208 views

அத்தியாயம் 2

குடும்ப உறுப்பினர்கள் இப்படி கலகலப்பாகப் பேசிச் சிரித்து வளைய வந்தாலும், கடுப்பான முக பாவனைகளை வைத்துக் கொண்டு தன்னை எந்நேரமும் முறைத்துப் பார்க்கும் கணவன் பிரித்வியைப் பார்க்கையில் இன்னும் சிரிப்பு வந்தது அதிரூபாவிற்கு.

லயாவை முறைத்துக் கொண்டே இருந்தப் பிரித்வியைப் பார்க்கத் திகட்டவில்லை அவளுக்கு.

அதனாலோ, என்னவோ அவனை இனி அடிக்கடி  சீண்டிப் பார்க்க விரும்பினாள்.

வேலையாட்களுடன் சேர்ந்து , சகுந்தலாவும், லயாவும் சமையல் செய்து கொண்டு இருக்கத் தான் மட்டும் இங்கிருப்பது சரியல்ல என்று எழுந்தாள்.

“என்னாச்சும்மா?” என்ற மகேஸ்வரனிடம்,

“கிச்சனுக்குப் போகனும் மாமா. அத்தையும், லயாவும் அங்கே இருக்காங்க.நானும் அவர்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்”

என்று கூறினாள்.

“சரிம்மா.போம் ஹெல்ப் பண்ணு” அவர் கூறவும்,

அதிரூபா கணவனைப் பார்த்தாள், அவனோ இவளைப் புருவம் உயர்த்திப் பார்த்து, ‘ சமையலில் ஹெல்ப் லாம் பண்ணுவியா நீ?’ என்று கிண்டலாகப் பார்த்தான்.

‘எனக்கு குக்கிங் தெரியாதுன்னு நினைச்சுட்டான் போல..!’ அவனது கேலியைப் பொருட்டாகவே எடுக்காமல், சமையலறைக்குள் போனாள் அதிரூபா.

அங்கே காய்கறிகள் வெட்டிக் கொண்டு இருந்த லயா இவளைப் பார்த்ததும்,

“அண்ணி இங்க விஜயம் தந்தாச்சு” என்று அழகாய்ச் சிரித்தாள் லயா.

“லயாம்மா அண்ணியைக் கிண்டல் பண்ணாத” என்று கூறிக் கொண்டே மருமகளிடம் திரும்பினார் சகுந்தலா.

“ரூபா! வீட்டுக்கு வந்த அன்னைக்கே சமையல் வேலையைப் பாக்கச் சொல்ல வேணாம்னு நினைச்சேன். நீ வெளியே இரு. நாங்க சமைச்சிட்றோம்”

“இல்லத்தை.நானுமே இங்க ஒருத்தி ஆகிட்டேன். அப்படி இருக்கும் போது உங்க கூட சேர்ந்து சமைக்குறது எனக்கு ஹேப்பியா தான் இருக்கும். ப்ளீஸ்”

“அச்சோ.. சரிம்மா. வா ” என்று அவளுக்கும் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார்.மூவரும் பேசியவாறே சமைத்துக் கொண்டு இருந்தனர்.

வெளியில் மகேஸ்வரன் மகனை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார்.

“பிரித்வி.. நீ என்னடா பழைய ஹேர் ஸ்டைல் வச்சிருக்கிற? நாளைக்குப் போய் புதுக் கட் பண்ணிட்டு வா. மறு வீட்டுக்கு வேற போகனும்.அதுக்குள்ள இதை முடிச்சிரு”

“இது பழைய ஹேர் ஸ்டைலா அப்பா? ஏன் தான் இப்படி யோசிக்கிறீங்களோ? இதுதான் ரீசன்ட் ட்ரெண்ட்” என்றான் பிரித்வி.

“என்ன ட்ரெண்டோ! பார்க்க நல்லாவே இல்லை.மருமகளுக்கும் கண்டிப்பாக பிடிக்காது”

‘அவளுக்குப் பிடிக்கலனா நான் இந்த ஹேர் ஸ்டைலை வச்சுக்கக் கூடாதா அப்பா?’ என்று மனதிற்குள் தான் கேட்டான்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, உணவுப் பாத்திரங்களுடன் மூவரும் வந்தனர்.

“லன்ச் ரெடி. வாங்க சாப்பிடலாம்” என்று சகுந்தலாவும், லயாவும் பரிமாற ஆரம்பிக்க அதிலும் சேர்ந்து கொண்டாள் அதிரூபா.

பிரித்வியைத் தவிர மற்றவர்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

“என்னோட ஃபேவரைட் டிஷ்ஷஷ் இல்லை.” என்று புலம்பியவாறே சாப்பிட்டான் பிரித்வி.

சகுந்தலா, “நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் சமைக்கப் போறீங்க. அதை மனசில வச்சிட்டு சாப்பிடு”

“ஆமால்ல.அப்பா நாளைக்கு நம்ம டர்ன்” என்று தந்தையிடம் கூறினான்.

இங்கு பெண்கள் ஒரு நாளும், ஆண்கள் அடுத்த நாளும் உணவைச் சமைக்க வேண்டும் போலிருக்கிறதே. இதுவும் நல்ல விஷயம் தான். அவர்களைப் பாராட்டிக் கொண்டே பரிமாற,

“பரிமாறியாச்சுல்ல.உக்காருங்க” என்று பிரித்வியும், மகேஸ்வரனும் இவர்களை அமர்த்திப் பரிமாறினர்.

அதுவும் பிடித்தது அதிரூபாவிற்கு.

“சாப்பிடுவோம்” பொதுவாக சொன்ன சகுந்தலா எல்லாரும் ரசித்து உண்பதைப் பார்த்துத் தானும் உண்டார்.

“சாப்பாடு சூப்பர் அத்தை. அப்பறம் எல்லாருக்கும் தாங்க்ஸ். இன்னைக்கு என்னோட ஃபேவரைட் சாப்பாடு சமைச்சுக் கொடுத்ததுக்கு” என்று மனதார  நன்றி சொன்னாள்.

“என்னம்மா..! வேற வீட்டாளுங்களுக்குத் தாங்க்ஸ் சொல்றா மாதிரி சொல்லிட்டு இருக்க? இது நம்ம வீடு.தாங்க்ஸ், சாரி எல்லாம் நாட் அலவ்ட்” என்றார் மகேஸ்வரன்.

இவள் நன்றி சொன்னது என்னவோ பிரித்விக்குப் பிடித்திருந்தது தான் ஆனாலும் அதை அவள் முன் காட்டிக் கொள்ளாமல் உண்டான்.

பிரித்வி மற்றும் அதிரூபாவின் முதலிரவிற்கான ஏற்பாட்டில் கவனமாக இருந்தவர்கள் இவர்களது எலியும், பூனையும் சண்டையைக் கவனிக்கவில்லை.

லயாவின் அறையில் அமர்ந்திருந்த அதிரூபாவோ,தன் செல்பேசியில் கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.

” சாப்பாட்டு விஷயத்துக்கு இவ்ளோ சண்டை போட்ற, தங்கச்சிகிட்ட கோவிச்சுக்கிற? மெச்சூரிட்டிங்கறதே உனக்கு இல்லை. இதுல எனக்கு அட்வைஸ் பண்ற?” என்று வார்த்தைகளைக் கொண்டு அவனைக் கழுவி ஊற்றினாள்.

அதைப் படித்ததும், வெகுண்டு எழுந்த பிரித்வி, “அப்படித்தான் சண்டை போடுவேன். என் தங்கச்சி கிட்ட தானே சண்டை போட்றேன். உனக்கு என்ன வந்துச்சு? நீ நல்லா திருப்தியாக சாப்பிட்ட தான?”

“சாப்பாட்டிலேயே வர்ற. எருமை” என்று அவனைத் திட்டி எருமை சிம்பல் (symbol) அனுப்பினாள்.

“நைட் இங்க தான வரப் போற?” குறுஞ்செய்தி ஆனாலும் அவன் கேட்கத் தொனி தான் அவளுக்குப் புரிந்து விட்டதே…!

” ஆமா. ஏன் நான் வர்றதால் நீ வேற ஊருக்குப் போகப் போறியா? அப்படி எதுவும் பண்ணிடாத.எல்லாரும் பாவம் உன்னை நினைச்சு வருத்தப்படுவாங்க” என்று கலாய்த்தாள் அதிரூபா.

“அடியேய்…”

இவன் குறுஞ்செய்தி அனுப்பவும், சகுந்தலா அதிரூபாவை அழைக்கவும் சரியாக இருந்தது.

அதனால் அதைப் பார்க்காமலேயே அவரிடம் சென்று விட்டாள்.

“என்னத்தை?”

“போய்த் தலைக்குக் குளிச்சிட்டு இந்த சேலையைக் கட்டிட்டு வா ரூபா”

அவர் கொடுத்த இளம் ஊதா நிறச் சேலையைப் பெற்றுக் கொண்டு லயாவின் அறைக்குப் போய்க் குளித்துக் கட்டிக் கொண்டாள்.

இங்கு, பிரித்வி தனக்குக் கொடுத்த வெள்ளை வேட்டி, சட்டையை அணிந்து கொண்டான்.

தயாராகி வந்த அதிரூபாவைப் பார்த்து,

“உக்காரும்மா” என்று அவரும், லயாவும் சேர்ந்து அலங்கரித்தனர்.

சரியான நல்ல  நேரத்தில், பிரித்வியின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் அதிரூபா.

உள்ளே சென்றதும் தோரணையாகக் கட்டிலில் அமர்ந்திருந்தக் கணவனைப் பார்த்தாள்.

அவளும் சாதாரணமாக கட்டிலில் அமரவும், “என்னடி பயமே இல்லாமல் சாவகாசமாக வந்து உக்காந்துட்ட?”

“ஆமா உக்காந்துட்டேன். அதுக்கு என்ன?”

“ரொம்ப ஓவரா பேசுற!!!”

” அப்படி மட்டும் தான் பேசுவேன். ஏன்டா ‘அடியேய்’ ன்னு மெசேஜ் பண்ணிருக்க?” என்றாள் கோபத்துடன்.

“ஆமா.நீ கிண்டல் பண்ணிட்டே இருந்தா கோபம் வராதா?” பிரித்வியும் அவளுடன் சண்டை போட்டான்.

” ப்ச்.. போடா டயர்ட் ஆக இருக்கு” என்று தலையணையில் முதுகைச் சாய்த்துக் கொண்டாள்.

” வயசான காலத்துல இப்படித் தான் இருக்கும் அதிரூபா”

“அப்படியா!!! அதான் நான் உள்ளே வர்றதுக்கு  முன்னாடியே நீ கட்டில்ல உக்காந்து இருந்தியா?” என்று போலியாய் ஆச்சரியப்பட்டாள்.

“நீ அதிகமாக கிண்டல் பண்ணிட்டு இருக்கிறது நல்லதில்ல” எச்சரிக்கை விடுத்தான்.

“நீயும் என்னை ‘டி’ போட்டு பேசறது நல்லதில்ல”

இவளும் திருப்பிக் கொடுத்தாள்.

“பிடிக்காதவளைக் கல்யாணம் பண்ணிட்டு, அவளை உனக்குப் பிடிச்சா மாதிரி ஆட்டி வைக்கனும்னு நினைக்காத பிரித்வி”

மனைவியின் வார்த்தைகளில் இருந்த ஆத்திரமும், வலியும் இவனை ஏதோ செய்ய,

“நான் உன்னைப் பிடிக்காமல் கல்யாணம் செய்துக்கல அதி” என்றான் மனம் திறந்து.

” பொய் சொல்லாத “

“உனக்கும் என்னைப் பிடிக்கும்னுத் தெரியும் அதி” என்றவன்,

அதை நிரூபித்துக் காட்டும் விதமாக அவளுடைய அதரங்களை தனது இதழ்களைச் சேர்த்தான் பிரித்வி.

அதிரூபாவோ தன்னைப் பழி வாங்க நினைக்கும் ஒருவனுக்குள் தன் மேல் இத்தனைக் காதலா? என்ற வியப்பில் ஆழ்ந்தாள்.

அந்த இதழ் முத்தம் பிரித்வியின் மனதிலுள்ளதை மறைக்காமல் சொல்ல, இவளோ அதை எண்ணி ரசித்தாள்.

பிரித்வியின் இதழ் தன்னிலிருந்துப் பிரியாமல் இருக்கவும், அதை இவளுக்கும் பிரிக்க மனமில்லை.

எனவே தம்பதியர் தங்களது அருகாமையை விரும்பினர்.

ஒரு தருணத்தில் இதழ்கள் பிரிந்ததும்,

அதற்கு முன்னர் பிரித்வி பேசியது நினைவு வர,

” எனக்கு உன்னைப் பிடிக்கும் தான் பிரித்வி. ஆனால் உனக்கு என்னை எப்படி பிடிச்சது? என் மேல கோபமாக இருக்க? எந்நேரமும் பழி வாங்க ரெடியா இருக்க, ஆனாலும் இப்படி என்கிட்ட லவ்வை வெளிப்படுத்துற? இதென்ன பிரித்வி?”

“பதில் சொல்ற நேரம் வரும் அதி. அதுவரைப் பொறு” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

” அதைச் சொல்லாமல், என்கிட்ட இப்படி நடந்துக்காத பிரித்வி ” என்று அவனிடமிருந்து விலகியவள் கட்டிலில் ஒரு முனையில் படுத்துக் கொண்டாள்.

“அதி…” அழைத்தது காதில் விழாது படுத்திருந்தாள்.

அதற்குப் பின் இவனும் உறங்கி விட்டான்.

அதிகாலையில் தலைக்குக் குளித்து வந்த மருமகளின் நல்ல உறக்கத்தால் விளைந்த முகப்பொலிவு தான் என்பதை அறியாமல் அவளுக்குத் திருஷ்டி கழித்தார் சகுந்தலா.

மறு வீடு செல்ல இரு வீட்டாரும் முறைப்படி அழைக்கவும், முதலில் பிரித்வியின் வீட்டிற்கு அதிரூபாவின் பெற்றோரும், நெருங்கிய சொந்தங்களும் வந்து சேர்ந்தனர்.

அப்போது கூட,”என் வீட்டாளுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிறன்னுப் பார்த்துட்டு தான் நானும் இங்க நடந்துப்பேன்”

“அக்சப்ட்டட்” என்று கூறியவன் அதிரூபாவின் தாய், தந்தையை வரவேற்றான்.

“வாங்க அத்தை, மாமா”

“அப்பா.. அம்மா வாங்க” தலை கால் புரியாமல் சந்தோஷமாக வரவேற்றாள்.

சொந்தக்காரர்களுடன் சேர்ந்து அசைவப் பதார்த்தங்களைச் சமைத்து இருந்தனர்.

அம்மாவின் அருகிலேயே அமர்ந்து கொண்ட அதிரூபாவைப் பார்த்த பிரித்வி அவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டான்.

லயா தன் செல்பேசியில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“லயா ஃபோட்டோஸ் எடுத்ததும் எனக்கும் அனுப்பி விட்ரும்மா” என்றார் கிருஷ்ணவேணி.

” சரிங்க அத்தை” தன் வேலையில் கண்ணாய் இருந்தாள்.

தீனதயாள் சம்பந்தி மகேஸ்வரனுடன் ஐக்கியமாகி விட்டார்.

“சாப்பிட்றலாம் சம்பந்தி” சகுந்தலா அழைத்தார்.

“பிரித்வியும், அதிரூபாவும் வந்து ஒன்னா உக்காருங்க”

இருவரும் வந்து அமைதியாக அமரவும்,

அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறி விட்டு, மற்றவர்களையும் உண்ண வைத்தனர்.

பிரித்வி மற்றும் அதிரூபா உண்பதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் லயா.

“நிறையக் கேட்டு வாங்கி சாப்பிடுங்க” மேற்பார்வையிட்டார் மகேஸ்வரன்.

“அம்மா மட்டன் சுக்கா வேணும்”

லயா தான் தனக்கு விருப்பப்பட்ட உணவைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்.

அதிரூபா, “எனக்கு பெப்பர் சிக்கன் வேணும் அத்தை ”

மேற்கொண்டு எந்தப் பதார்த்தமும் கேட்காமல் பிரித்வி தன் இலையில் இருப்பதை மட்டும் உண்டான்.

அதைக் கண்ட அதிரூபா,

“இவருக்கு சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் வைங்க ” என்று இலையில் விட்டுப் போனவற்றைக் கேட்டு அவனுக்குப் பரிமாற வைத்தாள்.

அவள் அப்படி செய்யும் போதெல்லாம் திரும்பி அமைதியாகப் பார்த்தானே தவிர வேறொன்றும் கூறவில்லை.

இப்படியாகத்  தங்களுடைய மறுவீட்டுச் சடங்கு பிரித்வியின் வீட்டில் நன்றாகவே நடந்து முடிந்தது.

அடுத்து, தங்களது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைப்பது அதிரூபாவின் பெற்றோரின் முறை.

”  சம்பந்தி நீங்களும், மாப்பிள்ளை அதிரூபா கூட சேர்ந்து நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. லயா ம்மா வந்துடு” என்று வரவேற்றனர்.

“சரிங்க மாமா, அத்தை நாங்கள் எல்லாரும் வந்துடறோம்” என்று புன்னகைத்தான் பிரித்வி.

அவர்கள் போனதும் அதிரூபாவிற்குப்  பிரித்வியின் நடவடிக்கையை நினைத்து நிம்மதியாக இருந்தது.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *