த நகங்களை கண்டாள்.

“நகம் வெட்டி விடவே மாட்டீங்களா?” என முறைப்பது போல கேட்டவளைக் கண்டு ஏனோ அவனுக்கு சிரிப்பே வந்தது, ‘இங்க நான் பாஸா இல்ல இவ பாஸா’ என்று.

“நகம் கட் பண்ண வந்தாலே கையை கால உதருறான். நான் கரெக்ட் – ஆ கட் பண்ணாம, எங்கேயும் காயம் ஆகிடுமோன்னு பயந்து கட் பண்ணவே இல்ல” என்றான் முகம் சுருக்கி.

‘இவனுக்கு பயமா? இவனை பார்த்தா தான் எனக்கு ஏன்னே தெரியாம திக்குன்னு வைக்குது’ என சிந்தனை வந்தாலும், அதனை கண்டுகொள்ளாதவளாய், அழகாய் நகத்தையும் சீர் படுத்தி விட்டு ஹப்பாடா என்று நிமிர்ந்தாள்.

கவின்க்கு தான் இது சற்றும் பிடிக்கவில்லை. அதனாலேயே பொருட்களை கொடுத்து விட்டு அவன் நகர்ந்து விட,

வான்மதி மடியில் உறங்கிக் கொண்டிருந்த பூக்குவியலையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

அக்கண்ணில் மிளிர்வது என்ன என்று அவனுக்கும் புரியவில்லை.

பின் ஆரவே, “இஷுவ தொட்டில்ல போட்டுட்டு கிளம்பு வான்மதி. ஆல்ரெடி வர்கிங் டைம் முடிஞ்சுது.”  என்றதில் இத்தனை நேரம் மலர்ந்திருந்த முகம் சற்றே கூம்பியது.

“ஓகே சார்” உள்ளே சென்ற குரலில் கூறியவள், அழுத்தமாக இஷாந்தின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, தொட்டிலில் இட, அவளின் செய்கைகளை எல்லாம் நோட்டமிட்டவன், ஒரு செட் சுடிதாரையும் கொடுத்தான்.

வான்மதி புரியாமல் பார்க்க, “உன் ட்ரெஸ் ஈரமா இருக்கு. இப்படியே நீ போக முடியாதுல. சோ, இத போட்டுக்கோ” என்று கொடுக்க,

அவளும் ஈரத்தோடு பேருந்தில் பயணம் செய்ய முடியாது என்ற உண்மை உணர, மறுக்காமல் வாங்கிக் கொண்டு, வெளியில் இருக்கும் ஓய்வறைக்கு சென்றாள்.

உடை மாற்றி விட்டு வெளியில் வந்தவளுக்கு தொண்டை வறண்டது போல் இருக்க, தண்ணீரை வாய்க்குள் செலுத்தினாள்.

அந்நேரம். அவசரமாக அவளை நோக்கி வந்த ஆரவ் தீவிரத்துடன்,

“நீ சொன்ன எதுவுமே கூகிள்ல சொல்லவே இல்ல. நீ எங்க பேபி வளக்குற கோர்ஸ் படிச்ச?” எனக் கேட்க,

அவளோ வாயில் வைத்திருந்த நீரை எல்லாம் அவன் சட்டையிலேயே துப்பி விட்டு ‘அய்யயோ’ என விழிக்க, அவனோ வெறியாக முறைத்திருந்தான்.

தேன் தூவும்…!
மேகா...

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
51
+1
225
+1
22
+1
17

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்