Loading

துருவ் பதிலுக்காக மீராவின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு சில நேரம் முன்பு சென்னையில்,

அஜய் “துருவ்” என்றதும், உத்ரா புருவத்தை சுருக்கி “யாருடா அது?” எனக் கேட்க,

“சொல்றேன் கம்” என்றான்.

உத்ராவும், சுஜியும் ‘மீட்டிங் ஹால்’ செல்ல, அங்கு ஏற்கனவே அர்ஜுனும், விதுனும் அமர்ந்திருந்ததைப் பார்த்த உத்ரா, “என்ன ஒரு அதிசயம்”என்றாள் ஆச்சர்யமாக.

அர்ஜுனுக்கு இந்த தொழிலில் எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால் தாங்கள் செய்யும் வியாபாரத்தில் அவனுக்கும்  பங்கு உண்டு எனக் கூறி, அவனை பங்குதாரர் ஆக்கி இருந்தனர்.

மிக மிக முக்கியமான ப்ராஜெக்ட் பற்றி பேச, அல்லது, கையெழுத்து இட மட்டுமே அவன் வருவான்.

அது கூட சில நேரம் மருத்துவமனையில் வைத்தே போட்டுக் கொடுத்து விடுவான்.

விதுன். இன்டீரியர் டிசைனர். அந்த கிளையை மட்டும் தான் அவன் பார்த்து கொள்கிறான் என்றாலும், அவனும் ஒரு பங்குதாரரே.

அவனும் முக்கிய முடிவுகள் எடுக்க மட்டுமே ‘மெயின் ஆஃபீஸ்’ வருவான்.

உத்ராவின் தந்தை வியாபாரத்தையும், மேலும், அவளே முயன்று உருவாக்கிய அவளின் தொழில்களையும், மொத்தமாய் பார்வையிடுவது உத்ராவும், அஜயும் தான். இதில், அவளுக்கு சில பல அறிவுரைகள் சொல்லி அவர்களுக்கு மதி மந்திரியாய் இருப்பது சுஜிதா.

இப்பொழுது, அனைவரும் அமர, புரொஜெக்டர் முன் நின்று அஜய் மட்டும் பேச ஆரம்பித்தான்.

“நம்ம கம்பெனிக்கு பெரிய அளவு பட்ஜெட்ல ஒரு காண்ட்ராக்ட் வந்துருக்கு. இந்தியாக்கு உள்ள மட்டும் இருந்து ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருந்த நமக்கு, ஆஸ்திரேலியால, ‘வேந்தா மல்டி நேஷனல் கம்பனிஸ்’ல’ இருந்து,
ப்ராஜெக்ட் குடுத்துருக்காங்க.

இந்தியால அவங்க பண்ண போற முதல் பிசினெஸ். அதுக்கு நம்ம கம்பெனிய செலக்ட் பண்ணிருக்காங்க.  இதை மட்டும் நம்ம கரக்ட் – ஆ பண்ணிட்டா. நம்ம வேர்ல்ட் லெவல்ல ரீச் ஆகலாம்”

அவனின் உரையைக் கேட்டு அர்ஜுன் கொட்டாவியை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

சுஜி “வாவ் சூப்பர்டா. இது நல்ல விஷயம் தான செம்மையா பண்ணிடலாம். பட் அதுக்கு ஏன் நீ இவ்ளோ டென்ஷன் – ஆ இருக்க” என்று கேட்க,

“என்னை முழுசா பேச விடு பஜ்ஜி” என்றான் அஜய்.

அவனின் ‘பஜ்ஜி’அழைப்பில் அவனை தீயாய் முறைத்தாள்.

அதனை கண்டுகொள்ளாதவனாக புரொஜெக்டரில் துருவின் புகைப்படத்தை ஒளிப்பித்து,

“இவன் வேந்தா கம்பெனி சேர்மன் துருவேந்திரன்” என்றிட,

உத்ரா “அட, நல்ல தமிழ் பேரு பங்கு” என்று கூறி சில நொடிகள் அவன் அழகை ரசிக்கத் தான் செய்தாள்.

அஜய் அவளை முறைத்து, “அவன் பேரு மட்டும் தான் தமிழ். மத்தபடி பக்கா ஃபாரினர். பிசினெஸ்ல அவனை அடிச்சிக்க ஆளே கிடையாது.

பட், ஹி இஸ் வீக் அட் கர்ள்ஸ். வாரத்துக்கு ஒரு கர்ள் ஃபிரண்ட் கூட தான் இருப்பான்” என்று கடுப்புடன் கூற, இவனுக்கு ஏன் துருவைப் பிடிக்கவில்லை என்று சுஜி இப்போது அறிந்து கொண்டாள்.

‘ஒழுக்கமே உயிரென ஓம்பப்படும்’ என்று உயிர் மூச்சாக நினைப்பவனுக்கு நிச்சயம் இவனை பிடிக்காது என்று நினைத்தவள்,

“அவன் கேர்ள் பிரெண்ட் வச்சுக்கிறதுல உனக்கு ஏண்டா இவ்ளோ பொறாமை” என்றாள் நக்கலாக.

அர்ஜுன், “அது ஒன்னும் இல்ல சுஜி, நமக்கு ஒண்ணே செட் ஆக மாட்டேங்குது. இவனுக்கு மட்டும் எப்படினு பையனுக்கு கடுப்பு. இல்லடா?” என்றதில் இருவரும் ஹை ஃபை கொடுத்து கொள்ள, உத்ரா அமைதியாகவே இருந்தாள்.

அஜய் இருவரையும் முறைத்து விட்டு, மேலும், “அவன் ஃபாமிலி பத்தி எந்த டீடைலும் கிடைக்கல.

பட் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு பொண்ணு கூட லிவிங் டு கெதரா இருந்துருக்கானு அப்போ நியூஸ் லீக் ஆகியிருக்கு. அதுக்கு அவன் ‘ஆமா’னும் சொல்லல இல்லைன்னும் சொல்லல.

அடுத்த நாள், அந்த பத்திரிக்கை ஆபீஸ்சே இல்லை. இப்போ வரை அவனை பத்தி ஏதாவது கிசு கிசு வந்துகிட்டே தான் இருக்கு. இது அவனோட பர்சனல் டீடைல்” என்று ஒரு ஃபைலை உத்ராவிடம் கொடுத்தான்,

தன் அத்தை பெண்ணின் வாழ்வில் தானே குழியை தோண்டுகிறோம் என்று அறியாமல்.

பின், அவனின் தொழில் புகழை பற்றி கூறியவன், உத்ராவை உடனடியாக அவன் ஆஸ்திரேலியா வரச்சொல்லி இருப்பதாக உரைக்க, உத்ரா ஏன் எனப் பார்த்தாள்.

“உன்கிட்ட நேரடியா ப்ராஜெக்ட் பத்தி டீடைல் பேசணுமாம். அப்பறம் நம்ம கம்பெனி கூட டை-அப் வச்சுக்கணும்னு அந்த துருவ்  நினைக்கிறான்”

உத்ரா சிறிது யோசித்து விட்டு, “டை-அப் பத்தி யோசிக்கணும். அண்ட் ப்ராஜெக்ட் பண்ணனும்னா அவன் தான இங்க வரணும். நம்மளை தேடி…?” என்று புருவம் சுருக்கினாள்.

“சரி நான் யோசிக்கிறேன்” என அவள் எழும்ப போக,

அஜய், “இல்ல உதி அவன் உன்னை நாளைக்கே வரச்சொல்றான். அதுவும் இது கருணாகரன் மாமாவோட ஆர்டர். அவன் நம்மகிட்ட இதை நேரடியா பேசல. மாமாகிட்ட பேசி, அவர் மூலமா தான் இந்த விஷயத்தை கான்வே பண்ணுனான்.” என்றான்.

சுஜி “வெரி ஸ்மார்ட். உத்ராகிட்ட நேரடியா பேசுனா ஒத்துக்க மாட்டாள்னு அங்கிள் மூலமா டார்கெட் பண்ணிருக்கான்.  உத்ராவை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுருப்பான் போலயே” என்று நகைத்தாள்.

“இது ஸ்மார்ட்னஸ் மாதிரி தெரியல. குள்ளநரித்தனம் மாதிரி தெரியுது. நம்ம பிசினெஸ்கூட, டை – அப் வச்சுக்கணும்னா அவன் என்கிட்ட தான் நேரடியா பேசி இருக்கணும். அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், ப்ராஜெக்ட் பண்ணனும்னா அவன் தான் நம்மளை தேடி இங்க வரணும். இதை அவன்கிட்ட சொல்லிடு. அப்படி அவன் நோ சொன்னா. இந்த ப்ராஜெக்ட் அ கான்செல் பண்ணிடு” என்று உத்ரா உறுதியாய் கூறினாள்.

அர்ஜுன் சுஜியிடம் மெதுவாக, “இப்போதான் தெரியுது உதி ஏன் இன்னும் கமிட் ஆகாம இருக்கான்னு” என்று கிசுகிசுக்க,

சுஜி “ஏன் அர்ஜுன்?” என்றதும்,

  “பின்ன அவளே இப்பதான் ஒருத்தனை சைட் அடிச்சா அதுக்குள்ள இவன் அவனை பத்தி தப்பு தப்பா சொல்லி, அவன் ப்ராஜெக்ட்டயே கான்செல் பண்ண வச்சுட்டான். அப்பறம் எப்படி இவள் கம்மிட் ஆவாள். முதல்ல நீங்க ரெண்டு பேரும் இவன் பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணுங்க. இல்ல… ரெண்டு பேரும் காலம் பூரா சிங்கிள் தான்” என்று கேலி செய்ய, சுஜி கிளுக் என சிரித்து விட்டாள்.

உத்ரா ஒரு பார்வை பார்த்ததில் டக்கென்று சுதாரித்து, அமைதியாய் அமர்ந்து விட்டாள்.

இதில் விதுன் தான், ‘இவள் ஏதாவது இப்போ முடிவெடுத்து நம்மளை அப்பாகிட்ட கோர்த்து விட போறாள்’ என்று தன்னை நொந்து மிரண்டிருக்கும் போதே,

அஜய் “உத்ரா. அவன் ஒரு கிறுக்கன். அவன் ஒரு முடிவெடுத்துட்டா அதை சாமான்யத்துல மாத்த மாட்டான். அந்த ப்ராஜெக்ட்ட நம்மளை வச்சு முடிக்கணும்ன்னு நினைச்சுட்டான்னா கண்டிப்பா முடிக்காமல் விடமாட்டான் நமக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும்… நீ டை அப் பண்ணமாட்டேன்னு சொன்னால், இந்த கம்பெனியே இல்லாமல் பண்ணிடுவான்…” என்றான் பதற்றமாக.

உத்ரா திமிராக, “அதையும் தான் பார்ப்போமே.” என்றவள்,

விதுனிடம், “பெரியப்பாகிட்ட, அவனை இங்க வந்து என்னை பார்த்து பேச சொல்லு. அண்ட் டை அப் பத்தி நான் அப்பறம் யோசிச்சு சொல்றேன். பெரியப்பா ஏதாவது சொன்னா, என்கிட்டே பேச சொல்லு” என்று விட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல், விறுவிறுவென செல்ல, அஜய்க்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.

விதுன் அதற்கு மேல், “ஏன் அதை இவளே போய் சொல்ல வேண்டியது தான. என்னையவே ஏண்டா பலி ஆடு ஆக்குறீங்க” என்று புலம்ப,

அர்ஜுன், “ஏன் இதை அவள் இருக்கும்போது கேட்கவேண்டியது தான” என்றதில்,

விது “அவள்கிட்ட அதை கேக்குறதுக்கு நான் அப்பாகிட்டயே பேசிடுவேன்…” என்று முனங்கிக் கொண்டு எழுந்து போனான்.

அஜய் சுஜியை முறைத்து, “பஜ்ஜி போண்டா.. மீட்டிங்ல இருக்கிறப்ப, என்ன சிரிப்பு வேண்டியது இருக்கு? நான் என்ன காமெடியா பண்ணிக்கிட்டு இருக்கேன்?” என்று முறைக்க,

அவள் எழுந்து, “டேய் பஜ்ஜி போண்டானு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” என்று சண்டைக்கு வந்தாள்.

“நான் அப்படிதான் கூப்புடுவேன் பஜ்ஜி” என்றதும், கோபத்துடன் “போடா போடா…” என்று அவனை கலாய்க்க வார்த்தை வராமல் திணற,

“ஹ்ம்ம் கமான் உங்களால முடியும்” என்று நக்கலடித்து விட்டு, “போடி பஜ்ஜி மாவு…” என்று அஜய் மேலும் வம்பிழுத்து இருவருக்கும் சண்டையாக, அர்ஜுன் தான் காதை இரு கைகளாலும் அடைத்துக் கொண்டு உத்ராவின் அறைக்கு வந்தான்.

“யப்பா! எப்படி உதி இதுங்க ரெண்டையும் வச்சு சமாளிக்கிற. இன்னும் காலேஜ்ல சண்டை போட்ட மாதிரி தான் சண்டை போடுதுங்க.” என்றான் சிரிப்புடன்.

உத்ரா, “அதை விடு காலைல பெரியப்பா ஏன் உன்னை திட்டிகிட்டு இருந்தாரு?” என்று கேட்க,

அவன் ஜன்னலோரம் சென்று வெறித்தபடி, “கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு. நீயும் எந்த மாப்பிள்ளையை காட்டுனாலும் பிடிக்கலைன்னு சொல்றியாம். ஸோ உன்னையும் என்னையும் கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு” என்றான்.

அவளோ அசட்டையாக “ஹும். அதுக்கு நான் இந்த பில்டிங்ல இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்” என்று கேலி செய்ய,

“நானும் அதை தான் சொன்னேன் அதுக்கு தான் திட்டுனாரு”

உத்ரா சிரித்து விட்டு, அவனைப் பார்க்க, அர்ஜுன் ஜன்னல் வழியே எதையோ தேடி கொண்டே இருந்தான்.

இப்பொழுது இல்லை கடந்த சில வருடங்களாக அவன் எங்கும் சென்றாலும், அவன் விழிகள் மட்டும் ஒரு வித அலைப்புறுதலிலேயே இருக்கும்.

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி இருக்க போற அர்ஜுன்?” என்று கேட்க, அவன் தேடலை நிறுத்தாமல், “அவள் என்கிட்டே வர்றவரைக்கும்” என்றான் தவிப்பாக.

உத்ரா பெருமூச்சு விட்டு, “இதனை வருஷமா வராதவ இனிமேல் வரபோறாளாக்கும்… யாருதாண்டா அவள். என்னதான் நடந்துச்சு அதையாவது சொல்லு” என்று கேட்க,

அவன் எப்பொழுதும் போல் இந்த கேள்விக்கு அமைதியவே கடைபிடித்தான். மனமெங்கும் பாரமாய் இருக்க, அவள் விட்டு சென்ற காயம் அவனை வெகுவாய் வருத்தியது.

காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ

அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா
அடி உனக்கு

மனதிலே என் நினைப்பு
இருக்குமா……..

வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்

அவனிடம் பதில் வராமல் அவள் சலித்து போய் திரும்ப, அர்ஜுன் தன்னை சமாளித்து கொண்டு,

“எனக்கு தான் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு. நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற.” என்றான் கேள்வியாக.

“நான் எங்கடா பண்ணமாட்டேன்னு சொல்றேன். எனக்கு பெரியப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கல. அவ்ளோதான்” 

“உனக்கு என்னதான் பிரச்னை ஏன் பிடிக்கல?”

அர்ஜுன் அவளை புரியாமல் பார்க்க, இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த அஜய் திடீரென ஸ்லோ மோஷனில்  ஓடி வந்து,

“நோஒஒஒஒஒஒ பங்கு, அவள் கிட்ட இந்த கேள்வியை மட்டும் கேட்காத” என்றிட, அர்ஜுன் இன்னும் குழம்பினான்.

வராத மூச்சை வேக வேகமாக வாங்கிய அஜய், “இந்த கேள்வியை இவள்கிட்ட கேட்டா நம்ம சேது விக்ரம் மாதிரி தான் திரியனும்” என்றதும்,

அர்ஜுன் புன்னகைத்து, “என்ன உதி?” என்று கேட்க,

உத்ரா ஒரு முறை அஜயை உறுத்து விழித்து விட்டு “எனக்கு யாரையும் பிடிக்கலடா. ம்ம் எப்படி சொல்றது. எனக்கு லவ், கல்யாணம் அப்டின்னு யார் கூடவும் யோசிக்கவே பிடிக்கல. மொத்தத்துல யாரையுமே பிடிக்கல” என்று குழப்பத்துடன் கூற, அதில் அர்ஜுன் தான் அஜயை பார்த்து விழித்தான்.

அவன் ‘நான் தான் சொன்னேனே அவள்கிட்ட கேட்காத நம்மள லூசாகிடுவானு’ என்பது போல நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

அர்ஜுன், “ஹே லூசு, யாரவது ஒருத்தரை பிடிக்கலைன்னு சொன்னா, பரவாயில்லை நீ என்ன யாரையுமே பிடிக்கலைன்னு சொல்ற”  என அதட்ட, அதற்கு பாவம் அவளிடமே பதில் இல்லை. தெரிந்தால் தானே சொல்வாள்.

பின், விதுன் கருணாகரனிடம், உத்ரா கூறியதை உரைக்க, அவனை கழுவி கழுவி ஊத்தியவர், பிறகு, தொழில் விஷயத்தில் அவள் எடுக்கும் முடிவை என்றுமே மாற்றிக்கொள்ள மாட்டாள் என்று உணர்ந்து மீராவிடம் விஷயத்தை கூறினார்.

இங்கு மீரா தான் ‘சார் கத்தப்போறாரு’ என்று பயந்து கொண்டே,

“சார்… உத்ரா மேம் உங்களை அங்க வர சொன்னாங்க. தென் டை அப் பத்தி யோசிச்சு முடிவு பண்றதா சொல்லிருக்காங்க” என்று வார்த்தையை முழுங்கி கொண்டு கூற,

அவன் சிறிது சிந்தித்து விட்டு, “சரி டிக்கெட் போடு. நம்ம இந்தியா போறோம்.” என்றான் சாதாரணமாக.

நாம் கனவெதுவும் காணவில்லையே என்று தன்னைத் தானே கிள்ளிகொண்டாள் மீரா.

அதன் பிறகே அவன் சொன்னதை முழுதாய் புரிந்து கொண்டு ஏதோ பேச போக அதற்கு அவன் இடைவெளி அளிக்கவில்லை.

“இந்தியால நம்ம பண்ணப்போற ப்ராஜெக்ட் முடியிற வரை நம்ம அங்க தான் இருக்க போறோம்”  என்று உறுதியாக  கூறியதைக் கேட்டு அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

மீரா, “சார் நான் நான் எதுக்கு? இந்தியாவுக்கு நான் வரல” என்று கூற, அவன் அவளை தீயாய் முறைத்தான்.

“நீ என் செகரட்டரி. நீ கண்டிப்பா வந்து தான் ஆகணும். இன்னும் ரெண்டு நாள்ல இங்க இருக்குற ஒர்க் – அ முடிச்சுட்டு கிளம்புறோம்” என்று விட்டு ஓய்வறைக்கு செல்ல, அவள் தான் பேயறைந்தத்த்து போல் நின்றாள்.

“போடி மீரா. எங்க வேணும்னாலும் போ. நான் உன்னை தேடி வரமாட்டேன். என் காதல் உண்மைன்னா காலமே உன்னை என்கிட்டே கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருப்பேன். அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி” என்ற அவனின் காற்றில் கலந்த குரல் இப்பொழுதும் அவள் காதினுள் எதிரொலிக்க, சிலையாக நின்றிருந்தாள்.

உள்ளே சென்றவன், கண்ணாடி முன் நின்று, முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டு,

“ஐ நோ யு மை கேர்ள். நீயே என்னை உன்னைத் தேடி வரவைப்பன்னு எனக்குத் தெரியும். நீ எந்த நேரத்துல, என்ன சூழ்நிலைக்கு, என்ன மனநிலைல  என்ன மாதிரி முடிவெடுப்பன்னு எனக்கு தெரியாதா?” என்று எகத்தாளத்துடனும், விஷம புன்னகையுடன் தனக்கு தானே பேசிய துருவ்,

பின், “என்கிட்ட இருக்குற எல்லாத்தையும் நீ எடுத்துக்கிட்டு போய்ட்டா. நான் அப்டியே விட்ருவேன்னு நினைச்சியா? உங்கிட்ட இருக்குற எனக்கு சொந்தமானதை நான் அடையாமல் அங்க இருந்து வரமாட்டேன் உத்ரா. ஐ ஆம் கமிங் ஃபார் யு ஹனி.” என்றவன் குரலில் இருந்தது, ஆத்திரமா, இயலாமையா, ஆசையா இல்லை வேறு எதுவுமா என்று அவன் மட்டுமே அறிவான்.

வெளியில் வந்தவன், மீரா இன்னும் அதே இடத்தில நிற்பதை பார்த்து விட்டு, வெளியே சென்றான்.

மீரா தான் ஏதோதோ நினைவுகளில் சிக்கி, அவள் சீட்டில் சென்று கண் மூடி அமர்ந்தாள்.

எவ்வளவு நேரமோ தெரியாது “அம்மா” என்று மூன்று வயது குழந்தை  சஞ்சயின் குரலிலேயே கண் விழித்தாள்.

அதன் பிறகே, அவனைப் பள்ளியில் இருந்து அழைத்து வரும் நேரம் கடந்தும் கூட, தான் இப்படியே இருந்திருக்கிறோம் என்று உணர்ந்தவள்,

“சஞ்சு யார் கூடமா வந்த”, என்று கேட்க,

“மா… துருவ் அங்கிள் தான் என்னை கூட்டிட்டு வந்தாங்க.
. நம்ம பிளைட்ல போறோமா…” என்று பிஞ்சுக்குரலில், உற்சாகத்துடன் பேச, அவள் துருவை பார்த்தாள்.

அவன் நடந்ததற்கு தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஃபைலை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் அவள் கைக்குழந்தையுடன்  இந்த நாட்டுக்கு வந்ததில் இருந்து, அவளிடம் கூட கடுகடுப்பவன், சாந்தமாய் பேசுவது, சஞ்சுவிடம் மட்டுமே.

வேலை அவசரத்திலோ, இல்லை, அவளுக்கு உடல் நிலை சரி என்றாலோ, அவனே சஞ்சுவை பார்த்து கொள்வான்.

ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசியதோ, ஏன் அவளை பார்த்து சிரித்தது கூட கிடையாது.

இன்று சஞ்சுவின் மூலமாக இந்தியா போகிறோம் என்று உறுதியாக அவளுக்கு எடுத்துரைத்து விட்டான்.

மீராவிற்கு அவன் என்றுமே புரியாத புதிர் தான். மூன்று வருடத்தில் வெளியில் சொல்லவில்லை என்றாலும், அவளின் அண்ணன் ஸ்தானத்தில் தான் துருவை வைத்திருந்தாள்.

இங்கு அஜயோ பெரும் குழப்பத்தில் இருந்தான். உத்ரா திராட்சைப் பழத்தை தூக்கிப் போட்டு, வாயில் கேட்ச் பிடித்து கொண்டே சாப்பிட, அவன் அவளை முறைத்தான்.

உத்ரா “என்ன பங்கு… ஏன் இவ்ளோ டென்ஷன்?” என்று கேட்க,

சுஜி, “உத்ரா ஒண்ணு இவன் டென்ஷன் – ஆ இருப்பான். இல்ல சுத்தி இருக்குறவங்களை கிண்டல் பண்ணி டென்ஷன் ஆக்குவான் இவனுக்கு வேற என்ன வேலை” என்றாள் சலித்தபடி.

அஜய் “ஆமா இவள் எலிசபெத் மஹாராணி” என்று ஆரம்பிக்க, உத்ரா “அட ச்சே! சண்டையை நிறுத்துங்க. ஏன் டென்ஷன் – ஆ  இருக்கன்னு கேட்டது ஒரு குத்தமாடா” என்றாள் கடுப்பாக.

சுஜி அவனை முறைத்து விட்டு வெளியே செல்ல,

அஜய், “அந்த துருவ் இந்தியா வரேன்னு சொல்லிருக்கான் உதி” என்றான் பாவமாக.

அவள் தோளைக் குலுக்கி கொண்டு “வரட்டும்” என்க,

“ப்ச், அவன் வரமாட்டேன்னு சொல்லி உன்னை கம்பெல் பண்ணி வரவச்சுருந்தாலும் பரவா இல்லை. நீ சொன்னதை உடனே ஒத்துக்கிட்டு இங்க வரான்னா கண்டிப்பா ஏதோ பெருசா பிளான் பண்ணிருப்பான்”. என்றான் யோசனையுடன்.

உத்ரா, “அப்படி என்ன பண்ணுவான்” என்று அசட்டையாகக் கேட்க,

“என்ன வேனும்னாலும், பண்ணுவான். நம்ம பிசினெஸயே ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுவான்” என்ற அஜயிடம்,

“ஆஹான் ஐ ஆம் வைட்டிங்…” என்று கூலர்ஸ்ஸை மாட்டிக்கொண்டு ஸ்டைலாக கூற, அந்த நேரத்தில் அவளின் ஒரு ஃபாக்டரியில் தீ பிடித்து எரிகிறது என்ற தகவல் வந்தது.

அதனைக் கேட்டவள், விறுவிறுவென அவர்களுக்கு கட்டளையைக் கொடுத்து விட்டு, அஜயிடம் சொல்ல,

“பெரிய துப்பாக்கி விஜய்ன்னு நினைப்பு… முதல்ல கண்ணாடியை கழட்டு. கொய்யால நான்தான் சொன்னேன்ல. அவன் சும்மா இருக்க மாட்டான்னு. ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டான். வந்ததும் என்ன என்ன பண்ணுவானோ” என்று தலையில் கை வைக்க,

அவள் கண்ணாடியை கழற்றி விட்டு, “கூல் பங்கு… எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம். ஏன்னா நீ என் நண்பன்டா” என்று தோளில் கை போட்டாள்.

அந்நேரம் சுஜி அங்கு வந்து, “பங்கு ஷேர் மார்க்கெட்ல நம்ம ஷேர் ரொம்ப டௌன்ல இருக்கு” எனப் பதறியதும், அஜய் உத்ராவை முறைக்க, அவள் அசடு வழிந்து விட்டு,

“என்ன பங்கு இந்த மாதிரி நம்ம எத்தனை பாத்துருப்போம். இதெல்லாம் ஒரு விஷயமா. நான் எல்லாத்தையும் ஃபிக்ஸ் பண்றேன் பங்கு” என்று அங்கிருந்து ஓடியே விட்டாள்.

இங்கு துருவ் தான் உத்ராவின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு, “இது ஆரம்பம் தான் ஹனி… உன்னை என் வலையில கூடிய சீக்கிரம் விழ வைக்கிறேன்…” என்று புகைப்படத்தில் இருக்கும் அவள் இதழ்களை வருடிக்கொண்டிருந்தான் வெறியுடன்.

உறைதல் தொடரும்.
-மேகா  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
76
+1
8
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்