Loading

அத்தியாயம் – 2

 

ஆதிராவின் அலுவகத்தில் இருந்து வெளியே சென்றவன் அதிவேகத்தில் மகிழுந்தை செலுத்தியவாறு தன் தந்தை கூறியதை அசைப்போட்டான். 

 

“விகர்ணா இனி நம்ப டை-அப் ப்ராஜெக்ட் எல்லாம் ராமச்சந்திரன் தான் கவனிக்க போகிறார். இனி ஏ.ஆர் குரூப்பில் இருந்து ஒரு டீம் இங்கேயே வந்து ப்ராஜெக்ட் முடியும் வர ஸ்டே பண்ணி முடிக்க பெர்மிஸ்ஸன் கேட்டு அப்ரூவ் வாங்கிருக்காங்க. அதனால் அங்க உனக்கு இனி எந்த வேலையும் இல்லை. அப்பறம் தேவையில்லாமல் இனி ஆதிராவை பார்க்க போகக்கூடாது. இனி உன் இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது. உனக்கு பத்து நாள் டைம் தரேன் உனக்கும் ஆதிராவுக்கும் நடுல இருக்க பிரச்சனையை சரி பண்ண பாரு இல்லனா நான் பார்க்கும் பொண்ணை கல்யாணம் பண்ணு. ஏதாவது பிரச்சனை பண்ணனும்ன்னு நினைக்காத, அப்பறம் அதுக்கான பின் விளைவை நீ சந்திக்க வேண்டி வரும்” என்று படப்படவென்று பேசி அவனுக்கு வாய்ப்பளிக்காமல் அழைப்பை துண்டித்தார். 

 

தன் மகனை பற்றி அறிந்த தந்தை அல்லவா? அதனால் பேச இடம் கொடுக்காது பேச வேண்டியதை பேசி வைத்துவிட்டார். 

 

இதற்கு எல்லாம் அவள் தான் காரணம் என்று தெரிந்தும் எதுவும் செய்யாமல் வந்தது, அவளிடம் தான் இறங்கி போவதாக தோன்ற அவள்மேல் கொண்ட கோபம் முழுவதையும் காரின் வேகத்தில் காட்டினான்.

 

நாற்பது நிமிட பயணத்தை, வெறும் இருபது நிமிடத்தில் வண்டியை செலுத்தி அவன் இருப்பிடத்திற்கு வந்திருந்தான். அழுத்தமான நடையுடன் உள்ளே வந்தவனை கண்டு வந்த பணியாளன் ஒருவன் சாவியை தர சிறுத் தலையசைப்பை பதிலாக கொடுத்து அவன் அறைக்கு சென்றான்.

 

சட்டையின் முதல் இரண்டு பட்டனை கழட்டிவாரு அங்கிருந்த சோபாவில் விழுந்தவனுக்கு மனம் முழுவதும் அவள் என்ன திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே. 

 

ஆனால் அதற்கு காரணமானவளோ அழைப்பேசியில் யாரையோ அழைத்து அவளுக்கு தேவையானதை பெற்று குறுநகையுடன் அவனை காயப்படுத்தும் நோக்கத்துடன் அவள் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள்.

 

இரவு ஒன்பது மணியளவில் ஓயமால் ஒலித்த அலைபேசியால் இமைகளை பிரித்தான். காரிருள் தன்னை சூழ்ந்திருக்க தான் எங்கே இருக்கிறோம்? என்று விழித்தான்.

 

சிறிது நேரம் கழித்து தான், அவன் எங்கே இருக்கிறான் என்று புரிந்தது. அதிகமான யோசனையில் தூங்கியதை உணர்ந்து கலைந்திருந்த கேசத்தை சரி செய்து மின் விளக்குகளை போட்டு அழைப்பேசியை எடுத்தான்.

 

கிட்டத்தட்ட இருபது முறை ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது, யாராக இருக்கும் என்று யோசிக்கும் போது மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

 

அதை ஏற்று, “ஹலோ!” என்று கூறி முடிக்கும் முன்பே,

“விகா நான் அஞ்சலி பேசுகிறேன். என்னை யாரோ கிட்நாப் பண்ணிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு விக்கி போன் எடுக்க மாட்டேங்கிறான் என்னை காப்பாத்து” என்று பேச பேச அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

அவனுக்கு குழப்பமாக இருந்தது, தன்னிடம் பேசியது அஞ்சலி தான் என்று அவள் குரலே கூறியது. அவள் இருக்கும் இந்த நிலையில் அவளை யார் கடத்தியிருப்பார்கள் என்று யோசித்தவாறு அவள் எண்ணிற்கு அழைத்தான்.

