Loading

மனதில் தோன்றிய எரிச்சலுடன் வசுந்தராவை முறைத்து வைத்த ஜிஷ்ணு, “அந்த ஃபைல்ஸ் எல்லாத்தையும் அரை மணி நேரத்துல கொண்டு வந்து குடுக்கல. அறைஞ்சுடுவேன்…” என்றபடி கையை ஓங்கியவனை, கண்டுகொண்டால் அது வசுந்தரா அல்லவே.

“சும்மா மிரட்டி டைம் வேஸ்ட் பண்ணாத அடியாளே! சீக்கிரம் இன்வெஸ்டிகேஷன ஸ்டார்ட் பண்ணு.” என எகத்தாளமாக நின்றாள்.

அந்நேரம், ஒருவன் வேகமாக உள்ளே வந்து, “ஜீ… ராஜசேகர் சார வெட்டுனவன பத்தின தகவல் எதுவும் கிடைக்கல. ஆனா, அந்த நேரத்துல அங்க இருந்தவங்ககிட்ட விசாரிக்கும் போது அவன் கருப்பு கலர் இன்னோவால ஏறி போனான்னு சொன்னாங்க ஜீ…” என்று ஒப்பித்தான் பவ்யமாக.

வசுந்தரா ஜிஷ்ணுவை விழி உயர்த்தி அர்த்தப் பார்வை வீசியதில், அவனோ அழுத்தத்துடன், “நான் யாருக்காகவும் உன் அப்பன வெட்டுனவனை தேடல. இவனுக்கும் ராதிகா இறப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்ற சந்தேகத்துல தான் தேட சொன்னேன்.” என்று அவனாக ஆஜராக,

தன்னை மீறி வெளிவந்த புன்னகையை மறைத்துக்கொண்டவள், “நான் உங்கிட்ட எதுவுமே கேட்கலையே!” என்றாள் திமிர் குறையாமல்.

அவளை கடுமையாக முறைத்து வைத்தவனை அழைத்த அடியாள், “இப்ப என்ன பண்றது ஜீ?” எனக் கேட்க, அதற்கு ஜிஷ்ணு பதில் கூற வாய் திறக்கும் போதே, வசுந்தராவும் ஏதோ கூற இதழ்களை பிரிக்க, இறுதியில் இருவரும் மற்றவர்கள் பேசட்டும் என அமைதி ஆகி விட, இவர்களை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்திருந்த குமரன் தான்,

“நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றதுன்னு சொல்றதுக்குள்ள வெட்டுனவன் வியட்னாம் போய்டுவான்…” என்று முணுமுணுக்க, இருவரும் ஒரு சேர அவனை முறைத்தனர்.

‘முறைக்கிறதுல மட்டும் ஒரே மாதிரி இருங்க’ என வாய்விட்டே புலம்பியவனை மேலும் பார்வையால் சுட்ட ஜிஷ்ணு, அவன் ஆளிடம் திரும்பி,

“அந்த இன்னோவா கார், வெள்ளப்பாளையம் தாண்டி எப்படியும் டோல் கேட் வழியா தான் போயிருக்கணும். சிசிடிவி செக் பண்ணி, கார் நம்பர் எடு. ஒரு மணி நேரத்துல எனக்கு தகவல் கிடைக்கணும்.” என்ற எச்சரிக்கையுடன் அவனை அனுப்பி வைத்து விட்டு, வசுந்தராவை புருவம் உயர்த்தி ஏறிட, அவளது பார்வையும் தானும் இதை தான் கூற வந்ததாக அறிவித்ததில் அதனை சட்டை செய்யாமல் வெளியில் சென்றான்.

குமரனும் அவனுடன் காரில் முன் இருக்கையில் அமர,

அதில் அவளும் விறுவிறுவென அவன் பின்னே சென்று காரின் முன் பக்க கதவை திறந்து, குமரனை உறுத்து விழித்தாள்.

‘க்கும்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்ற முனகலுடன் குமரன் பின்னால் சென்று அமர, அவள் வாகாக ஜிஷ்ணுவின் அருகில் அமர்ந்தில், “நீ எதுக்குடி வர்ற?” எனப் பொரிந்தான்.

“இங்க பாரு உன்கூட கார்ல ஊர்வலம் வரணும்ன்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்ல. என் அப்பாவோட அட்டம்ப்ட் மர்டர் கேஸ்க்கு நீ தான் விட்னஸ். ஒழுங்கா எனக்கு கோ ஆபரேட்டர் பண்ணல. அப்பறம் உன்ன தூக்கி உள்ள போட்டுடுவேன்.” என மிரட்டியவளின் கழுத்தை பிடித்தவன்,

“மவளே… இப்ப என்னோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட வரல. மர்டர் கேஸ்க்கு விட்னஸ் மட்டும் இல்ல. உன்ன போட்டு தள்ளி கொலைகாரனா மாறிடுவேன்.” என்றான் கடும் சினத்துடன்.

மொத்த பலத்தையும் கொண்டு அவனை தள்ளி விட்டவள், “இப்பயும் நீ கொலைகாரன் தான். ஆல்ரெடி நாலு கொலை பண்ணிருக்க அடியாளே…” என்றவளிடம்,

“திருத்தம்… இன்னும் ரெண்டு பண்ண வேண்டியது இருக்கு. ராதியோட ரேப்ல சம்பத்தப்பட்ட மீதி ரெண்டு பேரு கிடைக்கணும்.” என புருவம் சுருக்கிட,  பெண்ணவளும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

“நீ புடிச்ச ரெண்டு பேரும் வைன் ஷாப்ல தான மத்த ரெண்டு பேர் கூடவும் குடிச்சு இருக்காங்க. அவங்க எந்த பார்ல குடிச்சாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு…” என அவள் முடிக்கும் முன்பே,

“ப்ச்… அப்பவே அதையும் பண்ணேன். ஆனா ஒரு சின்ன க்ளு கூட கிடைக்க விடாம நமக்கே தண்ணி காட்டுறான்.” என்றான் ஸ்டியரிங்கை சீறலுடன் தட்டியபடி.

“அப்போ அவனுங்கள எப்படி தான் கண்டுபிடிக்கிறது.” வசுந்தராவும் குழம்பிட,
அந்நேரம் ஜிஷ்ணுவிற்கு ஃபோன் வந்ததில் அதனை எடுத்து காதில் வைத்தான்.

எதிர் முனையில் ஜிஷ்ணுவின் ஆள் தான் பேசினான். “சிசிடிவி கேமரால தேடுனதுல அந்த கார் நம்பர் கிடைச்சிருச்சு. உங்களுக்கு அனுப்பி இருக்கேன் ஜீ” என்று கூறிட, ஜிஷ்ணுவும் வேகமாக அந்த எண்ணை எடுத்துப் பார்த்தான்.

வசுந்தரா ஆர்வத்தில் அந்த எண்ணை எட்டிப் பார்க்க அவள் முகம் சற்று சுருங்கியது.

“ஒரு நிமிஷம் இங்க குடு” எனக் கேட்டு அவனது போனை கையில் வாங்கியவள், மீண்டும் ஒரு முறை அந்த எண்ணை உற்றுப் பார்த்தாள்.

“இது… இது… அப்பாவோட கார் நம்பர் தான்” என அவள் கூறியதும் ஜிஷ்ணுவும் குமரனும் புரியாமல் பார்த்தனர். “என்ன சொல்ற வசு?” என்ற குமரனின் வினவலில்,

“ஆமா குமரா! இது அப்பாவோட கார் தான். ஆனால் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இந்த கார என் அண்ணன் கிட்ட கொடுத்துட்டாரு. இப்ப அவன் தான் யூஸ் பண்ணிட்டு இருக்கான்” என தலையில் கை வைத்தவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை தான். ஆனால் அவள் அறியவில்லை இன்னும் அவள் காட்டின் நடுப்பகுதியைக் கூட அடையவில்லை என்று.

ஜிஷ்ணு கூர்மையுடன், “அப்போ கண்டிப்பா இதுக்கும் அவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு” என சிந்திக்க,

“எனக்கு ஒன்னும் புரியல. அவன் ஏன் அப்பாவை கொலை பண்ண நினைக்கணும். ராதிகா சம்பவத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்… நினைக்கவே அருவருப்பா இருக்கு!” என்று நொந்தாள்.

“முதல்ல இதுல இருக்குற உண்மைத்தன்மையை கண்டுபிடிச்சுட்டு அதுக்கப்புறம் பழி போட்டுக்கலாம்” என்று குமரன் கூறியதில்,

ஜிஷ்ணு “அவன புடிச்சு அடிச்சி கேட்டா உண்மை என்னன்னு தெரிஞ்சுரும். அவன தூக்கிட்டு வர சொல்லு” என்ன கட்டளை இட,

குமரன் தான், “மச்சான் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு” என இழுத்ததில் ஜிஷ்ணுவின் தீப்பார்வைக்கு ஆளானான்.

ஆனால், எங்கு தேடியும் சுந்தரை கண்டுபிடிக்கத் தான் இயலவில்லை.

அவனை ஊர் முழுக்கத் தேடியும் கண்டறிய இயலாததால் மேலும் குழம்பிய மூவரும், கன்னிமனூருக்கு செல்ல, அங்கோ எப்போதும் போல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காரில் இருந்து இறங்கி, அவ்வேலையை நோட்டம் இட்டபடியே மூவரும் பல சிந்தனையில் ஆழ, ஜிஷ்ணு, “உன் அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கிறதை உன் வீட்ல சொன்னியா வக்கீலு?” என கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.

“ம்ம்… அம்மாக்கிட்ட சொன்னேன். அப்பவே ஹாஸ்பிடல் போயிருப்பாங்க. எப்படியும் சுந்தருக்கும் சொல்லிருப்பாங்க. இல்லன்னா சொல்ல ட்ரை பண்ணிருப்பாங்க.” என்றதில்,

“முதல்ல நீ உன் அம்மாக்கு கால் பண்ணி, சுந்தர் அங்க வந்தானான்னு கேளு.” என உத்தரவிட, ஒரு நொடி வாடியவள்,

பின் முறைப்புடன், “எப்படி போன் பண்றது. நீ தான் என் போன உடைச்சு வைச்சுட்டியே” என்றாள் முறைப்பாக.

‘இருந்துட்டா மட்டும்’ அவன் வாய்க்குள் வறுத்துக்கொண்டு, “டேய் உன் போன குடு” என்று குமரனை பணித்தான்.

அவனோ, “என் போனையும் சார் தான் உடைச்சீங்க ஞாபகம் இருக்கா?” என்றான் கிண்டலாக.

“ப்ச், ஏன் உன் போன்ல அவுட் கோயிங் போகாதா?” என வசுந்தரா முறைத்தபடி, ஜிஷ்ணுவின் கையில் இருந்த போனை பிடுங்க எத்தனிக்க, அவன் சட்டென பின்னால் மறைத்து,

“லாக் எடுத்து தரேன்” என்றவன், சற்று தள்ளி நின்று, போனில் இரு நிமிடம் ஏதோ செய்து விட்டே கொடுத்தான்.

அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், பரத் எண்ணிற்கு போன் செய்தாள்.

ட்ரூ காலரில் ஜிஷ்ணுவின் பெயர் வந்ததில் சற்றே மிரண்ட பரத், “ஹ… ஹெலோ…” என எச்சிலை விழுங்க, பின் வசுந்தராவின் குரல் கேட்ட பின்னே நிம்மதி மூச்சை வெளியிட்டான்.

“தாரா. அப்பா இப்ப பரவாயில்ல. கொஞ்ச கொஞ்சமா ஹெல்த் இம்ப்ரூவ் ஆகுதுன்னு சொல்லிருக்காங்க. அம்மாதான் அழுதுக்கிட்டே இருக்காங்க. அர்ச்சு இப்ப தான், அவங்களை சாப்பிட வைச்சா. அங்க நிலைமை எப்படி இருக்கு. ஏதாவது க்ளூ கிடைச்சுச்சா” என பரத் சரமாரியாக பேச,

அனைத்திற்கும் “ம்ம்” மட்டும் கொட்டியவள், நேரடியாக “சுந்தர் அங்க வந்தானா பரத்?” எனக் கேட்க,

“சுந்தரா… இல்லையே. அம்மா அவனுக்கு கால் பண்ணா எடுக்கவே இல்லையாம். அண்ணியும் அவங்க ஊருக்கு போயிருக்காங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க.” என விளக்கம் கொடுத்தவனிடம்,

“லிசன்… அவன் அங்க வந்தா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணு.” என்று விட்டு, மேலும் வழவழக்காமல் போனை வைத்திட, ஜிஷ்ணு அவளையே ஆராய்ந்தான்.

“என் கூட பொறந்த நாய் எங்க போய் தொலைஞ்சுச்சுன்னு தெரியல. வரட்டும், சாவடிக்கிறேன்…” என்று கோபம் தலைக்கேற காரை நங்கென்று குத்தினாள்.

குமரன் தான் பதறி, “ஏய்… லூசு. இப்படி குத்தி ஒரு கையை உடைச்சது பத்தாதா.” எனத் தடுத்திட,

ஜிஷ்ணு அவளை கூர்மையுடன் ஏறிட்டு, “நான் உன்ன உன் அம்மாக்கு தான போன் பண்ண சொன்னேன்!” என கேட்க, அவள் பதில் கூறாது அமைதி காத்தாள்.

அதற்கு மேல் அவனும் வேறு எதுவும் கேட்கவில்லை. ஆனால் மூவரின் முகமும் குழப்ப ரேகைகளை தங்கி இருந்தது.

அதனை கலைக்கும் விதமாக குமரன், “தர்மா உன்ன யாருடா கொலை பண்ண வந்தா?” என வினவ,

புருவம் சுருக்கி யோசித்தவன், “தெரியல. இருட்டுல அவனுங்க முகமும் சரியா தெரியல. ஆனா இப்ப நடக்குறதுக்கும் ராதி விஷயத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கோன்னு என் உள்ளுணர்வு சொல்லிக்கிட்டே இருக்கு.” என்றான்.

“எனக்கு என்னமோ மினிஸ்டர் நீலகண்டனுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு தோணுது.

ஏன்னா ராதி விஷயத்திலும் மறைமுகமா அவருடைய பேர் அடிபட்டு இருக்கு. அவரே ஏன் உன்னை கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்க கூடாது” என்று வசுந்தரா கேள்வியாக ஜிஷ்ணுவைப் பார்க்க,

அவனும் ஆமோதிப்பாக தலையாட்டி, “இருக்கலாம். அவருக்கு என்ன கொலை பண்ற அளவுக்கு என் மேல கோவம் இருக்குன்னு எனக்கு தெரியும்.

ஆனா இந்த நேரத்துல என்ன கொலை பண்றதுனால மினிஸ்டருக்கு எந்தவித யூசும் கிடையாது. ஒன்னு நான் தான் அவன் பினாமி.

இன்னொன்னு எலக்சன் டைம். அண்ட் இதெல்லாம் விட முக்கியமான விஷயம் இன்னும் கன்னிமனூர்ல அவனுங்க நினைச்ச விஷயம் முழுசா நடக்கல. இதெல்லாம் முடியிற வரைக்கும் மினிஸ்டர் என்ன ஒன்னும் பண்ண மாட்டான். என்கிட்ட மோதுற அளவுக்கு யாருக்கும் தைரியமும் கிடையாது! பாப்போம் எவ்ளோ நாள் ஓடி ஒளியிறான்னு.” என்றவனின் குரலில் கர்ஜனை மிதந்தது.

ஜிஷ்ணுவின் ஆட்கள் ஒருபுறம் சுந்தரை தேட, பரத்தும் ஒரு புறம் தேடிக் கொண்டிருந்தான்.

வசுந்தராவிடம் தன்னுடைய அலைபேசி இருப்பதை மறந்து நகர்ந்தவன், ஊரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்களிடம் ஏதோ உத்தரவிட்டுக் கொண்டிருக்க, மெல்ல வசுந்தராவின் அருகில் வந்த குமரன், ஹஸ்கி குரலில்,

“வசு… செட்டிங்கில்ஸ்ல போய் அவனோட லாஸ்ட் வால்பேப்பர் பாரு.” என்று ஓதி விட்டு செல்ல, புருவம் சுருக்கியபடி குமரன் சொன்னதை செய்தாள்.

அதிலோ, கல்லூரி படிக்கும் போது, வசுந்தரா ஜிஷ்ணுவின் கன்னத்தில் அழுந்த முத்தமிடும் காட்சி இருக்க, அதனை அவன் செல்ஃபி எடுத்து இருந்தான். அதை தான் அவன் முகப்புப் படமாக வைத்திருக்க, வசுந்தரா போனை கேட்டதும் நொடியில் அதனை மாற்றி இருந்தான்.

இதோழோரம் சிறு புன்னகை எழுந்தாலும், அதனை விட பெரும் வலி ஒன்று அவள் விழிகளை கலங்கச் செய்ய, மீண்டும் அதே புகைப்படத்தை வால்பேப்பரில் வைத்து விட்டு ஜிஷ்ணுவின் அருகில் சென்று போனை நீட்டினாள்.

வேலையாட்களிடம் ஏதோ பேசிக்கொண்டே போனை வாங்கியவன், லாக் எடுக்க, அதில் மீண்டும் அவர்களது புகைப்படம் இருந்ததில் மனதில் ஒரு வித அலைகள் எழுந்தாலும், முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டவில்லை அவன். அவளும் மறந்தும் அவனை திரும்பி பார்க்கவில்லை. ஏனோ, அவனது உணர்வுகளற்ற முகத்தை காண அவளுக்கு பிடிக்கவும் இல்லை.

வெறித்தனமாக கோபப்படுவான், அல்லது முகத்தில் கேலியும் முறைப்பும் பொங்கி வழியும். ஆனால், சில மணி நேரமாக, அவளிடம் கடந்த காலத்தை கூறியதில் இருந்தே, ஜிஷ்ணுவின் விழிகள் உணர்வுகளை துடைத்தெறிந்திருந்தது.

அதுவே அவளுள் ஒரு வித குற்ற உணர்ச்சியையும், குத்தும் வலியையும் உருவாக்கினாலும், இப்போது இருவரும் எதைப் பற்றியும் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை.

மேலும் அவர்களை சுயநினைவுக்கு கொண்டு வர, பரத்தே அவனை அழைத்திருந்தான்.

“சார்… சுந்தர் இருக்குற இடம் தெரிஞ்சுருச்சு.” என்று முகவரி கூறியதில், மூவரும் உடனடியாக கிளம்ப, மருத்துவமனையில் இருந்து பரத்தும் அர்ச்சனாவும் அந்த இடத்திற்கு சென்றனர்.

குமரன் தான் ஜிஷ்ணுவை அமைதிப் படுத்திக்கொண்டே வந்தான். “தர்மா… அவனை பார்த்ததும் அடிச்சு நொறுக்கிடாத. பொறுமையா பேசிட்டு எந்த முடிவுனாலும் எடுக்கலாம்.”

ஆனால், அவன் காரை ஓட்டும் வேகத்திலேயே அவனது ஆத்திரத்தின் அளவு புரிய, அதே அளவு சினம் மின்ன வசுந்தராவும் சாலையை எரித்துக் கொண்டிருந்தாள்.

‘ஹ்ம்ம்… இதுங்ககிட்ட பொறுமையை பத்தி பேசுனது என் தப்பு தான்!’ என குமரன் நொந்தது தான் மிச்சம்.

இவர்களுக்கு முன்பே, பரத்தும் அர்ச்சனாவும் அங்கு சென்று பேந்த பேந்த விழித்தபடி நின்றனர்.

சில நொடிகளில், மற்ற மூவரும் வந்து விட, வசுந்தரா புரியாமல், “என்னடா ஏன் நிக்கிற? சுந்தரை பார்த்தீங்களா?” என வினவ,

அர்ச்சனா மிரண்டு, “நான் எதுவும் பண்ணல மேம். சார் தான்…” என்று பரத்தை கோர்த்து விட,

அவனோ பதறி “நானும் வேணும்ன்னு பண்ணல. என்னை பார்த்ததும் ஓடுனான். அதான் கட்டையால அடிச்சேன்…” என அருகில் விழுந்து கிடந்த சுந்தரைக் காட்ட, அப்போது தான் அவனைக் கவனித்தனர்.

பரத் மேலும் தொடர்ந்து, “சாரி தாரா, உன் அண்ணனை கொல பண்ணனும்ன்னு நான் நினைக்கல!” என உளறியதில், ஜிஷ்ணு அவனை மேலும் கீழும் கேவலமாக ஒரு பார்வை பார்த்து குமரனிடம்,

“குமரா, இவன் என்ன சர்க்கஸ் காட்டி வச்சு இருக்கான்னு பாரு.” என்று பணிக்க, “என்னது சர்க்கஸா? நான் கொலை பண்ணிட்டேன் சார்” என்றான் திகைத்து.

அதில் ஜிஷ்ணும் வசுவும் ஒரு சேர முறைக்க, குமரன் சுந்தரின் அருகில் சென்று பார்த்து விட்டு,

“கட்டையால அடிச்சதுல மயங்கிட்டான் தர்மா. பார்ட்டி உயிரோட தான் இருக்கு. ஒரு பொட்டு ரத்தம் கூட வரல. கொலை பண்ண மூஞ்சிங்கள பாரு.” என இருவரையும் காறி உமிழ்ந்தான்.

“டேய்! அவனை தூக்கி கார்ல போடுங்க. மயக்கம் தெளியவும் வராத ரத்தத்தை வரவைச்சுடலாம்.” என விரல்களை சொடுக்கெடுத்தபடி ஜிஷ்ணு கூற, அதில் அவனையும் காரில் போட்டு, மற்றவர்களும் ஏறிக் கொண்டனர்.

சுந்தரை தங்களின் குடோனில் கட்டிவைப்பதை பற்றி ஜிஷ்ணு குமரனிடம் பேசிக்கொண்டே வர, இடையில் ‘ரயில்வே க்ராஸிங்’ இல் கார் நின்றது. அது மற்றொரு ஊருக்கு செல்லும் வழியாக இருக்க, இதுவரை வசுந்தரா அந்த சாலையில் வந்ததே இல்லை.

அதில் சுற்றி முற்றி பார்வையைப் பதித்தவளுக்கு, பக்கவாட்டில் இருந்த ஒரு உணவகமும், அவர்களின் கூவலும் வித்தியாசமாக இருந்தது.

பரோட்டா, சால்னா வாசனை மூக்கை துளைக்க, அந்த உணவக வாசலில் நின்ற ஒருவன், மூச்சுக் கூட விடாமல், உணவு பதார்த்தங்களில் பெயர்களை கூவிக்கொண்டே இருந்தான்.

சில நொடிகளில் அக்குரல் அவளுக்கு எதையோ நினைவுபடுத்த, சட்டென்று நினைவிற்கு தான் வரவில்லை. அந்நேரம், ‘தட் தட்’ என்று கூச்சலுடன், ரயிலும் கடக்க, அவன் குரலோ விடாமல் கூவியபடியே இருந்தது.

இரயில் கடந்ததும், ஜிஷ்ணு காரை எடுக்க முயல, வசுந்தரா ஸ்டியரிங்கை பற்றிக்கொண்டு ஏதோ சிந்தித்தாள்.

“என்னடி?” அவன் கண்ணை சுருக்கி வினவ, அவளோ அதற்கு பதில் கூறாமல், “இந்த ஹோட்டல் இங்க ரொம்ப வருஷம் இருக்கோ?” எனக் கேட்டாள்.

“ஏன்… பரோட்டா சாப்பிட போறியா?” ஜிஷ்ணு நக்கலாக கேட்க,

“ப்ச்… இதே மாதிரி சவுண்ட் எஃபக்ட், அந்த ஆளு மாதிரி குரல நான் எங்கயோ கேட்டு இருக்கேன் ஜிஷு.” என்றாள் குழப்பத்துடன். குழப்பத்தில் அவன் பெயரை உதிர்த்ததையும் அறியாமல்.

அவனோ சற்றே அழுத்தத்துடன், “ஏதாவது படத்துல கேட்டு இருப்பீங்க மிஸ் வசுந்தரா.” என அவள் பெயரை அழுத்திக் கூற, அதில் சுயநினைவு பெற்றவளுக்கு முகம் கறுத்தது.

இறுகிய விழிகளுடன் திரும்பிக் கொண்டவளை இலகுவாக்கும் பொருட்டு, குமரன் தான் ஆஜரானான்.

“இந்த ஹோட்டல் ரொம்ப வருசமா இருக்கு வசு. இந்த ஊருக்கு வந்தா இந்த ஹோட்டல் தான் பேமஸ். இத்தனை வருசமா இருக்க இது தெரியாதா உனக்கு. ரொம்ப பழமையான ஹோட்டல். ஆமா. எதுக்கு கேட்குற?” என மென்மையாக வினவ,

ஜிஷ்ணு, “ஆமா, ரொம்ப பழமையானது. உன்ன மாதிரியே.” என அவனை வாரி விட்டு, காரை எடுக்க, அர்ச்சனா கிளுக் என நகைத்து குமரனின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டாள்.

ஆனால், வசுந்தராவால் அந்த உணர்வை அப்படியே விட இயலவில்லை. ‘எதையோ மிஸ் பண்றேன். எதையோ மிஸ் பண்றேன்…!’ என்ற உறுத்தலே தொடர்ந்தது.

சுந்தரை குடோனில் அடைத்ததும், சுந்தரின் மயக்கம் தெளிய நேரம் எடுப்பது போல தெரிய, வசுந்தரா, “என் இன்னொரு போன் வீட்ல இருக்கு. நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன்.” என குமரனிடம் மட்டும் கூறியவளை ஜிஷ்ணு முறைக்க, அதனை பாராமல் அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.

குழப்பத்துடன் ஆட்டோ பிடித்து, வீட்டிற்கு சென்றவள், அவளது கைப்பையையும், அலுவல் அலைபேசியையும் எடுத்து விட்டு, வெளியில் வரப் போக, அந்நேரம் அலைபேசி ஒலித்தது.

இங்கு ஜிஷ்ணுவிற்கும் போன் வந்ததில், யோசனையுடன் எடுத்தவனுக்கு எதிர்முனையில் விகார சிரிப்பு சத்தம் கேட்டது.

“என்ன தர்மா. உன் ஆச காதலியை தனியா விட்டுட்ட போல” என கரகரத்த ஆண் குரலில் கூர்மையானவன், “யார் நீ?” என கோபத்துடன் வினவ, எண்ணங்களோ அவனது வசு பேப் மீதே இருந்தது.

“நான் யாருன்னு உனக்கு தெரிய வேண்டியது இல்ல எம். எல் . ஏ சார். ஒழுங்கா எல்லாத்துல இருந்தும் ஒதுங்கி ஊரை விட்டு ஓடிடு. இல்ல… அடுத்து அடுத்து உனக்கு பெரிய அடியா இருக்கும். அதுல முதல் அடி உன் வசு பேப்க்கு தான் தர்மா.

அட! அட! என்ன கோபமா இருந்தாலும், ரெண்டு பேரும் முத்தம் குடுக்குறது என்ன, தாங்கிக்கிறது என்ன…!” என மீண்டும் சிரிப்போசை கேட்க, அதற்கு மேல் பொறுமை இன்றி போனை அணைத்தவன், வேகமாக காரை நோக்கி சென்றிட, பரத்தும் குமரனும் பதறினர்.

பரத் உடனே அர்ச்சனாவிற்கு போன் செய்ய அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

வசுந்தராவின் எண்ணிற்கு அழைக்க அதுவோ பிசி என்றே வந்தது.

“சார். நான் தாராவோட இன்னொரு நம்பர் தரேன்…” என்று ஜிஷ்ணுவிடம் பேச போக,

“என்கிட்ட இருக்கு. நீங்க சுந்தர் மேல கவனமா இருங்க” என்று கூறி விட்டு, புயலாக பறந்தான். மற்றொரு கரமோ அவளுக்கு அழைப்பதை நிறுத்தவில்லை.

“எடுடி…! எடுடி! எடுடி!” என பதற்றத்தில் கத்தியபடியே சென்றவனுக்கு பதில், எதிர்முனை பிசி என்றே வர, மனம் நடுங்கித் தொலைத்தது.

காரை வசுந்தராவின் வீட்டின் முன், கீரிச்சிட்டு நிறுத்தி விட்டு, “வசு… வசு” என கர்ஜித்தபடி உள்ளே செல்ல, அங்கோ அர்ச்சனா வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டும், வசுந்தரா யாருடனோ போனில் பேசியபடியும் இருந்ததில் ஒரு நொடி நிம்மதி ஆனவன், மறு நொடியே கோபத்தின் உச்சிக்கு சென்றான்.

ஜிஷ்ணுவைக் கண்டதும், போனை அணைத்தவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவனோ பொங்கிய கடும் சினத்தை உள்ளுக்குள் அடக்கியபடி, “போன் பண்ணுனா எடுக்க மாட்டியா?” எனக் கேட்டான்.

இடக்காக பதில் கூற வந்தவளோ, அவனது விழி சிவந்து, முகம் ரௌத்திரத்தில் மிதப்பது போல தோன்ற, “கிளையண்ட் கால் பேசிட்டு இருந்தேன் நீ எப்ப போன் பண்ணுன?” எனக் கேட்கும் போதே, அவனது இரும்புக்கரம் பெண்ணவளின் கன்னத்தை, உதட்டோரம் குருதி வழியும் அளவு பதம் பார்த்திருந்தது.

திடீரென்ற ஆடவனின் கோபத்தின் காரணம் புரியாது திகைத்தவள், உறைந்து நிற்க, வலியில் கண்கள் தானாக கலங்கி இருந்தது.

அவள் நின்ற கோலமும், தன்னால் வழிந்த உதிரமும் அவனை மேலும் தன் மீதே சினத்தை வரவழைக்க, கேசத்தை அழுந்தக் கோதி, இரண்டு மூன்று முறை ‘ஊஃப்! ஊஃப்!’ என மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை சமன் செய்ய முற்பட்டவன், அது முடியாது போக, அவளை முரட்டுத் தனமாக இழுத்து, தன்னவளின் இதழ்களில் வழிந்த இரத்தத்தை தன்னிதழ் கொண்டு
உறிஞ்சினான்.

தீயோ தென்றலோ அவன்(ள்)
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
85
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.