2 – விடா ரதி…..
அவள் தேநீர் குடித்து முடித்து திரும்பும்போது தான் அவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
நேற்று வெறும் துண்டுடன் வெளியே வந்தவனை கண்டு சங்கடம் கொண்டு வெளியே ஓடினாள். இன்று பனியன் ட்ராக் பேண்ட் உடன் வந்தவன், அவள் நிற்கும் பக்கம் பார்த்துவிட்டு கண்ணாடி முன் நின்று தலை வார ஆரம்பித்தான்.
அவனுடையது சற்றே சுருண்ட கேசம். ஆனால் கம்பி போல வலுவாகவும் இருக்கும். அதை அவன் மிலிட்டரி கட் செய்து கொள்வது தான் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று நீண்டு வளர்ந்த கேசத்தில் விரல் நுழைத்து விளையாடலாம் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அவன் அதற்கு வாய்ப்பு தரவே மாட்டேன் என்பது போல ஒட்ட வெட்டிக் கொள்வான்.
“ஏற்கனவே தலையோட தானே ஒட்டி இருக்கு. அத இத்தன தடவ ப்ரஷ் போட்டு சீவணுமா?”, என தனக்குள் முணுமுணுத்தாள்.
அது அவன் காதுகளில் விழுந்தாலும் விழாதது போல இன்னும் சில நிமிடங்கள் கண்ணாடிக்கு அவன் தரிசனம் கொடுத்துவிட்டு தான் நகர்ந்தான்.
“டீ குடிக்கரீங்களா?”
“ம்ம் …..”
“இன்னிக்கி லஞ்ச் ஜோசப் அங்கிள் வீட்டுக்கு போகணும்…..”
“ம்ம்….”
“அத்தை மாமா ஊருக்கு கிளம்பிட்டாங்க…. உங்ககிட்ட மதியம் கால் பண்ண சொன்னாங்க……”
“ம்ம்….”
இரண்டு நாட்களாக இது தான் அங்கே நடக்கிறது. அவன் எதாவது சொன்னால் அவள் ‘ம்’ என பதில் கொடுப்பாள். அவள் தகவல் போல சொல்வதற்கும் ‘ம்’ என அவன் பதில் கொடுப்பான்.
முதலிரவு அறைக்கு வரும் முன் அவளுக்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்துவிட்டது.
‘எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி சிக்க வச்சிட்டீங்களே….. அய்யோ…. அவன் வேற என்ன அவதாரத்துல இருக்கானோ? பிடிக்கலன்னு சொல்லியும் என்னை கல்யாணம் செஞ்சிகிட்டவ தான-ன்னு கேவலமா பேசுனா என்ன பண்றது? நான் எத்தன மொற கூப்பிட்டும் அவன் தான் பேசவே வரலியே அதனால் அவன் தான் காரணம்-ன்னு சொல்லிடனும்….. ‘, இப்படி பலவாறாக அவளுக்குள்ளே மனப்போராட்டம் நடந்துகொண்டிருந்த போதே அவளை அறைக்குள் தள்ளிவிட்டனர் பெண்கள்.
உள்ளே அவன் இல்லை. அப்பாடா…. என ஆசுவாசமாக சற்று அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து பாலை கொஞ்சம் குடித்தாள்.
தொண்டைக்கு இப்போது தான் இதமாக இருந்தது. ‘எங்கம்மா வச்ச பாலா இது? இவளோ டேஸ்ட் ஆ எல்லாம் வைக்க தெரியுமா? இவளோ வருசத்துல ஒரு நாள் கூட இப்படி குடுக்கவே இல்லயே….’, என தனக்கு தானே பேசிக்கொண்டு அந்த அறையை வலம் வந்தாள்.
அவள் உப்பரிகையில் நின்று மூன்றாம்பிறையை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அறை அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எதிரே தெரிந்த மலைகளும், பாதையில் இருந்த மஞ்சள் விளக்குகளின் அணிவகுப்பும், உப்பரிகையின் ஓரத்தில் இருக்கும் ஊஞ்சலும், என மிகவும் ரம்மியமாக இருந்தது.
“ஒரு புக் எடுத்து இங்க உக்காந்து படிச்சா செமயா இருக்கும்… நல்ல வியூ…..”, என நினைத்தபடி அந்த ஊஞ்சலில் அமர்ந்து வானத்தை ரசிக்கத் தொடங்கினாள்.
அவளுக்கு பகலில் மேகம் நகர்வதும், இரவில் நட்சத்திரங்கள் மின்னுவதை பார்க்கவும் மிகவும் பிடிக்கும். மொத்தத்தில் வானம் என்றாலே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவாள்.
ஒரு மணி நேரம் கழித்து அவன் உள்ளே வந்தான். வெண்பட்டு சட்டை வேஸ்டியில், அவன் அதீத ஈர்ப்புடன் தான் இருந்தான். அவனது நிறத்திற்கு இந்த வெண்பட்டு அவனது முகத்தின் மினுமினுப்பை கூட்டியது.
அடர்ந்த மீசை அளவாக கத்தரித்து, வழு வழுவென சவரம் செய்த தாடையும், சற்றே பெரிதான கண்களுடன், திருமணச்சடங்கில் மஞ்சள் நீர் ஆடியதில் ஒரு தனி சோபை தான் வந்திருந்தது.
அவன் அவளையும், அவள் அவனையும் சில நிமிடங்கள் இமைக்காது பார்த்திருந்தனர்.
அவனது கைபேசி ஒலித்ததில் நினைவு பெற்று, உப்பரிகை கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள்.
“ரெண்டு நாள் லீவ் விடு…. புதன் அன்னைக்கு கடை தொறந்துக்கலாம் …. எல்லாருக்கும் போனஸ் போட்டுட்ட தானே?”
“………………..”
“சரி… குட் நைட்….”, என அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தபடி அழைப்பை முடித்தான்.
அவன் பார்வையில் அவளுக்கு தான் மீண்டும் தனது மன புலம்பல்கள் எல்லாம் நினைவுக்கு வரத் தொடங்கியது.
“ஏன் இன்னும் புடவைல இருக்க? உனக்கு கம்பர்டபல் டிரஸ் போட்டுட்டு தூங்கு…. “, என கூறிவிட்டு, அவனும் லகுவான ட்சர்ட் ட்ராக் பேண்ட் மாற்றிக் கொண்டு கட்டிலில் ஒரு பக்கம் படுத்துவிட்டான்.
அவன் உறங்கும்வரை அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருந்தவள் மெல்ல மூச்சை வெளியேற்றி மாற்றுடை தேடினாள். அவனது உடைகளுக்கு அருகில் ஒரே ஒரு நைட் பேண்ட் சர்ட் இருக்க, அதை அணிந்து கொண்டு அவளும் மறுபக்கம் வந்து உறங்கிவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து அவன் மெல்ல அவள் புறம் திரும்பிப் படுத்து அவளைப் பார்த்தான்.
“சாரி ரதி….. அப்ப உன் மனசு புரியாம நடந்துக்கிட்டேன் … மெல்லவே நாம நம்ம வாழ்கைய புரிஞ்சிக்கலாம்…. எனக்கும் கொஞ்சம் மனசுல உறுத்தல் இருக்கு… அத தீர்த்துட்டு உன்கிட்ட என் காதல சொல்றேன்…. ‘happy married life to US’ “, எனக் கூறி பிளையிங் கிஸ் கொடுத்தான்.
அடுத்த நாள் இருவரும் அசதியில் நேரம் கழித்து எழுந்தனர். 8 மணிக்கு அவன் தாய் அழைத்து எழுப்பிவிட்டார்.
அவன் எழுந்து குளித்து முடித்து வந்தும் கூட அவள் இன்னும் எழவில்லை. அவள் அருகில் சென்று போர்வையை மெல்ல விளக்க, கொஞ்சமாக பிளந்திருந்த இதழும், லேசாக சுருங்கி இருந்த நெற்றியும், சுருண்ட கேசமும், தலையணையை இறுக்கி கட்டியிருந்த விதமும் அவனை மொத்தமாக சித்தம் கலங்க வைத்தன.
இத்தனை அழகா இவள்? இவளையா வேண்டாம் என்று அன்று நினைத்தேன். நிச்சயம் மடத்தனம் தான். தன்னை சுற்றி பல பெண்கள் சுற்றியதால் இருந்த அகம்பாவம் என்று கூட சொல்லலாம். அப்படி சுற்றியவர்களில் அவளும் ஒருத்தி என்று எண்ணியது தான் பெரும் தவறாகி, அன்று அவர்களது வாழ்வை திசைமாற்றியது.
யாரின் வேண்டுதலோ ? யார் செய்த புண்ணியமோ இன்று இவளே மனையாட்டியாகி விட்டாள் …. இனி இவளை பிரிந்துவிடக்கூடாது…
“ரதி….. ரதி…..” , மெல்ல அவள் கன்னத்தை தட்டினான்.
‘ மிகவும் மிருதுவான, கொஞ்சம் உப்பிய கன்னம்….. அதில் அவள் சிரிக்கும் போது லேசாக ஒரு குழி விழும்…..’, அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“ம்…. இன்னும் கொஞ்ச நேரம் மம்மி…. பிளீஸ்….”, என உளரியபடி அவன் கைகளை கன்னத்தின் அடியில் வைத்து மீண்டும் உறங்கினாள்.
அந்த தொடுதலில் மனதும், வயதும் அவனை கொல்லாமல் கொன்றன. தன்னை மீறிய செயல்கள் நிகழ வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. தன் கைகள் அவளது கன்னத்தை வருட ஆசைக்கொண்டது போல, மெல்ல வருடி கொடுத்தது. மறுகையும் மற்றொரு கன்னத்தை கொஞ்ச நினைத்து மேலெழுந்தது.
“இது வேலைக்கு ஆகாது… ரதி …. ரதி… மணி 10 ஆச்சு… எந்திரி…”,என அவன் சத்தமாக அவள் காதருகில் கூறவும் அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தாள்.
“சாரி ர….. சாரிங்க…. இதோ அரைமணி நேரத்துல குளிச்சிட்டு வரேன்….”, என அவன் முகம் காணாமல் குளியல் அறைக்கு ஓடினாள்.
நல்ல வேலை அவனது முகத்தை பார்க்கவில்லை…. அவன் இன்னும் அவளது கன்னத்தின் அடியில் கைக்கொடுத்த நிலையில் அப்படியே தான் அமர்ந்து இருந்தான்…. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு எழுந்தவன் கீழே சென்றான்.
அவளும் தயாராகி கீழே வர, அவள் முகத்தில் இருந்து கண்களை எடுக்கமுடியாமல் அவ்வப்போது பார்த்தபடியே அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
லேசாக மையிட்ட விழிகளில் மகிழ்ச்சியும், கலக்கமும் மாறி மாறி வருவதை கவனித்தான். முன்பு அவளது விழிகளில் நிரம்பி இருந்த அந்த சிரிப்பு இப்போது இல்லை என்பது நன்றாக புரிந்தது. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
அவளும் அவன் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவனை காலை அத்தனை அருகில் பார்த்ததும் பதற்றமாகி நேராக குளியல் அறைக்குள் புகுந்தது நினைவு வர அவ்வப்போது சிரிப்பும் வந்தது. தன்னை நினைத்து சிரித்தவள் அவன் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று தெரியாமல் தவித்தாள்.
அதன் பின் மறுவீடு, கோவில் என இரண்டு மூன்று நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தன. இன்றில் இருந்து எப்படியும் இரண்டு வாரத்திற்கு ஏதேனும் ஒரு சுற்றத்தாரின் வீட்டில் விருந்துணவு நடக்கும். மாமனார் மாமியார் இருவரும் மதுரை கிளம்பிவிட்டார்கள். ரகுவின் வேலை பொறுத்து அங்கும் சென்று வர வேண்டும்.
“எனக்கு என்னோட…. கோடிங் வேலை செய்ய ரொம்ப பிடிக்கும்.. எனக்கு குடுத்த புராஜக்ட் இன்னும் முடியல….”, மெல்ல தனது வேலைப்பற்றி கூறினாள் .
“உன் விருப்பம்…. அப்பப்போ நம்ம கடைக்கும் வந்து பாரு…. இதையும் கத்துக்கோ…”, என்பதோடு முடித்துக் கொண்டான்.
அவன் ‘நம்ம’ என்று சொன்னதும் மனதில் உற்சாகம் ஊற்றாய் பெருகியது. அதில் அவன் அவளுக்கு உரிமையைக் கொடுத்துவிட்டான் அல்லவா? மனம் முழுக்க தேனாக தித்தித்தது. ஆனாலும் அந்த நினைவு மட்டும் உறுத்தியது.
அதைக் களைந்தே ஆக வேண்டும். ஒரு முடிவோடு சுந்தரியை அழைத்தாள்.
“என் கல்யாணம் முடிஞ்சி சொல்றேன் டி… அதுவரை உன் புருஷன் கூட ஹனிமூன் போயிட்டு வா… நானும் போயிட்டு வர ஒரு மாசம் ஆகும்….”
“ஒரு மாசம் ஹனிமூன் அஹ்?”
“ஆமா….. நாளைக்கு சீக்கிரம் கிளம்பி வந்து சேரு…. அண்ணா உன்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க…. “
“சரி நிச்சயம் டைம் முன்ன வந்துடுவேன்….. “
“எது டைம்க்கு வருவியா?”, என சுந்தரி திட்டத்தொடங்க, ”அடியே… இரு டி …. நீ ரெடி ஆக முன்ன அங்க இருப்பேன் டி….. பாவம் என் அண்ணா… என்னையவே இப்படி திட்டற.. அவர் வாய் இல்லா பூச்சி… பாத்து பதனமா நடத்து…”, என அவளை வாரிவிட்டு அழைப்பை வைத்தாள்.
“நீயும் கூட பதனமா நடத்தினா பரவால்ல தான்…”, என முணுமுணுப்பு அருகில் கேட்டது.
அவன் அவள் பின்னால் நின்று அலமாரிக்குள் எதையோ எடுத்து கொண்டிருந்தான். அவன் வந்து எத்தனை நேரம் ஆனதோ தெரியவில்லை என எண்ணியபடி அவள் சற்று நகர எத்தனிக்கும் முன் அவளை அணைக்கட்டி நிறுத்தி அவள் விழிகளில் கலந்து நின்றான். அந்த விழிகளில் அவள் தன்னைத் தொலைத்து நின்றாள் மீண்டும்….
“உன் ஃப்ரெண்ட் நிச்சயத்துக்கு எத்தன மணிக்கு போகலாம்? நான் வேஷ்டி கட்டவா?”, எனக் கேட்டான்.
அவள் பதிலேதும் கூறாமல் அவன் வாசனையை கிரகித்துக்கொண்டு, அவனது கண்களுக்குள் சுழன்று சுயநினைவின்றி நின்றிருந்தாள்.
அவன் அவள் மூக்குடன் மூக்குரசி “ஓய் பொண்டாட்டி….”, என அழைக்க அவள் விழித்து நிமிர்ந்தாள்.
“நாளைக்கு பார்மல் போதும் …. முகூர்த்தம் அன்னிக்கு வேஷ்டி கட்டிக்கோங்க….”, என மெல்ல முணுமுணுத்தாள்.
“இதுக்கு முன்ன நான் பாத்த ரதி இப்படி அமைதியா பேசற ஆளே இல்லையே…. ஒரு சவுண்ட் குடுத்தா இடமே அலறும்னு கேள்விப்பட்டிருக்கேன்…. பாத்தும் இருக்கேன்….”, என அவளை விட்டு சற்றுத் தள்ளி நின்றுக் கூறினான்.
“அஹ்…. “, அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“இந்த பார்வை தான் பத்து வருஷத்துக்கு முன்ன என்னை பலமா தாக்கிச்சி…. இப்ப இன்னும் அதிகமா அதனால தாக்கப்படணும்னு ஆசைப்படறேன்… “, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
அவள் தான் அவன் கூறியது புரிந்தும் புரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.