Loading

 

மனதில் வலியுடன், இவ்வளவு நாள் இனிமையாய் மனதில் நிறைந்த அவனுடனான இரண்டாவது சந்திப்பை, கண்ணீருடன் நினைத்தாள் கயல் விழி.

கயலின் தோழியின், திருமணத்திற்கு பிறகு, ஒரு வாரம் கடந்த நிலையில், அக்கௌன்ட்ஸ் பிரிவிற்கான நேர்காணலுக்கு சென்றிருந்தாள் கயல்விழி.

சொல்லபோனால், அவள் அந்த கம்பெனியில் வேலைக்கு அப்ளை செய்யவில்லை… கல்லூரி மூலம் அவளுக்கு இங்கு இன்டெர்வியூ நடக்கின்றது என்றும், விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம் என்றும், கடிதம் வந்திருந்தது.

அவளும் சும்மா அட்டென்ட் செய்வோம் என்று நினைத்து அங்கு வர, ஒவ்வொருவராய் இன்டெர்வியூ செய்யப்படும் அறைக்கு சென்று வந்தனர்.

சில நேரம் கழித்து, கயல்விழி பெயர் அழைக்கப்பட, அவளும் சென்று நன்றாகவே பதில் அளித்தாள்.

அவள் பதிலில் திருப்தி அடைந்த மேலாளர், அவளை சேர்மேன் அறைக்கு சென்று சாரை பார்க்குமாறு சொல்ல, அவளும், அந்த அறைக்குள் சென்றாள்.

ஆனால் அங்கிருந்த ஜீவாவை பார்த்தவளுக்கு தான், இவ்வளவு நேரம் இல்லாத பயமும் நடுக்கமும் பிறந்தது.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல், மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டே, “கம் இன்..” என்று அழைக்க, பின்னிக்கொண்ட கால்களை, மெதுவாக எட்டு வைத்து, அவன் முன் நின்றாள்.

ஜீவா “சிட் டௌன்…” என்று சொல்ல, அவள்  அமரவும், அவளின் ஃபைலை வாங்கி பார்த்தவன், அவன் பங்கிற்கு சில கேள்விகளை கேட்டான்.

இதுவரை கடினமான கேள்விக்கு கூட பதில் சுலபமாக சொல்ல முடிந்தவளுக்கு, இப்போது, அவள் ஃபேமிலி பேக்ரௌண்ட் பற்றி பேச கூட நாக்கு தந்தி அடித்தது.

பின், முயன்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவள், அவன் நாளைக்கு வேலையில் சேர்ந்து கொள்ள சொல்லி சொன்னதும், உடனே “ஓகே சார்” என்று அவசரமாய் வெளியில் செல்ல போனாள்… ஆனால் கதவை திறக்க தான் முடியவில்லை.

அவன் தான், அவளுக்கு முன் சென்று கதவைத் திறக்க முடியாமல் பிடித்திருந்தானே பிறகு எங்கே திறப்பது…

அவளுக்கு மிக அருகில் நின்றிருந்தவனைக் கண்டு, விழிகள் படபடக்க,

ஜீவா, “என்னை பார்த்தா உனக்கு பேய் மாதிரி இருக்கா…” என்று கேட்டான்.

அவள் காதில் ஜிமிக்க ஆட, “இல்ல” என்று தலையாட்டினாள்.

“வேற, மிருகம் மாதிரி இருக்கா…?” என்று மீண்டும் வினவ, அவள் அப்போதும் இல்லை என்று தலையாட்டினாள்.

“அன்னைக்கு உன்னை ட்ராப் பண்ணுனா, என்னமோ, நான் உன்னை கடத்திட்டு போயிட்டு திரும்ப வீட்ல விட்ட மாதிரி, விறுவிறுன்னு உள்ளே போய்ட்ட… ஹ்ம்ம்.” என்று சுவற்றில் கை வைத்து அவளை அணை கட்டி கேட்க,

கயல் மிரண்டு, “அது அது அது…” என்று திணறினாள்.

அவள் திணறலில் என்ன கண்டானோ, அவன் கையை எடுத்து விட்டு, “போ” என்று சொன்னதும் தான் தாமதம்,  தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடியே விட்டாள்.

மறுநாள் “இனிமே அவனை பார்த்தா பயப்பட கூடாது, அவன் என்ன சிங்கமா புலியா… மனுஷன் தான. என்னை கடிச்சா சாப்பிட போறான். கயல், அவன் முன்னாடி இன்னைக்கு கெத்தா இருக்கணும்” என்று தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டு, அலுவலகத்திற்கு சென்றாள்.

ஆனால் அன்று முழுதும் அவனை அவள் பார்க்கவே இல்லை. அன்று மட்டும் அல்ல, அதன் பிறகு ஒரு வாரம் அவள் கண்ணிலேயே அவன் படவில்லை.

இந்த இடைப்பட்ட நாளில், அவளுக்கு இருந்த தைரியமே போய்விட்டது.

ஆனால் அவளுக்கு அக்கௌன்ட்ஸில் தான் பெரும் குழப்பமே.

கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் ஷார்ட் ஏஜ் ஆனது. இதனை பற்றி, சீனியர் அக்கௌன்டன்ட் கிருஷ்ணனிடம் கேட்டால், அவர், “5 லட்சம் தான எதாவது போட்டு விடு… மொத்தமா போடாம, சில்லறை சில்லறையா பிரிச்சு கணக்கு எழுது” என்று சொல்ல, அவளுக்கு தான் ஏதோ நெருடியது.

இதனை மேனேஜரிடம் சொல்லலாம் என்றால், அவரும் அந்த கிருஷ்ணனும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். இப்படியே போனால் வருடத்திற்கு 60 லட்சம் ரூபாய் என்ன ஆனது என்றே தெரியாமல் போய்விடும் என்று நினைத்தவளுக்கு, இதனை ஜீவாவிடம் சொல்லவேண்டும் என்று மனது உறுத்த, அவனைப் பார்க்க சென்றாள்.

இழுத்து பிடித்த தைரியத்தோடு, அவனிடம் சென்று விஷயத்தை சொல்ல, அவன் அவளை ஒரு எக்ஸ்ரே பார்வை பார்த்தான்.

அதற்கு அர்த்தம் என்ன என்று இப்பொழுது கூட அவளுக்கு புரியவில்லை.

பின், அவன் மேனேஜரை அழைத்து விசாரிக்க, அவன் தடுமாறுவதை கண்டவன், அனைத்து கணக்குகளையும் எடுத்துப் பார்த்து, அதில் இருக்கும் குளறுபடிகளை கண்டு கடுங்கோபம் கொண்டவன், கிருஷ்ணனை வேலையை விட்டு அனுப்பி, கயலுக்கு மேலும் சில வேலைகளை கொடுத்து இன்னைக்குள் முடித்து, அந்த ஃபைலை தன் டேபிளில் வைக்குமாறு கட்டளையிட, அந்த கிருஷ்ணன் இவளை வஞ்சத்துடன் பார்த்து விட்டு சென்றார்.

ஆனால் அவள் அதை எல்லாம் கவனியாமல், வேலையிலேயே கவனமாய் இருக்க, இருட்டியதை கூட அவள் கவனிக்காமல், அவன் சொன்ன வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தாள்.

அதன் பிறகே மணியை பார்க்க, அவசரமாக, ஜீவாவின் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் சீட்டில் சாய்ந்து, நெற்றியின் ஒரு விரலை வைத்து அழுத்தி, சோர்வுடன் அமர்ந்திருப்பதை கண்டு மனதை பிசைந்தது.

இவ்வளவு குளறுபடி நடந்தால், பின்ன வருத்தம் இருக்க தான் செய்யும் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை இதெல்லாம் அவனுக்கு ஒரு பணமே இல்லை என்று.

பின், “சார்” என்று அழைத்து,

“நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு” என்று கொடுக்க, அவனும் வாங்கி சிறிது நேரம் பார்த்து விட்டு, அவளை கிளம்ப சொன்னான்.

அவனை பார்த்தாலே, மதியத்திலிருந்து சாப்பிடாதவன் போல் இருக்க, ‘சாப்டாங்களான்னு கேட்போமா’ என்று மனதினுள் பட்டிமன்றம் நடத்தியவள், பின், அதனை கேட்காமலேயே பார்க்கிங் சென்றாள்.

அன்றும், அவளின் வண்டி அவளுக்கு சோதனையைக் கொடுக்கும் விதமாய் பஞ்சர் ஆகி நின்றிருந்தது.

“ப்ச்… என்ன இது இந்த வண்டி எப்போ பார்த்தாலும் பஞ்சர் ஆகிகிட்டே இருக்கு.” என்று கடுப்புடன் நினைத்தவள், அந்த நேரத்தில் கடையும் இருக்காது என உணர்ந்து, பேருந்துக்கு காத்திருந்தாள்.

அப்பொழுது, அந்த கிருஷ்ணன் ஆட்களுடன் அவளை சுற்றி வளைக்க, ஒன்றும் புரியாமல் அரண்டு போய் பார்த்திருந்தாள் கயல்விழி.

அவர், “என்னையவே போட்டு குடுக்குறியா… இனிமே நீ எப்படி இங்க வேலை பார்க்குறன்னு நானும் பார்க்குறேன். அவளை தூக்கிட்டு வாங்கடா” என்று அந்த ஆட்களிடம் சொல்ல,

அவள் பயந்து “வேணாம், என் பக்கத்துல வராத…” என்று பின்னால் நகர  சுற்றி முற்றி பார்த்தவளுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத சாலை தான் கண்ணுக்கு தெரிந்தது.

அவளால் ஓடவும் முடியாமல் அவளை சுற்றி நின்றவர்களிடம் இருந்து தப்பிக்க வழியறியாமல் அவர்கள் தொட வருகையில், “நோ” என்று காதைப் பொத்தி கண்ணை மூடி கத்தியவள், சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தாள்.

அவள் மீது இன்னும் அவர்களின் கை படாமல் இருப்பதை உணர்ந்து, அதன் பிறகே கண் விழித்து பார்த்தவளுக்கு ஜீவா அவர்களை அடித்து நொறுக்கி கொண்டிருப்பது தான் தெரிந்தது.

இவன் அடியில் பயந்து அவர்கள் ஓடியவுடன், ஜீவா அவளருகில் வந்து “ஆர் யு ஆல்ரைட்?” என்று கேட்க, அவள் நடுங்கி கொண்டே “ம்ம்” என்று தலையாட்டினாள்.

அவன் அவளை காருக்கு அழைத்து சென்று தண்ணீரைக் கொடுக்க, அதனை வாங்கி மட மடவென குடித்தவளுக்கு நடுக்கம் நிற்கவே சில நிமிடம் ஆனது.

ஜீவா, “ரிலாக்ஸ்…” என்று சொன்னதும்,

அவள் “நீங்க எப்படி வந்தீங்க…” என்று கேட்க,

அவன் “நான் கிளம்பலாம்னு வெளியே வந்தப்போ தான் பார்த்தேன். நாலு பேர் உன்னை பார்த்து வர்றதை… பட் நான் உன் சொந்தக்காரங்கன்னு நினைச்சேன்” என்றான் குறும்பாய் பார்த்து.

அதில் அவள் தான் “என் சொந்தக்காரங்க ரௌடீஸாவா இருக்காங்க…” என்று முறைக்க,

ஜீவா விழி உயர்த்தி, “உனக்கு முறைக்கலாம் தெரியுமா… பயப்பட மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சேன்…” என்றதும்,

அதில் லேசாய் புன்னகை அரும்ப, “நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து நகரப் போனாள்.

“எங்க ஓடுற… யு காண்ட் எஸ்கேப் ஃப்ரம் மீ” என்று அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு சொல்ல, அவள் திருதிருவென விழித்தாள்.

அதில் சிரித்தவன், “உன்னை வீட்ல விட்டுட்டு போறேன்… நீ என்கிட்ட இருந்து தப்பிச்சு வேற யார்கிட்டயாவது மாட்டிக்காதன்னு சொல்ல வந்தேன்” என்று சொல்ல, அப்பொழுதும் அவன் ஏதோ பொறி வைத்து பேசியது போலேயே தோன்றியது.

ஆனால் சில நொடி தான். அந்த எண்ணத்தை மறந்து விட்டு, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

அன்றிலிருந்து, அவனை பார்க்கும்போது, பயம் அகன்று, சற்று இலகுவாகவே இருக்க பழகி கொண்டாள்.

