Loading

அத்தியாயம் 19:

வேண்டும் என்றும் கூற இயலாமல், வேண்டாம் என்றும் மறுக்க இயலாமல் வான்மதி தான் தவித்துப் போனாள்.

சில நொடிகள் அவளையே ரசித்த ஆரவ், “‘நோ’ ன்னா ஓகே கண்ணம்மா. ரொம்ப யோசிக்காத.” என மென்மையாகவே கூறி விட்டு, நகர போக, அவள் சட்டென அவனின் சட்டையின் கைப்பகுதி நுனியை பற்றிக் கொண்டு, தலையை உயர்த்தாமல் நிற்க, ஆரவிற்கு உள்ளுக்குள் மென்சாரலே அடித்தது.

அவளே குரல் எழும்பாமல் “வீட்டுக்கு போயிட்டு…” என்று கூற, “அப்போ வீட்டுக்கு இப்பவே போகலாமா?” எனக் கேட்டான் குறும்பு கொப்பளிக்க.

“ம்ம்.” என தலையசைத்தவள், வெட்கத்தின் பிடியில் சிக்கி இருக்க,

“கிளம்பி கார்ல வெய்ட் பண்ணு மதி. நான் சுதாகரை பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று கார் சாவியை கொடுத்து விட்டு, வெளியில் செல்ல, அவன் சென்ற பிறகே இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டாள்.

சிந்தனைகள் எங்கோ பறக்க, லேசாய் மன வலி உள்ளத்தை தைக்க, கரங்கள் கடைக்கான ஸ்டாக் சரி பார்க்கும் வேலையை கடமையென செய்தது சுதாகருக்கு.

“க்கும்…” என்ற ஆரவின் குரலில் தான் தன்னிலை பெற்ற சுதாகர், அவனை நிமிர்ந்து பாராமல், “சொல்லு ஆரவ்? மதி அவ ரூம்ல தான் இருக்கா.” என்றான் அவளைக் காண வந்திருக்கிறான் என்றெண்ணி.

“எப்போ பாரு அண்ணனும் தங்கச்சியும் என்னமோ தரையில புதையல் தேடுற மாதிரி தரையை பார்த்தே பேசுனா நான் சுவத்து கிட்ட தான் பேசணும்.” என அவன் நக்கலடிக்க,

அதில் ஒரு கணம் விழி நிமிர்த்தி அவனை முறைத்த சுதாகர், “என்னன்னு சொல்லு” என்றான் உர்ரென.

அதில் அவன் முதுகில் பட்டென ஒரு அடி அடித்த ஆரவ், “அதை மூஞ்சிய நல்லா வச்சு தான் கேளேன்.” என்றதில், அனைத்து பற்களையும் காட்டுவது போல் பாவனை செய்தவன், “ஈ. என்னன்னு சொல்லு” என்றான் கடுப்பாக.

“இதுக்கு முன்ன இருந்த மூஞ்சியே பெட்டர்.” என ஆரவ் மீண்டும் வார, சுதாகர் சிறிதாய் புன்னகைத்தான்.

ஆரவும் மெல்ல இதழ் விரித்து, பின் இடுங்கிய புருவங்களுடன், “நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்!” என்றிட, சுதாகர் என்னவெனப் பார்த்தான்.

தனக்கு வேண்டியதைக் கூறியதும், சற்றே திகைத்த சுதாகர்,

“வேணாம் ஆரவ். இப்ப தான் அவள் முகத்துல கொஞ்சம் சிரிப்பை பார்க்குறேன். மறுபடியும் ஏன் முடிஞ்ச விஷயத்தை நோண்டனும். அதுவும் இல்லாம, உனக்கு தான் இன்னும் தேவையில்லாத பிரச்சனை ஆகும். அந்த பரதேசியை ரெண்டு பேரும் தலைமுழுகிடுங்களேன்.” என்றான் பாவமாக.

பின் அவனே, “உடனே உன் தங்கச்சியோட இந்த நிலைக்கு காரணமானவன் மேல உனக்கு கோபமே வரலையான்னு கேட்காத. கோபம் என்ன கொலைவெறியே வருது. இப்போ கூட நான் அவனை பார்த்தேன். அடிச்சே கொன்னுடுவேன்.

ஆனா, கோபத்தை விட எனக்கு அவள் நிம்மதி தான் முக்கியம். ஏற்கனவே, இன்னும் அவன் மேல குடுத்த கேஸ் அப்டியே ஓடிட்டு தான் இருக்கு ஆரவ். ஒரு ஹியரிங் கூட அவன் வரல. இவளும் அந்த கேஸை விடுற மாதிரி தெரியல. இப்ப நீ வேற ஏன் ஆரவ் இதை…” என கூற வரும் முன்,

“உன்னால பண்ண முடியுமா முடியாதா?” ஒரே கேள்வியில், ‘இத்தனை நேரம் நீ பேசியது நேர விரயம்’ என உணர்த்தியவனை பெருமூச்சுடன் பார்த்தவன்,

“ஆனாலும் ரெண்டு பேரும் இப்படி பிடிவாதம் பிடிக்காதீங்க. சரி செஞ்சு தொலைக்கிறேன்.” என்றான் சலிப்பாக.

“தட்ஸ் குட்!” என சிறு சிரிப்புடன் கூறிய ஆரவ், காரை நோக்கி நடக்கும் சில நொடிகளுக்குள்ளேயே எண்ணங்கள் பலவாறாக தறிகெட்டு ஓடியது அவனுக்கு.

அடுத்து செய்ய வேண்டியவைகளை திட்டமிட்டு இருந்தாலும், மனதோரம் ஒரு வித வலி உறுத்திக்கொண்டே இருந்தது.

அதுவும், காரினுள் அமர்ந்து இஷாந்திற்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த வான்மதியைக் கண்டதும், உள்ளுக்குள் அமிழ்ந்து போக, ரெடிமேட் புன்னகையை இதழ்களில் தவழ விட்ட படி, அவளுக்கு மறுபக்கம் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவனைக் கண்டதும், “சுத்திக்கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க. இன்னைக்கு ஆபிஸ் கூட வந்துருப்பான் போல… ஏதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்டாள் புரியாமல்.

“ஏன் ப்ராபளம்ன்னா தான் உன் அண்ணன்ட்ட பேசணுமா? அவன் என்ன குறை தீர்க்கும் குழுவோட தலைவனா?” என்று ஆரவ் நக்கலாகக் கேட்க, அவனை முறைக்க எத்தனித்தவளுக்கு சிரிப்பே தோன்றியது.

அத்துடன் அக்கேள்வியும் மறக்கடிக்கப்பட, வானொலியை ஒலிக்க விட்டவன், அவளுடன் பேச்சை வளர்க்கும் பொருட்டு, “உனக்கு எந்த மியூஸிக் டைரக்டர் பிடிக்கும்?” என்றான் காரை வளைத்தபடி.

“ஏ. ஆர். ரஹ்மான் ஃபார் எவர். அதுவும் காலேஜ் டேஸ்ல எந்திரிச்சதும், தூங்கும் போதும் டேப்லட் மாதிரி அவர் மியூசிக் – அ கேட்டா தான் அந்த நாள் வேலையே ஓடும்.” என ஆர்வத்துடன் அவள் பதிலளிக்க,

அவனோ “ரியலி… எனக்கும் ஏ. ஆர். ரஹ்மான் தான் பேவரைட்.” என்றான் விழி விரித்து.

“பட். நீ சொல்ற மாதிரி டெய்லி கேட்கணும்ன்னா ஃபர்ஸ்ட் சாய்ஸ் இளையராஜா.” என்றதில்,

“ப்ச். இளையராஜாவும் ஏ. ஆர் ரஹ்மானும் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது ஆரவ். எல்லாரும் ஹீரோக்காக டைரக்டருக்காக கதைக்காக தான் தியேட்டருக்கு போவாங்க. நான் ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்ன்னு சொல்லிட்டாலே, ஃபர்ஸ்ட் ஷோ போய்டுவேன். சுத்தியும் நானும் வீட்ல பொய் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடுவோம். ஆனா என்ன சில படம் மொக்கை ஆகிட்டா, சாங் வரும் போது மட்டும் முழிச்சுட்டு மீதி நேரம் தூங்கிடுவோம்.” என்று நமுட்டு சிரிப்புடன் கூற, அவனும் சிரித்து விட்டான்.

அதன் பிறகு, என்ன பேசினார்கள் என்றெல்லாம் அவர்களுக்கே நினைவு இல்லை. ஆனால், வானொலியுடன் சேர்ந்து அவர்களின் பேச்சு சத்தமும் காரை நிறைக்க, இடை இடையே, மெல்லிய சிரிப்பு சத்தமும் வழிந்தோடியது.

“இவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரை பிடிக்கும் உங்களுக்கு” என அவனைப் பற்றி அறியும் ஆவலில் அவள் வினவ, “ம்ம்… சந்தோஷ் நாராயணன். அதுவும் ‘கண்ணம்மா’ சாங் ரொம்ப பிடிக்கும். அந்த சாங்க்காகவே சந்தோஷ் நாராயணனும் பிடிக்கும்” என்றான் கண் சிமிட்டி.

சிறிதாய் ஒரு வெட்கம் சூழ, “அதென்ன கண்ணம்மா?” எனக் கேட்டாள்.

“ஏன் பிடிக்கலையா?” அவன் மீண்டும் வினவ, “பிடிச்சு இருக்கு. ஆனா கூப்பிடாதீங்கன்னு சொன்னா கேட்க தான் மாட்டுறீங்க.” என்றவளின் குரலில் இப்போது வேதனை இல்லை. சிணுங்கலே இருந்தது.

“பிடிச்சதை ஏன் அவாய்ட் பண்ணனும் கண்ணம்மா…” என நிறுத்தி நிதானித்து ஆரவ் கேட்க, அவளிடம் பதில் இல்லை அதற்கு. சில நொடிகள் கழிய, “என்னை ஏன் அப்படி கூப்புடுறீங்க?” என்றாள்.

