618 views

தேவன் 2

வெளியில் வந்த சண்முகம் நேராக சென்றார் சிறிய தங்கை வீடுக்கு. வந்தவரைக் கண்டு புன்னகைத்த வள்ளி,
“வாங்க அண்ணா என்ன இவ்ளோ காலையில.” என்று கையில் தண்ணீரை கொடுத்தார்.

தொண்டைக் குழியில் தண்ணீரை இறக்கியவர் சொம்பை வள்ளியிடம் கொடுத்து விட்டு, “யாழு நாலு நாள் லீவுன்னு வீட்டுக்கு வந்திருக்கு வள்ளி.  மச்சான் கிட்ட சொல்லி நல்ல கறி ஆடா வாங்கிட்டு வர சொல்லி இருந்தேன்.” என்றவர் உள்ளே பார்த்தவாறு,

“என்ன மச்சான் இன்னும் வீட்டுக்கு வரலையா.” என்று கேட்டார்.

“அதான் விஷயமா! மனுஷன் விடியற்காலைல எந்திரிச்சு போனாரு அரைக்கப் பறக்க.” என்று சிரித்தவர்,

“இவளாது அப்பப்ப ஊர் பக்கம் வந்துட்டு போறா அண்ணன். நான் பெத்தது கூப்பிட்டாலும் வரமாட்டேங்குது. கடைசி காலத்துல எங்க இப்படியே தனியா இருந்துருவோம்மான்னு பயமா இருக்கு.” என்றார் கவலையாக.

“அட! என்னம்மா நீ இதுக்கா வருத்தப்படுவாங்க. படிக்கிற பிள்ளை அலைய வேணாம்னு அங்கயே இருக்கான். படிப்ப முடிச்சிட்டு உன் கிட்டயே வந்துருவான்.” இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரம் வள்ளியின் கணவர் வந்தார்.

“இங்க தான் இருக்கீங்களா மச்சான் நல்லதா போச்சு.” என்றவர் கையில் இருக்கும் மூன்று ஆடுகளை காட்டினார் ‌.

“ஏங்க அந்த பிள்ளை அரை ஆட்டுக்கறியை கூட சாப்பிடாது நீங்க மூனு பிடிச்சுட்டு வந்து இருக்கீங்க.” வள்ளி மருமகளை அறிந்து கணவனின் செயலுக்கு வக்கனை செய்ய,

“பிள்ளை சாப்பிடுற வரைக்கும் சாப்பிடட்டும் வள்ளி.” என்றார் பாண்டியன்.

கை, கால்களை அலசிக்கொண்டு பாண்டியன் உள்ளே செல்ல, “இந்த ஆடு யாருக்கு மச்சான்.” வெளியில் நிற்கும் கொழுத்த ஆட்டை பார்த்து சண்முகம் கேட்க,

ஒரு நொடி தயங்கி நின்றவர், “தேவநந்தனுக்கு.”   என்று சாதாரணமாக கூறினார்.

பதிலை கேட்டதும் சண்முகம் துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்ப முற்பட, அண்ணனை சமாதானப்படுத்தினார் வள்ளி.

“என்னத்துக்கு என் பிள்ளைக்கு வாங்கும் போது அவனுக்கும் வாங்கிட்டு வரணும். அப்போ நாங்களும் அவங்களும் ஒண்ணா உங்களுக்கு. எந்த உறவும் இல்லைன்னு நான் ஒதுங்கி பல வருஷம் ஆகுது. ஆனா நீங்க யாரும் ஒதுங்காம இன்னும் உறவு கொண்டாடிட்டு இருக்கீங்க.” சண்முகம் முகத்தில் சொல்ல முடியாத வெறுப்பு.

மனைவியும் மச்சானும் பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளை கேட்டாலும் பாண்டியன் எதுவும் நடக்காதது போல் உள்ளே சென்றார். அதைப் பார்த்த சண்முகம் இன்னும் கோபம் கொண்டு, “இந்த ஆடு எதுவும் எனக்கு வேணாம் வள்ளி. என் பொண்ணுக்கு நானே வாங்கிக் கொடுத்துக்கிறேன்.” என்று நடையில் வேகத்தை கூட்டினார்.

அண்ணன் கோபித்துக் கொண்டு செல்வதால் வள்ளியின் முகத்தில் தொய்வு தென்பட்டது. வேகமாக உள்ளே சென்றவர், “ஏங்க! எத்தனை தடவை சொல்றது அண்ணன் முன்னாடி இந்த மாதிரி எதுவும் பண்ணி தொலைக்காதிங்கன்னு. இப்ப பாருங்க கோவிச்சுக்கிட்டு போறாரு.” என்று கண் கலங்கினார்.

மனைவியின் கண்கள் கலங்குவதை கவனித்தவர், “இப்ப எதுக்கு உன் கண்ணு கலங்குது அப்படி என்ன நடந்து போச்சு இங்க. அவருக்கு ஆகாதுன்னா நமக்கு ஆகாதுன்னு அர்த்தமா. நமக்கு எப்பவும் ரெண்டு மகனுங்க வள்ளி மறந்துடாத. இந்த விஷயத்துல எப்பவும் உங்க அண்ணனுக்கு எதிரா தான் நான் நிற்பேன்.” என்றார் கராராக.

“நான் மட்டும் அவன நம்ம பிள்ளை இல்லன்னா சொன்னேன். பெத்த புள்ள நம்மள வந்து பார்த்து நாலு வருஷம் ஆகப்போகுது அவன் தான எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருக்கான். அதுக்காக அண்ணனையும் என்னால விட்டுட முடியாதுங்க.” என்றவர் இன்னும் அழுகையில் ஊறி போக,

“போதும் வள்ளி அழுகுறதை நிறுத்து. உங்க அண்ணனை யாரும் இங்க விட்டுக் கொடுக்க சொல்லல. அந்த மனுஷன் புரிஞ்சுக்காம நடந்துக்கிட்டா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது.  அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம ஒண்ணும் எனக்கு இல்லை.

பெரியவன வச்சுக்கிட்டு சின்னவனுக்கு அவர் பொண்ண கட்டி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஒத்த பொம்பளையா தங்கச்சி கஷ்டப்படுறதை பார்த்தும் மனசு இறங்காத மனுஷன் மனசு அவ்ளோ கல்லாகி போயிடுச்சு போல. என் மருமக சொல்லட்டும் நான் வாங்கி கொடுத்ததை வேணாம்னு.” என்றவர் கொடியில் இருந்த சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டார் யாழினியை காண.

“யாழு” என்று வாசலில் நின்று சத்தம் கொடுக்க, துள்ளி ஓடினாள் மாமனை வரவேற்க.

பரிமளம் குரல் கேட்டு வெளியில் வந்து உபசரிக்க, “இருக்கட்டும் தங்கச்சி இப்போ தான் சாப்பிட்டு வந்தேன்.” என்றவர் கையில் பிடித்து இருக்கும் மூன்று ஆட்டை அங்கிருக்கும் மரத்தில் கட்டி விட்டு,

“யாழுக்கு மச்சான் வாங்கிட்டு வர சொன்னாங்க. பெரியவனுக்கு ஒரு ஆடு பிடிச்சுட்டு வந்துட்டேன்னு கோவத்துல கிளம்பிட்டாரு.” என்றார்.

கணவனை எண்ணி பெருமூச்சு விட்ட பரிமளம், “எப்ப தான் மாற போறாருன்னு தெரியல. தேவநந்தன் மாதிரி தான் வீட்டுல ஒரு பிள்ளை இல்லைன்னு இந்த ஊருசனம் அத்தனையும் குறைப்பட்டுட்டு இருக்கு. இவருக்கு அது புரியல.” என்றதும்,

“சரி விடு ம்மா  பீல் பண்ணாத. இன்னைக்கு நேத்தா நடக்குது.” என சமாதானப் படுத்தினாள் யாழினி.

“யாழு அப்பா வந்தா ஏதாச்சும் பேசி சமாளிச்சுரு. உன் ஒருத்தி வார்த்தைக்கு தான் அவர் அடங்கி நிற்பாரு.” என்றவர் தேவநந்தனுக்காக வாங்கி வந்த ஆட்டை கொடுக்க கிளம்பினார்.

டிவிஎஸ் வண்டியில் முன்னாள் ஆட்டை வைத்தவர் கிளம்பும் நேரம் ஓடி வந்து அமர்ந்தாள் யாழினி. மாமன் கேள்வி கேட்கும் முன், “காலையிலயே அத்தை வந்து கூப்பிட்டு போயிட்டாங்க மாமா. வழக்கம் போல மூஞ்சிய காட்டி அனுப்பி விட்டுட்டாரு. உங்க கூட வந்து அப்படியே அத்தைய பார்த்துட்டு வந்துடுறேன்.” என்றவளுக்கு கண் அசைத்து பதில் சொன்னவர் தேவநந்தன் வீட்டு முன்பு இறங்கினார்.

யாழினி வண்டியில் இருந்து இறங்கிக் கொள்ள, ஆட்டை இழுத்து சென்று கட்டினார் பின் வாசலில். வண்டி சத்தத்தில் வெளியில் வந்தார் அன்னம். அண்ணன் மகளை பார்த்து வாய்க்கொள்ள சிரிப்புடன் வரவேற்க, “என்ன அத்தை உங்க வீட்டுக்கு வந்து ஒரு எட்டு நான் பார்க்கலாமா.” என்ற குறும்போடு உள்ளே சென்றாள்.

தேவநந்தன் வீடு மற்ற இருவரின் வீட்டை விட சிறிய அளவு. காரணம் காதலித்து திருமணம் செய்து கொண்ட அன்னத்தை அப்படியே விரட்டி விட்டார் சண்முகம்.

சண்முகம், அன்னம், வள்ளி மூவரும் உடன் பிறந்தவர்கள். மூத்தவர் என்பதால் இளையவர்கள் இருவரையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். திருமண வயது வந்ததும் முதலில் அன்னத்திற்கு பெண் பார்க்க, அவரோ காதலிப்பதாக மறுத்தார். ஆண் என்ற அதிகாரத்தோடு அவர் காதலை மறுத்த சண்முகம் தன் சமூகத்தை சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தார். 

பக்கத்து ஊரில் இருக்கும் கோபாலன் உடன் காதல் மலர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது அன்னத்திற்கு. அதை கலைக்கும் விதமாக அண்ணன் திருமண ஏற்பாடு செய்ய, கோபாலிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அவர் வீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இரு குடும்பத்தையும் மீறி திருமணம் செய்ய முடிவு செய்தார்கள்.

யாரும் உதவி செய்ய இல்லாததால் தாய்மாமன் பாண்டியனிடம் உதவ கேட்டார் அன்னன். முதலில் பாண்டியனுக்கு தான் பெண் கேட்டது. அவரோ வள்ளியை விரும்புவதாக கூறி விட, வெளியில் பார்த்தார்கள். வள்ளி, பாண்டியன் இருவரின் உதவியோடு ஊரை விட்டு  வந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

விஷயம் கேட்ட சண்முகம் இத்தோடு உறவை முடித்து விடுவதாக ஊர் சபையில் அறிவித்து விட, மறைமுக உதவி செய்தார் பாண்டியன். குடும்பத்தின் பிரிவு ஒரு பக்கம் இருந்தாலும் தன் புகுந்த வீடு ஆதரவு இல்லாததால் அதே ஊரில் சொந்தத்தின் ஒருவர் வீட்டில் ஒத்திகைக்கு இருந்தார் அன்னம்.

பெரிய தங்கையின் செயலால் பதட்டம் அடைந்த சண்முகம் அடுத்த ஒரு மாதத்தில் பாண்டியனுக்கும் வள்ளிக்கும் திருமணம் முடித்தார். அவரவர் வாழ்வு ஆனந்தமாக சென்று கொண்டிருந்தது.

தேவநந்தன் யார் ஆதரவும் இன்றி தாய் தந்தை பாசத்தோடு பிறந்தான். அன்றிலிருந்து குடும்பத்தின் ஒதுக்கத்தை மறந்தவர்கள் பிள்ளைக்காக வாழ ஆரம்பித்தார்கள்.
தேவநந்தனுக்கு மூன்று வயது ஆகும் போது சந்தைக்கு செல்லும் வழியில் கோபால் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதிட சம்பவம் நடந்த அன்று உயிர் பிரிந்தது.

கணவன் இல்லாததை கேட்டதும் அன்னம் மயங்கி விட,  பாண்டியன் தான் அனைத்தையும் செய்தார். விஷயம் கேள்விப்பட்ட பரிமளம் கூட கணவனை மீறி வந்து விட்டார். ஆனால், அவரோ பிடிவாதமாக வராமல் இருந்து விட்டார். கோபாலனின் வீட்டு ஆட்களும் துயரம் நடந்த கையோடு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டார்கள்.

நாட்கள் மெல்ல ஓடத் தொடங்கியது. கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தவர் மகனுக்காக மீண்டு எழுந்தார். பாண்டியன் மச்சானிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தார் அன்னத்திற்கு உரிய சொத்துக்களை கொடுக்குமாறு. சண்முகம் மனசாட்சி இல்லாமல் கொடுக்க மறுத்து விட, தன்னால் முயன்ற உதவியை செய்ய முன் வந்தார் பாண்டியன்.

கோபாலனின் மனைவி அன்னம் துணிவோடு அவர் உதவிய நிராகரித்து மகனை வளர்க்க ஆரம்பித்தார். அரும்பு மீசை முளைக்க ஆரம்பித்த பின் அன்னையின் கஷ்டத்தை பார்த்தவன் படிக்காமல் குலதெய்வ தொழிலான விவசாயத்தை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அன்னைக்கு ஒரு சொந்த வீடு கட்டி தர வேண்டும் என்பது தான் அவனின் உச்சகட்ட ஆசை. கடுமையாக உழைத்தவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த ஆசையை நிறைவேற்றினான்.

“பெரியவனுக்கு ஆடு கட்டி வச்சிருக்கேன் பிடிச்ச மாதிரி செஞ்சு கொடு அன்னம்.” என்று திண்ணையில் அமர்ந்த பாண்டியன்,

“யாழு எனக்கு வேலை இருக்கு உன்ன விட்டுட்டு போகட்டுமா. இல்ல அத்தை கிட்ட பேசிட்டு அப்புறம் போறியா.” என்று மருமகளிடம் கேட்டார்.

“நீங்க போங்க மாமா என் அத்தை கூட  இருந்துட்டு பொறுமையா வரேன்.” என்றவள் மாமனை அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தாள் தேவநந்தனுக்காக.

அன்னம் மனதில் யாழினி மருமகளாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்க, பாசத்தை சற்று அதிகமாகவே கொட்டினார் அவளிடம். அவளுக்கோ அப்படி ஒரு ஆசை இல்லாமல் போனாலும் தேவநந்தனின் தாயை அதிகம் பிடிக்கும்.

“அத்தை மாமா எப்ப வரும்.” என்றவள் தரையில் அமர,

“இதுல உக்காரு யாழு” என்று நாற்காலியை காட்டினார்.

“வேணா அத்தை கீழயே இருக்கேன்.” என்றவளை வலுக்கட்டாயமாக எழுப்பி இருக்கையில் அமர வைத்தார்.

“எதுக்கு அத்தை இப்போ ஆர்ப்பாட்டம் பண்றீங்க.” அவள் முறைப்போடு கேட்க,

“உன் வீட்டுல நீ தரையில உட்கார மாட்டியே யாழு.” என்று சங்கடத்தில்  தெளிந்தார் அன்னம்.

அத்தையின் மீது இருந்த முறைப்பு இன்னும் அதிகமாக, அமைதியாக எழுந்து தரையில் அமர்ந்துக் கொண்டாள். அவர் மீண்டும் அதை தடுக்கும் விதமாக பேச,

“ரொம்ப பண்ணாதீங்க அத்தை. நான் என்ன வானத்துல இருந்தா குதிச்சிட்டேன்.  என் மாமன் வீட்டுக்கு வந்துட்டு பவுசு காட்டுவேனா. அப்பா தான் ஏதோ புரியாம பண்றாருன்னா நீங்க அவருக்கு மேல இருக்கீங்க.” என்றவளின் குரலை கேட்டுக்கொண்டு வாசலில் கால் வைத்தான்  தேவநந்தன்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
26
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *