Loading

 

தெம்மாங்கு 2

 

அடர்ந்த கேசம் காற்றில் ஊஞ்சலாடியது. வெள்ளி நிற காப்பு அணிந்த அவன் கைகள் ஓயாமல் அதை சரி செய்து கொண்டு வர, அடங்க மறுத்தது அவனைப் போல். குமரவேலன் அடங்காதவன் என்ற பெயர் தான் அவன் வீட்டில். தந்தையின் சொத்துக்களை பராமரிக்க ஆர்வம் எழுந்ததில்லை. தந்தை பெற்றிருக்கும் மரியாதையை காப்பாற்ற நினைத்ததில்லை. தந்தை போல் மிடுகாக இருக்க விரும்பியதில்லை. 

 

தந்தைக்கு அப்படியே நேர் எதிராக இருக்கவே ஆசை கொள்வான். அவன் ஆசைக்கு முழு காரணம் அன்புக்கரசன். புரியாத வயதில் நட்பாகிய அவனுக்காக, அவனிடமிருந்து பிரிக்க நினைக்கும் தன் தந்தைக்காக அடங்காதவன் ஆகிவிட்டான். 

 

உடனிருக்கும் நண்பனைப் போல் குடும்ப சுமை இல்லை இவனுக்கு. அவனைப் போல் வருங்காலத்தைப் பற்றிய கவலை இல்லை. குமரவேலனை பொறுத்தவரை எல்லாம் காலம் பெற்றுத் தரும் என்ற எண்ணம். எந்தக் கவலையும் இல்லாமல் வாழும் வளர்ந்த குழந்தை. வாழ்வென்பது இதுதான் என உணரும் தருணம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒன்றை சந்திக்கும் தருணம் வாழ்வே மாறி இருக்கும் என்பதை அறியாது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினான்.

 

“வந்துட்டான் பாரு உன் பிள்ளை.”

 

“நீங்க எதுவும் பேசாதீங்க. பொறுமையா நான் எடுத்து சொல்றேன்.”

 

“என்னத்தை சொல்லிட்டு இருக்க போற. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து சொல்லாததையா இப்ப சொல்ல போற. இவன் வேணுன்னே என் மரியாதையை கெடுக்க பண்ணிக்கிட்டு இருக்கான். ஒன்னும் இல்லாதவன் வீட்ல உட்கார்ந்து சாப்பிட உன் பிள்ளைக்கு வெக்கமா இல்ல.”

 

“ஐயோ கத்தாதீங்க! அவனும் கத்துவான் தேவையில்லாத பிரச்சினை வரும்.”

 

“எதுக்குடி என்னை கத்த வேணாம்னு சொல்ற? நீ பெத்த புள்ளையால ஊர் மத்தில அசிங்கமா இருக்கு. பெத்த புள்ளைய கண்டிக்க தெரியல நீயெல்லாம் என்னை அடக்க வந்துட்ட.”

 

“அவ உன்ன அடக்கலப்பா. சண்டை வேணாம்னு அமைதியா இருக்க சொல்றா.” 

 

“நீங்களும் புரியாம பேசாதீங்க ஆத்தா‌. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். அந்த ஒன்னும் இல்லாத பையன் ஏதோ போனா போதுன்னு ஜெயிச்சதை கொடுக்கிறான் அதை வெட்கமில்லாம வாங்கி ஊருக்கு காட்டுறான். அந்த ஜல்லிக்கட்டை ஏற்பாடு பண்ணி அத்தனை பரிசையும் வாங்கி போட்ட எனக்கு என்னை மரியாதை.” 

 

 

வீட்டிற்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகளை கேட்டவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சர்வ சாதாரணமாக கால்களை கழுவி விட்டு உள்ளே நுழைய,

 

“எப்படி எதையும் காதுல வாங்காதவன் மாதிரி வந்து நிக்கிறான் பாரு.” மகன் நிற்கும் தோரணையில் உச்சகட்ட எரிச்சலுக்கு ஆளான பேச்சியப்பன் கத்தினார்.

 

“சும்மா இருப்பா பேச்சு.”

 

“நீயே பார்த்தல பொன்ராசு இவன் எவ்ளோ கூத்தடிச்சான்னு. நம்ம மரியாதையா இந்த ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கோம். அதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம வக்கெத்தவன் வீட்ல போய் உட்கார்ந்திருக்கான். பார்க்குறவங்க என்னப்பா உன் புள்ள அங்கயே இருக்கான்னு என்னை கேள்வி கேக்குறாங்க.”