 

அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று கூற அடுத்து என்ன செய்ய பேசாமல் காவல்துறையிடமே செல்லலாம் என்று வேகமாக எழுத்தவனுக்கு ஆதிரா அழைத்தாள்.

 

இந்த நேரத்தில் இவள் எதற்காக அழைக்கிறாள் என்று வேண்டா வெறுப்பாக ஏற்க, “விகா நான் அஞ்சலி பேசுகிறேன். என்னை யாரோ கிட்நாப் பண்ணிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு விக்கி போன் எடுக்க மாட்டேங்கிறான் என்னை காப்பாத்து” என்று அஞ்சலி பேசியதை போல பேசிக் காட்டினாள்.

 

“ஏய் எதுக்குடி அஞ்சலியை கடத்திருக்க? உன்னை போலீஸில கம்பிளைண்ட் பண்ணி என்ன செய்கிறேன்னு பாரு”

 

“அதுவரை அவ உயிரோட இருக்கணுமில்லை”

 

“உன்னை கொன்றுவேன் டி. அவளுக்கு எதாவது ஆனா” என்று கர்ஜித்தான். 

 

“நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டனா, அவளை பத்திரமா கொண்டு போய் விட்டறேன்”

 

“என்ன டி பிளாக்மெயில் செய்றியா?”

 

“எப்படி வேணாலும் நீ வைச்சுக்கோ, எனக்கு தேவையானதை சொல்லிட்டனா அவளை பத்திரமா அனுப்பிடறேன்”

 

அவளிடம் வாக்குவாதம் செய்வதை காட்டிலும் அங்கு நிறைமாத கர்ப்பிணியான அஞ்சலியே முக்கியமாக தெரிந்தாள். இப்படி அவளிடம் இறங்கி செல்வது பிடிக்கவில்லை என்றாலும் பின்பு ஆதிராவை பார்த்துக் கொள்ளலாம் என்று அஞ்சலிக்காக பொறுத்து பேசினான். 

 

“என்ன டி உனக்கு வேணும் கேட்டு தொலை” என்று அவன் கர்ஜித்ததை கூட பொருத்தப்படுத்தாமல் அவனிடம் கேட்டாள். 

 

“ஏன் என்னை காதலிச்ச மாதிரி நடிச்ச?”

 

வெளிப்படையாக உச்சுக் கொட்டிய விகர்ணன், “இப்போ அதை பத்தி பேச நேரம் இல்லை. எதுக்கு டி இந்த நேரத்தில் அஞ்சலியை கஷ்டப்படுத்திட்டு இருக்க?” என்றவன் பேச்சில் அஞ்சலி மேல் அவன் கொண்ட அன்பு அப்படியே வெளிப்பட்டது. 

 

இதற்கு தானே தவறு என்று தெரிந்தும் இந்த நிலையில் அவளை கடத்திருந்தாள். 

இப்படி எல்லாம் கேட்டால் பதில் அளிக்கமாட்டான் என்று புரிந்துக் கொண்ட ஆதிரா, “அஞ்சலி சாவுக்கு நீ தான் டா காரணம்!” என்று கூறி அழைப்பை துண்டித்தாள். 

 

அவள் துண்டித்ததும் அவள் கூறியதை கேட்டவனின் நாளங்கள் வெடிக்க தயாரான நிலையில் இருக்க, தானாக அவளை வசைபாட திறந்தது அவனது அதரங்கள்.

 

“தீரா உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என்று தொடுதிரையில் அவள் முகத்தை பார்க்க சகிக்காமல் தூக்கி எரிய அது சரியாக மெத்தையில் விழுந்தது. 

 

கோபத்தை குறைத்து கொள்ள முடியாமல் அவளை கொல்லும் வெறி ஏறியது. தூக்கி எறிந்த அலைபேசியை எடுத்தவன் கைகள் தனிச்சையாக ஒரு எண்ணிற்கு அழைத்தது.

 

“டேய் அந்த ராட்சசி அஞ்சலியை கடத்தி வைச்சுட்டு என்னை பிளாக்மெயில் பண்ணுற”

“வாட் தே ஹெல்…” என்று வார்த்தைகளை துப்பியிருந்தான்.

 

“இப்போ கோபப்பட நேரமில்ல…. அவளை சீக்கிரம் டிரேஸ் பண்ணி எனக்கு அவளோட லொகேஷன் சென்ட் பண்ணு”

“உங்க ரெண்டு பேர் பிரச்சனையில் எதுக்கு அஞ்சலியை இழுத்துட்டு இருக்கா.”

 

“அவ இருக்க லொகேஷன் சென்ட் பண்ணிட்டேன். நல்ல வேலை எதுக்கோ தேவைப்படும்னு ட்ராக்கிங் டிவைஸ அவ கார்ல பிட் பண்ணோம். நீ முன்னாடி போ…. ஒரு கிலோமீட்டர் ரெடியாஸ்ல நான் இருப்பேன். ஏதாவதுன்னா கால் பண்ணு வந்துறேன்”

 

“யாரு கண்ணுலயும் மாட்டிக்காத..”

“நான் சொல்ல வேண்டியதை நீ சொல்லுற பார்த்தியா… எல்லாம் நேரம். கிளம்பிட்டியா?”

“ஆன் தி வே…நான் டிரைவ் பண்ணுறேன் அப்பறமா பேசுறேன்” என்று காலை கட் செய்தான்.

அந்த இன்னொரு நபரும் ஆதிரா இருக்கும் இடத்திற்கு பயணிக்க ஆரம்பித்தான்.

 

அவர்கள் இருவரையும் கதறவிடுப்பவள் அஞ்சலி இருக்கும் இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் அந்த வனாந்திர காட்டிற்குள். 

 

தான் செய்த செயலால் விகர்ணன் கொலைவெறியில் இருப்பான் என்று தெரிந்தும் அவனை சீண்டும் விதத்தில் அவனுக்கு மீண்டும் அழைக்க அது அணைத்து வைத்திருப்பதாக கூறியது. 

 

சரி முதலில் அஞ்சலியை சந்தித்து அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த விருந்தினர் மாளிகைக்குள் சென்றாள். அங்கு அஞ்சலிக்கு காவலுக்காக அமர்த்தப்பட்ட நான்கு காவலாளிகள் அவளுக்கு வணக்கம் வைத்து வெளியே செல்ல, உள்ளே சென்றாள் ஆதிரா. அங்கு அஞ்சலியோ பதற்றமாக அருகே இருந்த பெண்ணிடம் அவளை விட்டு விடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

 

“அஞ்சலி” என்ற ஆதிராவின் அழைப்பில், 

“அக்கா வந்துட்டியா என்ன இவங்க கடத்திட்டு வந்துட்டாங்க, எனக்கு பயமா இருக்கு. பேபி மூவ்மெண்ட் வேகமாக இருக்கு” என்றாள் பதறியப்படி. 

 

“காம்டவுன் அஞ்சலி. ரிலாக்ஸ் நான் தான் வந்துட்டேனில்ல எதுக்கு பயம்?” என்று அவளிடம் கூறியவாறு அருகே இருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் கொடுக்க, மறுக்காமல் அதை அருந்தினாள். 

 

“அஞ்சலி எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு அது வரை நீ இங்க தான் இருக்கனும். உனக்கு எந்த பிரச்சனையும் வராது நான் சொன்னப்படி கேட்டால் நீயும் என் குட்டி பாப்பாவும் எந்த சேதாரமும் இல்லாமல் வீட்டுக்கு போகலாம்” என்று கூற ஆதிராவை அதிர்ந்துப் பார்த்தாள். 

 

“ஆதி அக்கா என்ன சொல்லுறீங்க? எனக்கு பயமா இருக்கு?” என்று கூற அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தது. 

 

“அஞ்சலி உன்னை ரிலாக்ஸ் ஆக சொன்னேன் எதுக்கு இவ்வளவு டென்ஷன்? எனக்கும் விகர்ணனுக்கும் ஒரு கணக்கு இருக்கு அதுக்கு நீ ஒரு துடுப்பு சீட்டு. உன்னை தவிர வேற யார வைச்சும் அவன்கிட்ட உண்மையை வாங்க முடியாது” என்று கூறியவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள் அஞ்சலி. 

 

திடிரென்று புதிதாக வலி எடுக்க, தன் உதிரத்தில் உருவான உயிர் வெளியே வர போகிறதோ? என்று பயம் தொற்றிக் கொண்டது அஞ்சலிக்கு. 

 

“ஆதிரா எனக்கு லேபர் பெயின் ஸ்டார்ட் ஆகுது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ” என்று இடுப்பில் மின்சாரம் பாய்ந்தது போல எழுந்த வலியில் அஞ்சலி கெஞ்சினாள். 

 

அருகில் இருந்த பெண் அவள் அப்படி கூறியதும் அஞ்சலியின் வயிற்றை தொட்டு பார்க்க குழந்தை பிறக்க இன்னும் சில மணிநேரம் ஆகும் என்பதை தெரிந்துக் கொண்டாள். 

 

“மேம் இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் ஆகும்” என்று கூற,

“அது போதும் எனக்கு” என்று விகர்ணனை அழைத்தாள். 

 

வலியில் இருந்த அஞ்சலிக்கோ பயம் தொற்றிக்கொண்டது. ஆதிராவை பற்றி தெரிந்தவள் அல்லவா, அவள் தன்னை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வது அவளுக்கு பயத்தை கொடுக்கவில்லை. ஆனால் எதற்காக இந்த நிலையில் தன்னை பயன்படுத்துகிறாள். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால்? தனக்கு ஏதாவது ஆகிவிட்டால்? என்று மனம் அலைபாய, “அம்மா……” என்று அடி வயிற்றை பிடித்து கத்தினாள். 

 

பார்க்க பாவமாக இருந்தாலும் மனதை மாற்றி அழைப்பை அவன் ஏற்பதற்காக காத்திருந்தாள். 

 

சில நொடியில் எடுத்தவன், “நீ எங்க இருக்கன்னு கண்டுபிடிச்சுட்டேன். வந்து பேசிக்கிறேன்” என்று அவன் கத்த, அவனுக்கு மேல் அஞ்சலியின் குரல் அவன் செவிகளை எட்டியது கதறலாக. 

 

“என்னடி பண்ண அஞ்சலியை” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டான். 

 

“நான் ஒன்னும் பண்ணல. அவளுக்கு லேபர் பெயின் ஸ்டார்ட் ஆகிருச்சு. நான் அவளை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்.”

 

“நீயெல்லாம் மனுஷியா டி? அவளுக்கு ஏதாவது ஆனால் உன்னை கொன்றுவேன்”. 

 

“இப்பவும் சொல்லுறேன் அவளுக்கு ஏதாவது ஆனா அதுக்கு காரணம் நீ தான். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்தா இந்நேரம் அவளை வீட்டுக்கு கொண்டு போய் விட்டிருப்பேன். அவளும் டென்ஷன் ஆகியிருக்க மாட்டாள். ஒன் வீக் அப்பறம் கொடுத்த டேட் அன்னைக்கு என் குட்டி பாப்பா வந்திருப்பான். இப்போ எல்லாம் உன்னால் தான்”

 

“ஆதிரா நான் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. நேரில பேசிக்கலாம், ரெண்டு உயிர் டி அது ப்ளீஸ்” என்று இதுவரை கெஞ்சி பழக்கமில்லாத விகர்ணன் கெஞ்சியும் மனம் இளகவில்லை நேற்று அவன் நடந்து கொண்டதில். 

 

“ஏன் என்னை காதலிச்ச மாதிரி நடிச்ச? ” என்று திரும்ப திரும்ப அவள் கேட்க அருகே வலி தாங்காமல் கதறும் அஞ்சலியின் அலறல் நன்றாக கேட்டது அவனுக்கு. 

 

அவளது அலறலில் அவன் இருதயம் தாறுமாக துடிக்க, அவளை சமாளிக்கும் நோக்கத்தில், “அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ போகாதே எனக்கு என்ன?” என்றான். 

 

சரியாக அந்த நேரம் அவள் போனை லௌட் ஸ்பீக்கரில் போட அவன் பேசியதை கேட்டு வலியில் துடித்தாள் அஞ்சலி. 

 

அவனுக்கு கேட்கும் வண்ணம் “உங்க ரெண்டு பேர் மேல கண்மூடித்தனமா பாசம் வைச்ச பாவத்துக்கு என்கூட சேர்ந்து என் குழந்தை ரொம்ப அனுபவிக்குது. பாவிங்களா உங்க சண்டையை அப்பறம் போடுங்க என்னை முதல் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க” என்று உச்சபச்ச குரலில் கத்தினாள். 

 

அவ்வளவு தான் “உனக்கே அக்கறை இல்லை எனக்கு எதுக்கு. குட் பை” என்று துண்டித்தாள். மூவர் மனமும் தகிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். 

 

‘இன்னைக்கு இது போதும் இனி தினம் தினம் ஏன்டா இப்படி ஒரு காரியத்தை பண்ணோம்னு உன்னை கதற விடல நான் ஆதிரா இல்ல’ என தனக்கு தானே பேசி அந்த பெண்மணியை பார்த்தாள்.

 

“மேடம் எல்லாம் ரெடியா தான் இருக்கு. அவங்களை இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” 

 

“நர்ஸ்” என்று கத்த இருவர் வேகமாக வந்தனர், அவர்களை தாண்டி வேகமாக அவளை நெருங்கியவனை பார்த்த ஆதிரா, “சாரி அண்ட் தேங்க்ஸ்” என்றாள். 

 

தலையை அசைத்தவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை கைத் தாங்களாக அவர்கள் தயார் செய்திருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அவர்கள் பின்னோடு ஆதிராவும் சென்றாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு அவர்கள் சென்றிருந்தார்கள். பிரசவம் பார்க்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக இருந்ததை கண்டு யோசனையாக அவளவனை பார்த்தாள். 

 

“அஞ்சு இப்போ நம்ம குழந்தையை மட்டும் யோசி, மத்ததை அப்பறம் பேசிக்கலாம்” 

 

“விக்கி கூடவே இருங்க எனக்கு பயமாக இருக்கு”

 

“இங்க தான் இருக்கேன் தங்கம்” என்று அவள் கைகளை இறுக்கி பற்றிக்கொண்டான். 

 

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு இப்பூவுலகில் கால் பதித்தது அந்த பூந்தளிர். அயர்வின் காரணமாக அஞ்சலி மயக்கத்திற்கு செல்ல, குழந்தையை கழுவி துடைத்து அவன் கையில் கொடுத்தார் மருத்துவர். மார்போடு அணைத்து தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் விக்னேஷ். 

 

ரோஜா நிறத்தில் பட்டுபோல் மின்னியது அவளின் பாதம். அதை பார்த்தவாறு வந்தவள் கையில் விக்கி கொடுக்க சிலிர்த்து போனாள் ஆதிரா. 

 

ஏதோ பேச வந்தவளை, “அப்புறம் பேசிக்கலாம். இப்போ புயல் ஒன்னு வந்துகிட்டு இருக்கு நான் போய் அதை கவனிக்கிறேன். நான் வரவரைக்கும் என் பொண்டாட்டியை பயமுறுத்தாத, பத்திரம்” என்று கூறி வெளியே செல்ல அதிவேகமாக மகிழுந்தில் வாயிலை தாண்டி உள்ளே வந்து சேர்ந்தான் விகர்ணன். 

 

வேகமாக வெளியே இறங்கியவனின் கண்கள் ரத்த சிவப்பில் அவன் கொண்ட கோபத்தை காட்டிக் கொடுக்க, 

மெதுவாக அவனிடம் சென்றான் விக்கி.

 

“எங்க போயிருந்த அஞ்சலியை தனியாக விட்டு?” என்று சட்டையை பற்றி கேட்டு உள்ளே செல்ல எத்தனிக்க, “விகா பேசணும்” என்றான். 

 

“முதல் அஞ்சலிக்கு என்னாச்சு? அந்த ராட்சசி என்ன பண்ணா?”

 

“ரிலாக்ஸ் விகா ஷி இஸ் பைன், இப்போ கொஞ்சம் வெளியே வா. நான் உன்கிட்ட பேசணும்” என்று கூட்டி சென்றான். 

 

அதை ஜன்னல் வழியாக பார்த்தவள் இதழ்கள் தானாக மலர, கையில் இருந்த மொட்டை கொஞ்ச ஆரம்பித்தாள் இரண்டாம் தாயாக. 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்