“நிதா… நிதா” நிதர்ஷனாவின் வீட்டு வாசலில் நின்று கத்தினான் கதிரவன்.
அவளது சிறுவயது தோழன். அவளை விட இரு வயது பெரியவன். நல்லது கெட்டது அனைத்திலும் இந்நாள்வரை உடனிருப்பவன். இனியும் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறவன்.
“நீ ஏன்டா கடன்காரனாட்டம் வாசல்ல நின்னு கத்திட்டு இருக்க?” மாவு அரைத்தக் கையை கழுவாமல் அப்படியே வந்து நின்றாள் நிதர்ஷனா.
பூப்போட்ட கருப்பு நைட்டியில் ஆங்காங்கே மாவு சிதறி இருந்தது.
“வேலைக்கு நேராச்சு. அம்மா மாவு கேட்டுச்சு நிதா… நீ குடுத்துடுறியா?” கதிரவன் கேட்டதும்,
“நான் எடுத்துதான் வச்சுருக்கேன். குடுத்துக்குறேன்” என்றாள்.
“சரி இந்தா…” என பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க, “நீ என்னடா அம்பது ரூவாய்க்கு கத்தையா அள்ளித் தர்ற. அம்பது காசு நோட்டா என்ன?” நக்கலாகக் கேட்டவளை முறைத்தவன், “இது மாவுக்கு இல்ல. நேத்து தான் சம்பளப்பணம் வந்துச்சு. நீ காலேஜ் பீச கட்டு மொதோ…” எனக் கொடுத்தவனிடம் நட்பிற்கான அன்பு வழிந்தோடியது.
“இது என்ன புதுசா? உன் ஆத்தாளுக்கு தெரிஞ்சா எனக்கு சாமியாடிடும். வர்ற இருபதாயிரத்த மொத்தமும் என்னாண்ட குடுத்தா நீ என்ன செய்வ… முகேஷ் அம்பானி அள்ளித்தர்றாரு” எனக் கிண்டலத்தவாறே சூசகமாக மறுத்தாள்.
“ப்ச் அம்மாவை இந்த மாசம் நா சமாளிச்சுக்குறேன் நிதா. கடைசி செமஸ்டர் வேற. ப்ராஜக்ட் இருக்கும்ல.”
“அட என் அண்ணன்காரன் காசியாண்ட வாங்கி பீஸ் கட்டிட்டான்டா. பாத்துக்கலாம் வுடு.”
“அவனாண்ட ஏன் நிதா இவன் வாங்கித் தொலையுறான். எப்படி காட்டுவானாம்” கதிரவன் கோபப்பட,
“உன் தோஸ்த்துக்கு வெளியூர்ல வேலை கெடச்சுருக்காம். தூத்துக்குடில தான்… என்னமோ துபாய்ல கெடச்ச மாறி வேலை வந்துடும் வேலை வந்துடும்னு நாயி பினாத்திட்டு கெடக்கு. நீ காச உன் ஆத்தாட்ட குடுடா. அது வாயில விழ வைக்காத… வாயா அது காவா” எனத் திட்டியபடி மீண்டும் கிரைண்டரில் ஆட்டிய மாவை அள்ளப்போனாள்.
கதிரவனின் முகம் வாடி விட்டது. நினைவு தெரிந்தது முதலே இதே காசிமேடு ஏரியாவில் தான் அண்ணனும் தங்கையும் வசித்து வருகின்றனர்.
தாய், தந்தை யாரென்று இருவருக்குமே தெரியாது. சிறு வயது முதலே இருவரும் சின்ன சின்ன வேலைகளைப் பார்த்து வயிற்றை நிரப்பிக்கொள்வர். நிவேதனுக்கு பத்து வயது வரும் வரைக்கும், மாமா என்ற முறையில் உடன் ஒருவர் இருந்தார்.
‘நீலி மாமா’ என்று அழைத்ததாக நினைவு இருவருக்கும். இப்போது இவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்த சில நாட்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தும் விட்டார். இந்த வீடும் கூட அவர் ஒத்திக்குப் பிடித்தது என்று அந்த வீட்டின் உரிமையாளர் நடேசன் சொல்லியிருந்தார். ஐந்து வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்க, வெறும் சிறுவர்களை எப்படி அங்கு தங்க வைப்பது எனத் தயக்கம் கொண்ட நடேசனுக்கு அவர்களை வெளியில் அனுப்பவும் மனமில்லை.
அந்த நடேசனின் மகன் தான் கதிரவன். அவனது தாய் பரமேஸ்வரிக்கு பதிமூன்று வருடங்கள் ஆகியும் ஒத்தியைக் கை மாற்றாமல் இவர்களைத் தங்க வைத்திருப்பது பிடிக்கவில்லை. அதனால் அவ்வப்பொழுது குத்துவார். சில மாதங்களாக வாடகை வாங்கச் சொல்லியும் தொந்தரவு. பல வருடங்களுக்கு முன் வெறும் ஒன்றரை லட்சத்திற்கே ஒத்திக்கு வந்தனர். இப்போதோ அந்த மாடியில் இருக்கும் நான்கு வீட்டிற்கும் சேர்த்தே மாதம் இருபதாயிரம் தாண்டி வாடகை வருகிறது. ஒத்திக்கு என்றால், குறைந்தது ஐந்து லட்சங்களேனும் விடலாம்.
“நம்ம என்ன சத்திரமா நடத்திட்டு இருக்கோம்” பரமேஸ்வரியின் ஆதங்கமிது.
“விடு பரமு. சின்னப் பசங்களை எப்படி ஒன்றரை லட்சத்தை திருப்பி குடுத்து அனுப்புறது. அந்தக் காசுக்கு ஒத்திக்கும் வீடு கிடைக்காது இனி. வாடகை குடுத்து மாள முடியாது. நிவா அவன் தங்கச்சியை படிக்க வைக்கிறான்ல அவ வேலைக்குப் போகட்டும். வாடகை வாங்கிக்கலாம்” என மனையாளை சமன்செய்வார் நடேசன்.
கதிரவன் தான், “எதுக்கு வாடகை வாங்கணும் அதான் நாலு வீட்ல வருதுல” என முணுமுணுக்கும்போதே பரமேஸ்வரி மகனைத் தீயாக முறைக்க, அதற்கு மேல் பேச அவனுக்கேது தைரியம்.
“ஆமா, அவ மினுக்கிகிட்டு தான் திரியிறா. படிக்க வைக்கிற காசுக்கு அவளை கட்டிக்கொடுத்துட்டு வேலையைப் பாக்கலாம்” பரமேஸ்வரியின் கூற்றில் கதிரவனுக்கு தான் அத்தனை கோபம் வரும்.
கையாலாகாத கோபத்தில் எவ்வித பலனும் இல்லையே. அதே போல தான் அவனும் கடந்து விடுவான்.
கீழ் வீட்டில் பரமேஸ்வரி பேசும் பேச்செல்லாம் நிவேதனுக்கும் நிதர்ஷனாவிற்கும் கேட்கும் தான், காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்வர்.
“நா மினிக்கிட்டு திரிஞ்சா இந்த அம்மாவுக்கு என்னவாம்…” நொடித்துக்கொள்ளும் தங்கையிடம்,
“உன்னை மாறி ஒல்லியா இல்லைன்னு பொறாமை புடிச்சிருக்கு அதுக்கு” என்பான்.
அதில் நிதர்ஷனா புன்னகைத்துக் கொள்ள, நிவேதனுக்கு உள்ளுக்குள் வருத்தம் எழுந்தாலும் அவளிடம் காட்டிக்கொள்ள மாட்டான். அவளோ வானமே இடிந்து கீழே விழுந்தாலும், ‘ஓ விழுந்துட்டியா… சரி ஓரமா போய் படு’ என்று அனைத்தையும் அசட்டையாக எடுத்துக்கொள்ளும் குணமுடையவள்.
இந்தக் கடன் தான் மெல்ல மெல்ல மேலேறி அவளைக் கலங்க வைத்துக் கொண்டிருந்தது.
நிவேதன் துணிக்கடையொன்றில் வேலை பார்க்க, சிறிது சிறிதாய் சேர்த்து வைத்த பணத்தில் கிரைண்டர் ஒன்றை வாங்கி அதில் அக்கம் பக்கத்தில் மாவு அரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் நிதர்ஷனா.
“நீ அரைக்கிற மாவுல இட்லி பஞ்சு மாதிரி இருக்குடி” பக்கத்துக்கு வீட்டு அக்கா ஆச்சர்யப்பட,
எதிர்வீட்டு அக்காவோ, “சோடா மாவு அதிகமா போடுறியோ?” என நாசுக்காக ரெசிபி கேட்பார்.
“இல்லக்கா… எலவம்பஞ்ச உளுந்தோட ஊற வச்சுடுவேன். அப்படியே மாவு புசுபுசுன்னு வந்துடுமே…” நிதர்ஷனா நக்கலுடன் கூறியதில், அவர் முகம் கூம்பிப் போனது.
மாவு வியாபாரம் நன்றாகவே போனது என்றாலும், ஏதோ கஷ்டமின்றி நாள்கள் நகர, இடியாய் சில இலட்சங்களை தொழில் என்ற பெயரில் தொலைத்து விட்டு வந்தான் நிவேதன்.
எப்படியோ உருட்டி பிரட்டி நாள் நகர காசியின் வட்டித்தொல்லை அதிகமானது. அதில் ஒரு நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு நிவேதன் வீட்டை விட்டு சென்று விட, நிதர்ஷனா இடிந்து போனாள்.
“ஓடிப்போய்ட்டா எல்லாம் சரியாகிடுமா? அறிவு கெட்டவன்” கதிரவன் திட்டித் தீர்க்க,
நிதர்ஷனா தலையைப் பிடித்துக்கொண்டு வாசற்படியில் அமர்ந்தாள்.
கல்லூரிக்கு கிளம்ப எழுந்தபோது நிவேதன் வீட்டில் இல்லை. எப்போதும் அவளுக்காக தயிர் சாதமோ, புளி சாதமோ கட்டி விட்டு, தொட்டுக்க சிறிதளவு கருவாடில் நிறைய வெங்காயம் போட்டு செய்து வைப்பான். அந்த ஒரு நாள் முழுக்க அதே உணவு தான் இருவருக்கும். இன்று, அவனது அரவம் கேட்காதது உறுத்த, நிவேதனைத் தேடியவளுக்கு கிடைத்தது அந்தக் கடிதம்.
எப்போதும் கைப்பிடித்து தன்னுடனே நடப்பவன். இப்போது கையை உதறி விட்டுச் சென்றதன் பொருளை உணராது ஒரு நொடி கதி கலங்கிப்போனாள்.
முந்தைய நாள் காசி வேறு அவனிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கும் தெரியும். நிச்சயம் மிரட்டி இருப்பான். இங்கிருந்தால், எனக்கும் தொந்தரவு தருவான் என்ற எண்ணத்திலே தான் சொல்லாமல் சென்றிருக்கிறான் எனப் புரிந்தது.
அதற்கு தோதாக உடனடியாக பணத்தைத் தர சொல்லித் தொந்தரவு செய்த காசி, நிவேதன் ஓடிப்போனது தெரிந்ததும் ஆறு மாத காலம் கெடு கொடுத்திருந்தான்.
கெடுவிற்காக தான் சென்றிருப்பானோ. ஆறு மாதத்தில் மீண்டும் வந்து விடுவான் என நம்பினாள். ஆனாலும் தமையனில்லாத வாழ்வு சுருக்கென வலித்தது. இருந்தாலும், எப்படியும் தன்னைத் தேடி வந்து விடுவான் என ஒரு அசட்டு நம்பிக்கையில் தினசரி வேலையைக் கவனித்துக் கொண்டாள்.
அதற்கு காரணமும் இருந்தது. நிவேதனின் பதினைந்தாவது வயதில் தான், அவர்களது ஒத்திக் கணக்கு முடியும் தருவாயில் இருந்தது.
பரமேஸ்வரி இருவருக்கும் பணத்தைக் கொடுத்து அனுப்பி விடும்படி நடேசனை நச்சரிக்க, நிவேதன் எவ்வளவோ பேசியும் ஒப்புக்கொள்ளவில்லை. வயதுக்கு வந்த தங்கையை வைத்துக்கொண்டு எங்கு சென்று இருப்பது என நிவேதனுக்குப் பயம் தோன்ற கதிரவன் தான் அந்த திட்டத்தைக் கூறினான்.
