Loading

தீரன் கேட்ட கேள்வியில் சிலையாக நின்ற சஹஸ்ராவிற்கு தலை சுற்றியது. ஒரு நிமிடம் முழுதாக அவன் மீது அதிர்ந்த பார்வை வீசியவள், பின் தன்னை மீட்டுக்கொண்டு, “நான் டாக்டரை கூப்புடுறேன்” என உளறிவிட்டு வெளியில் ஓடியே வந்து விட்டாள்.

மூச்சு விடக் கூட சிரமமாக இருக்க, ஒரு நாற்காலியில் அமர்ந்து தன்னைத் தானே தேற்றியவள், தாதியரிடம் விவரம் கூற, அவரும் அவசரமாக மருத்துவரை அழைத்தார்.

சில நிமிடங்கள் தீரனின் அறையிலேயே கழித்த மருத்துவர், வெளியில் வந்ததும் சஹஸ்ரா அவரை முற்றுகை இட்டார்.

“அவருக்கு என்ன ஆச்சு டாக்டர்? என்னை யாருன்னு கேட்குறாரு. ஹெல்த்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க,

“ரிலாக்ஸ் மிஸஸ் சஹஸ்ரா. பேஷண்ட்க்கு நினைவு திரும்புனதே நல்ல சிம்ப்டம் தான். தலையில அடிபட்டதுனால, அம்னீசியா ஏற்பட்டு இருக்கு அவருக்கு. அதுக்காக அவரோட பாஸ்ட் எல்லாத்தையும் மறக்கல. சில விஷயங்களை, சில சம்பவங்களை மறந்துருக்காரு.” என்றவரை புரியாத பாவனையுடன் நோக்கினாள்.

உதாரணத்துக்கு, “அவரோட ப்ரதர அவருக்கு நல்லா ஞாபகம் இருக்கு. கடைசியா, ரெண்டு பேரும் ஒண்ணா கார்ல போனது முதற்கொண்டு ஞாபகம் இருக்கு. ஆனா, அவரோட பேரும் தெரியல, அவங்க ரெண்டு பேரும் கடைசியா என்ன பேசிக்கிட்டாங்கன்னும் தெரியல. இட்ஸ் கால்ட் செலக்டிவ் அம்னீசியா. அதே போல நிறைய சம்பவங்களை மறந்து இருக்கலாம் மிஸஸ் சஹஸ்ரா. அதுல உங்களுக்கு நடந்த கல்யாணமும் அடங்கி இருக்கலாம்.” என்றதில், குபுக்கென கண்ணில் நீர் கோர்த்தது அவளுக்கு.

“இதை சரி செய்ய முடியாதா டாக்டர்?” குரல் நடுங்க கேட்க,

“சரி செய்ய முடியாத பிரச்சனை இல்லை. எப்போ வேணாலும் இது சரி ஆகலாம். உடனே கூட எல்லாமே ஞாபகம் வரலாம். கொஞ்ச நாள் அவரோட காயங்கள் ஆறுற வரைக்கும் ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்க வேணாம் சஹஸ்ரா. ஹெட் சர்ஜரி செஞ்சதுனால, முதல்ல அது கியூர் ஆகட்டும். சிலருக்கு காயம் ஆற ஆற, மூளையும் சரியா இழந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்துடும்.” என உறுதி கூறிய மருத்துவர்,

“அண்ட், உங்க ஹஸ்பண்ட் – ஓட பிரதர் ஒரு வாரத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. அந்த டைம்ல தீரனும் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாரு. உங்களோட கான்ட்டேக்ட்டும் கிடைக்கல. சோ, நிக்கோலஸ்ன்றவர் தான், க்ரிமேஷன் செய்ய ஒத்துக்கிட்டாரு. அவரோட ஆஷஸ் – அயும் நிக்கோலஸ் வாங்கிட்டு போய்ட்டாரு. தீரனும் பிரதரோட டெத்ல ரொம்ப ஷாக்கா இருக்காரு. பாத்துக்கோங்க…” என்று கூறி விட்டு நகர, அவளுக்கும் இன்னும் திகைப்பு மாறவில்லை.

‘அடக்கடவுளே…! அப்போ, அவன் இறந்துட்டானா? நிக்கி அண்ணா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, ஏன் இப்படி செஞ்சாரு. ரெண்டு பேருக்கும் ஆக்சிடென்ட் ஆகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகுது. இன்னைக்கு தான், எனக்கு தகவலே சொன்னாரு. முன்னாடியே ஏன் சொல்லல…?’ எனத் தலையில் கை வைத்து குழப்பத்தில் மூழ்கினாள்.

வேக நடையிட்டு, மருத்துவமனைக்குள் நுழைந்த தேவிகா, சஹஸ்ராவைக் கண்டறிந்து அவளருகில் அமர்ந்தாள்.

“சஹா… அண்ணாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” எனப் பதற்றத்துடன் கேட்க, தோழியைக் கண்டதும் மீண்டும் அழுகையுடன் அவள் மடியில் புதைந்தாள்.

நடந்தவற்றை கூறியதும், அவளிடமும் அதிர்வு தான்.

“இந்த நிக்கிக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா? இப்ப அந்த வீட்டோட சொந்தக்காரி நீ. அந்த ராஸ்கல் பொறுக்கியா இருந்தா கூட, உன் கொழுந்தன். அவன் செத்ததையும், அண்ணாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதையும் முதல்ல உங்கிட்ட தான சொல்லிருக்கணும். இடியட். வரட்டும் பாத்துக்குறேன்.” என்று பற்களை நறநறவெனக் கடித்தாள்.

“எனக்கு ஒன்னும் புரியல தேவ். தீரனுக்கு என்னை யாருன்னே தெரியல. இப்போ என்ன பண்றதுன்னும் புரியல.” எனத் தேம்பியவளை தேற்றியவள்,

“அதான் டாக்டர் சரி ஆகிடும்ன்னு சொல்லிருக்காருல சஹா. இந்த நேரத்துல நீ தான் அண்ணாவை கவனமா பாத்துக்கணும். நீயே இப்படி உடைஞ்சு போனா, அண்ணாவை யாரு பாக்குறது? நல்லவேளை உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு. இல்லன்னா அண்ணா இன்னும் தனியா ஆகிருப்பாங்க” என தீரனுக்காக அவள் பரிதாபப்பட, சஹஸ்ராவிற்கு முள் மேல் நிற்பது போல இருந்தது.

அவனுக்கும் அவளுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தையையும், இது வெறும் பொம்மை கல்யாணம் என்பதையும் தேவிகா அறிய வாய்ப்பில்லையே.

இப்போது அவனிடம் தன்னை ஆருயிர் மனைவியாக அறிமுகம் செய்வதா? அல்லது, எட்டி நின்று பார்த்துக் கொள்வதா? பதில் பேசாமல் யோசனையில் மூழ்கிய சஹஸ்ராவை உலுக்கிய தேவிகா,

“நீ போய் அண்ணாவை பாரு சஹா. நான் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்.” என்று எழுந்து செல்ல, அவள் சென்ற திசையையே வெறித்தாள்.

எண்ணங்களோ பின்னோக்கி பயணித்தது.

தீரனுடன் பார்ட்னர்ஷிப் பெற்றுக் கொண்டதும், சிறிதும் ஓய்வின்றி உழைத்தாள். முன்பு தந்தை தனக்காக உருவாக்கிய தொழில் என்ற அக்கறை இருந்ததுடன், இப்போதோ தன்னை நம்பி தன்னுடன் தொழிலில் இணைந்திருக்கும் தீரனிற்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்பும் சேர்ந்து கொண்டது.

சொன்னது போன்றே தினமும் சஹஸ்ராவின் அலுவலகத்திற்கு வந்து விடுவான் தீரன். அது மட்டுமல்லாது, பெரிய அளவிலான ‘கான்ட்ராக்ட்’டையும் எடுத்துக் கொடுத்தான்.

