Loading

அஜயும் விதுனும் விழித்துக் கொண்டும், லட்சுமி பதட்டத்துடனும் நிற்க, கருணா வந்தவர், “என்ன அங்க சத்தம்.” என்று புருவத்தை சுருக்கி கேட்டு விட்டு மீரா அறையை நோக்கி செல்ல, மற்ற மூவரும் என்ன ஆகப்போகுதோ என்று பின்னாலேயே சென்றனர்.

மீரா அர்ஜுன் அருகில் வருகையில் அவனை தள்ளி விட்டு, “ஏன் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துருக்குறீங்க? எனக்கு கேட்க ஆள் இல்லைன்னு தான என்கிட்ட இப்படி நடந்துக்குறீங்க” என்றதில் தான் அவன் கடுங்கோபத்தில் அவளை அடிக்க முடியாமல், பூச்சாடியை தூக்கி எறிந்தான்.

பின், அவள் தோளை இறுக்கமாக பற்றி கொண்டு, “என்னை பார்த்தா உனக்கு பொறுக்கி மாதிரி இருக்காடி? என் மீரா நீ இல்ல… 

என்னை பார்த்ததும் மின்னல் வெட்டுற அந்த கண்கள் இல்ல. என்னை பார்த்ததுமே சிவக்குற கன்னம் இல்ல. நான் பேசுனாலே இயல்பா வர்ற அந்த சிரிப்பு இல்ல. எனக்கு என்ன பிடிக்கும்ன்னு பாத்து பாத்து செஞ்சு, நான் சின்னதா வருத்தப்படக்கூடாதுன்னு எல்லாத்தையும் எனக்காகவே யோசிக்கிற என் மீரா நீ இல்ல…

அவள் மூணு வருஷத்துக்கு முன்னாடியே செத்துட்டா. நீ செருப்பால அடிச்ச மாதிரி எத்தனை தடவை என்னை அசிங்கப்படுத்துனாலும், இப்படி நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்துறேன்ல… எனக்கு இதெல்லாம் தேவை தான். எப்படியோ போய்த்தொல.” என்று விட்டு, வெளியே செல்ல வந்தவன் அங்கு கருணாகரனை பார்த்து அதிர்ந்து,

பின், தலையை குனிந்து கொண்டு, விறுவிறுவென வெளியில் சென்று விட்டான்.

அவரும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியில் வந்து, விதுனையும் அஜயையும் பார்த்து, “உங்களுக்கு ஏன் அடிப்பட்டுருக்கு?” என்று கேட்க,

அஜய் “பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டோம் மாமா” என்று முதல் ஆளாய் பதில் கூறியதில்,

அவர் அவர்களை முறைத்து, “ரெண்டும் பேரும் ஒண்ணாவா வழுக்கி விழுந்தீங்க” என்றார்.

அஜய், “ஆமா மாமா, நைட் தனியா பாத்ரூம் போக பயமா இருக்குன்னு இவனை கூட்டிட்டு போனேனா… அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து விழுந்துட்டோம்” என்று சமாளிக்க, அவர் விதுனை பார்த்ததும் அவன் பயத்தில் உண்மையை உளறப்போனான்.

அஜய், வேகமாய் அவன் அடி
பட்ட காலை ஓங்கி மிதிக்க, அவன் “ஆஆ வலிக்குதே” என்று கத்த,

கருணாவும் பதறி, “எருமை மாடு மாதிரி வளர்ந்துருக்கீங்க ஒழுங்கா பாத்ரூம் கூட போக தெரியல.” என்று ஆரம்பித்தவர், அர்ஜுனுக்கு கொடுக்க வேண்டிய திட்டையும் சேர்த்து அவர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தார்.

விதுதான் ‘அப்போ ஆப்பு இன்னைக்கு நமக்கு தானா…’ என்று நொந்து கொண்டு, கேட்டுக்கொண்டிருக்க, ஒரு வழியாய் லட்சுமி தான் அவர்களை காப்பாற்றி உள்ளே அனுப்பினார்.

மீரா அவன் பேசியதை கேட்டும், தான் பேசிவிட்டது அவனை மிகவும் காயப்படுத்தியிருக்குமே என்றும் தனக்குள் நொந்து கொண்டிருந்தாள்.

“இப்பவும் நான் உங்க மீரா தான் அர்ஜுன். ஆனால் ஆனால்… நான் உங்களுக்கு வேண்டாம்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு அர்ஜுன். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க செத்துருவீங்கன்னு அன்னைக்கு அந்த ஜோசியக்காரன் சொன்னதுல இருந்து எனக்கு என் உயிரே என்கிட்ட இல்ல.

இதை உங்ககிட்ட சொன்னால், இதெல்லாமா  நம்புறன்னு என்னை கன்வின்ஸ் பண்ணுவீங்க. அதான்… நீங்க என்னை வெறுக்கணும்னு இப்படி பேசுனேன்.

எனக்கு நீங்க என்கூட இருக்கணும்னு நான் நினைக்கல அர்ஜுன். எங்கயாவது நீங்க சந்தோசமா இருக்கிறதை நான் பார்த்துகிட்டு இருந்தாலே போதும்.” என்று அவன் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு, அழுது கொண்டிருந்தாள்.

அன்று அர்ஜுன் காதலை  சொன்னதும், சந்தோஷத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாள்.

அங்கிருந்த ஒரு ஜோசியக்காரன் வலுக்கட்டாயமாக அவளிடம் ஜோசியம் பார்க்க சொல்ல, அவளுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் ஏதோ ஒரு ஆர்வத்தில், அவர் சொன்னதை கேட்டவளுக்கு ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது…

அவளை திருமணம் செய்யப் போகிறவனுக்கு பெரிய ஆபத்து இருப்பதாகவும், இவள் அவனை திருமணம் செய்து கொண்டால் உயிர் போகும் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று சொன்னதில், தன்னால் அர்ஜுனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தனக்குள் உடைந்து கொண்டிருந்தாள்.

எனக்கு தான் யாருமே இல்லை ஆனால் அவனாவது அவன் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள், குழப்பத்துடன் வெளியில் வரும்போது தான் சஞ்சு அவள் கையில் கிடைத்தான்.

இனி அவன் மட்டுமே தன் வாழ்க்கை என்று தீர்மானித்து, அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

உள்ளே வந்த அஜயும் விதுவும் என்ன பிரச்சனை என்று மீராவிடம் கேட்கலாம் என்று அங்கு செல்ல, அவள் இப்படி புலம்பி கொண்டிருந்ததைக் கேட்டு அஜய் தலையில் கை வைத்தனர்.

விதுன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சத்தம் வராத குரலில் சிரித்து,

“பங்கு, அர்ஜுனுக்கு ஒரு ஜோசியக்காரன் மூணு வருஷத்துக்கு முன்னாடியே பெரிய ஆப்பா வச்சிருக்கான் போலடா. இது தெரியாம இவன் இங்க வைத்து கத்திக்கிட்டு இருக்கான்.” என்று முணுமுணுக்க,

அஜய், அவனை முறைத்து விட்டு, “இப்போ என்னடா பண்றது?” என்று கேட்க,

“வா இதை நம்ம சங்கத்தை கூட்டி இதான் பிரச்சனைன்னு அறிவிப்போம். அப்பறம் இதை அர்ஜுன் பார்த்துக்குவான்.” என்றதில், இருவரும் வெளியில் சென்றனர்.

மடிக்கணினியில் தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்த துருவை தேடி வந்த உத்ரா, தொண்டையை கணைத்தாள்.

அவன் நிமிர்ந்து என்ன என்று பார்க்க, அவள் “கன்ஸ்ட்ரக்ஷ்ன் டிசைன் முடிஞ்சுது. மீட்டிங் ஹால் வந்தா எக்ஸ்ப்ளயின் பண்ணுவேன்” என்று கூற, அவன் வருவதாக என்று தலையசைத்தான்.

பின், மீட்டிங் ஹால் சென்று அவளே எல்லாத்தையும் அரேஞ்ச் செய்ய, அவன் “மத்தவங்களாம் எங்க?” என்று கேட்க,

அவள் “தெரியல, இன்னைக்கு யாருமே ஆபிஸ் வரல” என்றாள்.

எப்போவும், சரியான நேரத்தில் வருகிற சுஜியும் இன்று வரவில்லை. மற்ற நாட்களாய் இருந்தால், சுஜியையும் அஜயையும் உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பாள். ஆனால் இன்று ஏனோ நல்லவேளை இன்னைக்கு யாரும் வரல என்றே தோன்றியது.

அவனிடம் “மீரா எங்க?” என்று கேட்க, அவன் “இன்னும் வரல” என்று சொன்னதில், அவள் அவனிடம் ப்ராஜக்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

ஆனால், அவன் தான், ஒவ்வொரு டிசைன்க்கும் ஏதாவது குறை சொல்லி, மேலும், அவனுக்கு புரியாததை பல தடவை கேட்டு, அவளை படுத்தி எடுத்து விட்டான்.

அவள் பதில் சொன்னாலும், அவன் திருப்தி அடையாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்க, அவள் ‘இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசரையா நம்ம லவ் பண்ணுனோம். எப்படி இந்த சம்பவம் நடந்துருக்கும்’ என்று தீவிர சிந்தனையில் இருந்தாள்.

அவள் ஏதோ யோசனையில் இருந்ததை கண்ட துருவ் அவள் முன் சொடுக்கிட்டு அழைக்க, அவள் தன்னிலைக்கு வந்து, என்ன என்று கேட்க,

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல.” என்று அவன் வேலையிலேயே குறியாய் இருக்க,

“சரியான விடாக்கொண்டன்…” என்று அவனை வறுத்து விட்டு, மீண்டும் அவனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.

அதோ இதோவென அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய மீட்டிங்கை கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் இழுத்து விட்டு பிறகு தான் டிசைன்க்கு ஓகே சொன்னான்.

‘டேய், இதை முதலேயே சொல்லி இருக்க வேண்டியது தானடா’ என்று அவனை முறைத்து விட்டு, வெளியே வர, துருவ் மெலிதாய் சிரித்துக்கொண்டான்.

பின், அவன் அறைக்கு வந்து மீண்டும் வேலையில் மூழ்கியவன், சில நிமிடங்கள் கழித்து நிமிர, அவன் எதிரில் கையில் லெமன் ஜூஸை ஸ்டராவில் உறிஞ்சிக்கொண்டு, அவனை பார்த்து கொண்டிருந்த உத்ராவை நோக்கி, “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.

அவள், “இது பிரேக் டைம். ஜூஸ்” என்று அவனிடம் ஒன்றைக் கொடுக்க,

துருவ் “எனக்கு வேலை இருக்கு” என்று லேப்டாப்பில் பார்வையை திணிக்க, அவள், அந்த லெமன் ஜுஸை அவனின் மடிக்கணினியில் சிறிது கொட்டி விட்டாள்.

அவன் “ஹே என்ன பண்ற”, என்று பதறியதும்,

“பிரேக் டைம் ஜுஸ்” என்று மீண்டும் நீட்டினாள்.

துருவ் அவளை முறைத்து விட்டு, அந்த ஜூஸை ஒரே மடக்கில் குடித்து விட்டு கிளாஸை டொம்மென்று டேபிளில் வைத்தான்.

“ஏதோ நம்ம சரக்க குடிக்க சொன்ன மாதிரி ஒரே மடக்குல குடிக்கிறான் விட்டா, சைடிஷ் கேட்பானோ…” என்று யோசித்து கொண்டிருக்க,  அப்பொழுது தான் மீரா அவசர அவசரமாக வந்து “குட் மார்னிங் அண்ணா” என்று சோர்ந்த குரலில் கூறினாள்.

துருவ் “குட் ஆஃப்டர்நூன்” என்று அழுத்தி சொல்ல,

“அது… அது கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என அவள் தயங்கியதில், அவன் “ஏன் ஆஃபீஸ் டைம் முடிஞ்சதுக்கு அப்பறம் வந்திருக்க வேண்டியது தான, போய் வேலைய பாரு” என்று கடுகடுத்தான்.

அவள் சுருங்கிய முகத்தோடு வெளியில் செல்ல, அவனை உத்ரா பார்வையாலே சுட்டெரித்தாள்.

“எதுக்கு அவளை இப்படி திட்டுறீங்க… கொஞ்சம் நல்லாத்தான் பேசுனா என்னவாம்.” என்று முறைக்க,

அவன் “அஜய் உனக்கு மெஸேஜ் எதுவும் அனுப்பலையா” என்று கேட்டான்.

அவள் அப்பொழுது தான், அவள் போனை எடுத்துப் பார்க்க, அதில், காலையில் நடந்ததை குறுஞ்செய்தியாக அஜய் அவளுக்கு அனுப்பி விட்டு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஃபீஸ்க்கு அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு, அவளையும், துருவையும் வரச்சொல்லி இருந்தான்.

இதில் முடிவில், பின்குறிப்பு வேறு. “வேலை இருக்கு என்று இருவரும் வராமல் இருந்துவிடாதீங்க. இங்க தான் சீன்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு. மீரா ஏன் அர்ஜுனை வேண்டாம்னு சொல்றாள்னு அப்போதான் உங்களுக்கு தெரியும்.”  என்று குறிப்பிட்டு இருந்தான்.

உத்ரா என்னவா இருக்கும் என்று யோசித்து விட்டு, துருவை பார்க்க, அவன் எதுவும் சொல்லாமல், வேலையில் கவனமானான்.

தன்னறைக்கு வந்த உத்ரா, சுஜி ஏன் வரல என்று அவளுக்கு போன் செய்ய, அவள் கட்டிலில் படுத்து நேற்று நடந்ததையே தான் நினைத்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு தன் மேல் காதலே இல்லையோ. நாம்தான் இந்த உறவை தவறாக நினைத்துக் கொண்டோமோ என்று குமுறியவள் உத்ராவின் அழைப்பைக் கண்டதும், தன்னை சரி செய்து கொண்டு அவளிடம், தலைவலி என்பதால் வரவில்லை என்று சொல்ல, அவள் அவளையும் ஹோட்டலுக்கு வரச்சொன்னாள். ஆனால் சுஜிக்கு தான், அஜயை பார்க்கவே என்னவோ போல் இருந்தது.

உத்ரா மீண்டும் சிறிது நேரத்தில், துருவ் அறைக்கு வர, அவன் ஏதோ யோசித்துக் கொண்டு, சீட்டின் பின்னால் சாய்ந்து, கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

அவன் முகத்தில் வேதனையின் சாயல்.

கைகள், அங்கிருந்த பேப்பரில் எழுதி இருந்த உத்ராவின் பெயரையே வருடிக்கொண்டிருந்தது. மனமோ எப்போ ஹனி உனக்கு என் ஞாபகம் வரும் என்று தவித்துக் கொண்டிருந்தது.

என்னதான் அவளிடம் இருந்து தள்ளி இருந்து, பிரச்சனைகளை சரி செய்து விட்டு கிளம்ப வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அவள் அருகில் இருக்கும் போது, தன்னை மறந்து அவளிடமே சாயும் மனதை கட்டுப்படுத்தமுடியாமல் திணறினான்.

இதில் இன்று அவள் வேறு தன்னை சோதிக்கும் விதமாய், அவனை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே இருக்க, அவனுக்குத் தான் பெரும் சோதனையாய் இருந்தது. 

மெல்ல அவன் அருகில் சென்ற உத்ரா, முந்தைய நாள், அவள் அறைந்த கன்னத்தை வாஞ்சையாய் தடவ, அதில் கண் விழித்தவன் அவளையே பார்த்தான்.

அவளும் அவன் கண்ணில் தெரிந்த வேதனையில் தன்னை நொந்து, என்னால் எவ்வளவு வேதனை பட்டுருக்கிறான். என்னவெல்லாம் இழந்திருக்கிறான். இப்பொழுது வரை என்னால் தானே இவனுக்கு இந்த மனவேதனைகளும்… என்று நினைத்தவள் அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

அதில் திகைத்த துருவ், அவளை விழி விரித்து பார்க்க, அவள் அவன் தலை முடியை கோதி விட்டு, அவள் அறைந்த கன்னத்தில் முத்தமிட்டு “சாரி” என்றாள்.

அதற்கு மேல் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாமல், இருக்கையில் இருந்து எழுந்து அவளை விட்டு தள்ளி நிற்க,

அவள், “துருவ்… நான்” என்று ஏதோ கூற விழைந்தாள்.

துருவ் அவளைத் தடுத்து, “வேணாம் உத்ரா… உனக்கு எதுவும் ஞாபகம் வரல. இப்போ உனக்கு நான் யாரோ ஒருத்தன் தான். உன்னால தான் எனக்கு இவ்ளோ கஷ்டம்ன்னு நினைச்சு, இப்போ உனக்கு என்மேல ஒரு சாஃப்ட் கார்னர் அவ்ளோதான். எனக்காக நீ கஷ்டப்பட்டு உன்னை மாத்திக்க வேணாம். உனக்கு ஞாபகம் வர்ற வரைக்கும் உனக்கு என் மேல காதலும் வராது…” என்றான் இறுகிய குரலில்.

அவளோ அழுத்தமாய், “அப்போ கடைசி வரைக்கும் எனக்கு உன் ஞாபகம் வரலைன்னா?” என்று கேட்க,

“கடைசி வரைக்கும் நீ யாரோ நான் யாரோ தான்” என்றான் தீவிரமாய்.

உத்ரா அவனை வெற்றுப் பார்வை ஒன்றை பார்த்து விட்டு, அவன் அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றாள்.

கண்ணில் இருந்து சூடான திரவம் உத்ராவின் கண்ணில் இருந்து வழிய, முயன்று அழுகையை அடக்கி விட்டு, “பாப்போம்டா நீயா நானான்னு பார்த்துருவோம். என்னை விட்டு போறதுலயே குறியா இருக்குற உன்னை எனக்கு எந்த ஞாபகமும் வரலைனாலும் பரவாயில்லை. என் கூடவே இருன்னு நான் சொல்ல வைக்கல நான் உத்ரா இல்லை…” என்று சபதம் எடுத்துக்கொண்டு மனதினுள் குமுறிக்கொண்டிருந்தாள்.

துருவும் இங்கு, ஜன்னல் வழியே வெறித்து கொண்டுதான் இருந்தான்.

அவன் அவளை உணரவில்லை. அன்று அவள் அவனை விமனைசர் என்று சொன்னதே தான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்போதும் ஏதோ அவளுக்கு தன் மேல் ஒரு  கரிசனம் என்றே தான் நினைத்தான். அதனாலேயே அவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று தவறாய் புரிந்து கொண்டான்.

மருத்துவமனையில் அர்ஜுன் ஒரு புறம், மீரா பேசிய வார்த்தைகளை நினைத்து நொறுங்கிகொண்டிருந்தான்.

இனிமேல் என்ன ஆனாலும், அவள் முன் சென்று நிற்கக்கூடாது என்று உறுதியாய் முடிவெடுத்து விட்டு, அஜய் வர சொன்ன ஹோட்டலுக்கு சென்றான். துருவும் உத்ராவும் தனித்தனியாய் அந்த ஹோட்டலுக்கு விரைய, சுஜியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

அனைவரும், அஜயையும், விதுனையும் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் விஷயத்தை சொல்லாமல் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தனர்.

‘ஐஸ் கிரீம் வாங்கி தந்தால் தான் சொல்லுவோம்’ என்று அஜய் சொன்னதும், உத்ரா கடுப்புடன் வாங்கிக் கொடுக்க, பின், ‘தந்தூரி சிக்கன் வாங்கி தந்தால் தான் சொல்லுவோம்’ என்று அடம்பிடிக்க, அவ்வளவு நேரம் அஜயை பார்க்காமல் அமர்ந்திருந்த சுஜி, “டேய் சிக்கன்லாம் வேணாம். எனக்கு வாமிட் வரும்” என்று பதறினாள்.

அவள் சுத்த சைவம். அவள் இப்படி சொன்னதாலேயே, அஜய், “எனக்கு சிக்கன் வாங்கி தரலை. கடைசி வரை அர்ஜுன் சிங்கிளா தான் இருக்கணும்” என்று மிரட்டியதும், அர்ஜுன் தலையில் அடித்து கொண்டு வாங்கி கொடுத்தான். அவர்கள் சிக்கனை பதம் பார்க்க, சுஜி முகத்தை சுருக்கி உவேக் என்று நகரந்து போக போனாள்.

அஜய் விடாமல் அவள் கையை பிடித்துக் கொண்டு, வேண்டும் என்றே அவளருகில் சென்று அமர்ந்து சாப்பிட, அவளுக்கு தான் ஐயோ வென்றிருந்தது.

அவன் அருகாமை அவளுக்கு அனைத்தையும் மறக்க செய்து, திணற வைத்தது. அவன் எப்போதும் அவளைத் தொட்டு பேசுவதால் அவனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவே இல்லை.

துருவ் அர்ஜுனிடம், “காலைல என்ன நடந்துச்சு அர்ஜுன்?” என்று கேட்க,
அவன் முகம் சுருங்கியது.

மேலும், அவள் தன்னை புரிந்து கொள்ளவே மாட்டாளா என்று கண் கலங்கியது.

துருவ் அவனிடம் “மீரா என்ன சொன்னாள்?” என்று மீண்டும் கேட்க,

“என்னை பார்த்தா பொறுக்கி மாதிரியாடா இருக்கு…?” என்று உதட்டைக் கடித்துக் கொண்டு கண்ணீரை உள்ளிழுக்க, துருவிற்கு அவனைப் பார்க்க மனம் வருந்தியது.

அவன் தோளை ஆதரவாய் அணைத்துக்கொண்டு, “அவள் உன்னை சீக்கிரம் புருஞ்சுக்குவாடா” என்று ஆறுதல் படுத்த,

உத்ரா, ‘ஆமா இவரு அப்டியே எல்லாரையும் புருஞ்சுக்குற மாதிரி தான்’ என்று முனங்கி கொண்டு,

அர்ஜுனிடம், “என்னவாம் ரொம்ப தான் ரெண்டு பேரும் கொஞ்சுறீங்க…” என்று சிலுப்பிக் கொள்ள,

அர்ஜுன், சிறு சிரிப்புடன் துருவிடம் “பாருடா அவளுக்கு நீ என்கிட்ட பேசுறன்னு பொறாமை” என்று கிண்டலடித்தான்.

துருவ் மறுப்பாய் தலையசைத்து, “நீ அவள்கிட்ட சொல்லாமல், என்கிட்டே சொல்றன்னு தான் அவளுக்கு கடுப்பு” என்று சரியாகக் கூற, உத்ரா அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

உண்மையில் அவள் அப்படிதான் நினைத்தாள். எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து எதையும் கூறும் அர்ஜுன், துருவ் வந்ததில் இருந்து, அவனிடமே பேசிக்கொண்டு, அவனுக்கே சப்போர்ட் செய்து பேசியதில் அவளுக்கு சற்று கடுப்பு இருக்க தான் செய்தது.

ஆனால் தன் சிறு உணர்வுகளைக் கூட புரிந்து கொண்டிருப்பவன், இப்பொழுது, தான் அவன் மேல் வைத்திருக்கும் காதலை ஏன் உணராமல் போனான் என்று தான், ஏமாற்றமாக இருந்தது.

அர்ஜுன், உத்ராவிடம் “அப்படியா உதி” என்று கேட்க, அவள் துருவையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் சிக்கனை சாப்பிட்டு முடித்ததும், விது “சொல்லலாம், பட் எனக்கு மூட் இல்ல… உண்ட மயக்கமா இருக்கு.” என்று நெளிப்பு விட, துருவ் அவனை வெறியாய் முறைத்தான்.

“எதுக்குடா இப்படி ரெண்டு பேரும் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்று எழுந்திரிக்க போக,

விது “நோ நோ நீ தான் மீராவை தங்கச்சியா தத்து எடுத்துருக்கியே. சோ நீ இதை கேட்டு தான் ஆகணும்” என்று சொல்ல, அவன் பொறுமையை கடைபிடித்து “சரி சொல்லு” என்று கேட்க,

அஜய், “எவ்வளவு பெரிய விஷயம் சொல்ல போறோம். இப்படி சொல்லுன்னு அசால்ட்டா சொல்ற. நல்லா காதுல கேட்குற மாதிரி அடிச்சு கேளு” என்றதும், அவன் அஜய்யை பளாரென அறைந்தான்.

அதில் அவன் பேந்த பேந்த முழிக்க, சுஜி பதறி துருவிடம் “ப்ரோ எதுக்கு அவனை அடிச்சீங்க” என்று சற்று கோபமாகக் கேட்க,

அவன் “ம்ம் அவன் தான் அடிச்சு கேட்க சொன்னான் அதான்” என்றான் தோளைக் குலுக்கி.

“அதுக்கு அடிப்பீங்களா. ஏதோ அவன் சரியா கவனிக்கல இல்லைனா, நீங்க அடிக்கிறதுக்கு முன்னாடியே உங்க கையை உடைச்சுருப்பான்” என்று துருவை ஏத்தி விட,

துருவ் “அப்படியா” என்று யோசிப்பது போல் பாவனைக் காட்டிவிட்டு, மீண்டும் அஜயை அறைந்தான்.

சுஜி, பெரிய மூச்சுக்களை விட்டுக் கொண்டு கோபமாக “ப்ரோ இதெல்லாம் நல்லா இல்ல ப்ரோ.” என்று மீண்டும் ஆரம்பிக்க,

அஜய், “பஜ்ஜி போதும் முடியல…” என்று பாவமாய் கன்னத்தில் கை வைக்க,

சுஜி, ‘என்னையாவா நேத்து கிண்டலடிச்ச நல்லா வாங்குடா’ என்று விட்டு அவனை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

விதுனுக்கு துருவ் அங்கு அறைந்தது இங்கு வலித்ததில், மடமடவென நடந்ததை ஒப்பித்து விட்டான்.

உத்ரா, “இந்த மீரா என்ன லூசா… இந்த காலத்துல போய் இதெல்லாம் நம்பிகிட்டு இருக்காள்” என்று திட்ட,

சுஜி, “ஆமா பங்கு, எவனோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னு இவளும் இதை பெரிய விஷயம் ஆகிட்டு இருக்கா” என்று சொல்ல, துருவ் அர்ஜுனை பார்த்தான்.

அஜய் அர்ஜுனிடம், “பங்கு, அண்ணிகிட்ட பேசி சரி பண்ணுடா” என்று சொல்ல,

அவன் “என்ன பேச சொல்ற…” என்று விட்டு, எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

அர்ஜுன் மீராவிடம் பேசாமலும், சுஜி அஜயிடம் நட்பாய் பழகுவதா காதலாய் பழகுவதா என்று புரியாமலும், துருவ் உத்ராவிற்கு தொழிலை சரி செய்வதிலேயே  நாட்கள் சென்றது.

ஒரு நாள், உத்ரா ஒப்பந்தம் செய்த ஒரு கான்டராக்ட் ஓனர் வந்து அவளிடம், மணல், கல் எல்லாம் நானே இறக்குறேன் என்றதில், அவள் சிரித்து கொண்டு, “ஓகே சார் லோட் எப்போ வரும்” என்று கேட்க, அவர் “வந்துகிட்டே இருக்கு..” என்று நக்கலாய் அவளைப் பார்த்தார்.

அவனும் சைதன்யாவின் ஆள் தான். அந்த லோடுக்குள் சில இல்லீகல் பொருளை வைத்து, அவளுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர்..l

உத்ரா, “லோட் லாரி எங்க வந்துகிட்டு இருக்கு.” என்று கேட்க,

அவர் இடத்தை சொன்னதும் “ஓ சரி சரி” என்று சொல்லிவிட்டு அவரிடம் மேலும் சில விஷயங்களை பேசினாள்.

சிறிது நேரத்தில், அவருக்கு ஒரு போன் வர, அதில், “பாலத்தின் மீது அவரின்  லோட் வந்த லாரியின் மேல் மற்றொரு லாரி இடித்து, அனைத்தும், சேதமாகிவிட்டது” என்றும், மேலும் அதில் இருந்த சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் எல்லாம் போலீசார் கைக்கு போய்விட்டது என்றும், உங்களை கைது செய்ய வருவார்கள் என்றும் தகவல் வர, அவர் மிரண்டு விட்டார்.

உத்ரா நக்கலாய் சிரித்து பின், பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு,

“என்ன சார் ஆச்சு. லோட் வந்துருச்சா” என்று கேட்க, அவர் “இல்ல அது…” என்று திணற, அவள் “சீக்கிரம் வரச்சொல்லுங்க சார். வேலைய ஆரம்பிக்கனும்ல” என்க, அவர் பயத்தில் வியர்த்து, நான் அவசரமா போகணும் என்று விட்டு அங்கிருந்து ஓடியே விட்டார்.

உத்ரா தான், ‘நம்மாளு செம்ம மாஸ் தான்…’ என்று நினைத்து சிரித்து கொண்டாள்.

இதெல்லாம் துருவ் வேலை தான். அவளின் க்ளையண்ட்ஸிடம் அவள் பேசுவதை கேட்க வேண்டும் என அங்கு அவள் ரூமில் மைக் வைத்திருந்தான்.

அவன் மைக் வைத்திருப்பது உத்ராவிற்கும் தெரியும். அதனால் தான், அந்த கிளையண்ட் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்று தெரிந்த போதும், துருவ் அவனை வச்சு செய்வான் என்று நினைத்து அமைதியாய் இருந்தாள்.

மேலும், அவள் ஒப்பந்தம் செய்த, சைதன்யாவின் கைக்குள் இருக்கும் ஆட்களை எல்லாம் கண்ணில் விரல் விட்டு ஆட்டினர் இருவரும். அதன் விளைவாய், சைதன்யாவிற்கு யாரும் உதவ முன் வரவில்லை. அடிபட்ட புலியாய் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.

அர்ஜுன் மொத்தமாய் மீராவை விட்டு விலகி, வீட்டிற்கு கூட வராமல் மருத்துவமனையிலேயே இருந்தான்.

மீராவிற்கு தான் அவன் தன்னை விட்டு மொத்தமாய் விலகியதில் மனது வலித்தது.

அப்படியே வீட்டில் பார்த்துக் கொண்டாலும், யாரோ போல் அவளைப் பார்த்தும் பார்க்காமல் சென்று விடுவான்.

லட்சுமி தான் இவன் சரியாகூட சாப்பிடாம இப்படி வேலை வேலைன்னு இருக்கிறான் என்று வேண்டும் என்றே அவளிடம் புலம்ப, மீரா தன்னால் தான் அவன் இப்படி இருக்கிறான் என்று நினைத்து அவனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள்.

“அர்ஜுன்” என்று அவனை அழைக்க, ஏதோ ஒரு கேஸ் பைலில் மூழ்கி இருந்தவன், என்னவென்று அவளை பார்த்தான்.

அவள், “என்னால தான் நீங்க வீட்டுக்கு வராம இருக்கீங்களா.” என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லவில்லை.

மீரா, தொடர்ந்து, “என் மேல இருக்குற கோபத்தை ஏன் சாப்பாட்டுல காட்டுறீங்க. நான் இங்க இருக்கறதுனால தான் நீங்க வீட்டுக்கு வர்றது இல்லைன்னா நான்… சஞ்சுவை கூட்டிகிட்டு எங்கயாவது போய்டுறேன்” என்று அழுகுரலில் சொல்ல, அர்ஜுன், “போ” என்றான்.

அவள் கண்ணீருடன் அவனை பார்த்து விட்டு, பின், “சரி போயிடுறேன்” என்று திரும்ப,

அர்ஜுன் “நீ மட்டும் போ..” என்று அழுத்தி சொன்னான்.

மீரா புரியாமல் பார்க்க, “சஞ்சு எங்க வீட்டு பையன்… அவன் இங்க தான் இருப்பான். எங்க போறதுனாலும் நீ மட்டும் போ.  இங்க இருக்குற வரைக்கும் தான் நீ அவனுக்கு அம்மா. இங்க இருந்து போனா உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று சொல்ல, அவள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

அர்ஜுன்.தான், ‘வாடி என் சீனிக்கட்டி. எனக்கு எத்தனை சாக் குடுத்த. இனிமே நான் உனக்கு ஷாக்கா கொடுக்குறேன்.’ என்று நினைத்துக் கொண்டு அவளையே அழுத்தமாய் பார்த்தான்.

அஜய் ஒரு ஃபைலை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருக்க, சுஜி, அவனிடம் ஏதோ கேட்பது போல் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளுக்கு போன் வர, அதை எடுத்து பேசியவள் எதிர்முனையில் சந்துரு பேசியதை கேட்டு, “சொல்லுங்க சந்துரு” என்று சொல்ல, அஜய் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.

அவள் அஜயை பார்த்துக் கொண்டே, “எங்க மீட் பண்ணனும்… ஓகே ஓகே. நைட் ஷோ தான நான் வரேன்” என்று சொல்லிவிட்டு போனை வைக்க, அஜய் என்ன என்பது போல் பார்த்தான்.

“சந்துரு தான். இன்னைக்கு நைட் ஷோ படத்துக்கு போவோமான்னு கேட்டான்” என்று அவனைப் பார்க்க, அஜய், புருவத்தை சுருக்கி, “நீ என்ன சொன்ன”, என்று கேட்க,

அவள் “நான் என்ன சொல்லுவேன் சரின்னு தான் சொல்லுவேன்” என்று அசட்டையாக கூறினாள்.

அவனோ பொங்கி “அறிவிருக்கா. அவன் யாருன்னே தெரியாது. அதெப்படி நீ அவன் கூட படத்துக்கு அதுவும் நைட் ஷோ போகலாம்” என்று சற்று கோபமாக கேட்க, அவள் அவன் கோபத்தில் மனதில் மகிழ்ந்து கொண்டு, வெளியில் திமிராக,

“ஹெலோ அவன் என் ஃபியான்ஸ். எவனோ ஒருத்தன் இல்லை. என் அப்பா அம்மாவே ஒன்னும் சொல்லல” என்று சொல்ல,

அவன் “மீட் பண்ணனும்னா எதாவது பப்ளிக் பிளேஸ்ல மீட் பண்ணுங்க. படத்துக்குலாம் வேண்டாம். நீ போனன்னு மட்டும் தெரிஞ்சுது” என்று மிரட்டி விட்டு செல்ல, ‘அடி என் அஜூக்குட்டிக்கு ஜெலஸ்லாம் வருது..’ என்று மனதில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள் சுஜிதா.

துருவின் சைட்டிலும் கட்டட வேலை நடக்க ஆரம்பித்தது. துருவும் சைட்டிற்கு வந்து உத்ராவை கடுப்பேத்திக் கொண்டிருந்தான்.

அது ஏன் இப்படி இருக்கிறது… எனக்கு இந்த ப்ராடக்ட் வேண்டாம் என்று அவளை இம்சை செய்ய, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அவள் அவனை நெருங்கி வந்து, அடிக்குரலில்

“டேய் உன்னை யாருடா இங்க வரச்சொன்னது. ஒழுங்கா கிளம்பி ஆஃபீஸ் போ. நானே வேலைய முடிச்சுட்டு உன்னை கூப்புடுறேன்.” என்று மிரட்ட அவன் அசையாமல் நின்றான்.

உத்ரா, “ப்ச் இப்போ போவியா மாட்டியா?” என்று கேட்க, அவளின் மிரட்டலில், பழைய குறும்புடன்

“போகலைன்னா என்னடி பண்ணுவ” என்றான் புருவம் உயர்த்தி.

அவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு, அவன் காதருகே வந்து, “நீ போகலை… இங்கயே உன்னை லிப் டு லிப் கிஸ் அடிச்சுருவேன்” என்று கண்ணடிக்க, துருவ் சில கணம் அதிர்ந்து,

பின், அவளை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

உத்ரா தான் ‘இவன் சொல்ல வேண்டிய ரொமான்டிக் டையலாக்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்… என்ன கொடுமை சரவணன் இது’ என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

உறைதல் தொடரும்…
-மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
60
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்