Loading

பெண்ணின் மிரட்டலில் எத்தனை நேரம் திகைத்து நின்றிருந்தானோ, யாரோ அவனது தோள்பட்டையில் கை வைத்ததை உணர்ந்ததும் தான் சற்றே நிகழ்விற்கு மீண்டான் தஷ்வந்த்.

அவன் வயதை ஒட்டிய ஒருவன் அருகில் நிற்பதைக் கண்டு யாரென பார்க்க,

“ஹாய் பாஸ். ஐ ஆம் மாதவ். தேடிங் ஃபார் ஃபஸ்ட் இயர் கிளாஸ்ரூம். சோ மச் ஆஃப் டைம் தேடிங். வந்திங் ஃப்ரம்…” என மாதவ் பேசிக் கொண்டே சென்றதில், ஒரு கணம் புரியாமல் விழித்த தஷ்வந்த்,

அடக்கப்பட்ட சிரிப்புடன், “தமிழா?” என்றான்

அவனோ ஏதோ அதிசயத்தைக் கண்டது போல, “ஹையோ, ஹவ் பாஸ். யூ கண்டுபிடிச்சிங் மீ தமிழ்.” என மேலும் தொடர,

அவனைப் பார்த்து தலையில் அடித்தவன், “அதான் நான் தமிழ்ல பேசுறேன்ல அப்பறம் ஏன் பாஸ் இங்கிலீஷையும் தமிழையும் கொல்றீங்க.” எனக் கேட்டதில் அசடு வழிந்தான்.

“ஹீ ஹி… காலைல இருந்து கிளாஸ்ரூம தேடி, மொழி புரியாம நின்னுட்டு இருந்தேன் பாஸ். அவனுங்க பேசுற தெலுங்கு எனக்கு புரியல.
நான் பேசுற ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் இவனுங்களுக்கு புரியல.” என வெகுவாய் சலித்ததில்,

தஷ்வந்த், “எது நீ பேசுனது இங்கிலீஷ் ஆ?” என இடுப்பில் கை வைத்து முறைக்க,

அதற்கும் அசட்டு சிரிப்பைக் கொடுத்தவன், “எங்க ஊர்ல இதான் பாஸ் இங்கிலிஷ்.” என்றதில், மெலிதாய் நகைத்த தஷ்வந்த் தான், “நானும் இனிமே தான் கிளாஸை தேடனும் பாஸ்…” என்று அவனுடன் நடந்தான்.

பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், “சீனியர்ஸ்கிட்ட இருந்து எப்படி தப்பிச்ச மாதவ்?” எனக் கேட்க,

“நான் தான் வாட்ச்மேன் கேட்ட திறக்கவுமே உள்ள ஓடி வந்து ஒளிஞ்சுட்டேனே. அதனால சீனியர்ஸ் யாரும் என்னை பாக்கவே இல்ல” என காலரை தூக்கி விட்டான்.

மேலும், “அப்போ நீ சீனியர்ஸ்கிட்ட மாட்டிக் கிட்டியா?” எனக் கேட்க, பாவமாக தலையாட்டினான் தஷ்வந்த்.

பேச்சும் சிரிப்புமாக முதல் வருட வகுப்பினுள் நுழைந்தவர்கள் முதலில் கண்டது, முதல் பெஞ்சில் அமர்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்த மந்த்ராவை தான்.

இரு ஆண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, வேறு இடம் இல்லாததால் அவள் அருகிலேயே சென்று அமர, மூக்கை உறிஞ்சியவள், நகர்ந்து அவர்களுக்கு இடம் கொடுத்தாள்.

“என்ன பாஸ் இந்த பொண்ணு வந்ததும் வராததுமா அழுது வரவேற்குது” என மாதவ் தஷ்வந்த் காதை கடிக்க,

“அதான் எனக்கும் தெரியல பாஸ். இருங்க என்னன்னு கேட்போம்.” என்றவன்,

“எக்ஸ்கியூஸ் மீ! ஆர் யூ ஆல் ரைட்.” என வினவியதில்,

“நேனு ஏமி தப்பு சேசனு…?” என தேம்ப, இரு ஆண்களும் ‘போச்சு டா. ஒரு எழவும் புரியலையே’ என்ற ரீதியில் முழித்தனர்.

அவளோ விடாமல் பேச, மாதவ் தான், “ஸ்டாப் இட். வி நோ இங்கிலிஷ், வீ நோ தமிழ். ஆனா வீ டோண்ட் நோ தெலுங்கு.” என மூச்சிரைக்க,

அவனை அழுகையை நிறுத்தி விட்டு பார்த்த மந்த்ரா தான், “ஹோ, நீகு தெலுகு ராதுவா?” என்றதில், “என் பேர் ராது இல்ல மாதவ்.” என்றான் வேகமாக.

அவள் குழம்பி தஷ்வந்தை பார்க்க, அவனும் உடனே, “என் பேரும் ராது இல்ல தஷ்வந்த்” என ஆங்கிலத்தில் கூறிட, ஒரு கணம் விழித்தவள் பின் சத்தமாக சிரித்து விட்டாள்.

“ஹையோ ராது மீன்ஸ் தெரியாதான்னு அர்த்தம்.” என அவளும் ஆங்கிலத்தில் உரையாட,

இதுக்கு தெலுங்கே பரவாயில்ல என்ற ரீதியில் இருவரும் பேசும் ஆங்கிலம் புரியாமல் நொந்தான் மாதவ்.

மந்த்ரா சீனியர்ஸ் கொடுத்த டாஸ்கை கூற, தஷ்வந்தும் அவளை பரிதாபமாகப் பார்த்து விட்டு, நடந்ததை கூறினான்.

மாதவோ, “ரொம்ப தைரியம் தான் பாஸ் உனக்கு. சீனியர்கிட்டயே ப்ரபோஸ் பண்ணிருக்க?” என நக்கலடிக்க,

“ஐயோ பாஸ்! அது சும்மா டாஸ்க் கம்ப்ளீட் பண்ண தான். அதுக்கு அந்த பொண்ணு என்னை எப்படி மிரட்டுச்சு தெரியுமா!” என்றவன்,

“ஆனா, சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பாங்க போல மாதவ்.” என அதனை அசட்டையாக எடுத்துக் கொண்டான்.

மேலும் அங்கு பேச்சு வார்த்தையை தொடர முடியாதபடி, பேராசிரியர் வந்து விட, அவர்களின் கவனமும் பாடத்தில் பதிந்தது.

அடுத்த ஒரு வாரமும், வகுப்பில் இருந்த மாணவ மாணவியர்களின் அறிமுகம், கேலி அரட்டை, அதனுடன் படிப்பு என செல்ல, ஒவ்வொரு முறை கல்லூரிக்குள் நுழையும் போது மட்டும், மஹாபத்ரா மிரட்டியது கண் முன் வந்து போகும் அவனுக்கு.

ஆனாலும், பொண்ணெல்லாம் வயலன்ஸ் பண்ண மாட்டங்க என உறுதியாக நம்பியவனுக்கு, அவள் பெண்ணே இல்லை பேய் என கூடிய சீக்கிரமே தெரியும் நாளும் வந்தது.

தஷ்வந்த், மாதவ், மந்த்ரா மூவருமே சிறிது நாட்களுக்குள் நல்ல நண்பர்களாகி விட, மாதவிற்கு மொழி பிரச்சனையாக இருந்தாலும், தஷ்வந்த் அவனுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே தான் இருப்பான். சிறிதும் முகம் சுளிக்காத அவனின் நட்பும் அவனது குணமும் இருவருக்குமே வெகுவாய் பிடித்து விட்டது.