அதற்கு சிரத்தையாக தன்னுடைய வேலையை செய்ய முயன்றவளுக்கு ஏனோ பல தடங்கல் அரங்கேறியது.

“சஹஸ்ரா… இப்ப எடுத்து இருக்குற ப்ராஜக்ட் தி மில்லினியர் ராவ் ஓடது. சென்னைல அவர் கட்டி இருக்குற பீச் ரிசார்ட்க்கு தான் இப்ப நீ இன்டீரியர் டிசைன் செய்ய போற. பட், அவர் உன்னை நேர்ல பார்க்கணும்ன்னு சொல்லிருக்காரு. ஷார்ப் – ஆ ஈவ்னிங் 5 க்கு ராவ் முன்னாடி நீ இருக்கணும். ஹி இஸ் வெரி பங்க்சுவல். அண்ட், என்ன மாதிரி ஐடியாஸ் வச்சு இருக்கன்னு தெளிவா எக்ஸ்ப்ளெய்ன் பண்ணு. காட் இட்.” என உத்தரவிட்டவனிடம் “சரி” என்றவள், அந்த ராவ் என்பவரை சந்திக்க ஆயத்தமானாள்.

சரியாக ஐந்து மணிக்கு, புதிதாக கட்டப்பட்டு இருந்த அந்த ரெசார்ட்டினுள் நுழைந்தவள் கண்ணில், முன் வழுக்கையுடன் கோர்ட் சூட் சகிதம் ராவ் தென்பட்டார்.

“ஹெலோ சார்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளிடம், “ஹெலோ! நான் உனக்காக தான் வெய்ட் பண்றேன்.” என்றவர், வேலையைப் பற்றி சிறிது நேரம் பேச, அவளும் உள் வடிவமைப்பிற்காக அவள் வைத்திருக்கும் திட்டங்களை அடுக்கினாள்.

அவருக்கும் அவை அனைத்தும் பிடித்திருக்க, “கூல் சஹஸ்ரா. தீரன் பேசுனதுமே நான் இந்த டீலை 80 பெர்சன்ட் கன்பார்ம் பண்ணிட்டேன். இப்போ ஹண்ட்ரட் பெர்சன்ட்…” என்று பற்கள் தெரிய சிரித்தவர், அவளை மேலும் கீழும் ஆராய்ந்த்தார்.

“தேங்க் யூ சார். அப்போ நான் கிளம்புறேன்!” என நகர முயன்றவளிடன் கையை பற்றி இருந்த ராவ்,

“வெய்ட் சஹஸ்ரா. நீ இன்னும் ரெசார்ட்டை சுத்தி பார்க்கலையே. அப்போ தான், இன்னும் உனக்கு க்ளியர் ஐடியா கிடைக்கும்” என்றிட, ஏனோ அவளுக்கு அங்கு நிற்கவே மனம் படபடத்தது.

ஏற்கனவே இருட்டத் தொடங்கிய நேரம், அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களும் கலைந்து இருக்க, அதற்கு மேல் அங்கிருக்க மனம் வராமல், “நான் பகல்ல ஒரு தடவை வந்து பாக்குறேன் சார்.” என்றாள் முயன்று முறுவலித்து.

“ஓ… நாளைக்கு நான் மும்பை போய்டுவேன். எனக்கு இப்பவே நீ பாத்துட்டா திருப்தியா இருக்கும். வெளிச்சம் தான வேணும்” என்றவர், உள்ளே அனைத்து விளக்குகளையும் எரிய விட்டார்.

விளக்குகள் தந்த வெளிச்சம் சிறிது தைரியத்தை கொடுத்தாலும், இன்னும் முழுதாக பயம் தெளியவில்லை. இருப்பினும், ராவ் பேச்சை மீறிக் கிளம்ப இயலாமல், ரிசார்ட்டை சுற்றிப் பார்க்க தொடங்கியவள், முழுதாக அதிலேயே மூழ்கினாள்.

அந்த ரிசார்ட்டின் ஒவ்வொரு அறையையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தவளின், கழுத்தில் ஏதோ ஊர்வது போல இருக்க, சட்டென நகர்ந்தவள், எதிரில் அவளை விகார சிரிப்புடன் பார்த்தபடி நின்றிருந்த ராவைக் கண்டதும் அதிர்ந்தாள்.

“எ… என்ன?” திணறலுடன் அவள் கேட்க,

“கம் ஆன் சஹஸ்ரா. பிசினெஸ் ஃபீல்டுக்குள்ள நுழைஞ்சுட்டு, இதுக்குலாம் ஒதுங்குனா எப்படி…!” என்றவர், மீண்டும் அவளை நெருங்கி,

“யூ நோ வாட்… நெக்ஸ்ட் என்னோட ப்ராஜெக்ட்டும் இதே சென்னைல தான். அதுலயும் நீ தான் இன்டீரியர் டிசைனர்.” என்றபடி, கரங்களை அவள் மீது வைக்க போக, பளாரென அவர் கன்னத்தில் அறை விழுந்தது. சஹஸ்ரா தான் கோபத்தின் மறுபிம்பமாக நின்றிருந்தாள்.

“பொண்ணுன்னா, உன் இஷ்டத்துக்கு நடந்துக்குவியா? கேவலம் உன் ப்ராஜெக்ட்டுக்காக என்ன வேணாலும் செய்வேன்னு கனவு காணாத மிஸ்டர் ராவ். தொலைச்சுடுவேன்…” என்று விரல் நீட்டி மிரட்டியவள், புயல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

வேகமாக அலுவலகத்திற்கு வந்தவள், தீரனின் முன்பு தான் நின்றாள்.

“மீட்டிங் எப்படி போச்சு?” அவன் இயல்பாகக் கேட்க, “எனக்கு இந்த டீலிங் பிடிக்கல. என்னால அந்த ராவ்க்கு ஒர்க் பண்ண முடியாது தீரன்.” என்றாள் உடனடியாக.

கண்ணை சுருக்கியவன், “வாட்?” என்க, “எனக்கு அவன் பிஹேவியர் சுத்தமா பிடிக்கல. ஸ்கௌண்ட்ரல்!” எனப் பல்லைக்கடித்தாள்.

தீரனோ, “லுக் சஹஸ்ரா. அவன் பிஹேவியர் எப்படி இருந்தா உனக்கு என்ன? அப்படி பார்த்தா இந்த ஃபீல்டுல யார் கூடவும் வேலை பார்க்க முடியாது.” எனக் கூறிட,

“ப்ச், அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?” என்றவள், தயங்கியபடி நடந்ததைக் கூற, அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

“ஃபைன்… அதான், நீ ‘நோ’ சொல்லிட்டு அடிச்சுட்டு வந்துட்டியே. அப்பறம் என்ன? ஒவ்வொரு ப்ராஜக்டையும் இந்த ஒரு காரணத்துக்காக அவாய்ட் செய்யணும்ன்னா, கம்பெனியை பெரிய பூட்டு போட்டுட்டு போக வேண்டியது தான்.” என்றான் காரமாக.

அவளுக்கு தான் உள்ளுக்குள் கோபம் எரிமலையாக கனன்றது. ராவ் மீது கோபம் வந்ததோடு அல்லாமல், தனக்காக ஒரு வார்த்தை கூட பேசாத தீரன் மீதும் அதே கோபம் வர, ஏனோ அது ஏமாற்றத்தையும் கொடுத்தது.

தனக்காக அவன் எப்படி பேசுவான்? அவன் இங்கு வந்தது தொழில் ரீதியாக அல்லவா! என்ற உண்மை தாமதமாக உறைக்க, மௌனம் காத்தாள்.

அவள் அமைதி அவனையும் ஏதோ செய்ய, மென்மையாய் அவளை ஏறிட்டவன், “இப்ப உங்கிட்ட ராங்கா நடந்து, அடி வாங்குனதுக்காக ராவ் அவரோட ப்ராஜக்டை ஸ்டாப் பண்ணிட்டு, ஊரை விட்டு போக போறாரா?” எனக் கேட்க, அவள் தலையை குனிந்தபடி மறுப்பாக தலையாட்டினாள்.

“அப்பறம், நீ மட்டும் ஏன் வேணாம்ன்னு போகணும்? இதுல உன் தப்பு இல்லாதப்போ, நீ ஒதுங்குறதுல நியாயமே இல்லையே.” என கையை கட்டிக்கொண்டு பார்க்க, அவளும் இக்கோணத்தில் சிந்தித்தாள்.

‘ஆமா, தப்பு செஞ்சவனே தைரியமா சுத்தும் போது, நான் ஏன் லாஸ் பண்ணிக்கணும்…’ என்ற எண்ணம் தோன்ற, “சரி தான்” என்றாள்.

“சோ, இப்போ ராவ் ப்ராஜக்டை எடுக்கலாமா வேணாமா? டெசிஷன் இஸ் யுவர்ஸ்!” ரோலிங் சேரில் சுற்றியபடி தலையை சாய்த்து அவன் கேட்க, மெலிதாய் புன்னகைத்தவள், “கண்டிப்பா எடுக்கலாம்!” என்றிட, அவனிடமும் அதே புன்னகை ஒளிர்ந்தது.

நினைவுகள் கலைய, தீரன் அறைக்குள் மெதுவாக நுழைந்தாள் சஹஸ்ரா. அவன் அப்போது தான் படுக்கையில் இருந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அதில் அவசரமாக உதவிக் கரம் நீட்டியவள், “என்ன வேணும்? என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல…” என இயல்பாக அவனை அமர வைக்க, அவனிடம் பதில் இல்லை.

“தீ… தீரன்…” அவள் மெல்லிய குரலில் அழைக்க, ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன் தீர்க்க விழிகளை அவள் மீது செலுத்தினான்.

இதுவரை, அப்பார்வையை அறியாதவளுக்கு லேசாக உதறல் எடுத்தது.

அதே அழுத்தத்துடன், “யார் நீ?” என அவன் வினவ, மீண்டும் ஒரு அதிர்வு அவளுள் உருவாக,

பின், மெல்ல இயல்புக்கு வந்தவள், “நான் சஹஸ்ரா. உங்க… உங்க… வைஃப்.” என்றாள் தட்டுத் தடுமாறி.

ஒரு கணம் லேசர் பார்வை வீசியவன், “ஓ!” என்று விட்டு அமைதியானான்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல், “நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் வெளிய இருக்கேன். ஏதாவது வேணும்ன்னா கூப்டுங்க.” என்றவள், வெளியில் செல்ல எத்தனிக்க கணவனின் குரல் அவளைத் தடுத்தது.

“நமக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது?” தீரன் சலனமின்றி கேட்க,

“இருபது நாள் இருக்கும். கல்யாணம் ஆகி பத்து நாள்ல தான் உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ஆனா, யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல. இப்ப தான் தெரியும்.” என்றாள் விழியைத் தாழ்த்தி.

சில நொடி மௌனத்திற்கு பிறகு, “கொஞ்ச நேரம் முன்னாடி அழுதியே… அது எனக்காகவா?” அவன் மீண்டும் கேள்வி எழுப்ப,

அதில் நிமிர்ந்தவள், புரியாமல் “ம்ம்… உங்களுக்கு தான அடிபட்டு இருக்கு. அதுவும் இப்ப நீங்க என் ஹஸ்பண்ட். அப்போ உங்களுக்காக தான் நான் அழுக முடியும்.” என்றதில்,

“ஓ! அவ்ளோ லவ்வா? நம்ம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோமா என்ன?” அவன் யோசனையுடன் கேட்க, சஹஸ்ரா திடுக்கிட்டுப் போனாள்.

இதற்கு என்ன பதில் கூறுவது?

“அது… அது…. வந்து…” பெண்ணவள் தடுமாற, ஆணவனோ சுவாரஸ்யத்துடன் அவளை ஏறிட்டு,

“சொல்ல முடியாத அளவு லவ் பண்ணுனோமோ. இவளோ யோசிக்கிற? ஒருவேளை உனக்கும் மெமரி லாஸ் ஆகிடுச்சா ச… சஹஸ்ரா… ரைட்?” என்று வினவளுடன் முடித்தான்.

அவள் பேந்த பேந்த விழிக்க, “அதென்ன பேர் சஹஸ்ரா? நான் கேள்விப்பட்டதே இல்ல?” கேட்கும் போதே, தீரனின் கருவிழிகள் அவளை ஊடுருவியது.

“சஹஸ்ரான்னா, ஒரு புதிய துவக்கம், வாழ்க்கையில ஒரு புது வாய்ப்புன்னு சொல்லுவாங்க.” என அவள் வேகமாக கூற,

அதில் மேலும் ரசனையானவன், “யாருக்கு புது துவக்கம். பேர் வச்சுருக்குற உனக்கா? இல்ல உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்கா?” என்று கேட்டான்.

அதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. ‘இன்னைக்கு ஏன் இவன் இவளோ குதர்க்கமாவே கேள்வி கேக்குறான்’ என்றிருந்தது.

அவள் விழி கண்டு, அந்நிலையிலும் தீரனின் உதடுகள் சிறு முறுவல் பூக்க,

“சரி அதை அப்பறமா யோசிக்கலாம். இப்ப சொல்லு, நம்ம லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச் மேரேஜா?” என ஆர்வத்துடன் கேட்டான்.

பின் அவனே, “எனக்கு தெரிஞ்சு அரேஞ்ச் மேரேஜா இருக்க வாய்ப்பு கம்மி தான். அப்படி பொண்ணு பார்க்கணும்ன்னா, என் கூட பிறந்தவன் தான் பார்த்துருப்பான். ஆனா, அவனுக்கு அந்த அளவு பொறுமை இல்ல.” எனக் கூறும் போதே, தீரனின் முகத்தில் வேதனை சாயல் தெரிந்தது.

தன் உடன் பிறந்த சகோதரனின் இழப்பு அவனுக்கு பெரும் அடி தான்.

நிமிடத்தில் நிதானித்தவன், இயல்பு நிலைக்கு திரும்பி, “சோ, நம்ம லவ் மேரேஜ் தானா?” என்றான் மீண்டும்.

அவனின் முக மாற்றங்களையே இமைக்காமல் பார்த்திருந்த சஹஸ்ராவிற்கு, அவன் கண்ணில் தோன்றிய ஆர்வம் கண்டு ஒரு மாதிரி ஆகி விட்டது.

முதலில் இடவலமாக தலையாட்டியவள், அவனது முகம் லேசாக சுருங்குவதைக் கண்டு, மேலும் கீழும் தலையாட்டினாள் ஆமோதிப்பாக.

அதில் இறுகி இருந்த இதழ்கள் மென்முறுவலை பரிசளிக்க, “ஏதாவது ஒரு பக்கம் தலையாட்டு. ஆமாவா இல்லையா?” எனக் குறுகுறுப் பார்வையுடன் வினவ, எச்சிலை கடினப்பட்டு விழுங்கியவள், “ஆ… ஆமா…!” என்றாள் மெல்ல.

“ரியலி! ஆனா, ஏன் எனக்கு உன்னோட ஞாபகம் எதுவுமே இல்லை. டோட்டலா மறந்துடுச்சு” என்று தலையை பிடித்துக் கொண்டவனிடம்,

“நம்ம மீட் பண்ணியே ரெண்டு மாசம் தான் ஆகுது தீரன். மே பீ அந்த சம்பவத்தை முழுசா மறந்துருப்பீங்க.” என அவனை ஆசுவாசப்படுத்தினாள்.

அப்போதும் அவன் முகத்தில் தெளிவில்லாமல் போக, “ரொம்ப யோசிக்காதீங்க. இப்போதைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க. நாள் ஆக ஆக, உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடும்.” என்றவள், ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கையைப் பிடித்து மெதுவாக அழுத்தம் கொடுத்து ஆறுதல் அளிக்க, சிறிது தெளிந்தவன்,

“சரி நம்மளை பத்தி சொல்லு!” என்றான்.

அவளோ கண்களை அகல விழித்து, “நம்மளை பத்தி என்ன சொல்ல?” எனக் கேட்க,

“நம்ம லவ் பண்ணுனதை பத்தி சொல்லு. எங்க மீட் பண்ணுனோம். யார் முதல்ல ப்ரொபோஸ் செஞ்சா எல்லாத்தையும் சொல்லு. அப்போ தான, எனக்கு கொஞ்சமாவது ஞாபகம் வரும் சஹஸ்ரா.” என அவள் கையைப் பற்றிக்கொண்டு அவளது முகம் பார்த்தான்.

பதில் தெரியாத கேள்வியாக இருந்தாலும் பரவாயில்லை. அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியாக அல்லவா அவன் கேட்கிறான். காதலா? அது எந்த கடையில் கிடைக்கும் என்று கூட அவளுக்கு தெரியாதே. ஏதோ கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்ததில், சில துளி கண்ணீரை இழந்து விட்டாள் அவ்வளவே!

இப்பொழுது என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல், “இப்போவே தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியம் இல்ல தீரன். முதல்ல நல்லா கியூர் ஆகி வீட்டுக்கு வாங்க. அப்பறம் பேசிக்கலாம்.” எனப் புன்னகைக்க முயன்றவளை, அழுத்தமாக பார்த்தான்.

அப்பார்வையில், கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காமல் உன்னை நகர விட மாட்டேன் என்ற தொனி தெறிக்க, அவளோ நொந்தாள்.

“நம்ம… பிசினெஸ் பார்ட்னர்ஸா இருந்தோம். அப்போ தான் ரெண்டு பேரும் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போதைக்கு இது போதுமே…!” எனத் தட்டுத் தடுமாறி பதில் கூறியவளுக்கு, இருவரும் ஒப்பந்த திருமணம் செய்து கொண்டோம் எனக் கூற வாய் வரவில்லை.

இப்போது அவனுக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அவள் மட்டும் தான் என்று நன்றாக உணர்ந்தவளுக்கு, அப்படி வெடுக்கென பேசவும் மனம் வரவில்லை. ஆனால், இந்த ஒரு பொய்யால், தன் கணவன் தன்னை எப்படி எல்லாம் ஆட்டுவிக்க போகிறான் என்ற உண்மை புரியாமல்,

“கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்றவள், அவன் படுப்பதற்கு உதவினாள்.

அந்நேரம், நிக்கோலஸ் அங்கு வந்து விட, அவனைக் கண்டதும், “என்ன நிக்கி அண்ணா, ஏன் ஆக்சிடென்ட் ஆனதை என்கிட்ட முன்னாடியே சொல்லல. ஒரு வாரமா இவரை காணோம்ன்னு எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” நிஜமான கோபமும் பதற்றமும் சூழ, நிக்கோலஸைக் கடிந்தாள் அவள்.

அவளைக் காண முடியாமல் தயங்கியவன், “சாரி சஹா. பாஸ்க்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும் நானே கொஞ்சம் பயந்துட்டேன். அப்போ தான் கல்யாணம் ஆச்சு… உடனே உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. பாஸ், கொஞ்சம் ரெகவர் ஆனதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்.” என்றிட,

தீரன் தான், “என்ன இருந்தாலும் நீ சொல்லிருக்கணும் நிக்.” என்றான் அதட்டலாக. அவனுக்கு நிக்கோலஸை நன்றாக நினைவு இருந்தது அவனுக்கே ஆச்சர்யம் தான்.

“உங்களுக்கு நிக்கி அண்ணா யாருன்னு தெரியுதா?” விழி விரித்து சஹஸ்ரா வினவ, ஒரு நொடி அவ்விழியில் மூழ்கினான்.

“ஏன், தலைல தான அடிபட்டுச்சு கண்ணுலயா அடிபட்டுச்சு. கண்ணு முன்னாடி கங்காரு மாதிரி நிக்கிறவனை தெரியாம இருக்குமா?” என அசட்டையாகக் கேட்க, அவன் கூறிய ‘கங்காரு’ என்ற வார்த்தையில் அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“எதே கங்காருவா? பாஸ்!” நிக்கோலஸின் பாவமான பாவனை கண்டு இன்னும் சிரிப்பு பீறிட்டது.

இடுப்பில் கை வைத்து, சஹஸ்ராவை முறைத்த நிக்கோலஸ், “இப்ப உங்களுக்கு எப்படி பாஸ் இருக்கு?” என்று தீரனிடம் வினவினான்.

“ம்ம். குளுகுளுன்னு இருக்கு. நான் இருக்குறது ஐசியூல அப்பறம் எப்படி இருக்கும்?” எதிர்கேள்வியை நக்கலாக கேட்டதில், அசடு வழிந்தவன், ஏதோ கூற வந்து விட்டு பின், “நான் வெளிய இருக்கேன்” என நகரப் போக, “ஏதோ சொல்ல வந்த சொல்லிடு.” என்றான் அமர்த்தலாக.

“அது வந்து பாஸ்…” என்றவனுக்கும் விழிகள் லேசாக கலங்க, “உங்க தம்பியோட ஆஷஸ் வச்சு என்ன காரியம் பண்ணனும்ன்னு சொன்னா, பண்ணிடுறேன்.” எனக் கேட்க, இத்தனை நேரம் இருந்த குறும்புத் தன்மை முற்றிலும் மறைந்திருந்தது தீரனுக்கு.

அந்நிமிடம் அவனின் கசங்கிய முகத்தை ஏற்க இயலாத சஹஸ்ரா,

“ப்ச், முதல்ல அவர் சரியாகி வீட்டுக்கு வரட்டும் அண்ணா. இப்பவே இதை பத்தி பேசணுமா என்ன? அவரை ரெஸ்ட் எடுக்க விடுங்க.” என்று கணவனுக்காக பரிந்து பேசியவளை, ஒரு மாதிரியாக பார்த்த நிக்கோலஸ் சரியென வெளியில் சென்று விட்டான்.

என்ன இருந்தாலும், தீரனிற்கு தெரியாமல், காரியம் செய்தது அவனை அரித்தது. அதனால் தான், நேரம் காலம் தெரியாமல் பேசி விட்டான்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் தனக்காக ஆறுதலுக்கு வருபவளை தீரனின் அழுத்த விழிகள் இமைக்காமல் பார்க்க, அவளோ அதனை கவனியாமல், அவனுக்கு போர்வையை போர்த்தி விட்டாள்.

“சஹி!” தீரன் மென்குரலில் அழைக்க, அந்த வித்தியாச அழைப்பில் ஒரு நொடி வியந்தவள், “சொல்லுங்க.” என்றாள் வேகமாக.

கண்ணசைவிலேயே அவளை அருகில் வரக் கூற, ஏதோ பேச வருகிறான் போல என்றெண்ணி முகத்தை அவன் புறம் கொண்டு வந்தவள், காதை மட்டும் காட்ட, யோசியாமல் அச்செவியில் தன் காய்ந்த இதழ்களை பதித்தவன், “தேங்க்ஸ்…” என்றான் உருகும் குரலில்.

அத்துடன் அவளுக்கு உலகமே நின்று விட்டது போன்ற பிரம்மை ஏற்பட்டது. இப்போது இங்கு என்ன நடந்தது? எனப் புரியாமல் மீண்டும் ‘ரீவைண்ட்’ செய்து பார்த்தவளுக்கு, தீரன் முத்தமிட்ட கணமே உறைக்க, உறைந்து விட்டாள்.

அவள் கூறிய ‘காதல்’ என்ற ஒற்றை வார்த்தையில், இன்னும் அவளின் மணவாளன் செய்யப் போகும் கூத்தை இந்த இனிய அச்சாரத்திற்கு பின்பும் உணராது போனாள் பாவை.

யாரோ அவன்(ள்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
38
+1
104
+1
6
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment