3,516 views

 

ஜிஷ்ணு தர்மனின் கையில் இருந்து இரத்தம் வழிவதை கண்ட, கட்சி ஆட்களும் குமரனும், உடன் இருந்த கௌசிக்கும் அதிர, இறுதியில் குமரன் தான் அவனை அவளிடம் இருந்து பிரித்தான்.

“மாப்ள இது கோர்ட்டுடா அமைதியா இரு” என அடிக்குரலில் கண்டிக்க, ஜிஷ்ணு அழுத்தியதால் கழுத்தில் எழுந்த வலிதனை அடக்கிக்கொண்ட வசுந்தரா, “எதிர்க்கட்சி தரப்பு வக்கீல் அவர்களே, உங்க அடியாள் நண்பரை அமைதியா இருக்க வைங்க. இல்ல… அடக்கம் தான் பண்ணனும்.” என்றாள் கேலி சீறலுடன்.

ஜிஷ்ணுவோ, இதழ் வளைத்து, “என்னை அடக்கம் பண்ணும் போது, கூடவே உன்னையும் அடக்கம் பண்ண வைக்கிறேன் வக்கீலே. ஏன்னா, சின்ன இடத்துல, இருட்டுல எனக்கு பயம்ம்மா இருக்கும்ல.” என வஞ்சனையுடன் பேசியவனின் விழிகள் வஞ்சகமின்றியே பெண்ணின் மேனியை மேய, வசுந்தரா கோபத்தை அடக்க அரும்பாடு பட்டாள்.

“ப்ச், வா தர்மா…” என கிட்டத்தட்ட ஜிஷ்ணுவை இழுத்து சென்ற குமரன், வேகமாக முதலுதவி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நம்ம ஒரு முக்கியமான விஷயத்துல இறங்கி இருக்கோம். அது முடியிறவரை  தயவு செஞ்சு அடிதடி, கொலைன்னு இறங்காம இருடா.” என்றே குமரன் கெஞ்ச, அதனை உதாசீனப்படுத்தியவனுக்கு, அமைச்சர் நீலகண்டன் அலைபேசியில் அழைத்திருந்தார்.

உடனே அதனை எடுத்தவன், “சொல்லுங்க தலைவரே…” என்று பவ்யமாக கூற,

“என்ன தர்மா, ஏதோ கோர்ட்டு கேஸுன்னு பிரச்சனைன்னு கேள்வி பட்டேன்.” என்றார் அந்த ஐம்பது வயது அமைச்சர்.

“அட… இதெல்லாம் ஒரு விசயமா தலைவரே. விட்டு தள்ளுங்க. சரி… கன்னிமனூர் சம்பந்தமா சி.எம் – அ பார்க்க போனீங்களே. என்ன ஆச்சு?” என்றான் அவன் காரியத்தில் கண்ணாக.

“அதை பத்தி பேச தான் கூப்பிட்டேன் தர்மா. இப்ப நீ எங்க இருக்க? உடனே கிளம்பி மெட்றாஸ்க்கு வா. அப்பறம், நம்ம பட்டா சம்பத்தப்பட்ட ஃபைல், மத்த விசயம் எல்லாம் பத்திரமா தான இருக்கு.” என அதனை மட்டும் கிசுகிசுப்பாக கேட்டிட,

“இருக்குறது என்கிட்ட தலைவரே. சின்ன தூசி கூட கிட்ட வராது…” அழுத்தமும் கர்வமும் நிறைய கூறியவனின் கூற்றில் திருப்தி அடைந்தவர், அவனை உடனடியாக சென்னைக்கு வர சொல்லி உத்தரவிட, அவனும் அடுத்த விமானத்தில் பறந்தான்.

அமைச்சர் நீலகண்டனின் மறைமுக பினாமி ஜிஷ்ணு தர்மன். அவன் மீது அசைக்க இயலாத நம்பிக்கை அவருக்கு. அதுவே அவனுக்கு வசதியாக போய் விட, பல சொத்துக்களை குவித்து இருந்தான்.

தன் வீட்டு வாசலில் செருப்பை அலங்கோலமாக கழற்றி எறிந்த வசுந்தராவிற்கு, மனம் தீயாக எரிந்தது. இறந்து போன ஜாதி துணை தலைவர் செங்கமலம், அவளுக்கு மாமன் முறை. அதிலும், அவர்களின் தோப்பிற்கே வந்து, தன் தந்தையின் முன்பும், தோட்டத்தில் வேலை செய்த அறிவழகன் முன்பும் ஜிஷ்ணு செங்கமலத்தை கத்தியால் குத்தி கொலை செய்திருக்க, அக்குற்றத்தை அவளால் இன்னும் நிரூபிக்கத் தான் இயலவில்லை.

அக்கோபமே அவளுள் காட்டுத்தீயாய் பரவி இருந்தது. நிச்சயம் தன் தந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்துவான் என உள்ளுணர்வு எச்சரிக்கை கொடுக்க, ‘மவனே, அதுக்கு முன்னாடி நான் உன்ன கொலை பண்ணிடுவேன்’ என்றே சிடுசிடுத்தாள்.

மகளின் முகத்தையே கூர்மையாக பார்த்த, அவளின் தந்தை ராஜசேகர் தான் முறுக்கு மீசையை தடவியபடி “என்னம்மா, முகமெல்லாம் வாடி போய் இருக்கு. அந்த தர்மா பைய, கேச ஒன்னும் இல்லாம ஆக்கிட்டானா?” என்றார் நடந்ததை கணித்து.

“அவன் என்ன ஒண்ணும் இல்லாம ஆக்குறது. அவன நான் நாயா பேயா அலைய விட்டு, களி திங்க வைக்கல. நான் வசுந்தரா இல்லப்பா” எனப் பல்லைக்கடித்தாள்.

“இருந்த ஒரு சாட்சியும் போச்சு. மிஞ்சி இருக்குறது நான் மட்டும் தான் தாராம்மா. பதவி வெறி தலைக்கேறி போய் திரியிறான். அதை தக்க வைக்க, எந்த எல்லைக்கும் போவான்… எல்லாம் சாதி புத்தி… அதுக்கு தான், தலையால அடிச்சேன், அந்த நாய்ங்களை நாய்ங்களாவே வைக்கணும்னு…” என்றவருக்கு, சிறு வயது முதல் தன்னுடன் ஒன்றாக வளர்ந்த செங்கமலத்தின் இறப்பை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அதிலும், வெள்ளைப்பாளையத்தின் ஜாதி தலைவராக திகழும் ராஜசேகரின் வலது கை செங்கமலம். இப்போதோ, ஒரு கை இழந்தது போன்று தளர்ந்து போனார்.

வசுந்தராவிற்கு இப்பேச்சே தலைவலியை கொடுக்க, பதில் பேசாமல் அறைக்கு சென்று விட்டாள். அடுத்து அடுத்து அவள் நடத்த வேண்டிய வழக்குகள் பல இருக்க, அத்தனையையும் ஒதுக்கி வைத்து, ஜிஷ்ணு தர்மனின் மீதே தன் பார்வையை பதித்திருந்தாள்.

இதற்கிடையில், கன்னிமனூர் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் ஒரு புறம் சென்று கொண்டிருக்கிறது என்று புரிந்தாலும், அவனுடைய திட்டம் தான் என்ன என்று முழுதாக அவளுக்கு புரியவில்லை.

சட்ட அலுவலகத்தில், கன்னத்தில் கை வைத்து சோகமே உருவாக அமர்ந்திருந்தான் பரத்.

அவனுடன் பணி புரியும் பெண்ணான அர்ச்சனா, “என்ன பரத் சார்… முகத்துல கவலை வழியுது.” என நக்கலாக கேட்க,

“பின்ன கவலை வழியாம… ஏதோ ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம்ன்ற ஒரே காரணத்துக்காக, தாரா கூட சேர்ந்து ஒர்க் பண்ணலாம்ன்னு வந்தா, அவ என்னை அரசியல்வாதிக்கிட்ட கோர்த்து விட்டு, கொலை பண்ண பாக்குறா. சாட்சி சொல்ல வந்தவனே செத்து கிடக்கிறான். சாட்சி உருவாக்க முயற்சி பண்ணுன என்னை சும்மா விடுவான்னா நினைக்கிற.” என்றே விழிகள் வெளியில் விழும் அளவு அரண்டான்.

அர்ச்சனாவோ நமுட்டு சிரிப்புடன், “நம்ம மேடம் கூட இருக்கும் போது நீங்க ஏன் பயப்படுறீங்க. அவங்களே எவ்ளோ கெத்தா அவனை ஃபேஸ் பண்றாங்க. கூல் சார்.” என ஆறுதல் படுத்த, அந்நேரம் அங்கு வந்த வசுந்தராவிடம், “மேடம், இன்னைக்கு முக்கியமான ஹியரிங் இருக்கு.” என்று நினைவு படுத்தினாள்.

ஏற்கனவே எரிச்சலில் இருந்த வசுந்தரா, நெற்றியை தேய்த்தபடி, “ப்ச்… நம்ம எடுத்த பாயிண்ட்ஸ் அண்ட் சாட்சி எல்லாம் இருக்கு தான, அதை நீயும் பரத்தும் பார்த்துக்கோங்க.” என்று விட,

அதில் விழித்த அர்ச்சனா, “மேம்… நான் தனியா எப்படி பேசுவேன். நீங்களும் வாங்க” என்று பம்ம,

“இப்ப நீ போய் இதை தனியா ஹேண்டில் பண்ணல. உன்ன ஃபயர் பண்ணிடுவேன்.” என அனல் பறக்க எச்சரித்தவள், என்ன மாதிரி பேச வேண்டும், எந்த இடத்தில் எந்த சாட்சியை காட்ட வேண்டும், எதிர் தரப்பு வக்கீல் எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார் என அனைத்தையும் கணித்து கூற, அதனை கேட்டுக்கொண்ட அர்ச்சனாவிற்கோ கிலி பிடித்தது.

பாவமாக பரத்தை பார்க்க, “என்னை ஏன் பாக்குற. இன்னைக்கு கோர்ட்ல தான் நம்ம தலைவிதின்னா அதை யாரால மாத்த முடியும்” என நொந்தபடி, இருவரும் சென்றனர்.

அங்கு, சாட்சாத் வசுந்தரா சொன்னது போன்றே வாதங்களும் நடக்க, அவளின் வழிமுறைப்படி சாட்சிகளை காட்ட, வழக்கும் அவர்கள் புறமே சாய்ந்து வெற்றியை கொடுத்தது.

“ஹையா, நான் ஜெயிச்ச முதல் கேசு…” என துள்ளி குதித்தபடி அர்ச்சனா வெளியில் வர, “நீ அட்டென்ட் பண்ண முதல் கேஸுன்னு சொல்லு” என்று அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு பரத் வசுந்தராவின் அறைக்கு செல்ல அங்கு அவள் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

“அடுத்து என்னை எங்க எப்படி கோர்த்து விடலாம்ன்னு பிளான் பண்றியா?” என கேலியுடன் கேட்ட பரத்தை முறைத்தவள், ஆமோதிப்பாக தலையாட்டி, “அந்த தர்மா ஏதோ பண்றான். சம்திங் இஸ் நாட் ரைட்! அவனை இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணனும்” என்றாள் கண்ணை சுருக்கி.

“இன்னும் க்ளோசான்னா அவன் பெட் ரூம்க்கு தான் போகணும். அங்க அவன் எந்த நேரத்துல எந்த பொண்ணோட இருப்பானோ யாரு கண்டா… அதையெல்லாம் பார்க்க வைச்சுடாத தாரா?” என்றான் வராத கண்ணீரை துடைத்தபடி.

அவனைக்கண்டு லேசர் பார்வை வீசிய வசுந்தரா, “பொண்ணா? யாரு?” எனக் கேட்டாள் சலனமின்றி.

“யாருக்கு தெரியும். குடியும் கூத்துமா அவன் தான் வாழுறான்.” என்று மேலே பார்த்து ஃபீல் செய்தவனை, “யாரு அந்த பொண்ணுன்னு கேட்டேன்?” என்றாள் அழுத்தக் குரலில்.

அவள் கண்களில் வேறு சினம் எல்லையை கடந்திருக்க, “சத்தியமா தெரியல தாரா. அரசியல்வாதி, குடிப்பான், கொலை பண்ணுவான், இது மட்டும் இல்லாமலா இருப்பான். அதான் ஒரு ஃப்ளோல சொன்னேன். வேணும்ன்னா, இன்னும் ரெண்டு நாள் டைம் குடு. அதையும் கண்டுபிடிச்சு சொல்றேன்.” என குழப்பமாக கேட்க,

சட்டென தணிந்தவள், “அதை கண்டுபிடிச்சு, நீ என்ன அவனுக்கு மாமா வேலை பாக்க போறியா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ நேரடியா அவன் வீட்டுக்கு போகணும். அவன் இருக்கும் போது…” என்று குண்டை தூக்கி போட, பரத்திற்கு இதயமே நின்று விட்டது.

“பரத் சார், மர்டர் அட்டெம்ப்ட் நம்பர் 2.” என அர்ச்சனா கிசுகிசுக்க, ‘அய்யயோ… நம்ம மூடிக்கிட்டு சென்னைலயே இருந்து இருக்கலாம் போல, இதெல்லாம் ஒரு ஊருன்னு இங்க வந்து சிக்கிட்டோமே’ என கரும்பு மிஷினில் சிக்கியவன் போல திணறினான்.

“சரி எப்ப போகணும்?” என்று பலியாடாக கேட்டவனிடம்,

“இப்போ அவன் சென்னைக்கு போயிருக்கான். வரட்டும். வந்ததும் அவனை சிறப்பா செய்யணும்…” என்றதில், “என்ன செய்யப்போற?” என்றான் புரியாமல்.

“சொல்றேன்…” என கைகளை தட்டிக்கொண்டவளின் இதழ்கள் குரூர புன்னகை ஒன்றை சிந்தியது.

சென்னையில், அமைச்சர் நீல கண்டனுக்கு பின்னால் நின்றிருந்த ஜிஷ்ணு தர்மன், எதிரில் அமர்ந்திருந்த முதலமைச்சருக்கு வணக்கத்தை வைத்திட, மூவரும் சில மணித்துளிகள் கலந்துரையாடலில் செலவழித்திட, இறுதியில் முதலமைச்சர் திருமுருகன்,

“மத்த எம். எல். ஏ கிட்ட நான் இத பத்தி பேசுறேன். கவனம் தர்மா, கடைசி நேரத்துல எதிர் கட்சிகாரன், ஏதாவது நொட்டை சொல்லுவான். அந்த நேரம், நான் எல்லாருக்கும் பொதுவா இருக்குற மாதிரி தான் நடிப்பேன். உன் வாதம் அங்க சரியா செல்லுபடி ஆகி, எதிர்கட்சிகாரனை உட்கார வைக்கணும்…” என்று கண்டிப்பாய் கூறியவருக்கு, மூப்பின் காரணமாக தொண்டை அடைத்தது.

“நான் பாத்துக்குறேன்யா.” என்றவன் சிறிது யோசித்து விட்டு, “நம்ம கட்சி சார்பாவும் ரெண்டு பேரை நமக்கு எதிரா பேச சொல்லுங்கய்யா. அப்ப தான், இது திடீர்ன்னு எடுத்த முடிவு மாதிரி இருக்கும். எங்கூரு பசங்களை நான் தயாரா தான் வைச்சு இருக்கேன். நீங்க சரின்னு சொல்லிட்டா, இன்னைல இருந்து எல்லாத்தையும் ஆரம்பிச்சுடலாம்…” என்று யோசனை கூறியவனிடம் சம்மதமாக தலையசைத்த திருமுருகன் அடுத்த வேலையில் இறங்கினார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த மறுநிமிடமே ஜிஷ்ணு குமரனுக்கு போன் செய்து சிக்னல் கொடுக்க, அவன் கன்னிமனூர் மக்களை எல்லாம் போராட்டத்தில் இறக்கி இருந்தான்.

500க்கும் மேற்பட்டவர்களை, சென்னைக்கும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்க, வெள்ளைப்பாளையத்திலும் சாலையை அடைத்து மறியல் செய்தனர்.

இந்த திடீர் திருப்பத்தை அறியாத வசுந்தராவிற்கு, எதற்காக இந்த போராட்டம் என்று குழப்பமாக இருந்தது. பிறகே, கன்னிமனூரை தனி பேரூராட்சியாக அறிவிக்க வேண்டி, அவ்வூர் மக்களெல்லாம் போராட்டம் செய்வது அறிந்து அதிர்ந்தாள்.

“வணக்கம்! இன்றைய முக்கிய செய்திகள். நாகர்கோவிலை அடுத்த வெள்ளைப்பாளையத்தில் அமைந்துள்ளது கன்னிமனூர் ஊராட்சி. கடந்த நான்கு நாட்களாக, கன்னிமனூரை சேர்ந்த இளைஞர்கள், அவர்களின் ஊரை தனி பேரூராட்சியாக அறிவிக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனைக் குறித்து இன்று சட்டசபையில் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. அதற்கான காரணம் என்ன, தற்போது அங்கு என்ன நிலவரம் என்பதை, சம்பவ இடத்தில் இருக்கும் நமது செய்தியாளர் நிர்மலாவிடம் கேட்கலாம்.” பெண் செய்திளார் இளஞ்சிவப்பு சாயம் பூசிய இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு, எதிர்முனையில் பேசினார்.

“வணக்கம் நிர்மலா! இப்போது அங்கு என்ன மாதிரியான நிலவரம் உள்ளது நிர்மலா?”

“வணக்கம் சீதா. நான் இப்போது சட்டசபைக்கு வெளியில் தான் நிற்கிறேன். ஆளுங்கட்சி அலுவலகம் முன்பு தான் கன்னிமனூர் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகினும் அந்த ஊரின் இளைஞர்கள் சிலர் இங்கும் காணப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கை என்னவென்றால், கன்னிமனூரை தனி பேரூராட்சியாக அறிவித்து, அங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி என அனைத்து விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான். கட்சி தலைவர்களும், காவலர்களுமே அவர்களை அடக்க இயலாமல் திணறுகிறார்கள்.” என்று கூறி முடித்தாள் நிர்மலா.

“ஊராட்சிக்கு தேவையான மருத்துவமனை, அடிப்படை வசதிகள் கன்னிமனூரில் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், எதனால் இப்போது இந்த போராட்டம் நிர்மலா?” என சீதா வினவ,

“அதனைக் குறித்து கன்னிமனூர் ஊராட்சியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பகிர்வார் சீதா” என்றபடி மைக்கை ஒரு இளைஞனை நோக்கி திருப்பினாள்.

சாயம் போன கைலியை அணிந்திருந்தவன், கரங்களில் ‘மாத்து மாத்து! எங்கூர பெரிய ஊரா மாத்து!’ என எழுதப்பட்ட அட்டை ஒன்று இருக்க, அந்த இளைஞன் பேசத் தொடங்கினான்.  

“வணக்கமுங்க. என் பேரு மாரிமுத்து. எங்கூரு பல வருசமா எந்த ஒரு முன்னேத்தமும் இல்லாம தா மேடமு இருக்குது. ஆஸ்பத்திரிக்கோ, புள்ளைங்க படிப்புக்கோ, டவுனுக்கு பஸ்ஸு புடிக்கவோ நாங்க ஏழெட்டு கிலோ மீட்டர் நடந்து, வெள்ளைப்பாளையத்துக்கு தான் போவ வேண்டியதா இருக்கு. அங்கனயும் மேல் சாதிக்காரங்க, எங்கள மாதிரி கீழ் சாதிக்காரங்கள பள்ளிக்கூடத்துல கூட சேக்க மாட்டுறாங்க. பஸ்ஸுலயும் ஏற விடமாட்டுறாங்க. புள்ளத்தாச்சி புள்ளையை ஆஸ்பத்திரிக்குள்ள கூட விட மாட்டுறாங்க…! எங்க ஊருல இருக்குற ஆஸ்பத்திரிக்கு வைத்தியர் வாரத்துக்கு ஒரு தடவ தான் வர்றாரு. பள்ளிக்கூடத்துலயும் சொல்லி குடுக்க ஒழுங்கான வாத்தியார் இல்ல. இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனுங்க மேடமு…  ” என அங்கலாய்த்தான்.

அவனை அமைதி படுத்திவிட்டு, கேமரா முன் திரும்பிய நிர்மலா, “தற்போது மாரிமுத்து மூலமாக பிரச்சனையின் அளவு புரிகிறது சீதா. அது மட்டுமல்லாமல், இன்று கட்சி தலைவர்கள் கூடி இந்த போராட்டத்தின் உட்பொருளை உணர்ந்து, இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற தீவிர வாக்குவாதத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்களின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த வெள்ளைப்பாளையம் தொகுதி எம். எல். ஏ. ஜிஷ்ணு தர்மன், தற்போது தான் சட்டசபைக்கு வந்திறங்கி இருக்கிறார்.

ஆளுங்கட்சியை பொருத்தவரையில், அமைச்சருக்கு வலது கையான ஜிஷ்ணு தர்மனால் எடுக்கப்படும் முடிவு சரியானதாக இருக்கும் என்று அமைச்சர்களும், கன்னிமனூர் மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சீதா. கூடிய விரைவில் இது குறித்து நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுக்கும் என நம்பப்படுகிறது.” என்று பேசிக்கொண்டே சென்றவள், ஜிஷ்ணு தர்மனின் வெள்ளை நிற ஆடி காரை பார்த்து விட்டு, வேகமாக அவனருகில் சென்றிட, கேமராவும் உடன் சென்றது.

வெள்ளை வேஷ்டி, சாம்பல் நிற சட்டையில் காரை விட்டு இறங்கியவன், நெடு நெடுவென வளர்ந்திருந்தான். திருத்தமாக சிகையை வெட்டி இருந்தவன், அது அசையாதது போன்று ‘ஜெல்’ தடவி இருப்பான் போலும். அதுவும் தலைவனின் கட்டளைக்கு இணங்க, நெற்றியில் படராமல் அடக்கமாக இருந்தது.

ஆனால், சிகைக்கு இருக்கும் அடக்கமும் பணிவும் தனக்கு இல்லை என்ற ரீதியில், குளிர் கண்ணாடியை, அழுத்த விழிகளை மறைத்து அணிந்தவன், “சார்…” என நிர்மலா பேச வந்ததில், ஆள் காட்டி விரலை நீட்டி அங்கேயே நிற்கும் படி எச்சரித்து விட்டு, புயலாக அலுவலகத்தினுள் நுழைந்தான்.

தொலைக்காட்சி அவனின் ஒவ்வொரு அசைவையும் ஒளிபரப்பிக் கொண்டிருக்க, அதனை பார்த்த வசுந்தரா முகம் சுளித்தாள்.

“என்னப்பா இது? இவங்களுக்குலாம் என்ன ஆச்சு? அதெப்படி பேரூராட்சியா அறிவிப்பாங்க. சுத்த நான்சென்ஸ் – ஆ இருக்கு!” என்றவள் தொலைக்காட்சி சத்தத்தை முற்றிலும் குறைத்தாள்.

“இந்த பயலுக… போலீசுட்ட தர்ம அடி வாங்கிட்டு தான் வரப்போறானுங்க. என்ன தான் கீழ் சாதி பயலுகளா இருந்தாலும், நம்ம ஊருல எல்லா வசதியையும் அனுபவிக்க இடம் குடுத்தோம்ல. அதான் சாதி புத்திய காட்டுறானுங்க.” என்று பல்லைக்கடித்தார்.

வசுந்தரா அதனை தவிர்த்து, “ப்பா. எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல. கன்னிமனூரோட பின் பகுதி முழுக்க, மலைகள் தான் இருக்கு. அந்த ஊர் மக்கள் வெளியூர் போகனும்ன்னா கூட நம்ம ஊர் வழியா தான் வந்தாகனும். கன்னிமனூர்க்கு இன்னும் பக்கத்துல தான் காட்டூர் இருந்தாலும் அந்த ஊருக்கு நேரடியா போக பாதை இல்ல.

இப்போ, கொஞ்ச வருசமா நம்ம ஊருக்கும் கன்னிமனூருக்கும் கைகலப்பு வேற ஆகிட்டு இருக்கு. இப்படியே போச்சுன்னா அவங்களோட வாழ்வாதாரம் என்ன ஆகும்? என்ன தைரியத்தில இப்படி அகல கால் வைக்கிறாங்க…?” எனக் கேட்டவள், சிவப்பு சாயம் பூசப்பட்ட நகங்கள் கொண்டு நெற்றியை நீவி விட்டாள்.

ராஜசேகரோ, “ம்மா… இவனுங்க என்ன தைரியத்தில ஆடுறானுங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாம் அந்த வேற சாதிப் பய தர்மாவால தான். அவனுக்கு நம்ம ஜாதி சார்பா ஒத்த ஓட்டு கூட விழுகல.  ஆனா, சுத்தி இருக்குற கிராமத்துல எல்லாம் அவனுக்கு செல்வாக்கு இருக்கு.

எதை எதையோ பேசி எல்லாரையும் கைக்குள்ள போட்டு வைச்சுருக்கான். அவனும் அவனுக்கு இருக்குற திமிரும். வெள்ளப்பாளையத்துல இருக்குற வசதி சுத்தி இருக்குற பதினாறு கிராமத்துக்கும் இல்ல.

நம்ம ஊருல பேக்டரி கட்டி, பாலம் போட மனு குடுத்தேன். அத கிணத்துல போட்ட கல்லு மாதிரி அவன் பிரிச்சு கூட பாக்கல. ஆனா, இப்ப அந்த ஈத்தர பிடிச்ச ஊர, ஏதோ அமெரிக்காவா மாத்த போற மாதிரி அவனுங்களை ஆட வைக்கிறான்… நம்ம சாதி பயலுங்க, அவனுங்க ஊர்ல போய் வேல பாக்கணுமா…? தாராம்மா அப்படி மட்டும் இவன் எதையாவது செஞ்சான், சாதி தலைவரா நான் எடுக்குற முடிவு ரொம்ப மோசமா இருக்கும்…” என்று சினம் பெருக எச்சரித்தார்.

அவரைக் கையை கட்டிக்கொண்டு பார்த்த வசுந்தரா, டேபிளின் மீதிருந்த நீர் குவளையை எடுத்து கொடுத்து, “முதல்ல குடிங்க!” என்றாள் அதட்டலாக.

அவரும் அதனை வாங்கி ‘மடக் மடக்’ என குடிக்க,

அவளோ “மிஸ்டர். ஜாதி தலைவர் ராஜசேகர். என்கிட்ட அப்பாவா பேசுனீங்கன்னா நானும் மகளா பேசுவேன். ஜாதிக்கு முக்கியத்துவம் தர்ற ஜாதித்தலைவர் மாதிரி பேசுனா, நானும் வக்கீலா பேச வேண்டியது வரும். என்ன மேல்ஜாதி கீழ்ஜாதி? எல்லாரும் மனுசங்க தான. இத்தன வருஷமா கன்னிமனூருக்கும் நம்ம ஊருக்கும் ஒரு சின்ன சண்டையோ, மனஸ்தாபமோ வந்தது கூட இல்ல. ஆனா, இப்போ என்ன ஆச்சு? திடீர்ன்னு ஏன் இந்த ஈகோ?” எனக் கேட்டாள் முறைப்பாக.

அவள் பேசியதைக் கேட்டு, தலையில் நறுக்கென கொட்டிய அவளின் தாய் மரகதம், “ஏன்டி! எம்புட்டு தைரியம் இருந்தா அப்பாவை பேர் சொல்லி கூப்டுவ. நாலு எழுத்து படிக்க வைச்சா தலைக்கணம் வந்துடுமோ…” என திட்ட, அவள் அதனை கண்டுகொள்ளவே இல்லை.

ராஜசேகர் தான், “விடு மரகதம். நானும் என் மகளும் பேசிட்டு இருக்கறப்ப நீ ஏன் இடைல வர்ற…?” என்று அவரிடம் எகிற,

“உங்களுக்காக பேசுனேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும். இந்தாங்க ரெண்டு பேரும் காபியை குடிச்சுட்டு, என்னமும் பேசுங்க!” என்று சலித்து விட்டு, நகர்ந்தார்.

வசுந்தராவின் இதழ்கள் புன்னகையில் விரிய, ராஜசேகரும் மெல்ல சிரித்து விட்டு,

“தாராம்மா. நம்ம ஊர பொறுத்தவரை ஜாதி பேரை சொல்லி கலவரம் உண்டு பண்ணுற ஆள் யாரும் கிடையாது. நம்ம சாதி மூலமா எல்லா சாதிக்காரனுங்களும் நல்லா வாழ்ந்தாங்கன்னு தான் இப்ப வர பேர் வாங்கிட்டு இருக்கோம். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. அதை கன்னிமனூர்க்காரனுங்களும், அந்த தர்மாவும் மீறுனா, நமக்கும் சூடு சொரணை இருக்குன்னு நம்ம காட்டி தான் ஆகணும்…” என அவர் பேசும்போதே, வசுந்தரா ஏதோ சொல்ல வர, அவளை பேச விடாமல், “ஆனா, உங்கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன். போதுமா…” என்றார்.

அதில் மெல்ல புன்னகைத்தவள், “கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா. எப்படியும் இவன், அந்த ஊருக்கு எந்த நல்லதும் செய்ய மாட்டான். சும்மா நல்லது செய்ற மாதிரியும், கன்னிமனூர் மக்கள் அவனை நம்புறதுக்காகவும் சீன் போடுறான். நீங்க வேணும்னா பாருங்க. இப்போ கட்சி மீட்டிங் முடிஞ்சு வெளிய வந்து, ‘உங்க ஊருக்காக, ஸ்கூலு கட்டுறேன், பாலம் போடுறேன், ஆஸ்பத்திரி கட்டுறேன். ஆனா இதெல்லாம் எலக்ஷன் முடிஞ்சு ஒன்னு ஒன்னா செய்றேன்’னு சொல்லி சமாளிப்பான். அதை நம்பி இவங்களும் போராட்டத்தை கை விட்டுடுவாங்க. இன்னும் ஆறு மாசத்துல வர்ற எலக்சன்லயும் சார் ஜெயிக்கணும்ல.” என்றாள் இளக்காரமாக.

சற்றே சிந்தித்த ராஜசேகர், “அப்டியாம்மா சொல்ற?” எனக் கேட்டிட,

“ப்பா, இதுவரை என்னோட கெஸ்ஸிங் எப்போவும் தப்பானது இல்ல. அதுனால தான, எனக்கு நம்பர் ஒன் யங் க்ரைம் வக்கீல்ன்னு அங்கீகாரம் குடுத்து இருக்காங்க…” என்றபடி புருவத்தை உயர்த்தி உறுதியாகக் கூறினாள்.

அவள் கூறிய தோரணையில் தந்தையும் மகளும் நகைக்க, அந்நேரம் மீண்டும் செய்தியாளரின் முகம் தொலைக்காட்சியில் மின்னியது. உடனே, சத்தத்தை அதிகமாக வைத்தவள், விடை தெரிந்த ஏளனத்தோடு அதனை கவனித்தாள்.

“வணக்கம். சற்று முன் வெளியான செய்திகள். கன்னிமனூர் ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்கும் பொருட்டு,  மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து, இன்று கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

அதன் வெளிப்பாடாக, கன்னிமனூரை பேரூராட்சியாக அறிவித்து, அங்கு அனைத்து விதமான வசதிகளும் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நீலகண்டன், தற்போது அதனை குறித்து சட்டசபையில் பேசி, முதலமைச்சரை வலியுறுத்தி, மற்ற எம். எல். ஏக்களின் பெரும் ஆதரவோடு அச்சட்டத்தை இயற்ற முன்வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முயற்சியை முறியடிக்க, சட்டசபையில் கடும் வாக்குவாதம் மேற்கொள்ள, இறுதியில் எம். எல். ஏ ஜிஷ்ணு தர்மன், அவரின் பேச்சுத் திறமையால் சட்டசபையை அமைதியாக்கி, இறுதி வரை, இச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று உறுதியாக அனைவரையும் வலியுறுத்தினார். அதன் மூலம், அமைச்சர் நீலகண்டன் தற்போது, செய்தியாளர்களை சந்திந்து பேசி உள்ளார். அந்த காணொளி இப்போது உங்களுக்காக…” எனப் பேசிய செய்தியாளப் பெண்மணிக்கு பதிலாக, முதலமைச்சர் கன்னிமனூர் சம்பந்தமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பும், அதன் பிறகு நீலகண்டனின் முகமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அவருக்கு பின் ஜிஷ்ணு தர்மன் நிற்க, நீலகண்டன், “கன்னிமனூர பேரூராட்சியா அறிவிக்க அனைவரும் ஒரு மனதோடு முடிவெடுத்துள்ளோம். இன்னும் சில தினங்களில் சட்டப்படி, அறிவிக்கப்படும்.” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி பேசியவர்,

“நான் அவசரமாக கிளம்ப வேண்டியுள்ளதால், அதனை குறித்து, எம்.எல்.ஏ தர்மன் அறிக்கையை தொடர்வார்…” எனப் பேசிக்கொண்டே வேகமாக காரில் ஏறி அமர்ந்தார். அவர் காரில் ஏறும் வரை, அவருடனே சென்ற ஜிஷ்ணு தர்மன், கதவை திறந்து, அவரை வழியனுப்பி விட்டு, மீடியாவின் புறம் திரும்பினான்.

“சார்… கன்னிமனூரை தனி பேரூராட்சியா அறிவிக்க எப்படி எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அதுவும் இவ்ளோ சின்ன டைம் கேப்ல…” என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க தொடங்க, ஜிஷ்ணு கணீர் குரலில், “எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னு கேட்குறீங்களா? இல்ல ஏன் ஒத்துக்கிட்டாங்கன்னு கேக்குறீங்களா?” என ஒரு புருவத்தை உயர்த்தினான்.

“இல்ல சார். ஒரு அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு ஊருக்கு, இத்தனை பெரிய போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு…” என்று அவள் முடிக்க கூட இல்லை, போட்டிருந்த கண்ணாடியை கழட்டி சட்டையில் துடைத்த படியே,

“இப்போ நீங்க காலைல சாப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்துச்சுன்னு நான் கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க மிஸ்? ம்ம்?” சற்றே திமிராக வெளிவந்தது அவன் பதில்.

மற்றொருவன், “சார்… இப்போ அடுத்ததா கன்னிமனூருக்கு என்ன எல்லாம் செய்யப் போறீங்க?” என வினவ,

“முனிசிபாலிட்டில என்னல்லாம் இருக்குமோ அதெல்லாம் தான் செய்யப்போறோம். கூடிய சீக்கிரம் அத பத்தின அறிவிப்பும் வரும்…” என்றவன் அதற்கு மேல் பதிலளிக்க முடியாது என்ற ரீதியில் அவனின் காரை நோக்கி நடக்க, அவனை பின் தொடர்ந்த செய்தியாளர்கள்,

“ஒரு நிமிஷம் சார்… இன்னும் ஆறு மாசத்துல எலக்ஷன் இருக்குறனால, மக்கள் போராட்டத்தை ஆதரிச்சு கண் துடைப்புக்காக ஆதரவு அளிக்கிறீங்கன்னு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ மனோகர் பேட்டியில சொல்லி இருக்காரு. எலக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக தான் இதை மெனக்கெட்டு செய்றீங்களா. இதனை பத்தின உங்க கருத்து என்ன சார்…” மற்றொருவன் மைக்கை அவன் முன் நீட்ட,

அவனோ கார் கதவை திறந்த படி, அசட்டையாக “ஆமா, எலக்ஷன்ல ஜெயிக்கணும்ன்னு தான் செய்றேன். ஏன் அதுல உங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா?” விழி சுருக்கி ஒரு நொடி எக்ஸ்ரே பார்வை பார்த்தவன், விருட்டென காரில் ஏறி பறந்து விட்டான்.

‘ஒரு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்றானா…’ என செய்தியாளர்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்து விட்டு, அடுத்த ஆளை பேட்டி எடுக்க நகர, இங்கோ வசுந்தரா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

ராஜசேகரோ, கடும் கோபத்தில் கொதிக்க, “பார்த்தியா தாரா. என்னமோ அவன் சமாளிப்பான்னு சொன்ன… இப்போ என்னன்னா இப்படி பண்ணி வைச்சுருக்கான்!” என்று மூச்சிரைத்தார்.

அவளுக்கும் அதே எண்ணம் தான். சற்றே எரிச்சலும் கூட. தான் ஒன்று நினைக்க, இவன் விஷயத்தில் தன்னுடைய கணிப்பு பொய்யாகி விட்டதே… என்ற கடுப்பு ஒருபுறம்.

“அப்பா… அரசியல்வாதி ஆதாயம் இல்லாம எதுவுமே பண்ணமாட்டான். இதுல கண்டிப்பா ஏதோ தப்பு இருக்கு.” என அரையிறுதியிட்டு உரைத்தவள், ‘இதை நான் கண்டுபிடிக்கல, நான் வக்கீல் வசுந்தரா இல்லடா.’ என மனதினுள் கறுவிக் கொண்டாள். அங்கோ காரில் பயணம் செய்திருந்த ஜிஷ்ணுவின் இதழ்கள் ஏளனத்துடன் வளைந்தது.

“ஜீ… நீங்க நினைச்ச மாதிரியே எல்லாத்தையும் நடத்திட்டீங்க. வாழ்த்துகள் ஜீ…” என்றான் கௌரவ்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்த ஜிஷ்ணுவோ, “ச்சு ச்சு ச்சு…” என தலையை மறுப்பாக ஆட்டி, “இன்னும் நான் நினைச்சத நடத்த ஆரம்பிக்கவே இல்லையே!” என கேலி நகை புரிந்தவன், ஏதோ சிந்தித்தவாறு, “ம்ம்ம்ம்… அந்த வக்கீலு பேரு என்ன?” என்று கேட்டபடி நெற்றியை நீவினான்.

“வசுந்தரா சார்…” கௌரவ் மறுநொடி ஆர்வமாக உரைக்க, அவனை ஒரு மாதிரியாக பார்த்தவன், “அவள் மேல ஒரு கண்ணு இருக்கட்டும். நமக்கு எதிரா ஏதாவது செய்றான்னு தெரிஞ்சாலே அடுத்த நிமிஷம் அவ என் முன்னாடி நிக்கணும்! புரிஞ்சுதா?” என உத்தரவிட்டான்,

மனதிலோ, ‘இனிமே நீ அடிக்கடி என் முன்னாடி வர வேண்டியது இருக்கும்டி…’ எனக் கறுவிக் கொண்டான்.

அதனை உடனே செயல்படுத்தும் விதமாக, நடுஜாமத்தில் சென்னையில் அவன் வாங்கி இருந்த பங்களாவின் காம்பவுண்ட் சுவரில் ஏறி பொத்தென பங்களாவிற்குள் குதித்தாள் வசுந்தரா.

முகம் தெரியாதபடி மாஸ்க் அணிந்திருந்தவள், கையில் க்ளவ்ஸ்ஸும் அணிந்திருக்க, மெல்ல அடியெடுத்து உள்ளே நுழைந்தவள், பைப் வழியே ஏறி, மொட்டை மாடிக்கு செல்ல விழைந்தாள்.

அங்கிருந்து மொட்டை மாடி கதவை உடைத்து உள்ளே செல்வது தான் அவள் திட்டம்.

மூச்சு வாங்க, மேலே ஏறியவள், ஒரு அறை பால்கனி திண்டில் மறைந்து நின்று மாஸ்க்கையும் இறக்கி விட்டு மூச்சு வாங்க, திடீரென மெல்லிய முனகல் சத்தம் கேட்பது போல இருந்தது.

அதில் காதை கூர்மையாக்கிய வசுந்தரா, “என்ன சத்தம்” என இன்னும் கவனமாக கேட்க, சில நொடிகளில் அச்சத்தம் அவள் காதை மூட வைத்தது.

ஆணும், பெண்ணும் மூச்சிரைத்து இன்பத்தில் தொய்ந்து போகும் அம்முனகல் சத்தம் அவளுக்கு கோபத்தை அதிகப்படுத்த, ‘ஓ… சார்… ஜல்சா பண்ணிட்டு இருக்கீங்களா. மவனே, இன்னைக்கு உன்னை வீடியோ எடுத்து, உன் ஊரு முன்னாடி ப்ரொஜெக்டர்ல போட்டு விடுறேன் இரு…’ என தனக்குள்ளேயே அவனை திட்டி தீர்த்தவள், மெதுவாக போன் கேமராவை ஜன்னல் புறம் நீட்டி வீடியோ எடுக்க முற்பட, அவளின் கண்கள் என்னவோ மறுபுறம் தான் திரும்பி இருந்தது.

“பொறுக்கி நாயே…” என்று அவள் இதழ்கள் கடுமையான கோபத்தில் மிதக்க, மெதுவாக கண்களை திருப்பி அறைப்பக்கம் பார்த்தவளுக்கு சப்பென ஆகி விட்டது.

அங்கு சோபாவில் வாகாய் சாய்ந்து அமர்ந்து, விஸ்கியை உள்ளே தள்ளிக்கொண்டிருந்த ஜிஷ்ணு தர்மனுக்கு முன்னால் இருந்த டீவியில், ஆங்கில படத்தில் இருந்து ஒரு ரொமான்ஸ் காட்சி அத்து மீறலுடன் ஓடிக்கொண்டிருக்க, “ச்சை…” என தலையில் அடித்துக்கொண்டாள்.

‘இதெல்லாம் ஒரு ஆதரம்ன்னு நான் வேற எடுத்துட்டு இருக்கேன் பாரு…’ என அக்காட்சியை அழித்தவள், மேலே ஏறுவதற்கு முனைய, சட்டென திகைத்து நின்று விட்டாள்.

பால்கனிக்கு வெளியே தலையைக் கொடுத்து, அவளையே தீர்க்கமாக பார்த்தபடி நின்றிருந்த ஜிஷ்ணு, “என்ன வக்கீலே, ப்ளூ பிலிமயே வீடியோ எடுத்து படம் பண்ணிடுவ போல. அவ்ளோ காஞ்சு போய் இருக்கியோ…” என வெகுவாய் எழுந்த ஏளனத்துடன் கேட்க, அவள் தான், இப்போது மேலேயும் ஏற இயலாமல், கீழேயும் இறங்க இயலாமல், நட்ட நடுவில் சிக்கி இருந்தாள்.

இருந்தும், தைரியம் சிறிதும் குறையாமல், “காஞ்சு போய் இருக்குறது நீ தான் போல. வீடியோ பார்க்குறான் வீடியோ… மூஞ்சியும் மொகரையும்.” என முணுமுணுத்தவளை, ஒரு கையிலேயே இடையை பிடித்து தூக்கிக் கொண்டான் திமிருடன்.

“டேய். விடுடா… விடுடா பொறுக்கி கொலைகார நாயே. இப்ப விட போறியா இல்லையா…” என அவள் கால்களை உதற, ஏளன நகை புரிந்த ஜிஷ்ணு, “ஹா… விட்டுறவா வக்கீலே?” என இன்னும் பால்கனியில் இருந்து உடலை வெளியில் நீட்டி, அவளை இன்னும் தள்ளிப் பிடிக்க, இப்போதோ அவள் காலிற்கும் சன்ஷேட் இல்லாமல், அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. விழுந்தால் எலும்பு கூட தேறாது தான்.

“அப்படியே விட்டுடவாடி? எனக்கும் வேலை மிச்சம்… என் மேல கொலை பழியும் விழாது. நீயா என்னை தேடி வந்து வழுக்கி விழுந்துட்டன்னு கேச முடிச்சுடுவேன்” என்ற தீவிர சிந்தனையுடன் கேட்டவனை உறுத்து விழித்தவள்,

“நீ ஒண்ணும் எனக்கு உயிர் பிச்சை குடுக்க வேண்டியது இல்ல. கீழ போட்டுடு.” என்றாள் கையில்லாத அவனின் பனியனை அழுந்த பற்றியபடி.

“நல்லது… குட் பை. “என கண் சிமிட்டி, அவளை கீழே போடுவது போல பாவனை செய்தான்.

அவளோ, கண்ணை கூட மூடாமல், யாருக்கு வந்த கேடோ என்பது போல தெனாவெட்டாக இருக்க, அவளையே அளந்த ஜிஷ்ணு,

“எப்படியும் சாக போற… ஒரு நாள் எனக்கு கம்பெனி குடுத்துட்டு சாகேன். உனக்கும் அற்பாயுசுல எந்த ஆசையும் நிறைவேறாம போன துரதிர்ஷடம் இருக்காது…” என விஷமத்துடன் கூறியவன், அப்படியே அவளைத் தூக்கி, பால்கனி வழியாக அறைக்குள் போட்டு, அவளை வளைத்து பிடித்திருக்க, நொடி நேரத்தில் நிகழ்ந்த நிகழ்வை உணரவே அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.

தீயோ தென்றலோ அவன்(ள்)
மேகா

அடுத்த பதிவு சனி இரவு🔥 குட் நைட் டியர்ஸ்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
33
+1
61
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்