 

“புரியுது பேச்சியப்பா. நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன் நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்ற பேச்சியப்பனின் உறவுக்காரரும் நெருங்கிய நண்பருமான பொன்ராசு கூற, அவருக்காக பல்லை கடித்துக் கொண்டு அமைதி காத்தார். 

 

“என்ன இருந்தாலும் உங்க அப்பா கோபம் நியாயம் தானப்பா. ஊருக்குள்ள அவருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை ஒத்த புள்ள நீ தான காப்பாத்தணும்.” என அவர் குமரவேலனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உதாசீனம் செய்வது போல் தன் அறையை நோக்கி நகர,

 

“பார்த்தியாப்பா அவன் பண்றத. இவன பெத்ததுக்கு அசிங்கம் மட்டும் தான் மிச்சம்.” என்றார் பேச்சியப்பன்.

 

“குமரா!” 

 

தாய் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றான். அவன் செயலைக் கண்டவர் அமைதியாக வாயை மூடிக் கொள்ள, “உன்கிட்ட பேசணும் இப்படி வந்து நில்லு” என்றார் இந்திரா. 

 

தந்தை போல் தாயை ஒரு நாளும் உதாசினம் செய்ததில்லை குமரவேலன். அவர் சொல்லிய அடுத்த கணம் அமைதியாக அவருக்கு முன்னால் வந்து நின்றான். கணவனை ஒருமுறை பார்த்த இந்திரா, 

 

“எதுக்கு குமரா தேவையில்லாத பிரச்சினை. பெத்தவங்களை விடவா நண்பன் முக்கியம். அப்பா பேச்சை கொஞ்சம் கேட்டா தான் என்ன? நீ இப்படி பண்றதால தான் அன்பு மேல கோபம் வருது. உன்னால அவனுக்கும் பிரச்சனை. இத்தனை பேர் சொல்றதை கொஞ்சம் கேளு.” பொறுமையாக பேசினார்.

 

“அவன் எப்படி கேட்பான். கேட்கக் கூடாதுன்னு தான இத்தனை வருஷம் பழி வாங்கிட்டு இருக்கான்.”

 

“நான் யாரையும் பழி வாங்கல.”

 

“அப்போ எதனாலப்பா உன் அப்பாவை இப்படி அசிங்கப்படுத்துற.” என்ற பொன்ராசை பார்த்தவன்,

 

“அவன் கூட சேர வேணாம்னு எதுக்காக சொல்றீங்க? நீங்களும் அப்பாவும் எத்தனை வருஷமா பிரண்ட்ஸா இருக்கீங்க. எனக்காக அதை விட்டுட்டு ஒதுங்கி இருப்பீங்களா. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம்னு சொல்றது தான் எனக்கு பிடிக்கல.” குரல் உயர்த்தினான். 

 

“இவனும் அவனும் ஒன்னாடா? கூட பழகுறதுக்கு ஒரு தகுதி தராதரம் வேணும். சாக்கடையும் சந்தனமும் ஒன்னு இல்ல.”

 

“உண்மைதான். ரெண்டும் ஒன்னும் இல்லை. ஆனா, சந்தனம் இல்லாம கூட வாழ்ந்துடலாம் சாக்கடை இல்லாம வாழ முடியாது. சாக்கடை தான் உங்க கழிவு. உங்க கழிவு தான் நீங்க.”

 

“என்ன பேசுறான்னு பாருங்க. ஒரு சாக்கடைய எனக்கு சரிசமமா வைக்கிறான். இந்த மாதிரி புள்ளைய பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம்.”

 

“இருப்பா கோபப்படாத”

 

“அடப்போ பொன்ராசு! எனக்கு அப்புறம் என் வம்சத்துக்கு துணையா இருப்பான்னு பார்த்தேன். என் வம்சத்தை அழிக்க தான் பிறந்து இருக்கான்னு கொஞ்சமும் நினைக்கல. அந்த சாக்கடை கூட சேர்ந்து இதுவும் சாக்கடை ஆயிடுச்சு. சந்தனத்துக்கு மத்தியில வைக்கணும்னு நினைச்சது என்னோட தப்பு தான். எங்கயாது போய் நாறி கிடக்கட்டும்.” 

 

பேச்சியப்பன் இருக்கை ஓரம் இருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட, நண்பன் கோபத்தை குறைப்பதற்காக பின்னால் ஓடினார் பொன்ராசு. இருவரும் ஊருக்குள் பெரிய தலைகள். காசு பணம் கௌரவம் எதற்கும் குறைவில்லாதவர்கள். 

 

பொன்ராசுக்கு தேனிசை தேவி என்ற பெண்ணும், கருப்பன் என்ற மகனும் இருக்கிறார்கள். கௌரவ நண்பர்கள் நினைப்பது போல் கருப்பன் இருக்க, ஒற்றைப் பிள்ளையாய் போன தன் பிள்ளை அப்படி இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு. நண்பன் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன் மகன் மீது அளவு கடந்த கோபம் எழும். 

 

“ஏன் ராசா இந்த மாதிரி அவன கோபப்படுத்திட்டு இருக்க.”

 

“நானா முத்து கோபப்படுத்துறேன்? உன் மகன் தான் என்னை கோபப்படுத்திட்டு இருக்காரு. அவர் பேசுறதுல எங்கயாது நியாயம் இருக்கா. அவன் கிட்ட காசு பணம் இல்லன்னு ஒதுக்கி வைக்கிறது சரியா. ஜாதியை பார்த்து ஒதுக்கி வைக்கிறவன விட பணம் பார்த்து ஒதுக்கி வைக்கிறவன் கேவலமானவன். என் நண்பன் கிட்ட காசு பணம் இல்லாம இருக்கலாம். ஆனா, நிம்மதியான வாழ்க்கை இருக்கு.” என்றவன் முகத்தை சோகமாக வைத்து, 

 

“நினைவு தெரிந்த நாள்ல இருந்து கௌரவம், காசு, பணம் இதைக் கேட்டு கேட்டு வெறுத்துப் போயிட்டேன். அவன் கிட்ட காசு இல்லனாலும் அமைதியான வாழ்க்கை இருக்கு. சாப்பிடுற சாப்பாட்டுல கூட ரகம் பார்க்குற என் அப்பாவை விட, அங்க இங்கனு ஓடி திரிஞ்சி இருக்குறதை ருசியா ஆக்கி போடுற அந்த வயசானவர் சாப்பாட்டுல அவ்ளோ ருசி இருக்கு. சின்ன வீடா இருந்தாலும் நல்ல தூக்கம் வருது. ஏசி போட்ட வீட்ல கௌரவம் கழுத்தை நெரிக்குது. இந்த வீட்ல பிள்ளையா பிறந்த பாவத்தை அந்த வீட்ல வாழ்ந்து தீர்த்துக்கிறேன். 

 

உங்க கவுரவம் காசு பணம் எல்லாம் உங்களோட போகட்டும். எனக்கு என்னோட அன்பு போதும். அவன் என் கூட இருக்குற வரைக்கும் நான் தான் இந்த ஊர்லயே பெரிய பணக்காரன்.” என்று விட்டு செல்லும் மகனைப் பார்க்க பாவமாக இருந்தது இந்திராவிற்கு.

 

பெற்ற மகனுக்கும் கட்டிய கணவனுக்கும் நடுவில் பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். பேச்சியப்பன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முடியாமல் தன்னிலையில் விடாப்படியாக இருக்க, அன்பைக் கொண்டு கட்டி வைப்பதற்கு பதில் கௌரவத்தைக் கொண்டு கட்டி வைத்ததற்கு உடன்படாத தன் மகனின் மனதை படித்தும் துணை நிற்க முடியாத சூழ்நிலை அவருக்கு. 

 

 

தன் கௌரவத்திற்கு தங்க நகைகளை போட்டு பள்ளிக்கு அனுப்ப, எதுவும் போடாமல் இருக்கும் நண்பனுக்கு போட்டு அழகு பார்த்தான் குமரவேலன். புரியாத வயதில் அன்புக்கரசனும் அதை ஏற்றுக்கொள்ள, விஷயம் அறிந்து மாணிக்கத்தை ஒரு வழி ஆக்கிவிட்டனர் கௌரவ நண்பர்கள் இருவரும். அன்று தன் பேரனுக்கு புரிய வைத்தவர் அதன் பின் அனைத்தையும் மறுக்க, வாங்கித் தரும் உடையிலிருந்து தனக்கு கிடைக்கும் ஒவ்வொன்றையும் மறுத்தாலும் திணிக்க ஆரம்பித்தான் குமரவேலன். 

 

ஊரார்கள் சொல்வதை விட தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் நண்பனின் மனம் தான் தேவைப்பட்டது அன்புக்கரசனுக்கு. தாத்தா சொல்வது போல் தானும் ஒதுங்கி நின்றால் அந்த அன்பு உள்ளம் ஏங்கிவிடும் என்பது அவன் கருத்து. அவனுக்காகவும் தன்னுடைய நட்பிற்காகவும் நண்பனை சந்தோஷப்படுத்துவதை தன் முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டான் அன்பு. 

 

அன்பிற்கு தேவை எல்லாம் குமரவேலின் சந்தோஷம் மட்டுமே. அவன் வீட்டில் கிடைக்காத சந்தோஷம் தன் மூலம் கிடைக்கட்டும் என்றுதான் எது நடந்தாலும் விட்டுக் கொடுக்கிறான். அவன் செயல் இன்னும் கோபத்தை தூண்டியது கௌரவ நண்பர்களுக்கு. இருந்தும் தங்கள் வீட்டுப் பிள்ளைக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

கருப்பனோடு குமரவேலனை பழக வைக்க பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. தேனிசை தேவி இவர்களைப் போல் சராசரியாக இருக்க, கௌரவ நண்பர்கள் போல் பகட்டாக இருக்கும் அவனோடு ஒட்ட முடியவில்லை குமரனால். அதற்குக் காரணம் அன்பு தான் என்று பகையை இன்னும் வளர்க்க ஆரம்பித்தார்கள். எப்படியாவது தங்கள் பிள்ளையை அவனிடம் இருந்து பிரித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 

 

நட்பிற்கு முன்னால் கவுரவம் எத்தனை மினுக்காக இருந்தாலும் எடுபடாது என்பதை அறியாதவர்கள் பல முயற்சிகள் செய்து தோற்கிறார்கள். மனம் மட்டுமே அன்பிற்கு போதும் என்ற அடிப்படையில் இருக்கும் இருவரும் ஒரு நாள் பிரிவார்கள் என்ற கணக்கை காலம் கனவிலும் எடுத்துக்காட்டவில்லை இவர்களுக்கு. காட்டி இருந்தால் அன்பு குமரவேலனிடம் நெருங்கி இருக்க மாட்டான். குமரன் அன்புக்கரசனிடம் தன் நட்பை கொடுத்திருக்க மாட்டான். 

 

நல்ல நட்பு நல்லவை மட்டுமே செய்யும்! அவை யாருக்கு என்பதுதான் இந்த தெம்மாங்கில் ஒளிந்திருக்கும் சூட்சமம்.

 

 

 

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்பா”

 

“பத்து நிமிஷத்துல வந்துடுவேன் இசை.”

 

“இதையேதான் ரெண்டு மணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”

 

“என்னமா பண்றது சின்ன வேலை வந்துடுச்சு.”

 

“எனக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம் தான் அன்பு. வீட்ல தேடுறதுக்குள்ள போய் ஆகணும். கொஞ்சம் சீக்கிரம் வாங்க.”

 

“சாரி இசை. ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்.” 

 

 

அய்யனார் கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றுக்குள் அமர்ந்திருக்கிறாள் தேனிசை தேவி. காதலனை சந்திக்க அவளுக்கென்று பாதுகாப்பாக இருக்கும் ஒரே இடம் இந்த கிணறு மட்டுமே. எப்போது இருவரும் சந்தித்தாலும் இங்கு தான் காதல் அரங்கேறும். அதிகபட்சம் அரை மணி நேரமே அதிகமானது இவர்களுக்கு. 

 

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருபவள் சரியான நேரத்திற்குள் வீடு திரும்பவில்லை என்றால் பல போர்க்களத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதற்கு பயந்து அவனைப் பார்த்தால் போதும் என்ற நிம்மதியில் பேச வேண்டியதை பேசாமல் ஓடி இருக்கிறாள் பல நாள்கள். எப்போதும் தேனிசை நிலை புரிந்து சரியாக வந்து விடுபவன் இன்று சதி செய்கிறான்.

 

நேரம் கூட கைகள் நடுங்க ஆரம்பித்தது தேனிசைக்கு. இதுவரை காத்திருந்து விட்டு அவனைப் பார்க்காமல் செல்லவும் மனம் வரவில்லை. வீட்டில் இருப்பவர்கள் கேட்டால் என்ன சொல்வது என்ற யோசனை வேறு விடாமல் குடைந்தது. சொன்ன பத்து நிமிடத்தை கடந்து அரை மணி நேரம் கழித்து வந்தான். அவன் வரும்வரை அவன் மீது இருந்த கோபம் காணாமல் போனது முகம் பார்த்ததும். 

 

“சாரி இசை”

 

“உங்களை, நான் பார்க்க வரதே பெரிய விஷயம். இதுல இப்படி பண்ணா எப்படி?”

 

“தாத்தாக்கு உடம்புக்கு முடியல. ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வந்தேன்.”

 

“அச்சச்சோ… தாத்தாக்கு என்னாச்சு?”

 

“எல்லாம் வயசானவங்களுக்கு வர்றதுதான். எனக்காக நிறைய ஓடி ஓடா போன மனுஷன். இப்ப வரைக்கும் தாக்கு புடிச்சு நடமாடுறதே பெரிய விஷயம்.”

 

“தாத்தாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் ரொம்ப பாவமா இருக்கும் அன்பு.”

 

“அவருக்கு ஓய்வு தர இப்ப வரைக்கும் என்னால முடியல. கவர்மெண்ட் வேலையும் தள்ளி போய்கிட்டு இருக்கு. கிடைக்கிற வருமானத்தை கொடுத்து நாள தள்ளிட்டு இருக்கேன்.” என்றவன் கிணத்து படிக்கட்டில் அமர்ந்து, 

 

“என் தாத்தாவை நல்லா வச்சிருக்கணும்னு ரொம்ப ஆசை. அந்த ஆசையை கொஞ்சம் கூட நிறைவேத்த முடியல.” சோகமானான்.

 

“விடு அன்பு. நான் வந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து தாத்தாக்கு நிறைய ரெஸ்ட் கொடுத்து நல்லா பார்த்துக்கலாம்.”

 

“நீ என்னை பார்க்குறியோ இல்லையோ என் தாத்தாவை மட்டும் நல்லா பார்த்துக்க இசை. புருஷன் இல்லாம வாழ்ந்த எங்க அம்மாவ தாங்கி பெத்தவங்க இல்லாம வாழ்ந்த என்னையும் தாங்கி இப்ப வரைக்கும் அவருக்காக வாழாம எங்களுக்காக வாழுற மனுஷன். ஓய்வுன்ற ஒன்ன என் தாத்தா பார்த்ததே இல்லை. நீ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவருக்கு ஒரு மகளாகும் பேத்தியாவும் இருக்கணும்.”

 

 

“இதெல்லாம் நீ சொல்லனுமா.”

 

“நல்லா பார்த்துப்பன்னு தெரியும் இசை. இருந்தாலும் எல்லாம் சரியா வருமான்னு பயமா இருக்கு.” 

 

அதுவரை தைரியமாக இருந்தவள் கண்கள் பயம் கொண்டது. அவளுக்குள்ளும் இருக்கும் பயம்தான் இது. நிச்சயமாக திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இருவரும் உறுதியாக நம்புகிறார்கள். அதையும் மீறி கரம் கோர்க்க வேண்டும். அதற்கான வழி தெரியாமல் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பேதை பெண் பேசாமல் தன் பயத்தை அவன் கைவிரல்களில் கோர்த்து வெளிக்காட்ட, பலத்த யோசனையில் வாயை மூடினான் அன்புக்கரசன்.

 

“நேரமாச்சு நான் கிளம்பட்டுமா?”

 

“அதுக்குள்ள வா”

 

“இதுவே ரொம்ப அதிகம் அன்பு. உன்ன பார்த்துட்டு போகணும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இதுக்கே வீட்ல என்ன கேட்க போறாங்களோன்னு பயமா இருக்கு.”

 

“சரி பார்த்து போ.” எனக் கைப்பிடித்து படிக்கட்டில் ஏற முயற்சிக்க, “நாளைக்கு வர முடியுமான்னு தெரியல. சனிக்கிழமை அப்பா ஒரு வேலை விஷயமா பேச்சியப்பன் மாமா கூட வெளிய போறாங்க. அப்ப முடிஞ்சா பார்க்க வரேன்.” என்றாள்.

 

“ரொம்ப ரிஸ்க் எடுக்காம நேரம் கிடைக்கும்போது பார்க்கவா.”

 

கிணற்றை விட்டு வெளியே வரும் முன் நான்கு பக்கமும் பார்வையை சுழற்றி விட்டு யாரும் இல்லாததை உறுதி செய்து வெளியே எகிறி குதித்தாள். அவள் விழுந்து விடாதபடி பாதுகாப்பாக பிடித்தவன், 

 

“ராத்திரி போன் பண்றேன்.” கை அசைத்தான். 

 

“சரி” என நகர்ந்தவள் திடீரென்று நியாபகம் வந்தவளாக தலையில் அடித்துக் கொண்டு,  

 

“கேட்க வந்ததை மறந்துட்டு சும்மா போறேன் பாருங்க. என்ன சொன்னாரு நம்ம விஷயத்துக்கு?” என குமரவேலன் பற்றி கேட்டாள். 

 

“உங்க கல்யாணம் என்னோட பொறுப்புன்னு தான் சொன்னான்.” 

 

“அவர நம்பலாமா?”

 

“அவனை பத்தி தெரிஞ்சுமா இப்படி கேட்குற?”

 

“தெரிஞ்சாலும் என் வீட்டை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு அன்பு.”

 

“அவன் பேசி மாமாவை சரி பண்ணிடுவான் இசை. நீ ரொம்ப பயப்படாம தைரியமா இரு.” 

 

“எப்படி அவரை இவ்ளோ நம்புறீங்க.”

 

“குலசாமிய நம்பாதவன் நல்லா வாழ முடியாது இசை.”

 

“நானும் பல தடவை இதைக் கேட்கணும்னு நினைச்சி இருக்கேன். அப்படி என்ன அவர் உங்களுக்கு பண்ணிட்டாரு? எங்கிட்ட பேசுற பத்து வார்த்தையில எட்டு வார்த்தை அவரா தான் இருக்கும். உங்களௌ மாதிரி பொறுப்பானவர் கூட அவர் கிடையாது. அப்புறம் எந்த நம்பிக்கைல கண்மூடித்தனமா இப்படி குமரான்னு உருகுறீங்க.”

 

“அவன் விளையாட்டு தனமா இருக்கலாம் இசை. ஆனா, நான் தான் எல்லாம். எனக்காக எதை செய்யவும் துணிவான். ஜல்லிக்கட்டுல பார்த்தல்ல. நான் திரும்பி வர வரைக்கும் ஒரு ஊரே சேர்ந்து நடத்தின விழாவை நிறுத்தி வச்சான்.”

 

“அட ஆமாங்க! பேச வந்த எல்லாத்தையும் மறந்துட்டேன். கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல. உங்களுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ரொம்ப பயந்து போய் இருந்த நேரத்துல அப்படி ஒன்ன பண்ணி மைண்ட மாத்தி விட்டுட்டாரு. ஊரே என்ன நடந்துச்சுன்னு தெரியாம கலவரமா இருந்துச்சு.”

 

“அதான் குமரா. எட்டாவது படிக்கும் போது என்னை அடிக்க வந்த சந்தானம் வாத்தியார கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு கலவரம் பண்ணவன். அதுக்காக வீட்ல அவன் வாங்கின அடி கொஞ்சம் நெஞ்சம் இல்ல. உடம்பு முழுக்க அங்கங்க ரத்தம் கட்டி இருந்துச்சு இசை. அதை பார்த்து நான் வருத்தப்பட்டதுக்கு என்ன பண்ண தெரியுமா?” என்றவன் அந்த நாளை நினைத்து சிலாகித்தான்.

 

சந்தானம் இவர்கள் படிக்கும் பள்ளியில் கணக்கு வாத்தியார். சரியாக படிக்காத குமரனை எப்பொழுதும் திட்டிக் கொண்டிருப்பார். நன்றாக படிக்கும் அன்பு நண்பனுக்கு உதவி செய்வான். அது பரீட்சை வரை சென்றது. அதைக் கண்டுபிடித்தவர் அன்புவை அடிக்க, சிறிதும் யோசிக்காமல் கைக்கு கிடைத்ததை கொண்டு பதம் பார்த்தான்.

 

விஷயம் பேச்சியப்பன் காதிற்கு சென்றது. அன்புக்கரசனுக்காக செய்ததால் கோபம் பன்மடங்கானது. கன்னி போகும் அளவிற்கு அடித்து துவைத்தார் மகனை. அனைத்து அடிகளையும் தூசி தட்டி விட்டு நண்பனை தேடி வந்தவன்,

 

“அன்பே, அந்த எண்ணெய்ய எடு.” என்றான்.

 

விஷயம் அறியாதவன் அறிந்த பின் துடிதுடித்து கண்ணீர் சிந்த, “நீ இப்படி அழுக அவன் தான காரணம்.” என்றவன் மறுநாள் சந்தானம் வரும் வழியில் மறைந்திருந்து கல்லை விட்டு அடித்து பல்லை உடைத்தான். பல் இல்லாமல் பள்ளிக்கூடத்துக்கு வந்தவரை பார்த்த மாணாக்கள் அனைவரும் கேலி செய்தனர். அதில் மனம் நொந்தவர் வாத்தியார் வேலையையே விட்டுவிட்டார். 

 

அதன் பின் இந்த இருவரையும் பழி தீர்க்க பல வேலைகள் செய்திருக்கிறார். அவருக்கு வயதாகி இவர்களுக்கு வயது வந்ததே தவிர எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த நட்பை ரசிக்கவும் ஆரம்பித்தார் சந்தானம். ஆனாலும் வெறுப்பெற்றுவதை மட்டும் விட முடியவில்லை. ஒரு நாள் இவர் விடப் போவதையும் குமரன் தொடர்வதையும் காணப்போகிறாள் கதை கேட்டுக் கொண்டிருப்பவள். 

 

“ஓஹோ! அதான் நீங்க வரப்போ போறப்ப எல்லாம் அந்த பாட்ட போடுறாரா.”

 

“ஆமா” என புன்னகைத்தவன், “விளையாட்டுத்தனமா ஆர்வக்கோளாறுல எதையாது பண்ணி என்னையும் சேர்த்து மாட்டிவிட்டுடுவான். குமராவோட அப்பா என்னை பார்த்தாலே அப்படி முறைப்பாரு. அவரோட சேர்ந்து உங்க அப்பாவும் தான். ஆனாலும் என் குமரன் அன்புக்கு முன்னாடி அந்த முறைப்பெல்லாம் தூசி.” என்று ஆனந்தம் கொண்டான். 

 

“நான் ஒன்னு கேட்கவா?”

 

“ம்ம்… தாராளமா”

 

“நானா உங்க நண்பனான்னு வந்தா என்ன முடிவு எடுப்பீங்க?” என அவள் ஒரு குறுகுறுப்பில் கேட்க துளியும் தாமதிக்காமல், 

 

“என் குமரா தான்” என்று விட்டான். 

 

மழை தேவதை கருணையால் பூமியில் தேங்கிய நீர் வெப்ப அரக்கன் அசுரத்தனத்தால் நொடியில் மறைந்தது போல் அவள் முகம் வாடிவிட்டது. நண்பன் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறான் என்பதை நன்கு அறிந்தாலும் தானும் அதற்கு ஈடானவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண் மனதின் ஓரம் நிலை கொண்டது. அதை ஒரு நொடி கூட யோசிக்காமல் உடைத்தவன் செயல் தான் வாடியதற்கு காரணம். 

 

மனம் கவர்ந்தவளின் முக வாட்டத்தை அறிந்தவன் அவள் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு, “நீ என் கூட வாழ வரப்போற. உன்ன அவன் கூடவும் அவன உன்னோடவும் சேர்த்து வச்சு பார்க்க என்னால முடியாது. ஆனா, இந்த அன்புக்கரசன் குமரனோட சொத்து. இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை சங்கடப்படுத்தாம உன் மேல நான் காட்டுற காதலை முழு மனசா ஏத்துக்க. ஒரு நாளும் அவனுக்காக உன்னை காயப்படுத்த மாட்டேன். நீ என்னை நம்பி வந்தவ நான் அவனுக்காக வாழுறவன். ஒருத்தர் இல்லாம ஒருத்தர் வாழ்றது கஷ்டம் இசை.” என்றவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதை கவனித்தவன் என்னவென்று புருவம் உயர்த்த, ஒன்றுமில்லை என்று தலையசைத்து அவன் தலையை கோதி விட்டு சென்றாள். தன்னைப் புரிந்து கொண்டவளை கனிவாக வழி அனுப்பி வை

த்தவனை அழைத்தான் குமரன். இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவன் உடனே அழைத்ததை பார்த்து,

 

“நூறு ஆயுசு! இவனுக்கு சாவே கிடையாது.” என்று விட்டு நகர, அய்யனார் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

தெம்மாங்கு ஒலிக்கும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்