ஊஞ்சல் 2
ஒவ்வொரு நிமிடமும் நரகமானது பார்த்திகாவிற்கு. வீட்டிற்குச் சென்ற திருமேனி ஆவுடையப்பனின் பெற்றோர்கள் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு செய்தியும் காதில் விழவிழ, உள்ளம் தோய்ந்து போனது அவளுக்கு. தன்னைப் பற்றித் தெரிந்தும் ஒரு முறை கூடச் சிந்திக்காமல், தங்கைக்குச் சம்மதம் சொல்லி இருக்கும் அவள் திருவைப் பார்க்கப் பயந்து எந்த நிகழ்விலும் தலையிடாமல் இருந்தாள்.
ஆனந்தி ஓயாமல் அவனோடு பேசியபடி இருக்க, வீட்டில் இருக்கும் நேரத்தையும் குறைத்துக் கொண்டாள். பெற்றோர்களும் அவள் மீது இருந்த கோபத்தில் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருக்க, இருக்கப் பிடிக்காமல் வெளியூர் செல்வதாகப் பொய் சொல்லிக் கிளம்பி விட்டாள். வீடு திரும்பியவள் கண்ணில் முதலில் பட்டது ஆனந்தி கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் தான்.
அதைப் பார்க்கவே கூடாது என்ற முடிவில் வந்தவளின் பார்வை அதில் விழுந்து விட, வாழ்வை வெறுத்துத் தன் அறையே கதி என்று வாழ்ந்தாள். வேலைக்கும் செல்வதில்லை. மகளின் நிலையைப் பெற்றோர்கள் சிறிது கவனிக்க ஆரம்பித்தார்கள். கேள்வி கேட்க ஆரம்பித்ததும் வேலைக்கு ஓடத் துவங்கினாள். பார்த்திகா ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.
அதுவும் மழலைச் செல்வங்களுக்கு ஆசிரியர். சிரித்த முகமாக மழலையோடு மழலையாகப் பாடம் சொல்லித் தருபவள் நிலை மாறிப் போனது. தன் வகுப்பிற்குச் செல்லாமல் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறையில் சில நாள்கள் கழிக்கத் துவங்கினாள். தகவல் பறந்தது தலைமைக்கு. அவர்கள் அழைத்து விசாரிக்க,
“நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியலங்க மேம், என்னோட எண்ணம் கொஞ்சம் கூட இங்க இல்லை. என்னால இதுக்கு மேல இங்க வேலை பார்க்க முடியும்னு தோணல, நான் கிளம்புறேன்.” அங்கிருந்தும் ஓட ஆரம்பித்தாள்.
அனைவரிடமிருந்தும் ஓட ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்தே ஓடத் தொடங்கினாள். தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் உணரும் நிலையில் இல்லை. இரவையும், பகலையும் ஒரே போல் பார்த்தாள். மனதில் அவள் திருவோடு வாழ, நடுவில் ஆனந்தி வந்து நின்று தொந்தரவு செய்தாள்.
இப்படியே கடும் போராட்டத்திற்கு நடுவில் அவர்கள் திருமண நாளும் வந்தது. இந்த முறை மொத்தமாக ஊரைக் காலி செய்ய முடிவெடுத்தாள். விஷயம் அறிந்த பெற்றோர்கள் முழுத்தடை போட, சூழ்நிலைக் கைதியாகத் திருமண மண்டபத்தில் நுழைந்தாள்.
வரவேற்பு நிகழ்வு படு ஜோராக நடந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த இவளுக்குத்தான் இருப்புக் கொள்ளவில்லை. ஓடி ஒளிந்து கொண்டாள் அறையில். வெளியில் நடக்கும் எதையும் விடியற்காலை வரை பார்க்கவில்லை பார்த்திகா. இவளை ஊரே அறியாமல் இருக்க, ஒருவன் மட்டும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் பார்வையால்.
மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து யார் பார்வைக்கும் சிக்காமல் இருக்க ஆள்கள் இருக்கும் வரை நடந்து வந்தவள், அதன்பின் ஓட்டம் பிடித்து அறையில் ஒளிந்து கொண்டது வரை கவனித்துக் கொண்டிருந்தான் தினேஷ். கல்லூரியில் இருந்து தான் திருமேனி ஆவுடையப்பனுக்குப் பழக்கம் இவன். இவனால்தான் பார்த்திகா என்பவள் நண்பன் வாழ்வில் உலாவிக் கொண்டிருந்தாள்.
கேலியாக ஆரம்பித்தது, நண்பனுக்குக் கேலியாக இருந்து விட, சம்பந்தப்பட்டவளுக்கு வாழ்க்கையாக மாறிவிட்டது. இதை அறிந்தவன் நண்பனிடம் பேசியும் இருக்கிறான். திருமேனி ஆவுடையப்பனுக்குத் தன் குறிக்கோள் அனைத்தும் காவல்துறை என்பதால் காதலிக்க நேரமில்லை என்று விட்டான். கல்லூரியை விட்டுச் செல்லும் வரை அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் காலம் கடந்து நினைவில் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
‘இவ இன்னும் திருவை மறக்கல, அப்புறம் எதுக்காக வேண்டாம்னு சொன்னா?’ என்ற சிந்தனையோடு அவள் அறை முன்பு நின்றவன் பலத்த யோசனைகளுக்குப் பின் கதவைத் தட்டினான். திறக்கும் நிலையில் இல்லாதவள், ‘கடவுளே! எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்து.’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.
தினேஷிற்கு மீண்டும் யோசனைகள். இந்த முறை, “பாரு!” எனச் சத்தமாக அழைத்தான்.
அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டவள் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, இன்னும் சத்தமாக அழைத்தான். இதற்கு மேலும் தள்ளிப் போட முடியாது என அவள் கதவைத் திறக்கப் போகும் நேரம், “தினேஷ்!” என்றழைத்தார் நண்பனின் தந்தை நடராஜ்.
திறந்தவளுக்கு வெற்றிடம் காட்சியளிக்கத் தப்பித்த நிம்மதியில் மீண்டும் சுருங்கிக் கொண்டாள் தன் அறையில். தேன் கூட்டில் இருந்து சொட்டும் தேன் துளி போல் பலமுறை சோதித்து விடியல் பிறந்தது. இந்த விடியல் யாருக்கு வசந்தமோ இல்லையோ, இரவெல்லாம் அழுது கொண்டிருந்தவளுக்கு வசந்தமானது.
கண் விழித்தவளுக்குத் தெரியாது, இந்த நாள் தன்னுடைய நாள் என்று. அழுது வீங்கிய முகத்தை மாற்ற முடியாது கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவளின் அறைக் கதவைத் தட்டினார் அமுதா.
“ஆனந்தி இங்கயா இருக்கா?”
“இல்லம்மா…”
“அவ ரூம்லயும் இல்ல பாரு, நலங்கு வைக்க வேற நேரம் ஆச்சு.”
“அவ பிரண்ட்ஸ் ரூம்ல தேடிப் பாருங்க.”
“அதெல்லாம் ஏற்கனவே பார்த்துட்டேன்.”
“அவரு…”
“என்ன?”
“அவர் கூட…”
முதலில் புரியாமல் பின் புரிந்து, “நான் எப்படிப் பாரு பார்க்க முடியும்? நீ போய் பார்த்துட்டு வரியா?” என்றார்.
அவள் நிலை சொல்லியா தெரிய வேண்டும்! தன் பிறப்பை முற்றிலும் வெறுத்தாள். மகளின் நிலை அறியாது அவசரப்படுத்தினார் அன்னை. எச்சில் தொண்டையில் சிக்கிக் கொண்டு சதி செய்வது போலக் கால்களும், நகர மறுத்துச் சதி செய்தது.
“என்னம்மா, எங்க இருக்கா?”
“தெரியலைங்க. பாருவை மாப்பிள்ளை ரூம்ல ஒரு தடவ பார்க்கச் சொல்றேன்.”
“என்னம்மா, நீ புத்தி இல்லாமல் பேசிகிட்டு. அங்க எப்படி ஆனந்தி இருப்பா?”
“எதுக்கும் ஒரு தடவை…”
“ப்ச்! தினேஷ் தம்பிய இப்பதான் பார்த்துட்டு வரேன். மாப்பிள்ளை ரெடி ஆகிட்டு இருக்காருன்னு சொல்லிட்டுப் போனாரு.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாப்பிள்ளையின் தந்தை வந்துவிட, “அஞ்சு நிமிஷத்துல வந்துருவா சம்மந்தி.” என அனுப்பி வைத்தார்.
அதற்குரிய ஐந்து நிமிடங்களும் கடந்து விட ஆனந்தி தான் அங்கு இல்லை. குழப்பத்தில் தேடியவர்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். தன் சோகங்களை மறந்து தங்கையின் நினைவைப் புகுத்திக் கொண்டாள் பார்த்திகா. அவர்கள் வீட்டுச் சொந்தங்களிடம் விசாரித்தனர். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
நேரம் போனதால் மாப்பிள்ளையும் பெற்றோர்களும் சேர்ந்து வந்து விசாரிக்க, மணப்பெண்ணைக் காணவில்லை என்ற செய்தியில், மண்டபம் சூடு பிடித்தது.
ஒரு பக்கம் திருமேனி ஆவுடையப்பனின் பெற்றோர்கள் சந்திரசேகரைக் கேள்விகளால் குடைந்தனர். ஏற்கனவே பெண்ணை மாற்றி, இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர் மேல் பழிகள் அனைத்தும் விழுந்தது. கலவரங்களுக்கு நடுவில் மாயமானாள் பார்த்திகா.
அதுவரை இருந்த இடம் தெரியாமல் இருந்த நம் நாயகன், நண்பனை அழைத்துத் தேட உத்தரவிட்டான். அவனும் தன் போலீஸ் புத்தியைப் பயன்படுத்த, தினேஷ் எதிரில் வந்து கொண்டிருந்த பார்த்திகா வழி மறித்தாள்.
“இந்தப் பக்கம் போகாதீங்க”
“ஏன்?”
“அது..அது… வந்து…”
“உங்க தங்கச்சி எங்க போனாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியல, நானும் உங்களை மாதிரி தான் தேடிட்டு இருக்கேன். ஒரு தடவை அவ ரூம்ல போய் பார்க்கலாம் வாங்க.” என அவனை அவசரமாகத் திசை திருப்பியவள் மனதிற்குள் பெருமூச்சு விட்டாள்.
தினேஷ் முன்னால் போகப் பின்னால் வந்த பார்த்திகா திரும்பி எதையோ பார்த்தாள். ஒரு கண்ணில் கண்ணீரும், மறு கண்ணில் பொய்யும் இருந்தது. அதைச் சாமர்த்தியமாகத் தனக்குள் மறைத்து, தங்கை அறைக்குள் நுழைந்தாள். ஆள் இல்லாத அறை அவர்களை வரவேற்றாலும் அவள் பார்வை மேஜை மீது இருந்தது. தினேஷ் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்க, மேஜைப் பக்கம் செல்ல வைத்தாள். அவள் தேவை உடனே நிறைவேறிட, மேஜை மீதிருந்த கடிதம் அவன் கையில். பரபரப்பாகப் படித்தவன் கண் மூடினான்.
“என்ன அது?” என வாங்கிப் படித்தவள், “கல்யாணத்துல விருப்பம் இல்லனா முதல்லயே சொல்ல வேண்டியது தான. இப்படித் தாலி கட்டுறதுக்கு முன்னாடி ஓடிப் போனா என்ன அர்த்தம்? இப்போ திருக்கு யாரு பதில் சொல்றது?” எனப் புலம்ப, அனைவர் செவிக்கும் ஆனந்தி மண்டபத்தை விட்டு ஓடிப்போன செய்தி நிறைந்தது.
ஆளாளுக்கு ஒன்றைப் பேசிக் கலவரப்படுத்த, திருமேனி ஆவுடையப்பன் தனியாக அமர்ந்திருந்தான். அவன் முன்பு நின்றாள்.
“என்னால தான் இந்த அவமானம் உங்களுக்கு. நீங்க தான் மாப்பிள்ளையா வரப் போறீங்கன்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா வேணாம்னு சொல்லி இருக்க மாட்டேன். நீங்களும் இந்த நிலைமைல உட்கார்ந்து இருக்க மாட்டீங்க. என்னை மன்னிச்சிடுங்க, திரும்மா.”
பதிலுக்கு எதையாவது பேசுவான், தன் பேச்சைத் தொடரலாம் எனக் காத்துக் கொண்டிருந்தவளுக்குப் பெரும் ஏமாற்றம். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மெல்லத் தன் பெற்றோர்களை நோக்கி நகர, “திரும்மா” என்ற வார்த்தை தினேஷின் மனதைத் தொட்டது.
கல்லூரி படிக்கும் பொழுது ஒரு முறை இவனுக்காக அவள் எழுதி வைத்த இரு வாசகத்தில் கடைசி வார்த்தையாக இந்தப் பெயர் இருந்தது. அதை வைத்து ஒரு வாரம் தன் நண்பனைக் கேலி செய்தான். இப்பொழுது அவள் வாயில் இருந்து வந்த அந்த வார்த்தையைக் கேட்டவனின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டது. அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். தன் பெற்றோர்களுக்கும், காதலித்தவன் பெற்றோர்களுக்கும் நடக்கும் சண்டைக்கு நடுவில் நின்றவள் சமாதானம் செய்து கொண்டிருக்கும் பொழுதே,
“எல்லாப் பிரச்சனைக்கும் நான்தான் காரணம் அப்பா. என்ன பண்ணனும்னு சொல்லுங்க, நான் பண்றேன்.” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் வார்த்தை ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மனதில் பதிந்து விட, எதிரே இருந்தவர்களிடம் இவளையே மணப்பெண்ணாக அமர வைக்கக் கேட்டார்கள். ஏற்கனவே கோபத்தில் இருந்தவர்கள் இந்த வார்த்தைக்கு இன்னும் எகிற ஆரம்பித்தார்கள்.
“என் மகனைப் பார்த்தா விளையாட்டுப் பொம்மை மாதிரித் தெரியுதா? இந்தப் பொண்ணைக் காட்டுறேன்னு சொல்லி அந்தப் பொண்ணை நிக்க வச்சு, இப்ப அது ஓடிப் போனதும் இந்தப் பொண்ணைத் திரும்பவும் ஏத்துக்கச் சொல்றீங்க? அப்பா மாதிரிப் பேசுங்க. எனக்கு உங்க சங்காத்தமே வேணாம். என் பையனுக்குக் கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகலனா கூடப் பரவால்ல, உங்க வீட்டில பொண்ணு எடுக்கவே மாட்டோம்.”
பெற்றோர்கள் முடிவில் மகிழ்ந்தவள் காதலனின் பெற்றோர்கள் முடிவில் சோர்ந்தாள். அதுவரை அவளைக் கவனித்துக் கொண்டிருந்த தினேஷ் நண்பனின் பெற்றோர்களை அழைத்து, “இந்தப் பொண்ணு தான் உங்க பையனுக்குச் சரியான பொண்ணு. இவனை மனசுல வச்சுகிட்டு தான் வந்த வரனை வேணாம்னு சொல்லி இருக்கா.” என சில விவரத்தைக் கூறினான்.
திருமேனி ஆவுடையப்பனின் பெற்றோர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, “சீரியல்ல நடக்கிற கல்யாணம் மாதிரிப் பொண்ணை மாத்தித் தாலி கட்டச் சொல்றீங்க? இந்த நிலமையில இன்னொரு பொண்ணை என்னால ஏத்துக்க முடியாது. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.” என வெளியேற முயன்றான்.
“சொன்னால் கேளு திரு. அந்தப் பொண்ணை நேத்துல இருந்து கவனிச்சிட்டு இருக்கேன். அவ மனசுல இன்னும் நீ தான் இருக்க. இப்பவாவது அவ மனசு புரிஞ்சு ஏத்துக்க.”
“எதுவா வேணா இருக்கட்டும் தினேஷ். இந்த மனநிலையில என்னால தாலி கட்ட முடியாது.”
நண்பனின் வாழ்க்கைக்காக அவனது பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் அவர்களின் மனம் மாறியதில் வெற்றி பெற்றான். பார்த்திகாவின் காதல் புரிந்து மருமகளாக்க முடிவு செய்தனர். நண்பனோடு சேர்ந்து பெற்றோர்களும் கட்டாயப்படுத்த, மணமேடையில் அமர்ந்தான் திருமேனி ஆவுடையப்பன்.
வானவில்லின் ஏழு நிறங்களும் அவளுக்குள். எந்த நிறத்தையும் காட்ட முடியாது, வெட்கத்தையும் பிரதிபலிக்க முடியாது அமைதியான முகத்தோடு மணமேடை ஏறியவள் கை வணங்கினாள் தினேஷைப் பார்த்து. சற்றும் இதை எதிர்பார்க்காதவன் சங்கடத்தில் நெளிய,
“நீங்க எனக்குச் சாமி…” என்ற வார்த்தையோடு பல வருடக் கனவை நிறைவேற்றிக் கொள்ள, அவன் பக்கத்தில் அமர்ந்தாள். பரவச நிலையில் அவள் இருக்க, வெளிக்காட்டாத மனநிலையில் அவள் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தான் தாலி கட்டப் போகும் அவன்.
நேரமில்லை என்பதால் சடங்குகள் சீக்கிரம் முடிந்து மாப்பிள்ளை கையில் தாலியைக் கொடுக்க, தன்னவளை அப்பொழுதுதான் நேருக்கு நேராகச் சந்தித்தான். கலங்கிய விழிகளும், உதட்டில் நிறைந்திருந்த புன்னகையும், அவனை ஒரு நிமிடம் அவள் கணவனாக மாற்றியது. அதை உணரும் முன்பு மூன்று முடிச்சிட, இனிதாக நிறைவு பெற்றது திருமணம்.
என்ன மறைத்து வைத்தாலும், அந்த நிமிடம் உடைபட்டது அவளின் ஆனந்தம். அங்கிருந்த அனைவரும் சிரிக்காமல் இருக்க அத்தனை பேருக்கும் ஈடு செய்தாள் தன் புன்னகையை வீசி.
உடல் வருத்தி, ஜீவனைத் துறந்து, தனக்கான வரத்தைப் பெற்ற பல வரலாற்றுக்கு மத்தியில் இதோ புது வரலாற்றை ஆரம்பித்தாள் பார்த்திகா திருமேனி ஆவுடையப்பன். இந்தப் புது வரலாற்றில் வரம் கொடுப்பவன் அவன், வரம் கேட்பவள் இவள்.
பார்த்திகா வரம் கேட்டுக் கைதியாக நிற்க, விவாகரத்துக் கொடுத்து காவல் உடையில் நிற்கப் போகிறான் திருமேனி ஆவுடையப்பன்.
ஊஞ்சல் ஆடும்…
அம்மு இளையாள்.