Loading

அத்தியாயம் – 19

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும், இருவரின் குணங்களிலும் மலையளவு வேறுபாடுகள் இருந்தன.

தாய் தந்தையுடன் இருக்கும் போது இருந்த இணக்கம், தாயின் மறைவுக்குப் பின், தந்தையும் மறுமணம் செய்து கொண்டு சென்ற பிறகு, சகோதரர்களுக்கு இடையில் இடைவெளி விழுந்தது.

பருவ வயது தாண்டிய பிறகே பெண்கள் மீது தனக்கு இருந்த ஈர்ப்பற்றத் தன்மையை உணர்ந்து கொண்ட தீரன், தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஆண்ட்ரூஸுடன் தொடர்பில் தான் இருந்தான்.

முதலில் இதனை அறிந்து தீரஜும் அதிர்ந்தான். தீரனிடம் கோபத்துடன் சண்டை இடவும் செய்தான்.

“என்னை என்ன பண்ண சொல்ற தீரா? எனக்கு பொண்ணுங்களோட பழக பிடிக்கல. ஐ லவ் ஹிம்.” என்றவனை நொந்து பார்த்தவன்,

“டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம் ஆது. ஏதாச்சு சொலியூஷன் கிடைக்கும்…” என்று அவனைக் கரைக்க முற்பட்டான்.

ஆனால், தீரனோ அடிபட்ட பார்வையுடன், “நான் உன்கூட இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடு. நானும் ஆண்ட்ரூஸும் வெளிநாட்டுக்கு போயிடுறோம். ஆனா, ஹாஸ்பிடல்க்குலாம் என்னால வரமுடியாது.” என்று கலங்கிய குரலில் கூறி விட, இன்னுமாக திகைத்தான்.

என்னதான், இருவரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும், அவன் மீது அத்தனை பாசம் தீரஜிற்கு. ஒரு நாள் கூட, அவனைப் பாராமல் பேசாமல் இருந்தது இல்லை.

பின், ‘ நானே அவனை புருஞ்சுக்கலைன்னா வேற யாரு புருஞ்சுக்குவா’ என்றெண்ணியவன், அதன் பிறகு அவன் போக்கிலேயே விட்டு விட்டான். சொந்த வாழ்க்கையிலும் சரி. தொழிலிலும் சரி.

ஆனால் தீரனின் சொந்த வாழ்வினாலும், தொழிலினாலும் குடைச்சல் வந்தது என்னவோ தீரஜிற்கு தான்.

சிறிது சிறிதாக தீரன் பற்றிய விவகாரம் வெளியில் பரவத் தொடங்க, அதனை இரு ஆடவர்களும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், தீரஜையும் அப்படியே எண்ணத் தொடங்கியது தொழில் வட்டம்.

அதையும் தீரஜ் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நிக்கோலஸால் அப்படி விட இயலவில்லை. வாரத்தில் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கிப் போகும் தீரஜிற்கு, ஞாயிறு பொழுது முழுதும் நிக்கோலஸுடன் தான் கழியும்.
    
சனிக்கிழமை இரவில், மொட்டை மாடியில் டின்னருடன், பல பல கதைகளும் பேசி உறங்குவர். 

நிக்கி தீரனுடன் வேலை புரிவதில், அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். அவன் காரியம் ஆக வேண்டும் என்றால், சற்று சுயநலமாக சிந்திப்பவன். ஆனால், அதை தவறும் கூற இயலாதே, அடுத்தவரை பாதிக்காதவரையில்.

நிக்கியை உறுத்தும் ஒரே விஷயம். தீரஜிற்கு திருமணம் ஆகும் வரையிலாவது அவன் உறவை வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது மட்டுமே.

அதையும் தயங்கி தயங்கி ஒரு முறை தீரனிடமே கூறி விட, “நீ தீராவுக்கு தான் ப்ரெண்ட் நிக்கி. எனக்கு இல்ல.” என்று முகத்தில் அடித்தாற்போல கூறி விட, அத்துடன் அவனைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டான்.

நிக்கியின் கூற்றை மறுக்கும் வண்ணம், அன்று நடந்த தொழில் ரீதியான மீட்டிங் ஒன்றிற்கு, ஆண்ட்ரூஸையும் அழைத்து வந்து, அவனுடன் நெருக்கம் காட்டினான்.

என்ன தான் நேரடியாக யாரும் கேட்கவில்லை என்றாலும், கிசுகிசுப்பாக அவர்களைப் பற்றிய நக்கல் பேச்சு அங்கு ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்த நக்கல் பேச்சினுள் தீரஜும் அடக்கம். அவனோ அங்கு அப்படி ஒரு  சம்பவம் நிகழவே இல்லை என்ற ரீதியில் இயல்பாக இருக்க, நிக்கிக்கு எரிச்சல் சூழ்ந்தது.

அந்த வார சனி அன்று, இரு நண்பர்களும் மொட்டை மாடி நிலவை ஆராய்ந்தபடி  படுத்திருக்க,

“மச்சி… எதுக்கும் உனக்கு ஒரு டெஸ்ட் பண்ணிடலாமா?” எனக் கேலியாக ஆரம்பித்தான் நிக்கோலஸ்.

“எதுக்குடா?” என்ற தீரஜிடம்,

“அது ஒன்னும் இல்ல மச்சி. உன் பிரதர் தான், கல்யாணம் குடும்பம் குட்டின்னு இருக்க மாட்டான்னு தெரிஞ்சு போச்சு. அட்லீஸ்ட் நீயாவது ஒரு கல்யாணம் பண்ணிப்பன்னு பார்த்தா, நீ அவனுக்கு மேல பிசினஸ் அது இதுன்னு மூழ்கிடுற. அதான், ஒருவேளை உனக்கும் ஏதாவது ஹார்மோன் ப்ராப்லம் இருக்குமான்னு…” என்று கூறி ‘ஈ’ என இளித்து வேறு வைத்து, தீரஜிடம் ஒரு குத்தை கடனாக வாங்கிக் கொண்டான்.

‘ஆ’ வென கன்னத்தை தேய்த்துக் கொண்டவன், “பின்ன என்னடா… உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா? இவன் பண்ற அலப்பரைல உன் லைஃப் சிக்கலாகுமோன்னு எனக்கு பயமா இருக்கு மச்சி. நியாயமா இதை பத்தி தீரன் தான் கவலைப்படணும்.” என்றான் உண்மையான அக்கறையுடன்.

தீரன் பெரியதாக அவனைப் பற்றி அலட்ட மாட்டான் என்பது தீரஜிற்கும் தெரிந்த விஷயமே. அதில் சலித்தவன், “இப்ப என்ன பண்ண சொல்ற?” என்றான்.

“கல்யாணம் பண்ணிக்கோ மச்சி.” நிக்கி வேகமாக கூற,

“ஆமா, என்னை கல்யாணம் பண்ணிக்க தான் ஆபிஸ் வாசல்ல பொண்ணுங்க அலை மோதுறாங்க.” எனக் கேலி நகை புரிந்தான்.

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட. உங்கிட்ட என்ன இல்ல. அழகு இல்லையா அறிவு இல்லையா… நீ எல்லாம் நல்லா வரணும்டா.” என சந்தானம் வசனத்தை உரைத்து, தீரஜ் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

பின் அவனே, “சில பொண்ணுங்க உன்னையும் தீரன் மாதிரி தான்னு நினைக்கிறாங்க தான் ஒத்துக்குறேன். அதையும் தாண்டி, மேரேஜ் ப்ரபோசல் உனக்கு வர தான செஞ்சுச்சு. நீ ஏன் அதை அவாய்ட் பண்ற?” எனக் கேட்டான்.

“ப்ச்… நிக்…” என தீரஜ் பேசும் போதே, அவனைத் தடுத்த நிக்கி, “போதும் மச்சி நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும். எனக்கு பிசினஸ் தான் முக்கியம். கல்யாணம் பொண்ணுங்க மேலலாம் பெருசா இன்டரஸ்ட் இல்ல… அதான சொல்ல போற. இப்ப அப்படி தான் தெரியும். கொஞ்ச நாள் போச்சுன்னா, நமக்கு துணையா யாரும் இல்லையேன்னு மனசு ஃபீல் பண்ணும் மச்சி.” எனப் பேசிக் கொண்டே போக,

“அட ச்சீ நிறுத்து…” என்று காண்டானான் தீரஜ்.

“பரதேசி… நான் எப்படா கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன். எனக்கு எப்போனாலும் ஓகே தான். பட் எனக்குன்னு சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு.” என்றான் நிலவைப் பார்த்தபடி.

அதில் விழி விரித்த நிக்கி தான், “என்ன மச்சி சொல்லு!” என்று ஊக்குவிக்க,

இரு கைகளையும் தலைக்கு பின்னால் கொடுத்தவனின் கண்கள் இன்னும் நிலவின் மீதே ரசனையாக படிந்திருக்க, திருமணம் பற்றிய தன் கனவினை கூறத் தொடங்கினான்.

“எனக்குன்னு வரப்போறவளை எனக்கு பார்த்த செகண்ட்ல பிடிக்கணும் மச்சி. அவகிட்ட என்ன பேசுறோம்ன்னு கூட தெரியாம, சுயநினைவே இல்லாத அளவுக்கு அவள் மேல பைத்தியமா இருக்கணும். வாரத்துக்கு ஒரு தடவை மட்டும் மொட்டை மாடி, நிலா, ரிலாக்ஸான அரட்டைன்னு இல்லாம, தினமும் மொட்டை மாடிக்கு வந்து அவள் மடில படுத்துக்கிட்டு, ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும். ஒவ்வொரு தடவ அவள் பதில் பேச வர்றதுக்கு முன்னாடியும், கிஸ் குடுத்து அவளை வெட்கப்பட வைக்கணும். அவளுக்கு ஒரு கஷ்டம்ன்னா மனசு துடிக்கணும். அந்த கஷ்டத்தை உடனே சரி பண்ண, எந்த எல்லைக்கு வேணாலும் போகணும். சின்ன சின்ன விஷயத்துக்கும் அவளோட அபிப்ராயம் தெரிஞ்சு அவளுக்கு பிடிச்ச மாதிரி நடக்கணும்.

முழுக்க முழுக்க அவளையே சார்ந்து இருக்கணும். எனக்காக ஒரே ஒரு சொட்டு கண்ணீர் விட்டா கூட, நான் மொத்தமா பிளாட் ஆகிடனும். என்னை அவள் குழந்தை மாதிரி பாத்துக்கணும். சின்ன சின்ன விஷயத்திலயும் நான் வருத்தப்படுவேன்னு ஒவ்வொண்ணையும் யோசிச்சு பண்ணனும். அவள் விஷயத்துலயும் நான் அப்படி தான் இருப்பேன்.

எனக்கும் அவளுக்கும் பேபி வர்ற டைம்ல… முதல் முதல்ல அதை அவள் என்கிட்ட தான் சொல்லணும். என் ரெண்டு பேபியையும் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கணும். தினமும், என் பெரிய பேபிகிட்டயும் வயித்துக்குள்ள இருக்குற என் குட்டி பேபிகிட்டயும் வாய் ஓயாம பேசிக்கிட்டே இருக்கணும். இப்படி நிறைய நிறைய இருக்கு மச்சி. நீ கேட்டதுனால ஒரு சின்ன சாம்பிள் மட்டும் இப்ப சொல்லிருக்கேன்…” என்று ரசித்து கூறி முடிக்க, நிக்கிக்கு மூச்சு வாங்கியது.

“ப்பா. உனக்குள்ளயும் ஏதோ இருந்துருக்கு மச்சி. செம்ம லவ் தான் போ! இத்தனை காதல் கடல்ல மூழ்கப் போற என் தங்கச்சி தான் யாருன்னு தெரியல…” என்றான் யோசனையுடன்.

பின் அவசரமாக அவன் புறம் திரும்பிய நிக்கி, “மச்சி மச்சி… இப்படியே கனவு கண்டுட்டு இருந்தா கல்யாணம் நடக்காது. நம்ம தான் இறங்கி பொண்ணு தேடணும்…” என்று ஏழரையை ஆரம்பித்து வைத்தான்.

புருவம் சுருக்கி பார்த்த தீரஜ், “அதுக்காக என்னை தெரு தெருவா அலைய சொல்றியா?” என்று முறைக்க,

“அப்படி சொல்லல தீரா. மேட்ரிமோனி பிளா பிளான்னு, இப்ப மேரேஜ் அரேஞ்சு பண்ண நிறைய வழி இருக்கு. அதுல பொண்ணு தேடலாம். இப்ப இருக்குற காலத்துல பார்த்ததும் எல்லாம் லவ் பண்ண முடியாது. பார்த்து பேசி, புரிஞ்சா தான் அடுத்த ஸ்டெப்பே போக முடியும். சோ, பார்த்தும் லவ் வரணும்ன்ற கான்செப்ட்ட மட்டும் மாத்திக்கோ மச்சி.” என்றிட, அதை மறுத்து பேச வந்த தீரஜை தடுத்தான்.

“நீ வேற எதையும் யோசிக்காத, நான் உனக்கு பொண்ணை செலக்ட் பண்ணி, ஒரு மீட்டிங் அரேஞ்சு பண்றேன். நீயும் பேசி பார்த்து உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு, மேல ப்ரொசீட் பண்ணலாம். எனக்கு நாளைல இருந்து இதான் வேலை…” என்றான் ஆர்வமாக.

அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்த தீரஜ், “என்னமோ பண்ணி தொலை” என்று விட, அதன் பிறகு வாரத்திற்கு இரு முறை, மேட்ரிமோனியில் மணப்பெண்களை தேடி, தீரஜுடன் பேச வைத்தான்.

ஆங்காங்கே தீரஜை பெண்களுடன் பார்த்ததில், அவனைப் பற்றி தவறாக கண்ணோட்டம் பரவ, நிக்கிக்கு முதலில் வந்த வதந்திக்கு இதுவே பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றியதில், அதனை நன்றாகவே பரவ விட்டான்.

“என்னை பிளே பாயாவே மாத்திட்டடா நீ!” என கடுப்படித்த தீரஜை கண்டுகொள்ளாது பெண் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இருந்தவன், அந்த வரிசையில் ரோஸியுடன் மீட்டிங் ஏற்பாடு செய்தான்.

அன்று தான், தீரன் சகோதரனை சஹஸ்ராவின் அலுவலகம் வரக் கூற, தீரஜ் மறுத்தான்.

பின், அப்பெண்ணையும் அழைத்து வந்து, ‘மீட்டிங்கை’ அலுவலகத்தில் வைத்துக் கொள்ள சொன்னதில், அவனும் அவளுடன் வந்து விட்டான்.

ஆனால், கதவைத் திறந்து கொண்டு, புயலாக அறைக்குள் நுழைந்த சஹஸ்ராவின் கோப முகம் அந்நிமிடமே தீரஜின் மனதில் கல்வெட்டாக பதிந்து விட்டது.

அவன் எண்ணியது போல அவளைக் கண்டதும் தன்னிலை மறந்தான். பெண்ணை அழைத்து வந்து சல்லாபித்தது போல பேசிய சஹஸ்ராவின் கூற்றில் சிரிப்பும் சிறு கடுப்பும் எழ, அவளை சீண்டுவதாக எண்ணி, தன்னுடன் ‘ஒன் டே ஸ்டே’ செய்ய வரக்கூறியவனின் மனதிலோ, ‘லைஃப் புல்லா என்கூடவே இருந்துடு பிரின்சஸ்…’ என்ற எண்ணமே ஓடியது.

விளையாட்டுத்தனமாக, அவளை சீண்டுவதற்காக மட்டுமே அவளிடம் அப்படி பேசி விட்டு வந்தான். ஆனால், அதில் அவள் பயந்ததும், அதன் விளைவாகவே தீரனை திருமணம் செய்ய எத்தனித்ததும் அவனுக்கு இன்றளவும் புரியவில்லை.

சஹஸ்ராவைக் கண்ட பிறகு, பெண் பார்க்கும் படலத்தை முற்றிலும் நிறுத்தி இருந்தான் தீரஜ். அவளை எப்படியாவது கரெக்ட் செய்ய எண்ணியவனுக்கு அதற்கான வழி தான் புலப்படவில்லை. முதல் சந்திப்பிலேயே பொறுக்கியாக மாறி விட்டாகிற்று. இரண்டாவது சந்திப்பாவது சரியாக அமைய வேண்டும் என அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் தான், வினோதினி தீரஜைப் பற்றி அறிந்து அவனைக் காதலிப்பதாக பின்னால் சுற்றியது. அப்போது தொழில் ரீதியான பார்ட்டி ஒன்றில், தீரஜை கண்டுகொண்ட வினோதினி அங்கும் அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூற, தனக்கு விருப்பமில்லை என்று மறுத்தவனின் விழிகள், தூரத்தில் யாருடனோ சிரித்துப் பேசிய படி நின்றிருந்த சஹஸ்ராவின் மீதே படிந்தது.

அவன் பார்வையை கண்டுகொண்ட வினோதினிக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘லவ்வ சொன்னது நானு, உன் லுக்கு அவள்கிட்ட போகுதா?’ எனக் கறுவினாள்.

அன்று, எப்படியாவது சஹஸ்ராவிடம் பேசி விடலாம் என்று முயற்சித்த தீரஜிடம் வெகு நேரமாக பேசி அறுத்த வினோதினியிடம் இருந்து தப்பித்து அவளைத் தேடி வர, அவளோ மாயமாக அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

‘சே… மிஸ் பண்ணிட்டேனே!’ எனத் தரையில் காலை உதைத்தவன், மறுநாள் கண்டிப்பாக அவளை அலுவலகம் சென்று காண வேண்டும் என்று குறித்துக் கொண்டான்.

ஆனால், அவனை நகரவே இயலாதவாறு, தீரன் அவனை வேலை சம்பந்தமாக வெளிநாட்டிற்கு உடனடியாக கிளம்ப வேண்டும் என்று விட, தீரஜிற்கு தான் கிளம்ப மனமே இல்லை. அவளிடம் காதலை பகிர்ந்து விட்டாவது செல்லலாம் என்றவனின் ஆசையை, துளியும் தெரிந்து கொள்ள விருப்பம் அல்லாது, மறுநாளே தீரஜை வெளிநாட்டிற்கு அனுப்பி இருந்தான் தீரன்.

அதற்கிடையில், தீரன் செய்த வேலைகள் அபாரம். சஹஸ்ராவை தன் வலையில் விழ வைக்க, ராவை அவளிடம் தவறாக நடக்க சொன்னவன், அவள் அவனை அடித்து விட்டு வந்ததில், கடுப்பானான்.

பிறகு, தீரஜைக் கண்டு அவள் பயப்படுவதையும், அவளின் தாய் தமக்கை பற்றியும் நன்கு அறிந்து கொண்டவன், வினோதியுடன் கூட்டு சேர்ந்து, அவர்களின் சொத்தை அவளே அறியாமல், பாதி விலைக்கு வாங்கிக் கொண்டான்.

மேலும், தீரஜை வினோதினிக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறியவன், தீரஜின் மீது சஹஸ்ரா கொண்ட பயத்தை நீக்காமல், அவனைப் பற்றிய உண்மையைக் கூறாமல், தீரஜை பெண் பித்தனாகவே சித்தரித்து வைத்தான்.

அப்போது தானே பயந்து அவனைத் திருமணம் செய்து கொள்வாள். திருமணம் செய்து விட்டால், அத்தனை சீக்கிரம் தன்னை விட்டு அவள் செல்ல மாட்டாள் என்பது அவனுக்கு உறுதி. அந்த அளவு சஹஸ்ராவின் குணங்களை படித்து வைத்திருந்தான்.

அப்படியும் அவள் தன்னைப் பற்றி அறிந்தால், சவிதாவை வைத்து அவளுக்கு ஆட்டம் காட்டலாம் என அசட்டையாக எண்ணியவனுக்கு, அவளைப் பழி வாங்க எந்த எல்லைக்கும் செல்லும் எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால், அவனது பழி வாங்கும் எண்ணத்தை ஆண்ட்ரூஸ் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சஹஸ்ராவை திருமணம் செய்து கொள்ள முற்றிலும் மறுத்தான்.

இது வெறும் கண்துடைப்பு தான் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனாலேயே, சஹஸ்ராவை உண்மையாக திருமணம் செய்யாமல், திருமணம் நடந்தது போன்ற மாயையை மட்டும் உருவாக்கினான்.

அப்படியும், அவள் அவனறையில் தங்கியதை ஒப்புக்கொள்ள இயலாமல் தான், ஆண்ட்ரூஸ் திருமணத்திற்கு பிறகு வந்து சண்டை இட்டது. பின், அவனையும் சமன் செய்தவன், அடுத்த பத்து நாட்களில் ரிசப்ஷன் நடத்தி அவர்களது திருமணத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த எண்ணினான். எப்படியும் தன்னைப் பற்றிய உண்மை யார் வழியாகவாவது அவளுக்கு தெரிய வந்து விடும் என்று ஆணித்தரமாக நம்பியவன், அவ்வுண்மை தெரியும் வேளையில் அவள் கண்களில் காணவிருக்கும் அதிர்ச்சியை ஏளனத்துடன் காண காத்திருந்தான்.

மனிதன் நினைப்பது மட்டுமே நடந்து விட்டால், கடவுளுக்கு இங்கென்ன வேலை! நாம் போடும் திட்டமெல்லாம் மறுநாள் உயிரோடு எழுந்தால் மட்டுமே நடைபெறும் என்ற எதார்த்தத்தை மறந்து போனான் தீரன்.

இது எதையும் அறியாத தீரஜ், வெளிநாட்டில் முழு மூச்சாக வேலையில் மூழ்கினான் அலைபேசியை கூட அணைத்து வைத்து விட்டு. ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் வேலையை பத்தே நாட்களில் முடித்து, இந்தியா திரும்பி சஹஸ்ராவிடம் பேச வேண்டும் என்பதே அவனின் எண்ணம். அந்நினைவில் இருந்தவனை, நிக்கோலஸினால் கூட தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதே விதியின் வலிமை.

எண்ணியவாரே, பத்தே நாட்களில் இந்தியா திரும்பி இருந்தவன், வானொலியின் வழி செவியில் பாய்ந்த பாடலை கேட்டு இதழ் விரித்தான்.

சகியே சகியே
சகித்தால் என்ன

சுகத்தில் விழுந்து
சுகித்தால் என்ன

உன் உதடும் என்
சொல்லும் ஒன்றாக உன்
நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக

உன் கண்ணில் என்
பாா்வை ஒன்றாக நீ வந்தாய்
நான் வந்தேன் நன்றாக

அவனதரங்களும், “சஹியே சஹியே…” என முணுமுணுத்தது ரசனையாக. கூடவே வெட்கப் புன்னகையும் முகத்தில் மிளிர்ந்தது. அதே மிதப்புடன், அலைபேசிக்கும் அப்போது தான் உயிரூட்டி நிக்கோலஸிற்கு அழைத்தான்.

அவனழைப்பை உடனே ஏற்ற நிக்கி பொங்கி விட்டான். “எங்கடா போய் தொலைஞ்ச! போனை தான் ஆஃப் பண்ணி வச்சுட்ட, மெயில் கூட செக் பண்ண மாட்டியா?” என்று பொறிய,

“ஒரு பத்து நாள் உன் இம்சை இல்லாம இருக்கலாம்ன்னு தான் நிக்…” என்றான் சிரிப்புடன்.

அவனிடம் விஷயத்தை எப்படி கூறுவது எனப் புரியாமல் தயங்கிய நிக்கி, “உன் உடன்பிறப்புகிட்ட பேசுனியா?” என்றான் நேரடியாக.

“இல்லடா. இப்ப தான் நான் ஏர்போர்ட்ல இருந்து வர்றேன். நேரா சஹியோட ஆபிஸ்க்கு தான் போக போறேன்.” என்று குதூகலமாகக் கூற,

“நீ மொதல்ல, பாஸை போய் பாரு தீரா. அப்பறம் மத்ததை முடிவு பண்ணலாம்” என்றவனின் குரலில் வேதனை பொங்கி வழிந்தது.

அதில் குழம்பிய தீரஜ், “என்ன ஆச்சு நிக்? ஏதாவது பிரச்சனையா?” என்று புருவம் சுருக்கி வினவ, “அதை அவனையே கேளு மச்சி. கொஞ்சம் பொறுமையா மட்டும் இரு.” என சூசகமாக பேசி விட்டு போனை வைக்க, தீரஜின் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடியது.

அத்தியாயம் 20

உடனடியாக தீரன் இருக்கும் இடத்தை அறிந்து, காரை அங்கு கிளப்பினான். பப்பில் ஆண்ட்ரூஸுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவன், அப்போதே அளவுக்கு மீறி மது அருந்தி இருந்தான்.

அவனை அங்கிருந்து நகர்த்தி காரினுள் அடைத்த தீரஜை எரிச்சலாக பார்த்த தீரன், “நீ ஏண்டா அதுக்குள்ளே வந்துட்ட அங்க வேலை முடிஞ்சுருச்சா?” எனக் கேட்டான் கையில் இருந்த விஸ்கியை வாய்க்குள் திணித்தபடி.

சாலையில் பார்வையை செலுத்தியபடியே, “அதெல்லாம் முடிஞ்சுருச்சு ஆது. இங்க எல்லாம் ஓகே தான? நிக் ஏதோ சொல்லிட்டு இருந்தான் என்ன ஆச்சு?” என வினவ,

“உன் ஃப்ரெண்டு உனக்கு ஸ்பை வேலை பாக்குறானா?” என்றே முறைத்த தீரன், “பெருசா ஒன்னும் இல்ல. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என்றான் அசட்டையாக.

விழி விரித்த தீரஜ் தான், “என்னது கல்யாணமா? யாரை? ஆண்ட்ரூஸையா?” என ஒரு மார்க்கமாக கேட்டு வைக்க, “ப்ச், இல்ல ஒரு பொண்ணை” என்றதில், சற்றே திகைத்ததோடு,

‘ஒருவேளை இவனுக்கு ஹார்மோன் பிரச்சனை சரி ஆகி, பொண்ணுங்க மேல இன்டெரெஸ்ட் வந்துடுச்சா?’ என்றே ஒரு நொடி மகிழவும் செய்தான்.

அந்த மகிழ்ச்சியை மறுநொடியே அழிப்பது போல இருந்தது தீரனின் கூற்று.

“உனக்கு கூட தெரியுமே தீரா. அந்த விஸ்வநாதன் பொண்ணு, சஹஸ்ரா… அவளை தான் மேரேஜ் பண்ணிருக்கேன்” என்றவனின் குரலில் எக்களிப்பு நிறைந்திருந்தது.

சட்டென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திய தீரஜிற்கு காரணம் தெரியாமல் விழி சிவந்தது.

‘இதென்ன சின்னப்பிள்ளைத்தனம்…’ என்று தன்னை சமன்செய்ய நினைத்தாலும், மனம் முழுதும் பரவிய ஏமாற்றத்தை தாங்க இயலவில்லை. இந்த அளவிற்கா ஒரு பெண்ணின் நினைவும், அவள் மேல் கொண்ட காதலும் மனிதனை தலைகீழாக மாற்றும்! அவனை மாற்றுகிறதே!

எச்சிலை கடினப்பட்டு விழுங்கிய தீரஜ், “எ… என்ன சொல்ற ஆது? சஹி…” எனக் கூற வந்தவன், தொண்டையை செருமிக் கொண்டு, “சஹஸ்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டியா? ஏன்? எப்படி?” என்றவனின் குரலில் அத்தனை தடுமாற்றம்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், சகோதரனின் முக மாற்றத்தையும் வேதனையையும் கண்டிருப்பான். மதுவின் தாக்கமும், பழி உணர்வும் யோசிக்கும் நிதானத்தை தரவில்லை.

இதழ்களை இழிவாக விரித்த தீரன், “வேற எதுக்கு அவளை பழி வாங்க தான்…” என்று பல்லைக்கடிக்க, தீரஜ் விழி இடுங்க பார்த்தான்.

அதன் பிறகே, நடந்தவற்றை போதையில் அவன் உளறிட, தீரஜோ சிலையாகி விட்டான்.

இதில், தீரஜை பொறுக்கியாக உருவகப்படுத்தியதையும், அவனுக்கும் வினோதினிக்கும் நிச்சயம் ஏற்பாடு செய்ததையும் அந்த போதையிலும் மறைத்து விட்டான்.

அத்துடன் தீரஜின் பொறுமை காற்றில் பறந்திருக்க, தமையனின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தான். ஏற்பட்ட அதிர்ச்சியில், காரை நிறுத்த வேண்டும் என்று கூற உணராமல் போனவன்,

“அறிவிருக்கா ஆது உனக்கு. அவங்க பேசுனது தப்பு தான். ஆனா அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடி இருக்க. தண்டிக்கணும்ன்னா, சப்பு சப்புன்னு நாலு அறை விட்டிருக்க வேண்டியது தான. அதை விட்டுட்டு… இடியட் மாதிரி வேலை பார்த்து வச்சுருக்க.” எனக் கத்தியவனுக்கு, மனம் கவர்ந்தவளின் வாழ்க்கை சிக்கலில் மாட்டி இருப்பதை உணர்ந்தாலும், அவளுக்கு தீரனை பிடித்திருக்கிறது என்ற உண்மையில் நெஞ்சம் குத்தியது.

தீரன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தீரஜை உறுத்து விழிக்க, தீரஜ் தான், “இப்பவே அந்த பொண்ணுக்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, நடந்தது ஒரு போலி கல்யாணம்ன்னு புரிய வைக்கிறேன். இல்ல இல்ல… நீயும் வந்து உண்மையை சொல்ற. இந்த மாதிரி முட்டாள்தனம்லாம் உனக்கு எப்படி தோணுச்சு ஆது” என்று கடிந்தவனிடம் தீரன் சண்டை போட, பதிலுக்கு தீரஜும் பேச வாக்குவாதம் முற்றியது.

அதில் எழுந்த கோபத்தில் தான், தீரன் ஸ்டியரிங்கை திருப்பி விட்டதும், பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர்களின் காரில் மோதியதும்.

சம்பவ இடத்திலேயே தீரன் இறந்து விட, பழைய நினைவுகளோடு அவனது பெயரை கூற மறந்து விட்ட தீரஜ்,   
புதிதாக சஹஸ்ராவின் மீது காதல் கொண்டான்.

இந்த திருப்பத்தை நிக்கோலஸும் எதிர்பார்க்கவில்லை. தீரஜின் ஆசைப்படியும், சஹஸ்ராவின் வாழ்விற்காகவும் அவன் தீரன் தான் என சஹஸ்ராவையும் தீரஜையும் நம்ப வைத்தான்.

சிறிது சிறிதாக நினைவுகள் வரத் தொடங்கிய போதும், எது உண்மை எது பொய்யென புரியாமல் குழம்பித் தவித்த தீரஜிற்கு, அவளது ‘தீரா’ என்ற அழைப்பு, மனதிற்கு நெருக்கமாக பட, அவனது உண்மையான பெயரே அது தான் என்று உணராமலேயே அவளை அப்படியே அழைக்கப் பணித்தான்.

நாள் செல்ல செல்ல நினைவுகள் திரும்பினாலும், கேரளா செல்லும் போது தான் அவனுக்கு முழு நினைவும் திரும்பியது. தான் காதலித்த பெண், தன் மனைவியாக தன்னுடன் இருப்பதை எண்ணி இதமாக உணர்ந்தவனுக்கு, சகோதரனின் இழப்பை ஈடு செய்யும் வித்தை தான் தெரியவில்லை.

அவனால் தான் அந்த விபத்தும் நிகழ்ந்தது என்று தன்னுள்ளேயே குற்ற உணர்ச்சியில் மருகியவனுக்கு ஒரே ஆறுதல் சஹஸ்ராவும், அவள் அவன் மேல் கொண்ட காதல் மட்டுமே. தன்னவள் தன்னை எப்படி எல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டானோ, அப்படியெல்லாம் அல்லவா சஹஸ்ரா அவன் மீது காதலை கொட்டினாள்!

உண்மையைக் கூறி அக்காதலை இழக்க அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. இறுதி வரை தீரனாகவே வாழ்ந்து விடும் நோக்கில், அவளுடன் திருமண பந்தத்தில் இணைந்தவன், இறுதியில் மாட்டியது அவனது கையெழுத்தாலும், இடது கை பழக்கத்தாலும் தான்.

ஒரு முறை தீரஜே அறியாமல், கோப்பில் ‘தீரஜ்’ என அவன் பெயரையே கையெழுத்திட்டவன் அதை உணரக் கூட இல்லை. அதனைக் கண்டுகொண்ட நிக்கி தான், அவசரமாக சஹஸ்ராவின் அலுவலகத்திற்கு வந்து, அந்த கோப்பை எடுத்ததும், தேவிகா அவனை சந்தேகமாக பார்த்த போது, முத்தம் கொடுத்து அவளை திசை திருப்பி விட்டதும்.

சஹஸ்ராவிற்கு உண்மை தெரிந்த போதும், இதே கையெழுத்தால் தான் மாட்டிக்கொண்டான். அதன் பிறகு, அவளுக்குப் புரிய வைக்க ஒவ்வொரு முறை முயன்றும் தோற்றவன், தன் குழந்தை உருவானதை கூட தன்னிடம் மறைத்து விட்டவளின் மீது, சினமே பொங்கியது. அதுவரையிலும் தன் மீது அவளுக்கு இருக்கும் காதலை எண்ணி அமைதி காத்தவனுக்கு, அதன் பிறகு நம்பிக்கை உடையத் தொடங்கியது.

அவளது காதல் தீரன் தான் என நம்பிக் கொண்டவனுக்கு, வலியும் கோபமும் ஒருங்கே தோன்றி, அவளை விட்டு விலக செய்தது.

அனைத்தையும் கூறி முடித்த தீரஜ், இரு விரலால், புருவ மத்தியில் அழுத்திய படி அமர்ந்திருக்க, சஹஸ்ரா பனிக்கட்டியாக உறைந்திருந்தாள்.

ஒருவனின் பழி உணர்வும், மற்றொருவனின் காதலும் தன்னை சுற்றி வலம் வந்ததைக் கூட அறியாமல், பேதை  போல தீரனின் பேச்சை நம்பி இருக்கிறோமே என்றிருந்தது சஹஸ்ராவிற்கு.

கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! என்ற கூற்றில் தான் எத்தகைய ஆழம் இருக்கிறது. மடத்தனமாக கண்ணில் காண்பதையும், காதில் கேட்டதையும் உண்மை என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன் என்றே தவித்துப் போனாள்.

தீரனை எண்ணி எரிச்சல் எழுந்தாலும், ஒரு விதத்தில் பரிதாபமும் தோன்றியது. அதற்காக, தன்னை திருமணம் செய்ததையும், அவனது சகோதரனின் குணத்தை அசிங்கமாக காட்டியதையும் சற்றும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அதே நேரம், தீரஜின் மீது இத்தனை நாட்களும் கொண்ட கோபமும், ஆதங்கமும் துளி துளியாக மறையத் தொடங்க, அப்போதென பார்த்து தீரஜே சோர்வாக,

“எனக்கு புரியுது சஹி, உனக்கு அவனை பிடிச்சு  இருந்துச்சுன்னு. ஒருவேளை அவன் உண்மையா காதலிச்சு இருந்தா, அந்த காதலுக்கு அவன் தகுதியானவனா இருந்திருந்தா, நிச்சயமா நான் அவன்கிட்ட சண்டை போட்டு இருக்க மாட்டேன். ஞாபகம் திரும்பி வந்ததும், உண்மையை மறைச்சு உன்கூட வாழ்ந்துருக்கவும் மாட்டேன். அந்த டைம்ல சுயநலமா இருந்துட்டேன் தான். ஆனா, உன்னை ஏமாத்தணும்ன்னு நான் நினைக்கல.” எனக் கண்ணை மூடியே பேசியவன், அவளது முகத்தை கூட ஏறெடுத்துப் பாராமல் வெளியில் சென்று விட, சஹஸ்ராவிற்கு ஆத்திரம் எரிமலையாக பொங்கியது.

‘நான் இவன்கிட்ட வந்து சொன்னேனா அவனை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு…! அவனா என்னமோ நினைச்சுக்கிட்டு அவனா பேசிட்டு போறான்…’ என கடுகடுத்தவள், ‘போ! போ! எங்க போனாலும் திரும்ப இங்க தான வரணும்’ என்று எண்ணும் போதே சிறு புன்னகை தோன்றியது அவளுக்கு. கூடவே, அவனை அவனாகவே காதலித்து வாழ்ந்திருக்கலாம் என்ற வேதனையும் அரித்தது.

அன்று இரவு வெளியில் சென்றவன் தான், இரு நாட்களாக வீடு திரும்பவில்லை.

‘இவனுக்கு என்ன அவ்ளோ திமிரு! அதென்ன கோபம் வந்தா வீட்டுக்கு வராம இருக்கிறது…?’ என கோபம் கொண்ட சஹஸ்ரா, அவனுக்கு போன் செய்து பார்க்க, அதையும் அவன் ஏற்கவில்லை. அவனுக்கு பதிலாக நிக்கி தான் அவளை அழைத்தாள்.

“நீ தீரஜுக்கு கால் பண்ணுனியா சஹா. அது… அவன் வேலையா இருந்தான்… அதான் என்னை பேசி என்ன விஷயம்ன்னு கேட்க சொன்னான்!” என்று தயங்கியபடி கூற,

எப்படியும் தீரஜ் அருகில் தான் இருப்பான் எனக் கணித்தவள், போனை லவுட் ஸ்பீக்கரில் போட சொன்னாள்.

ஓ! பொண்டாட்டிக்கிட்ட பேசக்கூட உங்க ப்ரெண்டு அசிஸ்டன்ட் வச்சு இருக்காரோ! அவ்ளோ பிசியா இருக்குறவரு, எதுக்கு அவரோட ஐடென்டிட்டியை மறைச்சுட்டு, என்கூட வாழணுமாம். அப்டியே இருந்துருக்க வேண்டியது தான. என்னமோ, என் வாழ்க்கையை அவரு தான் காப்பாத்தி கொடி பிடிக்கிற மாதிரி தீரனோட சண்டை போட்டு, என்கிட்ட  உண்மையை மறைச்சு…” என்று பொரிந்து தள்ளிட, லவுட் ஸ்பீக்கரில் அவளது குரலை ஒலிக்க விட்ட நிக்கி, தீரஜின் முக மாறுதலைக் கண்டு, அவள் பேச்சை முழுதாக கேட்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

இங்கோ அது தெரியாமல் சஹஸ்ரா, “ஒழுங்கா அன்னைக்கே சொல்லிருந்தா, நான் பாட்டுக்கு கிளம்பி போயிருப்பேன்ல. அதை விட்டுட்டு, என் கூட குடும்பம் நடத்தி, மாசமா இருக்குறவளை விட்டுட்டு வெளிய சுத்திட்டு இருக்கான். இவனுக்குலாம் லவ் ஒரு கேடு. வர்றவளை எப்படி எல்லாம் லவ் பண்ணனும்ன்னு லிஸ்ட் மட்டும் போட தெரியுதுல, அதை ஃபாலோ பண்ண தெரியுதா அவனுக்கு. அவனை முதல்ல வீட்டுக்கு வர சொல்லுங்க நிக்கி அண்ணா, நடு மண்டைல நச்சுன்னு அடிக்கிறேன்.” என்று தன் போக்கில் பேசிட, அதன் பிறகே எதிர்முனையில் யாருமே இல்லை என்பதையே உணர்ந்தாள்.

அவனது உதாசீனத்தில் கண்கள் கலங்கி விட, உதடு துடிக்க அமர்ந்திருந்தாள். அவளது நிலை புரியாமல் அவளைக் காண வந்த தேவிகா, “தீரஜ் ரொம்ப நல்லவன் தான் சஹா. அவனை புருஞ்சுக்கோ. உன்னை ரொம்ப லவ் பண்ணிருக்கான்.” என்று அவனுக்காக கூஜா தூக்க, சஹஸ்ரா அவளை முறைத்தாள்.

அதில், “சரி சரி… அதை விடு. ஏழு மாசம் முடியப்போகுது. வளைகாப்பு எப்ப வைக்கலாம் சஹா. இப்பவே வச்சா தான், உனக்கும் கம்ஃபர்ட்டபிள் – ஆ இருக்கும்” என்று பேச்சைத் திருப்ப, சற்றே சிந்தித்தவள், “நாளைக்கு கூட வச்சுக்கலாம் தேவ்…” என்றாள் ஏதோ முடிவுடன்.

“நிஜமாவா? சூப்பரா பண்ணிடலாம். சண்டேக்கு இன்னும் ரெண்டு நாள் தான இருக்கு அதுக்குள்ளே எல்லாம் பண்ணிடலாம். உனக்கு என்ன மாதிரி பண்ணனும்ன்னு மட்டும் சொல்லு, நானும் நிக்கியும் கலக்கிடுறோம்.” என்றவள், உடனடியாக செயலில் இறங்கினாள்.

தீரஜிற்கு தான் ஆற்றாமையாக இருந்தது. அவனும் அவளும் இணைந்து செயல்படுத்த வேண்டிய பொக்கிஷ நினைவுகளை நண்பர்களாக இருந்தாலும், மற்றவர்கள் திட்டமிடுவது வலித்தது.

ஆனால், அவளுக்கு புடவையில் இருந்து, அனைத்தும் தீரஜின் விருப்பப்படி தான் நடந்தது. அது அனைத்தும் அவனது தேர்வுகளே என்று அறிந்தாலும் சஹஸ்ரா அதனை கண்டுகொள்ளவில்லை.

வளைகாப்பு அன்று காலையிலேயே, தேவிகாவின் வீட்டினரும், நிக்கோலஸின் வீட்டினரும் அங்கு குழுமி இருக்க, மாலையில் வளையல் போடும் வைபவம்  நிகழ இருந்தது.

காலை உணவை அனைவரும் சேர்ந்து உண்டு கொண்டிருக்க, தீரஜ் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அதில் அவனையே பார்த்திருந்த சஹஸ்ரா, தேவிகாவிடம்,

“என் அம்மாவையும் அக்காவையும் வர சொல்லிட்ட தான தேவ்?” என்று வினவ, அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, நிமிர்ந்தான். அந்நேரம், சட்டென பார்வையை தேவிகா புறம் திருப்பியவள், அவளது குழம்பிய முகம் கண்டு, “அப்ப தான திரும்பி நான் அவங்க கூட போக முடியும்.” என்றிட, அவள் விழித்தாள்.

“நீ ஏன் அங்க போகணும் சஹா?” நிக்கி கேட்டதில்,

“என்ன நிக்கி அண்ணா முறை தெரியாம பேசுறீங்க. வளைகாப்பு போட்டு பொண்ணுங்க, அம்மா வீட்டுக்கு தான போவாங்க. குழந்தை பிறந்து, கொஞ்ச நாள் வரை அங்க இருக்குறது தான முறை!” எனக் கூறியபடி, தீரஜை ஓரக்கண்ணில் பார்க்க, அவனது முகம் இறுகியது.

அதனைக் கண்டு திருப்தியுற்றவள், “தேவ்… அங்க கிளம்ப ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கணும் வந்து ஹெல்ப் பண்ணு!” என்று விட்டு எழுந்து செல்ல, தீரஜின் சினப்பார்வை தேவிகாவின் மீது விழுந்தது.

“ட்ரெஸ் எடுத்து வைக்க போனவளை முறைக்காம, என்னை ஏன் நிக்கி முறைக்கிறான்…” என நிக்கியிடம் பீதியுடன் அவள் முணுமுணுக்க, “இங்க இருந்து எந்திரிச்சு போன, அவன் உனக்கு திவசமே பண்ணிடுவான்.” என்று நக்கலாக சிரித்தான்.

“பட் இது அவன் பிளான் மாதிரி தெரியல! என்னை கழட்டி விடுறதுக்கு நீயே பிளான் பண்ற மாதிரி இருக்கு!” என முறைக்க, “எனக்கு அவ்ளோ அறிவு இருந்தா உன்னை ஏன் லவ் பண்றேன் தேவ்” என்று மேலும் அவளை வாரி, பெண்ணவளின் கோபக்கனலுக்கு ஆளானான்.

அதன் பிறகு, காலில் விழுந்து சமன் செய்ததெல்லாம் தனிக்கதை. சஹஸ்ராவின் வற்புறுத்துதலில், அவளது தாய் வீட்டிற்கு நேராகவே சென்று, சுலோச்சனாவையும் வினோதினியையும் அழைத்து வந்திருந்தாள் தேவிகா.

வினோதினிக்கு வர பிடிக்கவில்லை என்றாலும், தங்கையின் மனதை கலைக்கும் நோக்கத்துடனே அங்கு வந்தவளுக்கு, அவளும் அவர்களுடன் வர இருப்பதே, அப்போதைக்கு போதுமானதாக இருந்தது. மீண்டும் அவள் இந்த வீட்டிற்கு வரவே கூடாதபடி, இருவரையும் பிரிக்க அப்போதே திட்டம் தீட்டினாள்.

சுலோச்சனா தான், சவிதா வயது வந்ததை தன்னிடம் கூறவில்லை என சஹஸ்ராவிடம் சண்டை பிடிக்க, அது எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை அவள்.

எங்கே, அவளது கண்கள் முழுதும், அவளைப் பாராமல் தவிர்க்கும் தீரஜின் மீதல்லவா இருந்தது.

அவன் எடுத்துக் கொடுத்த புடவையை அணிந்து, சிசுவை தாங்கியபடி அழகு சிலையாக வந்தவளை ஏறெடுத்துப் பாராமல் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், வேலையே இல்லை என்றாலும், வேலை பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தான்.

அவள் கீழிறங்கி வரும் போதே, அவனது மனக்கண்ணிற்குள் அவளை சிறைப்பிடித்ததை அவள் அறியவில்லை.

‘கொஞ்சமாவது திரும்பி பார்க்குறானா… அடுத்த குழந்தைக்கும் என்கிட்ட தாண்டா நீ வரணும்!’ என பல்லைக்கடித்தவள், ‘இதுக்கும் சேர்த்து உன்னை அலைய விடுறேன் இரு!’ என்று கறுவிக் கொண்டாள்.

முதன் முதலில் அவனையே வளையல் போட சவிதா அழைக்க, கருமமே கண்ணாக அவள் கையைப் பிடித்து வளையலை அணிவித்தவன், அவளது கன்னத்தில் சந்தனம் பூச எத்தனிக்க, அந்நேரம் இருவரின் விழிகளும் ஒரு நொடி இதமாக தீண்டிக் கொண்டது.

தாய்மைக்குரிய பூரிப்புடன், கன்னம் முழுதும் பரவிய சந்தனம் அவளது மஞ்சள் முகத்தை மேலும் மிளிர வைக்க, அழகுப்பதுமையாக தன்னெதிரில் அமர்ந்திருந்தவளைக் கண்டு அவனுக்கு தான் அவஸ்தையாகி போனது.

இதற்கு தானே, அவளைக் காணாமல் தவிர்த்தான். இருவரும் விழிகளை திருப்பாமல் போனதில், தேவிகா, “நீயே இவ்ளோ நேரம் வளையல் போட்டா மத்தவங்க எப்ப போடுறது…” என்று இருவரையும் சுயநினைவுக்கு கொண்டு வர, “சிவபூஜை கரடி…!” என வாய்க்குள் அவளை வறுத்து எடுத்தவன், அவளை தாண்டி செல்லும் போது, காலை ஏறி மிதித்து விட்டு தான் சென்றாள்.

“ஐயோ அம்மா காலு!” என அரற்றியவளின் சத்தம், அந்த விஷேஷ கலவரத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை பாவம்!

நன்முறையில் வளைகாப்பு முடிந்ததும், சஹஸ்ரா, “நான் இன்னும் கொஞ்சம் திங்க்ஸ் எடுத்து வைக்க வேண்டியது இருக்கு மா. சேர்ந்து போய்டலாம்.” என்று சுலோச்சனாவிடம் கூறி விட்டு அறைக்கு செல்ல, தீரஜ் பொறுமை இழந்தான்.

‘ஏதோ போனா போகுதுன்னு விட்டா, யாரை கேட்டு இவள் இங்க இருந்து போகணும்ன்னு முடிவெடுத்தா’ எனக் கடுகடுத்தபடி, அறைக்கு செல்ல, அங்கு கண்ணாடி முன் நின்று, இடை வரை தொங்கிய பூச்சடையுடன், கன்னம் தாங்கிய சந்தனத்தையும், கையில் அவளவன் அணிவித்த வளையலையும் ரசித்துப் பார்த்திருந்தவளின் தோரணை, ஆடவனைக் கவர்ந்திழுத்தது.

மெதுவாக அவளின் பின்னால் சென்று நின்றவன், அவளை ஆழ்பார்வை பார்க்க, அவனை எதிர்பார்த்திருந்தவள், அவனது பார்வையில் திணறினாள்.

ஏதேதோ பேச நினைத்து அது தொண்டைக்குள்ளேயே தொலைந்து போக, திக்கித் திணறி, “நான் கிளம்பணும். டைம் ஆகுது” என்றாள்.

அவளையே உச்சி முதல் பாதம் வரை அளந்தவன், “போ! நான் ஒன்னும் உன்னை தடுத்து நிறுத்தலையே!” என்றிட, அவளுக்கு புஸ் என்று ஆனது.

அவனோ அதோடு நிற்காமல், அவளது செவி மடலில் இதழை அழுத்தி, “ஆனா, ஒரு கண்டிஷன். இப்ப போக வேணாம். கொஞ்ச நேரம் கழிச்சு நானே கொண்டு போய் விடுறேன்.” என்றதில் சிலிர்த்தவள், அவனை விட்டு விலகி, “கொ… கொஞ்ச நேரம்ன்னா எப்போ?” என்றாள் முகத்தை சுருக்கி. போகவேண்டாம் என்று கோபப்படுவான் என்றல்லவா அவள் எண்ணினாள்!

“ம்ம். ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு!” என யோசனையுடன் கூறியவன், அவளை மேலும் நெருங்க, அவளோ மீண்டும் விலகி, “கண்டிப்பா டிராப் பண்ணுவ தான?” எனக் கேட்டாள்.

“கண்டிப்பா… ட்ரஸ்ட் மீ!” என்றதில், “சரி நான் அம்மாட்ட சொல்லிட்டு வரேன்…” என்று நகர எத்தனிக்க, அவளது பூசிய இடையை வளைத்தவன், “நானே சொல்லி அனுப்பிட்டேன்.” என்றான் நிதானமாக.

திருதிருவென விழித்தவள், “ஓ!” என்று நெளிந்து, நகர போக, இம்முறை விலக இயலவில்லை.

விழி நிமிர்த்தி, “என்ன பண்ற?” எனக் கேட்டவளுக்கு, அவன் கண்கள் தெரிவித்த காதல் போதையில் கன்னங்கள் சிவந்தது.

அச்சிவப்பில் மேலும் கிறங்கியவன், பல மாத பிரிவில் வாடிப்போன காதலை அக்கூடலில் உயிர்ப்பிக்க எண்ணி, பெண்ணின் மேனி முழுதிலும் அச்சாரம் பதிக்கத் தொடங்கினான்.

ஏழு மணி அளவில் அவளை வீட்டில் விடுவதாக வாக்கு கொடுத்தவன், இரவு பதினோரு மணி வரையிலும் அவளை விட்டு சிறிதும் நகரவில்லை. அவளும் அவனை நகர விடவில்லை என்பதை உணரவும் இல்லை…

இருவரின் மோன நிலையும் நள்ளிரவு வரையிலும் தொடர்ந்திட, சற்றே கண்ணயர்ந்த தீரஜ், உறக்கத்திலேயே அருகில் இருப்பவளின் துணையை நாட, அப்போது தான் அவள் அருகில் இல்லை என்பதே உறைத்தது.

வெடுக்கென எழுந்தவனுக்கு, இத்தனை நேரம் நிகழ்ந்தது கனவோ என்றே தோன்றியது. ஆனால், தன் மீது ஒட்டி இருந்த பெண்ணவளின் சந்தனமும், அவள் சூடி இருந்த மல்லிகையை தாங்கி இருந்த கட்டிலும் உண்மையை உறைக்க, அவளை தேடி கீழிறங்கி சென்றிட, ஹால் சோபாவில் உறங்கி கொண்டிருந்தவளைக் கண்டவனுக்கு மோகம் நீங்கி, ஆத்திரத்தில் நரம்பு சூடானது.

யாரோ இவள்(ன்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
93
+1
6
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்