அன்று, மூவரும் மதிய உணவு நேரத்தில், கேன்டீனில் அரட்டை அடித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க, தஷ்வந்த் பாதியிலேயே பேச்சை நிறுத்தி விட்டு, பேந்த பேந்த விழித்தான்.

எதிரில் கோபத்தின் மறுவுருவமாக மஹாபத்ரா தான் வந்து கொண்டிருந்தாள்.

“ஹே சீனியர் வராங்க பா.” என்றவன், அவளுக்கு முகம் காட்டாமல் தலையை தட்டில் புதைத்துக் கொள்ள, அவளோ அவனை கவனியாமல், அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒருவனை நோக்கி சென்று, அவன் முகத்திலேயே நங்கென்று குத்தினாள்.

அவள் குத்திய வேகத்திலேயே அந்த ஆடவனுக்கு மூக்கு உடைந்து, இரத்தம் வழிந்திட, தெலுங்கிலேயே அவனிடம் ஏதோ கோபமாக பேசியவள், அவனது அடி வயிற்றில் காலால் ஒரு எத்து விட, அவன் வலியில் சுருண்டு விட்டான்.

அந்த அடி, ஏனோ தஷ்வந்திற்கே விழுந்தது போல, வயிற்றில் கை வைத்துக் கொண்டவன், மற்ற இருவரையும் பார்க்க, அவர்களோ வெளிறி இருந்தனர்.

மந்த்ரா “தஷு… சும்மா உட்காந்துருக்கவனையே இந்த அடி அடிக்கிறாங்களே. ப்ரொபோஸ் பண்ணுன உன் நிலைமையை யோசிச்சு பார்த்தியா?” என எச்சிலை விழுங்க,

மாதவு ம்சும்மா இராமல், “ஏதோ அந்த பொண்ணு சும்மா மிரட்டுச்சுன்னு சொன்ன, இவளை பார்த்தா சொர்ணாக்காவுக்கே டஃப் குடுக்குற மாதிரி இருக்கா.” என மிரண்டான்.

தஷ்வந்த், “ம்ம்க்கும்… ஆமா பாஸ். பத்ரான்னு பேர் வச்சதுக்கு பதிலா பத்ரகாளின்னு வச்சுருக்கலாம். எங்க ஊர்லலாம் கோவில் திருவிழால மட்டும் தான் சாமி ஆடுவாங்க. ஆனா, இவங்க காலேஜ்லயே சாமி ஆடுறாங்க பாஸ்.” என்றவனுக்கு பயத்தில், கால் நடுங்கியது என்னவோ உண்மை தான்.

பக்கத்து டேபிள்காரனை அடி வெளுத்தவள், அவன் மயங்கிய பிறகே, தன்னிலை அடைய, அவளை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் ஆஷாவும், அமிஷும். அமிஷ் ஏதேச்சையாக மந்த்ராவை பார்த்து ஜொள்ளு விட ஆரம்பிக்க, அவளோ அவனைப் பாராமல் திரும்பிக் கொண்டாள்.

‘என்னை பார்த்தா முகத்தை திருப்பிக்கிற… இருடி உனக்கு இருக்கு…’ என்றபடி,

“ஏய் மந்து, உன்னை காலேஜை சுத்தி ரெண்டு ரௌண்டு போன வீடியோ அனுப்ப சொன்னோம்ல ஏன் இன்னும் அனுப்பல” என ஆரம்பிக்க, அவள் அரண்டு, “அது வந்து… கிளாசுக்கு டைம் ஆச்சுன்னு போய்ட்டேன் சீனியர். ஈவினிங் போயிட்டு அனுப்புறேன்.” என்றாள் வேகமாக.

“உன் இஷ்டத்துக்குலாம் விட முடியாது. ஒழுங்கா இப்பவே என்னை தூக்கு” என்று கையை தூக்கிக் கொண்டே அவளருகில் வர, அவளோ திடுதிடுவென வகுப்பு நோக்கி ஓடியே விட்டாள்.