அவனும் எது பேசினாலும் அளவோடு தான் பேசுவான். அப்படியே இரண்டு வாரம் கடந்திருக்க, அன்று கயல்விழி விடுமுறை எடுத்ததில் அவளுக்கு போன் செய்து ஏன் வரவில்லை என்று கேட்டான்.

அவள், மெல்லிய குரலில் “அப்பாவுக்கு ஹார்ட் அட்டேக் சார்… ஹாஸ்பிடல்ல இருக்கேன்” என்று சொல்லும் போதே அழுகை முட்டி கொண்டு வந்தது.

விவரம் கேட்டுவிட்டு அந்த மருத்துவமனைக்கு விரைந்தவன், “என்ன ஆச்சு” என்று கேட்க,

கயல், “ஹார்ட்ல அடைப்பு இருக்கு… சரி பண்றது கஷ்டம்னு சொல்றாங்க சார்.” என்று அவன் முன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட, அவன் அவள் தோளை தொட்டு,

“ரிலாக்ஸ் கயல்… நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்” என்று மருத்துவரை பார்த்து, “எவ்வளவு செலவானாலும், அவரை காப்பாற்ற வேண்டும்” என்று சொல்ல, அவர்களும் அவருக்கு சிறந்த வைத்தியம் கொடுத்து காப்பாற்றினர்.

ஆனால் அவன் வைத்திய செலவை ஏற்றுகொள்கிறேன் என்று சொன்னதை மட்டும் அவள் ஏற்று கொள்ளவில்லை.

நகைகளை விற்று அவளே கட்டினாள். அப்பொழுதும், அவளை ஒரு எக்ஸ்ரே பார்வை பார்த்தான்.. அதற்கும் அர்த்தம் என்ன என்று இன்றளவும் அவளுக்கு தெரியவில்லை.

ஒரு வாரம், சிவமூர்த்தியை மருத்துவமனையில் வைத்திருக்க, தினமும் வந்து பார்த்து விட்டு சென்று, அவர்களின் நம்பிக்கைக்கு உரியவன் ஆனான் ஜீவா.

கயலின் அம்மா கலை, “இவ்வளவு பெரிய பணக்காரர். கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் நமக்கு இவ்வளவு உதவி பண்றாருல கயலு. நீ நல்ல இடத்துல தான் வேலைக்கு சேர்ந்துருக்க…” என்று பெருமை பட்டு கொண்டார்.

தினமும் அங்கு வந்து கயலிடம் சாப்டியா, தூங்குனியா என்று விசாரித்து  சாப்பிடவில்லை என்றால் சாப்பிட வைத்து விட்டு செல்லும் ஜீவாவின் அன்பில், உருகித் தான் போனாள்.

பின், சிவமூர்த்தியை டிஸ்சார்ஜ் செய்யும் போது மருத்துவர், அவருக்கு அதிர்ச்சியான விஷயம் எதுவும் சொல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்ப, அப்பொழுது ஜீவாவும் தான் உடன் இருந்தான்.

பின்,  எப்பொழுதும் போல் கயல் அலுவலகம் வர, இப்போது, அவனிடம் சென்று சாப்டீங்களா… என்றும், வேலை பார்த்து கொண்டிருந்தால் “முதல்ல சாப்டுட்டு வேலை பாருங்க” என்று உரிமையாய் அதட்டும் அளவுக்கு அவனிடம் நெருங்கி இருந்தாள்.

மேலும், தற்போது எல்லாம் அவனின் பார்வை கூட சற்று வித்தியாசமாய் அவள் மேல் விழுவது போல் இருந்தது.

அன்று மாலை மழை தூறி கொண்டிருக்க, வீட்டிற்கு கிளம்பியவளுக்கு அன்றும் அவளின் வண்டி சதி செய்தது.

“சே, இது என்ன, காலைல வரும்போது நல்லா இருக்கு. கிளம்பும் போது மட்டும் பஞ்சர் ஆகி தொலைஞ்சுடுது” என்று நொந்து கொண்டு, பேருந்து நிலையம் நோக்கி சென்றவளை ஜீவாவின் கார் வழிமறித்தது.

ஜீவா, “எங்க போற” என்று கேட்க, அவள் “என் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு சார்… அதான் பஸ் ஸ்டான்ட் போறேன்” என்று சொல்ல,

அவன் கார் கதவை திறந்து விட்டு “கெட் இன்” என்று உள்ளே அழைக்க, அவள் எத்தனை முறை அவனை தொந்தரவு செய்வது என்று தயங்கினாள்.

ஜீவா, “மழைல நனையுற பாரு கயல். உள்ள வா.” என்று அழைக்க,

“இல்ல சார்… நான் பஸ்ல போறேன்” என்று அவள் பிடிவாதமாய் நிற்க, இப்போது அவன் கோபமாக காரை விட்டு வெளியில் வந்தான்.

கயல் பதறி, “சார்… மழை பேயுது உள்ள போங்க” என்று சொல்ல,

அவன் “நான் சொன்னதை நீ கேட்கமாட்ட. நான் மட்டும் நீ சொல்றதை கேட்கணுமா. நான் இங்கதான் நிப்பேன்” என்று வம்படியாக மழையில் நின்றான்.

கயல், “சார் நான் வரேன். நீங்க காருக்கு வாங்க” என்று சொல்ல, அவன் அசையவே இல்லை.

அவள் அவன் கையை பிடித்து “சார் ப்ளீஸ் சார் வாங்க…” என்று இழுத்து காருக்கு கொண்டு சென்றதும் தான், உள்ளே அமர்ந்தான்.

“ஏன் சார் இப்படி பண்ணுனீங்க. இப்போ பாருங்க எப்படி நனைஞ்சுருக்கீங்கன்னு…” என்று தவிப்பாக கூறும் போதே,

அவன் சிறு சிரிப்புடன், காரில் இருந்த துவாலையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை வாங்காமல் “முதல்ல நீங்க தலையை துவட்டுங்க” என்று சொல்ல, அவன் அவனின் முகத்தில் தெளித்திருந்த நீரை துடைத்து , தலையை துவட்டி விட்டு அவளிடம் கொடுக்க, அவளுக்கு தான் அவன் உபயோகித்த துவாலையை வாங்க என்னவோ போல் கூச்சமாக இருந்தது.

அதனால், அதனை வாங்காமல், “எனக்கு வேணாம் சார்” என்று ஈரப்  புடவை முந்தானையிலேயே துடைத்துக் கொள்ள, அவளை முறைத்தவன்,

அதனைத் தடுத்து, அந்த துவாலையிலேயே அவள் முகத்தில் இருந்த ஈரத்தை ஒத்தி எடுக்க, கயலுக்குத் தான், அவனின் அருகாமை நடுக்கத்தை தந்தது.

அவளை அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டே, துடைத்து விட்டவன், முகத்திலிருந்து துண்டை கழுத்துக்கு இறக்க, அவள் அந்த துண்டை பட்டென்று வாங்கி கொண்டு “நான் துடைச்சுகிறேன்” என்று உள்ளே போன குரலில் கூறவும், அதில் மெலிதாய் புன்னகைத்தவன்.

“நான் சொன்னதை செய்யலைன்னா… நானே உன்னை செய்ய வைப்பேன் கயல்.” என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு கூற, அவனின் பார்வையில் சிவந்து போனவளுக்கு அப்பொழுதும், அவனின் இந்த வாக்கியம் உறுத்தாமல் இல்லை.

ஆனால் காதலுக்கு கண் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மையாக அவன் மேல் அவளறியாமல் கொண்ட நேசத்தில், அவள் எல்லாவற்றையும் நல்லதாகவே எடுத்து கொண்டாள்.

அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும் “தேங்க்ஸ்” என்று சொல்லி, அவள் இறங்க போகையில், அவளின் கையைப்பிடித்த ஜீவா, அவன் நெஞ்சருகில் இருத்திக்கொண்டான்.

கயல் அதிர்ந்து பார்க்க, அவனோ “கயல்… நான் உன்னை லவ் பண்றேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா… உனக்கும் என்னை பிடிச்சிருந்தா” என்று நேரடியாய் கேட்டு விட, அவனின் இந்த நேரடித் தாக்குதலில் நிலை குலைந்தவள் பேயறைந்தது போல் இருந்தாள்.

அவளின் பாவனையைக் கண்டு, சிரித்தவன், “நான் அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன்… இப்படி முழிக்கிற… ஹ்ம்ம்?” என்று ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்க, அதில் அவள் மொத்தமாய் தொலைந்து போனாள்.

