417 views

வானம் – 19

இரண்டு நாட்களாக தன்னிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவளை இன்று பார்த்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தோடு ரேவதியின் வீட்டிற்குள் நுழைந்தான் பிரஷாந்த்.

அவனது நேரம் நல்லசுந்தரம் வெளியே சென்றிருக்க வாணி வீட்டின் பின்கட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்ததால் நேராக ரேவதியின் அறைக்கே சென்று விட்டான்.

படுக்கையில் குப்புற படுத்திருந்தவளின் கண்கள் சோகத்தை தத்தெடுத்திருந்தன. மெதுவாக கதவை சாத்தியவன் அவள் அருகே வர, அதனைக் கூட உணராமல் இருந்தாள் அவள்.

“ரேவதி” என அவளது கரங்களைத் தொட்டவுடன் நெருப்பு பட்டதுபோல் துள்ளிக்குதித்து எழுந்து அமர்ந்தவள், அறைக் கதவு சாத்தியிருப்பதைக் கண்டு, “நீங்க எப்படி இங்க?” என வார்த்தைகளில் தடுமாறிக் கொண்டே,

“அம்மா… அம்மா வீட்ல தான இருந்தாங்க” என்றவளுக்கு, “அத்த பின்னாடி துணி துவைச்சுட்டு இருக்காங்க” என பதிலளித்தவன் அவளது கரங்களைப் பற்றி தன்னருகே அமர வைக்க முயன்றான் பிரஷாந்த்.

சற்று நிதானித்தவள், “இல்ல, நீங்க வெளிய போங்க அத்தான். நான் வரேன்” என அவனது கரங்களில் இருந்து தனது கரங்களை உருவ பார்க்க, “ஏன் இப்பவும் என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடலாம்னு பார்க்குறியா ரேவதி?” என்றான் கைகளில் சற்று அழுத்தத்தை கூட்டியவாறே.

“நான்… நான் ஏன் அப்படி பண்ணனும்?” என சுவரைப் பார்த்தே பதிலளித்தாள் ரேவதி. “அத என்னைப் பார்த்து சொல்லலாமே” என அவனும் விடாப்பிடியாக இருக்க, “ப்ளீஸ் அத்தான், எதுவா இருந்தாலும் வெளிய போய் பேசிக்கலாம். அம்மா நம்ம ரூம்குள்ள இருக்கிறத பார்த்தா தப்பா போய்ரும். ப்ளீஸ்” என இறைஞ்சியவளின் கண்களில் இப்பவோ அப்பவோ விழுந்து விடுவேன் என்றது கண்ணீர்த் துளி.

“என் முகத்த பாரு ரேவதி” என அவளது தாடையை பற்றி தன்பக்கம் திருப்ப முயன்றான் பிரஷாந்த். “ப்ளீஸ், அத்தான். வெளிய போங்க” என்றவளின் குரல் உடைந்திருந்தது.

“சரி, வெளிய போறேன். அதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லு” என்றவனை பார்க்கத் தடுமாறியவள், “உங்களுக்கு என்ன பதில் வேணும்?” என்றாள் அவனைப் பார்த்து.

“ஏன் என்னைப் பார்க்கக் கூடாதுனு ஓடி ஒளியற” என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் அவனைக் கட்டியணைத்து ஆறுதல் தேடிய மனதை கட்டிப் போட்டவள், “இன்னும் கொஞ்சம் நாள்ள உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது அத்தான். இனியும் நாம சந்திச்சிக்கிறது நல்லது இல்ல” என்றாள் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சில விநாடிகள் இடைவெளி விட்டு.

“கல்யாணம்… ம், சரி. அப்படியே யாருக்கு நல்லதுனு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்” என கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.

“அது… அது, எல்லாருக்கும் தான்” என பரோட்டாவை பிய்த்துப் போடுவது போல் வார்த்தைகளை பிய்த்துப் போட்டாள் ரேவதி.

“அப்போ நான் நினைச்சது சரி தான். நான் அந்த ரம்யாவ கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கணும்னு நீ சொல்லாம சொல்ற, அப்படி தான!” என்றான் அழுத்தமாய்.

“அதான் எல்லாருக்கும் நல்லது அத்தான். அத்தையும் மாமாவும் நாலும் யோசிச்சு தான இந்த முடிவு எடுத்துருப்பாங்க” என்றாள் கம்மிய குரலில்.

“நாலும் யோசிச்சவங்க என்னோட மனச யோசிக்கலயே ரேவதி. இப்போ நீயும் அதே தான பண்ற?” வார்த்தைகள் மிக நிதானமாய், அழுத்தமாய் வந்தன.

“ப்ளீஸ், அத்தான். இதுக்கு மேல என்னை கம்பெல் பண்ணாதீங்க. நீங்க சந்தோசமா இருக்கணும் எப்பவும். ப்ளீஸ், இந்த விசயத்துல முரண்டு புடிக்காதீங்க” என கையெடுத்துக் கும்பிட்டவளை அணைக்க தூண்டிய கரங்களைக் கட்டுப்படுத்த முயன்றவன்,

“என் சந்தோசம் எதுல இருக்குனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் நீ இப்படி சொல்லும்போது நான் கேட்டு தான ஆகணும்!” என்றான் பிரஷாந்த்.

தன்னைத் திட்டுவான் என எதிர்பார்த்தவளுக்கு அவனின் சம்மத வார்த்தைகள் இதயத்தை சுக்குநூறாய் நொறுக்கியது. ஆனால் அவளும் அவனிடத்தில் இதைத் தானே எதிர்பார்த்தாள்.

அவளிடமிருந்து எந்தவித பதிலும் வராது போக, “சரி, இனி உங்க இஷ்டம். நீயும் உன் அத்தையும் ஆடற ஆட்டத்துக்கெல்லாம் நான் சரினு சொல்லணும்னு தான எதிர்பார்க்குறீங்க. சந்தோசம். உங்க விருப்பப்படியே பண்ணுங்க” என்றவன் அடுத்த நொடி அறைக்கதவை வேகமாக சாற்றிவிட்டு வெளியேறினான்.

அவனின் கோபம் கதவில் பட்டுத் தெறித்தது. தலையிலேயே அடித்துக் கொண்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தவளின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

ஓரளவு காயங்கள் ஆறி இருக்க அன்று மாலை கல்லூரி முடிந்ததும் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றனர் சரயுவும் சம்யுக்தாவும்.

இரு நாட்களாக அவளைப் பார்க்காததால் உள்ளே நுழையும் போதே ஓடிவந்து அவளின் கால்களை கட்டிக் கொண்டாள் இதழிகா.

“கியூட்டி” என்ற அழைப்பிலும் அத்தனை ஏக்கங்கள். வேகமாய் அவளது முகமெங்கும் முத்தமழை பொழிந்தவள், “எப்படி டா இருக்க?” என்றாள் சரயு.

“உனக்கு காயம் எப்படி இருக்கு சரயு? அப்பாகிட்ட உன்னை பார்க்கணும்னு சொன்னப்போலாம் விட மாட்டேன்னு சொல்லிட்டாரு. ரொம்ப வலிக்குதா சரயு” என அவளின் கரத்தில் இருந்த சிராய்ப்புகளை வருடிவிட்டது பட்டுக் கரங்கள்.

தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனை வருடிசென்றது சரயுவின் கருவிழிகள். இதழிகாவிற்கு பதிலளித்துக் கொண்டே தன்னையே பார்ப்பவளைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தான் சித்தார்த்.

இந்த இரு நாட்களும் இதழிகாவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகியது சித்தார்த்திற்கு. அவளது படிப்பு இன்னும் சில மாதங்களில் நிறைவடைய இருக்க அதன்பின் அவள் ஊருக்கு சென்றுவிடுவாளே. அதன்பின் இதழிகாவை எவ்வாறு சமாளிப்பது என்ற பயம் உண்டாகியது அவனுக்கு. இரவு தூக்கத்தில் கூட சரயுவின் பெயரை உச்சரிப்பவளைக் கண்டு மனதில் பயம் உண்டாகி இருந்தது. அந்தளவு படுத்தி எடுத்து விட்டாள் இதழிகா.

இவர்கள் மூவரையும் கண்களாலே அளந்துகொண்டிருந்தாள் சம்யுக்தா. இதழிகாவை சமாளித்துவிட்டு அவளை சம்யுக்தாவோடு அனுப்பியவள் சித்தார்த்தை நோக்கி நகர்ந்தாள்.

தன்முன் நின்றவளை ஏறெடுத்து பார்த்தவன், “இப்போ பெயின் எப்படி இருக்கு?” என சம்பிரதாயமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

“ம், பரவால்ல சித்…” என்றவள் சிறிய இடைவெளி விட்டு, ‘சாரையும் இணைத்துக் கொண்டாள் சரயு.

“ம்” என்றவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது எனத் தெரியாமல் தன்முன் இருந்த நோட்டை புரட்ட ஆரம்பித்தான் சித்தார்த்.

“வண்டி சரி பார்த்த பில் வேணும்” என்றவளை கேள்வியோடு பார்த்தவன், பின் தன்னுடைய மேஜையின் டிரேயரை திறந்து அதில் இருந்த பில்லை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதில் நிரப்பப்பட்டிருந்த விலையை பார்த்தவள் பின் தன்னுடைய கைப்பையை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து அவன்முன் நகர்த்த, அவளின் செயலால் முகம் கோபத்தில் சிவந்தாலும் எதுவும் பேசாமல் அதனை எடுத்து கொண்டவன் பணத்தை சரிபார்ப்பது போல் எண்ணினான் சித்தார்த்.

அவளோ எந்தவித அலட்டலும் இல்லாமல் நின்றிருந்தாள். செலவான பணத்தை விட நூறு ரூபாய் அதிகமாய் இருக்க அவளை பார்வையாலே கேள்வி எழுப்பினான்.

“அது சாப்பாட்டுக்கான காசு” என்றவளின் குரலில், ‘எதையும் ஓசில வாங்கி பழக்கமில்ல’ என்ற தொனி இருக்க, “இவ்ளோ வீராப்பு இருக்கிறவங்க ஆட்டோ காசையும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமே” என்றவனை விழி பிதுங்கப் பார்த்தாள் சரயு.

பணத்தைக் கொடுத்தால் அவன் தன்னை திட்டுவான், அதனை வைத்து அவனின் வார்த்தையோடு உறவாட எண்ணியிருக்க தற்போது அவனின் வார்த்தைகள் அவளை விழிப் பிதுங்க செய்தது.

“என்ன, உங்க வீராப்புக்கு ஆட்டோ காசுலாம் கணக்குல இல்லயா?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி நக்கலாய் வந்தன வார்த்தைகள்.

அவனது கேள்வி கூட அவளுக்கு உரைக்கவில்லை. நக்கல் கலந்த அவனது முகத்தையே தனது பார்வையால் வருடியவளின் இதழ்கள், “யூ லுக் சோ ஹேண்ட்சம் சித்” என முணுமுணுத்தது.

அவளது முணுமுணுப்பு அவனது காதுகளுக்கும் எட்டிவிட்டது என்பதை அவனது விரிந்த விழிகள் பறைசாற்றின. விழிப் பிதுங்கி அமர்ந்திருந்தவனைக் கண்டு குறுநகை மலர, “சரியா ஞாபகப்படுத்திட்டீங்க சித்… சார், அத மறந்துட்டேன்ல” என்றவள் அதற்கான பணத்தையும் எடுத்து அவன்முன் நகர்த்தியவள், “எதையும் ஓசில வாங்கி பழக்கமில்ல சார். அதான், இப்போ கணக்கு கரெக்ட்டா இருக்குல்ல” என்றவாறே அவனை மேலும் வெறுப்பேற்று விதமாய் கண்ணடித்தாள் சரயு.

அவனது கரங்கள் கேசத்தினுள் புகுந்துக் கொண்டு கோபத்தை அளவை குறைக்க எண்ணியது. ஆனால் அவளோ புன்னகை முகமாய் தனது வேலையை பார்க்கச் செல்ல, அவனோ கண்களை இறுகமூடி தன் மனதை சமன்படுத்த முயன்றான்.

தன் தோழியை, “நீ பண்றது எல்லாம் சரியா உனக்குப்படுதா?” என்ற கேள்வியோடு வரவேற்றாள் சம்யுக்தா.

“புரியுது சம்யு. ஆனா மனசு கேட்கணுமே, நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். ஏன் இந்த இரண்டு நாளா அவர பார்க்காம இருந்தா அவர் ஞாபகம் வராதுனு கூட நினைச்சேன். ஆனா, நான் எத மறக்க நினைக்கிறனோ அதுவே என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கு. இதுக்கு பேர் தான் காதல்னா எஸ், நான் அவர காதலிக்கிறேன்” என்றவளின் வார்த்தைகளில் இருந்த உறுதி சம்யுக்தாவை அமைதியாக்கியது.

தன் தோழியை அணைத்தவள், “எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல டி. இது உன் வாழ்க்கை, அதுல கருத்து சொல்ல மட்டும் தான் எனக்கு உரிமை இருக்கு. முடிவெடுக்கிறது உன்னோட உரிமை. நீ எந்த முடிவு எடுத்தாலும் சரி, நான் உன்கூட துணையா இருப்பேன். இதழிகாவையும் யோசிச்சு முடிவு எடு சரயு. அது மட்டுமில்ல சித்தார்த் சாரோட கடந்த காலம் பத்தி நமக்கு எதுவும் தெரியாது. அது தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அப்பதான் உன்னால தெளிவான முடிவா எடுக்க முடியும்” என்றவள், “சரி, நான் போய் வேலைய பார்க்கிறேன்” என தன் வேலையை பார்க்கச் சென்றாள் சம்யுக்தா.

அவளும் நீண்ட நாளாக தெரிந்து கொள்ள விரும்பிய ஒன்று தான் சித்தார்த்தின் கடந்த காலம். விவாகரத்து கூட வாங்க வராத அளவுக்கு அவர்மேல் என்ன வன்மம் அவனின் முதல் மனைவிக்கு என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

ஆனால் மனம் அடித்துக் கூறியது அவர்களின் பிரிவிற்கு சித்தார்த் காரணமாக இருந்திருக்க மாட்டான் என்று. கற்பகம்மாளும் அவரின் கணவரும் கூட மருமகளை கொடுமைப்படுத்தும் ரகமாய் அவளுக்கு தோன்றவில்லை.

பின் ஏன் கைக்குழந்தையை விட்டுவிட்டு சித்தார்த்தின் மேல் பழியை சுமத்திவிட்டு சென்றாள் என்ற கேள்வி அவளது மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அன்று வானதி கூறியது நினைவில் வந்து சென்றது. ‘அவன் ஆம்பளையே இல்லனு தான அவன் பொண்டாட்டி ஓடிப் போனா’. அவரை குற்றப்படுத்தினால் அது தன்மீதே சேற்றை வாரி இறைத்துக் கொள்வது போல் ஆகாதா! அவர் ஆம்பிளை இல்லை என்றவளுக்கு இதழிகா எவ்வாறு பிறந்திருப்பாள். அவரின் ஆண்மையை குறைக் கூறுவதாக நினைத்து தன் மீதல்லவா சேற்றை இறைத்துக் கொண்டிருக்கிறாள்.

பிள்ளைக்கு தந்தை என்ற ஸ்தானம் மட்டுமே ஆண்மை கிடையாது தான். ஆனால் வேறு விதமாய் மனைவியை கொடுமைப்படுத்தி இருப்பாரோ சித்தார்த் என்றாலும் அதற்கும் அவள் மனம் இல்லை என்றே அடித்துக் கூறியது.

அவள் மனம் அவனை அத்தனைக் கொடூரக்காரனாய் சித்தரிக்கக் கூட மறுத்தது. பின் ஏன் அவள் அவரை விட்டு பிரிந்தாள் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. இதனை நேரடியாக அவனிடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ள முடியாது. கற்பகம்மாளிடமும் அவனின் அந்தரங்கமான விசயத்தை எப்படி கேட்பது என்ற தயக்கம் இருக்கவே, அவள் மூளை வேகமாய் யோசிக்க ஆரம்பித்தது. கூடவே அதனைத் தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தன.

வேலை முடியவும் விடுதிக்குக் கிளம்பத் தாயாராகினர் சரயுவும் சம்யுக்தாவும்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம் தன் மனம் தடுமாறுவதை உணர்ந்த சித்தார்த் அன்று இதழிகாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சாக்கில் விரைவாகவே வீட்டிற்குக் கிளம்பி இருந்தான்.

பாண்டியனிடம் கூறிவிட்டே சென்றிருக்க, “எங்க ண்ணா சார். ஆளையே காணோம்” என்ற சரயுவின் கேள்விக்கு அவன் முன்னமே சென்றுவிட்டதைக் கூறினான்.

“ஓ” என்றவளின் விழிகள் அவனது இருக்கையை தழுவிச் சென்றது. அப்பொழுது மேஜையின் மேல் இருந்த டைரி ஒன்று அவளது கண்ணில் பட, ‘இதுல தான அடிக்கடி ஏதோ எழுதிட்டே இருப்பாரு. எப்பவும் இத எடுத்துட்டுப் போய்ருவாரே இன்னிக்கு மறந்துட்டாரோ!’ என நினைத்தவள் மற்றவர்களின் கவனம் தன்மீது படாமல் இருக்கும் சமயத்தில் அந்த டைரியை எடுத்திருந்தாள்.

தான் தேடும் கேள்விக்கான பதில் இதில் இருக்குமோ என நினைத்தவள் வேகமாய் அதனை தன் கைப்பையில் போட்டுக் கொண்டாள் சரயு.

“இங்க என்ன டி பண்ற, கிளம்புலாமா” என்றவாறே அவள் அருகே வந்த சம்யுக்தாவிற்கு தலையசைத்தவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவ்வபோது தனது கைப்பையை வருடிக் கொண்டாள். இரவு அனைவரும் உறங்கிய பின் இதில் என்ன எழுதி இருக்கிறான் என தெரிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவளுக்கு லேசாக மனம் படபடத்தது.

ஒருவரின் அனுமதி இல்லாமல் அவர்களுடைய டைரியை படிப்பது தவறு என்றாலும் அவனைப் பற்றி முழுதாய் தெரிந்துக் கொள்ள தனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை அவள் நழுவ விட மனமில்லை.

அதனைப் படிக்கப்போது தருணத்திற்காக திக் திக் மனதோடு காத்திருக்க ஆரம்பித்தாள் சரயு. அவனின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொண்ட பின்பும் அவளது காதல் மாறாமல் இருக்குமா!

நிலவு தன்னை கருத்த மேகங்களுக்கிடையே அரைகுறையாய் மறைக்க முயன்றுக் கொண்டிருந்தது. விடுதியில் நிசப்தம் குடிகொள்ள பெரும்பாலான அறைகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. தன்னுடைய மேல் படுக்கையில் படுத்திருத்தவள் தலையணைக்கு அடியே இருந்த டைரியை எடுத்தாள்.

அவளது படுக்கை ஜன்னலோரம் இருந்ததால் வெளியே ஒளிர்ந்த தெருவிளக்கின் வெளிச்சம் படர்ந்திருக்க ஜன்னலை பாதி திறந்துவிட்டவள் தெரு விளக்கின் உபாயத்தால் அதனைப் படிக்க ஆரம்பித்தவளின் விழிகள் சற்றே தள்ளி இருந்த சித்தார்த்தின் வீட்டின் மேல் படர்ந்து மீண்டது.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment