மகனின் கேள்வியில் “யாரு என்ன முடிவு எடுத்தாலும், கடைசியா உன் அம்மா வைக்கிறது தான் சட்டம். இதுக்கு எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்…” என்று பாலகிருஷ்ணன் கூறியதில்,
“சட்டம் ஆர்ப்பாட்டம்… ஆகா… பட்டிமன்றத்துல பேசுற மாதிரி எதுகை மோனையோட பேசி பின்றீங்கப்பா. ஆனா, இதே மாதிரி அம்மாகிட்ட பேச சொன்னா மட்டும், காத்து தான் வருது. அட்லீஸ்ட், என்னையவாவது தைரியமா பெத்து இருக்கலாம்.” எனக் கன்னத்தில் கை வைத்தான் சோகமாக.
“நீ என்னோட ரத்தம்டா.” என்று மகனின் தோளைத் தட்டிக் கொடுத்ததில், வெடுக்கென எடுத்து விட்டவன், “ஆமா, பெரிய பொல்லாத ரத்தம். அந்த ரத்தத்துல ஒரு வண்டி தைரியத்தை ஊத்தி இருக்கலாம்ல.” என்று பாலகிருஷ்ணனை முறைக்க, அவரோ கண்டும் காணாதது போல முகத்தை திருப்பிக் கொண்டதில், மேலும் முறைத்தான்.
“எனக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு… ஜீவி… நீ வைஷாலிகிட்ட பேசணும்ன்னா போய் பேசிட்டு வா.” என்றிட,
இருவரையும் பின் பக்கம் அனுப்பி வைத்தனர்.
அந்நேரம் பெரியவர்கள் பொதுவாக பேசிக்கொள்ள, வாசலில் ஏதோ சத்தம் கேட்டதில், சத்யரூபா வெளியில் சென்று பார்த்தாள்.
ஒரு ஆடவன், கேட்டை அடைத்த மாதிரி தனது அப்பாச்சி வண்டியை நிறுத்தி விட்டு இறங்க, “ஹலோ. யாரு நீங்க. வீட்டு வாசல்ல வண்டியை நிறுத்துறீங்க…” என்று எப்போதும் போல கத்திக்கொண்டு அவனருகில் வந்ததில்,
அவனோ “அவுச்…” என காதை மூடிக் கொண்டான்.
“ஸ்பீக்கரை முழுங்கிட்டியா கேர்ள். பக்கத்துல தான இருக்கேன். மெதுவா பேசுனா என்ன?” என மூக்கை சுருக்கி கடுப்படித்தவன், விறுவிறுவென வீட்டினுள் செல்லப் போக, அவளோ அவன் முன் வந்து தடுத்தாள்.
“நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு உள்ள வந்தா என்ன அர்த்தம்.” எனத் தன்னை சீண்டிய கோபத்தில் மேலும் கத்த,
அவனோ பார்வையாலேயே எரித்து, “இப்ப நீ மெதுவா பேச போறியா இல்லையா?” என்றான் கோபத்தை அடக்கி.
“முடியாது. நான் இப்படி தான் பேசுவேன்.” அவளும் மல்லுக்கு நிற்க,
“இதுக்கு மேல பேசுன, குரல்வளையை கடிச்சு துப்பிடுவேன். அப்பறம் வாய் மட்டும் தான் அசையும் வார்த்தை வராது.” என மிரட்டியதில் ஒரு கணம் அதிர்ந்தவள், மறு நொடியே, “என்னடா மிரட்டுறியா? எங்க தைரியம் இருந்தா கடிடா பாக்கலாம்.” என்று இடுப்பில் கை வைத்து சண்டைக்கு தயாரானாள்.
“கடிச்சு வச்சுடுவேன் சவுண்டு சிஸ்டம்…” என அவள் அருகில் நெருங்க எத்தனிக்கும் போதே, “ரெண்டு பேரும் நாயா மாறி கடிச்சுக்கிட்டது போதும். இப்போ மனுஷன் மோடுக்கு வாங்க” என்று கேலி செய்தார் பாலகிருஷ்ணன்.
சத்யரூபா தான் அவரது கூற்று புரியாமல் விழித்திட, அவனோ உள்ளே வராமல், “இவள பொண்ணு பாக்க வரலை தானப்பா?” எனக் கேட்டான் புருவம் சுருக்கி.
“இல்லடா. இந்த பொண்ணோட அக்காவ தான் பார்க்க வந்தோம்.” என்றதில்,
“ஹப்பாடா. இவளை வீட்டுக்குள்ள விட்டா, எல்லாரோட காதும் அவிஞ்சுடும். வாங்க உள்ள போலாம்.” என்று அவளை கேலி செய்த நிம்மதியில் அவன் உள்ளே செல்ல, சத்யரூபா தான் கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்தாள்.
பாலகிருஷ்ணனோ அசட்டு சிரிப்பை உதித்து, “இவன் எப்பவுமே இப்படி தான்மா விளையாட்டுப்பிள்ளை. என் ரெண்டாவது பையன் இந்திரஜித்.” என்றார்.
“விளையாட்டுப்பிள்ளைன்னா, கரடி பொம்மை வாங்கி குடுங்க விளையாடட்டும். அதை விட்டுட்டு என்கிட்ட வம்பு வளர்த்தா அவ்ளோ தான் சொல்லிட்டேன்.” என சிலிர்த்துக் கொள்ள,
உள்ளே சென்றவன், வேகமாக வெளியில் வந்து, “வாசல்ல நின்னு கரடிக்கிட்ட என்னப்பா பேச்சு வேண்டியது இருக்கு உங்களுக்கு. வாங்க போய் பஜ்ஜி சாப்பிடுவோம். இவ்ளோ தூரம் வந்ததுக்கு அதையாவது சாப்பிட்டு போகலாம்.” என்று அவளை வாரி விட்டு, தந்தையை இழுத்துக் செல்ல, சத்யரூபாவோ “நான் கரடின்னா, நீ காண்டாமிருகம்டா.” என்று தரையில் காலை உதைத்தாள்.
இந்திரஜித்தோ உள்ளே சட்டமாக அமர்ந்து தாமரை கொடுத்த பஜ்ஜியை சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு பக்கம் பானுரேகா அவனைத் தீப்பார்வை பார்க்க, மறுபக்கம் சத்யரூபா அனலடித்தாள்.
“ப்பா… பஜ்ஜியை விட பார்வை தான் சூடு ஜாஸ்தியா இருக்கு.” என திமிராய் புன்னகைக்கும் போதே, வைஷாலியும் சிரஞ்சீவியும் உள்ளே வந்தனர்.
வைஷாலியை பார்த்த இந்திரஜித், “சோ, என்ன படிச்சுருக்க?” என்று தாய் கேட்ட கேள்விகளையே அவன் மீண்டும் கேட்க ஆரம்பிக்க, அவளோ ‘மறுபடியும் முதல்ல இருந்தா…’ என்று பேந்த பேந்த விழித்தாள்.
இந்திரஜித்தின் கேள்வியில் விழித்த வைஷாலி, மீண்டும் பதில் அளிக்கத் தொடங்க, அவனோ விடாமல் கேள்வி கேட்டு விட்டு, “நான் பொண்ணுகிட்ட தனியா பேசணும்.” என்றதில்,
சத்யரூபா தான், “அதான் மாப்பிள்ளையே நேரடியா பேசியாச்சே. நீங்க பேச என்ன இருக்கு?” என்றாள் கடுப்பை அடக்கிக்கொண்டு.
“அவன் பேசுனா போதுமா. எனக்கு அண்ணியா வர்றதுக்கு எல்லா தகுதியும் இருக்கான்னு எனக்கு தெரிய வேணாம். சோ, நான் பேச தான் செய்வேன்.” என்றவன், வம்படியாக வைஷாலியை தனியே அழைத்துச் செல்ல, சத்யாவின் முகம் கடுகடுத்தது. பானுரேகாவின் முகமும் தான்.
இத்துடன் ஒன்பது வரன்களையும் கெடுத்தாகிற்று. “இவனை யாரு இப்ப வர சொன்னது?” என்ற எரிச்சலில், அவர் கணவரைப் பார்க்க,
அதன் அர்த்தம் புரிந்து, “ஐயோ நான் வர சொல்லல பானு.” எனப் பதறினார் பாலகிருஷ்ணன்.
அதில், சிரஞ்சீவி மீது கோபப்பார்வை வீச, அவனோ பயத்தில் நெளிந்து, “என்ன இருந்தாலும் என் தம்பி இல்லாம எப்படிம்மா பொண்ணு பாக்க வர்றது” என்று அசடு வழிந்தான்.
சிறிது நேரத்தில், இந்திரஜித் வந்து அமர்ந்து சாவகாசமாக மற்றொரு பஜ்ஜியை எடுத்து பதம் பார்க்க, வைஷாலியும் சிறு புன்னகையுடன் அங்கு வந்தாள்.
“அக்கா என்ன ஆச்சு?” என சத்யரூபா வைஷாலியிடம் வினவ, அவளோ பதில் சொல்லாமல் சிரஞ்சீவியைப் பார்த்தாள்.
அவன், “எனக்கு ஓகே ம்மா.” என்று விட, வைஷாலியும் சம்மதமாக தலையாட்டினாள். பானுரேகாவிற்கு சற்று வியப்பு தான். இதுவரையில், பார்த்த பெண்களை எல்லாம் தனது இளையமகன் பேசுவதாக தனியே அழைத்துச் சென்று, ஏதேதோ பேசி, அவர்கள் வாயாலேயே திருமணம் வேண்டாம் என்னும் அளவிற்கு கொண்டு வந்து விடுவான்.
இன்றோ, அதிசயத்திலும் அதிசயமாக எந்த நாரதர் வேலையும் பார்த்து வைக்காமல் இருந்ததே அவருக்கு சந்தேகமாக இருந்தது. இருப்பினும், தாமரையிடம் மற்ற விஷயங்களை பற்றி பேசி விட்டு, நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டே கிளம்பினார். இந்திரஜித் ஏற்கனவே நாரதர் கலகத்தை ஆரம்பித்து விட்டதை அறியாமல்!
அடுத்த ஒரு மாதத்திலேயே திருமணத் தேதியும் குறிக்கப்பட, சத்யரூபாவிற்கு தான் அத்தனை வேலைகளும் தலைக்கு மேல் இருந்தது.
சொல்லிக்கொள்ள சொந்த பந்தம் என்று பெரிய வட்டம் எதுவும் இல்லை. ஊரில் ஒரு அத்தை குடும்பம் இருக்கிறது அவ்வளவே! முன் போல் என்றால், அனைத்திற்கும் தனது அத்தை மகனான எழிலழகனை அழைத்து விடுவாள். அவளை விட ஐந்து வயது பெரியவன். சிறுவயது முதலே, இருவருக்குள்ளும் அழகிய நட்பு இழையோடும். நட்பு காதலாகி பின் கானலான பிறகு, அவனுடனான பேச்சு வார்த்தை முற்றிலும் தடைபட்டுப் போனது.
“எலி… நம்ம கல்யாணத்த ரொம்ப செலவு பண்ணி, தாம் தூம்ன்னு பண்ண வேணாம். சிம்பிளா கோவில்ல வச்சுக்கலாம்.” மூன்று வருடங்களுக்கு முன், தமக்கைக்கு முதல் வரன் வந்தபோது, மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை தடபுடலாக செய்ய வேண்டும் என்று கேட்ட மறுநாள், எழிலகனிடம் கூறினாள் சத்யரூபா.
“என்ன சது… சாதாரணமா சொல்லிட்ட. நான் வீட்ல ஒரே பையன். என் அம்மா கல்யாணத்தை பெருசா பண்ணனும்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. இதை சொன்னா, அவ்ளோ தான் சாமி ஆடுவாங்க. உன் அத்தையை பத்தி உனக்கே தெரியும்ல…” என சிரித்தபடி கூறியதில், அவள் முகம் வாடியது.
அது பொறுக்காமல், “சரி, கல்யாணத்தை கோவில்ல வச்சுட்டு, ரிஸப்ஷனை க்ராண்டா வச்சுக்கலாம். அது முழுக்க முழுக்க என் செலவு தான்.” என மாமன் மகளை சமன்படுத்த, அதில் அவளது இதழ்களிலும் புன்னகை பரவியது.
இப்போதும் அதே புன்னகை தான். ஆனால் விரக்தியாக ஒளிர்ந்தது.
சில நேரம், அவனில்லாமல் ஒரு கையே ஒடிந்தது போல தான் இருக்கும். நட்பையாவது மீண்டும் தொடரலாம் என முயற்சித்த போது, அவன் அவளை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கோபத்தைக் கக்கியதில், அந்த முயற்சியும் கை விட்டுப் போனது.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, பழைய நினைவில் இருந்து மீண்டவள், பத்திரிக்கை அடிப்பதில் ஆரம்பித்து, அதில் யாருடைய பெயரை போட வேண்டும் என்று முதற்கொண்டு யோசித்து, திருமணத்திற்கு தேவையான பொருட்களைப் பற்றி விவாதிப்பதற்கு, பானுரேகாவின் வீட்டிற்கு அடிக்கடி விஜயம் புரிந்தாள்.
“அத்தை… கல்யாணத்தன்னைக்கு சாப்பாடு செய்ய எந்த கேட்டரிங்கு சொல்லணும்ன்னு உங்களுக்கு ஐடியா இருக்கான்னு அம்மா கேட்க சொன்னாங்க. இந்த ஊர்ல எங்களுக்கும் யாரையும் தெரியாது. அப்படி இல்லன்னா, நான் ஊர்ல இருந்து ஆள் கூட்டிட்டு வரேன்.” என்றிட,
அவரோ, குறிப்பிட்ட கேட்டரிங் சர்விஸ் பெயரைக் கூறி, “இங்க சாப்பாடு தரமா இருக்கும் சத்யா. இங்கயே சொல்லிடு.” என்றார்.
“சரி…” எனத் தலையாட்டியவள், “அப்போ அவங்ககிட்டயே பரிமாறவும் ஆள் வர சொல்லவா?” எனக் கேட்டதில், அவர் புருவம் சுருக்கினார்.
“பரிமாறுறத எல்லாம், நம்ம முன்னாடி நின்னு செஞ்சா தான் சரியா இருக்கும். அதுக்கு கேட்டரிங் பசங்க எல்லாம் வேணாம்” என்று முடிவாக கூறிட, சத்யரூபா தயங்கினாள்.
“ஆனா, பரிமாற எங்க வீட்டு சைடு யாரும் இல்லையே அத்தை.” என்றதில்,
பாலகிருஷ்ணன், “அதான், இந்தர் இருக்கான்லமா. அவன் எப்படியும் ப்ரெண்ட்ஸ்ன்னு பத்து பேரை கூட்டிட்டு வருவான். அவங்க பார்த்துப்பாங்க” என்றிட, அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி அங்கு வந்தவன், தந்தையை முறைத்தான்.
“எது… இவன் கல்யாணத்துக்கு நான் சர்வர் வேலை பார்க்கணுமா?” நக்கலாக கேட்டதில்,
“அன்னைக்கு நீ வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை பார்க்க போற” என்றார் அவரும்.
“என்ன வேலையா? அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அடுத்து உனக்கு எப்பன்னு கேட்குற சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லணும். வேலை செட் ஆகிடுச்சா, இன்க்ரிமெண்ட் வந்துச்சா, அடுத்து என்ன பண்ண போறன்னு கேட்குற உங்களை மாதிரி பெருசுக்கு பதில் சொல்லணும். அது மட்டுமில்லாம, வர போற அத்தை பொண்ணு மாமா பொண்ணு, இதோ இந்த சவுண்ட் சிஸ்டமோட ப்ரெண்ட்ஸ்ன்னு அத்தனை பேரையும் சைட் அடிச்சு, அதுல ஒன்னு ஃபிக்ஸ் ஆகுமா ஆகாதுன்னு முடிவு எடுக்கணும். இன்னும் கணக்குல வராத ஏகப்பட்ட வேலை இருக்குப்பா.” என உதட்டைப் பிதுக்கி கூறி வைத்தவன், தாயின் முறைப்பில் சிரிப்பை அடக்கியபடி அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
இதனைக் கேட்ட, சத்யரூபா தான் ஒரு நொடி திகைத்து, பின் கடுகடுத்தாள். ‘காண்டாமிருகத்துக்கு கொழுப்ப பாரு…’ என்று பல்லைக்கடித்தாள்.
அலைபாயும்!
மேகா…