அவள் அதே நிலையில் இருப்பதை கண்டவன், மெதுவாக அவள் அருகில் வந்து, ஆள்காட்டி விரலால், அவளின் கன்னத்தை வருட, அதில் சிவந்த அவள் கன்னங்களை கண்டு, அதற்கு மென்மையாய் முத்தம் ஒன்றை கொடுத்து “லவ் யு கயல்” என்று அந்த பெயருக்கே வலிக்குமோ என்ற அளவு மெதுவாய் சொன்னதை கேட்டவளுக்கு தலையே சுற்றியது.

ஜீவா, சிறிதாய் சிரித்து விட்டு, “ஓகே கூல்… நீ ரொம்ப ஷாக்ல இருக்க. ரெண்டு நாள் நல்லா யோசிச்சு எனக்கு ஃபேவரா பதில் சொல்லு ரைட்…?” என்று மறுபுறம் வந்து, அவளுக்கு கார் கதவை திறந்து விட்டவன்,

அவள் தட்டு தடுமாறி இறங்கவும், “குட் நைட் ஸ்வீட் ஹார்ட்” என்று கன்னத்தை கிள்ளி விட்டு போனான்.

அவன் சொன்னதை ஜீரணிக்கவே அவளுக்கு இரண்டு நாள் ஆனது.

காதல் கொண்ட மனமோ, அவனுக்கும் தன் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்று மகிழ்ந்தாலும், மற்றொரு மனமோ, அவன் உயரத்தை கண்டு தயங்கி நிற்க, அவனை முதலில் மறுக்கவே செய்தாள்.

ஆனால், அப்பொழுதும் அவன் “நான் சொன்னதை நீ செய்யவில்லை என்றால், நானே உன்னை அதை செய்ய வைப்பேன்” என்று கூறி, அவளை கரைத்து, இறுதியில் அவனுக்கு சம்மதம் சொல்ல வைத்தான்.

அவனே திருமணம் பற்றி, சிவமூர்த்தியிடம் பேசும்போது தான், அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்றும், ஊட்டியில் எஸ்டேட் இருப்பதாகவும், இங்கு இருக்கும் அலுவலகத்தில் வேலை இருந்ததால் இங்கு வந்ததாகவும், திருமணத்திற்கு பின் அவளை ஊட்டிக்கு அழைத்துக் கொண்டு சென்று விடுவதாகவும் கூறினான்.

பின், தயங்கிய அவளின் பெற்றோரையும் பேசி சரி கட்டி, இன்று திருமணம் என்ற அளவிற்கு கொண்டு வந்து விட்டு, இப்பொழுது இப்படி தன் மேல் நெருப்பை வாரி இறைக்கும் அவனின் செய்கையை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

கண்ணில் நீருடன் மணமேடைக்கு சென்றவள், காதலாய், வெட்கத்துடன், மனநிறைவுடன், அவனிடம் இருந்து வாங்க வேண்டிய தாலியை, விரக்தியுடன், அவனின் இளக்கார பார்வையுடன், இதயம் முழுதும் ரணத்துடனும் வாங்கிகொண்டாள்.

அவன் விரல் பிடித்து அக்னி சுற்றும் போது, ஜீவா, “நான் சொன்னதை நீ செய்யலைன்னா, நானே உன்னை செய்ய வைப்பேன் ஸ்வீட் ஹார்ட்” என்று பல்லைக்கடித்து கொண்டு, குரலில் கோபம் கொப்பளிக்க கூற, கயல் அதிர்ந்து நின்று விட்டாள்.

வலக்கையை
பிடித்து வலக்கையில்
விழுந்தேன் வலக்கரம்
பிடித்து வலம் வர நினைத்தேன்

உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை ஏன்
முதல்வாி முதல்
முழுவதும் பிழை

விழிகளின் வழி
விழுந்தது மழை எல்லாம்
உன்னால்தான்

இதுவா உந்தன்
நியாயங்கள் எனக்கேன்
இந்த காயங்கள் கிழித்தாய்
ஒரு காதல் ஓவியம் ஓ

முருகன் முகம்
ஆறுதான் மனிதன் முகம்
நூறுதான் ஒவ்வொன்றும்
வேறு வேறு நிறமோ என்
நண்பனே என்னை எய்த்தாய்

நேசம் தொடரும்…
– மேகா…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
44
+1
83
+1
3
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்