அவள் ஓடியதை ரசனை பொங்க பார்த்த அமிஷ், சிரிப்பை அடக்கிக் கொண்டே திரும்பி தஷ்வந்தை முறைத்தான்.

பின்னே, எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா, மஹூகிட்டயே ப்ரொபோஸ் பண்ணிருப்பான். என கடுப்பானவனுக்கு, அவள் இவனை சாதாரணமாக விட்டது தான் அதிசயத்திலும் அதிசயம்.

அடிதடி செய்ததில், கையையும் காலையும் உதறிக் கொண்ட மஹாவின் கண்ணில் தப்பாமல் பட்டு விட்டான் தஷ்வந்த்.

“டேய்… உன்னை என் கண்ணு முன்னாடி வராதன்னு சொல்லிருக்கேன்ல?” என அதட்டல் போட, “நீங்க இங்க வருவீங்கன்னு தெரிஞ்சுருந்தா வந்துருக்கவே மாட்டேன் சீனியர்…” என்றான் முனகலாக.

“இவ்ளோ நேரம் அவன் அடி வாங்குனதை பார்த்துட்டு தான இருந்த. அப்பவே நீ இடத்தை காலி பண்ணிருக்கணுமா இல்லையா?” எனக் கேட்டவாறே, அவனருகில் வர, அவனோ பின்னால் நகர்ந்தபடி,

“இனிமே சத்தியமா உங்க கண்ணுல படமாட்டேன் சீனியர்.” என கையை அடித்து சத்தியம் செய்தான்.

அவனது பாவனைகளும், பாவ விழி மொழியும், அத்தனை நேரம் இருந்த மனநிலையை முற்றிலும் மாற்றி இருந்தது அவளுக்கு.

அதெப்படி இவன் முகத்துல மட்டும் மனசை அப்படியே படிக்க முடியுது? என்ற கேள்விக்கு விடை புரியாதவளாய், மேலும் அதனை சிந்திக்க முயலாமல், “போ!” எனக் கண்ணை காட்டினாள்.

அத்துடன், அடித்து பிடித்து அந்த இடத்திலிருந்து நொடிநேரத்தில் அகன்று விட்டவன், வகுப்பிற்கு வந்து தான் மூச்சிரைத்தான்.

‘ஒரு பொண்ணுக்கு பயந்து ஓடி வர்றியே உனக்கு வெட்கமா இல்ல?’ என மனசாட்சி காரி உமிழ்ந்திட,

‘பொண்ணா இருந்த பயப்பட வேணாம். அவள் பத்ரகாளியாவுல இருக்கா. இதேதுடா நமக்கு வந்த சோதனை.’ என நொந்தவனுக்கு, அதன் பிறகே, அவள் பெரிய தாதாவின் மகளென்றும், அவளிடம் வம்பு வளர்த்தால் நேராக சொர்க்கத்திற்கு தான் டிக்கெட் வாங்க வேண்டும் என்று அறிந்து அதிர்ந்து தான் போனான்.

‘படிச்சு முடிக்கிற வரை, அவங்க இருக்குற பக்கம் கூட தலை வச்சு படுக்க கூடாது. கடவுளே என்னை காப்பாத்து…’ என வேண்டிக் கொண்டவனுக்கு தெரியவில்லை, அது நடக்காத காரியமென்று.

தனக்குள் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தவன், தன்னை தாண்டி யாரோ ஓடுவது கண்டு, “பாஸ்… டேய் மாதவ்…” என ஓடுபவனை பிடித்து,

“எங்க போற? நம்ம க்ளாஸ் இங்க இருக்கு” என்றான்.

அவனோ, “நான்லாம் ரௌடிசத்தை தியேட்டர்ல கூட பார்த்தது இல்ல பாஸ். இங்க அடிதடியை பார்த்ததும், மூளை குழம்பிடுச்சு” என்றதில்,

“நாங்க மட்டும் என்னவாம். நான்லாம் ஃபைட் சீனை ஃபார்வர்ட் பண்ணி தான் படமே பார்ப்பேன் பாஸ்.” என்றான் பாவமாக.

மூவருக்குமே, நிகழ்ந்த சம்பவத்திலிருந்து வெளிவர இரண்டு நாட்கள் பிடித்தது.

அதன்பிறகு, தஷ்வந்த் கல்லூரிக்கு வந்தால், வகுப்பை தவிர வேறு எங்குமே செல்வதில்லை. பாத்ரூம் செல்ல கூட பாடிகார்டாக மாதவை இழுத்துக் கொண்டு தான் செல்வான்.

சில நேரம் அவனது பயம் கண்டு, மாதவிற்கும் மந்த்ராவிற்கும் சிரிப்பு பொங்கினாலும், மந்த்ராவும் தலையை துப்பட்டாவை போட்டு மறைத்தபடி தான் கேம்பஸினுள் நடமாடுவாள். அதனால் அவனது கஷ்டம் அவளுக்கும் புரிந்தே இருந்தது.

தலைமறைவாக வாழ்ந்தே மாதங்கள் உருண்டோடி இருந்தது.

மஹாபத்ராவும் போஸ்டிங்கில் பிசி ஆகி விட, அன்று மதியம் கல்லூரிக்கு வந்தவள், வகுப்புக்கு செல்ல பிடிக்காமல், கேன்டீனில் நண்பர்களுடன் அடைக்கலமானாள்.

அப்போது தான், கேன்டீனை தாண்டி வகுப்புக்கு சென்று கொண்டிருந்த தஷ்வந்த் அவளைப் பார்த்து விட்டான்.

உடனேயே அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த மாதவின் பின் குனிந்து கொண்டவன்,

“வேகமா போ மாதவ். சீனியர்கிட்ட மாட்டாம இருக்கணும்.” என அவசரப்படுத்த, அவனும் நிலையுணர்ந்து விறுவிறுவென அவனை மறைத்தபடி நடந்தான்.

ஆனால், இக்கலவரம் மஹா கண்களில் பட்டு விட, ஆடவனின் மிரட்சி பொதிந்த விழிகளும், கையால் முகத்தை ஒரு பக்கம் மூடிய விதமும் அவளைக் கவர்ந்திழுத்தது.

கூடவே, சிறு புன்னகையையும் தோற்றுவிக்க, “ஹே ஜூனியர் கம் ஹியர்” என மாதவைப் பார்த்து அழைத்தாள்.

‘ஆத்தாடி இவனை காப்பாத்த போய் நான் சிக்கிருவேன் போலயே’ என பயந்தவனால், இப்போது தஷ்வந்தையும் காப்பாற்ற இயலவில்லை.

மஹாவின் முன் நின்ற மாதவை அலட்சியப் பார்வை பார்த்தவளின் நயனங்கள், அவனுக்கு பின்னே ‘ஐயோ சிக்கிடோமே’ என்ற பதட்டத்தில் நின்றிருந்த தஷ்வந்த் மீது ரசனையாக படிந்தது.

அவனைப் பார்த்தபடியே, “உன்னை நான் ஃபர்ஸ்ட் டே அப்போ பார்த்த மாதிரி ஞாபகம் இல்லையே.” என சிந்தித்தவாறு கேட்க,

“அது… வந்து அக்கா… அன்னைக்கு எனக்கு பீவர். நான் காலேஜ்க்கே வரவே இல்ல.” என அனைத்து பல்லையும் காட்டினான்.

“தடிமாடு மாதிரி இருக்க. உனக்கு நான் அக்காவாடா?” கண்களில் கனலை ஏற்றி கேட்டவள்,

“உன் அட்டெண்டன்ஸ செக் பண்ணுவேன். மவனே அன்னைக்கு மட்டும் நீ நிஜமாவே ஆப்செண்ட் ஆகாம இருந்துருந்த, நான் உன்னை உலகத்தை விட்டே ஆப்செண்ட் ஆக்கிடுவேன்” என்றாள் நக்கலாக.

மாதவ் விழி பிதுங்கி, “இல்லக்கா. நான் அன்னைக்கு ஆப்சென்ட் ஆனேனா அடுத்த நாள் ஆனேனான்னு கொஞ்சம் டவுட் – ஆ இருக்கு” என்று நெளிய,

ஒற்றைப் புருவத்தை திமிராக உயர்த்தியவள், ” ஓ… டவுட் – ஆ இருக்கா. அப்போ டவுட் கிளியர் ஆகுற வரை, இங்கேயே முட்டி போட்டு உட்காரு.” என்று சாவகாசமாக கூறினாள்.

“என்னது முட்டி போட்டா?” என மாதவ் அதிர,

லெமன் ஜூசை பருகியபடியே, “ம்ம்…” என்று தோளைக் குலுக்கினாள்.

“இல்ல நான் பண்ண மாட்டேன்” என்னும் போதே, அவள் முறைத்த முறைப்பில் தானாக முட்டியிட்டு அமர்ந்து கொண்டவன்,

“சாரிக்கா. நான் அன்னைக்கு காலேஜ்க்கு வேகமா வந்துட்டேன். இனிமே பொய் சொல்ல மாட்டேன் என்னை விட்டுடு்க்கா.” என கண்ணில் நீர் வைத்து விட்டான்.

“மறுபடியும் அக்காவா?” எனப் பற்களை நறநறவெனக் கடித்தவள், அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க, “ஐயோ அம்மா…” என கத்தினான்.

அதனை கண்டுகொள்ளாமல், திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற தஷ்வந்தை பார்த்தவள், அவளுக்கு பக்கத்து இருக்கையை கண் காட்டி, “சிட்” என்க,

“வேணாம் சீனியர். நான் நிக்கிறதே கம்ஃபர்ட்டபிலா தான் இருக்கு.” என்று சிரித்து வைக்க, மீண்டும் மாதவ் தலை பதம் பார்க்கப் பட்டது.

“அய்யோ… பாஸ். உட்கார சொன்னா உட்காந்துட்டு வாயேன் பாஸ்.” என பரிதாபமாக தலையை தேய்த்தபடி கூற, தயங்கியபடி அவளருகில் அமர்ந்தவன்,

“நான் பிளான் பண்ணி உங்க முன்னாடி வரல சீனியர். எதேச்சியா நடந்துருச்சு…” என அவளை சாந்தப்படுத்த முயன்றான்.

அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் பேச வரும் நேரம் அலைபேசி அழைக்க, “சொல்லுங்க நானா…” எனப் பேசியபடி எழுந்து சென்று விட்டாள்.

அவளையே இத்தனை நேரமும் குழப்பமாக பார்த்திருந்த அமிஷும் ஆஷாவும் தான், ஒன்றும் புரியாமல் அவள் பின்னே செல்ல, இரு அப்பாவி ஜீவன்களும் தப்பித்து விட்டனர்.

தஷ்வந்திற்கு தான், அவளது பார்வையே அவனை நெளிய வைத்தது. என்ன இவங்க இப்படி பாக்குறாங்க. என நொந்து கொண்டவன், மிகவும் கவனமாக அவளைக் காணாமல் தவிர்த்தான்.

அதுவே முதல் வருடம் முழுக்க தொடர, அவர்களும் சிறிது சிறிதாக அந்த சூழலுக்கு தங்களை பழக்கபடுத்திக் கொண்டனர்.

இரண்டாம் வருடம் காலடி எடுத்து வைத்ததும், ‘ஹப்பாடா… இப்ப நம்மளும் சீனியர் ஆகிட்டோம். இனிமே சீனியர்கிட்ட இருந்து தப்பிச்சேன்’ என ஆசுவாசமான தஷ்வந்திற்கு தெரியவில்லை அவனது சோதனைக் காலமே இனிமேல் தான் தொடங்குகிறது என்று.

அதை உணர்த்தும் விதமாக நிகழ்ந்தது கல்லூரியில் சிறு கலாட்டா. பிரச்சனை என்னவென்று முழுதாக தெரியவில்லை. ஆனால், ஹர்மேந்திரனின் ஆட்கள் உள்ளே புகுந்து சில ஆடவர்களை தாக்கினர்.

அதனை காரின் மீது சாய்ந்தபடி சாவகாசமாக பார்த்துக் கொண்டிருந்த மஹாபத்ராவை, தெலுங்கில் ஒருவன் எதிர்த்துப் பேச வர, அவனது கரங்கள் முறிக்கப்பட்டது.

கல்லூரியில் கலாட்டா என்று அறிந்ததுமே, தஷ்வந்தும் மந்த்ராவும் கிளம்பி விட, அன்று உடல்நிலை சரியில்லாததால் மாதவும் வரவில்லை.

அதனால், தஷ்வந்தே மந்த்ராவை பாதுகாப்பாக அவள் வீட்டிற்கு பஸ் ஏற்றி விட விழைந்து, அவளுடன் செல்ல, அடிதடி நடக்கும் இடத்தைக் கடந்து தான் செல்ல வேண்டியது இருந்தது.

ஏற்கனவே பயத்தில் இருந்த மந்த்ரா இப்போது, மேலும் மிரண்டு தஷ்வந்தின் கைகளை இறுக்க பற்றிக் கொள்ள, அவனும் ஆதரவாக பிடித்துக் கொண்டான்.

இது எதுவும் தவறாமல் மஹாபத்ராவின் கண்களில் பட்டு விட, ஏனென்று அறியாத சினம் பீறிட்டது அவளுக்கு.

அடக்கப்பட்ட கோபத்துடன், அங்கு நடக்கும் கலவரத்தை விடுத்து, தஷ்வந்தை நோக்கி காரப்பார்வை வீச, அவனோ குனிந்த தலை நிமிராமல் அவளைப் பாராமலே சென்று விட்டான்.

ஆனால், அவள் தன்னை துளைக்கும் பார்வை பார்ப்பது அவனுக்கும் தெரிந்தே இருந்தது. அதன் காரணம் தான் சுத்தமாக புரியவில்லை.

கோபத்தில் சாய்ந்திருந்த காரை நங்கு நங்கென்று குத்தியவளை ஆஷா தான் தடுக்க வேண்டியதாக போயிற்று.

“என்ன ஆச்சு மஹூ? ஏன் இவளோ டென்ஷன்?” எனக் கேட்க, அதற்கு அவள் பதில் கூறவில்லை. பதில் கூறவும் தெரியவில்லை.

மறுநாள், வகுப்பு வாசலில் நின்று தஷ்வந்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த மந்த்ரா, கையை கதவின் இடுக்கில் நுழைத்திருக்க, அவளிடம் பேசியபடி திரும்பியவன் எதிரில் போனை நோண்டியபடி வந்த மஹாபத்ராவைக் கண்டு விழித்தான்.

‘சீனியர் ஏன் இங்க வர்றாங்க’ என அவன் எண்ணி முடிக்கும் முன்பே, போனில் இருந்து கண்ணை பிரிக்காமல், மந்த்ரா கை வைத்திருந்த கதவை அறைந்து சாத்தி இருந்தாள்.

அதன் விளைவாக அவளுக்கு விரல்கள் நசுங்கி விட, வலியில் துடித்து அலறினாள்.

அது காதிலேயே விழுகாதது போல மஹாபத்ரா நடையை தொடர, ஆடவன் தான் திகைத்திருந்தான்.

காயம் ஆறும்…
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
28
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்