“ம்ம்ம்… எக்ஸ்ப்ளெய்ன் பண்ண முடியல. எனக்கு பாரதி கவிதைகள் ரொம்ப பிடிக்கும். சிலது மனப்பாடமே பண்ணிருக்கேன். அதுல வர்ற கண்ணம்மா பத்தின கவிதைகள் ஸ்கூல் படிக்குற டைம்ல இருந்தே மனசுல பசை மாதிரி ஒட்டிடுச்சு.” என்று புன்னகையுடன் கூறியவனை, புருவம் உயர்த்தி பார்த்தவள்,

“மனப்பாடமே பண்ணிருக்கீங்களா? நான் படிச்சு இருக்கேன். ஆனா, அந்த அளவு பெரிசா இன்வால்வ் ஆனது இல்ல. ஒரு பாரதியார் கவிதை சொல்லுங்களேன்.” எனக் கேட்டாள் தலையை சரித்து.

சில கணம், ஸ்டியரிங்கில் தாளமிட்டவன், “உன்ன கண்ணமான்னு கூப்பிட கூட இந்த கவிதை தான் காரணம். இதை கேட்கும் போதும், நினைக்கும் போதும் உன் முகம் மட்டும் தான் ஞாபகம் வரும்” என அவளின் விழிகளை ஊடுருவி விட்டு காரை சாலையோரம் நிறுத்த, அவளுக்கு ஆர்வம் தாளவில்லை.

அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவன், அவளை ஆழமாய் நோக்கியபடியே, தன் கணீர் குரலில் கூறத் தொடங்கினான்.

கண்ணத்தில் முத்தமிட்டால்…
உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் –
மனது சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் –
எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் –
எந்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? –
கண்ணம்மா ! என்னுயிர் நின்ன தன்றோ?

அடி பிசகாமல், குரல் தேய இறுதி வரிகளை கூறி முடித்தவன், இமைக்காமல் அவளைப் பார்த்திருக்க, பல முறை படித்திருந்தாலும், ஆடவனின் குரலில் வெளிவந்த அவ்வரிகளிலும், அக்குரல் வெளிப்படுத்திய உருவமற்ற காதலிலும், அவ்வுருகலிலும், விழி தீண்டலிலும் அவள் தான் கண் சிமிட்ட மறந்திருந்தாள்.

சிமிட்டிட மறந்ததாலா அல்லது சொல்ல மறுக்கப்பட்டிருந்த காதல் நெஞ்சம் தாண்டி வழிந்ததாலா எனப் புரியாமல், இருவரின் விழிகளும் கலங்கி இருக்க, அதனை மற்றவர்களுக்கு காட்டாமல் சட்டென மறுபுறம் திரும்பிக் கொண்டனர்.

ஜன்னலோரம் பார்வையைப் பதித்து, அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, அவனும் காரை ஸ்டார்ட் செய்து, கையை ஜன்னலில் வைத்தபடி பெருவிரலால் விழியோரம் துளிர்த்திருந்த நீரை சுண்டி விட்டான்.

அதன்பிறகு இருவரிடமும் பெரும் அமைதி நிலவ, வீட்டை அடைந்ததும், ஆரவ் உறங்கி இருந்த இஷாந்தை தூக்கிக் கொண்டு அவனறைக்கு செல்ல, அவளும் அவளின் அறையில் புகுந்தாள்.

மனம் சஞ்சலத்தில் மிதக்க, ‘இதுக்கு மேல முடியாது முகில். உங்ககிட்ட கத்தி சொல்லணும் போல இருக்கு… நான் உங்களை காதலிச்சேன்னு. சொன்னா… உங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்…?’ என தனக்குள் கேட்டுக்கொண்டு மெலிதாய் இதழ் விரித்தாள்.

இங்கோ முகத்தில் நீரை வாரி இறைத்த ஆரவ், ‘சொன்னா… என்னை என்னடி நினைப்ப நீ. அப்பவே ஏண்டா என்னை கல்யாணம் பண்ணலன்னு கேட்டா… நான்… நான் என்னடி சொல்லுவேன். உன்ன அவ்ளோ தூரம் மனசுல நிறைச்சுட்டு, இன்னொருத்தியை ஏண்டா கல்யாணம் பண்ணுனன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்ல முடியும்…?’ என்றவன் மீண்டும் நீரை முகத்தில் அடித்தான்.

வான்மதி, கழுத்தில் இருந்த செயினை திருகியபடி, ‘அப்போ அப்பவே நான் உங்களை காதலிச்சு இருக்கேனா முகில். அது வெறும் க்ரஷ் இல்லையா. அவ்ளோ காதலிச்சுட்டு அப்போ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்லுவேன். என் வீட்ல ஒத்துக்கலைன்னு சொல்லவா? உங்களுக்கு குடும்பம் இல்ல. எங்க அளவு வசதி இல்ல. ப்ரெண்ட்ஸ் சேர்க்க சரி இல்லன்னு வீட்ல வேணாம்ன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னா… நானும் உங்களை அப்படி தான் நினைச்சேன்னு என் மேல கோபப்படுவீங்களா?’ என எண்ணி திகைத்தவளுக்கு விழியில் நீர் நிறைந்து நின்றது.

குளியலறையில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டவன், ‘வேணாம் கண்ணம்மா. உங்கிட்ட சொல்லி, இன்னும் இன்னும் உன்ன கஷ்டப்படுத்த நான் விரும்பல. இப்போ இந்த நிமிஷம், நான் உன்னை விரும்புறேன். உனக்கும் என்னை பார்த்தா நான் நினைச்ச மாதிரியே பட்டாம்பூச்சி பறக்குது.’ என எண்ணி அழகாய் புன்னகைத்துக் கொண்டவன்,

‘இப்போ நமக்குள்ள இருக்குற காதலை நான் உடைக்க விரும்பல. அட்லீஸ்ட், அப்போ இருந்த காதலை தான் சொல்லல. இப்போ இருக்குற காதலை சொல்லலாமே…’ எனப் பின்னந்தலையை கோதியபடி வெட்கப் புன்னகை வீசினான்.

கண்ணை அழுந்தத் துடைத்துக் கொண்ட வான்மதி, ‘நீங்க என் மேல கோபப்படுறதை என்னால தாங்க முடியாது முகில். வீட்ல எதிர்த்து பேச தைரியம் இல்லாம, அப்போ வேணும்ன்னா உங்களை நான் இழந்து இருக்கலாம்.

ஆனா, இப்போ… இப்போ அதே காதல் அதை விட பல மடங்கு பெருகி இருக்கு. உரிமையா என் பக்கத்துல நீங்களும் இருக்கீங்க. சோ, இப்போ இருக்குற இந்த காதல் எனக்கு போதும். எப்படி பார்த்தாலும், நான் பேராசை பட்ட மாதிரி என்ன பார்த்து நீங்க ஃபிளாட் ஆகிட்டீங்க…’ என எண்ணும் போதே, தலையில் அடித்துக்கொண்டவள், ‘சே… என்ன நினைப்பு இது’ என தன்னையே திட்டிக்கொண்டாள்.

கூடவே, முகமும் மலர்ந்திருக்க, அறையை விட்டு வெளியில் வந்தாள். அந்நேரம் அவனும் அறையில் இருந்து வெளியில் வர, இருவரும் தயக்கமாய் புன்னகைத்துக் கொண்டனர்.

அவன் கூறிய ‘பட்டர்ஃபிளை கிஸ்’ நினைவு வந்து அவளுக்கு செம்மையைக் கொடுத்தது. அதனை ரசித்தபடியே அவளருகில் நெருங்கிய ஆரவ், சிறிய இடைவெளி விட்டு நிற்க, அவள் தான் ‘அப்படியே ரூம்க்கு ஓடிடுவோமா?’ என்ற தீவிர சிந்தனையில் இருந்தாள்.

நடுக்கம் கொண்ட பெண்ணவளின் கரங்களை பற்றிக் கொண்ட ஆரவ், “பிடிக்கலைன்னா வேணாம் கண்ணம்மா! ஷிவர் ஆகாத.” என்றான் மெதுவாக.

“பி… பிடிக்கலைன்னு இல்ல…! கொஞ்சம் பயமா இருக்கு.” என திக்கி திணறி கூற, அவன் சின்ன புன்னகையுடன், “நான் ஜாம்பி இல்ல மதி. உன் ரத்தத்தை உறிஞ்சிட மாட்டேன்” எனக் குறும்பாக கூறிட, அவள் குறுநகை புரிந்தாள்.

அதில் இன்னும் அவளை நெருங்கியவன், முகம் நோக்கி குனிய அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

“ம்ம்ஹும். பட்டர்ஃபிளை கிஸ்க்கு கண்ண மூடக் கூடாதுடி.” என ஹஸ்கி குரலில் ஆரவ் கூறியதில், விழி திறந்தவள், அவனைப் பார்க்க இயலாமல் “எனக்கு… கூச்சமா இருக்கு ஆரவ் ப்ளீஸ்.” என்றாள் தவிப்புடன்.

“அப்பறம் எப்படி நான் சொல்லிக்குடுக்குறதாம்? ம்ம்?” எனக் கேட்டுக்கொண்டே, அவளின் கன்னத்தோடு அவனின் ஒரு கன்னம் வைத்து உரசியவன், தன் இமை கொண்டு அவளின் இமைகளின் மீது வைத்து சிமிட்டினான்.

அவளுக்குத்தான் இமைகள் படபடக்க, லேசாய் முளைத்திருந்த அவனது தாடி கன்னத்தில் உராய, இரு விழி இமைகளும் பதமாய் தீண்டியது.

அவளுக்கு தான் உண்மையில் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல இருக்க, “கண்ணும் கண்ணும் கிஸ் பண்ணிக்கிறது தான் பட்டர்ஃபிளை கிஸ்…” என விளக்கமளித்தான் அவள் நெற்றியில் முட்டி.

இதழ்கள் பதியவில்லை தான். ஆனால், பல முத்தங்களை பெற்று விட்டது போல அவளுக்குள் சிலிர்க்க, “ஒன் மோர்” எனக் கேட்டான் குறும்பு மின்ன.

அவளோ கண்ணை திறக்கவே இல்லை. அதில் மெல்ல நகைத்தவன், பின், “கண்ணுல மட்டும் பண்ணனும்ன்னு அவசியம் இல்ல. கன்னத்துலையும் பண்ணலாம்.” என்று விட்டு, இமைகள் கொண்டு கன்னங்களிலும் சிமிட்டியதில், கன்னத்திலும் குறுகுறுத்தது.

அவனை மெல்ல விலக்கி, கன்னத்தை தேய்த்துக் கொண்டவள், “கூசுது ஆரவ்.” என்றாள் உதட்டைக் கடித்து.

அதற்கும் மந்தகாசப் புன்னகை ஒன்றை வீசியவன், “ஒன் மோர் அகைன்?” எனக் கேட்டு, அவளின் முகம் முழுக்க பட்டாம்பூச்சியாய் வலம் வந்தான்.

அத்தியாயம் 20:

“நான் திரும்ப டெல்லி போலாம்ன்னு இருக்கேன்.” மறுநாள், ஆரவின் அலுவலகத்திற்கு வந்த லயா, யோசனையுடன் உரைக்க, கவின் பதிலேதும் சொல்லவில்லை.

ஆரவ் தான், “இப்போதைக்கு போற ஐடியா இல்லைன்னு சொன்ன?” எனக் கேட்க,

“இங்க இருந்து என்ன பண்ண? அதான்…” என்றவளின் பார்வை ஒரு நொடி கவினின் மீது படிய, அவன் கவனமாக இஷாந்திற்கு பாலை புகட்டிக் கொண்டிருந்தான்.

ஆரவ் அவளை ஆராய்ச்சியாய் நோக்குவதைக் கண்டு, சட்டென தன்னை மீட்டவள், “நீ அவளை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. டாக்டர் பட்டத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு இங்கேயே இருந்துடுறேன்.” என கண்ணடிக்க,

“போடி அரை லூசு…” என அவள் தலையில் தட்டியபடி எழுந்தவன், “நான் மீட்டிங் போயிட்டு வரேன். இஷுவ பார்த்துக்கோங்க” என்று விட்டு வெளியில் விரைந்தான்.

ஹேமா பதற்றத்துடன் ஆரவின் அருகில் வந்து, டேய் “டேய். தன்வியை காணோம்டா” என கூற, “என்னது? காணமா?” என்றான் குழப்பமாக.

“ஆமா, அந்த டாக் நேத்து நைட்டுல இருந்து மிஸ்ஸிங்டா. போனும் ஸ்விட்ச் ஆஃப். எங்க போனான்னு தெரியல.” என்றதில், “ஒருவேளை ஊருக்கு போயிருப்பான். ஈவினிங் வரை பார்க்கலாம். இல்லன்னா அவன் அப்பாவுக்கு கால் பண்ணி கேளு.” என்றான்.

சில நேரம், வீட்டு நினைவு வந்து விட்டால், சொல்லாமல் கொள்ளாமல் பெட்டியை தூக்கிக்கொண்டு ஊர் பக்கம் சென்று விடுவான். ‘ஆனா… போனதும் போன் பண்ணிடுவானே’ என சிந்தித்தபடி ஆரவ் வேலையைத் தொடர,

இங்கு கவின் தான், “எப்போ போற டெல்லிக்கு?” எனக் கேட்டான் லயாவிடம்.

“இன்னைக்கு கூட கிளம்பலாம்…” எனத் தோளைக் குலுக்கியவள், “கிளம்பவா?” எனக் கேட்டாள் அவனை அளந்தபடி.

“உன் இஷ்டம்! என்கிட்ட ஏன் கேக்குற?” அவன் முணுமுணுப்பாக பதிலளிக்க, “ம்ம். பிளைட் டிக்கெட் போட்டு தர்றதுக்கு தான்…” என்றாள் வெகு நக்கலாக.

அதில் புன்னகைத்தவன், “டைமிங் சொல்லு. போட்டுடுறேன்.” என்றிட, அவள் தான் கடியாகி, இஷாந்த் விளையாடும் பொம்மை ஒன்றை எடுத்து அவன் மீது தூக்கி எறிந்தாள்.

“ஏய். பிசாசு. இஷு மேல போட்டுடாதடி.” எனக் கடிந்தவன், மற்றொரு விளையாட்டு பொருளை அவள் மீது தூக்கி ஏறிய, அந்நேரம் ஆரவிடம் ஏதோ சந்தேகம் கேட்கவென உள்ளே வந்த வான்மதி திருதிருவென விழித்தாள்.

அவளைக் கண்டு மற்ற இருவரும் ஒரு நொடி விழிக்க, “இல்ல… நான் ஆரவை பாக்க வந்தேன்.” என தயக்கத்துடன் கூறி விட்டு வெளியில் செல்ல போக, இஷாந்த் தான் அவளைக் கண்டதும் வாயில் இருந்த பால் பாட்டிலை தள்ளி விட்டு கையைத் தூக்கி கத்தினான்.

வான்மதி அவனை வந்து தூக்கியபடி, “பேபி எந்திரிச்சுருந்தா கூப்பிட்டு இருக்கலாமே.” கவின் பாலை கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு கேட்க,

அவன் பதில் கூறும் முன் லயா, “ஹெலோ… நீங்க வர்றதுக்கு முன்னாடி, நாங்க தான் பார்த்துக்கிட்டோமாக்கும்.” என்றாள் சிலுப்பலாக.

“பேம்பர்ஸை கூட கழட்டி விடாம நீங்க பார்த்துக்கிட்டத தான் நானும் பார்த்தேனே.” அவளும் நக்கலுடன் வார, கவின்தான் வான்மதியை முறைத்தான்.

லயாவோ ‘இது வேறயா?’ என கவினை ‘ஏண்டா இப்படி அசிங்கப்படுறீங்க?’ என்ற ரீதியில் முறைக்க, வான்மதி சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

அப்போது, ஆரவின் இன்டர்காம் ஒலிக்க, கவின் தான் போனை எடுத்தான்.

“சார்… ஆரவ் சாரை பார்க்க அவரோட மாமனார் மாமியார் வந்துருக்காங்க. ரிஸப்ஷன்ல வெய்ட் பண்ண சொல்லிருக்கேன்” என ரிசப்ஷன் பெண் பேச, அதில் குழம்பியவன், “என்னது மாமனார் மாமியாரா?” என புரியாமல் வான்மதியை பார்த்தான்.

பின், சிசிடிவியில் காண, வான்மதியும் இஷாந்தை அவன் விளையாடும் மேட்டில் இறக்கி வைத்து விட்டு,
மடிக்கணினியில் காண வர,

அதற்குள் லயா, “உன் அப்பா அம்மாவா மதி? வந்தா என் கண்ணுல மட்டும் காட்டிடாத. நான் ஏதாவது அசிங்கமா பேசிடுவேன். கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா கருமாரி பண்ணி வைச்சுருக்காங்க.” என்று சட்டென எழுந்த கோபத்தில் அவள் திட்டி வைக்க, ஆரவ் இவர்களிடம் அனைத்தும் கூறி இருக்கிறான் என உணர்ந்தவள், அமைதியாக இருந்தாள்.

கவின் தான் அவளை அடக்கி, “மிருணாவோட பேரண்ட்ஸ் லயா” என்றான்.

“அந்த சாத்தான பெத்த சாத்தானுங்களா… போய் செவில்லையே நாலு விடுறேன். இரு…” என அவள் கிளம்ப எத்தனிக்க, கவின் தான் தடுத்து, “ப்ச்… கொஞ்சம் பொறுமையா இரு ஆரவ் வரட்டும்.” என்றதில்,

வான்மதி, “இவங்க ஏற்கனவே வீட்டுக்கு வந்தாங்க. ஆரவ் தான் உள்ளேயே விடல. அதனால இங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் யோசனையாக.

“எதுக்கு?” என கவின் வினவ, “எனக்கும் தெரியல.” என்றவள், சில நொடி கழித்து “அவங்களை உள்ள வரச்சொல்லுங்க” என்றாள்.

லயா தான், ஆ”ரவ் அவங்களை பார்க்க வேணாம்ன்னு நினைக்கிறான். அப்படியே அடிச்சு துரத்திடலாம்ல. எதுக்கு உள்ள வர சொல்ற?” எனக் கேட்க, “அப்படியே அடிச்சு துரத்துனா சேட்டிஸ்ஃபையா இருக்காதே…” என்றாள் சற்றே சினத்துடன்.

அதில் கவின் தான் செய்வதறியாமல், “இல்ல மதி. ஆரவ் வரட்டும். அவங்க ஏதாவது பேசிட்டா கஷ்டமாகிடும்” என்றான், அவர்கள் இவளை ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற அக்கறையில்.

“பேச்சு வாங்குறது எனக்கு புதுசு இல்ல கவின் சார்…” என அழுத்தத்துடன் கூறியவளை சட்டென நிமிர்ந்து பார்த்தவனுக்கு முகம் வாடியது.

பின் வேறு வழியற்று, அவர்களை உள்ளே வர வைக்க, ஆரவின் அறைக்கு வந்த சுந்தரியும், ரங்கனும் வேகமாக இஷாந்தை நோக்கி செல்ல, ஆரவின் இருக்கையில் அமர்ந்திருந்த வான்மதி, சொடுக்கிட்டு அழைத்தாள்.

“யார் நீங்க?” எனத் திமிராகக் கேட்டதில், ‘இவள் யாரு?’ எனக் குழப்பமாக பார்த்த சுந்தரி, “நீ யாரு?” எனக் கேட்க,

“நான் மிஸஸ் ஆரவ். இஷாந்த்தோட அம்மா” என்றாள் கர்வத்துடன்.

சற்றே திகைத்த சுந்தரிக்கும் ரங்கனுக்கும் இன்னும் ஆரவிற்கு திருமணம் ஆனது தெரியாமல் போக, “என் பேரனோட அம்மான்னு நீ எப்படி சொல்லலாம்? நீயா பெத்த?” என சுந்தரி கோபமாகக் கேட்க,

“பின்ன, நீங்க பெத்தீங்களா?” இடைக்காக கேட்டாள்.

“என் பொண்ணு பெத்தா!” என அவர் பற்களை கடிக்க,

“ஓ! எங்க உங்க பொண்ணு?” அவள் இருக்கையில் நன்றாக சாய்ந்து கையை கட்டிக்கொண்டு வினவ, அதில் “அது… அது… அவ” என்று தடுமாறினர் இருவரும்.

