Loading

சீமை 4

“ஏ… தமிழு எங்கப்பா இருக்க?”

“என்னா மதினி விசயம்? நா வயலு பக்கம் வந்து இருக்க.”

“உன் தம்பிமாரு இங்க நடுவீதில மல்லு கட்டிக்கிட்டு இருக்கானுவோ. எவ்ளோ சொன்னாலும் சொல் பேச்ச கேக்காம ஊரு வாயில விழுந்துக்கிட்டு இருக்காய்ங்க. வந்து என்னான்னு கேட்டு அடக்கு தமிழு.”

“இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு மதினி. அண்ணன் கண்ணுல மாட்டி அன்னிக்கு மாதிரி தோல உரிக்க போறாரு.” என்ற கொழுந்தனின் வார்த்தையில் உள்ளுக்குள் உதறல் எடுத்தது ஒளிர்பிறைக்கு.

வழக்கமாக இரு வீட்டின் சின்னஞ்சிறுசுகளும் இடம் பொருள் பார்க்காமல் அடித்துக் கொள்வார்கள். மூத்த அண்ணன்கள் கையில் சிக்கிவிட்டால் கொடுத்த அடிக்கும் சேர்த்து அவ்விருவரும் திருப்பிக் கொடுப்பார்கள். கூடவே வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் மந்திரித்து விடுவார்கள். அந்த பயத்தில் ஒளிர்பிறை நடுங்கிக் கொண்டு,

“உங்க அண்ண வூட்டுக்கு வரனு சொல்லி ரொம்ப நேரம் ஆவுது தமிழு. இவனுங்க பண்றதுக்குமா சேர்த்து எம்முதுகு பழுத்துடும். செத்த வந்து என்னான்னு கேளு.” என்றாள்.

மீதமிருந்த பனைமர பந்துகளை அவசரமாக தூக்கி அடித்தவன் புறப்பட்டான் ஊர் நோக்கி. தெருமுனை எட்டும் போது சத்தம் காதை கிழித்தது. கோபம் கொள்ளாதவன் அழுத்தமான நடையோடு அங்கு விரைந்தான். அண்ணன் வந்ததை கூட அறியாத இமையவன்,

“எங்க அண்ண இன்னிக்கு வரட்டும்டி உன் விலா எலும்ப இருக்க எடம் தெரியாம மாத்த சொல்லுற.” என்று அவன் விலா எலும்பில் ஒரு குத்தை வாங்கிக் கொண்டான்.

“வரட்டுடா உங்க அண்ண வரட்டு. போன தடவ நாங்க தடுக்கலனா எங்க அண்ண உங்க அண்ணன எந்திரிக்க முடியாத படி மாத்தி இருப்பாரு. இந்த தடவ அதுக்கும் சேர்த்து உங்க நாலு பேத்தியும் வெளுக்க சொல்லுற.” என்ற சிலம்பன் செந்தமிழனை பார்த்ததும் கொதிப்பதை நிறுத்தினான்.

“என்னாங்கடா ரெண்டு வூட்டு  மருவாதையும் இப்டி தெரு வீதில வித்திக்கிட்டு கெடங்கீங்க.” பேசும்பொழுதும் கோபம் இல்லாத அழுத்தம் அவன் குரலில்.

மச்சக்காளையனின் இரு தம்பிகளும் அவனைப் பார்க்காத திரும்பிக் கொள்ள, உடன்பிறந்த மூன்று சகோதரர்களும் பயத்தில் தலை குனிந்தனர். இந்த பயம் தன் மீது அல்ல என்பதை நன்கு அறிவான் செந்தமிழன். இருப்பினும் அதை காட்டிக் கொள்ளாமல்,

“இமையா உனக்கு பின்னாடி இருக்குறவங்களை பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு. எனக்கும் அண்ணனுக்கும் அடுத்து நீதான மூத்தவன். அந்தப் பொறுப்ப உணர்ந்து நடந்துக்க.” என்றான்.

“நாங்க எதுவும் பண்ணல’ண்ணே இவனுங்கதா எங்க கிட்ட வம்புக்கு வந்தாய்ங்க.”

“எனக்கு உங்களை பத்தியும் தெரியும் அவனுங்க ரெண்டு பேரு பத்தியும் தெரியும் எழிலு.”

“சத்தியமா அவனுங்கதா ண்ணே பிரச்சனை பண்ண வந்தாய்ங்க”

“உனக்கு என்னாடா வயசாகுது இப்டி சண்ட போட்டுக்கிட்டு கெடக்க. பத்தாவது பரீட்சைல இந்த கேள்வியவா கேட்க போறாங்களா.” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது சிரிக்கும் மொழியனை முறைத்தான் கவிநேயன்.

“உனக்கு என்னாடா சிரிப்பு? நீ என்னா அவ்ளோ பெரிய படிப்பா படிக்குற. அவனை வுட ரெண்டு படிப்பு தான அதிகம்.  உன் பரிச்சையில சண்ட எப்டி போடுறதுனா கேட்க போறாய்ங்க.” மொழியனையும் பேச்சால் கண்டித்தான்.

“இன்னாத்துக்கு எங்களை இப்போ ஏசிட்டு இருக்கீய்க. உங்க தம்பிகளை மிரட்டுறதோட நிறுத்திக்கோங்க.” என்ற சிலம்பனின் வார்த்தையில் தான் செந்தமிழன் முகத்தில் கோபம் தென்பட்டது.

அதை அறிந்தும் கவலை கொள்ளாமல் அவன் நேருக்கு நேராக நின்று முறைக்க, “எனக்கு நீங்க ரெண்டு பேரும் தம்பிங்கதா. இத நீங்களே இல்லினு சொன்னாலும் மாத்த முடியாது. தம்பிக தப்பு பண்ணா கண்டிக்க வேண்டியது அண்ண கடமை. கேக்குறதும் கேக்காம போறதும் உங்க சிலுப்பு.”  என்றவன் பேச்சில் சிலம்பனின் முறைப்பு அடங்கியது.

“இந்தா பாருய்யா தமிழு இந்த வூட்லேயே நீ ஒருத்தன் மட்டும்தே நல்ல குணமுள்ளவனா இருக்க. நீயே தயவு செஞ்சு உன் தம்பிகளை அடக்கி வெச்சிடு. நாளுக்கு நாளு இவனுங்க அட்டகாசம் அதிகமாகிட்டே போவுது. ராத்திரி நேரம் கூட நிம்மதியா தூங்க முடில. எவனாது ஒருத்தன் தோட்டத்துல புகுந்து திருட்டு வேலைய பண்ணிபுடுறான்.”

இந்தப் புகாரை கேட்டதும் சண்டையை மறந்த ஐவர் குழு புகார் கொடுத்தவரை மிரட்டினார்கள் பேச்சால். தம்பிமார்களின் மரியாதை இல்லாத பேச்சில்,

“மருவாதி இல்லாம பேசாதீய்ங்கடா” என அடக்கினான் செந்தமிழன்.

“அந்தாளு எங்களுக்கு திருட்டு பட்டம் கட்டுறான். ஏன்னு கேட்காம எங்களை அடக்குற.” இமையவன்.

“தப்பு பண்ணவே இல்லினாலும் உங்க பேச்சுக்கு உங்களை தாண்டா சந்தேகப்படுவாய்ங்க. ஒரு நாளாது புகார் வராத அளவுக்கு நடந்து இருக்கீய்ங்களா. அப்பனுக்கு பிள்ளைங்க தப்பாம இருக்கோம்னு பேரு வாங்கிட்டு இருக்கீய்ங்க. இதே மாதிரி போச்சுனா அவங்களை மாதிரி நீங்க அஞ்சு பேரும் ஜெயில்ல உக்கார வேண்டியதுதா.”

“தமிழு… உங்க அண்ண வந்துட போறாரு சட்டுனு கிளப்பு எல்லாரையும்.” என்ற சாமந்தியின் பேச்சில் வந்த சிறு துளி கோபத்தையும் அடக்கியவன்,

“நீங்க எதுக்கு மதினி இவனுகளுக்கு நடுவுல நின்னுக்கிட்டு இருக்கீய்ங்க. போயி வூட்ல வேல இருந்தா பாருங்க. அஞ்சு பேத்தியும் கம்மாக்கரைல முக்கி வெளுத்து கூட்டிட்டு வர.” என்றான்.

“நீ இவனுகளை ஒன்னு பண்ண வேணா தமிழு அமைதியா வூட்டுக்கு மட்டும் அனுப்பிவுடு. உங்க அண்ணங்க ஆராது ஒருத்தரு இத பாத்தாலும் எங்க ரெண்டு பேத்தையும் தான் மந்திரிப்பாய்ங்க.” ஒளிர்பிறையின் வார்த்தையில் கவலை கொண்டவன்,

“பாருகடா நம்மளை நம்பி வூட்டுக்கு வந்த பொம்பளைங்க எப்டி பயந்து நடுங்குறாய்ங்கனு. இதெல்லாம் எனக்கு சரியா படல. ஒழுங்கு மருவாதையா எடத்தை காலி பண்ணிடுங்க. இல்லினா நானே ரெண்டு பேத்துக்கும் போன போட்டு சொல்லிடுவ.” என மிரட்டினான் தம்பிமார்களை.

செந்தமிழனை பற்றி நன்கு தெரியும் என்பதால் அவன் பேச்சில் நடுக்கம் கொண்டு கலைந்தார்கள். இருப்பினும் முறைப்பு மட்டும் ஐவருக்கும் அடங்கவில்லை. கலைந்து சென்ற தம்பிமார்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை, “வுடு தமிழு… சரி ஆகிடுவானுங்க.” தேற்றினாள் ஒளிர்பிறை.

ஐவர் குழு கலைந்த பின்னரும் அங்கிருந்த பெருசுகள் இவ்விரு குடும்பத்தையும் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளுக்காக முடிந்த அளவுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தவன் விழிகளில் அவள் வருகை விழுந்தது.

கல்லூரி முடித்து வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி. அவளது பார்வையும் நிலை குத்தி இருந்தது இவன் மீது. மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தவன் உதடுகள் மெல்ல புன்சிரிப்பை வெளியிட, அங்கிருக்கும் அக்கா ஒளிர்பிறைக்கு தெரியாமல் அதை ரசித்தாள்.

இருவரும் காதலிக்கிறார்கள் ஒர் ஆண்டாக. இவ்ஊரில் மெச்சி கொள்ளும்படி இருக்கும் செந்தமிழன் மீது அவளது பார்வை மையம் கொள்ள, சில நாட்களில் அதில் விழுந்தான். கூடவே அண்ணியின் தங்கை என்ற உறவு அதற்கு பலம் சேர்த்தது. இரு குடும்பத்திற்கும் சுமுகமான உறவு இருப்பதால் காதலின் நம்பிக்கை இன்னும் அதிகரித்து முன்னேறி வருகிறது.

“என்னா தேனு இவ்ளோ லேட்டா வர.” என்றதும் கனவில் இருந்து வெளி வராதவள் முழித்தாள்.

“இந்தாடி! எதுக்கு இப்ப நடு வீதில வெட்டப் போற ஆடு மாதிரி முழிக்குற. எதுக்கு இம்புட்டு லேட்டுனு கேட்ட.”

“அது…அது செமினார் வச்சாங்கக்கா. அதா வர லேட் ஆயிடுச்சு.” காதலன் மீது சென்ற பார்வையை அக்கா அறிந்து இருப்பாளோ என்ற பயத்தில் பதில் கூறினாள்.

“சரி வூட்டுக்கு போ.” என்ற ஒளிர்பிறை வீட்டு வேலைகளை கவனிக்க புறப்பட,  “என்னா தேனு என் கொழுந்தன வளச்சி போட திட்டம் போடுற போல.” நோட்டமிட்ட சாமந்தி தைரியமாக கேட்டுவிட்டாள்.

அதிர்ந்த விழியோடு அவள் முகம் பதட்டத்தில் நீர் கோர்க்க, “பயப்படாத தேனு இந்த வூட்ல நீ வேற எவனை பாத்து இருந்தாலும் முதல் எதிரியா நா தான் இருந்திருப்ப. ஆனா, தமிழு  தங்கத்துலயும் தங்கம் சுத்தமான தங்கம். அந்த தங்கத்த கட்டிக்க நீ ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கணும். அவன் கண்ணாலத்துக்கு என் தலைமைல எல்லா வேலயும் நடக்கும் கவலைப்படாத.” என்ற வார்த்தையில் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

மதினி கொடுக்கும் முகபாவணையில் குட்டு உடைந்து விட்டதை கண்டு கொண்ட தமிழ் அங்கிருந்து நாசுக்காக கிளம்பி விட, “ஆமா, எத்தினி நாளா இது போவுது.” விசாரித்தாள் கொழுந்தனின் காதல் கதையை அறிந்து கொள்ள.

“இப்பதா க்கா ஒரு வருசமா.” என்றதும் நெஞ்சில் கை வைத்த சாமந்தி,

“ஆத்தாடி! ஒரு வருசமா இம்புட்டு பேருக்கும் தண்ணி காட்டி இருக்கீய்ங்களா ரெண்டு பேரும். ஊமக்கொட்டான் ஊர கெடுக்குனு இதுக்கு தா சொல்லுவாய்ங்க போல.” என்றாள்.

“அட ஏங்க’க்கா…! நான் பல வருசமா உங்க கொழுந்த பின்னாடி சுத்திக்கிட்டு கெடக்க. மனுச ஒரு வருசமாதா நம்மளை மதிச்சு பாக்குறாரு. அந்தப் பார்வ மாறுறதுக்குள்ள தாலிய கட்டிக்கணுனு வேண்டாத சாமி இல்ல.” என்றவள் பேச்சில் சத்தமிட்டு சிரித்தாள் சாமந்தி.

“ஹா ஹா.. இந்த குடும்பத்துக்கு சண்ட மட்டும்தா போட தெரியும். காதல் எல்லா சுட்டு போட்டாலும் வராது. உங்க மாமா பின்னாடி நா அலையாத அலையா. கடைசியா உங்க அக்கா புண்ணியத்துலதா முந்தானைல முடிஞ்சுக்கவே முடிஞ்சுது.” இந்த விஷயம் புதிது என்பதால் ஆச்சரியத்தோடு,

“என்னா க்கா சொல்றீங்க?” கேட்டாள் தேன்மொழி.

“அப்ப என் விசயம் தெரியாதா உனக்கு.” என்ற உடன்பிறவா அக்காவிற்கு அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“அம்புட்டு ரகசியமாவா என் காதல் கதை இருக்கு…தப்பாச்சே…” தனக்குத்தானே பேசிக் கொண்டவள், “நீ இந்த வாரம் ஞாத்திக்கிழம வூட்டுக்கு வா. நாங்க பண்ண திருட்டு வேலய சொல்லுறோம்.” என கமுக்கமாக சிரித்தாள்.

“நாங்களா…”  சந்தேகத்தோடு இழுக்கும் தேன்மொழிக்கு புன்னகையை பதிலாக கொடுத்த சாமந்தி, “உங்க அக்காவும் மாமனும் காதலிச்சு கண்ணாலம் பண்ணிக்கிட்டாய்ங்க. ஆனா, ஊருக்குள்ள இப்ப வரைக்கும் வூட்டுல பேசி கண்ணாலம் பண்ணதாத்தா புரளி இருக்கு.” என்றாள்.

இப்பொழுது அதிர்ந்து நெஞ்சில் கை வைப்பது தேன்மொழியின் முறையானது. தனக்கே தெரியாமல் உடன் பிறந்தவள் செய்திருக்கும் சாகசத்தை இன்னமும் நம்ப முடியாமல் முழித்த முக பாவாடையோடு நிற்க,

“இதுக்கே வாய பொளக்காத தேனு. இன்னு நாங்க ரெண்டு பேரும் செஞ்ச வேல எல்லாம் கேட்டா தாங்க முடியாது. தெம்பா இருக்க ஒரு நாளு போன போடு.” என அவளும் புறப்பட்டாள் அங்கிருந்து.

சாமந்தி சென்றதும் இளையவளின் பார்வை காதலனை தேடியது. இல்லாமல் போனவனை எண்ணி யோசனையோடு வந்தவள் புன்னகைத்தாள் மறைந்து நின்று தன்னை பார்க்கும் செந்தமிழனின் காதலில்.

****

சீமை 5

“ஆரு சம்பவம் பண்ணி இந்த ஊரு கதறுதோ அவன் தா சிலம்பன்.” பஞ்ச் டயலாக் பேசியவன் முகத்தை சுழித்துக் கொண்டு, “நம்ம ரேஞ்சுக்கு இந்த டயலாக் சுலுவா இருக்கே. வேற ஏதாச்சும் மாஸா பாப்போம்.” என்று எதையோ தேடிக் கொண்டிருந்தான் கைபேசியில்.

அவனுக்கு தோதாக பஞ்ச் டயலாக் ஒன்று சிக்கிக் கொள்ள, “நா திமிரு புடிச்சவ இல்லிடா திமிருக்கே புடிச்சவ.” என்ற வரியை முகபாவனையோடு பதிவு செய்து கொண்டிருந்தான் கைபேசியில்.

எல்லாம் நவீன காலத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் டிக் டாக் மோகம் தான். அடி வாங்கிய காயங்கள் உடம்பில் இருந்தாலும் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் தான் வைத்திருக்கும் முகப்பு புத்தக கணக்கில் பதிவேற்றும் வேளையில் ஈடுபட்டான்.

பதிவு செய்தவன் அடுத்த நொடியே ஆராய்ந்தான் விருப்பங்கள் குவிந்திருக்கிறதா என்று. அவன் வேகத்திற்கு யாரும் ஈடு கொடுக்காமல் போனதால்,

“சிலம்ப நடிப்ப பாத்து பல பேத்துக்கு பொறாம போல. அதா ஒரு பையலும் பெரும பேசாம என்னை பின்னுக்கு தள்ள பாக்குறாய்ங்க. இந்த சண்டியா வம்சம் அதுக்குலா அசந்து போற ஆளு கெடயாது. வரேண்டி மாப்பிள்ளைகளா அடுத்த டிக் டாக்கோட.” எதிரில் என்னமோ அவனை ஒரு கூட்டமே பார்த்துக் கொண்டிருப்பது போல் சபதம் செய்தான்.

“ஆ..! நம்ம ரேஞ்சிக்கு இந்த பன்ச் தான் பக்காவா பாயும்.” எதையோ ஒன்றை தேர்வு செய்து மார்தட்டி கொண்டவன் அந்த வசனத்திற்கு ஏற்றவாறு முகபாவனை காட்ட,

“எடேய்….” என்றவாறு அவன் முதுகின் மீது மோதினான் மொழியன்.

மோதிய வேகத்தில் கைபேசி கீழே விழுந்துவிட, வெறியேறியது சிலம்பனுக்கு. சற்றும் குறையாத கோபத்தோடு, “கிறுக்கு பயலே! என்னாடா பண்ணி வச்சிருக்க.” என கழுத்தை நெறித்தான்.

இறுக்கமாக பிடித்திருக்கும் கழுத்தை விடுவிக்க போராடியவன் முடியாமல் போனதால் அண்ணனின் தலை முடியை இழுத்தான். திடீர் தாக்குதலில் சோர்ந்த சிலம்பன் அவன் கழுத்தை விடுவித்து குனிய, உயிர் பிழைத்த நிம்மதியில் ஒதுங்கி நின்றான் மொழியன்.

“எடேய்! உனக்கு எம்புட்டு அழுத்தோடா என் மேல கை வெக்குற அளவுக்கு. என் முடி மேல கைய வெச்ச உன் கைய ஒடைக்காம இந்த சிலம்ப இன்னிக்கி ராத்திரி சாப்ட மாட்டாடா.” தள்ளி நிற்கும் தம்பியின் தலைமுடியை எகிறி பிடித்தவன் இரு கால்களுக்கு நடுவில் வைத்து முதுகில் மத்தளம் வாசித்தான்.

“அட நாசமா போறவனே…சொல்ல வந்தத சொல்ல வுடுடா.”

“என்னாடா சொல்ல வந்த? எதுவா இருந்தாலும் அடி வாங்கிட்டே சொல்லு.”

சிலம்பா நம்ம உயிரு போவ போவுதுடா.” அரைகுறையாக கதறினான் வீட்டின் கடைக்குட்டி.

“நம்ம உசுரு இல்லிடா உன் உசுரு. தம்பி ஆச்சேன்னு பக்கத்துல பதமா வெச்சிருந்தா நீ என் தலை முடிய புடிக்குற குரங்கு பயலே. அவனுங்க மூணு பேத்தியும் வுட்ட கடுப்பு மொத்தத்தையும் உன் பக்கம் திருப்புறே… உன் தலையயும்  திருப்புறே..” சரியான பஞ்ச் டயலாக்குக்கு பிறந்தவன் போல ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி அடித்தான்.

அடிப்பதை விட அவன் பேசுவது தான் மிகவும் வலித்தது மொழியனுக்கு. “எனக்கு முன்னாடி பொறந்த முட்டா கொரங்கே சொல்றத கேளுடா.”

“ஆரடா முட்டா கொரங்குனு சொன்ன…. மல கொரங்கு.”

“எடேய் சொல்றதை கேளுடா”

“நீ செத்து மேல போடா நா வாழ்ந்து முடிச்சு செத்ததுக்கு அப்புறம் வந்து கேட்டுக்குற.”

“முட்டா பயலே வாய்ல அடிக்காதடா.”

“அப்ப அதுல தான்டா அடிப்ப மல கொரங்கு.” என்றவன் சிறியவனின் வாயில் விடாமல் அடித்துக் கொண்டிருந்தான்.

வலி பொறுக்க முடியாத மொழியன் அண்ணனின் தொடையை நாய் கடிப்பது போல் குதற, “ஆஆஆஆ…. எடேய்! கறிக்கு செத்த நாயீ… வுடுடா… என்னை வுடுடா. ஐய்யோ… வலிக்குது வுடுடா….

ஆத்தாடி வெறி நாய் தொட கறிய தின்னு தீத்துடும் போலயே. நார பயலே நா உன் அண்ணடா கொஞ்சமாது பாருடா ஐய்யோ… ஐய்யோ வலிக்குதே…” தம்பியின் அசுர வேகத்தில் நிலை குலைந்து போனான்.

போதும் என்ற வரை தன் பல் தடத்தை அண்ணனின் தொடையில் பதித்த மொழியன் அவனைத் தள்ளிவிட்டு, “முட்டா பயலே இதுக்கு தான்டா அந்த மூணு பேரும் உன்ன சமயம் கெடைக்கும் போது சம்பவம் பண்றாய்ங்க. பம்ம அடிக்கப் போன நம்ப அண்ண ஊரு திரும்பிடுச்சிடா….” தம்பியின் செய்கையில் வெறிகொண்ட வேங்கையான சிலம்பன் அவனை தாக்க வர, கேட்ட விஷயத்தில் சிலையானான் இருந்த இடத்தில்.

 

“இத சொல்ல வந்த என்னை குனிய வெச்சு கும்முற முட்டாப் பயலே.” என்றவன் பேச்சில் உயிர் பெற்றவன், சிறியவனை கண்ட மேனிக்கு அடிக்க ஆரம்பித்தான்.

அண்ணன் வந்த செய்தியை சொல்லி நடு அண்ணனை காப்பாற்ற வந்த தன்னை எதற்காக அடிக்கிறான் என்ற குழப்பத்தில் கேள்வி கேட்க,

“நாயே! மல கொரங்கு நாயே… என்னாடா சொன்ன…ஆஹான்… அண்ண வர நாலு நாளு ஆவுனு சொன்ன இல்லிடா. அப்புறம் ஏன்டா அவன் வந்தான்? என்னை நம்ப வெச்சு ஏமாத்துனியாடா. அந்த விருமாண்டி வரமாட்டானு நம்பி தானடா அவனுங்க கிட்ட சம்பவம் பண்ண. இப்ப என்னைய சம்பவம் பண்ணிபுடுவானே நா என்னா பண்ண.” என்று வெளுத்து விட்டான் அவன் முதுகை.

“சத்தியமா அவன் வர நாலு நாளாகுனுதா என் காதுக்கு சேதி வந்துச்சு.”

“எந்த காதுலடா வந்துச்சு?” அடிப்பதை நிறுத்தியவன் ஒரு மார்க்கமாக கேட்க, அப்பாவி மொழியன் வலது காதை காட்டினான்.

அடுத்த நொடி காட்டிய காதை இரு கையாலும் மூடிக் கொண்டான். சிலம்பன் அடித்த அடியில் காது தனியாக வந்தது போல் உணர்ந்தவன் அணை கட்டினான் கைகளால். இரக்கம் பார்க்காதவன் தம்பியின் காதில் மீண்டும் அடித்து,

“தப்பா கேட்ட இந்த காது இனி கேக்கவே கூடாதுடா.” என்றான்.

“எடேய்! காப்பாத்த வந்த என்னை இப்டி அடிக்குறியே நீ எல்லா நல்லா இருப்பியாடா.”

“உன்ன காது கேக்காம ஆக்கிட்டா நா நல்லா இருப்படா.” என்றவன் சும்மா இருந்த இடது காதையும் அடித்தான்.

“முட்டா குரங்கு எதுக்குடா இந்த காதுல அடிச்ச.” மற்றொரு காதும் பாழாய் போனதில் நொந்து கொண்டே மொழியன் கேட்க, “அடுத்த தடவ இந்த காது சரியா கேக்காம எனக்கு சங்கூத பாத்துட கூடாதுல அதுக்கு தான்.” என்று மீண்டும் அடித்தான்.

அண்ணன் தம்பி இருவரும் வீட்டின் பின் இருக்கும் தோப்பில் உருண்டு புரண்டனர். யார் யாரை தாக்குகிறார்கள் என்பது கூட அறியாத வகையில் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்களை சேதப்படுத்திக்கொள்ள, ஏற்கனவே சேதமான உடல் அழுது புலம்பியது. அண்ணனை கீழே தள்ளி வயிற்று மீது அமர்ந்த மொழியின்,

“எடேய்! இந்த மொழியன் கிட்ட வம்பு வெச்சுக்கிட்ட… நார் நார கிழிச்சி ஆட்டு கூட்டத்துக்கு தீனியா போட்டுடுவ.” என்றிட, மூச்சு வாங்க படுத்திருந்தவன் தம்பியின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளினான்.

“வாடா வா நா குடிச்ச எச்சி பால குடிச்சு வளர்ந்த மல கொரங்கே. ஆரு ஆர கிழிக்கிறாய்ங்கனு பாப்போ, வாடா.” என்றான்.

உள்ளே அடுப்பங்கரையில் இருந்த சாமந்தியின் செவியில் இவர்களின் குரல் லேசாக கேட்க, அடுப்பை நிறுத்தியவள் கவனிக்க ஆரம்பித்து, அதிர்ந்தாள். “ஐய்யயோ! இவனுங்க எனக்கு சங்கு ஊதிடுவானுக போலயே.” என்ற அதிர்வோடு வெளியில் ஓடி வர, அவளது அன்பு கணவன் மச்சக்காளையன் வீட்டில் கால் வைத்தான்.

கணவனைப் பார்த்ததும் சடார் என கீழே அமர்ந்தாள். யாருடனோ கைபேசியில் உரையாடிக் கொண்டு வந்தவன் மனைவியை பார்க்காது திண்ணையிலேயே அமர்ந்து கொள்ள, “எத்தே! என் புருச வீட்டுக்குள்ள வந்துட்டாரே… இன்னிக்கு நா செத்த சாமி.” என்று தலையில் கை வைத்தாள்.

மனைவியின் குரல் கேட்டதோ என்னவோ கைபேசியை காதில் இருந்து விலக்கியவன், “ஏய்!” என புலி போல் உரும, சுவற்றில் அடித்த பந்து போல் எழுந்தவள் கால் இடறி மீண்டும் அமர்ந்தாள்.

மனைவியின் செய்கையில் விழிகள் கூர்ந்து நோக்க, அந்தப் பார்வை குலை நடுங்க வைத்தது பார்த்தவளுக்கு. கைபேசியை அணைத்தவன் அவளிடம் நெருங்க, இரண்டு கண்கள் நான்கு கண்கள் ஆனது முழித்த முழியில்.

“என்னா விசயம், முழி பலமா இருக்கு. சேதி என்னா?” என்றவனுக்கு உதடுகள் பதில் அளித்தது தந்தியடித்து.

உதறல் எடுக்கும் உதட்டின் மீது பார்வையை பதித்தவன், “களவாணி என்னாடி திருட்டுத்தனம் பண்ணி இருக்க.” விசாரிக்க, பயந்த விழிகள் முறைத்து பஸ்பம் ஆக்கியது கணவனை.

அவள் பார்வைக்கு சிறிதும் சளைக்காமல் மச்சகாளையன் முறைக்க, “என்னா களவாணினு சொல்லாதீங்கன்னு எத்தினி தடவ சொல்றது. அப்டி என்னாத்த களவாணித்தனம் பண்ணி உங்களை ஏமாத்திட்டாய்ங்க.” முறைப்பு இன்னும் அடங்கவில்லை அவளிடம்.

“ஊரு உலகத்துல உன்ன மாதிரி களவாணித்தனம் பண்ற தைரியம் எந்த பொம்பளைக்கும் இருக்காது. ஊரு முன்னாடி பழகி ஏமாத்திட்டான்னு பட்டம் கட்டுன களவாணி சிறுக்கி தான நீ.” என்றவன் முகத்தில் ஏமார்ந்த வலி இன்னும் தெரிந்தது.

அதை உணர்ந்தாலும் தன்னை ஒத்துக் கொள்ள மறுத்தவள், “ஆயிரம் பொய் சொல்லி கண்ணாலம் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க, தெரியாதா உங்களுக்கு. நா ஒன்னு ஆயிரம் பொய் சொல்லல .உங்களை கட்டிக்கணுனு ஒரே ஒரு பொய் சொன்ன. அதுக்கு பேரு களவாணித்தனம் இல்ல என் புருச உங்க மேல வெச்சிருக்க காதல்.” என்றவள் பேச்சு திடுக்கிட்டு நின்றது கை உயர்த்திய மச்சக்காளையின் செய்கையில்.

அவன் அடிக்க மாட்டான் என்பது தெரிந்தாலும் கை உயர்த்தும் பொழுது அதிர்வதை நிறுத்த முடியவில்லை அவளால். திருமணம் ஆகி பதினான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அன்று ஊர் சபைக்கு முன்னால் கை உயர்த்தியவன் இன்றுவரை தன் செய்கையை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறான். கணவனின் வழியை பின்பற்றும் மனைவி அதிர்வதையும் மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாள்.

உயர்த்திய கையை கீழே போட்டவன், “எனக்கு ஏமாத்துறவங்களை சுத்தமா புடிக்காது. தாலிய வேணா கட்ட வெச்சிபுடலாம். என் மனசுல உனக்கு என்னிக்கும் கோட்ட கெடயாது.” அழுத்தமான நடையோடு அவளை விட்டு விடை பெற, கீழ் இமையின் ஓரம் நீர் தேங்குவதை உணர்ந்தாள் சாமந்தி.

அவை கன்னத்தை தொடுவதற்கு முன் கல்லணை கட்டி உள்ளுக்குள் இழுத்தவள், “கோட்ட கெடைக்கணுனு ஆசைப்படல மாமா. உங்க மனசு கெடச்சா போது. கோட்டைய வுட ஒசரமான கோபுரத்த கட்டி அம்மனா ஜொலிச்சுடுவ. இன்னொரு தரம் இந்த மாதிரி பேசாதீங்க. எனக்கு அழுக வர மாதிரி இருக்கு. கட்டிக்கிட்டவ அழுதா கட்டுனவ உங்களுக்கு மருவாதி இருக்காது.‌” தன் வார்த்தைக்கு என்ன பதிலளிப்பான் என்பதை நன்கு அறிந்தவள் கண்டும் காணாமலும் நகர்ந்து விட்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் செவியில், “எட்டு மாசமா என்கூட ஆத்தங்கரை, குளம், குட்டன்னு பழகிட்டு அத்துவுட பாக்குறாரு. இவரு கையால தாலி கட்டலன்னா நாளைக்கு என் பொணத்த தான் இந்த ஊர் சபை பாக்கும்.” என்ற மனைவியின் வீண் பழி தான் ஓடியது.

****

சீமை 6

பாதியில் நிறுத்திய சமையலை தொடங்கியவள் கணவனை மனதில் அர்ச்சித்துக் கொண்டே சட்டியில் இருந்ததை வதக்கினாள். இவ்வளவு மாதங்கள் கடந்த பின்னும் வீம்போடு இருக்கும் கணவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருக்க, “யம்மா அய்யய்யோ….” என்ற ஓசை கொழுந்தன்கள் பக்கம் திருப்பியது.

தலையில் அடித்துக் கொண்டு சமையலறை விட்டு வெளியில் ஓடி வர, சத்தம் கேட்டு அவள் கணவனும் வந்தான். “என்னா அங்க சத்தம்?” வினா எழுப்பிட,

“பக்கத்து வூட்டு ராமசாமி அண்ணனுக்கு முதுகுல சுளுக்கு புடிச்சிருச்சு. நேத்துல இருந்து இப்டித்தா கத்திக்கிட்டு கெடக்காரு. நீங்க உள்ள போங்க நா என்னான்னு பாத்துட்டு வந்துடுற.” என சமாளித்தாள்.

நான்கு நாட்களாக தோளில் மாட்டிக் கொண்டு பம்பை அடித்ததால் உடல் அசதியில் மறு கேள்வி கேட்காமல் உள்ளே சென்று விட்டான். கணவன் போனதும் இழுத்த மூச்சை வெளியிட்டு நிம்மதி அடைந்தவள்,

“இந்த தறுதலைங்களை என் கால்ல கட்டிட்டு நீ நிம்மதியா போயிட்ட.” புகைப்படத்தில் இருக்கும் மாமியாரை திட்டினாள்.

புலம்பிக்கொண்டே வேகமாக பின்னால் இருக்கும் வரப்பு தோட்டத்திற்குச் சென்றவள் புசுபுசுவென்று மூச்சை இழுத்து விட்டாள். மதினியின் வரவை அறிந்து கொள்ளாத கொழுந்தன்கள் வாழை மரத்தை படாதப்பாடு படுத்திக் கொண்டிருந்தனர்.

சின்னவன் அண்ணனின் அடியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பிக்க, சிறியவன் தாக்குதலில் பெருத்த அவமானத்திற்கு ஆளான சிலம்பன் தம்பி என்பதையும் மறந்து பதில் தாக்குதல் கொடுத்தான்.

இவர்களுக்கு நடுவில் பாவம் வாழை மரம் ஒன்று சிக்கிக் கொள்ள, வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனும் அதை சுற்றி வளைத்தார்கள். சிலம்பனின் கை வாழை மரத்தோடு சேர்த்து மொழியனின் தலையைப் பிடித்திருக்க, தம்பியின் கைகள் அதே வாழை மரத்தோடு அண்ணனின் முதுகை கீறிக் கொண்டிருந்தது.

சில நேரம் புயல் அடித்தாலே தாங்காத குழந்தை மனம் கொண்ட வாழைமரம் இரு எருமை மாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டதில் தடுமாறி உயிரை மாய்த்துக் கொள்ளவே முடிவெடுத்து விட்டது. அதன் பலனாக வேர் ஒரு பக்கமா பிடுங்கிக் கொள்ள, அதைக் கூட உணராமல் மறுபக்கம் வேரை பிடுங்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

“இந்தாடா மல மாடே…..இது மதினி வெச்சது வுடுடா.”

“எரும மாட்டு பயலே நானாடா புடிச்சிருக்க நீ வுடுடா.”

“அண்ணன்கார கிட்ட மருவாதி இல்லியாடா உனக்கு.”

“பெரிய மீசை வெச்சிருக்க விருமாண்டியவே நா அண்ணனா மதிச்சது இல்ல. நீ ஆருடா கோமாளி.”

“எட்டி மிதிசன்னா குடலு தனியா வந்துருடா தம்பி.”

“அதுக்கு முன்னாடி என் கையாலயே உன் குடல உருவி சுடலைமாடனுக்கு காவு குடுத்துடுவடா முட்டா கொரங்கு.”

“அண்ண வரதுக்குள்ள உன் வாய ஒடைச்சா தான்டா எனக்கு நிம்மதி.”

“அண்ண எப்ப வருதுனு கூட தெரியாத நீ எல்லாம் வெட்டி பந்தா காட்டாதடா கிறுக்கு பயலே.”

“சொன்னா கேளுடா சிலம்பனுக்கு வெறி ஏறுது.”

“வெறி புடிச்சிடுச்சா….அப்போ மாட்டு ஊசி போட்டு அடக்குறடா கவலப்படாத.”

“எடேய்” என ஆக்ரோஷமாக சிலம்பன் கர்ஜித்துக் கொண்டு தம்பியின் தலைமுடியை பற்றி இழுக்க, “அட சண்டால பயலே! உடுடா எ…. முடிய.” என்று தன் பக்கம் இழுத்தான் அண்ணனை.

இருவருக்கும் நடுவில் அப்பாவியாக மாட்டிய அந்த வாயில்லா ஜீவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வேரோடு புடுங்கிக் கொள்ள,  அண்ணன் தம்பி இருவரும், “ஆத்தாடி…யம்மோய்ய்.” அலறியவாறு விழுந்தார்கள் நிலத்தில்.

இவ்வீட்டிற்கு வந்ததும் சாமந்தி வைத்த வாழைமரம் அது. வரதட்சணையாக கொண்டு வந்த வாழை மரத்தின் உயிரை இரண்டு குள்ள நரிகள் பறித்துவிட்டதில் கட்டுக்கடங்காத கோபம் அவள் மனதில்.

“அட நாசமா போறவய்ங்களா…! என்னாத்துக்குடா அத இப்டி பண்ணிங்க. இந்த வூட்டுக்கு வாழ வந்து நா நாசமா போன மாதிரி இதியும் நாசமாக்கிட்டிங்க. படுபாவிகளா இது என்னாடா உங்களுக்கு பாவம் பண்ணுச்சு.” இருவரின் முதுகிலும் அடை சுட்டாள் பாரபட்சம் பார்க்காமல்.

“மதினி நா உங்க செல்ல கொழுந்தனாக்கும். இப்டி எல்லாம் அடிக்க கூடாது.” சாமந்தியின் கோபம் புரியாமல் சிலம்பன் நேரம் பார்த்து வெறுப்பேற்ற, “ஏதாச்சு பேசுனா சோத்துல விசம் வெச்சிருவேன்டா கிறுக்கா.” என்றாள்.

“அந்த நல்ல காரியத்தை முதல்ல பண்ணுங்க மதினி. இவன வெச்சுக்கிட்டு இருந்தோம் இந்த ஒரு வாழமரம் இல்ல மொத்த வாழ மரமும் சரிஞ்சு போய்டும்.”

“வாய மூடுடா செனப்பன்னி. வயசுக்கேத்த வேலய என்னிக்கும் நீ பண்ண மாட்டியா. அவனுக்கு வெக்குறதுக்கு முன்னாடி முதல்ல உனக்கு சோத்துல விசம் வெக்கணுடா.” என்றதில் வாயை மூடிக் கொண்டான் மொழியன்.

அதன் பின்னும் நிறுத்தவில்லை சாமந்தி. விடாமல் இருவரையும் திட்டிக்கொண்டே இருந்தாள். அவ்வளவு திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தாலும் இன்னும் அந்த வாழை மரத்தை விடாமல் பிடித்துக்கொண்டு தரையில் படுத்திருக்கிறார்கள்.

“அட ச்சீ! வுடுங்கடா அத. பொண்டாட்டி மாதிரி கட்டி புடிச்சுக்கிட்டு.” என்றதும் இருவரும் வாழை மரத்தை விட்டு நகர்ந்து படுக்க, “வாழ குல தள்ள போற நேரத்துல இப்டி குத்துயிரா கொர உயிரா மண்ணுல சாச்சிட்டீங்களேடா பாவிங்களா.” என்று படுத்திருந்த இருவர் முதுகிலும் மீண்டும் அடை சுட்டாள்.

“என்னா மதினி அண்ண தான் எங்களை அடிக்குதுனு பாத்தா இப்ப நீங்களும் அடிக்குறீங்க. கேக்க ஆளு இல்லாத பசங்கன்னு ஆளாளுக்கு அடிக்கிறீய்ங்களா.” என்றதும் அடிப்பதை நிறுத்தியவள் முறைத்தாள்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலம்பன், “என்னாதா சொல்லு அண்ண அடிக்குறத வுட மதினி அடிக்குறதுலதா அதிக பாசம் தெரியுது எனக்கு.” என ஒரு கிலோ சர்க்கரைப்பாகை தலையில் ஊற்றினான்.

“மதினி அவன் உங்களை கைக்குள்ள போடப் பாக்குறா நீங்க அடங்கிடாதீங்க. உங்களுக்கு ஒரே ஒரு கொழுந்த… அதுவும் இந்த செல்ல கொழுந்த மொழியன் மட்டும்தா இருக்கா. இந்த நாதாரி பையன் பேச்சைக் கேட்டு அடிக்குறத நிறுத்திடாதீங்க, இன்னும் நாலு போடுங்க.”

“என்னாத்துக்குடா இப்டி அடிச்சுக்கிட்டு சாகுறீக அங்காளி பங்காளி மாதிரி.”  இருவரையும் முறைத்துக் கொண்டு கேட்டாள்.

“இவன் மட்டும் எனக்கு அங்காளியா போயிருந்தா… எப்பவோ மேல அனுப்பி இருப்ப மதினி. தம்பியா போனதுனால தப்பிச்சிட்டா கொரங்கு.”

“இவனுக்கு எப்ப பாரு காமெடியா பேசுறதே பழக்கம் மதினி.” நாசுக்காக சிலம்பனை அவமானப்படுத்தினான் மொழியன்.

“கூறு கெட்டவகளா உங்க அண்ண இப்பதான் வூட்டுக்குள்ள நுழைஞ்சாரு. அவரு கண்ணுல சிக்கி தோல பழுக்க வெச்சிக்காம எங்கயாது போய் தொலைய்ங்கடா.” என்றதும் இருவரும் பதறி அடித்து எழுந்து நின்றார்கள்.

“எடேய்! விருமாண்டி வந்துட்டாண்டா… இன்னிக்கு நம்ம கத முடிஞ்சுது. போச்சு… ஐய்யோ… ஓவரா ஆடிட்டோமே….” மொழியன் கதறி முடிக்கவும், மச்சக்காளையன் சிலம்பன் முதுகில் ஓங்கி மிதிக்கவும் சரியாக இருந்தது.

குப்புற விழுந்தவன் முகம் எல்லாம் ஒரே மண்ணு. விழுந்த நடு அண்ணனின் நிலையை கூட எண்ணாமல் ஓட்டம் பிடித்தான் மொழியன். சின்னவன் ஓடுவதை அறிந்தவன்,

“எடேய்! நீயா வந்துட்டா அடி கம்மி நானா புடிச்ச நடக்க நாலு நாளு ஆகிபுடும்.” என மிரட்டினான்.

எவ்வளவு மிரட்டல் விடுத்தாலும் சிக்க மாட்டேன் என்ற தோரணையில் அவன் அங்கிருக்கும் இன்னொரு வாழை மரத்தை துணைக்கு அழைக்க, விழுந்த சிலம்பன் எழவே இல்லை அண்ணனுக்கு பயந்து.

கணவன் வந்ததும் சாமந்தி பதமாக எழுந்து நின்று கொள்ள, “அர்த்த ராத்திரில இங்க என்னாடா பண்ணிக்கிட்டு கெடக்கிறீய்ங்க. வூட்ல மதினி தனியா இருக்குமேனு துணைக்கு இல்லாம வாழ மரத்த கட்டிப்புடிச்சு படுத்துக்கிட்டு கெடக்கீங்க.” மொழியனை பிடிக்க நகர்ந்து கொண்டே பேசினான்.

சிக்கினாள் முதுகு தோல் அண்ணன் கையோடு வந்து விடும் என்ற பயத்தில் அவன் வாழை மரத்தை சுற்றி வர, தாவி பிடித்தவன் ஓங்கி மிதித்தான் சங்கில். அலறினால் இன்னும் அடிப்பான் என்பதற்காக வாயை மூடிக்கொண்டு மொழியன் அமர்ந்து விட, அவன் எண்ணி பயந்தது போல் முதுகு தான் சிக்கியது.

கணக்கில்லாமல் ஓங்கி மச்சக்காளையன் மிதிக்க, “மாமா சின்ன புள்ள தாங்காது” என தடுத்தாள் சாமந்தி.

கோபம் மட்டுமே இருந்த முகத்தில் உஷ்ண ரேகைகள். அடிப்பதை நிறுத்தியவன் மனைவியை கார விழியோடு தாக்க, “சின்ன புள்ள மாமா உடம்புக்கு நோவு வந்துட போவுது.” இந்த முறை பயந்து கொண்டே பேசினாள்.

“நா இல்லாத நேரம் இவனுங்களை அடக்கி வெக்க தெரியாதா உனக்கு. வெளிய எக்கேடோ போங்கடானு அனுப்பி வுட்டுட்டு இப்ப வந்து நடிக்குற. அண்ண தம்பி பிரச்சனைக்கு நடுவுக்குள்ள வராத.” என்ற வசனத்தில் அவள் ஆதரவை முறித்தான்.

அசையாமல் படுத்துக் கொண்டிருந்த சிலம்பன் மதினி திட்டு வாங்குவதை பொறுக்க முடியாமல், “மதினி ஒன்னு பண்ணல எல்லா வேலயும் பண்ணது நாங்கதா. அவங்களை ஒன்னு வையாத.” தானாக மச்சக்காளையன் வைத்த பொறியில் சிக்கினான்.

“அப்டி என்னாடா பண்ணிங்க உங்க மதினிய வையாத அளவுக்கு.” என்ற கணவனின் கேள்வியில் கொழுந்தனை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வெறிக்கொண்டு முறைத்தாள் சாமந்தி.

வாய்விட்டு மாட்டிக்கொண்டதில் பம்பிய சிலம்பனின் கழுத்தைப் பிடித்தவன் இரக்கம் பார்க்காமல் குனிய வைத்து வயிற்றில் மிதிக்க, இந்த முறையும் சாமந்தி தான் வந்து தடுத்தாள்.

இவர்கள் இருவரையும் மறைமுகமாக ஆதரிக்கும் திறவுகோல் மனைவி என்பதை நன்கு அறிவான் அவன். ஒவ்வொரு முறையும் தொழிலுக்காக வெளியூர் செல்ல நேர, போகும்பொழுது தவறாமல் சொல்லிவிட்டு செல்வான் இருவரையும் கவனிக்குமாறு. கவனிப்பவள் அவர்களுக்கு ஆதரவாக அனைத்தையும் மறைத்து விடுவாள் கணவனிடம்.

மறைக்கும் சாமர்த்தியம் கொழுந்தன்களிடம் இல்லாமல் போக வந்த ஓரிரு நாளுக்குள் சிக்கி விடுவார்கள். தம்பிமார்களை அடித்து துவைப்பவன் மனைவியை வார்த்தையால் சாயம் வெளுப்பான்.


விட்ட வார்த்தையில் சிக்காமல் இருக்க சில குரளி வித்தையை காட்ட, விடுவதாக இல்லை மச்சக்காளையன். விடாமல் இருவரையும் ஓட விட்டு அடித்தான் அந்த தோப்பில்.

அண்ணன் எட்டி உதைத்ததில் மொழியன் விழுந்தான் சிலம்பன் மீது. தன் மீது விழுந்தவனை, “கிறுக்கா நானே உடம்பு நோவோட கெடக்க. எதுக்குடா என் மேல வந்து பாயுற” என தள்ளிவிட, மச்சக்காளையன் மீது விழுந்தான் சிறியவன்.

இளையவனை விட்டவன் நடுவனை வாவென்று அழைக்க, “வந்தா நீ அடிப்ப, நா வரமாட்ட.” என பின் நகர ஆரம்பித்தான்.

பயத்தில் நின்றிருந்த மொழியனின் இடுப்பில் ஓங்கி மிதித்த சாமந்தியின் கணவன், “அவனை என்கிட்ட தள்ளி வுடுடா” என்று தூது விட்டான்.

தன்னை அடி வாங்க வைத்த நடு அண்ணனை பழித்திருக்க எண்ணியவன் பாய்ந்து பிடித்து அண்ணனிடம் தள்ளிவிட, மச்சக்காளையன் மீது விழுந்தவன் சாமர்த்தியமாக தம்பியையும் பிடித்துக் கொண்டான்.

தப்பிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய சாமர்த்தியத்தை மாட்டிக் கொள்வதற்கு அண்ணன் தம்பி இருவரும் பயன்படுத்திக் கொள்ள, நல்ல வாய்ப்பாக அமைந்தது மச்சக்காளையனுக்கு. இருவரையும் பாரபட்சம் பார்க்காமல் வாழை மர தாரை வைத்து வெளுத்து விட்டான்.

மொழியன் விலகினால் சிலம்பன் பிடித்து வைத்துக்கொள்ள, அவன் விலகினால் இளையவன் பிடித்து வைத்துக் கொண்டான். ஆக மொத்தம் இருவரும் கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருக்க, கட்டி வைத்து அடிக்க வேண்டிய வேலை மிச்சமானதால் தன் வசதிக்கேற்ப பிரட்டி எடுத்தான் தம்பிகளை.

கொழுந்தன்களின் சத்தத்தை கேட்க முடியாத சாமந்தி வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பி விட, “மதினி வுட்டுட்டு போறீங்களே… உங்க செல்ல கொழுந்த உசுர காப்பாத்துங்க மதினி…..” என்ற சத்தம் காதை எட்டியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்