19 – விடா ரதி…
“அம்மாடி… அந்த தேங்காய உடச்சி துருவி வை… நான் போய் வாழப்பூவ பறிச்சிட்டு வரேன்…. உனக்கு வாழைப்பூ பிடிக்குமா?”, எனக் கேட்டார் சாந்தம்மா தேவி.
“நான் எதுவும் வேணாம்னு சொல்ல மாட்டேன் அத்த…. எல்லாமே சாப்பிடுவேன்…”, சிரித்தபடிக் கூறினாள்.
“பொம்பள பொறப்புல நாம வேணும் வேணாம்னு சொல்லக்கூட உரிமை இல்லங்கற மாதிரி தான் நடத்தறாங்க, ஆனா நம்ம உரிமையும், நியாயமான விருப்பத்தையும் எப்பவும் விட்டு கொடுக்கவே கூடாது… சொல்லு உனக்கு என்ன பிடிக்கும் அதுவும் செஞ்சி தரேன்….”
“எனக்கு கீரை எல்லாம் பிடிக்கும் அத்த… வாழப்பூவும் நல்லா இருந்தா சாப்பிடுவேன்…. நரம்பு நான் எடுக்கவா அத்த? எனக்கு அது செய்ய பிடிக்கும்….”
“ஹாஹா.. யாருடி இவ மாமியார்கிட்ட இந்த வேல செய்ய பிடிக்கும்னு சொல்லற….. 2 வாழைப்பூ உரிச்சி நரம்பு எடுக்கணும்… நானும் உன்கூட பேசிட்டே செஞ்சா வேலை சுளுவா முடியும்… நீ இந்த ரசத்த வை…. நான் வரேன்….”, எனக் கூறிவிட்டு பின்பக்கம் சென்று அங்கே மரத்தில் இருந்த வாழைப்பூவை ஆட்களை வைத்து பறித்துக் கொடுக்கச் சொல்லி வாங்கி வந்தார்.
“ஏலேய் மாணிக்கம் …. அந்த பக்கம் சோலக்கருது 10 ஒடச்சி கொண்டா…. தம்பியும், ஐயாவும் எங்க இருக்காங்கன்னு பாத்துட்டு 2 மணிக்கு சாப்பிட வந்துட சொல்லு…. சாயிந்தரம் காஞ்ச தேங்கா எல்லாம் செக்குல ஆட்டி கொண்டு வந்து வைக்கணும்.. புள்ளைங்க ஊருக்கு போறப்ப குடுத்து விடணும்…. விளங்குதா ?”, வேலையாளிடம் வரிசையாக வேலைகளைக் கூறிவிட்டு சமையற்கட்டிற்குள் வர, ரதி குழம்பைத் தாளித்து ஊற்றிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் பாயாசம் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் வடைக்கு பருப்பை உரலில் போட்டுத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்.
அடுப்பில் கண்களை வைத்தபடி அவள் அனைத்தையும் கவனித்துச் செய்வதைக் கண்டு மனம் நிறைந்தபடி உள்ளே வந்தார்.
“ரதி…. இந்தா வாழப்பூ… நான் உரல பார்த்துக்கறேன்… அந்த திட்டுல உக்காந்துக்க.. காத்தும் வரும்….. “, எனக் கூறிவிட்டு உரலில் பருப்பை பதம் பார்த்தபடித் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.
“அம்மாடி ரதி…..”
“சொல்லுங்க அத்த….”
“எப்ப இருந்து நீ வேலைல சேரணும்?”
“நாள மறுநாள் அத்த…. நேரா போகணும்… “
“போயிட்டு எத்தன நாள் கழிச்சி வருவ?”
“எப்படியும் ஒரு வாரம் ஆகிடும் அத்த…..”
“அவன் தனியா தான் இருக்கணுமா?”, என நொடித்துக் கொண்டபடிக் கேட்டார்.
“நீங்க தான் போய் உங்க புள்ளையோட இருங்களேன்….”, சிரிப்புடன் கேலியாகக் கூறினாள்.
“நான் கூட இருக்கவா உன்ன கட்டி வச்சேன்….”, கோபமாக முகத்தை வைத்துக் கொண்டுக் கேட்டார்.
“அத்த.. உங்களுக்கு என் வேலைப்பத்தி தெரியும், நான் வீட்ல இருந்து முக்கால்வாசி பண்ற மாதிரி ஏற்பாடு பண்ண தானே இப்போ போறேன்…. அதுக்கே சலிச்சிகிட்டா எப்படி?”, அவளும் மெலிதானக் கோபத்தை முகத்தில் காட்டினாள்.
“இருந்தாலும்…. சேரி… நீயாச்சு.. அவனாச்சு…. சீக்கிரம் பேர புள்ளைய பெத்து குடுத்துரு கண்ணு… இந்த கெழவி அது முகத்த பாத்துட்டு இருந்துடுவேன்….”
“அதுக்கு ஹனிமூன் போகனும்னு சொன்னேன்ல… உங்க புள்ளைகிட்ட என்னை கூட்டிட்டு போக சொல்லுங்க….”
“ஏண்டி ஊருல இருக்கறவங்களாம் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு வராங்க.. நீங்க அங்கயே தானே இருக்கீங்க… அப்பறம் என்னடி?”
“அதுக்குன்னு நான் வீட்லயே ஹனிமூன் கொண்டாடனுமா? அதெல்லாம் முடியாது…”, வீம்பாகக் கூறினாள்.
“எம்புள்ளைக்கு செலவு வைக்கணும் உனக்கு?”, முறைப்பாகக் கேட்டார்.
“பொண்டாட்டிக்கு பண்ணாம யாருக்கு பண்ணுவாராம் உங்க புள்ள? மருமகளுக்கு செலவு பண்ணா தான் பேர புள்ள வரும்… பாத்துக்கோங்க….”, என அவளும் முறைப்புடன் கூறிவிட்டு வாழைப்பூவை வைத்துவிட்டு எழுந்துச் சென்றாள்..
“இந்தாடி.. வந்து வாழப்பூவ பொரியல் செய்…”
“உங்க மருமகளுக்கு ஒரு பொரியல் கூட செஞ்சி தர மாட்டீங்களா நீங்க? பண்ணுங்க… நான் போய் குளிச்சிட்டு வரேன்….”, எனக் கூறிவிட்டு ஓடினாள்.
“எம்மாடி… என்னா வாயி…. எம்புள்ள எப்படி இவகிட்ட சிக்கிட்டு முழிக்கறானோ? மெல்ல போ டி… படிகட்டு வழுக்கும்….”, என இங்கிருந்தே குரல் கொடுத்தார்.
“என்ன சாந்தாக்கா… உங்க மருமக சத்தம் வாசல் தாண்டி கேட்குது…”, எனக் கூறியபடி உறவினர் ஒருவர் உள்ளே வந்தார்.
“வா யசோத…. “, எனக் கூறி தண்ணீர் கொடுத்துவிட்டு அடுப்பில் வேலையைக் கவனித்தார்.
“என்ன சாந்தக்கா.. மருமகள வேலை வாங்காம நீயே செஞ்சிட்டு இருக்க….”, வந்த பெண்மணி பேச்சை ஆரம்பித்தார்.
“மருமக வந்துட்டா வேலைய தூக்கி குடுத்தறணுமா? எம்புள்ளைக்கு நான் சமைச்சி போடுவேன்.. அவ அங்க போட்டா போதும்…”
“பையனுக்கு கல்யாணம் பண்ணியும் நீயே எல்லா வேலையும் பாத்து கஷ்டப்படணுமா என்ன? மருமகள இப்பவே அதட்டி உருட்டி வேல வாங்கி பழக்கினா தானே நமக்கு பயந்து இருப்பாங்க….”
சாந்தம்மா தேவி அவரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வாழைப்பூவில் மிளகாய் பொடியைப் போட்டார்.
“என்னக்கா அமைதியா இருக்க?”
“இல்ல இப்படி வேல வாங்கி தான் உன் மருமவள வீட்ட விட்டு தொரத்தினியான்னு யோசிச்சேன்…. வீட்டுக்கு வர்ற மருமவ ஒன்னும் வேலைக்காரி இல்ல… நாமளும் மருமகளா வந்தவளுங்க தானே? அதுங்க புருசன் கூட மொத மனசு விட்டு பேச பழக நேரத்த நாம தான் ஏற்படுத்தி குடுக்கணும்…. அதுங்க ஒத்துமையா இருந்தா தான் நம்ம வம்சம் வளரும்….. நம்மள மாதிரி தானே அதுங்களும் ஆத்தா அப்பன விட்டுட்டு இங்க வருது.. நாம 15-16 வயசுல அப்பன் ஆத்தாள விட்டுட்டு வந்து எம்புட்டு கஷ்டப்பட்டோம்? இன்னிக்கி புள்ளைங்க 25 வயசுக்கு மேல தன் கல்யாணம் பண்ணிக்குது.. அத்தன வருசம் வாழ்ந்த வீட்டையும், மனுஷங்களையும் விட்டு வர்ற புள்ளைக்கு எவ்ளோ ஏக்கம் வரும்? அத எல்லாம் பொம்பள புள்ளைங்க சமாளிச்சி வாழ்க்கையை பாக்க ஆரம்பிச்சுடும் தான் …. ஆனா மனசுன்னு ஒன்னு இருக்கு… அதுக்கு ஆறுதல், அன்பு, எல்லாம் நம்ம தான் குடுக்கணும்…. அடிப்படை புரியாம அவங்கவங்க குடும்பத்த அவங்களே மாமியார் அதிகாரம் நாத்தனார் அதிகாரம்ன்ற பேருல கெடுத்துகிட்டா வம்சம் எப்புடி வளரும்? புள்ளைங்க எப்புடி சந்தோசமா வாழும்? கடைசில ஆத்தா அப்பன ஒரு பயலும் பாத்துக்கலன்னு ஆசிரமத்துல கிடந்து பொலம்பினா ஆச்சா? நம்ம முன்னோடியா நடந்துகிட்டா தான் அடுத்து வர்ற தலைமுறை சரியா கத்துக்கிட்டு நடக்கும்… “, பேசியபடியே துருவிய தேங்காயை வாழைப்பூவில் போட்டு நன்றாக வதக்கிப் பாத்திரத்திற்கு மாற்றினார்.
“நான் நீ கஷ்டபட்டு அடுப்புல நிக்கறியே-ன்னு சொன்னா நீ என்னையவே குத்தம் சொல்ற….”, கழுத்தை நொடித்துக் கொண்டார்.
“ஏண்டி இத்தன வருஷம் நான் தானே ஆக்கி போட்டேன்… இப்பவும் பண்றேன்… நாலு நாளு இருந்துட்டு போற புள்ளைகிட்ட என்ன வேலை வாங்கணும்-ன்னு எனக்கு தெரியும்.. நீ வந்த சோலிய சொல்லிட்டு கெளம்பு டி..”, என அதட்டினார்.
“நாளைக்கு கருப்பனுக்கு பூசைக்கு என்ன என்ன வேணும்ன்னு பூசாரிகிட்ட போய் கேக்கணும்-ன்னு சொன்னீங்களே.. அவரு வீட்டுக்கு வந்துட்டாரு… அந்த தகவல் சொல்ல தான் வந்தேன்….”
“வந்த சோலிய விட்டுபுட்டு என் வூட்டு நியாயம் கேக்கறியோ? நான் செத்த நேரத்துல போயி பாக்கறேன் அவருகிட்ட சொல்லிடு….”, என கூறி வந்தவருக்கு பையில் சில சோளமும், ஒரு வாழைப்பூவும் கொடுத்தனுப்பினார்.
அவர் வந்ததில் இருந்து பேசிய அனைத்தும் ரதிக்கும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. அவள் குளித்துத் தயாராகி கீழே வந்து மாமியாரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
“அடியே… என்புள்ளைக்கு தர வேண்டியது எல்லாம் எனக்கு தார நீ?”, வெட்கப்பட்டுக்கொண்டே கூறினார்.
“உங்க புள்ளைக்கு கன்னத்துலையா குடுப்பேன்? இது உங்களுக்கு… “, என இன்னும் இரண்டு முத்தங்களைக் கொடுத்தாள்.
சமையற்கட்டின் வாசலில் அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை பார்த்துக் கொண்டே அப்பாவும், மகனும் உள்ளே வந்தனர்.
“என்னடா மகனே…. மாமியா மருமக சண்டை நடக்கும்ன்னு பாத்தா ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுட்டு நிக்கறாங்க? உன் பொண்டாட்டி எதுக்குடா எம்பொண்டாட்டிக்கு முத்தம் தாரா? நான் தான் இருக்கேன்ல …”, என அவன் அப்பா பேசிக்கொண்டே வந்தார்.
“ஏன் ப்பா?”, கடுப்புடன் அவன் அவரை முறைத்துவிட்டு ரதியை அழைத்தான்.
“ரதி எனக்கு ட்ரெஸ் எடுத்து குடு….”
“எல்லாம் செல்ஃப்ல வச்சிட்டேன் எடுத்துக்கோங்க ரகு…. நான் அத்தை கூட பூசாரி வீடு வரைக்கும் போயிட்டு வரேன்…”, எனக் கூறினாள்.
அவர்கள் இருவரும் பேசியபடிக் கிளம்புவதைப் பார்த்தவன், அவனும் உடன் வருவதாகச் சேர்ந்துக் கொண்டான்.
பூசாரி வீட்டிற்குச் சென்றுத் திரும்பும் வரையிலும் ரதி அவனிடம் ஒரு வார்த்தைப் பேசவில்லை. மிகவும் சுவாரஸ்யமாக தன் மாமியாருடன் ஐக்கியம் ஆகிவிட்டாள்.
அவனுக்கு தான் பொறாமையில் மொத்தமாக எரிந்துக் கொண்டிருந்தது. அநேகமாக நமக்கும் கூட கருகும் வாடை அடிக்கிறது அல்லவா?
“ராட்சஸி…. ஒரு தடவையாவது திரும்பி பாக்கறாளா? என்னைய லவ் பண்றாலா எங்கம்மாவ லவ் பண்றாலா இவ?”, மனதிற்குள் அவளை வறுத்தபடி உடன் நடந்துக் கொண்டிருந்தான்.
“என்னடா மகனே.. அப்படியா டா?”, என அவன் தாய் எதையோ கேட்டார். அவன் அவர் பேசியதை கவனித்தால் தானே பதில் கூற, அவன் தன் மனைவியைத் தாளித்தப்படி வந்துக் கொண்டிருக்கிறானே….
“என்னம்மா?”
“அவள ஒரு மாசம் ஆப்பீசுக்கே வேலைக்கு போயிட்டு வான்னு சொன்னியாம்? “
“நான் எப்ப சொன்னேன்? அவள நான் கடைக்கு வான்னு தான் கூப்பிடறேன்.. அவதான் வரமட்டேங்கறா…”, அவசரமாகக் கூறினான்.
“நீங்க இத சொல்லவே இல்ல…. அப்பப்போ வான்னு தான் சொன்னீங்க ரகு…”
“அப்ப நான் மட்டும் எப்போ உன்கிட்ட அப்படி சொன்னேன்?”, என முறைத்தபடிக் கேட்டான்.
“கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் நீங்க தான் சொன்னீங்க…”
“அது.. அ…அது.. கவனிக்காம ஏதோ ஞாபகத்துல சொல்லி இருப்பேன்…. “, திணறியப்படிக் கூறினான்.
“ஏண்டா இப்படி உளர்ற? வீட்டுக்கு போய் உன் பொண்டாட்டிய பார்த்துட்டு இரு.. ரோட்ட பாத்து இப்ப நட… என்கிட்ட அவ பேசினாலே உனக்கு காதுல புகை வருதோ? “, எனக் கேட்டுவிட்டு மகனை முன்னே செல்லும்படிக் கூறிவிட்டு, அவளை முக்கில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றுத் தேங்காய் சூடம் காட்டி உடைக்கச் சொன்னார்.
“தெருவுல உள்ளவளுங்க கண்ணு எல்லாம் உங்க மேல தான்… ராத்திரி பூசணிக்காய் சுத்தி போடணும்….”, எனப் பேசியபடியே இருவரும் வந்து உணவு பரிமாறி, தாங்களும் உண்டுவிட்டு மல்லிகை பந்தல் அருகே அமர்ந்து பூத்தொடுக்க ஆரம்பித்தனர்.
ரதிக்கு இந்த கணங்கள் எல்லாம் அத்தனை ரசனையானதாக மனதில் பதிந்தது. உடன் கணவனின் பொறாமைப் பார்வையும் அவளுக்கு கூடுதல் குஷியைக் கொடுக்க, இரவு வரையிலும் மாமியாருடன் சுற்றிவிட்டு, இரவு பத்து மணிக்குதான் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவன் முகம் சிவக்க அவளை முறைத்தபடி உறங்காமல் ஜன்னல் திட்டில் அமர்ந்து இருந்தான்.