“உங்களுக்கு இந்த வாடகைத்தாய் பத்தி எல்லாம் தெரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன். இப்போ இது ரொம்ப சாதாரணம். ஆனா, குழந்தையை பெத்து குடுத்ததுக்கு அப்பறம், அந்த வாடகை தாய்க்கும் அந்த குழந்தைக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்ல. விச் மீன்ஸ், உங்க பொண்ணு இஷுக்கு வாடகை தாய் தான். அவளுக்கே உரிமை இல்லை. பேரன்னு நீங்க எதுக்கு வந்துருக்கீங்க?” என நிதானமாகவே அவர்களை எதிர்கொள்ள, அவளின் நிதானம் சுந்தரியை ஆட்டம் காண வைத்தது.

இவளிடம் கோபம் செல்லுபடி ஆகாது என உணர்ந்தவர், கண்ணை கசக்கியபடி, “இங்க பாருமா. நீயும் பொண்ணு தான… உனக்கு என் மன வேதனை புரியும்…” என ஆரம்பித்தவர்,

“என் பொண்ணு நல்லாருக்கணும்ன்னு, என் மாமனார் சொத்தை அவளுக்கு குடுத்து அவளும் என் மருமகனும் சந்தோசமா இருக்கனும்ன்னு ஆசை பட்டோம். ஆனா, அவ எவன் கூடையோ ஓடிப்போய்ட்டா. அவளும் இல்லாம, எங்க பேரனும் இல்லாம சொத்து இருந்து என்ன பண்ண? அதெல்லாம் என் மருமகனுக்கும் பேரனுக்கும் எழுதி குடுக்கணும்ன்னு தான் நாங்க மாப்பிள்ளையை பார்க்க வந்தோம்…” என்றார் கலங்கிய குரலில்.

“ஓஹோ! அவ்ளோ பாயாசமா… இல்ல இல்ல அவ்ளோ பாசமான்னு கேட்டேன். பட், நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. என் புருஷனுக்கும் என் பையனுக்கும் உங்க சொத்து தேவை இல்ல.” என்றாள் வெகு நக்கலுடன்.

அதில் பொறுமை இழந்த சுந்தரி, “என்ன நீ ரொம்ப ஓவரா போற? என் பேரனை கொடுமை படுத்துறன்னு உன் மேல கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வைச்சுடுவேன்” என மிரட்டினார்.

அவளோ பக்கென சிரித்து, “கேஸ் தான போடுங்க போடுங்க. ஆல்ரெடி நான் போட்ட கேஸ் ஒன்னு வேற ஒரு வருஷமா இழுத்துட்டு இருக்கு. ஒரு தடவ கூட கோர்ட்டுக்கு போகலேயேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். அட்லீஸ்ட் நீங்க போடுற கேஸ்க்கு ஆச்சு ஒரு தடவை கோர்ட் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்துடுறேன். மறக்காம, கேஸ் போட்டுருங்க. சரியா…!

இனிமே நான் உங்களை பார்த்தா கோர்ட்ல தான் பார்க்கணும். இன்னொரு தடவ, வீட்டுக்கோ ஆபிஸ்க்கோ வந்து உங்க திருமுகங்களை காட்டுனீங்கன்னு வைங்க… அப்பறம் என் இன்னொரு திருமுகத்தை நீங்க பார்க்க வேண்டியது வரும். என் முகிலையும் என் பேபியையும் உங்க நிழல் கூட தீண்டக் கூடாது.” என கிண்டலாய் ஆரம்பித்து விழிகளில் அனல் தெறிக்க முடித்து இருவரையும் திணற வைக்க, கவினும் லயாவுமோ அவள் பேசிய பேச்சில் உறைந்த நிலையில் நின்றனர்.

ரங்கன், சுந்தரியை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல போக, அங்கோ வாசலில் ஆரவ் தான் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் சுந்தரிக்கு வாங்கிய அறை நினைவு வர, திடுதிடுவென அவனைத் தாண்டி சென்று விட்டனர்.

இத்தனை நேரம் அவர்களை தைரியமாய் எதிர்கொண்ட வான்மதி, ஆரவைக் கண்டதும் சட்டென இருக்கையில் இருந்து எழுந்து கையை பிசைந்தாள். திட்டிவிடுவானோ என்ற பயத்தில்…

முகத்தை இறுக்கமாக வைத்திருந்த நண்பனைக் கண்டதும் கவின், “மதி அவங்களை வர சொல்லலடா. அவங்களா தான் வந்தாங்க” என்றான். அவனுக்கு தெரியுமே, சொன்னதை கேட்கவில்லை என்றால், அவனின் வாயில் இருந்து நல்ல நல்ல வார்த்தைகள் வெளிவரும் என்று. அதில் வான்மதியை காப்பாற்ற வாயை விட,
அவன் “வெளிய போ” என கண்ணை காட்டினான்.

லயாவும் “வாடா. அவன் பேட் வர்ட்ஸ் பேச ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வெளிய போலாம்” என அவனையும் இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல, வான்மதி தான், “அது… ஆரவ்… ஒரு தடவ பேசி பார்க்கலாம்ன்னு தான்…” என்றாள் திக்கி திணறி.

அழுத்தமான காலடி ஓசையுடன் அவளை நெருங்கியவன், “இதுக்கு பேர் பேசுறது இல்லடி. மிரட்டுறது…” என இடுப்பில் கை வைத்து முறைப்பாக பார்க்க, அவள் அசடு வழிந்தாள்.

இன்னும் அவளை நெருக்கி நின்றவன் அனல் மூச்சுடன், “அவங்க கிட்ட மட்டும் தான் என் முகில்ன்னு சொல்லுவியா? என்கிட்ட சொல்ல மாட்டியா?” எனக் கேட்டான் சற்றே மிரட்டலுடன்.

‘கோர்ட்டு, கேஸ்’ என்று அவர்களை ஏற்றி விட்டு விட்டோமே, திட்ட தான் போகிறார் என அவள் தயாராக இருக்க, அவனோ சம்பந்தமின்றி கேட்டதில், குழம்பி நிமிர்ந்தவள் அவன் பார்வையில் சிவந்தாள்.

“என் மேல கோபம் இல்லைல?” அவள் விழிகள் மின்ன கேட்க,

அதற்கு மெலிதாய் புன்னகைத்தவன், “என் கண்ணம்மா எல்லாத்தையும் தைரியமா ஃபேஸ் பண்ணும் போது நான் ஏன் கோபப்படணும்? எனக்கும் கூட கோர்ட்ட பார்க்கணும்ன்னு ஆசை தான்” என்றான் கண் சிமிட்டி.

அதில் அவளும் சிரித்து விட, “ஆனா ப்ராப்லம் எதுவும் வராதுல ஆரவ்?” என்றாள் வருத்தத்துடன்.

“ப்ச். இவங்களால ஒண்ணுமே பண்ண முடியாது மதி. கோர்ட்டுக்கு போனா காசு செலவு ஆகுறது தான் மிச்சம் அவங்களுக்கு.” என அலட்சியமாக கூற,

அவளோ “இப்பவும் எனக்கு புரியலை ஆரவ். ஏன் இஷுவை தேடி வர்றாங்க? அவங்களுக்கு வேண்டிய பணம் தான் வந்துடுச்சே.” என்று வினவினாள்.

“பணம் வேணும்ன்னு முடிவு பண்ணிட்டவங்களுக்கு, கிடைச்சாலும் இன்னும் வேணும்ன்னு தான் தோணும் மதி. அதே மாதிரி தான் இந்த கூட்டமும்… இஷுவ அவங்க வளர்த்தா, என்கிட்ட இருக்குறதையும் சுருட்டலாம்ல.” என புரிய வைக்க, “சே… இவங்களாம் மனுஷங்களே இல்லையா?” என்று முகம் சுருக்கியவள்,

“அப்போ, அவன் பிறந்தப்ப மட்டுமே எப்படி உங்ககிட்ட விட்டாங்க. அப்பவே பெருசா பிரச்சனை பண்ணிருக்கணுமே ஆரவ்?” என்று மீண்டும் வினவினாள்.

“ம்ம். ஆக்சுவலி… இஷு பிறந்ததுக்கு அப்பறம் தான் நான் இப்ப இருக்குற ஃபிளாட்டே வாங்கினேன். அதுக்கு முன்னாடி, நானும் தன்வியும் ரெண்ட் பிளாட்ல தான் தங்கி இருந்தோம். ஆப்டர் மேரேஜ் அவன் தனியா வீடு எடுத்து போய்ட்டான்.

எனக்கு மட்டும் எதுக்கு வீடு வாங்கணும்ன்னு, பிஸினஸ்ல வர்ற பணத்தையும் மறுபடியும் பிஸினஸ்லையே போட்டுடுவேன். அப்படியே இல்லைனாலும் பின்னாடி தேவைப்படும்ன்னு பணமாவே வைச்சுடுவேன். இப்ப வீடுன்னு ஒன்னு வாங்கவும் பங்குக்கு வராங்க.” என்றான் தோளைக் குலுக்கி.

அவளுக்கும் அப்போது தான், வீட்டினர் ஏன் வசதி இல்லை எனக் கூறி மறுத்தனர் என்று புரிந்தது.

“இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்க. சரியான பணப்பேயா இருப்பாங்க போல. இனிமே வரட்டும் மூஞ்சிலயே நங்குன்னு குத்துறேன்.” எனக் கையை முறுக்கினாள்.

ஆரவ் தான், அவளின் பாவனையில் வாய் விட்டு சிரித்து, “தெரியாம ஒரு ரௌடியை கல்யாணம் பண்ணிட்டேனே” என்றான் பாவமாக.

“நான் ரௌடியா?” என விழிகளை உருட்டி முறைத்தவளைக் கண்டு, ‘சோ ஸ்வீட்’ என்று உள்ளுக்குள் கொஞ்சிக் கொண்டவன், “ஒன் ஏஞ்சல் கிஸ்?” என முந்தைய நாளைப் போன்றே வினவ, அவள் தான் தடுமாறிப் போனாள்.

தேன் தூவும்…!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
55
+1
221
+1
7
+1
13

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. priyakutty.sw6

   அவர் கண்ணம்மா என்ற அழைப்பும்…
   டி போட்டு பேசுறதும்…😍

   அதான இப்படி கூட மனுஷங்க இருக்காங்க… 😡

   மதி அவங்க கிட்ட பேசினது… 👌😁

   கதை நல்லா போகுது dr… 💞

  3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.