“நீ ஒரு மாசத்துக்கு எங்கனாவது ஓடிப்போய்டு நிவே. நீ இல்லன்னா நிதாவை மட்டும் அப்பா அனுப்ப விட மாட்டாரு. நீயும் அவங்க குடுத்த டார்ச்சர்ல காணாம போய்ட்டன்னு அவ கம்பளைண்ட் குடுத்தா எங்க அம்மாவை போலீஸ் புடிச்சுட்டுப் போய்டும்னு நானும் புரளியை கிளப்பிவிடுறேன். அப்பறம் அதுவே பயந்துட்டு கம்முன்னு ஆகிடும்”
“இதுலாம் வேலைக்கு ஆகுமா கதிரு. ஒரு மாசத்துக்கு நிதா எப்படி தனியா இருப்பா?” நிவேதன் யோசனையாக கேட்க,
“அதான் நான் இருக்கேன்ல. நானும் அப்பாவும் நானும் அவளை சமாளிச்சுக்குறோம். அவகிட்ட சொல்லிடாத ஒத்துக்க மாட்டா” என்றவனின் திட்டமே அப்போது அவனுக்கும் சரியெனப்பட, வீட்டை விட்டு ஒரு மாதத்திற்கு வெளியேறி விட்டான்.
கதிரவன் சொன்னது போன்றே பரமேஸ்வரி பயந்து கொண்டு வீட்டைக் காலி செய்ய கூறவில்லை. ஒரு மாதம் கழித்து வந்த தமையனை நிதர்ஷனா அடி வெளுத்து விட்டாள். கதிரவனின் பெயரைக் கூறினால் அவனையும் உண்டில்லை என ஆக்கி விடுவாளென தனக்குள் மறைத்துக்கொண்டான்.
அதே போல இப்போதும் சென்றிருக்கிறான். வந்து விடுவான் என ஆணித்தரமாக நம்பி, அவன் மீது கோபத்தையும் வளர்த்துக் கொண்டாள் நிதர்ஷனா.
—-
“பாஸ்… உங்களோட பீச் கலர் கோர்ட்ல கடுகு சைஸ்க்கு அழுக்கு ஒட்டிருக்கு துவைச்சாலும் போகல…” யாஷ் பிரஜிதனின் துணி மடிக்கும் இயந்திரம் சத்தம் கொடுத்தது.
“டிஸ்கார்ட் பண்ணிடு” முதலாளியின் பேச்சை மீறாது, சிறு அழுக்கு படிந்த பல லட்சம் பெறுமானமுள்ள கோர்ட்டை கிழித்துக் குப்பையில் போட்டது இயந்திரம்.
அந்நேரம் “பப்பா காலிங்” என எலிசா சத்தம் கொடுக்க,
சில நொடி யோசனைக்குப் பிறகு, “அட்டென்ட் தி கால். நான் பிசியா இருக்கேன்னு சொல்லிடு எலிசா” மடிக்கணினியில் கவனத்தைப் பதித்தபடி ரோபோவிற்கு உத்தரவு கொடுக்க, ஆட்டோமேட்டிக் காலர் சிஸ்டமாக பொருத்தப்பட்டிருந்த ஏ.ஐ, “ஹலோ பப்பா, மை பாஸ் இஸ் லிட்டில் பிட் பிசி. யூ கேன் கால் ஹிம் லேட்டர். தேங்க் யூ” என அழைப்பைத் துண்டித்தது.
எதிர்முனையில் யாஷின் தந்தை அலெஸ்சாண்ட்ரோ மோரெட்டி தனது சிவந்த முகத்தில் சினத்தை வழியவிட்டார்.
“யூ ஃப**ங் பிட்ச்! எனக்கே ரோபோட் ரிப்ளையா?” என மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்க, அப்போதும் இயந்திரமே பதில் அளித்தது.
ஒரு மணி நேரம் கழித்து, தனது வேலையை முடித்தபிறகே கழுத்தைச் சுளுக்கெடுத்துக் கொண்டு கட்டிலின் பின் சாய்ந்தவன், “மசாஜ் எலிசா” எனக் குரல் கொடுக்க, கட்டிலில் தலைப்பகுதியில் உருவாக்கி வைத்திருந்த மசாஜ் இயந்திரம் இலேசாக முன் வந்து, அவன் கழுத்திலிருந்து முதுகு வரைப் பிடித்து விட்டது.
சற்றே இலகுவானப் பின்னே தான் தந்தைக்கு அழைத்தான்.
உடனடியாக அழைப்பை ஏற்ற அலெஸ்சாண்ட்ரோ, “மி ஸ்தாய் உமிலியாண்டோ, யாஷ்?” (என்னை அவமானப்படுத்துகிறாயா யாஷ்) எனக் கொதிக்க, அவனிடம் பதில் இல்லை.
பேச வேண்டிய விஷயத்தைத் தவிர வேறு பேசினால், அவனிடம் எவ்வித எதிர்வினையும் இருக்காதென்பது புரிந்ததால், சற்றே தணிய முற்பட்டவர், மேற்கொண்டு இத்தாலியன் மொழியில் உரையாடினார்.
“நீ இந்தியா போன விஷயம் என்ன ஆச்சு?”
“இந்தியாவுக்கும் இத்தாலிக்குமான உறவு முடிஞ்சபிறகு உங்களுக்கு என்ன அக்கறை பப்பா?” மறுகேள்வி அழுத்தமாய் அவனிடமிருந்து வந்திருந்தது.
“அக்கறை இல்ல. போன வேலை முடிஞ்சுதுன்னா நீ திரும்பி வந்துடலாம் தான. உன் பியான்ஸ் ரித்திகாவோட மேரேஜ் பிக்ஸ் பண்ணனும். தி கிரேட் இந்தியன் ரோபோடிக்ஸ் கம்பெனியோட சேர்மேன் வரதராஜனோட மாப்பிள்ளையா பதவி எடுக்குறதுக்கு முன்னாடி, அவரோட ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்துக்கும் நீ சேர்மன் ஆகணும் யாஷ். அது உன்னோட கனவு! என்னோட கனவும் அது தான். அதுக்குள்ள உன் அம்மா வச்ச செக் தான் என்னை எரிச்சல் படுத்துது…” அவரது குரலில் அளவுக்கு அதிகமான கோபம் பொழிந்தது.
“பப்பா… பர்ஸ்ட் ஒரு விஷயத்தை க்ளியர் பண்ணிக்கிறேன். ரித்திகாவுக்கும் எனக்கும் வெளிப்படையா மேரேஜ் நடக்க ஒரு வருஷம் ஆகும். சோ தட், நான் சேர்மன் ஆகவும் ஒரு வருஷம் ஆகிடும்” என்றதும் அலெஸ்சாண்ட்ரோ அதிர்ந்தார்.
“ஏன்? எதுக்காக ஒரு வருஷம் யாஷ்?” பதற்றம் நிரம்பியது அவரிடம்.
மீண்டும் அவனிடம் ஒரு அமைதி.
இம்முறை, “அமைதியா இருந்து சாதிக்காத யாஷ். என்னன்னு சொல்லு” அழுத்திக் கேட்டதும்,
“விளக்கமா போன்ல சொல்ல முடியாது பப்பா. நானும் ரித்தியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, மம்மா ஊருக்குப் போகலாம்னு இருக்கோம். மம்மாவோட கண்டிஷன்ஸ் பத்தி தெரியுமே உங்களுக்கு… அவங்களைப் பார்க்க நான் கபிளா தான் வரணும்னு ரூல்ஸ் போட்டுருக்காங்க.
அது மட்டும் இல்ல. அவங்களோட லாஸ்ட் டேஸ்ல நான் அவங்ககூட இருக்கணும்னு ஆசைப்படுறாங்க பப்பா…” என்றதில் அவருக்கு இன்னும் கொஞ்சம் எரிச்சல் மிகுந்தது.
“லாஸ்ட் டேஸ் மீன்ஸ் எவ்ளோ நாள்?” எண்ணிக்கையாக கேட்டதில், “பப்பா!” என அதட்டினான் யாஷ் பிரஜிதன்.
“அப்பறம் என்ன யாஷ்? உன் லைஃப்ல இது முக்கியமான ஃபேஸ். அஞ்சு வயசுல உன்னை வளர்க்க மாட்டேன்னு இத்தாலிக்கு அனுப்பி விட்ட உன் அம்மாவுக்காக உன் கேரியர்ல டிலே பண்ணாத. உன் மேரேஜ அனவுன்ஸ் பண்ணுனா தான, நீ சேர்மன்னு வெளில தெரியும்? என்ன தான் உன் பிளான்” சலிப்பாகக் கேட்டார் அலெஸ்சாண்ட்ரோ.
“அஃப்கோர்ஸ்! அவங்ககிட்ட இருந்து எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கே தெரியும் பப்பா. என்னோட தேவையை அவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க. பிடிக்கல தான். பட் நான் நினைச்சது எனக்கு வேணும்” என்றான் தீர்க்கமாக.
மகனின் பிடிவாதம் தந்தை அறிந்ததே. தான் நினைத்தது முடிவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவன். இந்தச் சிறு வயதில், உலகம் வியக்கும் ரோபோக்களின் நுட்பங்களை வடிவமைத்து, அதனை வெற்றி பெற்றவனின் இலக்கு இது மட்டுமல்ல. அந்த இலக்கை அடைவதற்கான அடிப்படை அவனது தாய் ஆதிசக்தியிடம் மட்டுமே இருக்கிறது.
மேலும் தந்தையிடம் சில விவரங்கள் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தனிடம் ஆத்திரம் தாண்டவமாடியது.
அவன் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே காதலித்து மணம் புரிந்த பெற்றோர்கள் விவாகரத்து பெற்று அவரவர்களுக்கென்று தனி வாழ்க்கையை அமைத்துக்கொண்டதிலிருந்து தொடங்கிய இறுகிய நிலை அவனுடையது.
அந்தத் தனிமை தந்த நேரம் அதிகம். அந்த நேரங்களை எல்லாம் ஆக்கப்பூர்வமாக உருவாக்கியதன் பெரும் பங்கு யாஷிற்கே உண்டு.
தனக்காக தன்னுடன் பேசி, தான் சொல்வதை உடனுக்குடன் செய்யும் திறன் கொண்ட ரோபோ, ஏ. ஐ பற்றிய ஆர்வம் சிறுவயது முதலே அவனை ஆக்கிரமித்தது.
பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால், திறமையை வளர்க்கவும் அவனுக்குத் தடையில்லாது போனது.
இப்போதோ எலைட் ரோபோடிக்ஸ் என்ற டாப் கம்பெனியின் யங்கஸ்ட் சிஇஓ அண்ட் க்ரியேட்டர் ஆஃப் ரோபோடிக்ஸ் என்ற பதவியில் உலக நாடுகளைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறான்.
அவனைக் கலங்கடிக்க ஒருத்தி வரப்போவது அறியாது, ஆஹில்யனுக்கு மீண்டும் அழைத்து, “ரித்திகா ஃபேஸ்கட்ல இருக்குற பொண்ணை உடனடியா என் வைஃப் ஆக்கணும் ஆஹில். ஹொவ் அபவுட் தி ப்ராசஸ்!” தீவிர விழியசையில் அவன் கருமணிகள் அகல விரிய,
“பொண்ணு கிடைச்சுடுச்சு பாஸ்!” என்றவன் உடனடியாக புகைப்படம் அனுப்பியதில், ஆடவனின் கலப்படக் கண்களுக்கு மேல் குடையாக விரிந்திருந்த புருவங்கள் மெல்ல மேலேறியது.
புகைப்படத்திற்கு கீழே “நிதர்ஷனா” என்ற பெயர் இருக்க, அவனது சிவந்த தடித்த இதழ்களில் அப்பெயர் சத்தமின்றி அரைபட்டதில்,
தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிதர்ஷனா வெடுக்கென எழுந்து அமர்ந்தாள். நெஞ்சம் காரணமின்றி படபடத்தது.
கனவில் கண்ட கண்கள் அவள் உறக்கத்தைப் பறித்திருந்தது.
வேகமாக எழுந்து விபூதியை நெற்றியில் அடித்துக்கொண்டவள், “பேய்க்கு கூட கண்ணு வெள்ளையாவோ சிவப்பாவோ தான இருக்கும். இதுல இந்தக் கண்ணு கலரே வித்தியாசமான கலரா இருக்கு? மகமாயி… பேய் பிசாசு நாய் நரி கருப்பு காட்டேரிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்துமா” எனப் பெரிய கும்பிடாகப் போட்டவள், பேய் கனவென நினைத்து விளக்கமாறைக் கட்டிப்பிடித்து உறங்கிப் போனாள், பின்னாளில் அவள் உறக்கம் பறிக்கும் கண்கள் என அறியாமல்!
அன்பு இனிக்கும்
மேகா