மைதிலி அறைந்த அறையில் தயானந்தன் கன்னத்தில் கை வைத்துக் கொள்ள தேவஸ்மிதா பொங்கி எழுந்தாள்.
“ஏய் எதுக்குடி அவனை அடிக்கிற?” எனக் கோபமாகக் கேட்டதில், “உன் பிரெண்டு என்ன செஞ்சான்னு அவனையே கேளு” என சீறினாள் மைதிலி.
அமர் குழப்பத்துடன் “என்னடா செஞ்ச?” என வினவியதில், “நான் ஒண்ணுமே பண்ணலையே” என்று பாவமாக தலையாட்டினான்.
அந்நேரம் குழந்தையை உறங்க வைத்து விட்டு மிருணாளினியும் வெளியில் வந்தவள் நடப்பதை புரியாமல் பார்க்க, மைதிலி அவன் சட்டையைப் பிடித்தாள்.
“ஒண்ணுமே பண்ணலையா? பொய் சொன்ன மூஞ்சிலயே குத்துவேன்” என்று மிரட்டியதில், “வீட்டுக்குப் போனதும் விளக்கமாறால கூட அடி மைலி. யுவர் ப்ரூம், யவர் ஹஸ்பண்ட், யுவர் உரிமை” என்று சிரித்து வைத்ததில் அவள் வெறியானாள்.
தயாவோ, “கொஞ்சம் கூட ஈனா வானாவே இல்லையாடா உனக்கு” என்றதில்,
“அதெல்லாம் உங்க கூட பழகும் போதே போய்டுச்சு” என்றான் நக்கலாக.
அமர் தான், “ப்ச் முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க. மைதிலி என்ன ஆச்சு?” என அதட்டலுடன் கேட்க,
அவளோ பிரஷாந்தை நோக்கி காரப்பார்வை வீசியதில், பிரஷாந்த்தே “அட அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. மைலி வா கிளம்பலாம்” என அவள் கையைப் பிடிக்க, கையை உதறியவள் “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ரஷு. நான் அவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொல்லியும் நீயா வில்லாவ எழுதிக் குடுத்துட்டு வந்துருக்க. அப்படியே நீ சம்பாரிச்சது சம்பாரிக்கிறது எல்லாத்தையும் தூக்கிக் குடுத்துட்டு வாயேன். கேஸை நடத்த அவங்களுக்கும் ஈஸியா இருக்கும்ல” என்று பொரிந்து தள்ள “அதில்ல மைலி…” என பிரஷாந்த் விளக்கம் கொடுக்க முனைந்தான்.
“இனி நீயாச்சு உன் பிரச்சனையாச்சு, உன் விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்” என்று முடிவாக உரைத்து விட்டு வெளியில் சென்றதில், “ஐயோ மைலி நில்லுடி” என அவள் பின்னே செல்லப்போனவனை தடுத்த தேவஸ்மிதா “டேய் எரும மாடு… என்னடா பண்ணி வச்சுருக்க?” என்றாள் திகைப்பாக.
மற்றவர்களும் அதே அதிர்வுடன் அவனைப் பார்க்க, அவன் மிருணாளினியை தயக்கத்துடன் ஏறிட்டான்.
“இந்த பிரச்சனை முடிஞ்சு போனதோட முடியட்டும் தேவா. உயிர் இல்லாத வெறும் கல்லு மண்ணுக்காக மிருவோட நிம்மதியைக் கெடுக்க எனக்கு விருப்பம் இல்ல. அதான் வில்லாவோட எல்லாம் முடியட்டும்னு காலி பண்றேன்னு ஒத்துக்கிட்டேன்” என்றவனை மிருணாளினி கண் கலங்கப் பார்த்தாள்.
தயானந்தன் நெகிழ்ந்து நண்பனை கட்டிக்கொள்ள, “என்ன தான் எனக்காக நீங்க இறங்கி வரேன்னு சொன்னாலும், உங்க மனசுல இருக்குற கஷ்டம் எனக்குப் புரியாதா மச்சி?” என்றதில், மிருணாளினி வார்த்தைக்குப் பஞ்சமாகி தேங்கிய விழிகளுடன் அவனை ஆதங்கத்துடன் பார்த்தாள்.
‘ஏன் இப்படி?’ என்ற கேள்வி அவள் பார்வையில் தொக்கி நிற்க, கண்ணை மூடித் திறந்து அவளை சமன்படுத்திய பிரஷாந்த், “அய்யயோ” என தயாவின் அணைப்பில் இருந்து விலகி, “என் பொண்டாட்டி கோபமா போனா. நான் போய் அவளை முதல்ல சமாதானம் பண்ணிட்டு வரேன்” என்று வாசலை நோக்கி ஓடினான்.
தேவா நெற்றியை பிடித்தபடி “என்ன அமர் இவன் இப்டி பண்ணிட்டான்” என்று சலித்துக் கொள்ள, அமரோ “இது அவனுக்கு பேக் பயர் ஆகாம இருக்கனும். அதான் இப்ப எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு மிது” எனக் குழப்பத்துடன் கூறினான்.
மகேஷ் மகிழினியை வெளியில் அழைத்துச் சென்றிருந்ததில், வாசலில் நின்று மகேஷிற்கு போன் செய்தபடி இருந்தாள் மைதிலி.
“அண்ணா எப்ப வருவ? நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்”
“இப்ப தான் நாங்க கடைக்குள்ளயே நுழையுறோம் மைதிலி. ஒரு அரை மணிநேரத்துல வந்துடுறேன்” என்றதில் பிரஷாந்தின் மீதிருந்த கோபத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அதுவோ செல்ப் ஸ்டார்ட் ஆகாமல் சோதித்தது.
பின், கிக் ஸ்டார்ட் செய்ய முயன்றவளுக்கோ புடவை தடுக்கியதில் அதுவும் தோல்வியில் முடிய, ‘ச்சை இது வேற’ எனப் புலம்பும் போதே பிரஷாந்த் வந்து விட்டான்.
“மைலி கார்ல போகலாம் வா” என அழைக்க,
“பேசாம போய்டு” என எச்சரித்தவள் மீண்டும் வண்டியைக் கிளப்ப முயல, வண்டி சாவியை கையில் எடுத்தவன், “வா மைலி. சேர்ந்து போகலாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று கண்ணை சுருக்கிக் கெஞ்சினான் பிரஷாந்த்.
“வண்டியை இங்கயேவா விட்டுட்டு வர முடியும். இது நான் உழைச்சு வாங்குனது. அப்படி எல்லாம் ஈஸியா தூக்கிப்போட்டுட்டு வர முடியாது உன்னை மாதிரி…” என்று வள்ளென விழுந்தவளிடம், “ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் காது குடுத்து கேளேன்…” என அவளை தடுத்து நின்றான்.
“என்ன சொல்லப் போற? மிருவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றது பிடிக்காம, அவளை இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்த வேணாம்னு சார் தியாகி ஆகிட்டீங்க அப்படி தான. எல்லா விஷயத்துலயும் ஓவர் சென்டியா இருக்க ரஷு நீ” என மூச்சு வாங்க அதட்டிட, அவன் சிறுவன் போல தலையைக் குனிந்து திட்டு வாங்கிக் கொண்டான்.
“சரி உன் இஷ்டப்படி தான் பண்ணப் போறன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணுமா இல்லையா? நான் கிறுக்கச்சி மாதிரி இந்த கேஸ்க்காக அலையாம. என் வேலையையாவது பார்த்துருப்பேன்ல. நான் எவ்ளோ இம்பார்ட்டண்ட் கேஸ ஹேண்டில் பண்ணிட்டு இருந்தேன்னு உனக்கே தெரியும். அதுக்கு இடைல கூட நான் ஹைதராபாத் போயிட்டு வந்தேன். அகரன் பேர்ல இருக்குற ப்ராபர்ட்டிஸ் பத்தியும் அவனைப் பத்தியும் இன்னும் க்ளியர் சம்மரி ரெடி பண்றதுக்காக” என்று ஆற்றாமையுடன் அவனைக் குற்றம் சாட்ட, பிரஷாந்த் வருத்தத்துடன் “எப்ப போன? என்கிட்ட சொல்லவே இல்ல” என்றான்.
“சொல்லுவாங்க… சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு. நீயும் பிசியா இருந்ததுனால ஒரே நாள்ல போயிட்டு வந்துடுலாம்னு மார்னிங் பிளைட்ல போயிடு ஈவ்னிங் பிளைட்ல வந்துட்டேன். உனக்காக நான் ஒன்னு பண்றேன்னா அதை மதிக்க கூட வேணாம். அதை இன்சல்ட் மாதிரி நீ ஒரு டிசீஷன் எடுத்தா என்ன அர்த்தம் பிரஷாந்த்?” உள்ளார்ந்த கோபத்துடன் வெடித்தாள்.
“ஹே ஏன் இப்படி பேசுற மைலி” என தவித்தவன், “சாரிடி, தப்பு தான் நான் உங்கிட்ட சொல்லிருக்கணும். சொல்லிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீ கண்டிப்பா ஒத்துக்க மாட்ட. அதான்…” என இழுத்தான்.
“ஹோ… ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சா, எனக்கு தெரியாம என்ன வேணாலும் முடிவு எடுத்துக்குவ அப்படி தான?” அவள் சுள்ளென கேட்டதில்,
“மைலி ப்ளீஸ்… இந்த ஒரே ஒரு விஷயத்துல தான். ஆல்ரெடி மிரு விஷயத்துல நான் கில்டில தான் இருக்கேன் அது உனக்கே தெரியும். இப்போ அதை அதிகப்படுத்துற மாதிரி, எனக்காக அவளை இன்னும் ஹர்ட் பண்ண மனசு வரல மைலி. இதை உனக்கு சொல்லிப் புரிய வச்சு இருக்கணும். தப்பு என் மேல தான். கில்டி பீல்ல இருந்ததுனால என்னால இதை பத்தி உங்கிட்ட சரியா பேச முடியல. சாரி மைலி. அதுக்காக இன்சல்ட் பண்ணிட்டேன்னுலாம் சொல்லாதடி. நான் அப்படி நினைச்சு எதுவும் பண்ணல பிராமிஸா” என்றவனின் முகத்தில் நிஜமான வேதனையும் தவிப்பும் தென்பட, அவனது நிலை புரிந்ததாலோ என்னவோ அதற்கு மேலும் கோபத்தைப் பிடித்து வைக்க இயலவில்லை அவளுக்கு.
ஆனாலும் அந்த வீரியம் குறையாமல், “இன்னொரு தடவை இப்படி பண்ணாத ரஷு. இட்ஸ் ஹர்டிங்…” உண்மையான வலியுடன் மைதிலி அவனைப் பார்க்க, அது அவனையும் தாக்கியது.
அவளை வருந்த வைத்த வேதனை பிரஷாந்தின் மனதையும் வலிக்கச் செய்ய, “ரொம்ப சாரி மைலி” எனத் தவறு இழைத்தவனாக மன்னிப்பு வேண்டினான்.
‘உன்னை அப்படி எல்லாம் அவமானப்படுத்த எண்ணவில்லையடி’ என இறுக்கி அணைத்து முத்தமிட்டு தன்னுணர்வுகளைக் காட்டத் தான் துடித்தது அவனது ஒவ்வொரு அணுவும்.
ஆகினும், அவளது கடந்த கால நிகழ்வுகளிலிருந்து அவளைப் பற்றி அவன் நன்கு புரிந்த ஒன்று, மனரீதியான காயத்தை உடல்ரீதியான தீண்டல் சரி செய்யாது என ஆணித்தரமாக நம்புபவள் அவள்.
அதனாலேயே அவனது சிறு தொடுதல் கூட அவளைக் காயப்படுத்தி விடக் கூடாது எனக் கையை இறுக்கி மூடி நின்றான்.
அவன் நின்ற கோலமும், மனவருத்தமும் அவளுக்குப் புரிந்திட, சில நொடி அமைதிக்குப் பிறகு அவன் தலை குனிந்து நிற்பதை ஏற்றுக்கொள்ள இயலாதவளாக, “வா” என கையை லேசாக விரித்துக் கொண்டாள்.
அதற்காகவே காத்திருந்தவன் போல புயலாக அவளை நெருங்கி இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்தினுள் முகம் புதைத்து, “உன்னை ஹர்ட் பண்ணுவேன்னு எதிர்பார்க்கல மைலி” என தொண்டை அடைக்க முனகினான்.
அவன் முதுகை நீவி விட்டவள் “இட்ஸ் ஓகே ரஷு. ஐ நோ, நீ வேணும்னே பண்ணிருக்க மாட்ட” என அவனை முற்றும் புரிந்தவளாக சமன் செய்தாள்.
“கோபம் இல்லைல?” கமறலுடன் பிரஷாந்த் கேட்க,
“இல்ல ரஷு. என்கிட்ட சொல்லலையேன்ற வருத்தம் தான் இருந்துச்சு. இப்ப அதுவும் இல்ல. ஆனா…” என நிறுத்தியதில் மெல்ல விலகி அவள் முகம் பார்த்தவனின் கரங்கள் அவளது இடையை சுற்றி வளைத்து இருந்தது.
கண்ணீர் லேசாய் கசிந்திருந்த ஆடவனின் முகத்தை இரு கரம் கொண்டு துடைத்து விட்ட மைதிலி, “எவனாவது பொண்டாட்டி திட்டுனதுக்கு அழுவானாடா?” எனக் கேலியாய் கேட்டாள்.
அதில் மெல்லச் சிரித்தவன், “ஐ பீல் வெரி பேட் மைலி. உன்ன கஷ்டப்படுத்திட்டேன்னு” என்றதும், விழியைத் தாழ்த்திய மைதிலி அவன் சட்டைப் பட்டனை திருகியபடி, “இப்படி சாரி சொல்லிருந்தா அப்பவே இந்த வருத்தமும் இருந்துருக்காதோ என்னவோ” என்றாள் மெல்லிய குரலில்.
பிரஷாந்த் வியப்பு மேலிட தன்னவளைப் பார்த்து, “நிஜமாவா மைலி. உனக்குப் பிடிக்காதோன்னு தான் பயந்து தள்ளியே இருந்தேன். இன்னும் கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டா…” என்றவனை சட்டென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் குளமாக,
“பிடிக்காதுன்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப பிடிக்குது. நீ ஒன்னும் என்னை போர்ஸ் பண்ணல, நடந்த சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கை கூட உங்கிட்ட சொல்லிட்டு தான் இதெல்லாம் செய்யணுமான்னு கேட்காம, தப்புன்னு சாரி கேட்குறியே. அப்பறம் எப்படி பிடிக்காம போகும்?” என்றவளின் நெஞ்சை அழுத்திய ரணங்கள் எல்லாம் அவனது சின்னஞ்சிறு செயல்களில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது.
அவன் கூற்றில் நெகிழ்ந்த பிரஷாந்த், மீண்டுமொரு முறை அவளை அழுத்தமாகக் கட்டிக்கொண்டான்.
அவ்வணைப்பில் ஓராயிரம் தியானம் செய்த நிம்மதி அவளுக்கு கிடைக்க, அணைப்பின் இதம் இதயத்தைக் கொள்ளை கொண்டது.
வேண்டுமட்டும் இருவரும் அணைப்பில் ஒருவரை ஒருவர் நாடி, மன பாரத்தைக் கரைக்க, மீண்டும் மெலிதாய் விலகிய பிரஷாந்த், “ஆனான்னு அப்ப இழுத்தியே. என்ன மைலி?” எனக் கேட்டான்.
“அவங்க பணத்தை வச்சு இன்னும் ஆடப் போறாங்க ரஷு. நான் ஏற்கனவே சொன்னேன்ல” என்று கூற,
“அதுக்கும் நான் ஒரு பிளான் வச்சுருக்கேன் மைலி” என்றவனை என்னவென பார்த்தாள்.
“ஐடி ரைட் விடப் போறேன்” எனக் கமுக்கமாகச் சிரிக்க, “என்னது ஐடி ரைடா?” என விழித்தாள் மைதிலி.
“எஸ். எனக்கு ரொம்ப நாளாவே அகரன் பண்ற பிசினஸ் மேல ஒரு டவுட்டு. அவனைப் பத்தி தெரிய வந்ததும் இன்னும் சந்தேகம் அதிகமா இருந்துச்சு. அதை பத்தி துருவி இனி பிரயோஜனம் இல்லைன்னு விட்டேன். இப்போ அதை தெரிஞ்சுக்கிட்டேன். சோ, அவங்க இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் பத்தின டீடெய்ல்ஸும், கணக்குல வராத சொத்தையும் இன்கம்டேக்ஸ்லயே பறிமுதல் பண்ணிடுவாங்க…” பிரஷாந்த் தீவிரத்துடன் திட்டம் தீட்ட,
“அவங்க என்ன இல்லீகல் ஆக்டிவிடீஸ் செஞ்சாங்க. எனக்குப் புரியல” மைதிலி இன்னும் புரியாமல் பார்த்தாள்.
“நான் பாரீன்ல இருக்கும் போது அகரன் பிசினஸ் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு இருந்தான். என்னன்னு கேட்டதுக்கு அவன் தெளிவா சொல்லல. பொதுவா அப்பா பண்ணிட்டு இருக்குற ரியல் எஸ்டேட் பிசினெஸ்லயே பெருசா பண்ணப் போறேன்னு சொன்னான். அவனே சிவில் தான படிச்சு இருந்தான். சோ இடத்தோட வீடும் கட்டி விக்க போறான்னு நினைச்சுக்கிட்டு விட்டுட்டேன்.
அதுக்கு அப்பறம், அவனுக்கு பிசினெஸ் பூம் ஆச்சுன்னு சொல்லிட்டு இருந்தான். ஆனா, நான் அவனோட எங்கேஜ்மெண்ட்காக ஊருக்கு வந்துருந்தப்ப, அவன்கிட்ட அதை பத்தி விசாரிச்சதுக்கு பொறம்போக்கு இடத்துல பட்டா போட்டு, வீடு கட்டி கம்மி விலைக்கு விக்கிறோம். அதுக்கு கவர்மெண்ட் அப்ரூவல் வாங்கியாச்சுன்னு ஏதோ உளறிட்டு இருந்தான்.
அப்போ எனக்குப் புரியல. இப்போ தான் அது உறுத்தவும் என்ன ஏதுன்னு தோண்டி பார்த்தேன். அப்பாவும் அவனும் சேர்ந்து ரியல் எஸ்டேட்லயும் பெரிய மோசடி பண்ணிட்டு இருந்துருக்காங்க. மிடில் க்ளாஸ் ஆளுங்களா பார்த்து கம்மி விலைனு ஃபேக் பட்டா தயார் பண்ணி லோ குவாலிட்டி வீடு கட்டி வித்துருக்காங்க. அதுல பிரச்சனை வரக்கூடாதுன்னு, போலீஸ், பொலிடிஷியன்ஸ்னு சிலரை கைக்குள்ள போட்டுக்கிட்டு வேலை பார்த்து இருக்காங்க. அநேகமா அவங்களோட சிபாரிசு தான், என் அப்பாவோட பெய்ல்கும் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான் யோசனையாக.
மைதிலி தான் “அடப்பாவிகளா! குடும்பமே கிரிமினல் போர் ட்வென்டியா?” என வாயில் கை வைத்தவள், “உண்மையாவே அவங்க உன் பயலாஜிக்கல் பேரண்ட்ஸ் தானா… எதுக்கும் அதையும் நான் விசாரிச்சு வைக்கிறேன்” என தீவிரமாக பேசியதில், செல்லமாக முறைத்தான்.
“எல்லாம் ஓகே. இப்போ ஐடி ரைட்ன்னா, அதுல எல்லாமே லாக் ஆகிடுமே. உன்னோடதும் சேர்த்து…” என்றவளுக்கு அவனது உழைப்பு வீணாகி விட்டதே என்ற கவலை தான்.
“போனா போகட்டும். இதுக்கு மேல யாரையும் ஹர்ட் பண்ணி இந்த பிரச்சனை முடிய வேணாம் மைலி” எனப் பெருமூச்சுடன் கூற, அவனது மூச்சுக்காற்று அவள் நெற்றியில் சூடாகத் தீண்டியது.
மீண்டுமொரு முறை அவளை மெல்ல அணைத்து அவளது தோளில் நெற்றியை அழுத்தி நின்றவனின் பின்னந்தலை கேசத்தை இயல்பாகக் கோதி விட்டவள், “எல்லாம் ஓகே தான் ரஷு. ஆனாலும் எங்கயோ எதையோ மிஸ் பண்ற பீல். வேற ஏதாவது வகைல அந்த பெருசுங்க பிரச்சனையை பெருசாக்குவாங்களோன்னு தோணிக்கிட்டே இருக்கு. ஆனா என்னன்னு தான் ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது.” என்றவளின் குரலில் கவலை அப்பட்டமாகத் தெரிய,
பிரஷாந்திற்கும் எதுவோ ஒன்று மனதை அழுத்திக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஒருவேளை உன் லா மூளை எக்ஸ்டரா டைம் ஒர்க் பண்ணுது போல மைலி… அவ்ளோ சீன் இல்ல!” என்றவனுக்கு பேச்சு வார்த்தை முடிந்து விட்டால் அவளை விட்டு நகர வேண்டுமே என்ற எண்ணத்தில் பேச்சை முடிக்காமல் இழுத்துக் கொண்டே இருந்தான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரமாக இருவரும் இடத்தை விட்டும், நெருக்கத்தை விட்டும் அசையவே இல்லை.
நேரம் சென்ற பிறகே அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட மைதிலிக்கு நாணப் புன்னகை ஒன்று உருவெடுக்க, அவனிடம் இருந்து விலகியவள், “இன்னும் எவ்ளோ நேரம் இங்கயே நிக்கிறதா உத்தேசம்?” என கிண்டலாகக் கேட்க,
“நீயே தள்ளிவிடுற வரைக்கும் “எனக் கண் சிமிட்டினான் குறும்பாக. வெகு அருகில் ஸ்பரிசித்த தன்னவளின் முகத்தை ரசனையுடன் ஏறிட்டவனின் பார்வை, அவள் நெற்றி தொடங்கி இதழ்களில் வந்து முடிய, ரசனையின் வீரியம் இன்னும் அதிகரித்தது.
மைதிலிக்கு அவனது பார்வை ஒரு வித தடுமாற்றத்தைக் கொடுக்க, அவனை ஏறிட இயலாமல் விழிகளை அங்கும் இங்கும் அலைபாய விட, துடித்த சிவந்த இதழ்கள் பிரஷாந்த்தை கிறங்க வைத்தது.
அவள் கன்னத்தை மென்மையாகப் பற்றியவன், மெல்ல நிமிர்த்திட படபடத்த இமைகளுடன் தடதடத்த இதயத்தை அடக்கும் வழி தெரியாமல் மைதிலி திணற, செவ்விதழ்கள் நோக்கி குனிந்தான் ஆடவன்.
அந்நேரம், “அங்கிள்” என தூரத்தில் மகிழினியின் குரல் கேட்க, இருவரும் பதறி விலகினர்.
மைதிலி அவனை நேர்கொள்ள தயங்கி, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக் கொள்ள, மகிழினி அருகில் வந்ததும் பிரஷாந்த் தூக்கிக் கொண்டான்.
“எங்க போனீங்க பேபி?” என அவளிடம் பேச்சை வளர்த்தவனிடம், “மாமா கூட கடைக்குப் போனேன் அங்கிள். மாமா சாக்லேட் வாங்கித் தந்தாங்க” எனக் கை நிறைய சாக்லேட் வைத்திருந்ததைக் காட்டியதில் திரும்பிய மைதிலி “என்ன இவ்ளோ சாக்லேட்ஸ் இருக்கு. உன்னையும் உன் மாமாவையும் அடிக்க போறேன் பாரு” என்று முறைத்தாள்.
“விடு மைலி. அவள் ப்ரிட்ஜ்ல வச்சு கொஞ்ச கொஞ்சமா சாப்ட்டுக்குவா டீலா பேபி” என்றதில் “ஓகே அங்கிள். இப்போ ரெண்டு மட்டும் சாப்டவா…” என்று அவனிடம் கோரிக்கை விடுக்க, மைதிலி பிரஷாந்தை முறைத்தாள்.
“இப்போ ஒண்ணு சாப்டுவியாம். நாளைக்கு ஒண்ணு சாப்டுவியாம் டீல்?” என்று கட்டை விரலைத் தூக்கிக் காட்ட, “ஓகே டீல்” என்று சலிப்புடன் ஒப்புக்கொண்டவளைக் கண்டு இருவருக்கும் சிரிப்பு எழுந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் பிரஷாந்தின் திட்டப்படியே, அனைத்தும் நடந்தது.
ஏமாற்று வேலையின் பலனாக அந்த வழக்கிற்காகவும் சுகுமாரைக் கைது செய்தனர். அவனது தாய் மட்டும் பெயிலில் வெளியில் இருக்க, இருவருக்கும் இவை அனைத்தும் பிரஷாந்தின் திட்டம் எனத் தெரிந்ததில் கோபம் பெருக்கெடுத்து ஓடியது.
அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதில் நித்திலா தவித்துப் போனார். பெற்ற மகனே எங்களை இப்படி நடுத்தெருவில் நிறுத்தி விட்டானே, அவன் விளங்காம தான் போவான் என்று சாபமிட்டார்.
சுகுமாரனுக்கு ஆத்திரம் பீறிட்டு எழுந்ததில், குரூரமான திட்டம் ஒன்று உதயமானது. அவரது ஆஸ்தான வக்கீலின் துணையுடன் ஜெயிலில் இருந்தபடியே அதனை செய்தும் முடித்தார்.
அடுத்து வந்த நாட்கள் பிரஷாந்திற்கும் மைதிலிக்கும் தென்றல் தீண்டி வருடுவது போல ரசனையாக நகர்ந்தது.
காலையில் மகிழினி எழும் முன்னே எழுந்து விடும் இருவரும், ஒன்றாய் சமைப்பதில் ஆரம்பித்து, இரவு பார்வை பரிமாற்றத்தில் சிலிர்த்து உறங்கும் வரை பொன்னான நிமிடங்களாக கடந்தது.
“அங்கிள்… இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு. நீங்க வருவீங்கள்ல?” என ஆர்வமாக மகிழினி கேட்டதில், “கண்டிப்பா பேபி” என்றான் மென் சிரிப்புடன்.
அன்று மைதிலியும் பிரஷாந்தும் இணைந்தே பெற்றோர் சந்திப்பிற்குச் சென்று மகிழினியை துள்ள வைத்தனர்.
மாலை நேரத்தில் அவளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு இருவரும் வீடு திரும்ப, காலையில் இருந்த உற்சாகம் மகிழினியின் முகத்தில் கிஞ்சித்திற்கும் தென்படவில்லை.
மகளின் வாடிய முகம் கண்டு மைதிலி, “என்ன ஆச்சு மகி? பேஸ் டல்லா இருக்கு. என்ன செய்யுதுடா?” என முடியை கோதி விட்டபடி கேட்க, அவள் உர்ரென்று இருந்தாள்.
“வயிறு எதுவும் வலிக்குதா மகி. பீவரிஷா இருக்கா” என்று நெற்றியைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட தாயிடம், “அதெல்லாம் இல்ல” என்றாள் அழுகுரலில்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த பிரஷாந்த், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, மைதிலியின் மடியில் அமர்ந்திருந்த மகளை வாங்கிக்கொண்டு, “என்ன ஆச்சு பேபி? அம்மா கேக்குறாங்கள்ல… ஸ்கூல்ல மிஸ் திட்டுனாங்களா? ப்ரெண்ட்ஸ் கூட சண்டையா?” என ஒவ்வொன்றாய் கேட்க,
இறுதி கேள்விக்கு வேகமாக மேலும் கீழும் தலையாட்டினாள்.
மைதிலி சற்றே நிம்மதியாகி, “இதுக்கா இப்படி டல்லா இருக்க? யார் கூட சண்டை போட்ட மகி?” எனக் கேட்டதும், “அபினாஷ் தான்மா என்னை டீஸ் பண்ணுனான். பேரண்ட்ஸ் மீட்டிங்கு பேரண்ட்ஸ தான் கூட்டிட்டு வரணுமாம். அங்கிளை கூட்டிட்டு வரக்கூடாதாம். அவன்கிட்ட அங்கிள் தான் என் அப்பான்னு சொன்னேனா, அவன் நம்பவே மாட்டேங்குறான்மா” என்றவளுக்கு கண்ணில் தண்ணீர் வைத்து விட்டது.
மைதிலி தொண்டை அடைக்க பிரஷாந்தைப் பார்க்க, அவன் ஆறுதலாக தலையசைத்து விட்டு, “ஏன் நம்ப மாட்டானாம் பேபி?” எனக் கேட்க,
“அப்பாவை எல்லாரும் அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. நீ அங்கிள்னு தான கூப்புடுற. அப்பறம் எப்படி உன் அப்பா ஆவாங்கன்னு சொல்றான் அங்கிள்” என்றதில் மைதிலியின் முகம் சிறுத்து விட்டது.
பிரஷாந்த் கீழுதட்டைக் கடித்து மைதிலியைப் பாராமல் தவிர்த்தவன், “நாளைக்கு ஸ்கூல்ல வந்து நான் தான் உன் அப்பான்னு அவன்கிட்ட சொல்றேன். அப்பாவை எப்படி கூப்பிட்டா என்ன பேபி…” எனப் பேசி மகிழினியை சமன்செய்ய, அவளும் “அப்போ நாளைக்கு நீங்களே வந்து அபினாஷ்கிட்ட சொல்லிடுங்க அங்கிள்” என்று குதூகலித்தாள்.
தாயின் பேச்சை மீறி அவனை அப்பாவென அழைக்கவும் பயம் அவளுக்கு. மகளுக்காக வாய்க்கு வந்தபடி ஆறுதல் கூறினாலும், நெஞ்சைக் குத்திக் கிளறியது ரணம்.
குழந்தைக்கு ‘அப்பா’ என்ற ஸ்தானத்தை முழுதாய் தர மறுப்பவளிடம் என்னவென்று பேசுவது?
இருவரும் பலத்த அமைதியுடன் வீட்டிற்குத் திரும்ப, உள்ளே நுழைந்ததும் நேராக அடுக்களையினுள் புகுந்து கொண்டவளுக்கு மனம் ஆறவில்லை.
மகிழினியின் ஏக்கமும் பிரஷாந்தின் தவிப்பும் அவளை கொன்றே போட்டது.
இன்னும் காரில் இருந்து இறங்காத பிரஷாந்த், அப்படியே அலுவகத்திற்குச் செல்ல தான் நினைத்தான். ஆனாலும் மைதிலியின் மனநிலை புரிந்து, வீட்டினுள் வந்தவன் அவள் அடுப்பு மேடையில் கையை ஊன்றி தலையைக் கவிழ்ந்து நின்றிருந்த கோலம் கண்டு, பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
முதலில் தடுமாறியவள் பின் அவன் புறம் திரும்பி, “ரஷு… நா…” என ஏதோ பேச வந்தும் ஒன்றும் சொல்ல இயலாமல் தவிக்க,
“உஷ்” என ஒற்றை விரலால் அவள் இதழை தடை செய்தவன், “அவளுக்கு சொன்னது தான் உனக்கும். எப்படி கூப்புடுறோம்னு முக்கியம் இல்ல மைலி. நான் எந்த பொசிஷன்ல இருக்கேன்றது தான் முக்கியம். அவள் மேல எனக்கு இருக்குற உரிமை ரகுவுக்கு கூட கிடையாது. அப்படி இருக்கும் போது அங்கிள்னு சொன்னா என்ன அப்பான்னு சொன்னா என்ன?” எனப் புன்னகையை வரவழைத்து வார்த்தை கமற கூறியவன், அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டிங் இருக்கு மைலி. கிளம்புறேன். நீ இதெல்லாம் ஒரு விஷயமா நினைச்சு யோசிக்காத. ஓகே வா…” என்று அவள் கன்னம் கிள்ளி கிளம்பியவனை ஆழ்ந்து பார்த்தவள், நகர விடாமல் அவன் நெற்றியில் எக்கி முத்தமிட்டாள்.
தன்னவளிடம் இருந்து வந்த முதல் இதழொற்றலில் வியப்பு பரவ விழிகளை அகல விரித்ததில், மெலிதான வெட்கம் கொண்டு மறுபுறம் திரும்பிக் கொண்டவள், “லேட் ஆச்சுல கிளம்பு” என்றாள் இதழ் விரித்து.
அவள் செவிமடலுக்கு அருகில் குனிந்தவன், “கிளம்புற மூடே ஸ்பாயில் ஆகுதே மைலி” எனக் கிறக்கமாகக் கூறிட, சிலிர்த்து நெளிந்தவள் “கிளம்பு ரஷு” என சிணுங்கினாள்.
“கிளம்புறேன் அதுக்கு முன்னாடி ஒரு கிஸ்?” என்று வினவளாக கேட்டு வைக்க, “அதான் கொடுத்தாச்சுல” மெல்ல மெல்ல அவள் குரல் தேய, பின்பக்கம் அவன் நெருக்கம் அதிகரித்தது.
“பத்தலையே…” என்றவன், கழுத்தில் ஒரு முத்தம் வைக்க, மேனியெங்கும் சிவந்து போனது அவளுக்கு.
பெண்ணின் இடை தொட்டு, அவன் புறம் திருப்பிய பிரஷாந்த், “ஒண்ணே ஒன்னு குடுத்துட்டு குட் பாயா கிளம்பிடுறேன் மைலி… ம்ம்?” எனக் கொஞ்சல் தொனியில் கேட்டதில், கண்ணை இறுக்கி மூடி தலையை மட்டும் ஆட்டினாள்.
உத்தரவு கிடைத்த பின்னே ஒரு நொடியையும் வீணாக்காதவன், அவளது மென்னிதழ்களை கவ்விக்கொள்ள இதனை எதிர்பாராத மைதிலியின் தேகமெங்கும் மின்சார அலை பரவியது.
அறையில் இருக்கும் மகிழினி எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்ற நிலை உணர, சில நொடிகளில் முத்தமிட்டு விலகியவனின் தயவில் அவளது முகமே பொன்னிறமாக சிவந்திருந்தது.
“டேஸ்ட் நல்லா இருக்கு!” குறும்பு மின்ன கூறியவனை நிமிர்ந்து காண வெட்கமுற்று “என்… என்ன?” எனத் தவிப்புடன் கேட்க,
“செர்ரி பிளேவர் லிப் பாம் தான யூஸ் பண்ணிருக்க மைலி. அதான் டேஸ்ட் நல்லா இருக்குன்னு சொன்னேன்” என அவளை இன்னுமாக சிவக்க வைத்திட,
முகம் கொள்ளாப் புன்னகையுடன், அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள் “கிளம்புடா முதல்ல…” என்று சிணுங்கினாள்.
அதே புன்னகை மாறாமல் “நைட்டு வேற பிளேவர் லிப் பாம் ட்ரை பண்ணு மைலி. நான் வந்து டேஸ்ட் பண்ணி கண்டுபிடிக்கிறேன்” என ரகசியமாய் கிசுகிசுத்தவன், அவள் அடிக்கும் முன்னே வெளியில் ஓடி விட,
‘இவனுக்கு சேட்டை கூடிப்போச்சு’ எனத் தனக்குள் சிரித்துக் கொண்டவளுக்கு வாழ்வே புதிதாய் மலர்ந்தது போலொரு பிரம்மை.
மாலை முழுதுமே புன்னகையை குறையவே இல்லை அவளுக்கு. மலர்ந்த முகத்துடன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த தாயை மகிழினி கூட வித்தியாசமாகப் பார்த்தாள்.
“ம்மா… இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க தெரியுமா?” என்று மைதிலியின் கன்னம் கிள்ளிட, மகளை இழுத்து மடியில் அமர வைத்துக் கொண்டவள், “ஓஹோ ஆனா உன் அளவுக்கு இல்ல பேபி” என அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ஹை நீங்களும் அங்கிள் மாதிரி பேபி சொல்றீங்க?” என குதூகலித்தவளிடம், “மகி… அம்மா ஒன்னு சொல்லட்டா?” எனக் கேட்க,
“சொல்லுங்க மா” என்றாள்.
“நீ… நீ… இனிமே பிரஷாந்தை அங்கிள்னு கூப்பிட வேணாம்…” என்றதும் அவளது முகம் சுருங்கி விட்டது.
“ஏன்மா? அங்கிள் இங்க தான இருப்பாங்க. நான் கூப்பிட வேணாமா?” என்று அழுகையை ஆரம்பிக்க முயல, “ஹே முழுசா கேளு பேபி. இனிமே அவரை நீ அப்பான்னு கூப்டு சரியா?” என்றதும் மகிழினி “ஹே ஹாலி” எனக் குதித்தாள்.
“நிஜமாவாம்மா… இப்பவே அப்பாவுக்கு போன் பண்ணவா?” என மைதிலியின் போனை எடுக்க,
மகளின் மகிழ்வை ரசித்தவள், “ஐயோ மகி… நைட்டு நேர்ல வரவும் நேர்லயே சொல்லு. ம்ம்… சர்ப்ரைஸா” என்று புருவம் உயர்த்தி உற்சாகமாக கூற, “சர்ப்ரைஸ் பண்ணவா அப்பாவ… ஜாலி ஜாலி” என்று துள்ளினாள்.
பின் அவளே “ம்மா… அப்போ அப்பாவை நைட்டு வெல்கம் பண்ற மாதிரி சார்ட் பேப்பர்ல எழுதிக் குடுங்க. நான் வெளில டெகரேட் பண்ணி ஒட்டுறேன். அப்பா செம்ம சர்ப்ரைஸ் ஆகிடுவாங்கள்ல” என விழிகள் மின்ன கேட்க, “ஓ பண்ணலாமே. போய் சார்ட் எடுத்துட்டு வா” என்றதும் மகிழினிக்கு தலைகால் புரியவில்லை.
தாயும் மகளுமான சார்ட்டில் “வெல்கம் அப்பா…” என எழுதி அதற்கு கலர் அடித்து வாசலில் தோரணமாக தொங்க விட்டு ‘ஹை ஃபை’ கொடுத்துக் கொண்டனர்.
பின் மகிழினியை வீட்டுப்பாடம் செய்ய சொல்லி விட்டு அவள் அவனுக்குப் பிடித்த சப்பாத்தியையும் பன்னீர் க்ரேவியையும் செய்து வைத்து விட்டு காத்திருக்க, அவன் வந்த பாடில்லை. எப்போதும் மணி அடித்தது போல ஒன்பது மணிக்குள் வந்து விடுவான்.
மணி பத்தைக் கடந்து பதினொன்றை தொட்டு விட, அவனது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததில் அபாய மணி அடிக்க, மைதிலிக்கு உள்ளமெல்லாம் நடுங்கி விட்டது.
உயிர் வளரும்
மேகா